தொல்கதையிலிருந்து ஒரு நாடகம்


மூட தேசத்து முட்டாள் ராஜா
=================================================================
இந்த நாடகத்தின் கதைப்பகுதி நாட்டுப் புறக்கதை ஒன்றைத் தழுவியது. இந்திய மொழிகள் பலவற்றில் இந்தக் கதையை- . சின்னச் சின்ன மாறுபாடுகளுடன் இந்தக் கதையைக் கேட்க முடியும். தொல்கதையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்நாடகத்தை மேடை ஏற்ற விரும்புபவர்கள் எனக்கு ஒரு தகவல் மட்டும் அனுப்பினால் போதும். அனுமதியெல்லாம் பெற வேண்டியதில்லை.
===============================================

பாத்திரங்கள்
கட்டியங்காரன் -1
கட்டியங்காரன் -2
ஒலியமைப்பாளன்
ஒளியமைப்பாளன்
அரசன்
அமைச்சன
திருடன்
கொத்தன்
தாசி
அறிவிப்பாளன்
மற்றும்
காவலர்கள், பொதுமக்கள்
=================================================================
குறிப்பிட்ட இடம் இதுவென்று எதையும் வெளிப்படுத்தாத காட்சி அமைப்பு. காலத்தைக் குறிக்கும் ஒரு அமைப்பு –வடிவம் – காலைக்கடிகை – கடிகாரத்தின் பழைய வடிவம் அல்லது மணிக்கூண்டு . இதில் செய்யப்படும் சிறுமாற்றமே அரங்க வெளியை நீதி விசாரணைக்களமாகவும், தண்டனை நிறைவேற்றப்படும் களமாகவும் மாற்றுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
காட்சி: 1
[மேடையில் இருவர் நிற்கின்றனர். அவர்கள் முகங்கள் பார்வை யாளர்களுக்குத் தெரியாதபடியான ஒளியமைப்பு. அவர்களுக்குப் பின்னால் இருவருக்கும் இடையில் மேடையில் மையத்தில் அந்தக் காலங் குறிக்கும் அமைப்பு தெளிவின்றித் தெரிகின்றது.]

இருவரும்: (ஒரேநேரத்தில்) சபையோர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். ( தன் குரலோடு இன்னொரு குரலும் ஒலிப்பதை அறிந்து ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மீண்டும்…) வணக்கம். நான் தான் இந்த நாடகத்தின் கட்டியங்காரன்.

ஒளியமைப்பாளன்: அட இதென்ன சோதனை.. எங்கய்யா நாடகத்தோட இயக்குநர்.. ஒரே நேரத்தில் ரெண்டுபேரை அனுப்பி வச்சிருக்காரு. ரெண்டுபேரும் நான் தான் கட்டியங்காரன்னு சொல்றாங்க. முதல்ல யார் கட்டியங்காரன்னு முடிவு் பண்ணுங்க. வெளக்குப் போட்டா எல்லாம் வெட்ட வெளிச்ச மாயிடும். அப்புறம் .. யாரு கட்டியங்காரனா இருக்கலாம்னு பார்வையாளர்களும் யோசனை சொல்வாங்க. அழகு, கவர்ச்சி, பேச்சுத் திறமையின்னு ஆரம்பிச்சு அதுக்கும்மேல ஓட்டெடுப்புன்னு போக வேண்டியதாயிடும். யோவ்.. ஸ்டேஜ் மேனேஜர். கூப்பிடய்யா இயக்குநர.. யாருக்குன்னுயா நா வெளக்குப் புடிக்கிறது. முதல்ல .. யாரு கட்டியங்காரன்னு முடிவு பண்ணுங்க..
 
கட்டியங்காரர்கள் :ஐயா பெரியோர்களே! தாய்மார்களே! கட்டிளஞ் சிங்கங்காள்.! இந்த நாடகத்தின் இயக்குநரும் நான் தான்.
ஒளியமைப்பாளன் : இது நல்ல வேடிக்கை தான். இரண்டு பேரும் முதல்ல கட்டியங்காரன்னு சொன்னாங்க. இப்போ இயக்குநரே நான் தான்னு சொல்றாங்க. இன்னக்கி நாடகம் நடந்தாப் லதான். யோவ்… ஸ்டேஜ் மேனேஜர். என்னய்யா இதெல்லாம். என்னால் இந்த நாடகத்துக்கு வெளக்குப் பிடிக்க முடியாது. எனக்குத் தந்த தாள்ல இதுவெல்லாம் இல்லையே.. இதுக்கெல்லாம் என்னால் வெளக்குப் பிடிக்க முடியாது. ஒரு கட்டியங்காரன்னு நெனச்சு ஒரு ’ஸ்பாட்’ தான் வச்சேன். இப்போ ரெண்டுபேருன்னா .. என்னோட ‘லைட்டிங் டிஸைனே’ குழப்பமாயிடுமே. என்னப்பா என் தொழில கெடுக்கிறீங்க.. ரெண்டு பேர்ல யாராவது வந்து அந்த வெளிச்சத்தில வந்து பேசுங்க.
(இருவருக்கும் இடையில் ஒரு ஸ்பாட் லைட் மட்டும் கூடிக் குறைந்து கொண்டே இருக்கிறது. இருவரும் கட்டியங்காரனுக்கான பாடலைப் பாடி இருட்டில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பிம்ப வடிவில் அவர்களின் உருவங்கள் பார்வையாளர்களுக்குத் தெரிகிறது.)
 
ஒலி அமைப்பாளன்: எனக்கும் அதே பிரச்சினை தான். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே வசனத்த பேசினா என்னோட ’மைக்செட்’ ல தான் கோளாறுன்னு நெனச்சுக்குவாங்க. ஒருத்தர் ஒருத்தரா பேசுங்க. அதுதான் சரிப்பட்டு வரும்.
கட்டியங்காரர்கள் : இவ்வளவு தான் ஒங்க பிரச்சினையா..? இதுக்கு உடனே தீர்வு கண்டிடலாம். ( தங்கள் வசம் உள்ள துணியை கயிறாக நினைத்து, யார் பலசாலி என முடிவு செய்ய முயற்சிக்கின்றனர். கயிறு இழுக்கும் போட்டியின் படிமம். சமபலமுள்ளவர்கள் ஆதலால் முடிவு இல்லை. ஒளி அமைப்பாளன் இடையில் வந்து பூவா? தலையா? போட்டு ஒருவனை வென்றவனாகக் கையைத்தூக்கி அறிவித்துவிட்டு இறங்கிக் கொள்கிறான்)
கட்டியங்காரன்.1: நான் கேட்ட தலை விழுந்து அதிர்ஷ்டம் என்னைத் தேடி வந்துள்ளது. அதனால் உங்கள் முன்னால் நானே முதலில் பேசப் போகிறேன். இதற்காக முதலில் ஜோரா ஒரு தடவை கை தட்டலாமா? எங்கே தட்டுங்க பாக்கலாம். ( கைதட்டல் ஒலி)
 
