சாதி -சமயம் - சட்டமன்றத்தேர்தல்

 இதுவரையிலான தமிழகத் தேர்தல்களில் பணமும் சாதியும் மட்டுமே மேலோங்கிய அலகுகளாக இருந்தன. இந்தமுறை சமயமென்னும் இன்னொரு அலகு தமிழ்நாட்டுத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட இருக்கிறது.அதற்கான அறிகுறிகள் வேகமாக நடக்கின்றன. சாதிகளின் திரட்சியும் சமயப்பூசல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தலாக மாறப்போகிறது தமிழகத்தேர்தல். அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என இப்போது உறுதியாகச் சொல்லமுடியாது. வரப்போகும் சட்டமன்றத்தேர்தல் சித்தாந்த எதிரிகளுக்கிடையே நடக்கப்போகும் போட்டி எனச் சொல்லப்படுவது ஒரு பாவனை மட்டுமே.

சாதிப்பூசல்களை விடச் சமயப்பூசல்கள் ஆபத்தானவை. இந்தியாவில் ஒவ்வொரு சாதியும் குறிப்பிட்ட வட்டார அடையாளம் கொண்டவை. மக்களாட்சி வாக்கு வங்கி அரசியல் தேவைக்காக ஒரு மாநில அளவிலான சொல்லாடல்களை நடத்தும்போது ஒற்றை அடையாளத்தை முன்வைத்து பெருங்கூட்டமாகக் காட்டிக்கொண்டாலும் சடங்குகள், நம்பிக்கைகள், குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள் எனச் சொல்லாடும்போது வெளிகள் சுருங்கிச் சுருங்கிக் கடைசியாக ஒரு கிராமத்தின் எல்லைக்குள் நின்றுவிடும்.

இதற்கெதிரானது சமயப்பூசல்கள். இந்து என்ற சமயம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குப் பின் உருவான சமயம் என்று அறிவார்த்தமாக வாதிடலாம். ஆனால் பெருந்தொகையான மனிதர்கள் இந்து அடையாளம் பாதுகாப்பானது என நம்பத் தொடங்கி விட்டார்கள். அந்த அடையாளத்திலிருந்து விலகிவந்தால் எந்தப் பேரடையாளத்தைத் தனதாக்கிக் கொள்வது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. பௌத்தப் பேரடையாளத்தை முன் வைத்தார் அறிஞர் அம்பேத்கர். அப்பௌத்தத்தையும் உள்வாங்கிக் கொள்ள வைதீக இந்து சமயம் கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது.

தமிழக வரலாற்றில் பக்தி இயக்கக் காலத்திலேயே முதன்மையான சமயப் போக்குகளாக ஆறு முக்கியமான சமயப் பிரிவுகள் இருந்தன. அவ்வாறும் ஒரு சமயம் என்ற கருத்தும் இருந்தது. ஆறு போக்குகளையும் அகச்சமயங்கள் எனக் குறிப்பிட்டுப் பேசும் சொல்லாடல்களைத் தேவாரப் பாசுரங்களிலும் அவற்றிற்கான உரைகளும் முன்வைக்கின்றன. அகச்சமயங்கள் என்ற சொல்லாடல்கள் போலவே புறச்சமயங்கள் என்ற எதிரிணைகளும் சொல்லப்படுகின்றன. அப்போது பௌத்தமும், சமணமும் புறச்சமயங்கள்.

தமிழகத்தில் சைவ சமயம் - சிவனையும், வைணவம் - திருமாலையும், சாக்தம் - சக்தியையும், காணாபத்தியம் - கணபதியையும், கௌமாரம் - முருகனையும், சௌமாரம் - சூரியனையும் வழிபடு தெய்வங்களாகக் கொண்டிருந்தன. இவ்வறுவகைப் பெருமரபுகள் தவிர ஊர்த் தெய்வங்களை- காவல் தெய்வங்களை-குலதெய்வங்களை மட்டுமே தெரிந்த- வணங்கும் மனிதத் திரள்களும் தமிழ்நாட்டில்/ இந்தியாவில் இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விளக்கிப் பேசி கொள்ளுவன கொள்ளவும் தள்ளுவன தள்ளவும் கற்பிக்க வேண்டும். கடவுள்/ சமயங்களின் இடம் பற்றி பேசவேண்டும். அதைவிடுத்து மொத்தமாக வேண்டாம் எனப்பேசும் நாத்திகம் திரள்மக்களை விரட்டவே செய்யும். பழைய அக/புறச்சமயங்கள் சாராமல் புதிய புறச்சமயங்களான கிறித்தவ, இசுலாமியம் சார்ந்த நபர்கள்/ நிறுவனங்கள் விமர்சன வெளிகளை உருவாக்கித் தரும்போது எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும். அவற்றை ஆதரிப்பதான பாவனைகளும் இந்தத்தேர்தலில் மிகப்பெரிய கேள்வியைச் சந்திக்க உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்