இன்னுமொரு போரை நினைத்தல் : ஆசி கந்தராஜாவின் நரசிம்மம்

ஈழத்தமிழ்ப் புனைகதைகள் இன்னும் போர்க்கால நினைவுகளிலிருந்து மீளவில்லை. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும் அதற்கு முந்திய கால் நூற்றாண்டுப் போர்க் காலத்தையும் மறந்து விட்டு ஈழநிலப்பின்னணியில் புனைவுகள்  எழுதவேண்டும் என்றால் அதன் கோரத்தை - வடுக்களை- பாதிப்பை உணராத தலைமுறை ஒன்று உருவாகி வரவேண்டும். அதுவரை போர்க் காலம் என்பது நேரடியாகவும் நினைவுகளாகவும் பதிவு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது. உள்ளே இருப்பவர்களும் வெளியே புலம்பெயர்ந்தவர்களும் திருப்பத்திரும்ப அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைய ஆண்டுகளில் அதிகமும் இணைய இதழ்களிலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் அச்சிதழ்களிலும்  வாசிக்கக்கிடைக்கும் போர்க் காலச் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வாசிப்பிலிருந்து ஒரு கருதுகோள் – கருத்துரு ஒன்று எனக்குள் உருவாகியிருக்கிறது:  போர் ஆதரவு x போர் எதிர்ப்பு என்ற இரட்டை நிலைக்குள் இக்கதை நிறுத்திவிட முடிகிறது. போர்க்காலத்தில்  வெளியேறிப் புலம்பெயர் நாடுகளில் வாழும் பலரது புனைவுகளில் போருக்கு எதிர்ப்பு அல்லது போரின் மீதான விமரிசனப் பார்வை வெளிப்படுகிறது. அதற்கு மாறாகப்   போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும்  புலம் பெயராமல் ஈழப் பகுதியிலேயே வாழ்பவர்களாக இருக்கிறவர்களால் எழுதப்படும் புனைகதைகளில் போரின் மீது வெறுப்போ விமரிசனமோ  அதிகம் இல்லை. நேரடியாக விடுதலைப் புலிகளின் அமைப்பில் செயல்பட்டு, இப்போது புலம்பெயர்ந்து வாழும் குணா கவியழகன் போன்றவர்களின் எழுத்துகளிலும் கூட  போருக்கெதிரான பார்வைகள் குறைவு.

இந்தக் கருதுகோளின் தொடர்ச்சியாக முன்னவர்களின் எழுத்துகளில்   சிங்கள அரசப் படைகளின் மனிதாபிமானமற்ற அழித்தொழிப்பு, பெண்கள் மீதான வன்புணர்வு போன்றவற்றைக் கண்டு கொள்ளாத தன்மை வெளிப்படுகிறது எனவும்,  தமிழர் வாழும் பகுதிகளில்    பிற இயக்கங்களை அழித்துவிட்டுத் தங்களை நிறுவிக்கொண்டு, தமிழர்களின் வாழ்வில் போருண்டாக்கும் அழிப்புகளைத்   திணித்து விட்ட –புலிகள் மீது கூடுதல் கவனம் எடுத்து விமரிசனம் செய்யும் தன்மையும் அதிகம் இடம்பெறுகிறது என்று அவதானம் செய்யலாம்.  இந்த அவதானத்தின் மறுதலையாக,    பின்னவர்களால் அரச எதிர்ப்பு நிலைபாட்டில் நின்று தனி ஈழத்திற்காகப் போர் செய்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைபாடுகள் கொண்ட கதைகளை எழுதினார்கள் எனவும்,  புலிகளை ஆதரிப்பதையும் தாண்டி, அரசப் படைகளின் அட்டூழியங்களையும் பொதுச்சமூகத்தின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட குரூரமான நடவடிக்கைகளையும் சித்திரித்துக் காட்டுவதன் மூலம் நடந்த போரின் நியாயங்களை முன்வைக்கிறார்கள் என்றும் அவதானம் செய்யலாம்.   

