காப்பான்: வணிக சினிமாவின் இயங்குமுறைகள்
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா?
ஒரு சினிமாவை எடுப்பதற்குப் போடப்படும் முதலீட்டின் மீது லாபம் வேண்டும் என்பதை நியாயமற்றது எனச் சொல்லமுடியாது. போடப்படும் முதலீட்டின்மீது பன்மடங்கு லாபத்தை அடைவதைக் கூட வணிகத்தின் விதிகளைக் கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பன்மடங்கு லாபத்திற்காகப் பார்வையாளர்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் நோக்கத்தைக் கொண்ட சினிமாக்களை, எந்தவித விமரிசனங்களும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் சினிமாவைக் குறித்த எதிர்வினையின்மை என்பதாக கருதக்கூடியன அல்ல. நமது காலகட்டத்தைக் குறித்த அக்கறையின்மையின் வெளிப்பாடு அது. தனது வயலைத் தாக்கி அழிக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் தடுக்கும் வகையறியா விவசாயிகளைப்போலவே, நம் காலத்துச் சமூகப் போக்கைத் தாக்கிவரும் கருத்தியல்களின் ஆபத்துகளைக் குறித்து முணுமுணுக்காமல் இருக்கும் செயல் அது. திரள்மக்களின் கோபதாபங்களைத் திசைதிருப்பும் நோக்கங்கள் கொண்ட பண்டமாக திரைப்படங்களைக் கருதுபவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது காலத்தில் செய்யவேண்டிய கடமை.
கருத்தியல் தாக்குதல்கள்
எச்சரிக்கைகளை விமரிசனங்களாக முன்வைக்கும்போது “சினிமா என்பது வெகுமக்களுக்கான பொழுதுபோக்குக் கருவி; அதன்வழிச் சமூக மாற்றமெல்லாம் சாத்தியமில்லை” என்பதாக ஒரு பதிலும், ‘சினிமா என்றால் சினிமாதான். அதைக் கலைத்துவ சினிமா, வணிகத்தனமான சினிமா என்று பிரித்துப் பேசுவது ஒருவித மேட்டிமைவாதம்’ என்றும் திருப்பித் தாக்கும் அம்புகள் குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, வணிக சினிமாவின் பார்வையாளர்களை ரசனையற்றவர்களாகக் கருதும் மேட்டிமைவாதிகளைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை எனவும், அப்படிப் பேசுபவர்களிடமிருந்து வெகுமக்களையும் சினிமாவையும் காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாகப் பேசுவதையும் கேட்கலாம்.
கலைத்துவம் கூடிய சினிமா, சமூகப்பொறுப்புள்ள சினிமா, வணிகத்துவம் கூடிய சினிமா என்ற வேறுபாடுகளெல்லாம் இல்லை என்று வாதிடுபவர்கள், அவர்கள் இயங்கும் வணிக சினிமாவிற்காக வாதிடுகிறார்கள் என ஒதுங்கிவிடத் தேவையில்லை. அவர்களின் தயாரிப்புகளும் செயல்பாடுகளும் சமகால வாழ்வில் பெருந்திரளான மக்களின் நியாயமான உரிமைகளுக்கெதிராக இருக்கின்றன என்பதைச் சொல்லியாக வேண்டும். சினிமாவின் சட்டகத்திற்குள் பார்வையாளர்களை நோக்கி ஆவேசமாகப் பேசும் அவர்களின் பேச்சுகளும் கருத்தியல்களும் வெளி வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளும் குரல்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்; அவற்றில் பொதிந்திருப்பவை எதிர்மறைக் கருத்தியல்கள் என்பதை விளக்கப்படுத்தியாக வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நடப்பு வாழ்க்கையில் மக்கள் எழுப்பவேண்டிய பெருங்குரலை -திரட்சிகளை வெளிப்பாடுகளை, நாயகனின் ஒற்றைக்குரலாக மாற்றித் திசை திருப்புகிறது என்பது சுட்டிக்காட்டப்படவேண்டியது. ஏமாற்றப்படுவதை உணர்ந்து விடக்கூடாது என்பதை உள்நோக்கமாகக் கொண்ட குரல் அது என்பதைச் சொல்லியாக வேண்டும். அப்படிச் சொல்லும் விமரிசனங்களே வெகுமக்கள் சினிமாவைக் குறித்த விமரிசனங்களாக அமையும்.
