ஆகஸ்டு - 16 முகநூல் நினைவூட்டல்கள்

 நாம் எழுதிவைத்த நாட்குறிப்புகளைத் திரும்பவும் வாசிப்பது ஒரு அனுபவம். ஏதாவது ஒரு நாளைத் திறந்து வைத்துக்கொண்டு அன்றும் அதற்கு முன்னும்பின்னும் நடந்த நிகழ்வுகளை அசைபோடும்போது நிகழ்காலம் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அப்படியொரு வாய்ப்பை முகநூலின் நினைவுத்தூண்டல்கள் செய்கின்றன. ஒவ்வொருநாளும் உனது நினைவுகள் -Memories -எனத் திருப்பிக் கொண்டுவரும் நினைவுகள் நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவுகின்றன.

2010, பிப்ரவரியில் முகநூலில் இணைந்தது தொடங்கி முகநூலுக்காக எழுதியவை பல ஆயிரம் சொற்களாக இருக்கக்கூடும். .எழுதுவதற்காகவும் மற்றவர்கள் எழுதியனவற்றை வாசிப்பதற்காகவும் நட்புகளோடு உரையாடுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் முகநூலில் கழித்த நேரங்கள் கணிசமானவை. அவற்றை வீணான காலம் என்று நினைக்க முடியவில்லை. எப்போதும் ஒருவித விமரிசனத் தொனியோடு எழுதிய அவ்வெழுத்துகள் புதிய நட்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. பழைய நட்புகளில் பலரை எதிரிகளாகவும் ஆக்கியிருக்கின்றன.

இன்று காலை சில ஆண்டுகளின் முன் பதிவுகளைக் காட்டியது முகநூல். வரிசையாகப் பார்த்துக்கொண்டே போனால் தொடர்ச்சியாகப் பின்னோக்கி ஆறு ஆண்டுகள் -2014 முதல் இந்தத் தேதியில் -ஆகஸ்டு 16 - ஏதாவது எழுதியிருக்கிறேன். அதற்குப் பின்னால் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டது


ஓராண்டுக்கு முன்/1/16-08-2019 / 

ஓடும் ரயிலில் தான் சந்தித்துக் கொண்டது. எது பிடித்திருக்கிறது என்று சொல்லக் கூடத் தோன்றியதில்லை. உடல் சார்ந்த அழகு பற்றிய பிரமைகள் எதுவும் இல்லை. பார்க்கின்ற வேலைகள் எதையும் மறைக்கின்ற ஏமாற்றும் எண்ணங்களும் இல்லை. மனம் தளர்ந்து உடல் களைப்பைப் போக்க நினைத்து விரும்பிக் கேட்டபோது தலை சாய்க்க மடி தந்தவள்.

தனித்திருந்த கணத்தில் முத்தமிட்டுக் கொள்ளும்போது புறச்சூழல் எவை குறித்தும் நினைத்துப் பார்க்காத ஆண் மனமும் பெண் மனமும் காதலாக மாறும்போது எல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இந்தியச் சமூகத்தில் இரு மனங்களின் இணைவு மட்டுமே காதல் செய்யவும் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போதுமானவை அல்லவே. "நீங்க வேற; நாங்க வேற" என்ற பேச்சின் தொடக்கம் உண்டாக்கும் அச்சமும் பயமும் ஒருவர் மீது கவிழ்ந்துவிட்டால் அக்காதல் தோல்வியில் முடிவதைத் தவிர வேறாக மாற வாய்ப்பே இல்லை.

நீயில்லாமல் நான் வாழ முடியாது என்று ஆண் -மிதுன் பிடிவாதம் செய்யும்போது ஸ்டெல்லா டீச்சரின் பதில் என்னவாக இருக்கும்? தேவாலயத்தில் பாவ மன்னிப்புக் கேட்டு வாழ்க்கையைத் தொடரலாம்தான. ஆனால் அங்கே ரட்சகர் மட்டுமே இல்லையே. ரட்சகரிடம் செல்லவிடாமல் வழி மறிக்கும் சமூகமும் மத அமைப்புகளும் உள்ளனவே. முடிவு எடுக்க முடியாத ஸ்டெல்லா தற்கொலை செய்து கொண்டாள் என்று வா.மு.கோமு எழுதவில்லை. அவள் சாத்திக்கொண்டு திறக்காமல் இருக்கும் சமையல்கட்டு பல்லி கொட்டிய 'உச்' சுக் கொட்டல் அதை உணர்த்துகிறது.

