விலானொவ் அரண்மனை : இயற்கையும் செயற்கையும்


போலந்து நாட்டில் எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற விவரங்களைத் தருவதில் என்னுடைய மூன்றாமாண்டு மாணவிகள் காஸ்யாவும் மரிஸ்யாவும் போட்டிபோட்டுக் கொண்டே இருப்பார்கள். முதலில் பார்க்க வேண்டிய நகரம் க்ரோக்கோ எனச் சொன்னதோடு அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் சொன்ன காஸ்யாவிடம் க்ராக்கோ பயணத்திற்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது,. வாவெல் அரண்மனையையும் அங்கு சேமிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் உண்டாக்கிய பிரமிப்பையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குறுக்கிட்டு ”உங்களை எளிமையின் பிரமிப்பைக் காட்டும் அரண்மனை ஒன்றுக்கு அழைத்துப் போகிறேன்; ” என்றார் மரிஸ்யா. . ” எந்த அரண்மனை விலனோவாவா?” என்று பதிலின் வழியாகவே கேள்வியைக் கேட்டுவிட்டு “ மரிஸ்யா ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது” என்ற தகவலையும் காஸ்யா சொன்னாள்.


விலனொவ் அரண்மனையின் பின்புறக் கோட்டை மதில்

மரிஸ்யாவின் வீடு வார்சாவில் இல்லை. வார்சா பல்கலைக் கழகத்திலிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கிறது. அங்கிருந்து வார்சாவிற்குள் நுழைய ஒவ்வொரு நாளும் விலானொவ் நகரத்தின் பேருந்து நிலையத்தில் இறங்கித் தான் வர வேண்டும். மரிஸ்யாவின் கிராமத்திலிருந்து ஒரே பேருந்து தான் விலனொவிற்கு. 20 நிமிடப் பயணத்தில் வந்து இறங்கி விட்டால் அங்கிருந்து மூன்று வழித்தடங்கள் வழியாகப் பல்கலைக்கழக வாசலில் வந்து இறங்கி விடலாம். நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்தும் விலனொவ் இருபது நிமிடப் பயண தூரம் தான். காலை 10 மணிக்கு விலனொவ் பேருந்து நிலையத்தில் சந்தித்துக் கொள்வது என முடிவு செய்து திட்டமிட்டோம். காலையில் நல்ல வெயிலோடு வெளிச்சமாக இருந்தது. கிளம்பியும் போய் விட்டோம். கிளம்பும்போது இருந்த வெளிச்சம் போய்ச் சேர்வதற்குள் காணாமல் போய் விட்டது. இருட்டாகி மழை மேகம் திரண்டது.



விளக்கிச் சொல்லும் மாணவி மரிஸ்யா

விலானொவில் இறங்கிக் காத்திருந்தபோது மரிஸ்யாவிட மிருந்து தொலைபேசி. ”இன்று அடிக்கடி மழை பெய்யும். அரண் மனைத் தோட்டத்தைப் பார்க்க முடியாது. அரண்மனையை மட்டும் பார்த்தால் போதும் என்றால் இன்றே போகலாம்” என்றார். போலந்துவாசிகள் தினசரிக் காலநிலை அறிவிப்பைப் பார்த்து விட்டுத் தான் கிளம்புகிறார்கள். பனியோ மழையோ, காற்றோ எதுவானாலும் கிளம்புவதைத் தள்ளிப் போடுவதில்லை. ஆனால் எச்சரிக்கைக்குச் செவி சாய்க்கிறார்கள். கிளம்பும்போது தெரிவிக்கப்படும் காலநிலைக்கேற்ற ஆடைகளை- பனி அல்லது மழைக்கான ஆடைகள், குடைகள் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கலாம். சுத்தமான வெள்ளை வெயில் அடிக்கும்போது கூட இடுப்பில் மழைக்கோட்டைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு வாகனப் பயணம் செய்வது ஏன் என்று நினைப்பேன். மாலையில் மழை பெய்து காற்றில் அசையும் பூக்கள் நனையும்போது அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த கோட்டின் பயன்பாடு நினைவுக்கு வரும். அணிந்துள்ள ஆடையோடு இன்னொரு ஆடையை எடுத்துச் செல்ல அவர்கள் தயங்குவதே இல்லை.