சாகாவரம் பெற்ற முடிச்சு
நாயகத்தனம் X வில்லத்தனம் என்பது வணிக வெற்றிச் சினிமாவுக்கான எளிய சூத்திரம். வெகுமக்கள் சினிமா, எப்போதும் இந்த எளிய இரட்டைகளின் வழி நிகழ்வுகளை உருவாக்கிக் கதை சொல்வதையே கலைச்செயல்பாடாக நினைக்கிறது. வணிக சினிமாவின் இச்சூத்திரத்திற்கு நீண்ட மரபு உண்டு. கதை தழுவிய புராணங்கள் தொடங்கி இதிகாசங்கள், காவியங்கள், நாடகங்கள் வழியாகச் சினிமாவுக்கு வந்து சேர்ந்த நீண்ட தொடர்ச்சி கொண்டது. இத்தொடர்ச்சியை அறுத்துக் கலைத்துப் போடும் முயற்சிகளே நாவல் இலக்கியம். அந்நாவல் இலக்கியத்திதை வெறும் கதைசொல்லும் ஒன்றாக மட்டும் கருதும் எழுத்துமுறைகளே வெகுமக்கள் எழுத்துகள். திகில் மற்றும் துப்பறியும் எழுத்தாளர்கள் வெகுமக்களுக்கான எழுத்துகளை புதுப்புதுப் பின்னணியில் எழுதித் தருபவர்கள். இவர்களைப் போலவே குடும்பக்கதை எழுத்தாளர்களும் எழுதித் தள்ளினார்கள். உறவுப் பாத்திரங்களின் மீது செயற்கையான அன்பு, காதல், பாசம், தியாகம் போன்றவற்றைத் திணித்துப் பாத்திரங்களை உருவாக்கி எழுதுவதும், அவ்வுருவாக்கத்திற்கெதிரான உணர்வுடைய பாத்திரங்களை எதிர்நிலையில் நிறுத்துவதும் மாற்றத்தை விரும்பாத வெகுமக்கள் எழுத்தின் அடையாளங்களே.
தகப்பன் x தனயன், மாமியார்x மருமகள், சகோதரி x மனைவி போன்றன வெற்றிகரமான எதிர்வுகளாக எப்போதும் இருக்கின்றன. அதேபோல வணிக சினிமாவின் வெற்றிகரமான எதிர்வாக இருப்பது திருடன் X போலீஸ் எதிர்வாகும். உலக சினிமாத் தொழிலின் ஆகப்பெரும் அடையாளமான ஹாலிவுட் தொடங்கி, பாலிவுட், கோலிவுட் என எல்லாச் சினிமாக்குழுமங்களும் திருடன் X போலீஸ் எதிர்வைச் சாகாவரம் பெற்ற கதைப் பின்னலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. படத்திற்குள் உருவாக்கப்படும் கள்ளனின் பாத்திரத்தை ஊதிப்பெருக்குவதின் வழியாகவே வணிக சினிமா, அவனை வெற்றி கொண்டு அழிக்கும் காப்பானின் புத்திசாலித்தனத்தைப் பார்வையாளர்கள் முன்னால் வைத்து நாயகப்பிம்பத்தை உருவாக்குகிறது. அப்பிம்பத்தைத் தாங்கும் சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டுச் சூழலில் மக்கள் தலைவர்களாக வலம்வரப் பார்க்கிறார்கள்.
