செப்டம்பர் 12, 2012

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம் ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன்  விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத் தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன.
நடப்பியலைப் போலவே தான் அதற்கு முன் தோன்றிய இலக்கிய இயக்கங்களும் பின் வந்த இயக்கங்களும் ஏதாவதொரு கலை, இலக்கிய வடிவங்களோடு அதிகம் உறவு கொண்டனவாக இருந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். செவ்வியல் அது மரபுச் செவ்வியல் ஆயினும்சரி, புதுச் செவ்வியல் ஆயினும்சரி கவிதையோடு உறவு கொண்டது. புனைவியல் எப்போதும் கதைதழுவிய கவிதை வடிவமான காப்பியங்களோடு நெருக்கம் கொண்டது. நடப்பியலுக்குப் பின் வந்த பலவும் ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைவடிவங்களில் அதிகம் பங்களிப்பு செய்தவை.

சாராம்சமாகக் கதை இலக்கியம் நடப்பியலோடு தொடர்புடையன என்றாலும் எழுதுபவர்களின் நோக்கத்திற்கேற்ப நடப்பியல் இயக்கத்தின் பாணியும் வேறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தையும், அந்த இடத்தில் வாழும் மனிதர்களையும் எழுதிக் காட்டும் எழுத்தின் தன்மைக்கும், குறிப்பிட்ட காலத்தையும் அந்தக் காலம் பற்றிய பிரக்ஞையை உணர்ந்தவர்களாக மனிதர்களையும் எழுதும் எழுத்தின் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு. இரு வேறு காலத்தில் வாழும் மனிதர்களைச் சந்திக்கச் செய்யும் ஒவ்வொரு வகைமாதிரிக்கும் தமிழ்ப் புனைகதை யாசிரியர்களையும் அவர்களின் புனைகதைகளையும் உதாரணங்கள் காட்ட முடியும். சிவகாமியின் பழையன கழிதல்.. இருவேறு காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும்  மனிதர்கள் சந்திக்கும் எழுத்தின் வகை மாதிரியாக இருக்கிறது.


இருவேறு காலத்தின் பிரதிநிதிகள் சந்திக்கும்போது உண்டாகும் முரண்பாடுகளைச் சுட்டப் பயன்படும் இன்னொரு வார்த்தை ‘தலைமுறை இடைவெளி’ என்பது. தலைமுறை இடைவெளி என்பதை எப்போதும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் முரணாகவே புரிந்து வைத்திருக்கிறோம்; அப்படியான புரிதலுக்குக் காரணம் ‘ தலைமுறை” என்பது குடும்பத்தை எல்லையாகக் கொண்ட ஒரு சொல்லாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு குடும்ப வெளிக்குள் நுழையும் புதுவகை பொருள் வரவு அதனால் கிடைக்கும் அறிவுத்தேடல், அதன் வழியாக ஏற்படும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள், அதனால் உண்டாகும் புதுவகை நம்பிக்கைகள் ஆகியனவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தலைமுறைக்கும், அதனைக் கண்டு முகம் சுழிக்கிற அல்லது எதிர்க்கிற பழைய வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தலைமுறை இடைவெளி எனப் புரிந்து வைத்துள்ளோம். அந்தப் புரிதல் பிழையான ஒன்றல்ல.