விலனொவ் தோட்டத்தையும் அரண் மனை யையும் ஒரே நாளில் பார்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். வார்சாவில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் –குறிப்பாக அங்கிருக்கும் அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் வாரத் தில் ஒருநாள் இலவச மாகப் பார்க்க அனுமதி உண்டு. விலனொவில் அரண்மனைக்கு வியாழன் கட்டணம் இல்லை. அதனைச் சுற்றியிருக்கும் தோட்டத்தைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை கட்டணம் இல்லை. நாங்கள் போயிருந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. இன்று அரண்மனையைப் பார்க்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் இரண்டையும் ஒரேநாளில் பார்க்கும் திட்டத்தோடு வந்தோம். இலவசமாகப் பார்க்கும் தோட்டத்தைப் பார்க்க முடியாது என்றவுடன் சற்றுத் தயக்கம் ஏற்பட்டது. உடனே இன்னொரு நாள் பார்க்கலாம் எனத் தொலைபேசியில் சொல்லி விட்டேன். மரிஸ்யா வீட்டிலியே தங்கி விட்டார். நாங்கள் திரும்பி வந்தோம். வார்சாவில் எல்லாச் சுற்றுலா இடங்களிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மையங்கள் இருக்கின்றன. இரண்டும் ஒரேநாளில் இலவசமாகப் பார்க்க முடியாது. ஒருநாளில் ஏதாவது ஒன்றிற்குத் தான் இலவசம் என வைத்திருப்பார்கள். காட்சியகம் இலவசம் என்றால் நிகழ்ச்சிக்குக் கட்டணம் என்பதாக வைத்திருப்பார்கள்.


ஆயுதங்களில் சில





காட்சிக்கூடத்தில் பார்ப்பவர்களும் கண்காணிப்பாளர்களும்



அரண்மனையில் ஓர் அறை

பல்கலைக்கழகத்திற்குப் பக்கத்தில் கலைக்கூடம் ஒன்று இருக்கிறது. ஓவியர்கள், சிற்பிகள், நாடகக்காரர்கள் எனப் பலரும் அங்கே வேலை செய்து கொண்டிருப்பார்கள். வாரத்தில் ஒருநாள் அவர்கள் வேலை செய்வதை அருகில் அமர்ந்து பார்க்க அனுமதி உண்டு. அன்று மட்டும் காட்சிக் கூடம் இலவசம். மற்ற நாட்களில் கலைஞர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் இதுபோல. வார்சாவில் இருக்கும் எல்லா அருங்காட்சியகங்களையும் இலவசமாகப் பார்க்க வருடத்தில் ஒருநாள் அனுமதிக்கிறார்கள். மே மாதம் மூன்றாவது சனிக்கிழமை மாலை ஆறு மணி தொடங்கி அடுத்த நாள் மாலை ஆறு மணி வரை 24 மணிநேரமு அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும். ராணுவக் கூடம், பாராளுமன்றம், அரண்மனை என அனைத்துக் காட்சியகங்களையும் பார்க்கலாம்.