கே.வி ஆனந்த் இயக்க, சூர்யா நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ள காப்பான் படம் ஒன்றை மறைத்துக்கொண்டு இன்னொன்றாக முன்வைக்கப்பட்ட கதைதான். கள்ளன் X காப்பான் என்ற எதிர்வின் மேல் மூலக்கதையை எழுதித்தந்துள்ளவர் தமிழின் முன்னோடித் திகில் கதை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். காவல் துறையில் ஒரு குழுவாக இயங்கியவர்களுக்குள் கடமையைச் சரியாகச் செய்பவன் X கடமை தவறியவன் என்ற எதிர்வின் மீதான நிகழ்வுகளே கதை. தவறு செய்தவன் மீது நடவடிக்கை அவனுக்கு உயர் பதவிகள் கிடைக்கின்றன. அவனால் பாதிக்கப்பட்டவன், தொடர்ந்து தவறுமேல் தவறாகச் செய்து எதிரிகளுக்கு உதவிசெய்வதின் மூலம் துரோகியாக மாறுகிறான். துரோகம் தோற்கும்; நியாயம் வெல்லும் என்னும் எளிய சூத்திரத்தைத் திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் தனக்கான திரைக்கதையாக ஆக்கியிருக்கிறார். அதற்குத் துணையாக இருந்ததோடு வசனமும் எழுதித் தந்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பாத்திரமாக்கலும் வணிக சினிமாவும்
கதை தழுவிய நாடகம், சினிமா போன்றவற்றில் இயங்குபவர்கள் தேர்ச்சி பெறவேண்டிய ஒன்று பாத்திரமாக்கல் (Characterization)என்பார் லாஜோஸ் எக்ரி, தனது நாடக எழுத்தின் கலைத்துவம்(The Art of Dramatic Writings) என்னும் நூலில். முன்வைக்க நினைக்கும் ஒருவரின் உடலியல், சமூகவியல், உளவியல் அடையாளங்களை உருவாக்குவதையே பாத்திரமாக்குதல் என்கிறது அந்நூல். இம்மூன்றிலும் உருவாக்கப்படும் பொருத்தப்பாடே கச்சிதமான பாத்திரமாக்கலாக அமையும். நாடகப்பனுவல்களில் முதன்மை மற்றும் துணைமைப் பாத்திரங்களுக்கும் பாத்திரமாக்கலைப் பொருத்தித்தான் ஆகவேண்டும். செவ்வியல் தனமான நாடகப் பிரதிகளை உருவாக்கியவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். நாடகக் கலையிலிருந்து இன்னொன்றாக மாறிய சினிமாவிலும்கூட பாத்திரமாக்கலைச் சரியாகச் செய்யும் இயக்குநர்களே வெற்றியடைகிறார்கள்.
உலக அளவிலும் இந்திய அளவிலும் கொண்டாடப்படும் இயக்குநர்களின் படங்களில் பாத்திரமாக்கலைக் கச்சிதமாகப் பார்க்கலாம். தமிழிலும் கூட பீம்சிங், மகேந்திரன், மணிரத்னம், பாரதிராஜா, பாலா போன்றவர்களின் திரைப்பிரதிகளில் இந்த நுட்பம் கவனமாகக் கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் காட்டமுடியும். ஆனால் வணிகசினிமாவின் இயக்குநர்கள் அப்படியான மெனக்கெடலைச் செய்வதில்லை. எல்லாப் பாத்திரங்களையும் வளர்ச்சியுடைய பாத்திரங்களாக (Round Characters) ஆக்காமல் முதன்மை மற்றும் எதிர்நிலைப் பாத்திரங்களை மட்டும் அவர்கள் கவனப்படுத்துகிறார்கள். மற்றவர்களைத் தட்டை(Flat Characters)யாகவே விட்டுவிடுகின்றனர்.
முதன்மைப் பாத்திரமாக்கலிலும் கூட வணிக சினிமா இயக்குநர்கள், பல்வேறு கட்ட வளர்ச்சியை உருவாக்குவதில்லை. கடந்த காலம் X நிகழ்காலம் என்னும் இரண்டு நிலைகளை மட்டும் காட்டினால் போதும் என நினைக்கிறார்கள். தமிழ்ச் சினிமாவின் வெற்றிப்பட அடையாளமாகக் கருதப்படும் பாட்சாவில் ரஜினிகாந்தின் இரண்டு பரிமாணங்களே பாத்திரமாக்கலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழ்காலத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக இருக்கிறார். ஆனால் இவர்தான் சில வருடங்களுக்கு முன்பு பம்பாய் நகரில் இருந்த தாதா பாட்சா என்பதே முன்பின்னான இரட்டைநிலை. இதே பம்பாய்ப் பின்னணியில் உருவான மணிரத்னத்தின் நாயகனின் பாத்திரமாக்கல் வேறு வகையானது. நாயகனின் கமல்ஹாசன் ஏற்றுநடித்த வேலுநாயக்கரையும் தாதா என அடையாளப்படுத்தலாம் என்றாலும் இரண்டும் பார்வையாளர்களுக்குள் செலுத்தும் உணர்வுகள் ஒன்றுபோலானவை அல்ல.இந்த வேறுபாடு புரியும்போது ஒரு பாத்திரத்தை முழுமையான வளர்ச்சிப் பாத்திரமாக்கலுக்கும், இரண்டு பக்கங்கள் கொண்ட பாத்திரமாக்கலுக்கும் இடையேயுள்ள வேறுபாடும் புரியும்.
