போர்க்காலமும் புலம்பெயர் வாழ்வும் -சந்திரா, மாலினி, தீபச்செல்வன், ப.தெய்வீகன்,தமிழ்க்கவி

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் போரின் நினைவுகள் குறைந்து, புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. இந்நகர்வுகள் வழியாக 2009 க்கு முந்திய போர்க்காலம் பற்றிய பார்வைகளும் விமரிசனங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. இப்போதும் தொடரும் விடுதலைப்புலிகள் மற்றும் போர் ஆதரவுக்கருத்துகளும், போருக்கெதிரான மனநிலைகளும் அவற்றில் பதிவாகின்றன. அந்தவகையில் இப்போது எழுதப்பெறும் கதைகள் கவனத்துக்குரியன.

போர்க்காலம் பற்றிய  கதை

சந்திரா இரவீந்திரன் எழுதியிருக்கும் கலையரசி   ( /காலச்சுவடு/நவம்பர்,18) சில காரணங்களுக்கு வாசிக்கப்பட வேண்டிய கதை எனப் பரிந்துரைக்கிறேன்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் பிடிவாதத்தையும் அரசியல் தெளிவின்மையையும் மூர்க்கமான போர் விருப்பத்தையும் குறித்துப் பல கதைகளை வாசித்திருக்கிறேன். இந்தக் கதை அதிலிருந்து விலகியிருக்கிறது.
தங்களின் போர்க்கால நினைவுகளைக் குற்றவுணர்வில்லாமல் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் போராளிகளின் சந்திப்புதான் கதையின் நிகழ்வு. சந்திப்பின்போது அவர்களிடம் வெளிப்படும் அன்பும் பகிர்தலும் போர்க்கால வாழ்வின் நீட்சி-அவர்களை உருவாக்கிய தலைமையின் -அமைப்பின் வாழ்வியல் கோட்பாடு என்பதாக உணரவைத்திருக்கிறார் சந்திரா .

வெற்றிகரமான தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டு உயிர் இழைப்புகளையும் உடலின் பாகங்களை இழந்ததையும் பெரும் வலியாக நினைக்காமல் ஒரு தலைமையின் மீது கொண்ட பற்றுறுதியோடு தங்களுக்கான தாயகம் ஒன்றை அமைக்கும் போரில் - விடுதலைப்போரில்- ஈடுபட்டிருக்கிறோம் என்ற லட்சிய வேட்கையோடு வாழ்ந்த காலத்தை ஆண்களும் பெண்களுமாகக் கைகோர்த்துக் கடந்ததைச் சொல்கிறது. அப்படிச் சொல்வதின் வழியாகப் போரையும் போரில் ஈடுபட்டவர்களையும் நாயகர்களாகக் கட்டமைக்கும் தளத்திற்குள் நுழையாமல் விலகி இன்னொரு பக்கம் நகர்கிறது. பயிற்சி, ஆயுதம், தாக்குதல் எனப் படையணிக்குள் வாழ்ந்த - ஒருவிதக் காட்டுவாழ்க்கையை விவரிக்கும் கதை நகர்வு அவை இப்போது- புலப்பெயர்வுக்குப் பின்னர் தூங்கவிடாமல் செய்யும் கொடுங் கனவாகவும் மாறிவிட்டது என்பதற்குள் நகர்கிறது. கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் மனச்சிதைவுக்கான மருத்துவம் தேவைப்படும் கலையரசியை முன்வைக்கும் கதை, போருக்குப் பின்னான போராளிகளின் இருப்பின் மீது -உளவியல் சார்ந்த இருப்பின் மீது- கவனத்தைக் கோருகிறது.

