ஏலி ஏலி லாமா ஜபக்தானி - செய்வது இன்னதென்று அறியாமல்...
2020 பிப்ரவரி தொடங்கி உலகின் முதன்மைப் பேச்சாக மாறிய கரோனா இந்தியாவில் மார்ச் மூன்றாம் வாரத்தில் தான் அச்சமூட்டும் நோயாக உணரப்பட்டது. அதற்கு முன்பு கரோனா பற்றிய அரசுகளின் பார்வை எந்தவிதப் புரிதலும் அற்றவையாகவே இருந்தன. நடந்துகொண்டிருந்த நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் கரோனா தொற்றைப் பற்றி நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். உலக நாடுகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் அமைப்புகளின் எச்சரிக்கைக்குறிப்புகளை கண்டுகொள்ளாமலேயே அரசியல் பெரும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா எனப் பல நாடுகளிலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமான போது இந்தியாவும் கவனிக்கத் தொடங்கியது. முதல் அச்சத்தை வெளிப்படுத்திய கேரள மாநிலம் தனித்திருத்தலையும் இடைவெளிகளோடு அடக்கி வைக்கப்படுதலையும் பரவாமல் தடுப்பதற்கான உத்தியாக அறிவித்தது. அதன் பின்பே மற்ற மாநிலங்களும் ஒன்றிய அரசும் விழிப்புணர்வு பெற்றன. அடங்கல் அறிவிப்புகள் தொடங்கின. ஒருநாள் அடையாள அறிவிப்பு தொடங்கி ஒருவாரம், இரண்டுவாரம், ஒரு மாதம் என அடங்கல் அறிவிப்புகள் நீண்டுகொண்டே இருக்கின்றன.
பொழுதுபோக்கிற்காக ஓரிடத்தில் கூடுவதைத் தடுப்பது என்பதில் தொடங்கி சந்தைகள், பணியிடங்கள், கல்வி நிலையங்கள் என மக்கள் திரளும் - திரட்டப்படும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முதல் அடங்கல் காலத்தில் நோயின் தீவிரம் உணரப்படாத நிலையில் சரியாகிவிடும் எனக்காத்திருந்த உதிரித்தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் தீர்ந்த நிலையில் உயிர்ப்பயம் கொண்டார்கள். இருந்த இடங்களை விட்டுவிட்டுச் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தார்கள்; நடந்துகொண்டே இருந்தார்கள். நடந்து கொண்டிருக்கும்போது செத்தார்கள். செத்தவர்களுக்கும் சாகப் போகிறவர்களும் என்ன சொல்லவேண்டுமோ அதனைச் செய்யாமல் விளக்கேற்றும் வேடிக்கைகள் நடந்தன. வேலைகள் இழந்து சொந்த ஊர் போனவர்களின் கதி என்ன என்று கணக்கெடுப்புகள் இல்லை. நோயாளிகளின் கணக்கெடுப்பும், நோயில் வீழ்ந்தவர்களின் புள்ளிவிவரங்களும் செய்திகளாக்கப்பட்டு அச்சம் உண்டாக்கப்பட்டது. அதன் விளைவாக அடங்கல்கள் நீட்டிக்கப்பட்டன.
நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாநில எல்லைகளும் மாவட்ட எல்லைகளும் அச்சம் தங்கியிருக்கும் கோடுகளாக மாறின. நகர எல்லைகளும் பெருநகர வீதிகளும் பிசாசுகள் அலையும் வெளிகள் போலச் சித்திரிக்கப்பட்டுப் பீதியும் பெருங்குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டன. பெருநகரங்களே கரோனாவிற்குப் பிரியமான இடம்போல் சித்திரிக்கப்பட்டது போய்க் கிராமங்கள் வரை நீண்டிருக்கிறது அடங்கல்கள். மண்டலப் பிரிப்புகள், வட்டாரப்பிரிப்புகள் எனப் பிரித்து கோடுகள் போட்டு க்கொண்டிருந்தன அரசுகள். அடையாளம் உருவாக்க எத்தனையோ வழிகள் இருக்கக் கரோனாவைத் தடுக்கும் என நினைத்துப் பளபளக்கும் புத்தம்புது தகரங்கள் வாங்கி வேலிகள் போடும் அவலத்தை எங்கு போய்ச் சொல்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் மக்கள். வண்ணவண்ண அட்டைகள் தொடங்கி இ -பாஸ் வரை அரசு நிர்வாகத்தின் அதிகாரச் செயல்பாடுகளின் களன்களாகிவிட்டன.