பாத்திரமாக்கலே வணிக சினிமாவின் அடிப்படை ருசியை உருவாக்கும் பதார்த்தம். இது மசாலாவின் ருசியை உருவாக்கும் மிளகாய்ப்பொடி போன்றது.நாயகப் பாத்திரத்தையும் எதிர்நிலைப் பாத்திரத்தையும் கச்சிதமான நுட்பங்களுடன் பாத்திரமாக்கத் தவறினால் வணிக வெற்றிக்கான முயற்சி வெற்றியடையாமல் போய்விடும். இவ்விரண்டிலும் கோட்டைவிடும் போது ஆட்டம், பாட்டு, நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்கள், பாலுணர்வுத்தூண்டல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என மசாலாவின் துணைச் சரக்குகளைச் சரிவிகிதத்தில் சேர்த்தாலும் பார்வையாளர்களால் புறந்தள்ளப்படுகிறது.
பாத்திரமாக்கலில் புனைவும் நடப்பும்
கலைத்தனமும் சமூகப்பொறுப்பும் தேவையில்லை, பொழுதுபோக்கின் மூலம் வணிகவெற்றி மட்டுமே போதுமென நினைக்கும் வெகுமக்கள் சினிமாவின் இயக்குநர்கள் வளர்ச்சியுடைய பாத்திரமாக்கலைத் தேர்வுசெய்வதில்லை; இரண்டாவதையே தேர்வு செய்கிறார்கள். தமிழில் இப்போக்கின் முதன்மையான முன்னோடி ஷங்கர். படத்திற்கான நாயக நடிகர் இவர்தான் என முடிவுசெய்துவிட்டுக் கதை உண்டாக்கும் போக்கு அவரது அடிப்படைப் பாணி. அப்படியான பாத்திரமாக்கலில் ஒரு கூறுக்கான வேலை -உடலியல் அடையாளங்களை உருவாக்கும் வேலை குறைந்துவிடும். அதனால் சமூகவியல் அடையாளங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வடையாளங்களை உருவாக்கும் முன்பு எதிர்நிலைக் கதாபாத்திரத்தை வலிமையானதாகக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். அதனை வெல்லும் உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் கொண்டவனாக நாயகனை உருவாக்குகின்றனர். ஷங்கரின் படங்களில் எதிர்நிலைப் பாத்திரமாக ஒருவரைக் குறிப்பிடாமல் இப்போது நிலவும் அமைப்பில் தவறுகள் செய்யும் நபர்களின் குறியீடுகளை வரிசைப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ரூபத்தில் சந்தித்தவர்கள். அரசாங்க அலுவல்களில் லஞ்சம் வாங்குபவர்களாக, சட்டத்தைச் சுயநலத்திற்காக வளைப்பவர்களாக, அதிகாரத்தின் தரகர்களாக இருக்கும் உண்மைகள்; அவர்களில் ஒருவரும் புனைவுக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களை அழித்தொழிக்கும் நாயகப்பாத்திரங்கள் எல்லாப்படத்திலும் புனைவுகளும் அமானுஷ்ய சக்தியும் மறைந்துவாழும் தந்திரங்களும் நிரம்பியவர்கள்.
ஷங்கரின் திரைக்கதையாக்க பாணியே தமிழின் வெற்றிகரமான பாணியாக நினைக்கப்படுகிறது. அவரின் வழித்தோன்றல்களில் ஒருவராகவே இன்று வணிக சினிமா இயக்குநர்கள் பலரும் விரும்புகிறார்கள். கே.வி. ஆனந்தும் அவர்களில் ஒருவரே.
