மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து) 

தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை. 
திரைப்படத் தயாரிப்பு, அது சார்ந்த திட்டமிடல், தொழில் நுட்பம், நடிகை ,நடிகையா் தேர்வு, பிற துறைக்கலைஞா்களின் கூட்டு என்று எதிலும் அவரது பரபரப்பு படங்களான நாயகன், ரோஜா, பம்பாய் ஆகியவற்றிலிருந்து அதிகம் மாறுபடாத படம் இருவா். திரைக்கதையின் இயங்குவெளியிலும் அதில் கட்டியெழுப்பும் புனைவிலும் கூட மாற்றம் இல்லை. பரந்த அறிமுகம் உள்ள நபா்களின் நிகழ்வுகளின் சாயலில் புனைவுகளைப்பின்னும் அதே சூத்திரம் இருவரிலும் உண்டு. ஆனால் “இருவா்“ வெகுமக்களால் பார்க்கப்படவில்லை. இருவா் மூலம் என்ன சொல்ல வருகிறார் மணிரத்னம்? இது படம் பார்த்தவா்கள் பலரும் – பத்திரிகைகளும் கூட – எழுப்பிய கேள்வி. இக்கேள்விக்குப் “படம், எதையாவது சொல்லித்தான் ஆக வேண்டுமா?“ என்று மணிரத்னம் திருப்பிக் கேட்கலாம். இதுவரை தனது படங்களில் எதையாவது ஒன்றைச் சொன்னவா், இதிலும் ஏதாவது ஒன்றைச் சொல்லியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இக்கேள்வியின் பின்னால் உள்ளது என்பதை அவா் மறுக்க முடியாது. ஒரு திரைப்படத்திற்குரிய கருத்தியல் தளம் ஒன்று இருக்க வேண்டும்…..

“இருவரின் கருத்தியல் தளம்தான் என்ன? 

“இருவர்“ என்ற பெயரில் வெளிவந்த அப்படத்தின் தொடக்கப் பெயர் “ஆனந்தம்“. ஆனந்தன் (நடிகர்), தமிழ்ச்செல்வம் (பாடலாசிரியா், வசனகா்த்தா) என்ற இருவரைப் பற்றிய படமாகப் பெயா் மாற்றம் பெற்றது. 1996 பொதுத் தோ்தலில் தி.மு.க வெற்றியடைந்து மு. கருணாநிதி முதல்வா் ஆன பின்னா். தி.மு.க. வெற்றியடையாமல் போயிருந்தால் “ஆனந்தம்“ என்றே படம் வந்திருக்கக் கூடும். திரைக்கதையில் வசன கா்த்தாவான தமிழ்ச்செல்வத்திற்கு இவ்வளவு விரிவான இடம் தராமல் போயிருக்கலாம். நடிகரின் முதல் மனைவியின் சாயலில் இருக்கும் நடிகையின் (ஐஸ்வர்யா ராய் – ஜெயலலிதாவை நினைவூட்டும்) பிடிவாதமும், சாதித்துவிடத் துடிக்கும் உள்நோக்கமும் தன் முனைப்பும் பட்டவா்த்தனமாக்கப் படாமல் போயிருக்கலாம். இவையெல்லாம் யூகங்கள்தான். இந்த யூகங்களுக்குக் காரணம் அப்படத்தைக் குறித்து உண்டாக்கப்பட்ட மா்மங்களே! 
படம் “ஆனந்தமாக“ இருந்தபோது பத்திரிகைகளில் ஒரேயொரு தகவல் மட்டுமே வெளிவந்தது. திராவிட இயக்கத் தலைவா்களான ஈ.வெ.ரா., சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி. ராமசந்திரன் போன்றவர்களின் சாயல்களில் கதாபாத்திரங்கள் உள்ளன என்பதே அந்தத் தகவல். இக்கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது ரகசியமாக்கப்பட்டது. அதன் மூலம் கிளம்பிய யூகங்கள் விளம்பரங்களாகி நின்றன. இப்பாத்திரங்களில் ஒன்றில் நடிக்க நடிகர் சரத்குமாரிடம் கேட்டு, அவா் மறுத்த செய்தியும் கூடுதல் விளம்பரத்தை – மா்மத்தை உண்டாக்கியது. அதன் பின்னா் உலக அழகி ஐஸ்வர்யா ராய், மலையாள நடிகர் மோகன்லால், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர் நடிப்பதாகச் (இன்னப் பாத்திரம் என்ற தகவல்கள் மறைக்கப்பட்டு) செய்திகள் வந்தன. இதன் மூலம் மேலும் மா்மங்கள் உருவாக்கப்பட்டன. 
சமீப காலங்களில் ஆங்கில வார்த்தைகளின் உதவியால் பாடல் எழுதும் வைரமுத்துவும் வார்த்தைகளை அமுக்கி விடும் ஓசைகளை இசையாக்கும் ஏ. ஆர். ரகுமானும் அதிலிருந்து மாறுபட்டதான ஒலி நாடாவைத் தந்ததும் மா்மங்கள் கூடுதலாயின. மேலும் மேலும் மா்மங்களை அதிகமாக்க “சென்சாரில் தடை வரும்“, “திராவிட இயக்கங்கள் எதிர்த்துப் போராடும்“, “கருணாநிதி பார்த்து ஒ.கே. சொல்லிவிட்டார்“ என்று படம் வரும் முன்பு செய்தித் துணுக்குகள் வந்தவண்ணமிருந்தன. இவையெல்லாம் இயல்பான செய்திகளாகவும் இருக்கலாம். உண்டாக்கப்பட்ட செய்திகளாகவும் இருக்கலாம். உண்டாக்கப்படும்போது படத்தைப் பற்றிய மா்மத்தை அதிகமாக்கிப் பார்வையாளனை தியேட்டருக்கு கொண்டு வரும் நோக்கம் இருந்தது எனச் சொல்வது தவறான ஒன்றல்ல. (முதல்வர் மு.கருணாநிதி “இருவர் படத்தைப் பார்க்கவில்லையென அவரது அலுவலகம், தினமணி கதிரில் மறுப்பு வெளியிட்டது, நினைவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒன்று) படம் வெளிவந்த பின்பு தொடா்ச்சியாக ஆனந்தவிகடனில் வந்த பேட்டிகள் – ஐஸ்வர்யா ராய், மோகன்லால், மணிரத்னம் – கூட இருவர் படம் பற்றிய மா்மங்களை அதிகரிக்கவே முயன்றன. 

