தேர்வுகள் -வேலைகள்- தரம்

தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள்

கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார். மாணாக்கர்களின் வருகைப்பதிவில் இவ்வளவு கறாராக இருக்க வேண்டியது அவசியமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்படியான கறாரான வருகைப்பதிவு கல்லூரியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்றார். இந்த ஆண்டுமுதல் வருகைப்பதிவை கறாராகப் பின்பற்றினால் இப்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணாக்கர்களில் பலரும் இடையில் படிப்பைத் தொடராமல் நின்றுபோகும் (drop out ) வாய்ப்பும் உண்டு என்று வருத்தப்பட்டார்.

ஆண்டு முடிவில் பல்கலைக்கழகத்தேர்வு எழுதத் தேவையான 75% இல்லையென ஆயிரக்கணக்கான மாணாக்கர்களை தேர்வு எழுதாமல் தடை செய்துவிட்டால், பட்டப் படிப்புக்கு வரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். “அதிகமானோர் கல்வி கற்க வேண்டாம்” எனத் தடுப்பதை நோக்கி இந்த நடவடிக்கை செல்கிறது எனச் சொன்னார். அவரது பேச்சு, தரமான கல்வியைத் தரும் நோக்கத்தில் எடுக்கும் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளாதவரின் பேச்சாக அங்கே பலராலும் சொல்லப்பட்டது. மாணவர்களின் வருகையை -வகுப்பறைக்கு வந்து ஆசிரியர்களிடம் பாடங்கேட்கும் முறையை உறுதிசெய்ய வேண்டிய கல்லூரி முதல்வரே “வருகைப் பதிவை முறையாகச் செய்யவேண்டாம் எனக்கோரிக்கை வைப்பது சரியல்ல”வென உணர்த்தப்பெற்றது. அவரும் தொடர்ந்து வலியுறுத்தாமல் அமர்ந்துவிட்டார். ஆனால் அவரது பேச்சின் தொடர்ச்சியாக நான் பலவற்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

நான் பணியாற்றும் துறை முதுகலை மட்டும் படிக்கும் பல்கலைத்துறை. பட்டப்படிப்பெல்லாம் முடித்து மேற்படிப்பு படிக்கவேண்டும் என உறுதியாக முடிவு எடுத்து வரும் மாணவ, மாணவிகளில் வந்து சேரும் துறை. அங்கு வந்தபின்னும் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஓரிரண்டு மாணாக்கர்கள் இடையில் படிப்பை நிறுத்திவிடவே செய்கின்றனர். இப்படி நின்று போகும் மாணாக்கர்கள் தங்களின் படிப்புச் சான்றிதழ்களை வாங்க வரும்போது “ஏன் நின்றுவிட்டீர்கள்” என்று கேட்காமல் அனுப்ப மாட்டேன். அந்தக் கேள்விக்கு ஆண்களிடமிருந்து வரும் பதில் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வரமுடியவில்லை என்பதாகவும், ‘எல்லா நாட்களும் பல்கலைக்கழகம் வருவது இயலாமல் போய்விட்டது’ என்றும், பெண்களில் சிலர் ‘பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துவிட்டார்கள்’ என்றும் சொல்வார்கள்.

கிராமப்புற மாணவிகளும் மாணவர்களும் விவசாயம் சார்ந்த கூலிவேலைக்குப் போவதின் இடையில்தான் படிக்க வருகிறார்கள். நகர்ப்புற மாணாக்கர்களுக்குக் கைகொடுக்கும் வேலைகளாக இருப்பன கட்டடம் கட்டுதல், அவற்றைப் பராமரித்தல் போன்ற வேலைகளே. அத்தோடு நகர வாசிகளின் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. மாலை நேர உணவகங்களில் இப்போதெல்லாம் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதிலும் குறிப்பாகப் பரோட்டாக்கடைகள் பிற்பகலில் தான் வேலையைத் தொடங்குகின்றன. அது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
பரோட்டாவை மாலை நேர உணவாக மாற்றிக்கொண்டுவிட்ட தமிழர்களால் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணாக்கர்களுக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. பிற்பகல் ஒன்றிரண்டு வகுப்புக்கு ‘ மட்டம்’ போட்டுவிட்டு பரோட்டா கடைக்கு வேலை போகும் மாணாக்கர்கள் என்னிடம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்; இப்போதும் படிக்கிறார்கள். பரோட்டாக் கடையின் வேலை நேரத்திற்கேற்ப அடுத்த நாள் வகுப்புக்குத் தாமதமாக வருவார்கள். தடுக்காமல் அனுமதித்துக்கொண்டுதான் இருந்தோம். இப்போது கொண்டுவரும் இணையவழி மற்றும் விரல் பதிக்கும் வருகைப்பதிவுகளின் வழி அத்தகைய அனுமதிக்கு வாய்ப்பில்லை.
 