இந்திய வாழ்க்கை முறையில் மேற்கத்திய கல்விமுறையால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளும் புதுவகை வேலை வாய்ப்புகளும் பெருமளவு மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. கூட்டுக் குடும்பங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துச் சிதைந்து கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் மட்டும் என்பதான தனிக் குடும்பங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது இந்த இடப் பெயர்வுகள் தான்.. அதன் தொடர்ச்சியாக ”உருவான “வேலைக்குப் போகும் பெண்கள்”” என்ற தனிவகையினரின் அடையாளம் வேறொரு வகை நெருக்கடியைக் குடும்ப அமைப்புக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தனிக்குடும்பங்களையே சிதைத்து தனித்தனி உயிரிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்போக்கானவை; வரவேற்க வேண்டியவை எனப் பேசுகின்றவர்கள் பிந்திய தலைமுறையினர். இந்த மாற்றங்கள் நமது சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதோடு பண்பாட்டுக் குழப்பங்களையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக் கூடியன; எனவே தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சொல்பவர்கள் முந்திய தலைமுறையினர்.  இவ்விரு தலைமுறையினரின் வாதப் பிரதிவாதங்களை எல்லாம் பேசக்கூடிய எழுத்துப் பிரதிகளையும் நிகழ்வுப்பிரதிகளையும்  பற்றிய விவாதங்களின் போதும், விமரிசனத்தின் போதும் தலைமுறை இடைவெளி என்ற சொல்லாடலை அதிகம் பயன்படுத்துகின்றோம். இந்தப் பொதுப்போக்கிலிருந்து விலகிய ஒரு சொல்லாடலுக்குள் ’தலைமுறை இடைவெளி’ என்ற சொற்சேர்க்கையின் அர்த்தத்தளத்தை நகர்த்துவதற்கு  முயற்சி செய்து வெற்றி பெற்றவர் சிவகாமி. அதனைச் சாதித்துக் காட்டிய நாவல் அவரது பழையன கழிதலும்…
பழையன கழிதலும்.. நாவலின் இயங்கு வெளியும் குடும்பம் என்ற எல்லைக்குள் தான் இருக்கிறது. காத்தமுத்து- கௌரி பெயரிடப் பெற்ற தந்தைக்கும் மகளுக்குமான முரண்பட்ட பார்வைக்கோணம் தான் பழையன கழிதலின் நிகழ்வுகளாக விரிகின்றன. ஆனால் முரண்பாடுகள் மகளின்  விருப்பத்தை- சுதந்திரத்தைத் தடுக்கும் தந்தையை எதிர் கொள்ளும் முரண்பாடுகளாக எழுதப்படவில்லை என்பதும் அதனைத் தனிநபர் சார்ந்ததாக இல்லாமல் பொதுத்தளம் சார்ந்ததாக ஆக்கியிருக்கிறது என்பதுமே பழையன கழிதலின் முக்கியமான வேறுபாடு. காத்தமுத்து தன் மகளின் விருப்பங்களை – அவள் கேட்காமலேயே நிறைவேற்றும் தந்தை. பள்ளிக்குப் போகும் காலத்தில் அவளுடன் படித்தவளின் குடும்பத்தினரால் கிழிந்த ஆடையின் காரணமாக அவமானப் படுத்தப்பட்டாள் என்பதை அறிந்து வேதனைப் பட்டதோடு, தன் மனைவியின் நகையை அடகு வைத்து மகளுக்குத் தாவணி வாங்கிக் கொடுத்தவர். அதிலிருந்து  அவர் மகள் மீது கொண்ட அன்பை புரிந்து கொள்ள முடியும்.  நகரத்தில் உள்ள கல்லூரியில் தங்க வைத்துப் பெரிய படிப்புப் படிக்க வைக்க விரும்பியவர்.  தொடக்கநிலையில் தந்தையின் பல செயல்பாடுகள் கௌரிக்கு விருப்பமானவையாகவே இருந்தன. ஆதிக்க சாதிக்காரர்களான கவுண்டர்கள் நிறைந்த தனது ஊரிலும். சுற்றுப் புறங்களிலும் அவர்களின் செயல்பாடுகளையும், மனப் பாங்கையும் தட்டிக் கேட்கும் மனிதராக அவர் வலம் வந்ததை அவள் ரசிக்கவே செய்தாள்.

சேரியாகவும் ஊராகவும் பிரிந்து கிடக்கும் தனது கிராமத்தில் சேரியின் மனிதர்கள் குடியானவத் தெருவுக்குள் நுழைவதற்குப் பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன. அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்பவராக இல்லாமல் தன்னுணர்வுடன் மீறும் மனநிலையை வெளிப்படுத்தியவர் காத்தமுத்து. குடியானவத்தெருவுக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு நடப்பார்; கடைகளில் போய் நின்று சாமான்கள் கேட்பார். இறங்கித் தள்ளிக் கொண்டு நடக்காமல் சைக்கிளில் சவாரி செய்வார். யாராவது அவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிக் கேட்டால் எதற்குப் பயப்படணும் என்று நிமிர்ந்து நின்று பேசுவார். காத்தமுத்துவின் வீரமும் தன்னுணர்வும் குடியானவத் தெருவினருக்குக் கூட அச்ச உணர்வை உண்டாக்கியது. இந்தச் செயல்கள் எல்லாம் தான் அவரைச் சேரி மக்களின் தலைவராக மாற்றியது. அந்தச் சேரியின் மக்கள் மட்டும் அல்லாமல் சுற்று வட்டாரத்துச் சேரி மக்களும் தங்களுக்கான குரலைக் காத்தமுத்துவின் வடிவில் வெளிப்படுத்தினர். ஒடுக்கப்பட்ட –ஒதுக்கப்பட்ட சேரியின் மக்கள் மட்டும் அல்லாமல் குடியானவத் தெருவினரும் கூட சேரியின் தலைவராகக் காத்தமுத்துவை ஒத்துக் கொண்டதை அவரது மகள் கௌரியும் தொடக்கத்தில் ரசிக்கவே செய்தாள்.