தேதியிட்டு உண்மை நிகழ்வுகளின் - மனிதர்களின்- மீது கட்டப்பட்டுள்ள கதையின் தொனிக்குள் பெருமிதத்தையும் கழிவிரக்கத்தையும் சம அளவில் கலந்து நகர்ந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. கதாசிரியரின் இந்தக் கவனமான சமநிலை கதைக்குள் நிகழும் நிகழ்வுகள் நம்பகத்தன்மை கொண்டவை என்பதை உறுதிசெய்யும். கதைக்குள் வரும் பாத்திரங்களும் உண்மையானவர்கள் என்பதாக உணரப்படுவார்கள். அவர்களின் நிகழ்கால உண்மை வழியாகக் கடந்தகால வாழ்க்கையும் - போர்க்கால வாழ்க்கையும் -உண்மை என்பதாகவும், அவர்களின் போர்க்காலச் சூழலும் நம்பகத்தன்மை கொண்டது என்பதாகவும் மாறும். 
போருக்குப் பின்னர் போர்க்காலம் பற்றி எழுதப் பெற்றுள்ள பல கதைகளுள் இக்கதை முக்கியமான ஒன்று. வாசித்துப் பாருங்கள்.

http://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/227/articles/14-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF 
================================================================ 

போர்க்களத்தில் பெண்கள்

இந்தவார ஆனந்தவிகடனில் வந்திருக்கும் கதையின் தலைப்பு ஆர்மிக்காரி.. இப்படியொரு தலைப்பில் தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் கதையெழுதும் வாய்ப்பில்லை.  கவிதைகள், நேர்காணல்கள், அண்மையில் எழுதிய நடுகல் நாவல் வழியாகப் புரிதலை - உண்டாக்கியிருக்கும் தீபச்செல்வன் எழுதி நான் வாசிக்கும் முதல் சிறுகதை இது.ஈழப்போராட்டம் / தனிநாட்டுக்கான போரில் தனது நிலைபாட்டைக் கறாராக முன்வைப்பவர் தீபச்செல்வன். 

போர்க்களக்காட்சிகளைக் கண்முன் விரிக்கும் சித்திரங்களாகவும், வலி நிரம்பிய மனிதர்களின் குரலாகவும், ஆவேசம் மிக்கவர்களின் கோப வெளிப்பாடாகவும் கவிதைகளை எழுதிய தீபச்செல்வனின் ஆதரவு நிலைப்பாடுகளைச் சந்தேகம் ஏற்படாதவாறு முன்வைத்தவை அவரது பத்தி எழுத்துகளும் தனிக்கட்டுரைகளும். நேர்காணல்களிலும் ஆதரவை உறுதி செய்திருக்கிறார். புலிகள் நடத்திய போரின் நியாயங்களை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் தொடர்ந்து ஆதரிக்கும் எழுத்துகள் அவருடையவை.

இந்தக் கதையிலும் அந்த ஆதரவு வெளிப்படுகிறது என்றாலும் நோக்கம் அதுவாக இல்லை. ஆர்மிக்காரி என்று ஒருமையில் தலைப்பு இருந்தபோதிலும் இரண்டு ஆர்மிக்காரிகளின் கதை இது.தமிழ் ஈழத்துக்கான இயக்கப் போராளியாக இருந்து, போருக்குப் பின்னான உள்வாங்கலில் சிங்கள ஆர்மிக்காரியாக இருக்கும் ஒருத்தி சத்தியா . இன்னொருத்தி போர்க் காலத்தில் சிங்கள ஆர்மிக்காரனாக இருந்து காணாமல் போன கணவனைத் தேடும்பொருட்டு ஆர்மிக்காரியான சிங்களப் பெண்- ஷிவாந்திகா. 

ஆண்களின் அதிகாரம் செல்லுபடியாக இருக்கும் அமைப்புகளில் பெண்களின் இடம் என்னவாக இருக்கிறது என்ற கோணத்தில் வாசிக்க வாய்ப்பளிக்கும் இந்தக் கதை பெண்ணுடல் பற்றிய பார்வையை முன்வைக்கும் கதையாக இருக்கிறது. பெண்களுக்கு மொழி, சமயம்,இனம் போன்ற அடையாளங்கள் எல்லாம் இல்லை. பெண்ணுடல் எப்போதும் ஆண்களின் பாலியல் பசிக்கான தீனி; பெண்ணுடலைத் தின்று ருசிக்கும் தீராத வெறி குடிமையியல் அமைப்புகளைவிடக் கூடுதலாக ராணுவ அமைப்புகளில் இருக்கும் ஆண்களுக்குள் இருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த உண்மையை உள்வாங்கிய கலைப்பிரதிகளும் காட்டுகின்றன. 