தாய்மார்களே! பெரியோர்களே! நானொரு கட்டியங்காரன். கட்டியங்காரனின் காரியங்கள் உங்களுக்குத் தெரியும் தானே. மூன்று காலம் முழுவதும் உணர்ந்தவன். இன்றைய பொழுதை நேற்றாய் மாற்றுவேன். நேற்றைய பொழுதை நாளையாக்குவான். கட்டுக்குள் இருக்கும் கால எல்லையை கற்பனைகள் கொண்டு விரித்துப் பெருக்குவான்.
நானொரு கட்டியங்காரன்.
காலத்தைக் கட்டி வைப்பவன்.
நேரத்தைக் கட்டவிழ்ப்பவன்.
நானொரு கட்டியங்காரன்.
இப்போது உங்கள் முன் என் நாடகத்தை நடத்தப்போகிறேன். நாடகம் நல்லதொரு நாடகம்.
ஏ.. விளக்கப் போடு.. இடத்தை பாக்கணும். எனக்கான இடமான்னு பாக்கணும்.
(வெளிச்சம் பரவுகிறது. அவன் எல்லா இடங்களிலும் பரவி வந்து .. கிரிக்கி சுற்றி முடிக்கிறான்)
பார்வையாளர்களே! மன்னிக்க வேண்டும். இந்த இடம் என் நாடகத்திற்குத் தோதானதாகத் தோன்றவில்லை. என் நாடகம் நடைபெற உள்ளேயும் இல்லாத, வெளியேயும் இல்லாத – அகத்திலும் இல்லாத, புறத்திலும் இல்லாத இடம் தான் வேண்டும்.
கட்டியங்காரன் 2 : என்னது.. என்னது..
கட்டியங்காரன்.1 : ஆம்.. அதுதான் என் நாடகத்திற்கான இடம். உள்ளேயும் இல்லாத, வெளியேயும் இல்லாத – அகத்திலும் இல்லாத, புறத்திலும் இல்லாத இடம்
கட்டியங்காரன் 2 : அப்போ ஓன் நாடகம் நடந்த மாதிரி தான்..
கட்டியங்காரன்.1 : ஏன். நிச்சயம் என் நாடகம் நடந்தே தீரும். இந்த பூமியில் எங்கயாவது அதற்கான வெளி – உள்ளும் அல்லாத புறமும் அல்லாத வெளி கிடைக்கும். அங்கே தான் என் நாடகத்தை நடத்துவேன்.
கட்டியங்காரன்.2 : அதுசரி.. கொஞ்சம் இருந்து அப்போ நான் நடத்தப் போற நாடகத்தப் பார்த்துட்டுப் போ… அப்படி உட்கார்.. (மேடையின் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கிறான். கட்டியங்காரன் -1 உட்கார்ந்துள்ளான்)
நல்லவர்களே! வல்லவர்களே!! நானொரு கட்டியங்காரன். கட்டியங்காரனின் வித்தைகள் எல்லாம் தெரியும் தானே. ஆக்கவும் செய்வான்; காக்கவும் செய்வான்; பின்னர் அழிக்கவும் செய்வான். அவை கோட்டைகள் என்றால் கோட்டைகளாகும்; கொத்தளம் என்றால் அவை கொத்தளம் ஆகும்.
கட்டியக்காரன் அவன் இடத்தைக் கட்டி அமைப்பவன்.
கட்டியக்காரன் நாடகத்தின் கட்டியக்காரன் – இங்கே என் நாடகத்தை நடத்தப் போகிறேன். மேடை, சீன் செட்டிங், பின்பாட்டு இவையெல்லாம் விட எனக்குக் காலம் முக்கியம். காலம் என்றவுடன் ராகுகாலம், எமகண்டம் என்று நினைத்து விட்டீர்களா? அந்தக் காலம் இல்லை. நான் சொல்லும் காலம் என் நாடகம் நடத்தப்பட வேண்டிய நேரம். எனது நாடகத்துக்கான நேரம்.
கட்டியங்காரன். 1 : அது என்ன நேரம்….. ?
கட்டியங்காரன்.2 : ராவும் அல்லாத பகலும் அல்லாத நேரம்… அதில் தான் என் நாடகம் நடத்தப்பட வேண்டும்.
கட்டியங்காரன். 1 : என்னது.. என்னது..?
கட்டியங்காரன். 2 : ராவும் அல்லாத பகலும் அல்லாத நேரம்…
கட்டியங்காரன்.1 : அப்போ நீயும் உன் நாடகத்த நடத்தப் போறதில்லன்னு சொல்லு..
கட்டியங்காரன். 2 ; நிச்சயம் நடத்துவேன். காலங்கள் மாறுவது காணும் தோறும் நடப்பது கற்பனை அல்லவே. என் காலம் வரும். இலைகள் உதிர்வதும் துளிர்கள் வளர்வதும் காலக் கணக்கனின் கணிப்பால் என்பதறிவோம். தேடுவேன் காலத்தை; நாடுவேன் வேகத்தை.
கட்டியங்காரன்.1 : நாம் இருவரும் சேர்ந்தே தேடுவோம். நான்
வெளியைத் தேடுகிறேன். நீ காலத்தைத் தேடு.
கட்டியங்காரன். 2 ; நமக்குள் ஓர் ஒப்பந்தம். அதற்குப் பார்வையாளர்களே சாட்சி.
கட்டியங்காரன். 1 : என்ன…?
கட்டியங்காரன். 2 : யார் நாடகம் முதலில் நடக்கிறதோ அந்த நாடகத்துக்கு அடுத்த ஆள் கங்காணியாய் இருக்கணும்.
கட்டியங்காரன். 1 : அதாவது என் நாடகத்துக்கான இடம் வசப்பட்டா நான் கட்டியங்காரன். நீ கங்காணி.
கட்டியங்காரன். 2 : ஆம்.. அதே தான். என் நாடகத்துக்கான காலம் முதலில் வசப்பட்டால் நான் கட்டியங்காரன். நீ கங்காணி.
கட்டியங்காரன். 1 : சரிதானே…
( கை கொடுத்துக் கொள்கின்றனர். பின்னணியில் பாடல். அவர்கள் இங்கும் அங்கும் அலைகின்றனர். முடிவில் கூட்டத்திற்குள் புகுந்து விடுகின்றனர்)


தேடுகிறான்.. மனிதன் தேடுகிறான்.
கூட்டமாய்.. தனியனாய். தேடுகிறான்


தத்துவங்கள் என்று சொல்வான்
தவங்கள் பல புரிவான்…


இருக்கின்ற இடமே இன்பமெனச்
சொல்லி இருப்பவரும் இங்கே உண்டு.
இன்னும் இன்னுமென்று
ஏகமாய் விரித்தவர் என்றும் பலருண்டு.
இருக்கின்ற இடம் விட்டு
இல்லாத இடம் தேடி
இங்கொருவன் கிளம்புகின்றான்.
புலராத காலத்தை
மலராத நேரத்தை
மனிதன் அவன் நாடுகின்றான்.


காலத்தை மறந்தும் நாம்..
வெளியை இழந்தும் நாம்
வேடிக்கை பார்க்க வந்தோம்.. இங்கே
வேடிக்கை பார்க்க வந்தோம்..


வேடிக்கை நடக்குது; விநோதங்கள் நடக்குது:
விளையாட்டு நடக்குது; களியாட்டம் நடக்குது;
களிப்புடன் கண்டு நின்றோம் – நாம்
களிப்புடன் கண்டு நிற்போம்
(பாடலின் போது அரங்கவெளி அடுத்த காட்சிக்குத் தயாராக வேண்டும். அவர்களின் தேடல் அரங்க வெளியை மாற்றுவதாகவும் அமையலாம்)


காட்சி: 2


[முரசின் ஒலி காலங்காட்டும் அமைப்பின் பின்னாலிருந்து வருகிறது. அதன் முடிவில் அறிவிப்பாளனின் அறிவிப்பு]
· கோணய நாட்டு மக்கள் அனைவருக்கும் நமது கேணய மகாராஜாவின் இன்றைய புது அறிவிப்பு.
· நம் தேசத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த “கால ஒழுங்கு” இன்று முதல் முறைமாற்றம் செய்யப்படுகிறது.! அதாவது இனி இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவாகவும் கருதப்படும்.
· பெயர் மாற்றல் உத்தரவுகளை ஏற்றுக் கொண்டது போலவே இந்த ஆணையையும் ஒவ்வொரு குடிமகனும் சிரமேற்கொண்டு செயல்படுத்த வேண்டும்.
· தவறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
[முரசறைதல்… அறிவிப்பு]
· கால ஒழுங்குமுறை மாற்றம் செய்யப்படுகிறது. தவறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
[முரசறைதல்… அறிவிப்பு]
· பகல் பொழுது இரவாகவும் இரவுப் பொழுது பகலாகவும் கருதப்படும். மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். .


