சட்டமன்றத்தேர்தல் : தொடங்கும் ஆட்டங்கள்



சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருக்கின்றன. என்றாலும் கொரோனாவைத் தாண்டிய செய்திகளைத் தேடிப்போகாத அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குத் தேவையான செய்திகளைத் தருவதன் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி நகர்கின்றன. மாநில அரசின் ஆளுங்கட்சியான அ இ அதிமுகவின் முதல் அமைச்சர் மாவட்டத்தலைநகர் தோறும் பயணம் செய்து காட்சிக்கெளியன்; கடுஞ்சொல் அல்லாதவன் என்னும் பிம்பத்தின் வழியாகவும், நெருக்கடியிலும் நிர்வாகப்பணி மேற்கொள்பவர் என்ற அடையாளத்தை உருவாக்குவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறார். செய்யும் செயலைச் சொல்வதற்கான ஆட்களையும் தன்பக்கம் வைத்திருக்கிறார். அதன் முன்னணிப்படையாக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. 

கொளுத்திப்போட்ட திரி வெடியாக வெடித்துக்கொண்டிருக்கும்போதே எதிர்த்தரப்பு வெடிப்பதற்குள் பக்கத்துத் தரப்பிலிருந்து பட்டென்று வெடிக்கிறது பா.ஜ.க.வின் சார்பில். அ இ அதிமுக தேர்தல் களத்திலேயே இல்லை என்பதுபோலத் தோற்றம் உண்டாக்குவதன் மூலம் சீண்டிப்பார்த்த சீனிவெடியின் தீவிரம் பற்றித் தொலைக்காட்சிகள் தொடர்விவாதங்களைத் தொடங்கி விட்டன. ஒவ்வொரு கட்சிக்குள்ளும் முரண்களும் ஆசைகளும் இல்லாமல் இருக்காது. அவையெல்லாம் கிளைக்கதைகள். மையக்கதையின் இலக்கு தேர்தல் அறிவிப்புக்குப் பின்பே தெரியவரும்.

தமிழ்நாட்டு அரசியலில் தொலைக்காட்சி ஊடகங்களைக் கையாளுவதின் வழி மையநீரோட்ட அரசியலைத் தீர்மானிக்க நினைக்கிறது மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. அதற்கு வாய்ப்பளிக்காத தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் பணியாற்றும் ஆளுமைகளுக்கும் நெருக்கடி தருவதின் வழி எளிமையாகக் கையாளக்கூடிய வழிகளைக் கண்டுபிடிக்கிறது. அகற்றும் வேலையைத் தொடங்கி அசைத்துப் பார்த்திருக்கிறது. முதல் விக்கெட்டாக இருந்தவர் நியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரன். ஆனால் அவர் பின் வாங்கிருக்கிறார் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் எனப் பாயக்கூடும். அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஒரு எல்லைக்கு மேல் பயன் தராது என்பதை அதன் திட்டமிடல் ஆட்கள் புரிந்து வைத்திருப்பார்கள். தேர்தல் காலப் பேச்சுகளுக்கு முன்னாள் இந்நாள் பத்திரிகையாளர்களுக்கே அதிக வாய்ப்பு. அச்சு ஊடகங்களில் - மோட்டுவலை இதழியல் கட்டுரைகள் எழுதும் ஊகங்களைப் பயன்படுத்தி விவாதங்களைச் செய்வார்கள். முந்திய தேர்தல்களின் புள்ளிவிவரங்கள் அவர்கள் வசம் நிறைய இருக்கும். சிலர் பா.ஜ,க. என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைச் சிரித்துகொண்டே சொல்வதன் வழியாக அதற்கு அனுமதி அளிக்கிறார்கள். மக்களாட்சியின் நான்காவது தூண்களாக இருக்கும் ஊடகங்களின் ஆட்டம் அவ்வளவுதான்.

இது ஒரு போக்கு என்றால் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்ற நம்பிக்கையோடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறார்கள் பா.ஜ.க. ஆதரவாளர்களான பத்திரிகையாளர்கள். அவர்களின் கண்களுக்குப் புனிதராகவும் கடவுளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள பிரதமர் திருவாளர் நரேந்திரமோடி மட்டுமே தெரிகிறார். தமிழ்நாட்டு அரசியலில் அந்தக் கட்சியின் ஆளுமைகளாக இருப்பவர்களின் தேர்தல் அனுபவங்களைப் பற்றிப் பேசுவதே இல்லை. அக்கட்சியின் தொண்டர்கள், வட்டாரத்தலைவர்கள், பொறுப்பாளர்கள் செய்யும் அடாவடித்தனங்களும், சட்டமீறல்களும் உளறல்களும் போலியான சமய ஆதரவு நடவடிக்கைகளும் வெகுமக்கள் மனநிலையை பாதிக்காது என நினைக்கிறார்கள். பெரும்பான்மை x சிறுபான்மை என்பதை விதம் விதமாகக் கட்டமைக்கவும் நினைக்கிறார்கள். பக்தர்கள் என்னும் பெரும்பான்மையை உருவாக்கி சித்தாந்த அரசியல் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும். தமிழ்க் குடும்பங்களின் ஆன்மீகம் என்பது ஒற்றைப்படையானதல்ல. ஒவ்வொரு குடும்பமும் ஊர்த்தெய்வங்களான கருப்பசாமிக்கும் சுடலை மாடனுக்கும் நேர்த்திக்கடன் போடுவதுண்டு. குலதெய்வங்களான இருளப்ப சாமிக்கும் செங்கேணியம்மனுக்கும் படையல் செய்வதுண்டு. மலை உச்சியிலும் கடலோரத்திலும் படைவீடு கட்டியுள்ள முருகனுக்குக் காவடி எடுத்துத் தேரிழுக்கவும் செய்வார்கள். அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரத்திற்கும் போவார்கள். 

திருவாளர் நரேந்திரமோடியின் பெயருக்குப் பின்னால் கட்டியெழுப்பப் பட்டிருக்கும் ஒளிவட்டமும் மட்டுமே அக்கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்து விடும் என்று நம்பும் இவர்களது அரசியல் அலசல்கள், கணிப்புப்பார்வைகள் எல்லாம் தமிழகப் பொதுத்தேர்தல் அலைகளை அறியாததன் வெளிப்பாடு. தமிழ்நாட்டுத் தேர்தல் கள நிலவரம் என்பது ஒவ்வொரு ஊரின் ஆளுமைகளோடும் தொடர்புகொண்டது. அந்த ஆளுமைக்கு கட்சியின் வட்ட மாவட்டக் கட்சியின் பொறுப்புகள் என்ன என்பதோடு தொடர்புண்டு. காது குத்தி, கல்யாணம், தொடங்கி கோயில்கொடை, விளையாட்டுப் போட்டி வரை அவரது பங்கேற்பு எப்படிப்பட்டது என்பது கண்காணிக்கப்படும். தேர்தல் காலத்தில் வருகை என்பது மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தலையைக் காட்டும் அரசியல்வாதியா என்று அலசப்படும். உள்ளூர்க் கள நிலவரங்களைத் தாண்டி வாக்குகளை வாங்கும் ஆளுமைகள் இல்லாத ஒரு கட்சி அதன் தேசியத்தலைமையின் புனிதப் பூச்சுகள் வழியாகவே அணித்தலைமையைப் பெற்றுவிடும் என்பதும், ஆட்சியைக் கைப்பற்றும் என்பதும் கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துவிட்டுக் காத்திருப்பதுபோலத்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்