மிகை உணர்ச்சிகள் வெளிப்படாத காதல் கதை. தற்கொலைகளைத் தூண்டும் பாகுபாடுகள் கொண்ட சமூக இருப்பின் மீதான விமரிசனம். இந்த மாத உயிர்மையில் வாசித்துப் பார்க்கலாம்.

2/ தமிழாற்றுப்படை- ஆய்வல்ல; அறிமுகங்கள்
========================================
இலக்கியத்தின் சில கூறுகளை வெகுமக்கள் தளத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்ற வகையில் பாடல்கள் என்ற வடிவம் எளிய வடிவமாக இருக்கிறது. ஓரடியிலோ, ஒவ்வொரு அடியிலுமோ சொற்களை அடுக்கும்போது இசைத்தன்மையை உருவாக்கும் திறன் பாடலாசிரியர்களின் தனித்திறன். இசைத்தன்மையை உருவாக்கும் வகைப்பாடுகளைத் தொல்காப்பியம் வண்ணம் என்கிறது.34 செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படும் வண்ணம் 20 வகையானது இலக்கணச்சூத்திரம். வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. ( தொல். செய்.204 ). வண்ணம் சொல்லின் நிறங்கள். இவ்வண்ணமும் வர்ணமும் ஏறத்தாழ ஒருபொருட்கொண்ட சொற்களே. பிரித்தறியும் வேறுபாடுகள் கொண்டன.

வண்ணங்கள் வாசிப்பைத் தள்ளிவைக்கச் செய்து செவிவழியாக மனித மூளைக்குள் செல்லும் திறனை இலக்கியப்பனுவலில் உருவாக்குகின்றன.தான் வாசிக்கும்போதே ஒருவர் இந்த வண்ண வேறுபாடுகளை உணரமுடியும். இன்னொருவரை வாசிக்கச் செய்தும் உணரமுடியும். இத்தன்மை கூடிய சொற்களும் சொல்லடுக்குகளுமே பாடல்களாகின்றன. ஒலித்தன்மை கூடிய சொல்லடுக்குகளை உருவாக்குபவர்கள் நடனம், நாடகம் போன்ற நிகழ்த்துக்கலைகளுக்கு முதுகெலும்பாக இருக்கிறார்கள். இவ்விரு நிகழ்த்துக்கலைகளையும் அதிகமும் உள்வாங்கியுள்ள இந்திய சினிமாவுக்கும் அவர்களின் பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.

பெரும் கூட்டத்திற்குக் கருத்துச்சொல்லும் வாய்ப்பு பாடல் வடிவத்தைத் திறமையாகக் கையாளத்தெரிந்த பாடலாசிரியர்களுக்குண்டு. பாடல் எழுதுவதும் கவிதை எழுதுவது அதனதனளவில் தனித்தன்மை கொண்ட எழுத்துப் பணிகளே. ஆனால் கவிதை எழுதுவதுவதைவிடப் பாடல் எழுதுவது குறைந்த திறன் கொண்டது என நினைக்கும் திரைப்படத் தொழில் பாடல் எழுதுபவர்களைக் கவிஞராகச் சொல்லிக்கொள்கிறது. அதனை ஏற்று வெகுமக்கள் ஊடகங்களில் செயல்படுபவர்களும் திரள்மக்களும் செல்கின்றனர். தமிழில் பாட்டெழுதிய மருதகாசி, புலமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்களைப் பாடலாசிரியரா? கவிஞரா? என அடையாளப்படுத்துவதில் எப்போதும் முடிவுகள் எட்டப்பட்டதில்லை. அந்தத் திணறல் இப்போது பாடல் எழுதிக்கொண்டிருக்கும் வைரமுத்து தொடங்கிச் சிநேகன், பா.விஜய், தாமரை, உமாதேவி முதலா வெகுமக்களுக்கு

 

 ஈராண்டுக்கு முன்-1 /16-08-2018/

 

திருநெல்வேலி-தூத்துக்குடி தங்க நாற்கரசாலைத் திட்டம் தான் தமிழகத்தின் முதல்புள்ளி. என் வீட்டருகே நடந்த நிகழ்வு. இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக வாஜ்பாய் வந்தார்.


ஏற்கத் தக்க வலதுசாரி அரசியல்வாதி . நினைத்துக் கொள்ள வேண்டிய ஆளுமை.