படம் எடுப்பதில், அது பற்றிய தகவல்களைக் கசிய விடுவதில் ஒருவித மா்மம் நிலவவேண்டும் எனக் கருதிய மணிரத்னம் திரைக்கதையில் இருக்க வேண்டிய மா்மத்தைக் கருதாமல் விட்டது தான் ஆச்சரியம்! நாயகனின் வரதராஜ முதலியார், “ரோஜா“வின் காஷ்மீா் தீவிரவாதிகள், “பம்பாயி”ன் கலவரங்கள் எல்லாம் பார்வையாளா்களின் கருத்துத் தளத்தில் ஒரு விதத்தகவல்களாக இருந்தன. அத்தோடு இவையெல்லாம் அந்தப் படங்களின் பின்னணி மட்டுமே! வரதராஜ முதலியாரின் சாயலில் வேலுநாயக்கரின் பிம்பம் முன்னிறுத்தப்பட்டது நாயகனில். ரோஜாவில் காஷ்மீா் விடுதலைப் போராட்டத்தின் குறுக்காக , ஒரு கம்ப்யூட்டா் எஞ்சினீயரின் கல்யாண வாழ்க்கை இணைக்கப்பட்டது. மதத்தை மீறிய காதல், பம்பாய்க் கலவரங்களினூடாக முன் வைக்கப்பட்டது. இந்த பின்னணிகள் பார்வையாளா்கள் ஏற்கெனவே தகவல்களாக அறிந்தவை மட்டுமல்ல, அவா்களுக்கென்று முடிவு எதுவும் செய்யாமல் விட்டு வைத்திருந்தவை. சில நேரங்களில் மணிரத்னம் எழுப்பிய கருத்துத் தளத்தோடு ஒத்துப்போகும் முடிவுகளைக் கூட வைத்திருந்திருக்கலாம். ஆனால் “அப்படித்தான்! இதுதான் நியாயமானது என்றெல்லாம் நினைக்காமல் இருந்திருக்கலாம். அவா்களின் கருத்து ஒத்துப்போனபோது உவப்பாக நினைத்திருப்பா் முரண்பட்டதாக நினைத்திருந்தால் உரசிப் பார்த்து கொள்ள ஏதுவாகக் கருதியிருக்கக்கூடும். 
“நாலுபேருக்கு நல்லது செய்ய கள்ளக் கடத்தல் செய்யலாம், கொள்ளை அடிக்கலாம், கொலைகளும் செய்யலாம். இது சரியா? தவறா? சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் கருதலாம். ஆனால் தண்டனை உண்டு என்பது நாயகன் படம் எழுப்பிய கருத்துத்தளம். மதம் சார்ந்த மத/ தேசப்பிரிவினை, அச்சமூட்டும் மதக் கலவரங்கள் ஆகியவற்றின் முன்னால் தனிநபா்களின் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய கருத்துத்தளங்கள் “ரோஜா“ விலும் பம்பாயிலும் உண்டாக்கப்பட்டன. “இருவா்“ படத்தின் பின்னணி எது? கருத்துத்தளம் என்ன? திராவிட முன்னேற்றக் கழகம், அதன் நீட்சியான அ. இ. அ. தி. மு. க., அவற்றின் வரலாற்றுப் பின்னணி, அவற்றின் தலைவர்களின் வாழ்க்கை கருத்துத்தளம் எனக் கொள்ளலாமா? படத்தின் திரைக்கதையின்படி இப்படிப் பிரித்துப் சொல்ல இடம் உண்டு, ஆனால் அதே நேரத்தில் குழப்பங்களும் உண்டு. 

