பிகில்: குறையொன்றும் இல்லை
தனது பார்வையாளர்கள் கூட்டம் எது எனத் தீர்மானித்துக் கொண்டபின் அதற்கான படம் எடுப்பதும், அந்தப் பார்வையாளர் களுக்குக் குறையில்லாமல் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதும் நேர்மையான செயல் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் என்றால் பிகில் நேர்மையான படம். அதனைக் குறைசொல்லும் விதமாக- புறமொதுக்கும் விதமாக - ஒரு காட்சியும் இல்லை.திகட்டத் திகட்டக் காட்சிகளை அமைத்துள்ளார். நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராப், யோகிசேது, ஆனந்தராஜ், திவ்யதர்சினி, விவேக், கு.ஞானசம்பந்தன் எனப் பார்த்த முகங்களும் விளையாட்டு வீராங்கணைகளாகப் பத்துப்பன்னிரண்டு பெண்களும், அடியாட்களாகப் பல ஆண்களும் நடித்துள்ளார்கள். இரண்டு பெண் விளையாட்டு வீராங்கணைகளுக்காகத் தனித்தனிக் கதைகள், தந்தை - மகன் என இரண்டு விஜயுக்குமே பின்னோக்கு உத்தியில் முன் கதைகள், குத்துப்பாட்டு, உத்வேகமூட்டும் சிங்கப்பெண்ணே என்னும் பாட்டோடு, இரண்டு ஜோடிப்பாடல்கள் எனக் கச்சிதமாகப் படம் உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து கவனம் திரும்பாமல் படம் பார்க்கிறார்கள் மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.
தமிழின் வெகுமக்கள் சினிமாவின் இயக்குநர்களில் பெரும்பாலோர் தங்களின் இலக்குப் (TARGET) பார்வையாளர்கள் இவர்கள்தான் என்பதை முடிவு செய்துகொள்ளாதவர்கள். ஒவ்வொரு படத்தின் நாயக நடிகர் யார் என்று முடிவுசெய்கிறார்களோ? அல்லது அமைகிறதோ அவரின் ரசிகர்கள் தான் இயக்குநரின் இலக்குப் பார்வையாளர்கள். ரஜினியை இயக்கும்போது ரஜினி ரசிகர்கள் இலக்குப்பார்வையாளர்கள் என்றால், விஜயை நாயகப் பாத்திரமாக்கும்போது விஜயின் ரசிகர்களே இயக்குநரின் இலக்குப் பார்வையாளர்கள். இந்தப்படத்தின் இயக்குநர் அட்லி நடிகர் விஜயன்னாவுக்குப் படம் இயக்குவது என்பது முடிவான பின்பு அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படத்தை உருவாக்கித் தந்துள்ளார். அதில் மற்றவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை.
இயக்குநர் அட்லி, விஜய் ரசிகர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று வழிகாட்ட வேண்டியவர்கள் என்று கருதியிருக்கிறார். அதனால் ஒவ்வொரு நிகழ்வையும் - காட்சியையும் கைபிடித்து அழைத்துப் போகிறார். அடுத்து சண்டைக்காட்சி என்றால் அதையும் ஒரு பாத்திரத்தின் வழியாகச் சொல்லிவிட்டுச் சண்டை போடவைக்கிறார். முதல் சண்டைக்காட்சியை அறிமுகம் செய்பவர் யோகிபாபு.முதல் பாடல் காட்சியும் இப்போது பாடல் என்று என்பதை சொல்வதுபோல ஒரு குறிப்பைத் தந்தபின்பே வருகிறது. சண்டை, பாடல் காட்சிகள் மட்டுமல்ல. எதிரி யார் என்பதையும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் முன்பே சொல்லி விட்டே செய்கிறார்கள். இப்படி நினைப்பது விஜயின் ரசிகர்களை - அவர்களது ரசனையை - சினிமாவைப் புரிந்துகொள்ளும் திறமைமீது - நம்பிக்கை இல்லாத தன்மை என்றோ, குறைத்து மதிப்படும் செயல் என்றோ நினைத்தால் அது அவர்களின் தன்னிலை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே கொள்ளவேண்டும். அதைச் சரிசெய்து கொள்ள நினைத்தால் அவர்கள்தான் எதிர்வினை காட்ட வேண்டும். மற்றவர்கள் அல்ல.
