எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்
இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ அச்சில் வந்து கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது.பல பதிப்புகளும் வந்து விட்டன. இரண்டாவது நாவல் ‘ ஆறுமுகம்’ அச்சாகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன . இந்த இரண்டு நாவல்களையும் திரும்பவும் வாசித்துவிட்டுத் தமிழ் இலக்கியம் அவற்றை எதிர்கொண்ட விதத்தை நினைவுபடுத்திக் கொண்ட விதமாக இக்கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி விமரிசனப்பார்வைக்குள் செயல்படும் போக்குகளை விவாதிக்கிறது. இரண்டாவது இமையத்தின் ஆறுமுகம், தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் ஆகிய மூன்றையும் ஒப்பிடுகிறது.
பகுதி -அ
இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ பெற்ற வரவேற்பை
இரண்டாவது நாவல் ‘ஆறுமுகம் ’ பெறவில்லை. இந்த நாவலுக்கு எழுதப்பட்ட முதல் மதிப்புரை
மனுஷ்யப்புத்திரனுடையது. இந்தியா டுடேயில் அவர் எழுதிய மதிப்புரை ஏறத்தாழ நாவலை நிராகரிக்கும்
தன்மையில் இருந்தது. நடப்பியல் பாணி எழுத்துக்களின் போதாமையைக் கூறி ஆறுமுகமும் அந்த
பாணியில் எழுதப்பட்ட நாவல் என்று நிராகரித்தது மதிப்புரை. நாவல் எழுதப் பட்ட முறையோ,
அந்நாவலின் இயங்குவெளியோ, அவ்வெளியில் இயங்கும் மனிதர்களின் வாழ்நிலை சார்ந்த நிலைமைகளையோ,
மதிப்பீடுகளையோ விவாதிக்காமல், நிராகரித்தலுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கி யிருந்தது.
அந்த மதிப்புரையைத் தவிர, ராஜ்கௌதமன் காலச்சுவடுவில் எழுதிய ‘புனித ஆறுமுகம்’ என்ற
விமரிசனக் கட்டுரையும் கூட நாவலை தலித் இலக்கியப் பார்வையிலிருந்து நிராகரிக்கும் தொனியிலேயே
இருந்தது.
கோவேறு கழுதைகள் வந்த போது எழுத்துலகம் அறியாத பெயர் இமையம்.
ஆனால், அந்த நாவல் அச்சான ஓராண்டிற்குள் எழுப்பிய சலசலப்புகள் ஏராளம். அப்போது இமையத்திற்குக்
கிடைத்தவை பரபரப்பான அங்கீகாரங்கள் அல்லது நிராகரிப்புகள். இரண்டாவது நாவலுக்குக் கிடைத்தவையோ
வெறும் மௌனங்கள். பரபரப்புக்கும் மௌனங்களுக்கும் இடையில் இருந்தவை அனைத்தும் இலக்கியம்
சார்ந்த, சொல்லாடல் சார்ந்த சங்கதிகள் தானா.? தமிழ் அறிவுச் சூழலின் முன் வைக்கப்படுகிறது
இந்தக் கேள்வி. பதில்களை எதிர்பார்த்தும் எதிர்பார்க்காமலும்.
தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் அரசியல் என்பன விவாதப்
பொருளாக முழுவீச்சில் இருந்த காலகட்டத்தில் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை வெளியிட்டது க்ரியா,
இமையத்தின் வாழ்க்கைத் தரிசனம், யதார்த்தச் சித்திரிப்பின் நுட்பங்கள், கலையழகு சார்ந்து
பாராட்டித் தட்டிக் கொடுத்து முதன் முதலில் முன் மொழிந்தவர் சுந்தரராமசாமி. அவர் “
மனித மேன்மையை முன் வைத்து நாவல் எனும் கலைவடிவம் கொண்டவற்றைக் கைவிரல்களில் எண்ணி
விடலாம். இந்தக் குறைவான எண்ணிக்கையில் தன்னையும் இணைத்துக் கொண்டு விடுகிறது இந்த
நாவல்” என்று எழுதினார் [காலச்சுவடு, அக்டோபர், 1994]. அத்தோடு அந்த நாவலை வாசிக்க
வேண்டிய விதத்தை, “ ஆற்றும் பணிகள் சார்ந்து இறுகிப் போயுள்ள ஜாதி அமைப்பும் அதன் படித்தரம்
சார்ந்த அதிகாரங்களும் சுரண்டல்களும் கட்டுப்பாடுகளும் மனித உறவுகளை முற்றாகச் சிதிலமடையச்
செய்து சுயநலங்கள் ஊடுருவி இயற்கையாகி விட்ட
நிலையை நாவல் தன் பின்னணியாகக் கொண்டிருக்கிறது ” என்று சுட்டிக் காட்டியிருந்தார்.[முழுவதும் வாசிக்க, அவரது ஆழமும் விரிவும் தேடி பக்.172-175 பார்க்க] சுந்தரராமசாமியின்
வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றி வேதசகாயகுமாரும் (இந்தியாடுடே), வெங்கட் சாமிநாதனும்
(புதிய பார்வை ) நகலெடுத்தனர். அவர்களது மதிப்புரைகளோடு கணையாழி, சுபமங்களா, இந்தியாடுடே
இலக்கிய மலர் எனப் பிரபலங்களின் கவனிப்பினால் இமையத்திற்குக் கிடைத்தது நட்சத்திர அந்தஸ்து.