2/ கலங்காத நதியின் உறுமீன்
========= ================
உள்நாட்டு மீன்பிடிப்புக்கு உகந்த காலமல்ல இது. பொழுதுபோக்காக அதைச் செய்யவிரும்பும் ஒருவர் நல்ல தூண்டிலோடு செல்லலாம்.கரைகளில் அமர்ந்து தூண்டிலை வீசிக்காத்திருக்கலாம். புழுவைத் தின்னும் மீன்கள் வளை ஊசிகளை ஒதுக்கித் தூண்டில் புழுவை மட்டும் ருசித்து விளையாட்டுக் காட்டலாம். நன்றாகப் பொழுதுபோகும்.

எனக்கு மீன்பிடித்தே ஆகவேண்டும் என்று கிளம்பும் நபர் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் படகொன்றை எடுத்துக்கொண்டு நீர்ப்பரப்பிற்குள் செல்ல வேண்டும். ஆழமான நீர்ப்பரப்பில் மீன்பிடிக்க உதவும் வலைகளைக் கையாளும் திறன் தனக்கு இருக்கிறது என நம்பிச்செல்லும் அவருக்கு எச்சரிக்கையும் வேண்டும். இல்லையென்றால் பெரும் புறாக்கள் படைக்க கவிழ்த்துப் போடும். சிறிய வலையோடு சென்ற அவர் மேலேவந்து மூச்சுவாங்கும் சின்னச்சின்ன மீன்களைப் பிடித்துத் திரும்பிவரலாம். அதில் திருப்தி அடைய வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்ப்பெருக்கு. மலைப் பிரதேசங்களில் மழை பெய்வதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. நதிகளிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர்ச்சுழல். நீர்நிரம்பும் பெருவெளிகள் தாண்டி சிறுவெளிகளான ஏரிகளிலும் கண்மாய்களிலும் குளங்களிலும்கூட நீர்ப்பரப்பு தளும்பி நிற்கிறது.
இந்த நேரத்தில் குளங்களையோ குட்டைகளையோ கலக்கி மீன் பிடிக்கலாம் என நினைப்பது முட்டாள்தனமானது.

தமிழகத்தின் அரசியல் மீன்களும் உறுமீன்களாக இருக்கின்றன. கலங்கிய நதியாக மாறாத கருத்தியல் ஓட்டம் அதன் வெளிப்பாடு. அங்கு வருமீன்களைக் கையாளலாம். உறுமீன்களைக் கவ்விப்பிடித்தல் எளிதல்ல.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் -1/16-08-2017/ 

ஆரம்பத்தில் தகவல்பிழைகள், மொழிப்பயன்பாடு பற்றியெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன். பெரும்பாலும் கண்டுகொள்ளப்பட்டதில்லை. ஒரு தலையங்கம் குறித்து எழுதியபோதுகூட தவறாக எழுதியதாக ஒத்துக்கொள்ளவில்லை. அதனை வாசகர் கடிதமாக வெளியிட்டார்கள். . எந்தத் தவறுக்கும் வருத்தம் தெரிவிக்கும் பழக்கம் அதன் ஆசிரியர் குழுவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தி இந்துவின் கட்டுரைகளில், செய்திகளில் இடம்பெற்ற தகவல் பிழைகளைச் சுட்டிக் காட்டினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்ததால், இப்போதெல்லாம் சுட்டிக்காட்டுவதை நிறுத்திவிட்டேன். ”வாஞ்சிநாதன் - பசும்பொன் தேவர் “ பற்றிய கட்டுரையைத் ”தகவல்பிழை” என்ற வகைப்பாட்டில் சேர்க்கமுடியாது. எதனையும் எப்படியும் எழுதுவோம் என்ற போக்கின் வெளிப்பாடு அது.