காட்சி: 3


[ஒளியமைப்பு இரவு, பகல் மாறுவதைக் காட்ட வேண்டும். இயற்கை தன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறது. மனிதர்கள் அதுவரை பழக்கப்பட்ட நிலையிலிருந்து விலகுகின்றனர்]


· பகலை இரவெனக் கொண்டு தூங்க முயல்கின்றனர்
· பகலில் செய்யும் வேலைகளை இரவைப் பகலாகக் கருதிச் செய்கின்றனர்.
· தூக்கமும் விழிப்பும் பெரும் சிக்கலாக மாறுகின்றன. இருட்டும் வெளிச்சமும் குழப்பத்தில்
· அந்தரங்க விசயங்கள் வெளிச்சத்தில் நடக்க
அரண்மனையில் அரசனும் அமைச்சனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்
அரசன் : அமைச்சரே! தேசத்தின் மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா?
அமைச்சன் : இருக்கிறார்கள் அரசே!!
அரசன் : மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே!
அமைச்சன் : பொழிகிறது அரசே!!
அரசன் : சட்டம் ஒழுங்கு காக்கப்படுகிறதா அமைச்சரே…
அமைச்சன் : கடுமையான தண்டனை என்று அறிவிப்பு இருக்கிறது அரசே.
அரசன் : மாறுவேடத்தில் நகர்வலம் போகலாமா அமைச்சரே..?
அமைச்சன் : போகலாம் அரசே..
அரசன் : மாறுவேடத்திற்கான ஆடைகளை எடுத்து வரச்
சொல்லுங்கள் அமைச்சரே,
அமைச்சன் : இதோ உத்தரவிடுகிறேன் அரசே..
( உள்ளே போய்த் திரும்பி வந்து )
மன்னிக்க வேண்டும் மன்னா.. வந்து .. இன்று நகர்வலம்
வேண்டாம் மன்னா//
அரசன் : ஏன் பூனை குறுக்கே வந்து விட்டதா?
அமைச்சன் : இல்லை மன்னா .. வந்து..
அரசன் : வந்தும் இல்லை.. போயும் இல்லை. இன்று இரவு
ராணியை நெருங்க முடியாது. ஆகவே நகர்வலம்
போயாக வேண்டும்
அமைச்சன் : அரசே அது வந்து … நமது புதிய உத்தரவுப்படி இது பகற்பொழுது அரசே.. இரவில் தானே மாறுவேடத்தில் நகர்வலம் போக ஒப்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பனைக்காரன் சொல்லி விட்டான். அரசே சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதால் பயப்படுகிறான். அரசே..
அரசன் : ஆமாம். ஆமாம். நல்லவேளை. ஒப்பனைக்காரன் ஞாபகப்படுத்தினான். சட்டம் ஒழுங்கைக் காக்கும் அரசாங்க
ஒப்பனைக்காரனுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் அரசே.
அரசன் : ஏழிசை வல்லபியை ஏந்திழை மன்னர் அழைத்தார் எனச் சொல்
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் அரசே. ( செல்கிறார்)
· சூரியன் வருவதற்கான ஒளியமைப்பு
· வீடுகளில் விளக்குகள் ஏற்றுகின்றனர்
· ராப்பாடியும் திருடனும் ஒரு சத்திரத்தில் தூங்கிக்
கொண்டிருக்கின்றனர்
· வீடுகளில் பாய்களை விரித்துப் படுக்க
ஆரம்பிக்கின்றனர்
· தன் மனைவியை நெருங்கிப் படுக்க ஒருவன்
முயல்கிறான். திடுக்கிட்டு விழித்த அவள் பக்கத்தில்
மற்றவர்கள் இருப்பதைப் பார்த்து அவனை அண்ட
விடவில்லை
· திருடன் பதுங்கிப் பதுங்கி வருகிறான்.
ராப்பாடி : (பாடல் பாடுகிறான்)
பெய்யு மழையம்மா இங்கே பெய்யு மழையம்மா
பேயா மழையொன்னு இங்கே பெய்யு மழையம்மா
நல்ல மழையொன்னு பெய்யு மாலம்மா
ஊசிபோல மின்னி மின்னி
ஊர் செழிக்கப் பெய்யு மாலம்மா.
நாடு காடானாலும் காடு நாடானாலும்
நல்ல மழை மாறாது.

ராத்திரியைப் பகலென்றால் பகல் கோபங்கொள்ளாது
பகலை இரவென்றால் பகல் குளிர்ந்து போகாது
இயற்கை வழி மாறாது இன்னுமென்ன சேதியம்மா..
· காதலர்கள் தனியாக சந்தித்துக் கொள்கின்றனர்.
காதலி : இன்னும் எத்தனை நாட்கள் இப்படி யாருக்கும் தெரியாமல்
சந்திப்பது.
காதலன் : கொஞ்ச காலம் தான் நேரம் வரும். நாம் கணவன்
மனைவியாவோம்
[மாறுவேடத்தில் அரசனும் அமைச்சனும்)
அரசன் : நம்மக்கள் என் ஆணையைச் சிரமேற்கொண்டு
செயல்படுகிறார்கள் இல்லையா?
அமைச்சன் : அதில் என்ன சந்தேகம் அரசே. உங்கள் தலைமையில்
பூலோகமே சொர்க்கலோகமாகி விட்ட பிறகு
மக்களுக்கு என்ன குறை இருக்கப்போகிறது மகாராஜா.
அரசன் : அப்படியா சொல்கிறீர்கள் அமைச்சரே.
அமைச்சன் : சட்டமும் நீங்கள். காவலும் நீங்கள். சகலமும் நீங்கள்
உங்கள் பொற்பாதம் படும் இடம் புண்ணிய பூமி
அரசன் : அமைச்சரே! அங்கே ஏதோ குரல் கேட்கிறதே.
எனக்கெதிரான சதி வேலை எதுவும் திட்டமிடப்
படுகிறதோ..!
அமைச்சன் : இருக்கலாம் அரசே.. ஒதுங்கி இருந்து கவனிப்போம் (
மறைந்து நின்று கேட்டு விட்டு) காதலர்கள் ரகசியமாகச்
சந்தித்துக் கொள்கிறார்கள் அரசே. பெற்றோர்களுக்குத்
தெரியாமல்..
அரசன் : இருட்டில் தானே யாருக்கும் தெரியாமல் சந்திக்க
முடியும்?
அமைச்சன் : அரசே.. நம் சட்டப்படி அது இரவில் நடக்க வேண்டிய
காரியம். உங்கள் சட்டத்தை மதித்து நடக்கிறார்கள் அரசே.
அரசன் : சட்டத்தை மதித்து நடக்கும் காதலர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? காதலர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிக்க வேண்டும் என காவலர்களுக்கு உத்தரவு இடுங்கள். காதலர்களுக்குத் துணை காவலர்கள். சரிதானே.
அமைச்சன் : மிகச் சரியானது அரசே.. போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி விடலாம் அரசே.