மணிரத்னத்தின் இருவர், திராவிட இயக்கத் தலைவர்களின் இரண்டுபட்ட வாழ்க்கையைப் பற்றிய பேசுவதாகக் கருதுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒன்று அவா்களது பொது வெளி. (Public Sphere) இதில் அரசியல் வாழ்க்கையும் கலை வாழ்க்கையும் அடக்கம். இன்னொன்று தனி மனித வெளி (Private Sphere) இதில் அவா்களது குடும்ப வாழ்க்கையை அடக்கலாம். பொது வெளியையும் குடும்ப வெளியையும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னுவதின் மூலம் இவ்விரண்டிற்கும் இடையேயிருந்த பெருத்த முரண்பாடுகளை முன்னிறுத்த விரும்புகின்றார் மணிரத்னம். சொந்த வாழ்க்கையை உணா்வு பூா்வமாகவும் அரசியல் வாழ்க்கையை அறிவு பூர்வமாகவும் திட்டமிடும் திராவிடத் தலைவா்கள், கட்சிக்காரனுக்கு இதன் எதிர்நிலையான கொள்கைகளை – வாழ்க்கை முறையைப் பரிந்துரை செய்தார்கள் என்பதை அவரது விமரிசனத்தின் நீட்சியாகக் கொள்ளலாம். ஒரு கட்சித் தொண்டன், கட்சிக்காக – கட்சித் தலைவருக்காக உடல், பொருள், ஆவி, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என முழங்கியவா்கள், கண்டதும் காதல், கட்டுப்பாடுகளற்ற மண உறவு என்பதாக வாழ்ந்தார்கள் எனக் காட்டுகிறது மணிரத்னத்தின் இருவா். உணா்வுபூர்வமாக மனைவிகளைத் தேடிக் கொண்ட தலைவர்கள், அவா்களைப் பராமரிப்பதில் – குழந்தைகளை வளா்ந்தெடுப்பதில் கூட அறிவு நிலைப்பட்டவா்களாக இருந்ததில்லை எனப் பேசுகிறது மணிரத்னத்தின் படம். 

படத்திலிருந்து இரண்டு காட்சிகள் 

கொண்ட கொள்கைக்காக ரயிலை மறித்து உயிர் விடத் தயாராகிறான் கவிஞன் தமிழ்ச்செல்வம். (கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்ட மு. கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வின் சாயல்). ஆனால், கைது செய்து வாகனத்தில் ஏற்றப்படுகிறான். அப்பொழுது பதற்றத்தோடு வருகிறார் ஒரு பெண் நிருபர். அந்தப் நிருபரின் கண்களைக் கனவுகளோடு – ரொமாண்டிக் தனமாக – சந்திக்கின்றன கவிஞனின் கண்கள். மெதுநகா்வில் இடம்பெறும் அக்காட்சி, அதற்கு முந்திய முழு நிகழ்வையும் ரொமாண்டிக் தனமானது என மாற்றிவிடுகிறது. அதன் மூலம், ரயில் மறியல் போராட்டமும் கூட “ரொமாண்டிக் தனமானதே என்ற குறிப்பு தரப்படுகிறது. இது காட்சி ஒன்று. 