சிலைக்கூடம் ஒன்றில் ஒரு சிலை

இரண்டு மாதங்களுக்குப் பின் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை விலனொவ் பயணத்திட்டத்தை நிறைவேற்றினோம். விலானொவில் பார்க்க வேண்டிய அரண்மனையும் பூந்தோட்டமும் பேருந்து நிலையத்திற்குப் பக்கத் திலேயே இருக்கின்றன. மெல்ல நடந்து நுழைவாயிலுக்குச் செல்லும் பாதை எங்கும் உணவு விடுதிகளும் சுற்றுலாப் பொருட்கள் விற்கும் கடைகளும் இருக்கின்றன. வார்சாவின் உள் நகரப் பகுதிகளில் இருப்பது போல அண்ணாந்து பார்க்க வேண்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத நகரப் பகுதியாக இருக்கும் விலனொவின் அரண்மனையும் வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத அளவிற்கு வளர்ந்த மரங்களுக்குள் தான் இருக்கிறது.
மூன்றுநூறாண்டுகளைத் தாண்டிய அரண்மனை இருக்கிறது 17 ஆம் நூற்றாண்டின் கடைசிக் கால்நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை, பல்வேறு மாற்றங்களுக்குப் பின் இன்றைய வடிவத்திற்கும் உள்கட்டமைப்புக்கும் வந்திருக்கிறது. இரண்டு பக்கமும் சிறகு விரித்துப் பறக்கும் கழுகின் இறக்கைகளைப் போல கோபுர உச்சியைக் கொண்டிருக்கும் அந்த அரண்மனைக்குள்ளிருக்கும் ஓவியங்களையும் சிற்பங்களையும் ஐரோப்பாவின் ஒப்பற்ற கலைஞர்கள் பலர் உருவாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. அடிப்படையான கட்டட வடிவத்தை உருவாக்குவதில் தனது அரண்மனை நூலகரோடு கலந்து பேசியதோடு ராணியின் ஆலோசனைகளையும் பெற்று உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது


ஆசனமும் ஆடையும்


1696 வரை பழைய போலந்து மரபுக்கட்டிட வடிவத்தை மட்டுமே கொண்டிருந்த விலனொவ் அரண்மனை அதற்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களின் கைகளில் போலந்து மரபுக்கட்டடக்கலையோடு ஐரோப்பியக் கட்டடக் கலையினைக் கலந்த வடிவத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது. 1805 இல் ஸ்டானிஸ்லா கோஷ்டா பொடாக்கி என்ற அரச குடும்பத்து நபர் அரண்மனையில் ஓவியங்கள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அக்கால கட்டத்தில் விலை உயர்ந்த ஓவியம் மற்றும் கலைப் பொருட்கள் விற்பனையகமாக அந்த அருங்காட்சியகம் இருந்துள்ளது. ஐரோப்பியக் கலைஞர்கள் பலரும் வந்து அங்கு வேலை செய்திருக்கிறார்கள். ஐரோப்பியப் பாணியோடு சீனப்பாணிகளையும் பாரசீகப் பாணிகளையும் கொண்ட ஓவியங்களையும் சிற்பங்களையும் காண முடிகிறது. துருக்கி வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய இருந்த இசுலாமிய சமயத்தையும் படையெடுப்பையும் தடுத்து நிறுத்தியதில் போலந்து தேசத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் முக்கிய பங்கிருப்பதாக ஐரோப்பியர்கள் சொல்கிறார்கள்.

 எல்லாவகையான போர்களிலும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்துள்ள போலந்து இரண்டு உலகப்போர்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. விலனொவ் அரண்மனையும் இரண்டு உலகப்போர்களினால்- குறிப்பாக ஹிட்லரின் நாஜிப் படைகளால் அதிகம் தாக்கப்பட்டுள்ளது.
அரண்மனைக்குள் நுழைந்து ஒருதளம் வழியாகப் பார்த்துக் கொண்டே போனால் அது முடியும்போது தொடங்கிய இடத்துக்கே வந்து சேரும் விதமாகப் பொருட்களும் அரண்மனையின் பகுதிகளும் பார்வையாளர்களுக்காகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் பொருட்களோடு ஆபரணங்கள், ஆடைகள், இருக்கைகள், பண்ட பாத்திரங்கள், படுக்கைகள், அரசகுடும்பத்து வாழ்விடங்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் வரலாற்றையும் குறிப்புகளையும் மாணவி மரிஸ்யா விளக்கிக் கொண்டே வந்தார். தெரியாதவற்றை அங்கிருந்த குறிப்புகளின் வழியே விளக்கினார். தெரியாதவற்றைத் தெரியாது எனச் சொன்னார். ஒன்றரை மணிநேரத்திற்குப் பிறகு அரண்மனையைச் சுற்றி இருக்கும் அழகிய பூந்தோட்டத்திற்குள் நுழைந்து ஆச்சரியத்தில் மூழ்கினேன்.