 

[ ஒளி அமைப்பு மூலம் இரவும் பகலும் மாறுவதைக் காண்பிக்க வேண்டும். மக்கள் புதிய முறை மாற்றத்திற்குப் பழகி விட்டனர். பின்னணியில் பாடலின் இசை ரூபம் மட்டும்
· தேடுகிறான் மனிதன் தேடுகிறான். தனியனாய்க் கூட்டமாய்த் தேடுகிறான். ஆறடி மண்ணே அவனது உரிமை ஆவதில்லை என்று அறிந்த நிலையிலும் (தேடுகிறான்,,)
· முடிமன்னனாகி மூவுலகை ஆண்டிட முயன்றவர் பலருண்டு முக்காலம் வென்று எக்காலமும் இருப்பேன் என்றவர் பலருண்டு (தேடுகிறான்,,)
· தேடலை வெறுப்பவன் திசை அறியாதவன் நாடிட என்ன உண்டு புதிது புதிது புத்தம் புதிது என்று மனக்குதிரையில் சென்று பாரு. (தேடுகிறான்,,)
· வெளியை நீ கண்டிடு நேரத்தை வென்றிடு.. மனிதா .. நீ இருப்பதை உணர்ந்து கொள்ளு.. தேடுவான் மனிதன் தேடுவான் … தனியனாய்க் கூட்டமாய்த் தேடுவான்

காட்சி: 4

[கட்டியங்காரர்களாக வந்த இருவரும் மேடைக்கு வருகின்றனர். கோணய நாட்டு எல்லையைக் கடந்து நகருக்குள் நுழையும்பொழுது வியர்த்துக் கொட்டுகிறது. வெயிலின் தகிப்பில் நடந்து வருவதற்கு சிரமப்படுகின்றனர். ஆள் அரவமே இல்லாத வெறிச்சோடிய தெருக்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. மரத்தடி நிழல்களில் பலரும் உறங்குகின்றனர். வீட்டிற்குள் புழுக்கத்தில் விசிறியபடியே உறங்கும் காட்சிகளும் தெரிகின்றன ]


கட்டியங்காரன்.2:இதென்ன ஆச்சரியம். இந்த ஊரே இப்படி உச்சி வேளையில் உறங்குறாங்களே. என்ன மாயம். புல்லாங்குழலுக்கு மயங்கிய மாட்டு மந்தைகளைப் போல என்ன மந்திரத்தில் இப்படிக் கட்டுண்டு கிடக்கிறார்கள் இவர்கள்.
கட்டியங்காரன்.1: மந்திரமாவும் தோணல. மாயமாவும் தோணல. உச்சி வெயில்ல தூங்கிற சோம்பேறிகள் நிறைஞ்ச ஊராகத் தான் தெரியுது.
கட்டியங்காரன்2 : சரி .. சரி.. வந்தது வந்துட்டோம். பயணக்களைப்பு தீர ஓய்வெடுத்து விட்டுத் திரும்பவும் நம் பயணத்தைத் தொடரலாம்.
கட்டியங்காரன்.1 : அதோ ஒரு சத்திரம்.. சோம்பேறிகளின் மடம். அங்கே இருந்து ஓய்வெடுக்கலாம்.
கட்டியங்காரன்.2 : இங்கே இருந்தால் நாமும் தூங்கி விடுவோம் போல் இருக்கிறது.
[சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் படுத்து கண் அயர்ந்து விடுகின்றனர். திடீரென்று ஊர் விழித்துக் கொண்டிருக்கிறது. கட்டியங்காரர்களும் விழித்துப் பார்க்கின்றனர்]
· பெண்கள் வாசல் தெளித்துக் கோலம் போடுகின்றனர்
· ஆடுமாடுகள் மேய்ப்பதற்காக ஓட்டிச் செல்லப்
படுகின்றன. அவற்றை அதட்டும் ஒலி கேட்கிறது
. · பல் துலக்கியபடி சிலர் காலைக்கடன் கழிக்கச்
செல்கின்றனர்.


கட்டியங்காரன்.1 : அடடே.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.இந்த இடத்தில் இருந்து இப்பவே கிளம்பிடணும்னு தோணுது.
கட்டியங்காரன் 2 : எனக்கு இது ரொம்ப வித்தியாசமான எடமாத் தோணுது. ஒரு ரெண்டு , மூணு நாள் இருந்து பார்க்கலாம்னு நெனக்கிறேன்.
கட்டியங்காரன் 1 : ஒரு நிமிஷம் கூட என்னால இங்கே இருக்க முடியாது. நாம் இப்பவே இங்கிருந்து கிளம்பணும்
கட்டியங்காரன் 2 : எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த ஊரு என்னுடைய தேடுதலின் முடிவு இங்கு தானோ என்று தோன்றுகிறது.
கட்டியங்காரன் 1 : என்ன சொல்கிறாய் நீ..
கட்டியங்காரன் 2 : ஆமாம் .. என் தேடல்..
நீண்ட நெடிய தேடல்..
என் நாடகத்திற்கான தேடல்..
காலத்தைத் தேடிய தேடல்.
ராத்திரியும் அல்லாத பகலும் அல்லாத காலநிலை
அது இங்கே வசப்படும் சூழ்நிலை
நானொரு கட்டியங்காரன்..
நல்லதொரு கட்டியங்காரன்
கட்டியங்காரன் 1 : ஐயோ இது வேற மாதிரி ஊரு. ராத்திரியைப் பகலாகவும் பகலை ராத்திரியாகவும் குழப்பும் பூமி. உனக்கான பூமி அல்ல.


கட்டியங்காரன் 2 : எனக்கான காலம். ராவுமல்லாத பகலுமல்லாத காலம். அது நிச்சயம் கிடைக்குமிங்கே. கால ஒழுங்கை மாற்றிப் பார்க்கும் இத்தேசத்து மக்கள் எனக்கான காலத்தை உருவாக்குவார்கள்.
கட்டியங்காரன் 1 : இல்லை உன் காலத்தை முடிப்பார்கள் என்றே
தோன்றுகிறது.
கட்டியங்காரன் 2 : வெறும் தேடலில் பயன் என்ன விளையும். பரீட்சைகள் தான் முடிவுகளைக் கொடுக்கும் . சோதனைகள் இன்றிச் சாதனைகள் ஏது? போதனைகள் தந்த இப்பூமி புதிய ஒளியைப் பாய்ச்சி விட்டது என்னுள்
கட்டியங்காரன் 1 : வேதனைகள் உருவாகும் என்ற பயமே இங்கு உண்டாகிறது. இயற்கை ஒழுங்கைக் குலைத்து மாற்ற நினைப்பது விபரீதம் ஆகும்


கட்டியங்காரன் 2 விபத்துகள் இருக்கலாம். ஆனால் வெற்றிகள்
முக்கியம். விபரீதம் என்றால் வேறு வழியென்ன?
[அவர்கள் பேச்சை இடைமறிப்பவர் போல ஒருவர் வந்து]
அவர் : உங்கள் இருவருக்கும் என் அன்பு வணக்கம். உங்கள் இருவரையும் பார்த்தால் தேசாந்திரம் செய்பவர்கள் போலத் தெரிகிறது. உங்கள் பயணக்களைப்புத் தீர எங்கள் இல்லத்தில் விருந்துண்ண வேண்டும். வந்தாரை வரவேற்பது எங்கள் பண்பாடு. காலைக் கடன்களை முடித்துவிட்டு வாருங்கள்
கட்டியங்காரன் 1 : அது வந்து… இது ..இப்போது காலை..
கட்டியங்காரன் 2 : ஆகா என்ன அருமையான மக்கள். விருந்தினரைப் பேணும் பண்பாடும்… அறிவாளிகளைப் பேணும் சிறப்பும்.. ஆகா.. இந்த ஊர்தான்.. என் லட்சியபூமி.. இங்கே என் நாடகத்தை அரங்கேற்ற முடியும்
அவர் : ஓ.. நீங்கள் நாடகக் கலைஞர்களா? .. கலைஞர்களுக்கான மரியாதையைத் தருவதில் எங்கள் மாமன்னர் தனிக்கவனம் செலுத்தக் கூடியவர். எங்கள் வீட்டில் விருந்து முடித்து விட்டு அரண்மனைக்குச் செல்லலாம்.
கட்டியங்காரன் 1 : இல்லை . நாங்கள் இருவரும் நாடகத்திற்கான
ஒன்றைத் தேடி வந்துள்ளோம்.
அவர் : எதுவானாலும் இங்கே கிடைக்கும். எங்கள் நாட்டில் இல்லாதது இல்லை. முதலில் விருந்துண்ண வாருங்கள்
கட்டியங்காரன் 2 : நீங்கள் செல்லுங்கள். இதோ வருகிறோம்.
[அவர் செல்ல.. கட்டியங்காரன் 2 கொண்டு வந்த
பொருட்களை எடுக்கத் தொடங்குகிறான்]
கட்டியங்காரன் 1 : (தயங்கி) நாம் இங்கே விருந்துண்ணத்தான் வேண்டுமா? எனக்கென்னவோ இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து நிறைந்ததாகவே தோன்றுகிறது
கட்டியங்காரன் 2 : இல்லை. ஒவ்வொரு கணமும் சுவையானதாகத் தோன்றுகிறது. எனக்கு, நான் இந்த ஊரில் தங்கி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.
கட்டியங்காரன் 1 : நீ உன் விருப்பம் போல் செய். நான் கிளம்புகிறேன். எனக்கு விருந்தும் வேண்டாம். மருந்தும் வேண்டாம்..
கட்டியங்காரன் 2 : இவ்வளவு பயப்படும் நீங்கள் இங்கே தங்குவது சரியல்ல. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால் நாம் பார்வையாளர்கள் முன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆவது? என் நாடகத்திற்கு கங்காணியாக இருக்கச் சம்மதித்து இருக்கிறீர்கள்
கட்டியங்காரன் 1 : நீ உன் நாடகம் நடப்பதாக முடிவானால் நான் நிச்சயம் வருவேன். நான் வர வேண்டும் என்று நீ நினைத்துக் கொண்டால் இந்த உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் உடனே வந்து விடுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.
[இருவரும் விடைபெற்று எதிரெதிர் திசையில் பிரிகின்றனர். காட்சி 3 இல் ஒலித்த இசை ரூபம் இப்போது பாடலாக ஒலிக்கிறது] :