2/

ஐரோப்பிய நவீனத்துவத்தை உள்வாங்கி இலக்கியப்பிரதிகளை எழுதியதில்/ எழுதுவதில் இரண்டுவிதமான போக்குகள் தமிழில் உண்டு. பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற அரசியல் சொல்லாடல் வேறுபாட்டை எழுத்திலும் பார்க்க முடியும்; விவாதிக்கமுடியும். திராவிட இயக்க எழுத்தாளர்கள் நவீனத்துவத்தை சமூகமாற்றத்தின் காரணியாகப் பார்த்து, அதை உள்வாங்கிய பாத்திரங்களை எழுதினார்கள். அப்பாத்திரங்கள் சமூக, பொருளாதார முரண்பாட்டில் வெளிப்படையான அடையாளங்களோடு இருந்ததால் புனைகதைகளின் விவாதங்களும் வெளிப்படையாக இருந்தன. அதனால் அவ்வகை எழுத்துகளை எழுதியவர்களின் நிலைப்பாடும் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதேநேரத்தில் பிராமண எழுத்தாளர்கள் நவீனத்துவ விவாதத்தைப் படைப்பின் உரிப்பொருளாக - உள்ளடக்கமாக நினைத்து உள்வாங்கினார்கள்; அவ்வுள்வாங்கல், இந்தியச் சமயமரபோடு முரண்படும் அகவுணர்வுசார்ந்த முரண்பாடாக வெளிப்பட்டதால் பூடகமாகவே வெளிப்பட்டன. பூடகமாக வெளிப்படுவதையும் நிலைப்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும் நவீனத்துவத்தின் அடையாளமாகவும் முன்னிறுத்தப்பட்டது. அதனை நிலைநிறுத்துவதற்காகவே க.நா.சு. சி.சு.செ. போன்றவர்களே விமரிசகர்களாகவும் மாறினார்கள். எழுதினார்கள். அரசியல் இயக்கங்கள், கட்சிகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பெற்ற நாவல்களை இலக்கியமல்ல என்று வகைப்படுத்தியவர்களே, “ தமிழில் அத்தகைய நாவல்கள் இல்லையே” என கேள்வியெழுப்புவதை எதில் சேர்ப்பது? டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதும் சாருநிவேதிதாவின் ஆதங்கத்தில் உண்மையிருப்பதாகக் கூடத் தோன்றவில்லை. விடுதலைப்போராட்டப் பின்னணியில் அதற்குள் இருந்த காந்தியப்பின்னணி மற்றும் திலகர் அணிப்பின்னணி கொண்ட நாவல்கள் 20 -க்கும் மேல் இருக்கின்றன. திராவிட இயக்கப்பின்னணியிலும், பொதுவுடைமை இயக்கப் பின்னணியிலும் அதே அளவு எண்ணிக்கையில் இருக்கின்றன.
இவ்வியக்கங்களை உடன்பாட்டு நிலையில் ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்களின் நாவல்கள் மட்டுமல்ல; எதிர்மறையாகப் பார்த்து விமரிசிக்கும் புனைகதைகளும் இருக்கின்றன.

3/- ஆரம்பத்தில் தகவல்பிழைகள், மொழிப்பயன்பாடு பற்றியெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பெரும்பாலும் கண்டுகொள்ளப்பட்டதில்லை. ஒரு தலையங்கம் குறித்து எழுதியபோதுகூட தவறாக எழுதியதாக ஒத்துக்கொள்ளவில்லை. அதனை வாசகர்கடிதமாக வெளியிட்டார்கள். . எந்தத் தவறுக்கும் வருத்தம் தெரிவிக்கும் பழக்கம் அதன் ஆசிரியர் குழுவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தி இந்துவின் கட்டுரைகளில், செய்திகளில் இடம்பெற்ற தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்ததால், இப்போதெல்லாம் சுட்டிக்காட்டுவதை நிறுத்திவிட்டேன். ”வாஞ்சிநாதன் - பசும்பொன் தேவர் “ பற்றிய கட்டுரையைத் ”தகவல்பிழை” என்ற வகைப்பாட்டில் சேர்க்கமுடியாது. எதனையும் எப்படியும் எழுதுவோம் என்ற போக்கின் வெளிப்பாடு அது.


4/இளமைமாறாத பாரதமாதா
===========================
நான் பார்த்த கொண்டாட்டங்களில் எப்போதும் மாறாததாக இருப்பது “பாரதமாதா”வின் அலங்காரம் மட்டுமே. பெரும்பாலும் இளம் பெண்ணொருத்தி இடுப்பிலொரு பொன்னிறப் பட்டையோடு, தலையில் ஜொலிக்கும் கிரீடந்தாங்கி, தேசியக்கொடியை உடலின் குறுக்காக நிறுத்தி அசையாமல் நின்றுகொண்டே இருக்கிறாள். சுற்றிநிற்கும் ஆண்களும் பெண்களும் விடுதலைப்போராட்ட காலத்துப் பாடல்களுக்கோ, திரைப்படப்பாடல்களில் இடம்பெற்ற தேசிய உணர்வுப்
பாடல்களுக்கோ துள்ளல் இசையோடு இணைந்து ஆடிக்கொண்டிருந்தாலும் ‘ பாரதமாதா’வாக வேடம்போட்டவள் மட்டும் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டேதான் இருக்கிறாள்.