அரண்மனையை ஒட்டியுள்ள பூந்தோட்டம்

செதுக்கப்பட்ட சிலைகளைப் போல அழகிய வடிவங்களில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. பசுமையான இலைகளோடு கூடிய பல வண்ணப்பூக்கள் குறிப்பாகத் துளிப் மற்றும் ரோஜாத் தோட்டங்களும் கண்ணைக் கவர்ந்தன எனச் சொல்வது ஒரு மரபுச் சொல்தான். கண்ணின் வழியே மனதிற்குள் நுழையும் காட்சிகளாக அந்தத்தோட்டங்கள் விரிகின்றன. பின்புறத்தில் பூந்தோட்டங்களின் முடிவில் மரங்கள் அடர்ந்த தோட்டமும் அதற்கும் அப்பால் ஒரு அகண்ட நீரோடையும் சுற்றிப் பாதுகாப்பாக நின்றன. அவை பாதுகாப்பு வளையமாக முன்பு இருந்திருக்கலாம். இப்போது பச்சைப்படுதாவைச் சுமந்து விசிறி விடும் கூட்டமாக நிற்கின்றன. நீரோடையில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறார்கள். நீரோடைக்கு அப்பால் அடர்ந்த வனப்பகுதி ஒழுங்கற்ற வடிவில் நீள்கின்றன.


தோட்டத்தில் நான்

அரண்மனையின் இடது புறம் வளர்ந்த மரங்களுக்கிடையே சிறுகுளம் , புல்வெளிகள், செயற்கைக்குன்றுகள் உருவாக்கப் பட்டுள்ளன. அதற்குப் போகும் பாதை முழுவதும் ரோஜாத் தோட்டங்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. ஒரு நீண்ட கண்ணாடி அறையில் பழுது பார்க்க வேண்டிய சிற்பங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அவையே ஒரு காட்சிக் கூடமாக இருக்கிறது.. பூந்தோட்டத்திற்குள் ஒரு புறம் ஒரு ஓவியக் கூடமும் இன்னொரு புறம் ஒரு சுவரொட்டிக் காட்சியகமும் இருக்கின்றன. ஓவியக் கூடத்தில் நான் போயிருந்தபோது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி என்ற குறிப்போடு நவீன ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஓவியங்கள் எதையும் படம் பிடிக்கக் கூடாது என்ற தடையும் இருந்தது. மிகச் சிறிய ஓவியம் முதல் ஒரு சுவரை நிரப்பும் பெரிய ஓவியம் வரை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. வாழும் வாழ்க்கைக்குள் இருக்கும் வன்முறையின் தளங்கள் என அந்த ஓவியங்களைச் சொல்லலாம். மனிதர்கள் உருவாக்கிக் கொண்டுள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் பலவிதமான உரசல்களும் ஆதிக்கநிலையும் அதனை மீறத்துடிக்கும் நிலைகளும் என நவீன ஓவியங்கள் முடிந்த நிலையிலும் முடிக்கப்படாத நிலையிலும் அந்தக் கூடத்தில் நிரம்பி இருந்தன.

 காட்சிக் கூடத்தின் வாசல்

நிரந்தரமான சுவரொட்டிகளின் காட்சிக் கூடம் ஒன்றையும் விலனொவ் அரண்மனையின் இடதுபுறம் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட கால அளவில் சுவரொட்டிகள் மாற்றப்படுமாம. அதிகமாக இரண்டு மாதத்திற்கு மேல் வைக்கப்பட்டிருப்பதில்லை என மரிஸ்யா சொன்னார். வியாபாரத் திற்காகவும், விளம்பரத் திற்காகவும் கலையாகவும், போதனையாகவும் தயாரிக்கப்படும் சுவரொட்டிகள் சொல்லும் சேதிகள் ஓவியங்களை விடக் கூடுதல் தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. அவற்றைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தடையில்லை. நான் பார்த்த சுவரொட்டிகளின் தொகுப்பொன்றை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்க்கலாம். ஒரு சோறு பதம் என்பது போலத்தான் தருகிறேன்.


பூந்தோட்டக் காட்சி



அரண்மனையும் தோட்டமும்



சுவரொட்டிக் கண்காட்சி



சுவரொட்டி ஒன்று



சுவரொட்டிக் கண்காட்சி




கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விளக்கங்கள் அருமை...

படங்கள் அப்பப்பா... சூப்பர்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்