இப்படி உருவான கருதுகோள் முற்றிலும் புள்ளியியல் அடிப்படையில் - சதவீத அடிப்படையில்- உறுதியாகக் கூறமுடியாத கருதுகோள்தான்  என்றாலும் தொடர் வாசிப்புப் பார்வையில் இதனை உறுதிசெய்யமுடியும். இவ்விருவகைக் கதைகளைத் தாண்டித் திரும்பவும் இன்னுமொரு போருக்கான தயாரிப்பும் தேவையும் ஈழத்தமிழ்ப் பகுதியில் நடப்பதாக - இருப்பதாக எழுதப்பெற்ற கதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை. போருக்குப் பிந்திய அரசியல் ஆய்வுகளும் விமரிசனங்களும்   ஆயுதப் போராட்டத்தின் தெரிவையும், புதிதாக உருவான புவிசார் அதிகாரப் போட்டிகளின் பின்னணியில் இருந்த அணிச்சேர்க்கைகளையும் சரியாகக் கணிக்காத புலிகளின் தலைமை மீது விமரிசனங்களை முன்வைத்தன. அரசபடைகள் தமிழ்நிலப்பகுதியில் நிலைகொண்டுவிட்ட சூழலில்   இன்னொரு போரைத் தமிழ் ஈழத்தில் நடத்தும் சாத்தியங்கள் இல்லை என்பதுபோன்ற கருத்துரைகளே அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. ஆய்வுரைகளும் கருத்துரைகளும் உருவாக்கும் கருத்தியல் போக்குகள், எழுத்தாளர்களின் எழுத்தைப் பாதிக்கும் என்ற அளவில் இன்னொரு போருக்கான சூழலும் தயாரிப்புகளும் இருப்பதுபோன்ற தொனியைக் கொண்ட கதைகள் வராமல் நின்றுவிட்டன. ஆனால் அதிலிருந்து விலகிய தன்மையோடு எழுதப்பெற்ற கதையொன்று அண்மையில் வாசிக்கக் கிடைத்துள்ளது. கதையின் தலைப்பு: நரசிம்மம் (காலச்சுவடு, ஜூலை 2020).அந்தக் கதையை எழுதியவர் ஆசி கந்தராஜா. இவர்,  புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்.

***********  

அந்தச் சுவரில், சிங்கள ஓவியன் வரைந்த ‘சிங்க உடலும் புலிவாலும்’ கொண்ட பாரிய உருவம், கூரிய பொருள் ஒன்றினால் சிதைக்கப்பட்டிருந்தது.    

என நரசிம்மம்   கதை,  முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவைச் சொல்வது கதைக்குள் இருக்கும்  கதாபாத்திரங்களில் ஒன்றல்ல;கதைசொல்லி.   படர்க்கைக் கூற்றில் கதை சொல்லியின் இடம் “எல்லாம் அறிந்த கடவுள் நிலை” என்பதைத் திரும்பவும் விளக்கவேண்டியதில்லை. ஒருவிதத்தில் இந்தக்கூற்று, எழுத்தாளரின் -  ஆசிரியரின் விருப்பத்தை    வெளிப்படுத்தும் கூற்று என்றே கொள்ளலாம்.

முற்றிலும் படர்க்கை நிலையில் – கதை சொல்லி யார்? என்று காட்டிக் கொள்ளாத நிலையில் – எழுதப்பட்டுள்ள அந்தக் கதை, விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய புனிதவதி என்ற பெண் போராளியின் திடமான முடிவுகளையும், அவளுக்குள் கனன்று கொண்டிருக்கும் சிங்கள எதிர்ப்பு என்னும்  நெருப்பையும், அதனைத் தக்கவைத்துத் தனது மகனுக்குக் கடத்திவிட வேண்டும் என்ற நினைப்பையும் முன்வைக்கும் கதை. இம்முன்வைப்பை இலக்காகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள கதைக்கூற்று முறை கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது போலவே கதையின் நிகழ்வுகளும், கதைசொல்லியின் விவரிப்புகளும் பொருத்தமாகக் கட்டி அடுக்கப்பட்டுள்ளன.  

கதையின்  தொடக்கமே போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட அவளின் முரண்டுபிடிக்கும் குணத்தை வெளிப்படுத்தும் தொடக்கம் தான்.  