அந்தப் பத்தாண்டுகளில் (1990-2000) கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளராக அறியப்பட்டார்
இமையம்.
இதன் மறுதலையாக தலித் விமரிசகர்களிடமிருந்து வந்தவையெல்லாம்
கண்டனங்களும் குற்றப்பத்திரிகைகளும் தான். “ தலித் குரலை அசிங்கப்படுத்தி மௌனப்படுத்த
ஒரு தலித்தைக் கொண்டே மேற்படி ஆவிகள் ( ghosts) கோவேறுகழுதைகளை எழுதியிருக்கின்றன என்று
சொல்ல முடியும் ” என்று உள்நோக்கத்தை சுட்டிக் காட்டிய ராஜ்கௌதமன் ( ஊடகம் , செப்டம்பர்,
1995), “ இமையம், மேதைகள் புளகாங்கிதம் பெறுவதற்காக தலித்துகளின் உள் முரண்பாடுகளைப்
பற்றிய வரலாற்று அறிவின்றி, கலையழகு மிக்க நாவல் இலக்கியம் பண்ணிக் கொண்டிருக்கட்டும்.
தலித்துக்கள் இப்படிப்பட்ட உன்னத நாவலோடு இதன் ஏகபோகிகளான மேதைகளின் சித்தாந்தங்களைப்
போட்டு உடைக்கட்டும்” என்று எழுதினார் [ முழுவதும்
வாசிக்க; பொய் + உண்மை= அபத்தம் , பக். 96-106]. ராஜ்கௌதமன் இந்த நாவலை தலித் விரோத
நாவல் எனக் கட்டமைக்க, இமையமும் தலித் துரோகி/ விரோதி என அறியப்பட்டார்.
சாதியொழிப்பை முன் வைத்துப் போராடும் இயக்கங்களுக்கும்
நபர்களுக்கும் தேவைப்படும் முதல் நிபந்தனை ‘சுயசாதிக்கு எதிரான மனநிலை’ .சாதி அமைப்பு
தரும் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டே, அதன் வேரை வெட்டி வீழ்த்தி விட முடியும்
என்று நம்புவது ஒருவிதக் கற்பனைதான், சலுகைகளைப் பெற்றுக் கொண்டே அதற்கு எதிராகப் போராட
முடியாமல் போகும் ஆபத்துகளை தலித் இயக்கங்கள் சந்தித்துக் கொண்டு வருவது நமது காலத்தின்
யதார்த்தம். இந்நிலையில் அதிகாரங்களை அனுபவிக்கும் இடைநிலைச் சாதியினரும் , உயர்சாதிகள்
எனத் தங்களைக் கருதிக் கொள்பவர்களும் சாதி அமைப்புக்கு எதிராக நிற்பதற்கு முதலில் கைக்கொள்ள
வேண்டியது சுயசாதி எதிர்ப்பு மனநிலைதான். சுயசாதி விமரிசனத்தை தன்மையமாக வைத்த இமையத்தின்
கோவேறு கழுதைகள், தலித் விரோத நாவலாக முன்மொழியப்பட்டது ஒரு வித இடமாறு தோற்றப்பிழைதான்.
இத்தகைய பிழைகள் வரலாற்றில் நிகழ்வதைத் தடுத்துவிடவும் முடியாது.
ராஜ்கௌதமன் தொடங்க, கோவேறு கழுதைகளை தலித் விரோத நாவல்
எனச் சுட்டிய விமரிசனங்கள்/ வாசிப்புகள் தமிழில் இதுவரையிலான மரபான வாசிப்பு முறையை
மாற்றியுள்ளன என்பதைக் கவனித்திருக்க வேண்டும். சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன்,
வேதசகாயகுமார் தொடங்கி பலரும் செய்தது மையக் கதாபாத்திரம் சார்ந்து வாசிக்கும் மரபான
வாசிப்பு. இதற்கு மாறாக புதிய முறை மற்றவர்களின் கோணங்களிலிருந்து வாசித்து தலித் விரோத
நாவல் எனக்கூறுகிறது.
கோவேறு கழுதைகளின் மையக் கதாபாத்திரமான ஆரோக்கியத்தின்
துயரங்களும், நசிவும், அவள் மீது செலுத்தப்பட்ட அதிகாரம் சார்ந்த வன்முறைகளும் முக்கியமானவை
என்பது வாசிப்பின் நம்பிக்கை. ஆனால் மாற்று வாசிப்போ இவையனைத்தும் நாவலுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ளன;
நாவல் வெளிக்குள் இவை மிகச் சரியாக, துல்லியமாகச் சித்திரிக்கப்படலாம்; ஆனால் அது ஒரு
வகைமாதிரி; அதுவும் உள்நோக்கம் கொண்ட வகை மாதிரி என்கிறது. இது ஒரு வகையில் குற்றச்சாட்டு
தான்.இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் நியாயமான வரலாறு சார்ந்து அச்சம் ஒன்று உள்ளது.