வீரனாகக் காட்டிக் கொண்ட காத்தமுத்துவை அவரது மகள் கௌரிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது என்பதை விட சேரி மக்களுக்கு விதிக்கப்பட்ட சாதிக்கட்டுப்பாடுகளைத் தனது தந்தை துச்சமாக மதித்து மீறும்போது அவரை ஒரு நாயகப் பிம்பமாகக் கூட கருதியவள் தான்.  ஆனால் அவள் வளர வளர – அறிவின் விசாலம் கூடக் கூடத் தன் தந்தையின் மீது கொண்ட நாயக பிம்பம் சிதையத் தொடங்குகிறது.  கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வரும்போது தனது வீட்டிலும், தனது தெருவிலும், ஊரிலும் நடக்கும் உதாசீனங்கள், சச்சரவுகள், மோதல்கள்,சமாளிப்புகள் போன்றவற்றைப் பார்க்கிற போது அவளுக்குள் பல கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளின் பின்னணியில் இருப்பவை ஆண்- பெண் உறவு சார்ந்த இந்திய மனப்பான்மை மற்றும் தன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட கூட்டத்தைத் தலைவர் நடத்தும் அதிகாரத்துவ மனப்பான்மை சார்ந்தவை எனக் கூறலாம்.
தான் கற்ற கல்வியின் வழியாகக் கிடைத்த ஜனநாயக உணர்வு, ஆண்-பெண் சமத்துவம், தனிமனித உரிமை, தலைமைத்துவ குணங்கள் போன்றவை கௌரியின் தன்னிலைக்குள் நுழைந்து விமரிசன மனோபாவத்தைத் தூண்டி விடுகின்றன. அந்த விமரிசன மனோபாவம் அவளும் அவளைச் சார்ந்தவர்களும் வாழ நேர்ந்துள்ள வெளி –சேரியாக ஒதுக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதோடு, அதன் தலைவராக அறியப்பட்டுள்ள தனது தந்தை உண்மையில் சரியான தலைவர் அல்ல என்ற புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. சாதி வேறுபாட்டின் நியாயமற்ற தன்மை புரியத் தொடங்கும் அதே வேளையில் இந்திய ஆண்கள் பெண்களின் மீது செலுத்தும் வன்முறையின் பரிமாணங்களும் புரியத் தொடங்குகிறது. சாதி வேறுபாடுகளைத் தட்டிக் கேட்கும் நாயகனாக வலம் வரும் தனது தந்தையே தனது மனைவிகள் மேல் செலுத்தும் ஆதிக்கம் சகிக்க முடியாததாக இருக்கிறது என்பதை அவள் உணர்கிறாள். தன் தந்தை மட்டுமல்லாமல் இந்திய ஆண்கள். பெண்கள் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் நிழல் தரும் வேதனையையும் சுமையையும் விடுவிக்கும் வழியைப் பற்றிய எண்ண ஓட்டங்களும் அவளுக்குள் ஓடத் தொடங்குகிறது. ஆதிக்க சாதியினரோடு சேரி மக்களுக்கு ஏற்படும் முரண்பாடுகளையும், ஆண்- பெண் உறவு சார்ந்த பிரச்சினைகளையும் காத்தமுத்து கையாளும் விதம் கௌரிக்கு உடன்பாடானதாக இல்லை. தன் தந்தையே என்றாலும் தனது சுயநலத்தை மையமிட்டுத் தனது தலைமையைத் தக்க வைப்பதற்காகவே தனது மக்களைப் பலிகடா ஆக்குபவராகக் காத்தமுத்துவை கருதுகிறாள். விவசாய வேலைகளில் கூலித்தொழிலாளிகளாக இருக்கும் சேரி மக்களைப் போலத் தனது தலைமையை ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் ஆலைத்தொழிலாளர்களாக இருக்கும் ஒதுக்கப்பட்ட மக்களைத் திசை திருப்பும் முயற்சிகளை அவர் செய்வதைக் கௌரி நேரடியாக எதிர்க்கவில்லை என்றாலும், அத்தகைய செயல்பாடுகள் அவரிடமிருந்து விலகலை ஏற்படுத்துகிறது.