தேடுகிறான்.. மனிதன் தேடுகிறான்.
கூட்டமாய்.. தனியனாய். தேடுகிறான்


தத்துவங்கள் என்று சொல்வான்
தவங்கள் பல புரிவான்…


இருக்கின்ற இடமே இன்பமெனச்
சொல்லி இருப்பவரும் இங்கே உண்டு.
இன்னும் இன்னுமென்று
ஏகமாய் விரித்தவர் என்றும் பலருண்டு.
இருக்கின்ற இடம் விட்டு
இல்லாத இடம் தேடி
இங்கொருவன் கிளம்புகின்றான்.
புலராத காலத்தை
மலராத நேரத்தை
மனிதன் அவன் நாடுகின்றான்.


காலத்தை மறந்தும் நாம்..
வெளியை இழந்தும் நாம்
வேடிக்கை பார்க்க வந்தோம்.. இங்கே
வேடிக்கை பார்க்க வந்தோம்..


வேடிக்கை நடக்குது; விநோதங்கள் நடக்குது:
விளையாட்டு நடக்குது; களியாட்டம் நடக்குது;
களிப்புடன் கண்டு நின்றோம் – நாம்
களிப்புடன் கண்டு நிற்போம்


காட்சி: 5


[அரசனின் விசாரணை மன்றம். அதன் பின்னணியில் மரண தண்டனையை நிறைவேற்றும் அமைப்பு உள்ளது. அமைச்சர்கள், காவலாளிகள், மக்கள் குழுமியிருக்கின்றனர்]


அரசன் : அமைச்சரே! இன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள்
எல்லாம் முடிந்தது தானே..
அமைச்சன் : முடிந்தது அரசே.. ஆனால் ஒரேயொரு மேல்முறையீடு
மட்டும் உள்ளது அரசே..
அரசன் : அப்படியா.. கிராமசபை வழங்கியுள்ள தீர்ப்பைப்
படியுங்கள்
அமைச்சன் : [படிக்கிறான்] அவனி புகழ் கேணய மகாராஜாவின்
ஆளுகைக்குட்பட்ட மண்பாதி மங்கலம் கிராமம் வேதவல்லி
அம்மன் சந்நிதி தெருவில் எழுபத்தியெட்டாம் இலக்க
மனையில் கன்னம் வைத்துத் திருடிய கள்வன் கையுங்
களவுமாகப் பிடிபட்டான். கன்னம் வைத்து மதில் விழுந்ததில்
இரண்டு ஆநிரைகளும் இரண்டு பிராமணர்களும் உயிரிழந்து
விட்டனர்.
நீதிநெறி வழுவா கேணய மகாராஜாவின் ஆக்ஞைகள் படி திருட்டுக்குத் தண்டனை ஆறுமாத சிறைவாசம். ஆனால் உயிர் பலிக்குத் தண்டனை உயிர்பலி தான். இரண்டு பிராமணர்கள் மூன்று உயிர்களுக்குச் சமம். எனவே ஐந்து உயிர்கள் பலியாகக் காரணமான இத்திருடனுக்கு மரண தண்டனைக்குக் குறைவான தண்டனை கிடையாது. சர்வ அமாவாசை நாளாம் எதிர்வரும் புதன்கிழமை சூரியன் மேரு மலையில் கால் பதிக்கும் நேரத்தில் அதாவது இரவுமல்லாத பகலுமல்லாத வேளையில் அவனைத்தூக்கிலிட வேண்டும் என்பது பஞ்சாயத்தார் முடிவு. இம்முடிவு கோணய நாட்டின் கேணய மகாராஜா நாமம் உள்ளளவும் நின்று நிலவும்..
அரசன் : இந்தத்தீர்ப்பில் குறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே. கொண்டு வாருங்கள் அந்தத் திருடனை..
[காவலர்கள் அவனை இழுத்து வந்து நிறுத்துகிறார்கள்]
அரசன் : கன்னம் வைத்துத் திருடிக் கையுங் களவுமாகப்
பிடிபட்டது உண்மைதானே
திருடன் : உண்மைதான் அரசே..
அரசன் : அப்புறம். தண்டனையை ஏற்றுக் கொள்ளாமல்
மேல்முறையீடு செய்ததன் காரணம்?
திருடன் : உங்கள் நல்லாட்சிக்கும் உங்கள் பெருமைக்கும்
பழிபாவம் வந்து சேரக்கூடாது என்பதற்காகத் தான் அரசே.
அரசன் : நீ செய்த குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கப்
போகிறாய்.அதனால் எனக்கு எப்படி பழிபாவம் வந்து
சேரும்
திருடன் : செய்யாத குற்றத்திற்காக ஒருவன் உங்கள் ஆட்சியில் தண்டிக்கப்பட்டால், அந்தப் பழியும் பாவமும் உங்களைத்தானே சாரும் அரசே.
அரசன் : கன்னம் வைத்துத் திருடிக் கையுங் களவுமாகப்
பிடிபட்டது உண்மை என்று ஒப்புக் கொண்டாயே..
திருடன் : இப்போதும் ஒப்புக் கொள்கிறேன் அரசே.
அரசன் : அப்படியானால் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டியது
தானே
திருடன் : எனக்குத் தண்டனை நான் திருடியதற்காகத் தரப்படவில்லை அரசே.. ஐந்து உயிர்களைப் பலி வாங்கியதற்காக மரண தண்டனை வழங்கப் பட்டுள்ளது அரசே.
அரசன் : நீ கன்னம் வைத்ததினால் தானே மதில் விழுந்தது.
திருடன் : ஆமாம் அரசே.
அரசன் : அதனால் தானே ஐந்து உயிர்கள் பலியானது
திருடன் : கன்னம் போட்டுத் திருடியது இது முதல் தடவையல்ல அரசே. பலமுறை திருடியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மதில் விழுந்தது இல்லை/ இந்த முறை தான் விழுந்திருக்கிறது. இத்தனைக்கும் அது பழைய வீடாகவும் இல்லை . அதனால்
அரசன் : அதனால்..
திருடன் : கட்டடம் கட்டியதில் ஏதோ கோளாறு இருந்திருக்க
வேண்டும் அரசே.
அரசன் : அதன் மூலம் நீ சொல்ல விரும்புவது
திருடன் : ஐந்து உயிர்கள் பலியானதற்கு நான் காரணமல்ல; மதில்
தான் காரணம். மதிலைக் கட்டிய கொத்தனார் தான்
காரணம் அரசே..
அரசன் : ஆகவே
திருடன் : ஆகவே திருட்டுக் குற்றத்திற்கான ஆறுமாத சிறைத்
தண்டனையை மாத்திரம் எனக்கு வழங்குவதே நீதி
வழுவா உங்கள் ஆட்சியின் சிறப்பாகும்.
அரசன் : அமைச்சரே! அவன் சொல்வது சரிதானே. இவனுக்கு
வழங்கப் பட்ட மரண தண்டனையை ரத்து செய்கிறேன்.
அவனை ஆறுமாதச் சிறை தண்டனைக்கு அனுப்புங்கள். நாளை விசாரணைக்கு அந்த மதிலைக் கட்டிய கொத்தனாரைக் கொண்டு வாருங்கள்
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் அரசே..
[ஒளிமாற்றம். அடுத்த நாள் விசாரணை திருடன் நின்ற இடத்தில் கொத்தனார்]
அரசன் : திருடன் கன்னம் வைத்ததால் மதில் விழுந்திருக்கிறது.
மதில் விழுந்ததால் ஐந்து உயிர்கள் பலியாகி
விட்டன. ஐந்து உயிர்கள் அழிவுக்குக் காரணம் வலுவற்ற மதிலைக் கட்டிய நீ தான். உனக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. வரும் புதன்கிழமை ராவுமல்லாத பகலுமல்லாத வேளையில்…
[ அந்த வேளையில் அங்கே வந்த கட்டியங்காரன் 2 ஆவலுடன்]
கட்டியங்காரன் 2 : ராவுமல்லாத பகலுமல்லாத வேளையில்…நாடகமா..
ஒருவர் : இல்லை . தூக்கு தண்டனை.
கொத்தனார் : (கதறியழுதபடி) அரசே.. என்னை மன்னிக்க வேண்டும்
அரசன் : அந்த வார்த்தையைக் கேட்க என் காதுகள்
விரும்புவதில்லை
கொத்தனார் : இல்லை. அரசே.. எத்தனையோ கட்டடங்களைக் கட்டியிருக்கிறேன். தூங்கா மணி மண்டபங்கள் என்ன? ஏழடுக்குக் கோபுரங்கள் என்ன? பெரும் யுத்தங்களையெல்லாம் அவை சந்தித்து உள்ளன. அப்படிப்பட்ட நிலையிலும் அவை உறுதியாக விளங்கின. ஆனால் இந்த மதில் தான் விழுந்து விட்டது. உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த இடத்தில் வேலை செய்யும் போது எனது கவனம் பிசகி விட்டது அரசே..
அரசன் : கட்டடம் கட்டும்போது கவனத்தைச் சிதற விட்டது
நீதானே. அப்புறம் என்ன? தண்டனையை ஏற்றுக் கொள்.
கொத்தனார் : கவனத்தைச் சிதற விட்ட குற்றம் என்னுடையது தான்.
ஆனால் என்னுடைய கவனத்தை ஈர்த்தது வேறு ஆள்.
அரசன் : உன் கவனத்தைச் சிதறடித்தது வேறு ஒரு ஆளா.. யார்
அந்த ஆள்…
கொத்தனார் : அது வந்து
அரசன் : சீக்கிரம் சொல்..