அவனுடைய பெயரை இதுவரை யாரும் முழுதாகச் சொன்னது கிடையாது. ஆசிரியர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் பெயரைச் சுருக்கி, ‘தமிழ்’ என்றே அழைத்தார்கள். பாடசாலைப் பதிவு இடாப்பில் மட்டும் அவனுடைய பெயர், ‘ஈழத்-தமிழன்-பிரபாகரன்’ என்றிருந்தது. இதில் அவனது முதற்பெயர், நடுப்பெயர், குடும்பப்பெயர் என்ற பிரிவினை இல்லை. இந்த மூன்றும் சேர்ந்த ஒன்றே, அவனது முழுப்பெயர். பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்க்கும்போது ‘பெயரைச் சற்றுச் சுருக்கிப் பதியலாமே’ என்றார் தலைமை ஆசிரியர். என்னுடைய மகனின் பெயர் அதுதான், அது முழுமையாகப் பதியப்பட வேண்டுமெனப் பிடிவாதமாக நின்றாள் புனிதவதி

பிடிவாதமாக அந்தப் பெயரைத் தன் மகனுக்கு வைப்பதில் காட்டும் தீவிரத்திற்குப் பின்னால்  அவனது அப்பா யார் என்பதைச் சொல்ல முடியாதவளாக இருக்கிறாள் என்ற உண்மையும் இருக்கிறது. அப்பா யார்? என்று சொல்ல விரும்பவில்லை என்பதைவிட, சொல்ல முடியாதவளாக இருக்கிறாள் என்பதே அவளுக்குள் இருக்கும் ஜ்வாலை. தன்னைப் புணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களில் அவனுடைய தந்தையாக யாரைச் சொல்வது என்ற தவிப்பும் கோபமும் தான் அவனுக்கு அப்படியொரு பெயரை வைத்துத் தன் உள்ளக்கிடக்கையைக் காட்டச் செய்கிறது. ஐந்தாம் வகுப்புக்குப் பின் அரசு தரும் ஸ்கொலர்ஷிப் தன் மகனுக்குக் கிடைக்கும் என்ற போதிலும்  நிராகரிக்கும் மனம் கொண்டவளாக இருந்தாள் புனிதவதி எனக் கதை சொல்லி விவரிக்கிறார்.


புத்திசாலி மாணவர்களைத் தெரிந்தெடுக்கும் ஆறாம் வகுப்புக்கான ஸ்கொலஷிப் சோதனைக்கு மனுச்செய்யும் விண்ணப்பத்தில், பெற்றோரின் பெயர் கேட்கப்பட்டிருந்த போதுதான், தன்னுடைய தந்தை யார் என்ற கேள்வி, முதன்முதலில் அவனுக்குள் எழுந்தது. அன்று மாலையே இதுபற்றித் தாயிடம் கேட்டான்.  

“அவரை எனக்குத் தெரியாது” என்றாள் புனிதவதி மொட்டையாக

இது மகனிடம் நடக்கும் உரையாடல். அவள் அப்படிச் சொல்லக் காரணம்,

இராணுவ முகாமில் புனிதவதியைப் பாலியல் வல்லுறவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களில், அவனுடைய தந்தை யார் என்று அவளால் எப்படி சொல்ல முடியும்? புனிதவதி மிகவும் அழகானவள். கவர்ச்சியானவள். இதன் காரணமாகவே அவளை முள்வேலிக்குப் பின்னால் அடைக்காமல் இராணுவ முகாமில் வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் புனிதவதி விருந்தாக்கப்பட்டாள். ஒரு நிலையில், அவளுடன் பாலியல் உறவுகொள்ள விரும்பியவர்கள் அனைவரும் அதை நிறைவேற்றிக்கொள்ள அநுமதிக்கப்பட்டார்கள். மதுவெறியில் வந்தவர்களுள் யாருக்காவது உடலுறவுக்கு முன்னர், சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதையும் அவள்மீதே கழித்தார்கள். இந்தக் கொடுமையான நிகழ்வுகள் பற்றி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இப்பொழுது நினைவு கூர்வது அவளுக்கு எளிதான விஷயமல்ல. தனது மகன் உண்மையை அறிந்து, அதை ஜீரணித்துக் கொள்வதற்கான வயதுவரும்வரை அவள் காத்திருக்க விரும்பினாள்.