இமையம் நாவலுக்குள் கட்டமைக்கும் சிறப்புநிலை வகை மாதிரி, நாவலுக்கு வெளியே சமுதாய வெளியில் பொதுமைப் படுத்தும் ஆபத்துக்கள் நிறைந்தது. அந்த ஆபத்து, திரும்பவும் தலித்துக்களைக் குற்றவாளிகள் எனக் கூண்டிலேற்றும் நோக்கத்திற்குப் பயன்படக் கூடியது. தலித்துக்கள் நசுக்கப்படுகிறார்கள்; ஒடுக்கப் படுகிறார்கள் என்று உரத்துப் பேசும் குரல்களிடம், ‘இருக்கலாம், அதே நேரத்தில் தலித்துக்களும் நசுக்கிறார்கள்; ஒடுக்குகிறார்கள் என்று சொல்ல இந்த நாவல் ஆதாரமாக நிற்கிறது’ என்பதுதான் குற்றம் சாட்டியவர்களின் வாதம். தலித்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் எனக் கூப்பாடு போடுகிற நீங்கள், உங்களுக்குக் கீழே உள்ள பற வண்ணார்களைப் படுத்துகிற பாட்டை- அதில் ஒருத்தியான ஆரோக்கியம் அனுபவித்த கொடுமைகளைப் பாருங்கள் என எடுத்துக் காட்டத்தக்க வகை மாதிரியாக இமையத்தின் நாவல் பயன்படும் என்பது மாற்று வாசிப்பின் ஆதங்கம். அந்த ஆதங்கத்தின் - கோபத்தின் வெப்பம் உள்ளடங்கிய வாசிப்பு அப்படித்தான் சொல்லும். எல்லா வாசிப்புக்களும் உள் நோக்கங்கள் கொண்ட வாசிப்புக்கள் தானே.
தமிழின் வாசகத் தளத்தில் தோன்றிய எதிர்நிலை வாசிப்பை முதலில்
வேண்டிய நாவல் இமையத்தின் கோவேறு கழுதைகள் தான் என்ற அளவிலும் அந்த நாவலுக்கு முக்கியமான
இடமுண்டு. அதற்கு முன் தமிழ்க் கிராமங்கள் சார்ந்த வாழ்க்கையைச் சித்திரித்துள்ள வட்டார
நாவலாசிரியர்கள் பெரும்பாலும் அவரவர் சாதிகளின் -சாதி மனிதர்களின்-குடும்ப முன்னோர்களின்
கடந்த காலப் பெருமித வாழ்வையும், நிகழ் காலத்தில் சரிவினையும், நசிந்து போய் இடம் பெயரும்
குடும்பங்களின் கவலைகளையும், அவற்றினூடாக வெளிப்படும் மனித நேயங்களையும் எழுதிக் கொண்டிருக்க,
இமையம் தான் முற்று முழுதாகத் தன் சொந்தச் சாதியின் மீதான விமரிசனத்தைத் தன் நாவலின்
விசாரணைப் பொருளாக்கினார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. தலித் எழுச்சி
அல்லது சாதி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்பதை முன்னிறுத்தி இயக்கம் கட்டுபவர்களின்
பார்வையிலிருந்து வாசிக்கும் போது கோவேறு கழுதைகள் அவற்றிற்கு எதிரான நாவல் என்று வாசிக்கப்பட
வாய்ப்புண்டு. அந்த வாசிப்பு முற்றிலும் தவறான வாசிப்பு எனச் சொல்லி விடவும் முடியாது.
இதற்கு மாறாக, சாதியொழிப்பை முன்வைத்து இயங்குதல், எழுதுதல், என்ற கோணத்திலிருந்து வாசிக்கும் போது இமையத்தின்
‘கோவேறு கழுதைகள்’ மிக முக்கியமான நாவல் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழின் நாவலாசிரியர்கள்
பெரும்பாலானோரிடம் - ஆதிக்க , இடைநிலை, சூத்திர சாதி எழுத்தாளர்களிடம்- சொந்த சாதிகளுக்கெதிரான
மனநிலை அழுத்தமாக வெளிப்பட்டதில்லை. அதற்கு மாறாக சுயசாதி அபிமானமும் மோகமும் அழுத்தமான பதிவுகளாகியுள்ளன என்பதைக் கவனிக்க
வேண்டும். படைப்பிலக்கியத்தின் உயர்ந்த வெளிப்பாட்டு நிலையான சுய எள்ளலை, தன் குழு
மீதான விமரிசனத்தை, அக்குழுக்கள் செலுத்தும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நிலைப்பாட்டை
- தமிழின் புனைகதை வரலாற்றில் தலித் எழுத்தாளர்கள் வசப்படுத்தியுள்ளனர் என்பது ஆச்சரியமான
ஓர் உண்மை.
தன் சொந்த மனிதர்களின் அறியாமையையும், சாதி சார்ந்த அதிகாரப்
பகிர்வில் கிடைக்கும் சலுகைகளையும் கொண்டு தன் வாழ்க்கையை மனம் போன போக்கில் நடத்திடும்
தன் சமூகத்துப் பெரியவரை- காத்தமுத்துவை- சிவகாமியின் முதல் நாவலான பழையன கழிதலும்
விமரிசனம் செய்துள்ளது என்பது நினைவில் கொண்டு வர வேண்டிய ஒன்று. கழிக்கப்பட வேண்டிய
பழையனவற்றின் குறியீடாகக் காத்தமுத்து அந்நாவலில் நிறுத்தப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக
இமையத்தின் கோவேறு கழுதைகள் மிகக் கச்சிதமாக, கவனத்துடன் அந்த விமரிசனத்தைத் தொடர்ந்துள்ளது.