தனக்குள் இரண்டு விதமான எண்ணங்கள் ஓடுவதாக நினைக்கிறாள் கௌரி. தான் கற்ற கல்வி தன்னைச் சார்ந்தவர் களிடமிருந்து விலகி நிற்கும் உயர் மனோபாவத்தைத் தந்திருக்கும் அதே நேரத்தில் சமூக வெளியில் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்பவர்களிடம் தாழ்ந்து போகும் மனநிலையையும் உண்டாக்கியிருக்கிறது என்பது அவளது புரிதல்.. இவ்விரு நிலைப்பாடும் ஒருவிதத்தில் தன் தந்தையிடம் செயல்படும் மனநிலை என்பது அவளது எண்ணம்.  தன்னைச் சார்ந்தவர்களின் தலைவனாகக் கருதிக் கொள்ளும் காத்தமுத்து, ஆதிக்க சாதியினர் நிரம்பிய அரசியல் தளத்தில் சமரசத்தோடு போய்விடுவதைப் போன்றது என அந்த மனநிலையை ஒப்பிட்டுக் கொள்கிறாள். இந்த மனநிலையைக் கைவிட்டாக வேண்டும் என்பது அவளது விருப்பம். அந்த மனநிலையைக் கைவிடுவது என்பது அந்த மனநிலையின் ஆகப் பொருத்தமான நபராக இருக்கும் காத்தமுத்து போன்றவர்களைக் கைவிடுவது அல்லது கழித்துக் கட்டுவது என்பதையே சுட்டும். சமூக மற்றும் பாலியல் சார்ந்த முரண்பாடுகள் மீது தன் தந்தை கொண்டிருக்கும் பார்வையும், சமாளிக்கும் விதங்களுக்கும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தன் மீது அன்பு கொண்ட தந்தையிடமிருந்து விலகி விலகி எதிர்த்திசையில் பயணம் செய்பவளாக மாறிப்போகிறாள்.
கௌரிக்குக் காத்தமுத்து மீது ஏற்படும் விலகலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது பெண்களை அவர் கையாளும் விதம் எனச் சொல்லலாம். தான் ஒரு பெண் என்ற நிலையில் தன்னையும் ஓர் ஆண் இவ்வாறுதான் கையாளுவான் என்ற பயத்திலிருந்து அந்த விலகல் உருவாகவே செய்யும். கனகவல்லி, நாகமணி என இரண்டு மனைவிகளை உடைய காத்தமுத்து மூன்றாவதாக ஒருத்தியை இணைத்துக் கொண்டதைக் கௌரியின் மனம் ஏற்க மறுக்கிறது. மூன்றாவதாக வந்த தங்கத்தின் பிரச்சினையால் பெரும் துயரத்தை எதிர்கொள்கிறது. அவள் மனம்.  பரஞ்சோதிக் கவுண்டர் தரும் பாலியல் துயரங்களிலிருந்து காத்தமுத்துவால் விடுவிக்கப்பட்ட தங்கத்திற்குச் சுயமான வாழ்க்கைக்கான வழியைக் காட்டாமல் அவளை வைப்பாட்டியாக ஆக்கிக் கொண்டதை ஏற்கவே முடியாத நிகழ்வாகக் குமைகிறாள் கௌரி. ஆனால் அந்த மூன்று பெண்களுமே காத்தமுத்துவின் அடி, உதைகளையும் ஏற்றுக் கொண்டு அவருக்குத் தர வேண்டிய உடல் சுகத்தையும் எதிர்ப்பின்றி தருகிறவர்களாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறாள். ஆணாதிக்க மனோபாவத்தை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொண்டு ’தாங்கள் துயரப்படுகிறோம்’ என்பதைக் கூட உணராதவர்களாக நகர்ந்து கொண்டிருக்கும் அம்மூன்று பெண்கள் மீதும் கௌரிக்குப் பச்சாதாபம் ஏற்படுவதற்குப் பதிலாகக் கோபமே உருவாகிறது. அவர்களும் கழிந்து போக வேண்டிய சமூகத்தின் மனிதர்கள் என்றே நினைக்கிறாள்.
