மையத்திற்கு வெளியே இருந்தவர் தோனி


இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஆரம்ப நிலையிலிருந்தே ஒரு தொழில்முறை விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டின் மையமாக இருந்தவை பெருநகரங்கள். பெருநகரங்களின் விளையாட்டாக இருந்து மெல்லமெல்ல நகர்ந்து உலகமயத்திற்குப் பின் கிராமங்களை நோக்கி நகர்ந்தது. இந்த நகர்வில் மையம் முன்வைத்த விளையாட்டு வீரர்களுக்கு ஊடகங்களின் ஆதரவு இருந்தது. ஆனால் வெகுமக்கள் ஆதரவு குறைவு. ஆனால் ஓரங்களிலிருந்து மையத்தை நோக்கி வந்த வீரர்களுக்கு வெகுமக்கள் ஆதரவு எப்போதும் உண்டு; கொண்டாடியிருக்கிறார்கள் ஊடகங்களும் வல்லுநர்களும் வேறு விதமாகவே எதிர்கொண்டன. அதன் தூக்கலான வெளிப்பாடே மகேந்திரசிங் தோனி.மைய நீரோட்ட ஆதரவாளர்களும் ஊடகங்களும் கிண்டலோடும் கேலியோடும் அவரை ஏற்றுக்கொண்டன. கடுமையான விமரிசனங்களை. விளையாட்டு என்ற நிலையை மாற்றிக் கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் இந்தியத் தொலைக்காட்சிப்பார்வையாளர்களுக்கு வழங்க முடிவுசெய்தபோது முதல் தேவையைப் பூர்த்தி செய்த வீரர் தோனி. தோனிக்கு முன்னால் இத்தகைய எதிர்நிலையைச் சந்தித்த அணித்தலைவர்கள் முகம்மது அஸாருதீனும் கபில்தேவும்.

********

இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்தியச்சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது இந்த அடுக்குநிலை ஆட்டம் கண்டது. பிரிட்டானிய ஆட்சியாளர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும்தான் சமூகத்தின் உச்சம்; அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே நாகரிகம்; அதனைப் பின்பற்றுவதே வாழ்க்கை முறை என இந்தியப் பிராமணர்களே நம்பத்தொடங்கினார்கள். அந்த நம்பிக்கையே அவர்களை ஆங்கில மொழியை வேகமாகக் கற்கின்றவர்களாகவும், ஆங்கிலேயர்களின் கலாரசனையை நாங்களும் பின்பற்றுகிறோம் எனக் காட்டுபவர்களாகவும் ஆக்கியது. அவர்களைப் போலச்செய்யும் மற்ற நடுத்தர வர்க்கத்தையும் மாற்றியது.  இந்தியர்கள் சமஸ்கிருதமயமாதலைக் கைவிட்டு மேற்கத்திய மயத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது.

கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர்,, சிவாஜி படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் டெண்டுல்கரும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், புவனேஷ்வர்குமாரின் பந்து சுழற்சியும் காட்சிகளாகி விட்டன.

எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றிக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. 

ஓர் அணி விளையாட்டில் இருக்க வேண்டிய வேகமும் சுறுசுறுப்பும்   இல்லாத கிரிக்கெட், தொடக்கத்தில் வானொலி வர்ணனை மூலமும், பின்னர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான விளையாட்டாகவும் மாறியதன் பின்னணியில் வெறும் மேற்கத்திய மயமாதல் மட்டுமே இருப்பதாக ஒருவர் மதிப்பிட்டால் அது பெருந்தவறாக ஆகிவிடும். ஏனென்றால் கிரிக்கெட்டைச் சுற்றிப் பல விளையாட்டுக்கள் நடக்கின்றன. அவை சிறு முதலாளிகளின் வியாபார வளர்ச்சி தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சி வரை உதவும் காமதேனுவாக மாறிவிட்டது. நேர்க்காட்சிக்காகச் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கூடும் 60 லட்சம் பேர்களோடு தொலைக் காட்சிகளின் வழியாக பல நூறு லட்சம் கண்களின் களிப்புக்கான காட்சிப் பொருளாகத் தன்னை ஊருமாற்றம் செய்து கொள்ள அனுமதித்தது தான் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிக் கதை. இந்த வெற்றிக்கதைக்குள் உள்ளேயும் வெளியேயும் இருப்பவராக விளங்கிய பெருமை மகேந்திரசிங் தோனிக்கு உண்டு. 