ராஜ் கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரத்திலும் கூட குடும்பப் பெருமை பேசாமல், சொந்த சாதி
மனிதர்களின் மீது விமரிசனத்தையும், தன் தகப்பன் மீது கோபத்தையும் சிலுவை வெளிப்படுத்தியுள்ளான்
என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது
கோவேறு கழுதைகளின் மையக் கதாபாத்திரமான ஆரோக்கியம் முழுமையாக
இரக்க உணர்வை யாசிப்பவளாகவே விரிந்துள்ளாள். நாவல் முழுவதும் அவள் அந்தக் கிராமத்தில்
அலையும் மனுசியாகவே வெளிப்பட்டுள்ளாள். அவளது உலகம் அந்தக் கிராமம் மட்டுமே. ஒரு விதத்தில்
ஆரோக்கியம் கோவேறு கழுதைகளின் குறியீடு. துணி துவைக்கும் இடமான வண்ணான் துறைக்கும்
வண்ணானின் வீட்டிற்குமான இடைப்பட்ட தூரத்தைத் துணிப்பொதிகளுடன் மட்டுமே நடந்து பழகியுள்ள
கோவேறு கழுதைகளைப் போல, அந்த ஊரைத் தவிர வேறெதையுமே அறியாதவள் அவள். அவளது கணவனும்
கூட அப்படித்தான். ஆனால் அவளது குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அப்படிப்பட்டவர்கள்
அல்ல. அவளது பிள்ளைகளான பீட்டர், மேரி, ஜோசப் ஆகியோருக்கு அந்த ஊர் உவப்பான வெளி அல்ல. அந்த வாழ்க்கை- அந்த ஏற்பாடு-
சாதி சார்ந்து செய்யும் தொழில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலை- அவர்களுக்கு உடன்பாடானது
அல்ல. இங்கு தான் என்றில்லாமல் எங்கும் போய்ப் பிழைத்துக் கொள்ளும் விருப்பம் அவர்களுக்கு
உண்டு. அந்த ஊரை விட்டுப் போக அவர்களை நிர்ப்பந்திப்பது வெறும் பொருளாதாரக் காரணிகள்
மட்டுமல்ல;சாதி சார்ந்த அவமானங்களும் தான். மொத்தத்தில் அவர்கள் வெளிப்பட்டுள்ளது இரக்கத்தை
வேண்டும் பாத்திரங்களாக அல்ல; மாற்றத்தைப் புலப்படுத்தும் பாத்திரங்களாக என்பதைக் கவனிக்க
வேண்டும்.
பகுதி -ஆ
ஒரு குறிப்பிட்ட
வெளி சார்ந்து நடைமுறைப்படும் மெதுவான மாற்றங்களை வெளிப்படுத்துவதற்கு நடப்பியல் பாணி
எழுத்தைப் போல வேறெதுவும் பயன்படாது என்று கூடக் கூறலாம். நடப்பியல் பாணியைச் சிறப்பாகப்
பயன்படுத்தும் நுட்பமும் லாவகமும் கைவரப்பெற்ற இமையம், தனது இரண்டாவது நாவலான ஆறுமுகத்தில்
அதன் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். மிக நுட்பமான விவரணைகளும் , சில வகையான
எதிர்பாராத திருப்பங்களும் கொண்டதாகச் செய்யப்பட்டுள்ள ‘ஆறுமுகம்’ ஒருவிதத்தில் தனக்கென
ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்ட விவரணப்படத்தின் இயல்புகளைக் (Documentary
realism)கொண்டுள்ளது.
தலித் இலக்கியம் அதன் இயல்பில் எவ்வாறெல்லாம் இயங்க வேண்டும்
எனச் சில முன் நிபந்தனைகள் உருவாக்கப் பட்டன. தன் வெளிப்பாட்டுக் கதையாடல் முறையே தலித் இலக்கியத்திற்கேற்ற வெளிப்பாட்டு முறை
எனச் சொல்லப்பட்டது. அதன் வழி அதிகாரத்தைக் குறி வைத்தல், அத்து மீறல், எதிர்நிலை மனோபாவம்,
கவிழ்த்துப் போடல், கலகம் என்பன அதன் சாராம்சங்கள் எனப் பேசப்பட்டன. கோவேறு கழுதைகள்
போலவே இமையத்தின் ஆறுமுகமும் இம்முன் நிபந்தனைகள் எதனையும் தனதாக்கிக் கொள்ள வில்லை.
இதற்காக இந்த நாவலை தலித் நாவல் நாவல் என்ற சொல்லாடலிருந்து விலக்கி வைத்திடவும் இயலாது.
ஏனெனில் இந்நாவலின் பின்புலங்களும் அவற்றில் உலவும் உலவும் கதாபாத்திரங் களும், அவை
எழுப்பும் வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்த விசாரணைகளும் தலித் இலக்கியச் சொல்லாடல்களுக்குள்
- விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய சொல்லாடல்களுக்குள், சுலபமாக நுழையக் கூடியன. எந்தவொரு
படைப்பும் அதனை வாசித்து முடிக்கும் வாசகனிடம், கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் படைப்பு
யாரைப் பற்றியது? என்ற கேள்வி முதலில் வந்து நின்று விடை தேடச் சொல்கிறது. இமையத்தின்
இரண்டாவது நாவலான ‘ஆறுமுகம்’ யாரைப் பற்றிய நாவல்? எதனைப் பற்றிய நாவல்? என்ற கேள்விகளையும்
அவற்றிற்கான விடைகளையும் அதற்கான காரணங்களையும் காணலாம்.