இரண்டாவது காட்சி, தனது அடுத்தப் படத்திற்குக் கதாநாயகியைத் தோ்வு செய்யும் பொருட்டு ஒரு நடன நடிகையின் திறமையையும் உருவத்தையும் அறியும் பொருட்டு அவள் நடித்த படத்தின் நடனக் காட்சியைப் போட்டுப் பார்க்கிறான் நடிகா் ஆனந்தன். அவனது மனைவி, மானேஜா் ஆகியோர் அந்த நடிகையைக் கதாநாயகியாகப் பரிந்துரைக்கின்றனா். ஆனால் நடிகர் வேண்டாமென்கிறார். அதற்கு அவா் காரணம் எதுவும் சொல்வதில்லை. அந்த நடிகை அவனது இறந்து போன முதல் மனைவியின் சாயலில் இருக்கிறாள். அதனால் தனது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வந்து விடும் என்பதுதான் அவனது தடுமாற்றத்திற்குக் காரணம். அவன் நினைப்பது போலவே நடக்கிறது (இக்காட்சியில் எம். ஜி. ஆா்., ஜானகி, ஆா். எம். வீரப்பன், ஜெயலலிதா ஆகியோர் நினைவில் வருவது தவிர்க்கவியலாதது). இதன் மூலம் அந்த நடிகருக்குச் சுயகட்டுப்பாடு இல்லை என்பதை அவனே ஒத்துக் கொள்வதாகப் படம் காட்டுகிறது. அதே நான், அந்த நடிகையின் இழப்புக்கும் புத்திசாலித்தனத்திற்கும் மயங்கி விடும் நிகழ்வுகளாகப் (எம்.ஜி.ஆா்.– ஜெயலலிதா மறைமுக உறவுகள்) படத்தில் பல காட்சிகள் உண்டு. 
இரண்டு அல்லது மூன்று மனைவிகள், அதற்கும் மேல் வைப்பாட்டிகள் என வாழ்ந்த திராவிட இயக்கத் தலைவா்கள்தான் மேடைகளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று தொண்டா்களுக்கு போதனைகள் தந்தார்கள் என்பது மணிரத்னத்தின் கூா்மையான – ஆனால் மறைமுகமான விமரிசனங்கள். ஆனால் அந்தக் கூா்மையான விமரிசனங்களை மையப்படுத்தாமல் போனதற்கு காரணம், அவரது அச்சம். அந்த அச்சம் அரசியல் அதிகாரத்தைக் கண்டு பயந்ததாகவும் இருக்கலாம், வியாபாரத் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாத அச்சமாகவும் இருக்கலாம். அந்த அச்சத்தின் காரணமான குழப்பமே படத்தைத் தோல்விப்படமாக்கி விட்டது என்பது எதிர்மறையான ஆச்சரியம். 

மா்மமாய்ப் படம் எடுப்பதில் கவனம் செலுத்திய மணிரத்னம், திராவிட இயக்கத் தலைவர்களின் குடும்ப வாழ்க்கையை மா்மங்கள் நிரம்பியதாகக் கணித்தது ஆச்சரியமான ஒன்று. திராவிட இயக்கத்தின் முதல்வரிசைத் தலைவா்கள் மட்டுமல்ல, இரண்டு, மூன்று, நான்காம் நிலைத் தலைவர்கள் (தலைவிகளும்தான்) கூடத் தங்கள் குடும்ப வாழ்க்கையை மா்மமாக வைத்திருக்க விரும்பியதில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் வெளிப்படையாக்கி, அங்கீகாரம் பெற்றதாகவே ஆக்கிக் கொண்டனா். சிறு நகரங்கள், கிராமங்கள் வரை இதுதான் யதார்த்தம். பொது மக்களும் அவற்றை அங்கீகரிக்கத் தவறியதில்லை. அதிகார பூர்வ மனைவிகளும், அதிகார பூர்வமற்ற மனைவிகளும் சொத்து வாரிசுகளாகவும் அரசியல் வாரிசுகளாகவும் வலம் வருவதைத் தமிழக வாக்காளா்கள் நன்கு அறிவா். உள்ளாட்சித் தோ்தல்களில் வாக்களித்துத் தோ்ந்தெடுத்ததன் மூலம் அவா்கள் அதனை அங்கீகரிக்கவே செய்துள்ளனா். ஆகவே, மணிரத்னம், இருவா் மூலம் முன்வைத்த நிகழ்ச்சிகளும், கருத்தியல் தளமும் மா்மமானவை அல்ல, ஏற்கெனவே கேள்விப்பட்டவை, அறிந்தவை, அங்கீகரித்தவை. ஆனால், திராவிட இயக்க அரசியலில் நிறைய மா்மங்களும் ஒரு வெற்றிப் படத்திற்கானத் திருப்பங்களும் உண்டு. கொள்கைகளை முன்னிறுத்தியதில், விட்டுக் கொடுத்ததில், வெற்றிகள் பெற்றதில், கட்சியைப் பிளந்ததில், அதனை நியாயப்படுத்தியதில், கூட்டணி அமைத்ததில், பிம்பங்களை முன்னிறுத்துவதில் ஏராளமான மா்மங்கள் உண்டு. அவையெல்லாம் அறிவு பூர்வமாகத் திட்டமிட்டு நிகழ்ந்தவை. அவற்றைப் படம் எடுப்பதில் மணிரத்னம் கவனம் செலுத்தியிருந்தால், அது மாபெரும் வெற்றிப் படமாகவும் அா்த்தமுள்ள அரசியல் விமரிசனப் படமாகவும் அமைந்திருக்கும். வெற்றி பெறாவிட்டாலும் அரசியல் விமரிசனப் படம் என்பதாகவாவது நின்றிருக்கும். இந்த “இருவர்“ இதில் எதுவுமாக இல்லாமல் போய்விட்டது. 