ஏழ்மையும் வறுமையும் நிரம்பி வழியும் ஒருநாட்டின் கல்விக்கொள்கையும் வேலைப்பங்கீட்டு முறைகளும் அதற்கேற்பத் திட்டமிடப் படவேண்டும். அனைவருக்கும் கல்வியை வழங்கவேண்டும் என நினைக்கும் அரசுகள் அதற்கேற்பக் கல்விநிலையங்களின் வகுப்பறைக் கால அட்டவணைகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம் என நினைக்கும் 17 வயதுக்குப் பிந்திய கல்லூரிக்கல்வியின் இப்போதைய வேலை நேரங்களை முழுமையாக மாற்றி அமைக்கவேண்டும்.

நான் இரண்டு ஆண்டுகள் ஐரோப்பியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினேன். அந்தப் பல்கலைக்கழகம் காலையில் 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை 14 மணி நேரம் கால அட்டவணையை அளித்திருந்தது. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் படிக்கவேண்டிய 16 மதிப்புப்புள்ளிக்கு ஏற்ப ஒருவாரத்தில் 16 மணிநேரம் வகுப்புற்கு வந்தால் போதும். அந்தப் பதினாறு மணிநேரத்தில் 10 மணி நேரத்தை மட்டும் அவரது அடிப்படைப் படிப்புத்துறையில் இருக்கும் விதமாகப் பாடங்களைத் தேர்வுசெய்தால் போதும். மீதமுள்ள 6 மணி நேரத்திற்கு அவர் விரும்பும் துறைகளில் பாடங்களைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இப்படித் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தி மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் பகுதிநேர வேலைகளையும் திட்டமிட்டுக்கொள்கிறார்கள்.

கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஐரோப்பிய நாடுகளின் சேவைப்பிரிவு வேலைகள் இருக்கின்றன. சேவைப்பிரிவுகள் அனைத்தும் பகுதிநேர வேலையாட்களின் வசதிக்கேற்பவே திட்டமிடப்பட்டுள்ளன. இரண்டு வேலையாட்களை வைத்து நடத்தும் சிறுகடை முதல் 2000 பேர்வரை வேலை பார்க்கும் பேரங்காடிகள் வரை வேலை நேரத்தை பெரும்பாலும் 18 மணி நேரங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் திறந்திருக்கின்றன. வேலைக்கான கூலியைத் திட்டமிடுவதில் நாளுக்கு இவ்வளவு என்பதற்குப் பதிலாக மணிக்கு இவ்வளவு என அரசே தீர்மானித்துத் தந்துள்ளது. ‘தினக்கூலி’களுக்குப் பதில் ‘மணிக்கூலிகள்’ என்பதே சேவைப்பிரிவுகளின் வேலை. கல்வி நிறுவனங்களிலும் சேவைப்பிரிவு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் போனபின்பும் வேலை நடந்துகொண்டே இருக்கின்றன. பெருங்கதவுகள் மூடப்பட்டு உள்ளே நடக்கும் சுத்தம் செய்தல், பொருட்களை அடுக்குதல், பராமரித்தல் போன்ற வேலைகள் அந்த நேரத்தில் தான் நடக்கின்றன. அப்படி நடக்கும் வேலைகளில் பகுதிநேரப்பணியாளர்கள் வந்து வேலையைச் செய்துமுடித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவரே இதுபோன்ற வேலைகளை அந்த நேரத்தில் வந்து செய்துவிட்டுப் போவது மற்றவர்களுக்குத் தெரியவாய்ப்பே இல்லை. நான் இந்த வேலையைச் செய்கிறேன் எனச் சொல்வதற்கு அவர்கள் தயங்குவதும் இல்லை. வேலையில் உயர்வு- தாழ்வு எதுவும் இருப்பதாகவும் அவர்கள் கருதுவதில்லை. மதுபானக்கூடங்களிலும் முடித் திருத்தகங்களிலும் பெண்களே அங்கு அதிகம் வேலை செய்கிறார்கள். அப்படிச் செய்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் வேலையைச் சரியாகச் செய்வதின் வழியாகவே தொடர்ந்து வேலையில் இருக்கமுடியும் என்பதால் சரியாகச் செய்கின்றனர். சரியாகச் செய்த வேலைக்கு முறையான கூலியைப் பெறுகின்றனர். இத்தனை மணிநேரத்திற்கு இவ்வளவு கூலி எனக் கணக்கிட்டுப் பெற்றுக்கொண்டு தங்களின் வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள்.
 
இந்தியாவில் இப்படியான முறைகளைக் கொண்டுவருவதில் விரைவாக முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். விவசாய வேலைகள் தொடங்கி மருத்துவமனை, பேரங்காடிகள், சிற்றங்காடிகள், உணவு விடுதிகள், ஆடை, காலனி தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற அனைத்துச் சேவைப்பிரிவுகளையும் சிறுசிறு பகுதிநேர வேலைகளாக மாற்றவேண்டும். தங்களின் நிறுவன வேலைகளில் மேலாண்மை செய்பவர்களை மட்டும் முழுநேரப் பணியாளர்களாக வைத்துக் கொண்டு மற்றவேலைகளைப் பகுதிநேரக் கணக்கில் – மணிக் கணக்கில் மாற்றிக் கொண்டு அதற்கேற்பப் பணியாளர்களைத் தேர்வுசெய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கான கூலி வழங்கப்படும்போது அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிடும். அப்படி உருவாக்கப்படும் வேலைகளில் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் – வேலை பார்த்துக்கொண்டே படிக்கும்- கூட்டம் பலன் அடையும். முறையான கூலியைப் பெறும் ஒருவர் தனது வேலையை இழக்க விரும்பமாட்டார்.
 