இவர்களின் சினிமா என்பது நாயக நடிகர்களை முடிவுசெய்துவிட்டு அவர்களுக்கான பாத்திரமாக்கலைக் கட்டியெழுப்புவதாகும். காப்பான் படத்திற்கான முதன்மைப் பாத்திரத்தை ஏற்கப்போகிறவர் சூர்யா என முடிவாகிவிடும் நிலையில், இயக்குநரும் திரைக்கதையாசிரியரும் நாயகனின் உடலியல் கூறுகளில் கவனம் செலுத்துவதில் கவனம் செலுத்துவதில் வேலை செய்யாமல், அப்பாத்திரத்திற்கான சமூகப் பின்புல அடையாளங்களையும் புத்திசாலித்தனம் அடங்கிய உளவியல் கூறுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இம்மூன்று கூறுகளிலும் கவனம் செலுத்திக் காப்பானில் உருவாக்கப்பெற்ற பாத்திரங்கள் இரண்டு. உடல் வலிமையை விடவும் புத்திசாலித்தனத்தில் – உளவியல் ரீதியான திட்டமிடலில் வல்லவராக வில்லன் பாத்திரம் உருவாக்கப்பெற்றிருக்கிறது.
நடப்பு வாழ்க்கையில் இந்தியாவின் அனைத்துவகையான வளங்களையும் அரசாங்கத்தின் உதவியோடு வளைத்து உலக முதலாளிகளில் ஒருவராக உருவாகிவரும் வில்லத்தனத்தை எதிர்க்கும் நாயகத்தனம் எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும் என்பது பார்வையாளர்கள் முன் வைக்கவேண்டிய கேள்வி. அப்படி முன்வைக்க விரும்பினால் ஒற்றை நபரை நாயகனாகக் காட்ட முடியாது. இந்தப் படத்தில் எதிர்க்கப்படும் கார்ப்பரேட் முதலாளியத்தை ஒரு தனிநபர் எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாது என்பதும் அறிந்த உண்மை. அதேபோல் தான் மக்களின் நலனைக் காவுகொள்ளும் அதிகாரத்துவ அமைப்புகளான பண்ணையார்த்தனம், சாதி, முதலாளியம், தரகுக் கூட்டு, கையூட்டு, ஊழல் போன்றன கரங்கோர்க்கும் வலைப்பின்னல்கள் பரவிக்கிடைக்கும் அரசாங்க நிறுவனங்கள் போன்றனவும் தனிநபர்களின் முயற்சிகளால் சரிசெய்யப்படக்கூடியன அல்ல. சட்டமும் அமைப்புகளும் முறையாகக் கவனப்படுத்துவதின் வழியாகவே இவற்றைச் சரிசெய்யமுடியும். ஆனால் நமது வணிக சினிமா இயக்குநர்கள் ஒற்றைத் தனிநபர்களால் -நாயக நடிகர்களால் அழித்தொழிக்கும் வாய்ப்பிருப்பதாகப் படங்களை இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.அதற்காகப் புனைவுத்தன்மை கொண்ட நாயகப் பாத்திரங்களுக்கு தேவையான பளபளப்புகளைப் பூசிக்காட்டுகிறார்கள். அப்பளபளப்புகள் முன்பெல்லாம், தனிநபர் பழிவாங்கலுக்கான எதிர்நிலைக் குற்றங்களாக இருந்தன. வில்லத்தனம் தனிநபராக இல்லாமல் அமைப்பாகவும் நிறுவனங்களாகவும் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் நாயகத்தனமும் வேறு அடையாளங்களோடு உருவாக்கப்படுகின்றன. நாயகர்கள் சமூகப் பொறுப்புடையவர்களாகவும் பொது நலனுக்காக வாதிடுபவர்களாகவும் மாறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த விஜய், அஜித், விக்ரம், ரஜினி போன்றோர் நடித்த படங்களில் தெறித்த சமகால அரசியல் விமரிசன வசனங்களை (பஞ்ச் டயலாக்ஸ்) நினைத்துக்கொண்டாலே இது புரிந்துவிடும்.