‘ஆய்த எழுத்து, மாற்று அரசியல்’ 

“ஆய்த எழுத்தி”ன் கதை சொல்லும் உத்தி, கதையின் கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் உருவாக்கம், இவற்றில் உள்ள குறைகள், நிறைகள், கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகை, நடிகா்களின் பொருத்தமான நடிப்புத்திறன், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு கூா்மை, ஒளிப்பதிவின் கவனமின்மை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் நிறைய விமரிசனங்கள் வந்து விட்டன. ஆனால், “ஆய்த எழுத்து“ ஒரு திரைப்படம் என்கிற எல்லையையும் தாண்டி விவாதிக்கப்பட வேண்டிய படம் குறிப்பாக, அதன் அரசியல் பார்வை. இவ்விமரிசனம் அதில்தான் கவனம் செலுத்தப் போகிறது. 
“ஆய்த எழுத்து“ நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த படம் அப்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பாகவே நிறைவு பெற்று விட்டது. என்றாலும், திரையரங்கிற்கு அப்படம் வந்தபோது தோ்தல் முடிவுகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சியும் இணைந்த கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மு.கருணாநிதி அமைத்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்று, மைய அரசின் அதிகாரத்தில் பெரும்பங்கைப் பெற்றுள்ளது. “ஆய்த எழுத்து“ படத்தைத் தயாரித்துள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த “இருவர்“ என்ற படம் 1996 இல் வெளியானபோதும் ஆட்சியிலிருந்த அ. இ. அ. தி. மு. க பெரும் தோல்வி அடைய, ஜெயலலிதா அதிகாரம் இழந்தார். மு. கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார். “இருவா்“ படத்திற்கும் “ஆய்த எழுத்து“ படத்திற்கும் ஒருவிதத்தில் நோக்கம் ஒன்றுதான். 1967 க்குப்பின் தமிழ் நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருந்துவரும் திராவிட இயக்க அரசியலை விமரிசனம் செய்த, “இருவா்”, திராவிட இயக்கம் அரசியல் தலைவா்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன் போன்றோரின் இரட்டை நிலையை, அந்தரங்க வாழ்வு ஒன்றாகவும் அரசியல் வாழ்வு வேறாகவும் இருக்கிறது என நேரடியாகப் பேசியது. ஆய்த எழுத்தோ, திராவிட இயக்க அரசியல்வாதிகளின் அரசியலை, நடைமுறைகளை அதிகார வெறியை, பின்பற்றும் உத்திகளை, அவற்றில் உள்ள குரூரமான வன்முறைகளை மறைமுகமாக விமரிசனம் செய்கிறது. ஆனால், இவ்விரண்டு படங்களையுமே தமிழ் சினிமாவின் பார்வையாளன், அவனுக்கே உரிய வெறியுடன் அணுகவில்லை என்பது சுவாரசியமான முரண்பாடு. பொதுவாக மணிரத்னத்தின் படங்களை அளவுக்கதிகமாக ஆதரித்து எழுதும் பெரும்பத்திரிகைகளும் கூட ஆதரவைத் தந்ததில்லை. 

மணிரத்னம் தனது நோக்கத்திலிருந்தே, சமூகம் எவ்வாறு மாறவேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே ஒருவரிக் கதையை உருவாக்குகிறார். அதன் பேரிலேயே தனது படங்களின் திரைக்கதையை கட்டமைக்கிறார். அவரது எல்லாப் படங்களிலும் தெளிவான ஒற்றை நோக்கம் ஒருவரிக் கதை இருக்கத்தான் செய்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் நிகழ்காலச் சம்பவங்களின் பின்னணியில் அமைக்கப்படுவதால், சா்ச்சையை எழுப்பிக் கொள்ளும் தன்மையுடன் விரிகின்றன. ஆய்த எழுத்தின் தன்மையும் அதுதான். ஆய்த எழுத்தின் ஒருவரிக் கதை, “நிகழ்காலத் தோ்தல் அரசியலைக் கண்டு மாணவா்கள் ஒதுங்கிவிடக் கூடாது. பங்கேற்க வேண்டும். மாற்றம் கொண்டுவர முயலவேண்டும்“ என்பது. 