இந்திய வேளாண்மை இப்போது தோட்ட விவசாயமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்ய முழுநேரக்கூலிப் பணியாளர்கள் தேவையில்லை. மூன்று மணிநேரம் நீர்ப்பாய்ச்சிவிட்டுக் கல்லூரிக்குச் செல்லும் ஒருவரின் படிப்பை அது உறுதிசெய்யும். இரண்டு மணிநேரக் களையெடுப்புக்கு, ஒருமணிநேர மருந்து தெளிப்புக்கு, விளக்கு வெளிச்சத்தில் காய்கறிகள், பூக்கள் பறிக்கும் பணிக்கு என வேலையாட்களைத் தயார்படுத்த வேண்டும். பகலில் மட்டுமே வேலை; இரவு முழுவதும் ஓய்வும் தூக்கமும் என்பதும் மாற்றப்படவேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்த மாற்றங்கள் வந்துவிட்டன. 2000 -க்குப் பின்னான தகவல் தொழில் நுட்பத்துறை வேலைகள் 24 மணிநேர வேலைகளாக மாறிவிட்டன. சென்னை, ஹைதிராபாத், பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களின் தகவல் தொழில் நுட்ப வளாகங்களில் இரவிலும் பகலிலும் ஆண்களும் பெண்களும் வேலைசெய்துகொண்டும் பயணித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை அனைத்துப் பிரிவு வேலைகளும் கொண்டுவருவதின் மூலமே இந்திய மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தமுடியும்.
 
இந்திய மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்து உருவாக்கப்படும் திட்டமிடல்களே இந்திய சமூகத்தின் அழியாத கறையான சாதிப்படிகளை அழிக்கும். இந்தியாவில் பால்சமத்துவ நிலையைக் கொண்டுவரும். பன்னெடுங்காலத்துக்கு முன்பு மனித வளத்தைப் பயன்படுத்த நினைத்த ஒருவர் திட்டமிட்ட முறைமையே சாதீய அடுக்குமுறைமை. வேலைப்பிரிவுகளில் உயர்வு தாழ்வுகளை உண்டாக்கி, அதனைச் செய்பவர்களை அதனோடு இணைத்து அவர்களையும் உயர்வானவர்கள் – தாழ்வானவர்கள் எனக் கற்பித்து அதன் வழியாகத் தனது உற்பத்தியைச் செய்து கொண்ட காலம் இனியும் தொடரக்கூடாது.

ஆண்களுக்கான வேலைகள்- பெண்களுக்கான வேலைகள் என்று பிரித்து வைப்பதிலிருந்து விடுபட்டாக வேண்டும். கழிப்பறை சுத்தம் செய்தல், பெருக்குதல்,அடுக்களை வேலை என ஒவ்வொன்றுக்கும் உரியவர்களாக மனிதர்களை அடையாளப்படுத்தி அவையே அவர்களின் வாழ்நாள் அடையாளமாக மாற்றும் வேலையை இந்தியச் சாதிமுறை உருவாக்கித் தந்திருக்கிறது. இதனை உடைக்கவும் மாற்றவும் தேவை அதனை நீக்கும் இன்னொரு வேலைப்பிரிவினை முறையே என்பதை உணரவேண்டும்.
இந்திய மனிதர்களின் ஒவ்வொரு நாளையும் மணிக்கணக்காகத் திட்டமிட்டு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இவ்வளவு சம்பளம் என மாற்றும் நாளை நோக்கி இந்திய சமூகம் நகரவேண்டும். அந்த நகர்வின் வழியே தனது விடுமுறைக் காலத்தில் பெற்ற சம்பளத்தின் வழியே ஒரு யுவதியும் இளைஞனும் தங்களுக்கான வாகனம் ஒன்றை வாங்கிக் கொள்ளமுடியும். தங்களுக்கான வாகனம் ஒன்று இருக்கும்போது அவர்கள் வேலைசெய்ய வேண்டிய நிறுவனத்திற்கும் கல்வி கற்கும் கல்வி நிலையத்திற்கும் உரிய நேரத்தில் சென்றுசேரமுடியும். ஒரே நேரத்தில் ஒருவளை – ஒருவனை மாணவியாகவும் வேலைபார்க்கும் பணியாளராகவும் நினைக்க வைக்கும் மனநிலை உருவாக்கப்படவேண்டும்.

அந்த மனநிலையின் வழியே தான் வேலையில்லாப் பட்டதாரி என்ற கூட்டத்தை ஒழிக்க முடியும்.
அம்ருதா, ஆகஸ்டு,2018




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்