கலப்புத் திருமணங்களின் பரிமாணங்கள் : அழகுநிலாவின் பெயர்த்தி


மொழியை விரும்பும் ஒவ்வொருவரும் அம்மொழியில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எல்லா நேரத்திலும் விரும்பிவிடுவதில்லை என்பது ஒரு நகைமுரண்நிலை. சொற்கள் – எதிர்ச்சொற்கள் அறிவது ஐரோப்பிய மொழிக்கல்வியில் -குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் தொடக்கநிலை. வேற்றுமொழிச் சொற்கள் என்றில்லாமல் தாய்மொழியில் இருக்கும் சொற்களைக்கூட விரும்பப்படும் சொற்கள், வெறுக்கப்படும் சொற்கள் எனப் பட்டியலிட்டே பயன்படுத்தி வருகிறார்கள் மனிதர்கள். சொற்களில் விரும்பும் சொற்களை உடன்பாட்டுச் சொற்கள் என்றும் நேர்மறைப்பார்வையைத் தரும் சொற்கள் என்றும் சொல்லி அதிகம் பயன்படுத்துகின்றோம். எதிர்மறைப்பார்வையைத் தரும் சொற்களை விருப்பத்திற்குரியன அல்ல என்று கருதிப் பயன்பாட்டையே தவிர்க்க நினைப்பதும் மனித இயல்புதான்.

இந்தப் போக்கிலிருந்து சில சொற்கள் தனித்தலையும் சொற்களாக இருக்கின்றன. அவை விரும்பத்தக்க சொற்களா? வெறுப்புக்குரிய சொற்களா? எனச் சட்டென்று சொல்லிவிடமுடியாது. காதல் என்ற சொல் அப்படியான ஒருசொல். காதல் தனித்தலையும் சொல்லாக மாறிப்போனதால், அதனால் உண்டாக்கப்படும் திருமணம் என்னும் நிகழ்வும், திருமணத்தால் உண்டாக்கப்படும் குடும்பம் என்ற அமைப்பும் தனித்தலையும் சொற்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. 

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஒவ்வொரு ஆணின் முன்னும் பெண்ணின் முன்னும் இருக்கிறது. உருவாக்கப்படும் குடும்ப அமைப்பால் தான் உலகம் இயங்குகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பும் அமைப்பைக் குறிக்கும் சொல்லும் புனிதச் சொற்களாகக் கருதப்படுகின்றன. குடும்பம் புனிதமானதால் அதனை உருவாக்கும் நிகழ்வான திருமணம் என்னும் மணநாளும், அதற்குக் காரணமான காதலும்கூடப் புனிதச் சொற்களாக ஆகிவிடுகின்றன.

பெண்ணியம் என்னும் கருத்தியல் பார்வை இம்மூன்று சொற்களின் மீதும் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுப்பி விவாதித்து நகர்ந்து வந்துள்ளது. காதல் என்னும் சொல்லை மனத்தின் வெளிப்பாடாகக் கருதி, இரு மனங்களின் இணைவு விளைவு எனக் கொண்டாடுவதும், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் திருமண உறவு சரியாக இருக்கும் என்றும் உலகம் நீண்ட காலமாக நம்புகிறது. குறிப்பாகக் கலை இலக்கியப் பனுவல்கள் காதலை மிக உயர்வான ஒரு வெளிப்பாடாகக் கருதிக் கொண்டாடித் தீர்த்திருக்கின்றன. அதே நேரத்தில் காதல் வழியாக உருவான குடும்ப அமைப்பை அதே அளவுக்குப் போற்றிக் கொண்டாடவில்லை என்பதும் உண்மையாக இருக்கின்றன.

ஒருமொழி சில நிகழ்வுகளுக்கான பெயர்ச்சொற்களை உருவாக்காமலேயே இருக்கும். ஏனென்றால் அம்மொழியில் அத்தகைய நிகழ்வுகள் இல்லாமல் பின்னர் வந்து சேர்ந்திருக்கும். திருமணம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. திருமண முறைகளும் கூட இருந்திருக்கின்றன. திருமணம் அல்லாமல் ஆணும் பெண்ணும் உறவுகொள்ளும் முறைகளும்கூட இருந்திருக்கின்றன. இருவரும் மனம் ஒத்து முடிவுசெய்து உருவாகும் திருமணமும் அவ்விருவரைச் சூழ இருந்த சமூகக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இருந்துள்ளன. திருமணம் என்றாலே இங்கே ஏற்றுக்கொள்ளலும் சடங்குகளும் அதன் அடையாளம்.