ஓர் ஆணுடலும் பெண்ணுடலும் இணைவதின் தேவைகள் குறித்தோ அதில்
எழும் சமூக மதிப்பீடுகள் குறித்தோ அறியாத வயதில், தன் தாயுடன் படுத்திருந்த முற்றிலும்
அந்நியனான ஜெர்ரி ஆல்பர்டைக் கண்டு தன் அம்மாவை (தனபாக்கியம்) பிரிந்து ஓடி.. ஓடி..
ஒரு நவீன நகரத்தின் (பாண்டிச்சேரி) வீதிகளில் வாழத் தொடங்கியவன் ஆறுமுகம். அவனுக்கு
அந்த நவீன நகரத்தின் வீதிகளும் சந்துகளும், இருட்டும், வெளிச்சமும், சாராயக் கடைகளும்,
செக்குமேடும்- பணத்திற்கு உடலைத் தரும் பெண்கள் நவீனச் சேரி- வாழ்க்கையைச் சொல்லித்
தந்து, அவனது தாயை மன்னிக்கும் பக்குவத்திற்குத் தயார்ப் படுத்துகிறது. சிறுவன் ஆறுமுகம்,
ஒரு யுவனாக மாறும் காலத்தைத் தனது காலமாகக் கொண்டுள்ள நாவல், ஆறுமுகம் பற்றிய நாவலா..?
‘இனிமே என்னை அரிசின்னு அள்ளிப் பாக்கப் போறாங்க, உமின்னு
ஊதிப் பாக்கப் போறாங்க? பனைமரத்தில போயி நெயலுக்கு ஒதுங்கின கதயா ஆயிப் போச்சே எங்கதே..
? எனக் கதறி அழுது, தேடி ஓடி, தன் மகன் ஆறுமுகத்திடமே தன் உடலைத் தர நேரும் தருணத்தில்
தன் விதியை நொந்து, அந்தக் குற்றவுணர்வு தரும் உந்துதலில் தூக்குப் போட்டுச் செத்துப்
போகும் முடிவுக்கு வரும் தனபாக்கியத்தின் கதையா இந்த நாவல்?
இல்லையென்றால் , பாக்கியம், சின்னப்பொன்னு, பொற்கொடி, வள்ளி,
பிரேமா, தங்கம், அபிதா, தங்கமணி, லட்சுமி, மலரு, வசந்தா எனப் பலவிதமான பெயர்களில்-
உண்மைப் பெயர்களோடும் மாறும் பெயர்களோடும் - வாழ நேர்ந்த செக்குமேட்டின் கதையா..?
ஒரு நாவல் கட்டியெழுப்பும் உலகம் அதன் காலத்தின் நகர்வாக
அமையும் அல்லது அதன் கதாமாந்தர்களின் மன மோதல்களாக விரியும். அல்லது கதாமாந்தர்களுக்கும்
அவை வாழும் காலத்திற்குமான இயங்குபரப்பாக உள்ள வெளியாக அமையும். இந்தக் காலம், கதை
மாந்தர், வெளி என்ற மூன்றின் ஊடாகவே படைப்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. இம்மூன்றும்
சரிவிகித சமத்தில் அமையும் போது வாசகனிடத்தில் கேள்விகள் குறைந்து போய், படைப்பு எழுப்பும்
விசாரணைகள் மேலெழும்பி விடும். மூன்றில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயலும்
பொழுது வாசகனும் அதுசார்ந்து அப்படைப்பை வாசித்து அர்த்தப்படுத்திக் கொள்வது நடந்து
விடும்.
ஆறுமுகம் நாவலை இப்பொழுது திரும்பவும் வாசிக்கும்போது செக்குமேடு
தன்னை முன்நிறுத்தி வாசிக்கும்படி வேண்டுகிறது. தனபாக்கியம், இளம் வயதிலேயே கணவனையும்,
செல்லமாக வளர்த்த தகப்பனையும் இழந்து மகன் ஆறுமுகத்துடன் அனாதையாக்கப்பட்ட துயரமும்
நாவலில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. அதேபோல ஆறுமுகத்தின் இளம் பருவ ஓட்டம், பார்த்த
வேலைகள், பழகிய மனிதர்கள், திருப்பிப் போட்ட வாழ்க்கை என அதுவும் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது.என்றாலும்
இரண்டாவது வாசிப்பில் செக்குமேடு தான் வாசிப்பை ஈர்க்கிறது.
செக்குமேடு - ஒரு நகரத்துச் சேரி. கிராமங்களில் தலித்துகள்
வாழ்வதற்கென்று ஒதுக்கப்படும் சேரிகளை விடவும் அவலமானது. மனிதர்களின் நடமாட்டம் அற்றதான
பகல் வேளைகளையும், மனிதர்கள் நிரம்பியதான இரவுகளையும் கொண்ட செக்குமேட்டில் வாழ நேர்வதைப்
பெருமையாகச் சொல்லிக் கொள்ள இயலாது. அப்படியான வாழ்க்கைக்குள் அவர்கள் வாழ நேர்வதும்
வாழ வைப்பதும் நிர்ப்பந்தத்தின் விளைவுகள்.