தீபச்செல்வனின் ஆர்மிக்காரி கதை அவரின் அரசியல் நிலைப்பாடு மற்றும் சார்புக்கேற்ப, சிங்கள ராணுவத்திற்கு - ராணுவத்தில் இருக்கும் ஆண்களுக்குள் போர்க்காலத்திலும் இருந்தது; போர்க் காலத்திற்குப் பின்னான இந்தக் காலத்திலும் இருக்கிறது என்பதைச் சொல்லும் கதையாக எழுதியிருக்கிறார். தன் குழந்தைக்காகச் சிங்கள ராணுவத்தில் சேர்ந்து போர்க்களமான யாழ்ப் பாணப்பகுதிக்குக் கணவனைத் தேடி வரும் ஷிவாந்திகாவிடம் பேசும் சத்தியாவின் உரையாடல் போராளிகளின் மனிதாபிமானப் பார்வையை முன்வைக்கிறது. அந்த மனிதாபிமானப் பார்வையைச் சரியாக உள்வாங்கிய ஷிவாந்திகா, இப்போது சத்தியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்பவளாக இருக்கிறாள். 


இருவரையும் உடலாக - பெண்ணாக மட்டுமே பார்க்கிறார்கள் ராணுவ அதிகாரிகளான துவிந்த், ஷனக்காவும்.ஷிவாந்திகாவை வெளிப்படையாகப் படுக்கைக்கு அழைக்கிறார்கள். வேலைசெய்யும் நேரத்தில் சத்தியாவின் உடலில் கை வைக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கத் திணறிக்கொண்டே இருக்கிறார்கள். அதிகாரி துவிந்த் அந்த முகாமிலிருந்து விடைபெறும் கடைசிநாளில் ஷிவாந்திகா தற்கொலை நடக்கிறது. அது தற்கொலை அல்ல; பாலியல் வல்லுறவுக்குப் பின்னான கொலை என்பதாக மறைமுகமாகக் காட்டுகிறது கதை. அகத்திலும் புறச்சூழலிலும் ஆர்மிக்காரியாக இருப்பதின் குற்றவுணர்வோடு வாழும் சந்தியா தனது வேலையை விட்டுவிட்டு ஷிவாந்திகாவின் மகளுக்கும் தாயாக மாறினாள் எனவும் காட்டுகிறார். 
சிறுகதைக்கான ஒற்றைநாள் நிகழ்வுக்குள் போர்க்கால ராணுவத்தின் முகத்தையும், போராளிகளையும் போருக்குப் பின்னான ராணுவத்தின் முகத்தையும் பற்றிய சொல்லாடல்களை எழுப்பும் தீபச்செல்வனின் கதை, அவரது சார்பையும் காட்டுகிறது.

போரின் பின்னொரு நிலை: அகதி 

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் போரின் நினைவுகள் குறைந்து, புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. அண்மைக் காலத்தில் அந்தப் போக்கு அதிகமாகி வருகிறது. அகதியாக நுழைந்த நாடுகளில் அந்த உரிமையைப் பெறுவதற்காகப் படும் துயரங்கள் - சட்டவிதிகளுக்கேற்பத் தங்கள் அடையாளங்களை - தரவுகளை மாற்றுதல் போன்றவற்றில் பின்பற்றிய உத்திகளையும், தட்பவெப்ப நிலை - குறிப்பாகப் பனி பொழியும் ஐரோப்பிய, கனடியச் சூழல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன கதைகளிலும் கவிதைகளிலும் .அவற்றின் தொடர்ச்சியாக இலங்கைக்குத் திரும்பும் மனமின்றி அகதியான நாடொன்றிற்குள் துணையைத் தேடிக் குடும்ப அமைப்பை உருவாக்கி இலங்கை வாழ்க்கையைத் தொடரும்போது ஏற்படும் சிக்கல்களும் குறைவாக எழுதப்படுகின்றன.