எனக் கதைசொல்லி விவரிக்கிறார். தொடர்ந்து அவனுக்காக அம்மாவிடம் பேசவந்த ஆசிரியரிடம் அவள் சொல்வது இது:

“எனது பெற்றோரும் உறவினர்களும் இன்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் போரில் நான் இறந்து விட்டதாகவே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நான் தந்தை பெயர் தெரியாத ஓரு குழந்தையுடன் அங்கு சென்றிருந்தால், யாழ்ப்பாணச் சமூகம் என்னை எப்படி வரவேற்றிருக்கும்? அதனால்தான் இங்கு ஒதுங்கி வாழ்கிறேன். காட்டின் நடுவே தனித்து வாழும் இந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தருகிறது. கொடூரமான என்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பகிரங்கப்படுத்தி என் மகனைக் காயப் படுத்தாதீர்கள் ஐயா,” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் புனிதவதி. 

புனிதவதியின் போர்க்கால அவலத்தைப்   பற்றிய குறிப்புகளை நிகழ்வுகளாக விவரிக்கும் கதை, போருக்குப் பின் ஒரு கிராமத்தில் இருந்த நரசிம்மர் கோயிலுக்குப் பக்கதில் அவளும் அவளது மகனும் குடி வந்தது தற்செயல் நிகழ்வு தான் என்று சொல்லிவிட்டு, நரசிம்மம் தொன்மமும் அதற்குள் சிங்கள அடையாளமான சிங்கமும், தமிழர்களின் அடையாளமாகக் கருதப்பெற்ற புலியின் அடையாளமும் இணைக்கப்பட்ட பரப்புரையையும் இணைநிலையாக வைக்கிறது.   

‘நானே கடவுள்’ என அறிவித்துக் கொண்டு தேவர்களை ஏவலாளிகளாக நடத்திய இரண்யனைக் கொல்ல விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்தியாவில் பரவலாக அறியப்பட்டுள்ள இந்துத் தொன்மத்தைச் சிங்கள சிப்பாய்களுக்கு உளவியல் ரீதியாகத் தெம்பும் நம்பிக்கையூட்டலும் செய்வதற்காக வரையப்பட்ட சிங்கமுகமும் புலிவாலும் கொண்ட ஓவியத்திற்குப் பின்னால்  சிங்கள – தமிழ் முரண்பாடும் பேசப்பட்டு  “இனப் பிரச்சினைக்கான சரியான தீர்ப்பே” அந்த ஓவியம் தான் என முன் மொழியப்பட்ட வரலாறும் இணைப்பிரதியாகக்  கதைக்குள் விளக்கப்படுகிறது.    அவ்விவரிப்பின் தொடர்ச்சியாகவே அந்த ஓவியம் சிதைக்கப்பட்டது –அதனைச் சிதைக்கும் சக்தியோடு ஒருவன் அல்லது ஒரு குழு அங்கே தயாராக இருக்கிறது என்ற குறிப்பைக் கதாசிரியர் தருகிறார். 

புனிதவதி என்ற மையப்பாத்திரத்தின் வன்மம் மற்றும் பழிவாங்கும் தீவிரம் என்னும் உணர்வைத்திரட்டிக் கட்டமைக்கும் பாத்திரமாக்கல் தன்மையோடு, சிங்கள அரசும் புத்த குருமார்களும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் தமிழ்நிலப்பகுதியில் மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகளையும் படையணிகள் தங்கலும் இணைப்பிரதியாகத் தரும் ஆசி கந்தராஜா தனது சிறுகதை மூலம் தமிழ்நிலப்பகுதியில் போருக்கான தயாரிப்பும் மனநிலையும் தீர்ந்துபோகவில்லை; இன்னும் இருக்கிறது என்று முன்வைக்கிறார். இந்த முன்வைப்பு ஈழத்தமிழ்ப் பகுதியின் நடப்பை உள்வாங்கிய – களத்தைப் புரிந்துகொண்ட முன்வைப்பா?  என்ற கேள்வியை எழுப்பலாம். அக்கேள்வி ஒரு வாசக மனத்தின் – விமரிசகரின் கேள்விதான். அதற்கான பதிலைத்தர வேண்டியது ஈழத்தமிழ்ப் பகுதிக்குள் வாழும் தமிழ் மனிதர்களாகவே இருக்க முடியும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்