பொதுவாக இந்தியாவில் வெகுமக்கள் ரசனைக்கான சினிமாவின் சொல்முறையில் இரண்டுவிதமான சொல்முறை மட்டுமே பின்பற்றப்படுகின்றன. ஒன்று மேற்கத்திய நல்திற நாடகத்தின் சொல்முறை. அச்சொல்முறை தொடக்கத்திலேயே ஒரு ரகசியத்தை முன்வைத்துவிட்டு, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லாமல் மறைத்துப் பின்னர் ரகசியத்தை உடைத்துக் காட்டும் (Suspense and Break narration) உத்தியைக் கொண்ட சொல்முறை. மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் போன்ற இயக்குநர்களும் கமல்ஹாசனின் கதையை இயக்கும் இயக்குநர்களும் இந்தச் சொல்முறை உத்தியைப் பின்பற்றுகிறார்கள். இதில் பார்வையாளர்களின் ஊகத்திற்கும் நினைப்புக்கும் இடமுண்டு. அதற்கு மாற்றாக இருக்கும் இன்னொரு சொல்முறை இந்திய நாட்டார் நிகழ்த்துகலைகளின் சொல்முறை. முன்வைத்துச் செய்து காட்டும் (Propose and Perform narration ) சொல்முறை எஸ்பி முத்துராமன், கே எஸ் ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள் இந்தச் சொல்முறையை அதிகம் பின்பற்றியவர்கள்.
பிகில் படத்தில் அட்லி, இரண்டாவது சொல்முறையையே பின்பற்றியுள்ளார். இம்முறை பார்வையாளர்களின் கற்பனைக்கோ, முன் நினைப்புக்கோ வேலை தராமல் இதுதான் நடக்கப்போகிறது என்று சொல்லிவிட்டு அதனை நிகழ்த்திக் காட்டும். இதில் பார்வையாளர்கள் பெறும் கலை அனுபவம் என்பது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பது மட்டும்தான். உங்களின் விருப்பமான நாயகர் - உங்கள் இளைய தளபதி இந்தக் காட்சியில் எப்படிக கலக்கப்போகிறார் பாருங்கள் எனச் சொல்லிக்காட்டிக் காட்சியை நகர்த்துவார்கள், எப்படிச் சண்டை போடுகிறார்? எப்படிக் காதலிக்கிறார்? எப்படி எதிரிகளைச் சொல்லியடிக்கும் கில்லியாக இருக்கிறார்? எப்படியெல்லாம் பாசத்தையும் அன்பையும் சோகத்தையும் காட்டும் வசனங்களைப் பேசுகிறார் நம் விஜயன்னா என்று சொல்லிச் சொல்லிக் காட்டிக் கொண்டே போகிறார் அட்லி. கடைசியில் அவரது சமூகப்பொறுப்பை - பெண்களின் முன்னேற்றம், விளிம்புநிலை மனிதர்களின் மீதான கரிசனம், தன் மீது எதிர்ப்புக்காட்டியவர்களிடம்கூடப் பாசம் காட்டித் திருத்தும் பேரன்பு- ஆகியவற்றைத் திரட்டித் தந்து பேருருவாகப் பெருக்கி முன்நிறுத்தியுள்ளார்.
இந்தப் படத்தில் அட்லி நடிகர் விஜயை, மீனவக் குப்பத்திலிருந்து உருவாகும் ஒரு தலைவனாக இல்லாமல் இரண்டுவிதத் தலைவனாக முன்னிறுத்தியிருக்கிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒருவன் ராயப்பன், தவறு செய்யும் கூட்டத்தைத் தட்டிக்கேட்பதற்காக அடிதடி, அரிவாள், வெட்டுக்குத்து எனப் போலீசுக்கு அடங்காத தாதாவாக விளங்கும் ஒருவன். அவனது வழி அவர்களைச் சில நேரங்களில் மட்டுமே பாதுகாக்கும். அதற்குப் பதிலாகக் கல்வி, வேலை வாய்ப்பு, ஏதாவது ஒருவழியில் திறமையை வெளிப்படுத்துதல் என்பதை முன்னிறுத்தும் இன்னொரு தலைவனாக மைக்கேலை முன்னிறுத்துகிறார். மைக்கேல் மீனவக் குப்பத்து ஆட்களுக்கும் ஏழைப்பெண்களுக்கும் கால்பந்தாட்டம் என்னும் உடல்வலிமைசார்ந்த திறனைக் கற்றுத்தருகிறார். வெற்றிபெறச் செய்கிறார். இரண்டு பேருக்குமே வெற்றி - வெற்றிக் கோப்பைதான் முக்கியம். அதற்காகப் பின்பற்றும் நடைமுறைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சாகசங்கள் செய்தாவது வெற்றிக் கோப்பையைப் பெற்றுவிட வேண்டும்.