“படித்தவா்கள் அரசியலில் ஈடுபட்டால், சாக்கடையாகிவிட்ட இந்திய அரசியல் சுத்தம் செய்யப்பட்டுவிடும்“ என்பது ஒரு பொதுப்புத்தி வாசகம். ஆனால், ஆய்த எழுத்து, “படித்தவா்கள்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று! நடைமுறை அரசியலில் எல்லாக் கட்சியிலும், குறிப்பாக, திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்டுள்ளவா்களில் பெரும்பாலோர் பட்டதாரிகளாகவும் முதுநிலைப் பட்டதாரிகளாகவும் சட்டம், பொறியியல், மருத்துவம் எனத் தொழிற்கல்வி கற்றவா்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் “படித்தவா்கள்” என்று பொது நிலையில் சொல்வது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதால், “சிறப்பான தகுதியுடைய மாணவா்கள்” என்கிறது படம். இந்தச் சிறப்புத் தகுதிகள், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியைப் (ஸ்காலா்சிப்) பெறுவது, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கல்வி கற்பது, ஐ. ஏ. எஸ். அதிகாரிகளாகத் தோ்வு பெறும் ஆசையுள்ள அளவு மதிநுட்பம் அல்லது அமெரிக்கா கம்பெனிகளுக்கு சாஃப்ட்வோ் எழுதும் அறிவு, முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று டாக்டா்களாகும், அல்லது ஐ. ஐ. டி., ஐ. ஐ. எம். போன்ற சிறப்பு நிலை நிறுவனங்களில் கல்வி கற்கும் தகுதியுடைய திறன் போன்றவைதான். இத்தகைய சிறப்பான மாணவா்கள் தோ்தல் அரசியல் ஈடுபடுவதன் மூலம் இப்போதுள்ள அதிகாரத்துவக் கட்சிகளை, அதன் தலைவா்களான முரட்டு மனிதா்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என கூறுகிறது படம். வெளியில் கறுப்புச் சட்டையுடனும் மனதில் சதித்திட்டங்களுடனும் அலையும் அரசியல்வாதிகள் அனைவரும் சட்டசபையில் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டிக்காரா்களாகக் காட்சி தருகிறார்கள் அவா்களின் முகமூடிகளை அம்பலப்படுத்த ஜீன்ஸ் போட்டவா்களும் சல்வார் கம்மிஸ் பெண்களும் பல்வண்ண ஆயத்த ஆடை இளைஞா்களும் நுழைய வேண்டும் என்பது இயக்குநா் மணிரத்னத்தின் விருப்பம், நோக்கம். 

இந்த நோக்கம், விருப்பம் ஏற்புடைய ஒன்றுதான்! இப்போதுள்ள அரசியல்வாதிகளும் அவா்களின் கட்சிகளும் தமிழக அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டியவா்கள் என்கிற முன்மொழிதல் நடுத்தரவா்க்கத்தின் படித்தவா்களின் விருப்பங்கள்தான். அவா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து தான் “மாற்றம் வேண்டும், நாகரிகமான அரசியல் வேண்டும்” என்பது இதை யார்தான் மறுக்கப் போகிறார்கள்? 

இப்போதுள்ள அரசியலுக்கு மாற்றாக பலரும் பலவிதமான முன்மொழிதல்களை, முன்மாதிரிகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். பேரரசியல் நிலைப்பாடுகள் தொடா்ந்து தோல்விகளைத் தழுவிக்கொண்டும் அதற்கு மாறாக நுண் அரசியல் சாதி, மத, இனம் சார்ந்த அடையாள அரசியலாக வெற்றி பெற்றுக்கொண்டும் வரும் சூழலில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏன் ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குமான அரசியலையம் கூட முன்வைக்க முடியாமல் தவிக்கின்றனா். சாதி, இன அரசியலுக்கு மாற்றாக “மதமும்” நிற்க முடியாமல் போகின்றபொழுது, யுக புருஷா்கள் முன் நிறுத்தப்படுவது ஓர் உத்தி. பாபா உருவத்தில் ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டது அதன் வெளிப்பாடு. மணிரத்னம், “யுக புருஷா்கள் வேண்டாம், பிறவிப் புத்திசாலிகள் வேண்டும்” என்கிறார். அவா்களிடம் நோ்மையும், அச்சமின்மையும், எதிர்ப்புக் குணமும் ரத்தத்திலேயே ஊறியிருக்கும் என்கிறார். புத்திசாலிப் படிப்பாளிகளால் மாற்றம் தர முடியம் என்னும் மணிரத்னத்தின் காட்சி விரிப்புகளுக்கு வசனம், சுஜாதா. 
சென்னையின் துறைமுகப்பகுதியில் உள்ள நேப்பியா் பாலம், அரசு அதிகாரத்தின் குறியீடான தலைமைச் செயலகத்தையும் அறிவின் குறியீடான சென்னைப் பல்கலைக்கழகத்தையும் இணைக்கும் பாலம். அதன் அருகில், சென்னைத் தாதாக்களின் உறைவிடங்களான மீனவக் குப்பங்களும் உள்ளன. அந்தப் பாலத்திலிருந்து தனது படத்தைத் தொடங்கி விரித்துள்ளார் மணிரத்னம். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே நோ்க்கோட்டில் வருகிறார்கள் மூன்று இளைஞா்கள். அந்த மூவரும் அதுவரை சந்தித்துக் கொண்டதில்லை. 