நாகரிக சமுதாயமெனச் சொல்லிக் கொள்ளும் நமது சமூகம் மறைத்துக் கொள்ளும் அவல முகங்களின் அடையாளங்கள்
அவை. இந்த அவலத்தின் ஊடே மனுஷிகளும் மனிதர்களும் வாழ நேர்ந்துள்ளது என்பதை இமையம் சித்திரித்துள்ள
விதம் வலியோடு கூடிய வாசிப்பை வேண்டும் தன்மையுடையது.
ஆறுமுகம் என்ற நாவல் தனக்கான பின்புலமாகப் பூந்துறை, ஆரோவில்
( சர்வதேசக் கிராமம்), பாண்டிச்சேரி என்ற வெளிகளைக் கொண்டிருக்கிறது என்றாலும் நாவல்
முழுவதும் பாண்டிச்சேரி நகரத்துச் செக்குமேட்டில் நிகழ்கிறது என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றன
இமையத்தின் விவரிப்புகள். நாவலின் பரப்புக்குள் செக்குமேட்டுப் பெண்களின் வாசம் - அவர்கள்
பருகும் நாட்டுச் சாராயமும், மேல்நாட்டுச் சரக்கும், மீன்கறியும், அவர்களின் மாமாக்கள்
தரும் அடிகளும் உதைகளும் வசவுகளூம் , தேடிவரும் மனிதர்களின் பயமும் அலட்டலும் என செக்குமேடு
நாவலில் வார்த்தைகளாக விரிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் என்ற இளைஞனை வைராக்கியம் நிரம்பிய
வாலிபனாக்கிய செக்குமேடுதான் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும்படி கற்றுத்
தருகிறது. தனபாக்கியம் செய்த குற்றத்திற்குத் தண்டனை மரணம் தான் என அவளை முடிவு எடுக்கும்படி
தூண்டிய வெளியும் செக்குமேடு தான். இந்த செக்குமேட்டைக் குறித்த விவரங்களும், அதன்
மனிதர்கள் குறித்த இயல்பு நிலைச் சித்திரங்கள் சிலவற்றைக் காணலாம்.
‘‘பெண்கள் எல்லாரும் பார்ட்டி பிடிப்பதில் அக்கறையாக இருந்ததால்
இந்தச் சத்தத்தை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் பணம் பார்ப்பதில் தான்
எண்ணமிருந்தது. அதோடு இதுபோன்ற பேச்சுகள், கத்தல்கள், சண்டைகள் எல்லாம் தினமும் சாதாரணமாக
நடக்கக் கூடியதுதான். சண்டையில்லாத நாளே அந்த இடத்திலோ செக்குமேட்டிலோ இருக்காது. காலையில்
வெளிக்குப் போக ஒதுங்கிய சிறுபிள்ளைகள் தான் பிணத்தைக் கண்டனர்.’’ [ ப.130]
‘‘கடைகடையாக ஐந்தாறு பையன்கள் பார்ட்டி பிடிக்க அலைந்து
கொண்டிருந்தனர். பிரேமாவும் கடைகடையாகச் சென்று மூன்று நான்கு ஆட்களைத் தொடர்ந்து நச்சரித்து
கெஞ்சிக் கேட்டுப் பார்த்துவிட்டுப் பாக்கியத்திடம் வந்து ‘ ரெண்டு தோச கொடு, பார்ட்டி
மடங்குனதும் துட்டு தாரன்’ என்று கேட்டாள் அவள். வந்த சிறிது நேரத்திலேயே அவளைத் தேடிக்
கொண்டு ஒரு சிறு பெண் ஓடி வந்தாள். ‘வாக்கா, பார்ட்டி போயிடப்போவுது. நைட்டு முயிக்கக்
கேக்குறான்.நீயே பேசிக்க.. அந்த ஆளுகிட்ட ஓடியா..’ என்று இழுத்ததும் பிரேமா தோசையைக்
கூடத் தின்னாமல் அந்தப் பெண்ணுடன் குடிசைப் பக்கம் ஓடினாள்.’’