ஒரு தொற்றுகளுக்காக உலகநாடுகள் ஒவ்வொன்றும் பின்பற்றிய அடங்கல்கள் பெருமளவு பயன் விளைவித்தனவா? என்ற கேள்வியை எழுப்பி விடைதேடிய அறிவுச் சமூகங்கள் அதனை விலக்கிக் கொள்ளத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. ஆனால் எல்லாவற்றையும் தள்ளிப்போடும் மனநிலை கொண்ட திட்டமிடல்களிலேயே பழகிப்போன இந்தியாவின் மைய, மாநில அரசுகள் இன்னும் ஒரு அடங்கல் இன்னுமொரு அடங்கல் எனத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கின்றன. அடங்கல் அறிவிப்பு என்பது ஒருவித விழிப்புணர்வூட்டும் கருவியே தவிர அவை மருந்துகள் அல்ல. ஒவ்வொரு அடங்கலை நீட்டிக்கும்போதும் தனித்திருத்தலின் - தனிமனித இடைவெளியுடன் இருப்பதின் - தொற்றுப் பரவும் விதத்தைத் தடுக்கும் விதமான முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்திருக்கவேண்டும். விழிப்புணர்வு செய்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் போல ஊடகங்களில் விதம்விதமாக வந்துகொண்டே இருக்கின்றன விளம்பரங்கள். ஆனால் மக்கள் நிலையோ அதனைக் கண்டுகொண்டதாக இல்லை.
நோய் இதுதான்; அதனைத் தடுக்கும் மருந்து இதுதான் எனச் செயல்படும் நவீன மருத்துவம், முதல் கட்ட அறிவைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது கட்டத்தில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. கொரோனா நுண் உயிரிகளின் அளவு, இயக்கம், செயல்பாடு, விளைவுகள் என எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்லும் மருத்துவ அறிவு, அதற்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிகளில் முடிவுகளை எட்டும் நிலையை நெருங்கியிருக்கின்றது. ஆனாலும் இல்லும் எட்டவில்லை. நோயை அடையாளப்படுத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்டாதவை மருத்துவ முறைகள். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இந்திய மரபு முறைகள் நோய்த் தாக்கம் கொண்ட உடலின் பகுதிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்காமல், மொத்த உடலிலும் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுதல் என்னும் உத்திகள் வழியாக நோயிலிருந்து மீட்டெடுத்தல் என்பதைச் செய்கின்றன. கபசுரக்குடிநீர், நிலவேம்புக்குடிநீர், மஞ்சள் தூள் போட்ட பால், மிளகுரசம் என அவரவர் பாணியில் தொடர்கிறார்கள். நோய்க்கும் பார்; பேய்க்கும் பார் எனச் செல்லும் இந்திய மனம் எப்போதும் அதன் தடத்தில் தான் செல்லும்.
நோயாளிகளையும்,நோயின் அறிகுறிகள் உடையவர்களையும் தனித்திருக்கச் செய்வதன் மூலம் பரவலைத் தடுத்துக் கட்டுப்படுத்திவிட முடியும் என நினைத்த ஆரம்பக்கட்ட நோக்கங்கள் இப்போது பொய்யாகிவிட்டன. முதலில் அறிந்த சீனா கடைப்பிடித்த அதே உத்தியையே மூன்று மாதங்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகம் செய்தோம். அந்த மூன்று மாதங்களில் கரோனாவை நோய்ப் பிரச்சினையாக மட்டுமே உலகம் புரிந்திருந்தது என்பதுதான் பெரிய ஆச்சரியம். பரப்பளவில் குறைவானவைகளாகவும் மக்கள் தொகையில் அடர்த்தியற்றவைகளாகவும் இருக்கும் ஐரோப்பிய நாடுகளே அவ்வாறு நினத்து அடங்கலை அறிமுகம் செய்தன. இந்தியாவும் நாட்டடங்கை அறிமுகம் செய்தது. ஆனால் இந்தியாவில் கரோனா நோயாக மட்டும் பாதிப்பு உண்டாக்கக் கூடிய நோயல்ல; தேசத்தின் பொருளியல் நடவடிக்கைகளை - பெருந்திரளான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்று என்பதை முதல் ஊரடங்கிலேயே உணரத் தொடங்கினோம். உணர்ந்தாலும் அரசுகள் அதற்கேற்ப முடிவுகளை எடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தொடங்கிய பேரச்சம், இப்போது நிரந்தரத்தொழிலாளர்கள் வரை நீள்கின்றது. ஐந்து மாதங்கள் உற்பத்தி இல்லாமல் எந்தப் பிரிவும் சம்பளம் வழங்குதல் சாத்தியமில்லை. உணவுப்பொருட்களைத் தரும் வேளாண்மைத் தொழிலையும் தாக்கும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது நோயின் தீவிரம். அடிப்படை உற்பத்தியைத் தாண்டித் தொழில் துறை உற்பத்தி நடந்தாகவேண்டும். அதில் பணியாற்றும் மனிதர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டுமென்றால் சேவைப்பிரிவுகள் இயங்கியாகவேண்டும். அடங்கல்களில் அடங்கிப் போய்க் கிடக்கின்றன இவ்விரு பிரிவுகளும்..