சர்க்கார் படம் வந்தபோது, விஜயைக் கிறித்தவர் எனச் சொல்லி அவரது படங்களைப் புறக்கணிக்கச் சொன்ன இந்துத்துவர்களைத் தைரியமாக எதிர்கொண்டுள்ளார் விஜய். அதற்காக இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளைப் படம் தன்னகத்தே கொண்டுள்ளது. முதல் முன்னெடுப்பு படத்தின் மையப்பாத்திரங்களை ராயப்பனாகவும் அவரது மகன் மைக்கேலாகவும் வைத்திருப்பது. அத்துடன் அவரை எதிர்க்கும் வில்லன் பாத்திரத்திற்கு எஸ்.கே.சர்மா (எதிர்ப்புக் காட்டிய எச்.ராஜாவின் முழுப்பெயர்: ஹரிஹரராஜ சர்மா) எனப் பெயரிட்டிருப்பது. இன்னொன்று, சனாதனத்தை முன்னெடுக்கும் இந்துத்துவம்/பிராமணியம் அவர்கள் குடும்பத்துப் பெண்களுக்கே எதிராக நிற்கும் - தடைகள் போடும் கருத்துகள் கொண்டது என்ற காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருப்பது, இவற்றை உள்ளடக்கிய படத்தின் நோக்கம் விளிம்புநிலை மக்களுக்கான திறப்புகளைப் பற்றிய சொல்லாடல்களைக் கொண்டிருப்பதும் நேர்மறையான பார்வையைக் கொண்ட படமாகக் காட்டுகிறது. என்றாலும் மொத்தத்தில் படம் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள்தான் நிற்கிறது .
இந்தப் படத்தில் அட்லி உருவாக்கிய ராயப்பன், மைக்கேல் என்ற இரண்டு சாகசப் பேருருக்களைப் போல இன்னொரு பேருருவைச் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்,முருகதாஸ் அவரது சொல்முறையில் உருவாக்கினார். அதற்கு முன் இன்னொரு இயக்குநர். முன்னர் உருவாக்கியதுபோலவே இனியும் அடுத்தடுத்து ஏதாவதொரு இயக்குநர் விஜயின் பேருருக்கள் உருவாக்குவார்கள். அப்பேருருக்களை அவரது ரசிகர்கள் திரும்பத்திரும்பப் பணம் கொடுத்துத் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பார்கள். அவர்களின் இலக்கு விஜயின் ரசிகர்களாக - அவரது படங்களின் பார்வையாளர்களாக இருப்பது மட்டுமே. அதே நேரத்தில் விஜயின் இலக்கும் , அவரை வைத்துப் படம் இயக்கும் இயக்குநர்களின் இலக்கும் தயாரிப்பாளர்களின் இலக்கும் வணிக வெற்றிதான். 100 கோடி முதல் போட்டு 200 கோடி லாபம் எடுக்கும் இலக்கு.
தமிழில் வரும் எல்லாச் சினிமாக்களையும் எல்லாரும் பார்ப்பதில்லை. பார்த்தாலும் ஒருதடவைக்கும் மேல் பார்ப்பதில்லை. பார்ப்பதற்கு முன்பு பத்திரிகைகள், ஊடகங்கள், நண்பர்கள் எனக் கருத்துக் கேட்டபின்பே பார்க்கச்செல்கிறார்கள். ஆனால் ஒரு நடிகரின் ரசிகர்கள் அவர் நடித்து வெளிவரும் ஒவ்வொரு சினிமாவையும் தவறாது பார்க்கிறார்கள்; ஒரு தடவையல்ல; சில தடவை பார்க்கிறார்கள். அதன் மூலம் அந்த நடிகரின் ரசிகராக - இலக்குப் பார்வையாளர்களாக ஆகிறார்கள். அப்படி ஆகிறவர்களின் மந்தைத்தனமே நடிகர்களின் மூலதனம். அந்த மூலதனத் தொடர்ச்சியே சினிமாவை வணிகப்பண்டமாக ஆக்குகிறது. இதற்கு மாறாக ஒரு பொழுதுபோக்குப் படம் ஒன்றைப் பார்த்து வைக்கலாம் என நினைப்பவர்கள் மந்தையில் சேர்வதில்லை. அவர்கள் விஜய் படமும் பார்ப்பார்கள்; அஜித் படமும் பார்ப்பார்கள். ரஜினி, விக்ரம், சூர்யா என எல்லாருடைய படங்களையும் பார்ப்பார்கள்.
இவர்களே தீவிரமான கருத்தை மாறுபட்ட கதைசொல்லல்வழியாக எடுக்கப்படும் பார்வையாளர்களாகவும் இருப்பார்கள். இந்த எண்ணிக்கை கூடும்போதே சினிமா என்னும் கலை, வணிகம் என்பதிலிருந்து விலகும். அதை நோக்கி நகர்த்தும் இயக்குநர்களின் எண்ணிக்கையை இங்கே விரல்விட்டு எண்ணிக்காட்டக் கூட முடியவில்லை. அந்த முயற்சியில் இறங்குபவர்களை உச்ச நடிகர்களின் பேருருக்கள் பயமுறுத்துகின்றன.
நானும் நீங்களும் எதன் பார்வையாளர்களாக இருக்க விரும்புகிறோம்? பேருருக்களை முன்னிறுத்தும் சினிமாக்களின் இலக்காகவா? புதுப்புதுச் சொல்முறை வழியாக நமது கற்பனைக்கும் சிந்தனைக்கும் வேலைதரும் சினிமாக்களுக்கா?எந்தவகைச் சினிமாவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருகித் திரள்கிறது என்பதில் இருக்கிறது தமிழ்ச் சினிமாவில் நடக்கப் போகும் மாற்றங்கள்.
கருத்துகள்