‘‘முதல் ஆட்டம் சினிமா விட்டதும் கூட்டம் சற்றுப் பெருத்தது. அந்த நேரத்துக்காகவே காத்திருப்பதுபோல செக்குமேடு எப்போதையும் விடச் சுறுசுறுப்படைந்து ஆவிகளின் உலகமாக மாறி இயங்கியது. ஒவ்வொருவரும் விலங்காய் மாறிச் செயல்பட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் கூட்டம் சரியத் தொடங்கியது.’’ [ பக்.155-156]
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத முடிவுகளை எடுத்து
விடுகிறார்கள். கிராமத்தில் வாழ்ந்த போது ஆண்டையின் மகளாக அறியப்பட்டவள் வசந்தா. நாயுடு
சாதிப்பெண். ஆறுமுகத்தின் மீது தயக்கமின்றிப் பரிவு காட்டுகிறாள். ஆனால் ஆறுமுகமோ விலகி
விலகிச் செல்கிறான். சாதிப்படி நிலை சார்ந்து பழிவாங்கும் வாய்ப்புக்கள் இருந்தும்
அவளைத் தொடுவதில்லை. செக்குமேட்டில் பெண்ணுடல்களின் அருகாமையும் உடல் உறவுக்கு மறுப்பின்மையும்
இருந்த போதும் ஆறுமுகம் ஒரு பெண்ணையும் தொடுவதில்லை. ஆச்சரியம்தான். இறுதியில் அவன்
நெருங்கிய பெண் அவனது தாய். அதுவும் ஒற்றைத் தீக்குச்சி வெளிச்சத்தில் சோகம் கப்பிய
முகத்துடன், இந்நிகழ்வினைத் திடீர்திருப்பம் என்று சொல்வதைவிட அதிரடித் திருப்பம் என்று
தான் சொல்ல வேண்டும். தன் மகனிடமே தன் உடலைத் தரும்படியான நெருக்கடியான கட்டத்தை நினைத்து
தனபாக்கியம் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொள்வதும் கூடத் திடீர்த் திருப்பம்
தான்.
இத்தகைய தீடீர் திருப்பங்களின் வழியும், பாத்திரங்களின்
வழியும் இமையம் தனது ஆறுமுகத்தைப் புனிதனாக முன்னிறுத்தியுள்ளார் என்ற விமரிசனங்கள்
வந்ததுண்டு [ராஜ்கௌதமன்,காலச்சுவடு] என்றாலும் படைப்பாளியின் செய்நேர்த்தி சார்ந்த
முன் முடிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதும் படைப்பு சார்ந்த உண்மை களுள் ஒன்று. பொது
வெளியில் காரண காரியங்களற்ற தங்கள் முடிவுகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் மனிதர்கள்,
படைப்பு வெளிக்குள் கதை மாந்தர்களின் முடிவுகளுக்குத் தர்க்க நியாயங்கள் எதிர்பார்ப்பது
ஆச்சரியம். தமிழில் பல நாவலாசிரியர்கள் முன் முடிவுகளுடன் தான் தங்கள் படைப்புலகை உருவாக்கிக்
கதாமாந்தர்களை உலவி விடுகின்றனர் என்பதற்கு உதாரணங்கள் காட்ட வேண்டியதே இல்லை.
இமையத்தின் ஆறுமுகம் எழுப்பும் ‘ தாயைத் தண்டிக்கும் மகன்
’ அல்லது ‘ குற்றவுணர்வுகளால் அல்லாடும் அன்னையர்கள்’ என்ற நவீனத் தொன்மத்தை எழுதிய
இரு நாவலாசிரியர்களை நினைவில் கொண்டு வருவோம். இருவருமே தமிழின் மிக முக்கியமானவர்கள்.
ஒருவர் அம்மா வந்தாளை எழுதிய தி.ஜானகிராமன்; இன்னொருவர் உன்னைப் போல் ஒருவன் நாவலை
எழுதிய ஜெயகாந்தன். இவ்விரு நாவல்களிலுமே முன் முடிவுகளுடன் தான் படைப்புலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.ஜானகிராமன் அம்மா அலங்காரத்துக்கு அவள் மகன் தருவது நிராகரிப்பு. தனது தவறுக்கு-
கணவன் இருக்க, இன்னொருவனுடன் உறவு வைத்துக் கொண்ட தவறுக்கு தண்டனை தேவையில்லை; பரிகாரமே
போதும் என நம்பும் அலங்காரத்தின் மனம், மதம் சார்ந்த நம்பிக்கையில் பிடிமானம் கொண்ட
மனம். அக்னிக்கும் நீருக்கும் எல்லாப் பாவங்களையும் போக்கும் வல்லமை உண்டு என்று நம்புகிற
மனம் அவளுடையது. வேதம் கற்ற தன் மகன் அப்பு, அக்னியைப் போல; அவன் தன் அருகில் இருந்தால்
தான் செய்கிற பாவம்- குற்றம் நீங்கி விடும் என நம்பும் மனம். அந்த மனத்தின் நினைப்பு
இப்படி இருக்கிறது.
வேதம் படிக்கணும். அத்யயனம் பண்ணி, அதைக் கரைச்சுக் குடிச்சு
தேஜஸ்வியா ஜொலிக்கணும் அவன். அவன் நெருப்பு மாதிரி வந்து நிற்கிறபோது , யார் வந்து
அவன் முன்னால் நின்றாலும் அவர் மனதில் இருக்கிற கரி கசண்டெல்லாம் பொசுங்கிப் போகணும்.