 

கொத்தனார் : ஆடல் வல்லான் கோயில் தாசி ஏழிசை வல்லபி தான் அரசே.. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் வேலைச் செய்யும் நேரத்தில் அவள் அந்த வழியே போனாள். அவளின் காலடி ஓசையிலும் கைவளையோசையிலும் ஈர்க்கப்பட்ட நான் கவனம் சிதறிவிட்டேன்.
அரசன் : கவனத்தைச் சிதற விட்ட கொத்தனாருக்குத் தண்டனை ஆறுமாத சிறைவாசம். கவனத்தைச் சிதற வைத்த தாசியே உயிர்கள் பலியானதற்குப் பொறுப்பு. அவளை அழைத்து வாருங்கள்.
[ ஒளி மாற்றம். கொத்தனார் இடத்தில் தாசி.]
அரசன் : கொத்தனாரின் கவனத்தைத் திசை திருப்பிய நீதான் ஐந்து உயிர்கள் பலியானதற்குக் காரணம். உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்வரும் புதன் கிழமை ராவுமல்லாத பகலுமல்லாத வேளையில்…நீ தூக்கில் இடப்படுவாய்.
கட்டியங்காரன், 2 : ஆகா.. நான் தேடிய நேரம் வரப்போகிறது. என் நாடகம் நடக்கப்போகிறது. உடனே கங்காணிக்குச் சொல்ல வேண்டும். (கண்களை மூடி நினைத்துக் கொள்கிறான்)
தாசி : அரசே! இதென்ன அநியாயம். எய்தவன் இருக்க அம்பை நோகும் கதையாக இருக்கிறது. நான் அந்த நேரத்தில் அங்கே வந்தது உண்மைதான். ஆனால் நானாக வரவில்லையே. வரச்சொன்னதால் தானே வந்தேன். நான் ஒரு அபலைத் தாசி. ஆணையிட்டால் அடி பணிய வேண்டியவள். அந்த நேரத்தில் வரச்சொன்னவர் சொல்லைத் தட்டியிருந்தால் அன்றே மரண தண்டனை அடைந்திருப்பேன்.
அரசன் : அந்த நேரத்தில் உன்னை வரச் சொன்னது யார்?
தாசி : அது வந்து .. ( அங்கு உள்ளவர்களை ஒவ்வொருவராகப்
பார்க்கிறாள்) இங்கேயே அவர் இருக்கிறார் அரசே. (ஒவ்வொருவரும் திருதிருவென முழிக்கின்றனர்)
 
அரசன் : இங்கேயே இருக்கிறானா அந்தக் கொலைகாரன்.
தாசி : ஆம். இங்கேயே இருக்கிறார்.
அரசன் : அவன் யார்? சீக்கிரம் சொல். தூக்கில் இட வேண்டும்.
தாசி : (அமைச்சரைக் காட்டி) இவர் தான் அரசே.
அரசன் : என்ன அமைச்சரே..நீங்களா?
அமைச்சன் : ஐயோ நானா.. என் மனைவிமார்களைத் தவிர வேறு பெண்களை மனதாலும் நினைக்காதவன் நான், உன்னை நான் வரச் சொன்னேனா?
தாசி : ஆம்… நீங்கள் தான் வரச்சொன்னீர்கள்.
அமைச்சன் : அபாண்டமாகப் பொய் சொல்கிறாளே… மரணதண்டனை மட்டுமல்லாமல் , ஒழுக்கக் கேடானவன் என்ற பட்டம் வேறு கிடைக்கப் போகிறதே… ஐயோ..
அரசன் : அமைச்சரே! நீர்தான் பொறுப்பு. கோணய நாட்டில் சட்டத்தின் முன் அமைச்சர் – சாதாரண மனிதன் என்ற பேதம் கிடையாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமே. தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் அரசே.. தான் தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன் இவளைச் சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும்.
அரசன் : என்ன கேள்விகள்…? கேட்டுக் கொள்ளுங்கள்.
அமைச்சன் : பெண்ணே! உன்னை நான் வரச் சொன்னது எந்த நாளில் என்பது நினைவில் இருக்கிறதா?
தாசி : நாளோ கிழமையோ ஞாபகத்தில் இல்லை … ஆனால் ..
அமைச்சன் : ஆனால் .. என்ன…? சொல்ல வந்ததைச் சொல்.
தாசி : அழைத்த நீங்கள் என்னை வெறுமனே திருப்பி அனுப்பியது மட்டும் நினைவில் இருக்கிறது.
அமைச்சன் : ஆம். சரி. சரி… ஆமாம் அரசே.. நான் தான் வரச்சொன்னேன். நினைவுக்கு வந்து விட்டது. நான் தான் வரச்சொன்னேன்.
அரசன் : அப்படியானால் உயிர்பலிக்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.
அமைச்சன் : நான் வரச் சொன்னது என்னவோ உண்மை தான் அரசே.. ஆனால் எனக்காக வரச்சொல்லவில்லை அரசே.
அரசன் : அப்புறம் யாருக்காக வரச்சொன்னீர்கள்?
அமைச்சன் : அரசியார் கோபமாக இருப்பதாகச் சொல்லி, நீங்கள் தான் ’ ஏழிசை வல்லபியை அனுப்பு ’ என்று சொன்னீர்கள்.
அரசன் : இல்லையே.. நான் அன்று இவளைச் சந்திக்கவே இல்லையே.
அமைச்சன் : அரசியாரின் கோபம் தீர்ந்து விட்டதென்று சொல்லி திருப்பி அனுப்பி விடும்படி சொல்லி விட்டீர்கள் அரசே.
கட்டியங்காரன் 2: யாரைத் தூக்கில் போடுவார்கள் அந்த நேரத்தில் ? ராவுமல்லாத பகலுமல்லாத அந்த நேரத்தில் யாரைத் தூக்கில் போடுவார்கள் ?
அரசன் : அமைச்சரே! ஏழிசை வல்லபியை அன்று வெறுங்கையோடு அனுப்பியதற்குப் பதிலாக இன்று ஐந்நூறு வெள்ளிக்காசுகளை கொடுத்து அனுப்புங்கள். இந்த வழக்கை இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.
கட்டியங்காரன் 2: தூக்குத் தண்டனைக்குப் பதில் நாடகம் போடலாமே. அந்த நேரத்தில்.