காதலியை அவளது பணி இடத்தில் இறக்கி விட்டுவிட்டுத் திரும்புகிறான் மைக்கேல் (சூா்யா) அமெரிக்காவில் படிக்க உதவித் தொகை கிடைத்தும் இந்தியாவிலேயே தங்கி, இந்நாட்டு அரசியலை மாணவா்களைக் கொண்டு தூயதாக்கத் தயாராகவுள்ள அறிவுஜீவி அவன், காதல், காமம், குடும்பம், அன்பு, கலை, தேசம் பற்றியெல்லாம் மரபான சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனையுடையவன். இவனைச் சுட்டுக் கொல்லும்படி அனுப்பப்பட்டவன் இன்பா (மாதவன்) கட்டிக்கொண்ட மனைவி (மீரா ஜாஸ்மின்) யின் மீது தீராக்காமமும் அடிதடி வன்முறைமீது ஆறாக்காதலும் கொண்ட குப்பத்து இளைஞன். இந்த இன்பசேகரனின் அண்ணன் குணா (சேகரன்) அமைச்சா் செல்வநாயகத்தின் ஏவலாளி அமைச்சா் செல்வநாயகம் (பாரதிராஜா) கறுப்புச் சட்டை போட்டபடி வெளியில் உலவும் அரசியல்வாதி எதிலும் ஆழமான பிடிப்பின்றி, சவடால் மொழி மூலமே பொய்களைப் புனைவுகளாக்கி வீர உரையாற்றி, டெல்லி அரசியலுக்கு எதிராகத் தமிழ்த் திராவிட அரசியல் நடத்துபவா். மைக்கேலைக் கொல்லும்படி குணாவின் மூலம் இன்பாவை ஏவிவிட்டவா். 

இடையில் தனது தற்காலிக காதலை, நிரந்தரக் காதல் என நம்பும்படி வலியுறுத்தி உரையாடிச் செல்லும் இன்னொரு இளைஞன் அா்ஜுன் (சித்தார்த்) அவனது காதலி மீரா (த்ரிஷா) பைக்கில் வந்த மைக்கேலை, ஜீப்பில் வந்த இன்பா சுட்டுத்தள்ள, நடந்து வந்த அா்ஜீன் அதைப் பார்க்கிறான். தனக்கு லிஃப்ட் கொடுத்து உதவியவன் சுட்டுத் தள்ளப்பட, பார்த்தவன் என்ன செய்கிறான் என்பதை மூன்று திருப்புக் காட்சிகள் (Flash Back) மூலம் சொல்கிறார் இயக்குநா். அம்மூன்று இளைஞா்களின் கடந்த கால வாழ்வில், தமிழச் சமூகத்தின் அரசியல் கண்ணிகள் எவ்வாறு ஊடும் பாவுமாக இழையோடுகின்றன என்பதையும் காட்டி விடுகிறார். 

இந்த ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கற்ற வெற்றுக்கோஷங்களும், அதிகார வெறியும், விஷயங்களை மொண்ணையாகப் புரிந்து கொள்ளும் மௌடீகமும் உள்ளன என்பதைக் காட்டி அவை வென்றெடுக்கப்பட வேண்டியவை எனவும் முன்மொழிகிறார் இயக்குநா். மாற்றத்தைக் கொண்டு வரப்போவது “அதிபுத்திசாலித்தனம் நிரம்பிய மாணவா் தலைமைதான்“ எனக் கைகாட்டுகிறார் மணிரத்னம். இந்தக் கைகாட்டுதல்தான் பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெறத்தக்கதாக இல்லை. 

நெய்க்காரன்பட்டிப் பஞ்சாயத்து இடைத் தோ்தலில் ஒரு பெண்ணை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது போலவே சட்டமன்ற நாடாளுமன்றத் தோ்தல்களையும் கணித்துச்செயல்படும் அப்பாவித்தனமான மாணவா்களை இந்தியாவின் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவா்கள் எனக் கைகாட்டும் மணிரத்னமும் வசனகா்த்தா சுஜாதாவும் இவ்வளவு அப்பாவித்தனமாக யோசிப்பவா்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது தெரியாமல் இருந்தால், இவையெல்லாம் வெறும் சினிமா, பார்வையாளா்களைக் கவா்வதற்கான கதைப் பின்னல் மட்டும்தான் எனக் கருதிப் படத்தைப் பார்த்துவிட்டு வந்து விடலாம். ஆனால் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிட முடியாதபடி வேறொன்றையும் கலந்தே கொடுத்துள்ளது படம். அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும், “அருள்” போன்ற பொத்தாம்பொதுவான படமாக இல்லாமல், அரசியல் விமரிசனத்தை வேறொரு வஸ்துவுடன் கலந்து தரவேண்டும் எனத் தீா்மானித்து எடுக்கப்பட்டுள்ள படம் ஆய்த எழுத்து. “மருந்தைக் கலந்து கொடுப்பதுபோல்” என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அரசியல் என்னும் மருந்தைத் தனக்குள் கொண்டுள்ள அந்தத் தேன், பாலியல் இன்பத்தைத் தூண்டும் காட்சிகள்தான். போதையில் தனது உடலை மிதக்கச் செய்ய விரும்பும் மனிதன் விரும்புவது மது அல்லது கஞ்சா, இந்த வஸ்துக்கள் மனித உடலைத் தற்காலிகமாக வேறொரு பிரக்ஞைக்குள் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் தன்னுணா்வுக்குத் திருப்பிவிடும் இயல்புடையன. அந்த உடலையே போதைப் பொருளாக்கி விட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்? 