பழையன கழிதலில் சிவகாமி வெளிப்படுத்திய பெண்சார்பு நிலையையும், பெண்களின் விழிப்புணர்வற்ற நிலைக்காகக் கலங்கும் மனத்தையும் அவரது இரண்டாவது நாவலான ஆனந்தாயியிலும் கூட வாசிக்க முடியும். இரண்டு நாவல்களிலுமே விமரிசிக்கப்படுகிறவர்கள் ஆண்களாகவும், இரங்கத்தக்கவர்கள் பெண்களாகவும் சித்திரிக்கப்படுவதை வாசிக்கும்போது அவரது மொழி செயல்படும் விதத்தையும் கவனிக்க வேண்டும். நவீன வாழ்க்கையை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகச் சொல்லப்படும் படர்க்கை நிலைச் சொல்லல் முறையையே இரண்டிலும் பின்பற்றியுள்ளார். தமிழ்நாட்டின் மையப்பகுதியான விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் பகுதிகளின் கிராமங்களை ஒத்த கிராமங்களைக் களனாகக் கொண்டு இயங்கும் கதையில் அவற்றின் பேச்சுமொழியே பாத்திரங்களின் பேச்சுமொழியாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதனைக் கொண்டு சிவகாமியின் நாவல்களை வட்டார நாவல் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கிக் காட்டவும் முடியாது. அதற்குப் பதிலாக இடதுசாரி எழுத்தாளர்கள் உருவாக்கிய சமூக நடப்பியல் எழுத்தின் ஒரு பரிமாணம் எனச் சுட்டலாம். காத்தமுத்துவின் காலத்தை முடித்து வைத்துப் புதிய யுகத்தை எழுதும் கௌரியின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முடிவாக்கியுள்ளதைக் கொண்டு இந்தக் கூற்றை வலுவாகச் சொல்லலாம். ஆனால் அந்த முடிவு புதிய யுகத்தைப் படைக்கும்- போராட்டத்தை அடையாளங்காட்டும் – சோசலிசத்தை நோக்கிய நடப்பியல் என்பதோடு ஒப்புமைப்படுத்தத் தக்கதல்ல. அவ்வகை நாவல்களில் காணப்படும் அதியற்புதக் கனவுகளோ, நிச்சயமான நம்பிக்கைக்குரல்களோ சிவகாமியிடம் வெளிப்படவில்லை என்பதை நேர்மறை அம்சமாகச் சொல்லத் தோன்றுகிறது.
பொதுவாகத் தமிழ்நாட்டு இடதுசாரி அல்லது முற்போக்கு எழுத்தாளர்கள் கிராமம் X நகரம், பழைமை X புதுமை, அப்பாவித்தனம் X புத்திசாலித்தனம் போன்ற எதிர்வுகளில் முன்னதின் ஆதரவாளர்களாகவே வெளிப்பட்டுள்ளனர். நகரம், புதுமை, புத்திசாலித்தனம் என்பவை முதலாளித்துவ அடையாளம் எனக் கருதும் அவர்கள், அவற்றிற்கு எதிரான கிராமம், பழைமை, அப்பாவித்தனம் ஆகியவற்றை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றனர். இவையெல்லாம் முதலாளித்துவ அடையாளத்தை விடப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ அடிப்படைவாதத்தைச் சாராம்சமாகக் கொண்டிருந்தாலும் இடதுசாரிகளால் ஆதரிக்கப்படுகின்றன என்பது சோகமுரண்.
சிவகாமியின் எழுத்து முறையில் அப்படியான ஆதரவு வெளிப்படவில்லை. கிராமிய வாழ்வின் மீதும். பழைமையின் மீதும், அப்பாவித்தனத்தின் மீதும் கடுமையான விமரிசனங்களைக் காண முடிகிறது. படைப்பில் இடம் பெற்றுள்ள கிராமம் தனது கிராமமாகவே இருந்த போதிலும், இடம் பெற்றுள்ள பாத்திரங்கள் தனது ரத்த உறவுகளின் சாயலைக் கொண்டவர்கள் என்ற போதிலும் கடுமையான விமரிசனத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை. இத்தகைய எழுத்து முறையை விமரிசன நடப்பியல் எனச் சுட்டுவர். குறிப்பான இலக்கு வாசகர்களைப் படைப்பை நோக்கி உள்ளிழுத்துப் படைப்பாளியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் இயல்பு இவ்வகை எழுத்து முறைக்கு உண்டு. ஒரு படைப்புக்குள் நுழையும் ஆதரவு நிலை வாசகனும் எதிர்ப்புநிலை வாசகனும் விமரிசன நிலைக்குத் தூண்டப்படும்போது, அவரவர் வாழ்நிலை சார்ந்த விழிப்புணர்வையும் இரக்க உணர்வையும், குற்ற உணர்வையும் ஒருசேர அடைவதற்கு இவ்வகை எழுத்து முறை தூண்டும். அவ்வகை உணர்வுகள் தூண்டப்படுவது தானே காத்திரமான படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். அந்த வகையில் சிவகாமியின் பழையன கழிதலும் காத்திரமான நாவலாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
 நன்றி: தீராநதி/ செப்டம்பர்,2012