முதல் ஊரடங்கு முடிவிலேயே உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும். வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்ற வேண்டும். அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கைக் குரல்கள் எழும்பின. பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்ற விவாதங்கள் ஊடகங்களில் ஒலித்தன. ஆனால். அதனைத் திசைதிருப்பும் வேலைகளும் விநோதங்களும் ஒவ்வொன்றாகக் களம் இறங்கின. நிகழ்வுகளாக, ஆட்களாக, அறிவிப்புகளாக வந்துகொண்டே இருந்த திசைதிருப்பல்கள் கரோனா அடங்கலைக் கேள்விக்குள்ளாக்காமல் பார்த்துக்கொண்டன. பெரிய அடங்கலுக்குள் சின்ன அடங்கல். சின்ன அடங்கலுக்குள் தீவிர நுண் அடங்கல். வாரக்கடைசி விடுமுறை போல ஞாயிற்றுக்கிழமை அடங்கல்கள் என விதம்விதமான அடங்கல்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது அரசு. அறிவிப்புகளுக்குப் பின்னால் எந்தவிதத் தர்க்கமும் அறிவியல்பூர்வ காரணங்களும் இல்லை. தனித்திருக்க வைக்கிறார்கள் என்பதிலும் உண்மையில்லை. மண்டலங்களுக்குள் போகலாம் என்று அறிவித்த அரசு மாவட்டங்களுக்குள் அடங்க வேண்டும் என்று சொல்லி இ -பாஸ் என்னும் தடுப்பு நடவடிக்கையைக் கடுமையாக்கியது. ஆனால் நடந்ததும் நடப்பதும் விதிமீறல்களும் ஊழல்களும் தான். உயிர்ப் பயம்கூடிய மனிதர்களைத் தடுத்து நிறுத்தவே முடியவில்லை என்பதுதான் ஒரு மாதத்துக்கு முந்திய உண்மை. . .
பொதுச்சமூகம் நிலைமையை அறியாமல் இருந்தது.இப்போதும் அப்படியே இருக்கிறது.உற்பத்தித் துறையினர் மட்டுமல்ல; சேவைத் துறைப் பணியாளர்கள் அவர்களின் பணிக்குத் திரும்ப முடியவில் வேண்டும். அதற்கும் முன்பாகப் பணிக்குப் போக இருக்கும் நபர்களுக்குத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பரிசோதனைகள் செய்யும் கருவிகளையும் கொண்டு வரவேண்டும். அவசியத் தேவைகள் போன்றவற்றோடு நேரடித் தொடர்பு கொண்டவர்கள் தக்க சோதனைகளுடன் பணிக்குச் சென்றாக வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டும் அரசுத் துறைகள் இணையாகவே இதனையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் திட்டமிடவில்லை . தொடர்ந்து அரசுகள் திட்டமிடல் பிழைகளைச் செய்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊரடங்கைத் தளர்த்தி விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடங்கியிருக்க வேண்டும். கொரோனாவைப்பற்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முதலில் அச்சமூட்டும் புள்ளிவிவரங்களாக இருந்தன. இப்போது மையக்கதையை விட்டு விலகிச் செல்லும் நகைச்சுவைப் போக்கு - காமெடி ட்ராக் - போல ஆகிவிட்டன. கடைப்பிடித்தே ஆகவேண்டும் என வலியுறுத்தும் தீவிரமான சொல்லாடல்களை உருவாக்கும் நிலைக்கு மாறாகக் களிப்பூட்டும் காட்சிகளையும் பாடல்களையும் சொல்லும் திரை நட்சத்திரங்கள் வந்துபோகின்றார்கள் நகர எல்லைக்குள் நிற்கும் காவலர் பிடித்தால் தண்டம் கட்டவேண்டியதிருக்கும் என்பதால் வண்டியின் பின்புறம் கட்டித் தொங்கவிட்டிருக்கும் தலைக்கவசத்தை- ஹெல்மட்டை - எடுத்து மாட்டிக்கொள்ளும் மனப்பாங்கில் தான் கொரோனாவைத் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லப்பட்ட முகமூடிகளை நினைத்தார்கள் மக்கள்; இப்போதும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அங்காடிகளிலும் சந்தையிலும் சேரும் கூட்டம் தன்னைத் தனித்து வைத்துக் கொள்ள வேண்டும்; அது தனது உடல்நலத்தோடு தொடர்புடைய நடவடிக்கை என்று நினைப்பதே இல்லை. வரிசையில் சென்று நுகரும் பழக்கம் தேவைப்படும் வங்கிகள், ரயில் பயணச்சீட்டு பெறும் திட்டிவாசல்கள், திரையரங்குகள், கோயில்கள் போன்றவற்றில் வரிசையாக நிற்பதை இழுக்காக நினைக்கும் மனநிலைதான் இங்கேயும் தொடர்கின்றன. அதன் தொடர்ச்சியைத் தான் மதுக்கடை வாசல்களில் முண்டியடித்த காட்சிகளின் வழியாகப் பார்த்தோம்.