மாலினியின் ராகுல் அப்படியொரு கதை என்று சொல்வதைவிட, அதையும் தாண்டிப் பலம்பெயர்ந்த நாட்டின் சட்ட நெருக்கடிக்குள் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடரமுடியாத அவலத்தைச் சொல்லும் கதையாக இருக்கிறது. தனிநபர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து நெறிப்படுத்தாத இலங்கை/ இந்தியச் சட்டங்களுக்குப் பழக்கப்பட்டவர்களால் ஐரோப்பியச் சட்டங்களுக்குள் வாழ்வது பெரும் சிக்கலானது. ஐரோப்பியச் சட்டங்கள் குடும்பவாழ்க்கையை அந்தரங்கமான வாழ்க்கையாக வாழச் சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்குமான உரிமைகள் - கடமைகள் பற்றிய நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்துக் கண்காணிப்பு செய்யும் தன்மை கொண்டது.

எப்போதும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையிலிருக்கும் நபர்களுக்குச் சாதகமாக இருக்கும் அச்சட்டங்களைப் புரிந்துகொண்டால், நாம் நமது வாழ்க்கையை ஐரோப்பிய நடைமுறைகளுக்குத் தக்கவர்களாக தகவமைத்துக் கொண்டு அச்சமின்றி வாழமுடியும். அதைப் புரிந்து கொள்ளாமல், அச்சட்டங்கள் அனுமதிக்கும் உரிமைகளை மட்டும் பெற்றுக் கொண்டு, அதனை ஏமாற்றிவிடலாம் என்று நினைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் வழங்கும். அப்படி ஏமாற்றுபவர்கள் எப்போதும் அச்சத்துடனே வாழ்வார்கள். ஏனென்றால் அவர்களது மனமும் வாழ்க்கை முறையும் கீழ்த்திசை/ ஆசிய நாட்டுப் பண்பாட்டுக்குள் இருந்துகொண்டிருப்பவை. இந்தப் பின்னணியில் எழுதப்பெற்ற கதை ராகுல்.

இந்தியப் பெயராக அடையாளம் கொண்ட ராகுலின் அம்மா இந்தியர்; அப்பா இலங்கையர். ஜெர்மனியில் சந்தித்துக் கல்யாணம் செய்துகொண்டவர்கள். கல்யாணத்துக்குப் பிறகு ஒருவர் மீது மற்றவருக்கு வெவ்வேறு காரணங்களை முன்னிட்டு ஒத்துப்போகவில்லை. ஆனால் ஜெர்மன் நாட்டுச் சட்டப்படியான உரிமைகளும், வேலைவாய்ப்பையும் கருதிப் பிரிந்துபோவதை விரும்பாமல் கணவன் - மனைவி என்ற அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். மனம் ஒப்பாமல், கிடைக்கும் ஆதாயத்திற்காகக் குடும்பம் நடத்தியவர்கள் பெற்றுக் கொண்ட பிள்ளை என்ன ஆகிறான் என்பதுதான் கதை. கதையைச் சொல்லிச் செல்லும் லாவகமும் விவரிப்பும் மிக எளிமையான நேரடி விவரிப்புகள். குழந்தைமைப் பருவத்தில் பெற்றோர்களின் கவனிப்பும் அருகிருப்பும் தேவை என்பதை வலியுறுத்தும் சட்டங்களை மதிக்காத / மதிக்கத் தெரியாத அப்பா, அம்மா இருவரையும் நிராகரிக்கும் 13 வயதுப்பையன் ராகுலை மாலினியின் எழுத்து நம் முன் நிறுத்தும்போது அவர் எடுக்கும் முடிவு முக்கியமானது. எப்படி இருந்தாலும் பெற்றோரின் பாசத்தை விடமாட்டான் ஒரு ஆசியப் பையன் எனக் காட்டிவிடாமல், அந்நாட்டுச் சிறார் காப்பகச் சூழலும், அங்கிருப்பவர்களின் பரிவும் பாசமும் மேலானது என எடுக்கும் முடிவும் மேலானது என நியாயப்படுத்துகிறார்.