தனிநபர் புத்திசாலித்தனத்தைச் சமூகப் பொறுப்புடைய புத்திசாலித்தனமாக மாற்றுவதின் மூலம் நடப்பு முரண்பாடுகளின் பருண்மையான அளவை எளிமையாக்குகிறார்கள் இந்த நாயகர்கள். பெருநகரத்தில் வலைப்பின்னலாகச் செயல்படும் அரசியல், சட்டமீறல், மிரட்டுதல், கொலை போன்றவற்றின் பின்னால் இருக்கும் ஒரு தாதாவைக் கொன்றால் இன்னொரு தாதா அந்த இடத்தை நிரப்பிவிடுகிறான் என்பதே நடைமுறை உண்மை. அதைவிடவும் கூடுதல் பலமும் தொடர்புகளும் கொண்ட - அரசாங்கங்களை உருவாக்கும், ஆட்டிவைக்கும் பன்னாட்டு மூலதனக் குழுமத்தின் தலைவராக வில்லனை உருவாக்கிவிட்டு, அவரை அழித்தொழிக்கும் பணியைப் பிரதம மந்திரியின் தனிப்பாதுகாப்பு அதிகாரியின் வசம் ஒப்படைக்கிறது காப்பான் படம். அவன் நாட்டின் தலைவரான பிரதமரைக்காக்கும் காப்பான் என்பதிலிருந்து இந்திய விவசாயத்தையும் காக்கும் காப்பானாக நகர்த்தப்படுகிறான்.
குகைக்குள் நுழைந்து வெளியேறவிருக்கும் ரயில்பெட்டித்தொடரைக் குண்டுகள் வைத்துத் தகர்க்கும் தீவிரவாதியைப்போல நாயகனைக் காட்டி, அவன் ஏன் வெடிகுண்டுகளை வைத்தான் என முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. அந்த முடிச்சுகள் இரண்டுவிதமானவை. ஒன்று பிரதமரின் காப்பானாக விரிகிறது. இன்னொன்று கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக நகர்கிறது. பொதுவான அர்த்தங்களோடு தொடங்கும் படம் குறிப்பான வெளிகளில் இயங்கும்போது குறிப்பான அடையாளங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
பிரதமராகப் பாத்திரமேற்றிருக்கும் நடிகர் மோகன்லாலின் உடல்மொழியும் நடவடிக்கைகளும் இப்போதைய பிரதமர் நரேந்திரமோடியின் சாயலைக் கொண்டிருக்கின்றன. கொண்டிருக்க வேண்டுமெனத் திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் இருப்பவராக வசனங்கள் எழுதப்பட்டு அவரது பிம்பத்தை உயர்வானதாகக் காட்டுகிறது. இப்பிம்பம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் அவரது பிம்பத்திற்கெதிரானது. தமிழ்நாட்டு நலனிலும் வளர்ச்சியிலும் தடைகள் கொண்டுவரும் அரசாகவே இப்போதைய மத்திய அரசை மக்கள் நினைக்கிறார்கள்.
பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் எதிர்மறை மனநிலையை மாற்றிக்காட்டுவதற்கான காட்சிகளாக அவர் கலந்துகொள்ளும் வெளிநாட்டு நிகழ்வும் காஷ்மீர் காட்சிகளும் அமைந்துள்ளன. தனிப்பாதுகாப்புப் படைவீரரின் யோசனைகளைக் கேட்டு மக்களின் நலனுக்காக-பெருமுதலாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பவராகக் காட் டுகிறது. அவனது இயற்கை விவசாய ஆதரவுக் கருத்துகளை ஏற்பவராக இருக்கிறார் பாரதப்பிரதமர். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் வழங்கப்பட்ட எரிவாயு எடுக்க வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்துசெய்யவும் தயாராக இருக்கிறார் என்பதாகவும் காட்டுகிறது படம்.