நான்கு மாதங்களாக ஏன் ஊரடங்கில் இருந்தோம் என்பதை விளக்கிச் சொல்லும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக நடத்தப்பட வேண்டும். இந்திய மக்களில் ஒருசாரார் எல்லாவற்றையும் கொண்டாட்டங்களாகவும் களியாட்டங்களாகவும் நினைத்துப் பொழுது போக்காகப் பார்க்கின்றனர். இன்னொருசாரார் எல்லாவற்றையும் சமய நடவடிக்கைகளாகவும் சடங்குகளாகவும் அவற்றிற்கான நேர்த்திக்கடன் நிறைவேற்றல்களாகவும் பார்க்கின்றனர். இரண்டு மனப்பாங்குகளும் மாற்றப்பட வேண்டும். மாறாத நிலையில் பரப்புரைகளால் எந்தப் பயன்களும் ஏற்படாது. ஏனெனில் இவ்விரு மனப்பாங்குகளும் விருப்பமில்லாதவர்களை ஒதுங்கிக்கொள்ள அனுமதிக்கும் வாய்ப்புக் கொண்டவை. ஆனால் மருத்துவம், நோய்த்தடுப்பு போன்றவை விலகலை அனுமதிக்காதவை. அதிலும் கரோனோ போன்ற தொற்றுநோய்க்கெதிரான பரப்புரைகளிலிருந்து ஒருவருக்கும் விலக்களிக்க முடியாது.
கரோனோவோடு வாழப்பழகி கொள்ளுங்கள் என்பதை முன்னெடுத்துப் பரப்புரை செய்யும்போது நோயின் விளைவுகள் கடுமையானவை என்பதை உணர்த்த வேண்டும். தனிமனிதப் பொறுப்புணர்வு மட்டுமே ஒவ்வொருவரையும் பாதுகாக்கும். அரசு நிர்வாகத்தாலும் அமைப்புகளாலும் நோயைத் தடுத்தல் இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதை அறிவித்து அடங்கல்களைத் தளர்த்தியாக வேண்டும். உலக நாடுகள் பலவும் அப்படி நகர்ந்துவிட்டன. திரள் மக்கள் ஊடகங்கள் வழியாகவும் தனிநபர் தகவல்கள் வழியாகவு உயிர் பயம் உண்டாக்கப்பட வேண்டும். விதி வந்தால் சாவோம் என நினைக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும். மனிதர்களின் மரணங்களுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பதும் காரணம் என்பதை உணர்த்த வேண்டும். இப்போது கடும் எச்சரிக்கைகளும் பரப்புரைகளும் ஒவ்வொரையும் சென்றடையவேண்டும். அவற்றின் வழியாகப் பழக்கப்படுத்துதல் உடனடித் தேவை. அப்பழக்கம் அவரவர்களைக் காத்துக்கொள்ளும். அதல்லாமல் எந்தவிதமான அடங்கல்களும் அடக்குதல்களும் நோய்ப்பரவலைத் தடுக்கப்போவதில்லை என்பதுதான் உலக நாடுகளின் அனுபவங்கள். இந்தியாவின் அனுபவமும் அதுவாகத்தான் இருக்கப்போகிறது.
கருத்துகள்