இந்த முடிவுதான் நடைமுறை நடப்பு. அதைச் சரியாக முன்வைத்துள்ளார் மாலினி . அவரின் கவிதைகள் பலவற்றை முகநூலில் வாசித்திருக்கிறேன். நடுவில் வந்திருக்கும் ராகுல், நான் வாசிக்கும் அவரது முதல் கதை. இன்னும் இன்னும் எழுதுவதற்கான அனுபவம் அவருடைய புலம்பெயர் வாழ்வில் கிடைத்துக் கொண்டே இருக்கும். தான் இருக்கும் சூழல் தரும் நெருக்கடியில் எந்தப் பக்கமாக நின்று எழுதுவது என்பதை முடிவுசெய்யும் ஒருவரால் தவறான கதையை எழுத முடியாது. மாலினி சரியான கதை பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் கதைவெளியையும் தேர்வு செய்து எழுதியிருக்கிறார்

கதைக்கான இணைப்பு

=======================

ஆயுதங்களின் நகைமுரண்

ஈழப்போரின் வீரம் - போராளிகளின் வீரம் இருநிலைப்பட்டது. எதிரிகளை அழித்தொழிப்பது; இயலாதெனில் தன்னை அழித்துக்கொள்வது. எதிரிகளை அழிப்பதற்கான கருவிகளை - பிஸ்டலைத் தூக்கித் திரியும்படி பயிற்சி அளித்த இயக்கம், தன்னை அழித்துக்கொள்வதற்கான சயனைடையும் கழுத்தில் கட்டித் திரியும் படியாகவும் பயிற்சி அளித்திருந்தது. யோசித்தால் ஒருவிதத்தில் நகைமுரண் தான். தன்னை அழித்துக்கொள்ளுதல் சூழல் சார்ந்து வீரமாகவும் பெருந்தியாகமாகவும் கட்டமைக்கப்படும் வாய்ப்போடு இருக்கிறது. அதே விஷமருந்து தந்தையிடம் தற்கொலைக்கான கருவியாக மாறியிருக்கிறது. இந்த இரண்டையும் எளிமையான கதைசொல்லலில் வெளிக்காட்டியுள்ளார் ப.தெய்வீகன்.

போர்க்கள நெருக்கடியில் தேசவிடுதலைக்கான கருவி - தன்னுயிரைத் தரத் தயாரான வீரத்தின் குறியீடு சயனைடு. தந்தையிடம் தன் பிள்ளைகளுக்குச் சுமையாகிவிடக்கூடாதென நினைக்கும் தனிமனித அழுத்தத்தின் விடுபடலின் கருவியாகிறது. அதுவும் ஒருவிதத்தில் விடுதலைதான். எப்படியாயினும் சயனைடு விடுதலையின் ஆயுதம். பொருள் ஒன்றுதான். பொருளுக்கான பெயர்ச்சொல்லும் ஒன்றுதான். சூழலில் அதன் இருப்பையும் அர்த்தத்தையும் மொழி மாற்றிவிடுகிறது. வாழ்க்கை என்பதும் வாழ்க்கையை எழுதும் கதையென்பதும் மொழியின் விளையாட்டுதான் போலும்

ஆனந்தவிகடனில் வந்துள்ள சயனைடு கதையை வாசித்துப்பாருங்கள்.

உள்ளே -வெளியே : நடு இதழில் இரண்டு கதைகள்

நேற்றிரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நடு -இணைய இதழில் இரண்டு கதைகள் வாசிக்க முடிந்தது. ஒன்று இலங்கையில் -உள்ளே இருப்பவர் எழுதியது. இன்னொன்று புலம்பெயர்ந்து வாழ்பவர் எழுதியது .வெளியில் இருப்பவர் எழுதியது. எழுதிய இருவரும் பெண்கள் என்பது ஒரு பொதுக்குறிப்பு.

கிளிநொச்சியில் நான் சந்தித்த ‘தமிழ்க்கவி’ எழுதிய கதையின் தலைப்பு: நல்லவர்கள்.முழுமையும் சமகாலக்கதை. ஜெர்மனியில் வசிக்கும் ‘மாலினி; எழுதிய கதையின் தலைப்பு: ‘தலைமையைக் கொன்றவன்’ கடந்த காலத்தை எழுதிய கதை.