அவன் ஸ்வாமி மாதிரி ; பிரகஸ்பதி பிள்ளை மாதிரி
[அம்மாவந்தாளில் அலங்காரம் தண்டபாணியிடம்- பக்.88]
இதற்குமாறாக ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவனில் வரும் அம்மா
தங்கம், தனது செயல்பாடுகளுக்குக் காரணங்களைக் கூறக் கூடியவள். தவறெனக் கருதும் தன்
மகன் சிட்டியிடம், தனது வாதங்களை எடுத்து வைத்து நியாயங்களைக் கேட்பவள். அவளது வாதம்,
‘ எம்மேல கோவமில்லேன்னு
சொல்லாதே! நீ எம்மேல கோவப்படறதுக்கும்.. என்னைப் பார்த்து அவமானப் படறதுக்கும் நெசம்மா நானு ரொம்பப் பெருமைப் படுறேன். ஆமாண்டா கண்ணே
, நானு, தட்டிக் கேட்கிறதுக்கு இல்லாம என்னைப் பாத்துக் கோவப்பட ஒரு அண்ணனோ, அப்பனோ
இல்லாம வளர்ந்தவ. எங்கப்பன் ஒரு பயந்த ஆளு.. தலையில தட்டிக் கையில குடுத்தா வாங்கி
வாயில போட்டுக்கும். அதனாலேதான் என் நடத்தையெப் பாத்து அவமானப்பட யாருமில்லேன்னு இஷ்டப்படி
நடந்து கெட்ட பேரெடுத்தேன். அந்த வயசிலயே ..ம். இன்னா பண்றது? அப்பிடி அவமானப்பட்டுத்தான்
உன்னைப் போல ஒருத்தனை- ரோசக்காரனைப் பெத்தேன். .’’
[உன்னைப்போல் ஒருவனில்
தங்கம் தன் மகன் சிட்டிபாபுவிடம் - ப 188]
என அமைந்திருக்கிறது. இமையத்தின் அம்மா- ஆறுமுகம் நாவலில் வரும் அம்மா- தனபாக்கியமோ
பாவத்தின் சம்பளம் மரணம் என நம்புகிறவளாக இருக்கிறாள். தான் செய்ததற்குத் தண்டனை தற்கொலைதான்
என நம்பிய அவள் தன் மகனைக் கண்டு , எல்லாவற்றையும் சொல்லி விட்டுச் சாக நினைத்துக்
காத்திருந்தவள். அவள் சொல்கிறாள்;
இந்தக் கண்ணால ஒரு தடவையாச்சும் உன்னைப் பார்க்கணும்னு
தான் உசிரோட இருந்தன். உங்கிட்டவே உம் பேரச் சொல்லிக் காட்டணும். உன்னைப் பார்த்துக்கிட்டே
சாவணும்னு எனக்கு மனசுல ஒரு ஆச.சட்டியில ஒட்டின கரியா உன் காலடியில கெடக்கத்தான் தவம்
பண்ணுனன்.என்னை விட்டுட்டு ஓடுன அன்னைக்குத் தான் பொம்மனாட்டியா நான் கடைசியா சோறு
தின்னது. அதுக்கு மொத ராத்திரி உங்கூட தூங்குனதுதான் பொம்மனாட்டியா நான் கடைசியா தூங்கன
தூக்கம். இப்ப எங்கண்ணு முன்னால சாமியாட்டம் குந்தியிருக்கிற, இன்னக்கி ராத்திரிக்குத்
தான் நான் தூங்கப் போறேன். எங்கண்ணு தூங்கி எம்மானோ காலமாயிடிச்சி.. உடம்ப நம்புனன்.
அதுதான் நானுன்னு இருந்தேன். அது என்னெ பீயப் பொறுக்க வச்சிடிச்சி. உடம்பில இருக்கிற
காத்த வெளியத் தள்ளி நிறுத்தறது கஷ்டமில்லன்னு உங்கப்பன் செத்த அன்னிக்கே தெரிஞ்சு
போச்சு..
[தனபாக்கியம்,
தன் மகன் ஆறுமுகத்திடம் அவளது தற்கொலைக்கு முந்திய நாள்- ஆறுமுகம் .ப.
203-204] இந்த மூன்று அம்மாக்களின் முடிவுகளும்
ஓரோர் விதத்தில் முன் முடிவுகள் தான். அம்முன் முடிவுகள் படைப்பாளிகளின் சமூகப்பார்வை சார்ந்த முன் முடிவுகள். அம்முன் முடிவுகளைத்
தங்கள் கதைமாந்தர்களிடம் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இம்மூவருக்குள்ளும் செயல்பட்டது
இந்திய சமூக இயக்கத்தின் நகர்வுகள் சார்ந்த முன் முடிவுகள் தான் என்று கூடச் சொல்லலாம்.
அம்மா வந்தாளை எழுதிய தி. ஜானகிராமனிடம் செயல்பட்டது பிராமணிய நம்பிக்கை சார்ந்த
மனவினை. ஆறுமுகத்தில் இமையத்திடம் செயல்படுவது குற்றத்திற்குத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் - சாதிப்படி
நிலையில் கீழே வைக்கப்பட்டவர்களின் உளவியல். உன்னைப்போல் ஒருவனில் ஜெயகாந்தனிடம் இருந்தது மாற்றிப் பார்த்து
விடலாம் என்ற தர்க்க அறிவு சார்ந்த உளவியல். நடப்பியல் சார்ந்து எழுதும் படைப்பாளிகளிடம்
இத்தகைய வேறுபாடுகள் காணப்படுவது. அவர்களின் சமூகம் மற்றும் படைப்பு நோக்கு சார்ந்தவைதான்
எனக் கொள்ளலாம். இதன் மறுதலையாக அவர்கள் படைத்த படைப்புலகின் வாழ்க்கை விதிகளும் அப்படித்தான்
இருந்தன என்றும் சொல்லலாம்.
=====================================================
- புதியகோடாங்கி,
செப்டம்பர்,2005 வந்த கட்டுரையின் திருந்திய வடிவம்
கருத்துகள்