 

கிராமப் பஞ்சாயத்தார் : அரசே! மன்னிக்க வேண்டும். ஒண்டிக்கருப்பன் முன்னால் தூக்குமரம் தயாராகி விட்டது. கிராமத்தெய்வம் துடியான தெய்வம். அதனால் ..
அரசன் (கோபத்தில்) அதனால் ..
பஞ்சாயத்தார் : குற்றவாளி ஒருவனைத் தூக்குப் போடாவிட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்கும். கிராமம் தாங்காது. நாடு சுடுகாடாகும்.
அமைச்சன் : ஆமாம். தெய்வக்குற்றம் அதனை நாடு தாங்காது. இப்பொழுது என்ன செய்யலாம் அரசே!
அரசன் : அமைச்சரே! வரும் புதன் கிழமைக்குள் யாராவது ஒரு குற்றவாளையைத் தயார் செய்யுங்கள். தூக்கில் ஏற்றியாக வேண்டும். இது எனது உத்தரவு.
அமைச்சன் : அப்படியே மகாராஜா.
( கூட்டம் கலைகிறது. முந்தைய காட்சியில் ஒலித்த பாடலின் இசை ரூபம் கேட்கிறது)

காட்சி: 6

[தூக்கு மரத்தின் கீழ் கட்டியங்காரன் 2 நிற்கிறான். தூக்குக் கயிறு தொங்குகிறது. அரசன்,. அமைச்சன், காவலாளிகள், மக்கள் குழுமியிருக்கின்றனர்]
அரசன் : அமைச்சரே! குற்றவாளிக்குத் தான் தண்டனை வழங்கப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்
அமைச்சன் : கோணய நாட்டு மக்களே! நம் கேணய மகாராஜா நீதி வழுவா நெறிமுறையாளர். ஒரு புழுவிற்குத் தண்டனை வழங்கினாலும் தீர விசாரித்தே முடிவு செய்வார். இந்த ஆள் நம் பகை நாட்டைச் சேர்ந்த ஒற்றன். நாடகக் கலைஞன் எனச் சொல்லிக் கொண்டு நாட்டுக்குள் நுழைந்துள்ளான். ஊர் ஊராக அலைந்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போயிருக்கிறான். இவனோடு வந்த இன்னொருவன் இரவோடு இரவாகத் திரும்பி விட்டான். இவன் மட்டும் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து ரகசியங்களைத் திரட்டுவதில் குறியாக இருந்துள்ளான். நம் நாட்டு ரகசியங்கள் காக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?

 

கூட்டம் : காக்கப்பட வேண்டும் ! காக்கப்பட வேண்டும் !!
அமைச்சன் : ரகசியங்களைக் காக்க ஒரே வழி ரகசியங்களைத் தெரிந்து கொண்டவனைத் தூக்கில் போட வேண்டும் என்பதுதான் நமது கோணய மகாராஜாவின் முடிவு.
மக்களில் ஒருவன்: கோணய மகாராஜா
கூட்டம் : வாழ்க! வாழ்க!!
மக்களில் ஒருவன்: நீதி வழுவா மன்னர் புகழ்
கூட்டம் : ஓங்குக! ஓங்குக!!
அரசன் : (எழுந்து) அமைச்சரே! அவனைத் தூக்கிலிடும் முன்பு அவனது கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கேளுங்கள்.
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் அரசே. குற்றவாளைக் கூண்டில் நிற்கும் உளவாளியே. எங்கள் கேணய நாட்டின் மாமன்னர் கோணய மகராஜா சட்டத்தையும் மரபையும் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். நாட்டின் சட்டப்படி வழங்கப்படுவது மரண தண்டனை. மரபுப்படி வழங்கப்படுவது கடைசி ஆசை நிறைவேற்றம் உன் கடைசி ஆசை என்ன என்பதை இப்போது தெரிவிக்கலாம். அதை உடனடியாக எங்கள் அரசர் நிறைவேற்றி வைப்பார்.
அரசன் : என்னுடைய ஆசை. ஒரே ஆசை. அது கடைசி ஆசையாக ஆகப்போகிறது. இரவுமல்லாத பகலுமல்லாத வேளையில் என் நாடகம் – என் வாழ்நாள் நாடகம் நடக்கப் போகிறது. அதற்கு முன் என் குருநாதரைச் சந்திக்க வேண்டும்.
அரசன் : உன் குருநாதரை எங்கே தேடுவது. நிறைவேற்றுகிற மாதிரி ஏதாவது விருப்பம் இல்லையா?
கட்டியங்காரன்.2 : அவரை எங்கும் தேட வேண்டாம். என் நாடகத்திற்கு அவர் தான் கங்காணி. எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். இதோ வந்து விட்டார்.
[அவன் காட்டிய திசையில் கட்டியங்காரன்.1,வருகிறான். வந்தவுடன்]
வந்து விட்டீர்களா.. என் நாடகத்தின் அரங்கேற்றத்தைப் பாருங்கள்
கட்டியங்காரன்.1: பதறவேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும்.
கட்டியங்காரன்.2 : பதறாமல் எப்படி இருக்க முடியும். அன்றே நீங்கள் சொன்னீர்கள். இங்கே ஆபத்துக் காத்துக் கொண்டு இருக்கிறது என்று. நான் தான் கேட்கவில்லை.
 