தமிழ்க்கவியின் கதை பெண்களின் அப்பாவித் தனத்தை - ஆண்களின் சொற்களை நம்பி ஏமாந்து போகும் இரண்டு பெண்களின் கதையைச் சொல்கிறது. உறவுக்காரப் பெண் அழகாய் இல்லை என்று நினைத்து அந்நியத்தில் கல்யாணம் செய்து, அந்தப் பெண்ணின் இயல்பையும் இருப்பையும் ஏற்கமுடியாமல் தவிக்கும் ஆண் -சுந்தரம் - விவாகரத்து நோக்கி நகர்கிறான். கேட்கும் விவாகரத்து கிடைக்காமல் போகும்போது தற்கொலை செய்துகொள்ள நினைத்து விஷம் அருந்திவிடுகிறான். விவாகரத்து கிடைப்பதற்கு முன்பே முன்பு நிராகரித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றி அவளோடு புணர்ந்திருக்கிறான். இரண்டு பெண்களையும் ஏமாற்றிய சுந்தரத்தை அவனை வளர்த்த அக்கா நல்லவன் என்கிறாள்;ஏமாற்றப்பட்ட பெண்ணும் நல்லவன் என்கிறாள்.

முழுமையும் சமகால நிகழ்வை எழுதியுள்ள தமிழ்க்கவியின் கதையை வாசிக்குப்போது அந்த ஆண் ஆகக் கெட்டவன் என்பது புரியும். அவனால் சீரழிக்கப்பெற்ற இரண்டு பெண்களும் தான் நல்லவர்கள் என்பது குறியீடாக - தலைப்பு வழி சொல்லப்படுகிறது. முழுமையும் கிளிநொச்சிப் பகுதிப் பேச்சுமொழியில் எழுதப்பெற்றுள்ள தமிழ்க்கவியின் உரையாடல்களையும் வருணிப்புகளையும் நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டியுள்ளது.

மாலினியின் கதை சமகாலக் கதையல்ல; கடந்தகாலக் கதை. போர்க் காலத்தில் நடந்த புலம்பெயர் நிகழ்வை மையப்படுத்தியுள்ள கதை. போர்க்காலப் பொய்யுரைகளால் -பகுமானச் சொற்களால் வாழ்க்கையைத் தொலைத்த ஓர் அப்பாவியின் துயரம் அது. போரில் தொடர்பில்லாதவர்களும் - ஆயுதத்தைத் தொட்டுப் பார்க்காதவர்களும் பெரும்போராளிகளாகவும், அழித்தொழிப்புகளைச் செய்தவர்களாகவும் காட்டித் திரிந்த வாழ்க்கை சொந்த நிலத்தில் -நாட்டில் கண்டும் காணாமல் கடந்துபோகும் ஒன்றாக இருந்தது. ஆனால் அந்தப் பொய்யுரையும் புனைவு நிகழ்ச்சியும் ஒருவனின் புலம்பெயர் வாழ்க்கையில் ஏற்படுத்திய உச்சபட்ச வீழ்ச்சியைக் காட்டும் கதையாக எழுதப்பெற்றுள்ளது. இக்கதைக்குப் பின்னே சில உண்மைச் சம்பவங்கள் இருக்கக்கூடும்.
தனி நாடு கோரிக்கைக்காக நடந்த போர் தந்த பெருமிதம் உண்மைப் பெருமிதமாகவும், புனையப்பெற்ற பெருமிதமாகவும் மாறிய நிலையைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியொரு புனையப்பெற்ற பெருமிதக்காரனின் வீழ்ச்சியைச் சொன்னவகையில் மாலினியின் இந்தக் கதை முக்கியமானது. கதை சொல்லலில் இன்னும் பக்குவம் கூடிவரவில்லை என்ற குறையைச் சரிசெய்துவிட்டால் அந்தக் கதை கச்சிதமான கதையாக மாறிவிடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்