இந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டதாக உருவானதே காதல் திருமணம். காதல் திருமணம் என்பதை நிகழ்காலச் சமூகம் வேறு எவரின் தலையீடும் இன்றி இரண்டு பேர் முடிவுசெய்து மற்றவர்களுக்கு அறிவித்துக் கொள்ளும் வழிமுறையாகப் புரிந்து வைத்துள்ளது. அறிவிப்புக்கு ஏற்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தொடரும் மனநிலையை அவ்விருவரும் கொண்டிருப்பார்கள். அதனால் வரும் சிக்கலையும் எதிர்ப்புகளையும் இருவரும் நிதானமாக எதிர்கொண்டு கடப்பார்கள். நிகழ்காலச் சமூகத்தில் காதலுக்கு எதிர்ப்பு குடும்ப அமைப்பிலிருந்தே உருவாகிறது. பிள்ளைகளுக்குரிய இணையை – ஆண் பிள்ளைக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் ஏற்பாடு செய்யும் பொறுப்பு தங்களுடையது எனக் கருதம் பெற்றார்கள் தங்களின் பொறுப்பைக் காவுவாங்கும் காதலை எதிர்க்கிறார்கள். தங்களின் அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில் அதனை நிலைநாட்டப் பல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி சாதி, சமய அமைப்புகளின் உறுப்பினர்கள் வரை இறங்கி வேலை செய்கிறார்கள். அந்தவேலை அண்மைக்காலத்தில் கொலைவரை நீள்கிறது.

காதலை ஏற்காதவர்களின் தொடக்ககாலப் போக்காக ஒதுக்கிவைத்தல் இருந்தது. சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க விடாமல் தடுக்கும் அந்தப் போக்கு பெரும்பாலும் அடுத்த தலைமுறையின் வருகைக்குப் பின் மாற்றம் என்ற நம்பிக்கையும் இருந்தது. மகன் அல்லது மகள் தங்கள் சொல்லைக் கேட்காமல் காதல் கல்யாணம் செய்துகொண்டதால் ஒதுக்கிவைத்த அல்லது ஒதுங்கிக் கொண்ட பெற்றோர்கள் பலரை நான் அறிவேன். அவர்களில் பலரும் தங்களின் வாரிசா ஒரு பேரனோ அல்லது பெயர்த்தியோ வந்துவிடும் நிலையில் ஒதுக்கிவைத்த நிலையை மாற்றிக் கொண்டு ஏற்பு மனநிலைக்கு வந்துவிடுவார்கள். கோபமும் தாபமும் ஒரு குழவியைக் கண்டதும் காணாமல் போய்விடும் என்பது நடைமுறை. தமிழ்நாட்டுக் காதல்/ கலப்புத் திருமணங்கள் பலவற்றில் இந்த ஏற்பு நிலையை முன்பு பார்த்திருக்கிறேன்.

ஒதுக்குதல் – விலகுதல் என்ற சிக்கலை சாதி, சமய எல்லைகளைத் தாண்டி மொழி அடையாளத்திற்குள் விவாதித்திருக்கிறார் அழகுநிலா. சீனம், மலாய், தமிழ் என்ற மும்மொழிச் செல்வாக்குள்ள சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பெற்ற அவரது பெயர்த்தி கதை, ஒதுக்குதலின் வலியைச் சின்னச் சின்ன நிகழ்வுகளின் வழியாக முன்வைத்திருக்கிறார். சிவனை வணங்கும் இந்துப் பெண்ணான உமையாள் காதலித்துக் கரம்பிடித்தவர் மெங்வாங். மொழியாலும் வழிபடும் கடவுளாலும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களாலும் வேறுபட்டவர். இந்தப் புற வேறுபாடுகள் எவையும் அவளுக்குச் சிக்கலாக இல்லை.

உமையாளுக்கும், மெங்வாங்கிற்கும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது காதல் மலர்ந்தது. ஏழு வருட காதலுக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தபோது, இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கல்யாணம் சுமூகமாக முடிந்தது. தாம்பத்திய வாழ்க்கை அழகாக ஆரம்பித்து அதற்கு சாட்சியாக இரண்டு வருடங்களில் லீ பிறந்தான். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் ஒன்றிணையும் போது ஏற்படும் அத்தனைச் சவால்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும், அவர்களுக்கு இடையை இருந்த காதலாலும், புரிந்துணர்வாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளித்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத, அவர்களால் இன்றுவரை தீர்க்கமுடியாத சவால், மெங்வாங்கை அச்சு அசலாய் உரித்துக் கொண்டு பிறந்திருந்த மகன் லீ மூலம் வந்து சேர்ந்தது.

உற்றார், உறவினர், சாதிசனம், அண்டைவீட்டார் எனப் புறக்காரணிகளால் அல்லாமல் தன்வயிற்றில் பிறந்த மகனே தன்னை ஒதுங்கி வைத்த காட்சிகள் ஒன்றிரண்டைக் கதைக் குள் அடுக்கிக் காட்டிக் கடைசியில் ஏற்புநிலைக்கு அவன் வந்ததைக் கதையின் திருப்பமாக ஆக்கிக் கதையை முடிக்கிறார்.

உமையாளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. லீ அப்போது தொடக்கநிலை நான்கில் படித்துக் கொண்டிருந்தான். ஆண்டு இறுதியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்காக உமையாள் பள்ளிக்குச் சென்றிருந்தாள். அவர்களது முறை வந்தவுடன் வகுப்பு ஆசிரியை லீயிடம் “ஹூ இஸ் ஷி? யுவர் கார்டியன்?” என்று கேட்க லீ மவுனமாக தலைகுனிந்து கொண்டான். உமையாள் தான்தான் லீயின் அம்மா என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அந்த ஆசிரியை நம்ப முடியாமல் மேலும் கீழும் பார்த்ததுதான் லீயின் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய முதல் சம்பவமாக இருக்கக்கூடும் என்று அவள் அடிக்கடி நினைத்துக் கொள்வாள்

இதே போல் மற்றொரு சம்பவம் தொடக்கநிலை ஐந்தில் நடந்தது. ஒரு நாள் லீ முக்கியமான புத்தகத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான். புத்தகத்தை கொடுக்க பள்ளிக்குச் சென்ற உமையாளைப் பார்த்த அவனது நண்பர்கள் “இஸ் ஷி யுவர் மெயிட்” என்று கேட்க அன்று இரவு லீ மெங்வாங்கிடம் “அப்பா! ப்ளீஸ்! அம்மா இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டாம்” என்று சொன்னபோது லீயால் முதன் முதலாக உமையாள் அழுதாள்.

அதன் பிறகு இது போன்ற பல சங்கடங்களை உயர்நிலைப் பள்ளியிலும், பொது இடங்களிலும் தொடர்ந்து உமையாள் சந்திக்க வேண்டியிருந்தது. வீட்டில் அம்மாதான் உலகம் என்றிருக்கும் லீ, வீட்டு வாசற்படியை தாண்டியவுடன் முற்றிலும் அந்நிய மனிதனாக மாறிவிடும் அதிசயம் அவளுக்கு நிறைய வேதனையைக் கொடுத்தது.

*************
நேற்று நடந்த நிகழ்ச்சி உமையாளை மிகவும் பாதித்து இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணியான மருமகள் வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். மகனை தொலைபேசியில் அழைத்து தான் உடனே கிளம்பி வருவதாகச் சொல்ல, அதற்கு அவன் மருத்துவமனைக்கு அவள் வரவேண்டாம் என்றும் வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையை பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூற மனதளவில் உடைந்து போனாள். மெங்வாங் ஏதேதோ சொல்லி தேற்ற முயன்றாலும், அவளால் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை

மகன் லீ தனது தாயை வெளி இடங்களில் மட்டும் வெறுக்கிறான். ஆனால் வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கிறான். அப்படியான இரட்டை நிலை அவனுக்குள் உண்டாகும் வண்ணம் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதைக் கதைக்குள் காட்டியிருக்க முடியும். அத்தகைய நிகழ்வுகள் கதைக்குள் இடம்பெறும்போது சிங்கப்பூர், மலேசியா போன்ற பன்மொழி, பல்சமய, பல்பண்பாட்டு வெளிகளின் பொதுச்சிக்கல் வெளிப்பட்டிருக்கும். அதன் வழியாக எழுதப்பெற்ற கதை சமகாலக் கதையாக மாறியிருக்கும். 

அழகுநிலாவின் கதை, எல்லாக் கோபங்களும் வாரிசு முகத்தைக் கண்டால் மறந்துபோகும் என்ற நம்பிக்கையின் மாற்றுவடிவத்தின் மேல் கதையைக் கட்டியமைத்துள்ளது. தனது காதல் மனைவியின் வயிற்றில் பிறந்த தனது மகளின் சாயல் முழுமையாகத் தனது தாயின் சாயலாகவும் நிறமாகவும் இருப்பதில் ஏற்பட்ட ஆச்சரியமே அம்மாவை ஏற்கும் மனநிலைக்கு – பொதுவெளியில் அறிமுகப்படுத்தும் மனநிலைக்கு – நகர்த்தியது என்பதாகக் கதையை முடித்துள்ளார்.


“ம்.... சொல்லு லீ!”


“அப்பா! எங்க இருக்கிங்க?”