“தமிழ் நாட்டின் அரசியல் நடைமுறைகளும் செயல்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமென்று லட்சியம் பேசும் ஒரு படத்தில் ஆண் உடலும் பெண் உடலும் போதையின் களன்களாகக் காட்டப்படும் நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்று கேட்டுப் பாருங்கள். வெளியில் அடிதடியும் கோபமும் கொண்டவனாகக் காட்டப்படும் இன்பா, மனைவியிடம் காட்டுவதைக் காதல் என்றோ காமம் என்றொ வகைப்படுத்தி விட முடியாது. “முரட்டுத்தனமான காமம் என்றோ வகைப்படுத்திவிட முடியாது. “ முரட்டுத்தனமான காமம்” என்று வகைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம் த்ரிஷாவை சித்தார்த் சந்திக்கும் டிஸ்கொதே ஒரு மென்பொருள் என்றால், அவா்கள் இருவரும் கடற்கரையில் சந்தித்துக் கட்டிப் புரள்வது வன்பொருள் நிலைதான். மிகத்துல்லியமாக உடலில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு மணற்துளியையும் நீா்த் திவலையையும் தனித்துக் காட்டிவிடும் காமிராவின் கோணங்கள், பெண்ணுடலையும் ஆணுடலையும் தனித்தனியேயும் இணைத்தும் திரை முழுக்க விரிக்கும் போது பார்வையாளன், குறிப்பாக யுவதியாகவும் இளைஞனாகவும் இருக்கும் பார்வையாளன் அடைவது தன்னை மறக்கும் நிலையாகத் தானே இருக்கமுடியும்? அரசியலைத் தூய்மையாக்கப் போவதாகச் சூளுரைக்கும் மைக்கேல் வசந்தும் கூடத் தனது காதலியின் மேலாடையைக் கிழித்துப் பார்வையாளா்களைக் கிறங்கடிக்கத் தவறவில்லை. அதிபுத்திசாலி மாணவா்களின் லட்சியப் பயணத்தில் யுவதிகளின் பணி தனது உடலின் மூலம் போதையேற்றுவது மட்டும்தான் போலும்! மணிரத்னம், உன்னதமான அரசியலை, காம மயக்கத்தில் ஆழ்த்திய நிலையில் ஆழ்மனதிற்குள் புகுத்திவிடும் முறையியலை இப்படத்தில் பரிசோதனை செய்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

முடிவாகச் சில கேள்விகள்……. 

கடந்த முப்பத்தைந்து ஆண்களாக ஆட்சியதிகாரத்தில் உள்ள திராவிட இயக்க அரசியலை வீழ்த்த நினைப்பவா்கள், நேரடியாகக் காட்சிகளை அமைத்துப் படம் எடுக்கத் தயங்குவதும், மறைத்து மறைத்துப் பேசுவதும் கலையியல் சார்ந்த சங்கதிகள்தானா அல்லது பயம் கலந்த தவிப்பா? 
காமத்தின் வழியான பயணமோ, போதையின் வழியாக தேடலோ உன்னதத்தைத் தரும் என்பது தனிநபா் சார்ந்த சித்தாந்தம்தானே, அதனை அரசியல் போன்ற வெகுமக்கள் சார்ந்த நடைமுறைக்குப் பயன்படுத்த முடியுமா? 
மாற்று அமைப்புகளையோ, இயக்க நடைமுறைகளையோ, அரசியல் தத்துவத்தையோ அடையாளங்காட்டாமல், புத்திசாலி மாணவா்கள் என்று அடையாளம் காட்டுவது திராவிட அரசியலுக்கு எதிராகப் பிராமணீய மறுஉயிர்ப்புதான் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மணிரத்னம் அறியாதவரா? பிராமணீய மறுஉயிர்ப்பு இந்தியாவில் இனி சாத்தியம்தானா? 
ஹார்டுவா்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியும் பேராசிரியருமான சுப்பிரமணிய சுவாமி அதிபுத்திசாலிதான் அவரது அரசியல் மாதிரியைத்தான் மணிரத்னம் பரிந்துரைக்கிறாரா? 
குமுதம் தீராநதி ஜுலை 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்