கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம்
ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.
பெல்லிசேரி தனது படத்தின் மொத்தப்பரப்பிலும் ஜல்லிக்கட்டு எதையும் காட்டவில்லை. வாடிவாசலும் இல்லை; வாடிவாசலிலிருந்து கிளம்பும் திமில் அசையும் ஒரு காளையும் கூட இல்லை. படத்தில் இடம்பெற்றிருப்பது வெட்டிக்கூறு போடப்பட்டுக் கொண்டாட்ட நாளின் விருந்துணவாகவிருக்கும் எருமைமாடு மட்டுமே. ஒரு மலைப்பிரதேசக் கிராமத்துக் கசாப்புக் கடைக்காரனால் வாங்கி வரப்பட்ட எருமை, வெட்டப்படுவதற்கு முன்பு, வெட்டிக்கத்தியிடமிருந்து தப்பித் தனது உயிர் வாழ்தலுக்கான எத்தணிப்புகளைச் செய்கிறது. அதன் பாய்ச்சலும் மூர்க்கமும் தான் ஜல்லிக்கட்டு.
படம் தொடங்கும்போது ஆரம்பக் காட்சியில் மிகச்சிறிய புழுக்களும் பூச்சிகளும் வண்டுகளும் அண்மைக்காட்சியாகத் திரைமுழுக்கக் காட்டப்படுகின்றன, மிகச்சிறிய உயிரிகளையும் உயிரற்றனவற்றையும் உருப்பெருக்கியில் பார்க்கும்போது உண்டாகும் அச்சம் அல்லது ஆச்சர்யத்தைப் படம் பார்க்க வந்தவர்களுக்கு உண்டாக்குகிறார் இயக்குநர். உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களும் தானே அழிகின்றன. அல்லது இன்னொரு உயிரினத்தால் அழிக்கப்படுகின்றன. ஒருவிதச் சுழற்சியான இயங்குமுறை.
ஏன் பிறக்கின்றன; ஏன் மரிக்கின்றன என்பதற்கான விடைகளைச் சமயங்கள் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் விரித்துப் பேசலாம். ஆக்கப்படுவதிலும் அழிக்கப்படுவதிலும் ஓர் உயிரினத்திற்கு இன்னொன்றின் மீது வருத்தங்களும் பகையும் கோபமும் வன்மமும் இருக்குமா? தெரியவில்லை. அவைகளுக்கு மொழி இருக்கிறதா? இருக்கலாம். அந்த மொழியை வாசிக்கும் திறன் மனித உயிரிக்கு இல்லை. ஆனால் அவற்றின் வாழ்க்கை என்னும் மொழியை மனிதர்கள் அறிந்தவர்கள் தான். அதை வாசித்துப் புரிந்து கொண்டவர்களும்கூட. ஆனால் அறிதலுக்கும் புரிதலுக்கும் பிறகு மனிதர்கள் வெளிப்பாடு என்னவாக இருக்கிறது?
இந்த உலகத்தில் தோன்றியுள்ள ஒவ்வொன்றும் - எல்லாவகை உயிரினங்களும் மனிதர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்கின்றன என்ற நினைப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் தேவைக்காக மனிதர்கள் ஒவ்வொன்றையும் உருமாற்றியும் அழித்தும் சிதைத்தும் தனதாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதுபற்றிய குற்றவுணர்வுகள் இல்லாமலேயே கடக்கிறார்கள். இயற்கையோடும் உயிரினங்களோடும் மனிதர்களின் உறவும் பகையும் நேரடியாக உணரப்படுவதில்லை. எல்லா உயிர்களிடத்திலும் நானே இருக்கிறேன் எனப் புனித வாக்கியங்களும், காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம் என்பது போன்று உணர்ச்சிகரமான கவிதை வரிகளும், வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனத் தன்னிலையுரைக்கும் கூற்றுகளும் இலக்கியப் பனுவல்களில் எழுதப்பட்டு வழங்கப்பட்ட பின்னும் மனிதர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
தொடர்ச்சியாக மனிதர்கள் உலகத்தை மனிதமையமாகவே நினைக்கிறார்கள். அவர்களுக்காகவே படைத்தருளப்பட்டனவே எல்லாம் என நினைத்துக் கொல்கிறார்கள்; உண்கிறார்கள்; களித்துக் கூத்தாடுகிறார்கள். இதே நேரத்தில் மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகும் காதல், அன்பு, பாசம், துரோகம், பகை, வன்மம் போன்றன பேசுபொருளாக இருக்கின்றன. எழுதப்படுகின்றன; அடுத்த தலைமுறையை நல்வழிப் படுத்துவதற்கான அறமாகப் பதிவுசெய்யப்பட்டுக் கடத்தப்படுகின்றன. இதையெல்லாம் ஒரு சினிமாவில் எப்படிப் பேசுவது. நிகழ்வுகளாக்கிக் காட்சிப்படுத்துவது எப்படி? பெல்லிசேரியின் ஜல்லிக்கட்டு அந்த முயற்சியைச் செய்திருக்கிறது.