விடுதலைநாள் கொண்டாட்டங்களை ஈர்ப்புடனும் சடங்காகவும் பற்றோடும் கொண்டாடவேண்டிய கல்வித்துறையில் இருப்பவன் நான். தேசியக்கொடியின் கயிறுகளைச் சுண்டியிழுத்துவிட்டுப் பக்கத்தில் நிற்கும் விளையாட்டு ஆசிரியர், தேசியப்படைப் பயிற்சிப் பொறுப்பாளர் அல்லது அணித்தலைவர் என ஒருவரிடம் கைமாற்றிச்செல்லும் தலைமையாசிரியர்கள், கல்லூரிமுதல்வர்கள்,துணைவேந்தர்கள் எனப் பல முகங்கள் வந்துபோகின்றன. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் ஆட்சி நிர்வாகங்கள் நடத்தும் விடுதலைநாள் கொண்டாட்டங்கள், விருதளிப்பு நிகழ்வுகள், ஊர்வலக்காட்சிகளையும் பார்த்திருக்கிறேன். பல ஆண்டுகள் கலந்துகொள்ளாமலும் இருந்திருக்கிறேன். அதற்கும் காரணங்கள் இருந்தன.

தொடர்ச்சியான கலந்துகொள்ளலில் நான் கேட்ட உரைகளும் உரைகளின் செய்திகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவ்வப்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்களின் மனம் விரும்பும் உரைகளைத் தயாரிக்கும் வல்லுநர்கள் கச்சிதமாகத் தயாரித்துத் தருகிறார்கள். ஊர்வலங்களில் பங்குபெறும் பதாதைகள், கருத்துரு தாங்கிய அலங்காரவண்டிகளும்கூட மாறிக்கொண்டே இருக்கின்றன. . பஞ்சசீலக்கொள்கை முதல் பணமதிப்பிழப்புவரை பார்த்துவிட்டேன். கைத்துப்பாக்கி தாங்கிய வீரன் முதல் அணுகுண்டு வீசிய காட்சிவரை கடந்துபோயுள்ளன. அரசுகளின் மாறும் கொள்கைகளை உள்வாங்கிய தொழில்துறைக் கூடங்கள், போர்க்கருவிகள், பொருளாதார நிலைப்பாடுகளைத் தாங்கியபடி நகர்கின்றன அவற்றில் தலைவர்களின் சாயலில் வேடம் தாங்கிய மாணாக்கர்கள் தேசியக்கொடியை அசைத்தபடி சென்று குறிப்பிட்ட இடத்தில் தங்கள் திறமையைக் காட்டிவிட்டுப் போகிறார்கள். பாரதமாதா மட்டும் எப்போதும் மாறாமல் அதேகோலத்தில் இன்னும் இளமையாகவே இருக்கிறாள். நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்கியவளாகப் பாரதமாதாவையும் கற்பனைசெய்வார்கள் என்ற ஏக்கம் இன்னும் இருக்கிறது

Top of Form

Bottom of Form

 

நான்காண்டுகளுக்கு முன்பு -1 16-08-2016

இந்நூலில் நான் சில பிரதிகளை என்போக்கில் நாடகப்பிரதிகளாக வாசித்திருக்கிறேன். சிறுகதை, கவிதை, வாய்மொழிக்கதை என இவற்றைப் பலரும் வாசித்திருக்கக்கூடும். முதல் முயற்சியாகச் சிறுகதையிலிருந்து நாடகங்களை உருவாக்கலாம் என நினைத்தது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; அதற்கொரு தேவை உண்டானது. 1980 - களில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும் திருநெல்வேலி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம் போன்ற நகரங்களிலும் தோன்றிய நவீன நாடகக்குழுக்களுக்குத் தேவையான நாடகப்பிரதிகள் தேவைப்பட்டன. அதற்கு முன்பு ந.முத்துசாமி, ஜெயந்தன், இந்திரா பார்த்தசாரதி, ஞான. ராஜசேகரன் போன்றோர் எழுதிய நாடகங்கள் சிலவற்றை மேடையேற்றிப் பார்த்த குழுக்கள், அவை பார்வையாளர்களிடம் சென்று சேர்வதில் இருந்த பிரச்சினைகளைச் சந்தித்தன. அதனால், பிறமொழி நாடகங்களை மொழிபெயர்ப்புகளாகவும், தழுவல்களாகவும் பலர் உருவாக்கினார்கள். அதிலிருந்து விலகி, ஏற்கெனவே வேறுவடிவத்தில் அறியப்பெற்ற பிரதிகளை மேடையேற்றத்திற்காக உருவாக்கும் எண்ணம் எனக்கு உருவானது.