கட்டியங்காரன்.1: சரி, பொறுமையாக இரு ( அரசனிடம்) அரசே! உங்களிடம் ஒரு வேண்டுகோள். இவன் எனது சிஷ்யன். இவனை இங்கு அனுப்பி வைத்ததே நான் தான். அவன் செய்த எல்லாத் தவறுகளுக்கும் நான் தான் பொறுப்பு. எனவே, அவனுக்கு வழங்க வேண்டிய தண்டனையை எனக்கு வழங்குங்கள்
அமைச்சன் : யாராயிருந்தால் என்ன? தயாரான தூக்கு மரத்துக்கு ஓர்
ஆள் பலி ஆக வேண்டும். அவ்வளவு தான்
கட்டியங்காரன்.2 : இல்லை. இல்லை. நான் செய்த தவறுகளுக்கு அவர் தண்டனை அடைவதா? வேண்டாம். என்னையே தண்டியுங்கள்.
கட்டியங்காரன்.1 : இல்லை அரசே.. நான் தான் பொறுப்பு.. என்னையே தூக்கிலிடுங்கள்
கட்டியங்காரன்.2 :இல்லை என்னைத் தான் தூக்கிலிட வேண்டும்
கட்டியங்காரன்.1 : இல்லை நான் தான். என்னைத் தான்
கட்டியங்காரன்.2 : நான் தான்
கட்டியங்காரன்.1 : நான் தான்
[குரல்கள் உயர்ந்து சண்டையாக மாறுகிறது]
அமைச்சன் : நிறுத்துங்கள் . உங்கள் சண்டையை. அரசே இவ்விருவரும் விசித்திரமான மனிதர்களாக இருக்கிறார்கள்
அரசன் : ஆமாம். செத்துப் போவதற்கு யாராவது இப்படி நான்
நீயென்று சண்டையிடுவார்களா?
அமைச்சன் : அது தான் அரசே எனக்கும் புரியவில்லை. கொஞ்சம்
விசாரித்து விடலாம்.
அரசன் : சரி, இங்கே வாருங்கள். நீங்கள் ரெண்டு பேரும் செத்துப்
போவதற்கு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள்?
கட்டியங்காரன்.1 : அரசே! நீங்கள் ஒரு உத்தரவாதம் தந்தால்
உண்மையைச் சொல்லி விடுகிறேன்.
கட்டியங்காரன்.2 : என்ன உத்தரவாதம்?
கட்டியங்காரன்.1 : நான் உண்மையைச் சொன்னபிறகு
தண்டனையை மாற்றிவிடக்கூடாது அரசே,
அரசன் : தண்டனையை குறைப்பதா? இன்று சர்வ அமாவாசை. புதன்கிழமை. ராவும் அல்லாத பகலும் அல்லாத வேளையில் ஒருவனைத் தூக்கில் ஏற்றியாக வேண்டும் என்பதை மாற்ற முடியாது. அப்படிச் செய்தால் சாமி குற்றம் வந்து சேரும். ஆகவே தூக்குத் தண்டனைக்குக் குறைவான தண்டனை கிடையாது.
கட்டியங்காரன்.1 நிச்சயம் தானே அரசே.
அரசன் : நிச்சயமாக. நீங்கள் விரும்பினால் உங்கள் இரண்டு
பேரையும் அடுத்தடுத்து தூக்கில் போட்டு விடலாம்.
கட்டியங்காரன்.1 : அதுவும் சரிதான். நான் உண்மையைச் சொன்னபிறகு எங்கள் இரண்டு பேரையும் அடுத்தடுத்து தூக்கில் போட்டு விட வேண்டும் மகராஜா.
அரசன் : சரி. அப்படியே. அடுத்தடுத்து தூக்கில் போட்டு விடலாம். விசயத்தைச் சொல்.
கட்டியங்காரன்.1 : இன்னொரு நிபந்தனை அரசே. என்னைத் தான் முதலில் தூக்கில் போட வேண்டும். அவனை இரண்டாவதாகத் தூக்கில் போட வேண்டும்.
அரசன் : ஓ.. சாவதிலும் நீதான் வழிகாட்ட வேண்டுமா? நல்ல குரு-சிஷ்ய உறவு தான் போ. சரி. விசயத்திற்கு வா.
கட்டியங்காரன்.1 : அரசே.. அது வந்து .. அரசே.. இந்த வருடம் சர்வ அமாவாசை தினமான இந்தப் புதன்கிழமையன்று ராத்திரியும் அல்லாத பகலுமல்லாத வேளையில் தூக்கில் தொங்கி இறந்தால்..
அமைச்சன் : இறந்தால் நேரடியாக சொர்க்கலோகம் போவார்களோ.
கட்டியங்காரன்.1 : அதில்லை அமைச்சரே.
அரசன் : அப்புறம் என்ன?
கட்டியங்காரன்.1 : முதலில் இறப்பவன் தான் இந்த நாட்டின் அடுத்த அரசன். இரண்டாவதாக இறந்தால்…
அமைச்சன் : இறந்தால்..
அரசன் : இந்த நாட்டின் அடுத்த அமைச்சன் அவன் தான்
கட்டியங்காரன்.1 : எனவே அடுத்தடுத்து எங்களைத் தூக்கிலிட உத்தரவிடுங்கள் அரசே..
அரசன் : உங்களைத் தானே.. இதோ போட்டு விடலாம். யாரங்கே காவலர்களே. இவ்விருவரையும் பிடித்துத் தூணில் கட்டிப்போடுங்கள்.
[இரண்டுபேர் ஓடி வந்து இருவரையும் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்]


அமைச்சரே! அடுத்த பிறவியிலும் நீதான் எனக்கு அமைச்சராக வர வேண்டும். நான் தான் இந்த நாட்டின் அரசன். இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. நான் முதலில் தூக்கில் தொங்குகிறேன். நீங்கள் என்னைப் பின் தொடர வேண்டும். புரிந்ததா?
[அரசன் கழுத்தில் கயிறை மாட்டுகிறான். ஒளி மங்குகிறது. திரும்பவும் வெளிச்சம் வரும்பொழுது அரசனும் அமைச்சனும் பிணமாகக் கிடக்கின்றனர். கட்டியங்காரர்கள் இருவரும் உயர்வான பீடத்தில் ஏறி நிற்கின்றனர்]
அமைச்சன் : அப்படியே ஆகட்டும் மகாராஜா.
கட்டியங்காரன்.2 : உண்மையில் நீங்கள் தான் என் குரு. என் உயிரை மீட்டுத் தந்து விட்டீர்கள்.
கட்டியங்காரன்.1 :என் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டால் சரி.
[பார்வையாளர்களை –மக்களைப் பார்த்து]
முட்டாள் ராஜாவை சகித்துக் கொண்டிருந்த மூடதேசத்து மக்களே! இனி உங்களுக்கு விடிவு காலம் தான். புத்திசாலிகளான நாங்கள் ஆளும் பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறோம். நான் தான் இனி இந்த நாட்டின் ராஜா. எனது சிஷ்யன் தான் அமைச்சன். எங்கள் உத்தரவுப்படி நடந்தால் நாடு நலம் பெறும் காடு வளம் பெறும். மாதம் மும்மாரி பொழியும். எங்களது முதல் உத்தரவு இதோ..
அறிவிப்பு :
· கோணய நாட்டின் அரசப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அதிகேணய மகாராஜாவின் முதல் உத்தரவு.
· நம் தேசத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கால ஒழுங்குமுறை மாற்றம் செய்யப்படுகிறது அதாவது பகலாகக் கருதப்பட்டது இனி இரவாகக் கருதப்படும்.
· இந்தக் கால மாற்றம் முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளைக் களைவதன் முதல் படியாகும்
· அரசரின் இந்த ஆணையை ஒவ்வொரு குடிமகனும் சிரமேற்கொண்டு செயல்படுத்த வேண்டும்
· தவறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
கூட்டத்தில் ஒருவர் : திரும்பவும் கால மாற்றமா?
வேறு ஒருவர் : இரவும் வேண்டாம். பகலும் வேண்டாம்.
அமைச்சர் : தூக்குமரம் வேண்டுமா?
கூட்டத்தில் ஒரு குரல் : சட்டங்கள் தான் நம்மை வழி நடத்துகின்றனவா?
குரல்கள் தனித்தனியாக :
· இல்லை. தண்டனைகளே வழி நடத்துகின்றன.
· ஆம். தண்டனைகளே வழி நடத்துகின்றன
· ஆமாம். ஆமாம். தண்டனைகளே வழி நடத்துகின்றன
அறிவிப்பு: (அருகில் ஆரம்பித்து) சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்
· ஆம். தண்டனைகளே வழி நடத்துகின்றன.
· ஆமாம். ஆமாம். தண்டனைகளே வழி நடத்துகின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்