உருப்பெருக்கப்பட்ட உயிரினங்களின் காட்சிகளைத் தொடர்ந்து ஒரு மலைக் கிராமத்து வாழ்க்கையின் அன்றாடப் போக்கிலும் விருந்துகளிலும் இறைச்சி உணவு பெறும் இடத்தைக் காட்சிகளாகவும் பேச்சாகவும் சொல்லி நகர்கிறது. இறைச்சி உணவுக்காக எருமை மாடு வெட்டப்படுவதும் தோல் உரிக்கப்படும், சதைத்துண்டுகளாக்கப்பட்டு கூறுபோடப்பட்டு விற்பனைப் பொருளாக மாற்றப்படுவதும் காட்டப்படுகிறது. மதுக் கூடங்களிலும் திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் இறைச்சி உணவு தவிர்க்க முடியாத உணவாக மாறியிருப்பதைக் காட்டுகிறது. அந்த ஊருக்கு வழக்கம்போலக் கொண்டுவரப்படும் ஒரு கணதியான எருமைக் கட்டுத்தறியிலிருந்து வெட்டுப்படாமல் தப்பிவிடுகிறது. தப்பியோடும் எருமையின் நோக்கம் உயிர்வாழ்தல். விரட்டிப் பிடித்துக் கூறுபோட நினைக்கும் வியாபாரிக்கு லாபம். வாங்கி உண்ணும் மனிதர்களுக்குச் சுவை; விருந்து கொண்டாட்டம். நிச்சயதார்த்த விழாவிற்கு, கல்யாணத்திற்கு, பண்டிக்கைக்கு இறைச்சி கிடைக்காதென்றால் அவை நின்று போகக் கூடும். தப்பியோடிவிட்ட எருமை மாட்டின் மீது ஒவ்வொருவருக்கும் இப்படியான பந்தம் இருக்கிறது; உரிமை இருக்கிறது; தேவை இருக்கிறது. அதைத் திரும்பவும் கொண்டுவந்தாக வேண்டும். வெட்டியாக வேண்டும்; உரித்துக் கறியாக்கிச் சாப்பிட்டாக வேண்டும். எருமை தப்பித்தலில் ஊரின் வாழ்வு சந்திக்கும் திடீர் நெருக்கடி.
நேரடியாக எருமை மாட்டின் மீது உரிமையோ பந்தமோ இல்லாதவர்களுக்கு அதன் ஓட்டமும் தப்பிக்கும் முயற்சியும் உண்டாக்கும் அழிவுகளால் பாதிப்பு. முட்டித்தள்ளிவிடும் பொருட்கள், கடைகள், சிதறடிக்கப்படும் பயிர்கள் என இன்னொருவிதமான நெருக்கடி. விலங்கொன்றைச் சுட்டுப் பிடிக்க அனுமதியளிக்காத ஜீவகாருண்ய சட்டத்தையும் காப்பாற்றவேண்டும்; எருமைமாடு தப்பித்ததால் உண்டாகியிருக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையும் சமாளிக்கவேண்டிய பிரச்சினை அரசு நிர்வாகத்திற்கு. இருவகை நெருக்கடியும் சேர்ந்து கிராமத்து ஆண்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒருவித வேட்டைவெறியின் உணர்வை உண்டாக்க எருமை மாட்டைப் பிடித்துக் கொல்லும் வேட்டைக்காரர்களாக மாறுகிறார்கள். உயிர்வாழ்வதற்காக ஓடும் எருமையின் மீது தீராப்பகை கொண்டவர்களாய் விரட்டுகிறார்கள்; ஓடுகிறார்கள்; முட்டித் தள்ளப்படுகிறார்கள்.
இதனைக் காட்சிப்படுத்தும்போது தன்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பலிவாங்கிவிடத் துடிக்கும் தனிமனிதக் குரோதங்களையும் உடல் திணவையும் உடமையாக்குதலின் வெறித்தனத்தையும் சில நிகழ்வுகள் வழியாகச் சொல்கிறார். தனக்குப் பாதிப்பில்லாத போது ஜீவகாருண்யம் பேசிவிட்டுத் தனது உடமைகளுக்குச் சேதம் விளையும்போது வெளிப்படும் கொலை நியாயங்கள் பேசும் போலித் தனமான மனிதர்களைச் சில உரையாடல் வழி காட்டுகிறார்.