“கோவிலுக்கு வந்தோம்! குழந்தை பிறந்தாச்சா”


“பிறந்துடுச்சுப்பா! நீங்க உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வாங்க. வரும்போது அம்மாவைக் கூட்டிட்டு வாங்க”


“என்ன சொல்ற? ஏதாவது பிரச்சனையா”


“நேர்ல வாங்க. அம்மாவையும் மறக்காமல் கூட்டிட்டு வாங்க”

அப்பா, மகன் இருவரும் சீன மொழியில் உரையாடுவதுதான் வழக்கம். சீன மொழி நன்றாக தெரிந்தாலும் கணவர் பேசியதை மட்டுமே கேட்டவளுக்கு அந்தப் பக்கத்தில் மகன் என்ன சொன்னானோ என்ற பதற்றத்தில் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.

“என்னாச்சுங்க! என்ன சொன்னான் லீ! கொழந்தை பிறந்துடுச்சா? பிரச்சனை ஒண்ணுமில்லையே? சுக பிரசவம்தானே? என்ன! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க அமைதியா இருக்கிங்க”

“குழந்தை பிறந்துடுச்சாம் உமை. ஆனா என்ன பிரச்சனைன்னு தெரியலை. நம்ம ரெண்டு பேரையும் ஒடனே கெளம்பி ஹாஸ்பிடல் வரச்சொல்றான்”

“ரெண்டு பேரையுமா! நல்லா கேட்டீங்களா? உங்களை மட்டும்தான் வரச் சொல்லியிருப்பான்”

“இல்லைம்மா! ஃபோனை வைக்கிறப்ப கூட உன்னை மறக்காமல் கூட்டிட்டு வரச் சொன்னானே!”

“என்னை வரவேண்டாம்ன்னு சொன்னவன் இப்ப வரச் சொல்றான்னா குழந்தைக்கு ஏதாவது........” அவளால் பேசமுடியாமல் தொண்டையை அடைக்க கண்களிலிருந்து கண்ணீர் குபுக்கென்று வெளிவந்தது.

அவர்கள் நினைத்த தற்கு மாறாக மருத்துவமனையில் மகிழ்ச்சி நிரம்பியிருந்த து. உமையாளின் மகன் லீயின் நண்பர்களும் அவளது மனைவியின் நண்பர்களுமாகத் திரண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த பெற்றோர்களை – குறிப்பாக அம்மா உமையாளைத் தன்னருகே அழைத்து,

லீ அறிமுகப்படுத்தியவுடன் மரியாதைக்கு இருவரும் புன்முறுவல் செய்ய, வந்திருந்தவர்களில் ஒரு பெண் “ஹாய் லீ! நோ ஒண்டர்! ஷீ ரிசெம்பிள்ஸ் யுவர் மாம்லா!” என்று சத்தமாகக் கூவினாள். எல்லாரும் அதை ஆமோதிப்பது போல தலையாட்ட, இன்னொருவன் “யெஸ் ட்ரூ! ஃபோட்டோ காப்பிலா!” என்றவுடன் லீ, மருமகள் உட்பட எல்லாரும் சத்தமாக சிரித்தார்கள்.

அப்போதுதான் உமையாளுக்கு குழந்தையைப் பற்றிய நினைவு வர வேகமாகக் கட்டிலுக்கு அருகே போனாள். வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு மருமகளின் பக்கத்தில் கிடத்தப்பட்டு இருந்த அந்த கறுப்பு ரோஜாவைப் பார்த்தாள். நிறத்தில் மட்டுமல்லாமல் சாயலிலும் அச்சு அசலாய் அவளை உரித்துக்கொண்டு பிறந்திருந்த குட்டி உமையாள், பாட்டியின் அருகாமையை உணர்ந்தவுடன் தனது பிஞ்சு கைகளையும், கால்களையும் அழகாக அசைக்க ஆரம்பித்தாள்.

இக்கதை எழுதப்பெற்ற முறையும் வடிவமும் கறாரான சிறுகதை வடிவத்தன்மை கொண்டது. ஒற்றை நிகழ்வு, அதற்குள் ஒரு திருப்பம், திருப்பத்தின் விளைவில் ஒரு தீர்வு , அதன் வழியாக ஒற்றை உணர்வு வெளிப்பாடு என்ற இலக்கணங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் கதையில் விவாதிக்கப்படும் காதல் அல்லது கலப்புத் திருமணத்தை இந்த ஒற்றைநிலையில் விவாதிப்பதைவிடப் பல நிகழ்வுகளால், பல தன்மை கொண்ட பாத்திரங்களால், முன்னும் பின்னும் நகரும் காலத்தில் வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப் பெற்றிருக்கும் நிலையில், குறிப்பிடத்தக்க உலகக் கதையாக மாறியிருக்கும் வாய்ப்புக்கொண்ட தளமுடையது கதைக்கரு.

[அழகுநிலா சிங்கப்பூரில் வசிக்கும் பெண் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.]



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்