இப்போதைய அரசும் அதன் தலைவரான பிரதமரும் முழுக்கமுழுக்கப் பன்னாட்டுக் குழுமங்களின் நலனில் அக்கறைக் கொண்டவர்கள் என்பதும், அவர்களின் வழியாகவே இந்தியப்பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை அடையும் என்பதையும் நம்புபவர்கள் என்பதுதான் உண்மை. அதனால் தான் படத்தில் காட்டப்படும் பிரதமரை முழுமையும் இப்போதைய பிரதமராகக் காட்டிவிடக்கூடாது என்பதையும் இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
தீவிரவாதிகளால் கொல்லப்படும் பிரதமர் என்று காட்டப்படும் நிலையிலும், அவரது மரணத்திற்குப் பிறகு அரசியலற்ற வாரிசு, பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார் எனக் காட்டும் போதும் இப்போதைய பிரதமர் காணாமல் போய்விடுகிறார். அந்த இடத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும் அவரது மகன் ராஜீவ்காந்தியும் பலருக்கும் நினைவுக்கு வரலாம். அண்மைக்கால இந்தியவரலாறு தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.
வில்லத்தனத்தை உருவாக்குவதில் உண்மையின் பக்கமும் நாயகத்தனத்தை உருவாக்குவதில் புனைவின் பக்கமும் நின்று திரைக்கதையை உருவாக்குவது வணிக சினிமாவின் அடிப்படைகள் என்பது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. புனைவின் கூறுகளால் கட்டியெழுப்பப்படும் நாயகன், தனது சாகசங்களால் சிறுசிறு அமைப்புகளாகத் திரண்டு தங்கள் எதிர்ப்புகளைக் காட்டும் விவசாய அமைப்புகளின் போராட்டத்தையும் தங்கள் விளைநிலங்கள் பறிபோவதைக் குறித்து மனக்குமுறலோடு வெளிவரும் மக்களின் குரலையும் தனது ஒற்றைக்குரலால் பதிலீடு செய்யப்பார்க்கிறான். இந்தப் பதிலீட்டுக் குரலில் அடங்கிப்போகும் வெகுமக்கள் திரள் திரும்பவும் குரல் எழுப்பவேண்டும் என நினைப்பதை மறந்துவிடும். அப்படி மறக்கடிக்கும் நோக்கத்துடன் தான் காப்பானின் சாகசங்களும் ஆவேசமான உரைகளின் வெளிப்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய திட்டமிடல்களும் திரைக்கதையாக்கமும் காப்பானின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல. நாயக நடிகர்களின் சமூகத் தெறிப்புப் படங்களின் பொது வெளிப்பாடுகள். அவை உண்மையில் சமூக அக்கறைக்குப் பதிலாக திசைதிருப்பல்களையே பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன.
===================================================================
உயிர்மை/ அக்டோபர், 2019

ஷங்கரின் படங்களில் வரும் கெட்டவர்களின் குறியீடுகளைக் குறிவைத்து அழிக்கப்போகிறவனாக இல்லாமல் ஆகப்பெரும் ஒற்றை எதிரியை அழிக்கப்பிறந்தவன் இவன். கே.வி. ஆனந்தின் காப்பானின் வில்லன் பாத்திரம் முற்ற முழுதான உண்மை. அதில் புனைவின் சாயல் ஒன்றுகூடக் கிடையாது. தாராளமயப் பொருளாதாரத்தில் முதலாளிகளின் தேவையையும் பணத்தின் இருப்பையும் இயங்கியலையும் முழுவதும் அறிந்த பன்னாட்டு முதலாளியத்தின் குறியீடு. நடப்பு இந்திய அரசியலில் பெரும் அசுர சக்தியாக வடிவம் பெற்றிருக்கும் கார்பரேட் முதலாளி. மதான் குழுமங்களின் தலைவர் மதான். இப்போதைய பா.ஜ.க. அரசின் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் அம்பானியையும் அதானியையும் நடப்பில் அவர்களை நினைவூட்டும் உடல் மொழியையையும் பெயர்ச்சாயலையும் கொண்டுவந்திருக்கிறது காப்பான் படம். இவர்களில் ரிலையன்ஸ் குழுமங்களின் அம்பானி காங்கிரஸ் அரசுக்கும் வேண்டியவராக இருந்தவர் என்பதும் உண்மை. இவையெல்லாம் உண்மைகள். படத்தில் வில்லனின் செயல்களும் திட்டமிடலும் உண்மைகளைத் தவிர வேறில்லை என்பதாகத் தரப்பட்டுள்ளது.

கருத்துகள்