மாட்டைப் பிடித்துவிட முனையும் முன்பு, தனது வீரத்தைக் காட்டுவதற்கு முன்னால் தீர்த்துக் கொள்ளும் காமத்தையும், அதனை ஏற்றுக் கொள்ளும் பெண் உடலின் எதிர்பார்ப்பையும் ஏற்பையும் காட்சிப்படுத்தியுள்ளார். இப்படிப் பலப்பலக் காட்சிகளைத் துண்டு துண்டாய்க் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். ஒரு மலைக் கிராமத்தின் நிலவெளிப் பரப்பைப் படத்திற்கான வெளியாக்கிக் கொண்டு அதில் உயர்ந்து நிற்கும் மரங்கள், செடிகள், திட்டுகள், சரிவுகள், பள்ளங்கள், நீர்த்திட்டைகள் என ஒவ்வொன்றையும் காமிராவின் வழியாகப் படம் பிடித்திருக்கிறார்கள் என்று உணராத வகையில் நேர்க்காட்சியாகப் பார்க்கும் உணர்வைத் தரும்படி செய்யப்பட்டுள்ள ஒளிப்பதிவு அசாத்தியமானது, வேட்டைக்காக – தேடுதலுக்காக நெற்றியில் கட்டப்படும் விளக்கொளிகளின் கூட்டமும் அசைவுகளின் பாய்ச்சலும் உண்டாக்கும் பரபரப்பு படத்திற்கு அபாரமான வேகத்தை உண்டாக்கியுள்ளது. தேடல் நடந்துகொண்டிருக்கும் போது சில வீடுகளுக்குள் நடக்கும் உரையாடல்கள், காட்சிகள் எழுப்பும் கேள்விகளும் முக்கியமானவை.
ஒரு வீட்டிற்குள் வாழ்தலின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியவரின் மூச்சிழுப்பின் தூரமும் அசைவும் திரும்பத் திரும்பக் காட்டப்படுகிறது. அவரது பார்வையில் படும் எருமையின் குறியீடு எல்லா மனிதர்களுக்கும் சாவின் அழைப்பு காத்திருக்கிறது என்பதையும் அதற்கு முன்னால் இவர்கள் காட்டும் உணர்ச்சிகளும் பிடிவாதங்களும் ஏன் என்பதைக் கோடி காட்டுவதுபோல மனித உடல்கள் ஒரு குவியலை உருவாக்குகின்றன. அதற்குள்ளிருந்து அந்த எருமையின் உடமையாளன் திமிறி எழுந்து தனது உரிமையை நிலைநாட்டிவிட முடியும் என எத்தணிக்கிறான். பெரியவரின் மூச்சிரைப்பும் மனிதக்குவியலால் உருவாகும் பிம்பத்திரட்சியும் மாறிமாறிக் காட்டப்படுவதோடு படம் முடிகிறது.
91 நிமிடம் ஓடும் பெல்லிசேரியின் ஜல்லிக்கட்டு படத்திற்கு கதையென்று எதுவும் இல்லை. ஆனால் கதையின் அடிப்படைக்கூறுகளான நிகழ்வுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு தொடக்கும் முடிவும் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் இணைக்கும் சங்கிலியாக எருமைமாடு மட்டுமே இருக்கிறது.படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது உடனடியாக எனக்கு நினைவில் வந்தது யூஜின் அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (Rhinoceros/ Eugène Ionesco) நாடகம். இனவாதத்தையும் அரசதிகாரத்தையும் எள்ளலுடன் விமரிசிக்கும் காண்டாமிருகம் நாடகத்தின் உரையாடல்களும் விவாதங்களும் பொதுப்புத்திக்குள் உண்டாகும் அச்ச உணர்வின் பெருக்கத்தையும் பீதியின் வெளிப்பாடுகளையும் அதன் அதிகபட்ச எல்லைக்குள் நீட்டித்துப் பார்வையாளர்களைச் சிந்திக்கும்படி தூண்டியிருக்கும். அதைப்போலவே ஜல்லிக்கட்டு, சமகால இந்திய வாழ்க்கையில் பரவிவரும் கும்பல் மனோபாவத்தையும் செயல்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
படம் முடிந்த பிறகு, இன்னொரு கேள்வியும் எழுந்தது. மலையாளிகளின் உணவில் மாட்டிறைச்சி தவிர்க்க முடியாத உணவுப்பொருள். ஆனால் ஜல்லிக்கட்டு அவர்களின் வாழ்வியல் கூறோ, பண்பாட்டு அடையாளமோ அல்ல. படத்தின் மொத்த நிகழ்வுகளையும் எருமை மாட்டை இணைப்புச் சங்கிலியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்திற்கு ஜல்லிக்கட்டு என்று ஏன் பெயரிட வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. படம் பார்க்கும் தமிழ் மனத்திற்குள்ள இப்படியொரு கேள்வி எழுவதைத் தவிர்க்கவும் முடியாது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவது இந்தப் படத்தின் விவாத எல்லையைக் குறுக்கிவிடுவதாகவும் எதிர்மறை நிலைபாட்டுக்கு நகர்த்துவதாகவும் ஆகக் கூடும். அதைத் தள்ளிவைத்துவிட்டுக் காட்சி இன்பத்தின் வழி ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ள படத்தைப் பார்த்துக் கொண்டாடுவதே முதல் தேவை.
கருத்துகள்