சமஸ்க்ருதமயமாதல் போலவே  பெருநகர மையம் என்பதிலும் மும்பை x மற்ற நகரங்கள் என்ற முரண்பாடு கிரிக்கெட்டில்  எப்போதும் உண்டு. இன்றுவரை அறிவிக்கப்படும் இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அதிலும் உலகமயத்திற்குப் பின் மாற்றங்கள் ஏற்பட்டன. அதனைச் சாத்தியமாகிய பெரும் நிகழ்வு. ஐபிஎல் போட்டிகளின் உருவாக்கமே. ஐபிஎல் போட்டிகள் மகேந்திரசிங் தோனியின் வெற்றியில் பெரும்பங்கு வகிக்கிறது. இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளின் மையமாக இருந்த ஒற்றை வீரர் தோனி. கரடுமுரடான இந்திப்பகுதியான ஜார்க்கெண்டிலிருந்து வந்த தோனி தமிழ்நாட்டு வெகுமக்களின் முழு ஏற்புக்குரியவராக மாறிய சமூக உளவியல் விரிவான ஆய்வுக்குரியது.

மொழிப்பற்றுகொண்ட தமிழ்நாட்டின் அணியாகக் கருதப்பெற்ற (அப்படியில்லை என்பதுதான் உண்மை) சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவராக ஆரம்பம் முதலே தொடர்கிறார். அவ்வணியில் தமிழ்நாட்டு வீரர்களை ஒதுக்கிவைக்கிறார் என்ற குற்றச்சாட்டைப் பலரும் சொன்னாலும் தமிழ்ப் பார்வையாளத்திரள் அதைப் பொருட் படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் இங்கு தமிழ் வீரர்களாக முன்வைக்கப்படும் ஒவ்வொருவரும் தமிழ்த்திரளின் அடையாளமற்றவர்கள்.

காலனியத்துக்குப் பின்னான ஆளுமைகள் - அறிவியல், சமூகவியல், கலை என எல்லாப் புலங்களிலும் கொண்டாடப்படும் ஆளுமைகள்- இரட்டை எதிர்வில் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் எனக் கணிக்கப்பட்டே கொண்டாடப் படுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் மையம் முன்வைக்கும் ஆளுமைகள், மையத்தை எதிர்கொண்டு மையத்துக்கு நகரும் ஆளுமைகள் - என்ற அந்த எதிர்வு வெளிப்படாத எதிர்வாக இருக்கின்றது. மையநீரோட்டம்X விளிம்புநிலை என்ற இந்த எதிர்வு ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறாக இருக்கின்றது.
நிதானமும் வெற்றியை நோக்கிய திட்டமிட்ட நகர்வும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் சாயலைக் கொண்டதாக இருந்ததுகூட தமிழ்த் திரளின் ஏற்புக்குக் காரணம் என நினைப்பதுண்டு. இந்தியாவின் மையநீரோட்டக் கருத்தியலாக இருக்கும் பிராமணிய அடையாளம் அவருக்கு இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதன் ஏற்புக்காகக் காத்திருக்காமல் நகர்ந்துகொண்டே இருந்த தோனியின் தமிழ்நாட்டுத் தொடர்பு இன்னும் இருக்கப்போகிறது என்றே நினைக்கிறேன். சர்வதேசப்போட்டிகளில் தோனி இருக்கமாட்டார்; ஆனால் கிரிக்கெட்டில் அவர் இருப்பார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்