இந்த நாடகங்கள் அனைத்தும் பழையனவற்றிலிருந்து உருவாக்கப்பட்டவை யென்றாலும், நாடகப்பிரதி உருவாக்கம் பற்றிய அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைகளைக் கொண்டவை. இதன் மேல் எழுப்பப்படும் விவாதங்களும், விமரிசனங்களும் தமிழ்/ இந்திய/ உலக இலக்கியப் பிரதிகளைக் கொண்டு புதிய நாடகப்பிரதிகளை உருவாக்கத் தூண்டுகோலாக இருக்கும் என்பதும் மறுக்கமுடியாது. தமிழகத்தின் நிகழ்காலச் சிக்கல்களைக் கண்டறிந்து புதிய நாடகப்பிரதிகளை உருவாக்கவும் தூண்டும். அப்படியொரு தூண்டுகோலை ஏற்படுத்தவேண்டும் என்பதும், இவற்றையும் இவைபோன்ற நாடகங்களையும் மேடையேற்றிப் பார்க்கத் தூண்டவேண்டும் என்பதும் முதன்மையான நோக்கம். அத்தகைய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் ஒரு தகவல் தெரிவித்துவிட்டு மேடையேற்றலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
========================================
புத்தகங்கள் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்
வெளியீடு: ஒப்பனை, 2 வாசுகி அடுக்ககம், திருவள்ளுவர் தெரு, வெங்கடேஸ்வரா நகர், அம்பத்தூர், சென்னை

 ஐந்தாண்டுகளுக்கு முன் - 116-08-2015

இன்றைய தமிழ் இந்து நாளிதழின் நடுப்பக்க கருத்துப்பேழையில் எஸ். ஜி.இராமாநுஜலு ,நாயுடுவின் சென்று போன நாட்கள் -தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்' என்னும் நூல் பற்றிய தனது எழுத்தை முழுப்பக்கததில் தந்துள்ளார் சமஸ் . முன்னோடி இதழியலாளருக்கான நன்றிக்கடன் என நினைத்துக் கொண்டேன். ஆனால் மொத்தப் பக்கத்தையும் வண்ணப்பக்கம் போலத் தோன்றும் பின்னணியில் தரவேண்டிய காரணம் தான் தெரியவில்லை. படிப்பதற்குள் கண் படாதபாடுபடுகிறது.

 ஆறு ஆண்டுகளுக்கு முன் -1

16-08-2014

இந்தப் படம் பார்த்தேன் 5
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

முதல் நாளில் ஜிகிர்தண்டாவைப் பார்த்த ஊழ்வினை நேற்றும் வந்து உறுத்தியது. ஊழ்வினைகள் எப்போதும் கெட்டதாகவே இருப்பதில்லை, நல்லூழும் உண்டு எனச் சொல்வர் மேன்மையர். ஊழ்வினையை உள்ளுணர்வு என விளக்குவார் அறிவியலார்.
ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” பார்க்க நேர்ந்ததை நல்லூழ் என்று சொல்வதா? உள்ளுணர்வு என்று சொல்வதா? இது பாதி அது பாதி (50: 50).இப்படம் பற்றியும் விரிவாக எழுத வேண்டும்

புதிய பாதை தொடங்கிக் கச்சடா படங்களை இயக்கி வித்தியாசம் காட்டுவதாகப் பாவ்லா பண்ணிய பார்த்திபனைக் கொன்றுவிட்டு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் புதிதாகப் பிறந்திருக்கிறார் .. இனி அனைவரும் அப்படியே அழைப்பார்களாக!! உரைசால் பத்தினியை மட்டுமல்ல; கலைஞனையும் உயர்ந்தோர் ஏத்துவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்