நந்தனார் தெருக்களின் மனிதர்கள்
தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டே இருக்கும் நண்பர்கள் என்றால் முதல் சந்திப்பும் அச்சந்திப்பில் பேசிக்கொண்ட உரையாடல்களும் நினைவில் இல்லாமல் போக வாய்ப்புண்டு. அதே வேளையில் முதல் சந்திப்பின் உரையாடல்களே நெருங்கிய நட்புக்காரணமாக இருந்தது என்றால் முதல் சந்திப்பின் பதிவுகளும் சொற்களும் மனதிலிருந்து அழிந்துவிடுவதில்லை. மனிதர்களைக் குறித்த நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் சொல்லப்பட்ட இந்தக் குறிப்பு வாசித்த எழுத்துகளுக்கும் பொருந்தக் கூடியனவாகப் பல நேரங்களில் இருக்கிறது. விழி பா. இதயவேந்தனின் கதைகளில் முதன்முதலில் வாசித்த கதை ‘நந்தனார் தெரு’ அவரை நினைத்துக் கொள்ளும்போது அந்தக் கதையே எப்போதும் நினைவுக்கும் வரும். முதல் தொகுப்புக்கு அந்தக் கதையைத் தான் தலைப்பாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பின் கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளுக்கும் “நந்தனார் தெரு, மற்றும் சில கதைகள்” என்றே தலைப்பிட்டுள்ளதுபட்டப்படிப்புக் காலத்தில் அறிமுகமான இலக்கிய இதழ்களில் சிலவற்றைச் சில ஆண்டுகள் வாசித்தபின் வாங்கிப் படிப்பதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் மன ஓசையை நடத்தியவர்கள் நிறுத்தியது வரை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். அவ்விதழ் வழியாக அறிமுகமான எழுத்துகள் வெவ்வேறு தளங்களைக் கொண்டவை. பொதுநிலை அரசியல் விவாதங்கள், சோசலிசக் கட்டுமானச் சிக்கல்கள், கலைநோக்குகள், இலக்கிய எழுத்து முறைகள், விமரிசனக் கோட்பாடுகள், விவாதிக்கும் முறைமைகள் எனப் பலவிதமாக உள்வாங்கப்பட்டவை. கற்றுக் கொண்ட பின்னர் தாண்டியனவே அதிகம் என்றாலும் அடிப்படைப் புரிதல்களை உருவாக்கியவை இன்னும் நினைவில் இருக்கின்றன. அதேபோல் தங்களது தொடர்ச்சியான படைப்பெழுத்துகளால் மன ஓசையின் பக்கங்கள் வழியே வாசிக்கப்பட்ட வேண்டிய எழுத்தாளர்களாக அறிமுகமானவர்கள் பலருண்டு. அவர்களுள் ஒருவர் விழி.பா. இதயவேந்தன்.
பேரா. ப.கல்யாணி- கவி.பழமலையால் வழிநடத்தப்பட்ட நெம்புகோல் அமைப்பின் வழியாகச் சமூகச் செயல்பாட்டாளர், வீதிநாடக நடிகர், எனத் தொடங்கிய விழி.பா.இதயவேந்தனின் கலை, இலக்கிய வெளி, மன ஓசையின் ஆசிரியராக இருந்த பா.செயப்பிரகாசம் (சூர்யதீபன்) அவர்களால் முழுமையடைந்த ஒன்று. மன ஓசையின் கலை இலக்கியப்பார்வையை உள்வாங்கித் தன் எழுத்து வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவராகவே அவரது மொத்த எழுத்துகளும் இருந்தன;இப்போது வாசிக்கும்போதும் வெளிப்படுகின்றன. கவிதை, கட்டுரைகள், பதிப்புப்பணிகள் எனப் பலவிதமாக வெளிப்பட்ட விழி பா. இதயவேந்தனின் முதன்மை அடையாளம் சிறுகதை ஆசிரியர் என்பதே. மொத்தம் பத்துச் சிறுகதைத் தொகுப்புகளில் – நந்தனார் தெரு (1991), வதைபடும் வாழ்வு (1994) தாய்மண் (1996) சிநேகிதன்( 1999) உயிரிழை (2000) அம்மாவின் நிழல் (2001) இருள் தீ (2003) மலரினும் மெல்லியது (2004) அப்பாவின் புகைப்படம் (2006) புதைந்து எழும் சுவடுகள் (2007)- தனது எழுத்துப்பரப்பை உருவாக்கி அதற்குள் தான் சந்தித்த- உறவாடிய ரத்தமும் சதையுமான மனிதர்களின் மறு உருவங்களைப் பாத்திரங்களாக்கியே தனது சிறுகதைகளில் உலவ விட்டுள்ளார்.
நந்தனார் தெரு தொகுப்பாக வந்த ஆண்டு 1991. அந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பலவும் அதற்கு முன்பு ஏழெட்டு ஆண்டுகளில் இடதுசாரி இதழ்களான தாமரை, செம்மலர், மனஓசை போன்றவற்றில் அச்சானவை. சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாட்டுக் காரணிகளையும் நிகழ்தகவுகளையும் கண்டறிந்து எழுதுவதை முதன்மைப்பணியாகச் செய்யவேண்டியது எழுத்தாளர்களின் கடமை என்பதை உள்வாங்கி எழுதிய கதைகள் பல அத்தொகுப்பில் உண்டு. உழைப்பவர்கள் – சுரண்டுபவர் என்ற நபர் சார்ந்த முரண்பாட்டை மட்டுமல்லாமல், சுரண்டுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைப்புகளையும் அவற்றில் செயல்படுபவர்களையும் அடையாளப்படுத்திக் காட்டும் பணியையும் அவ்வெழுத்துகள் எழுதிக்காட்டும் நோக்கம் கொண்டன. அத்தோடு தொடர்ச்சியாக ஒடுக்கப்படும் நிலையில் ஒடுக்குபவர்கள் கிளர்ந்து போராடுவார்கள்; போராட த்தொடங்கும் நிலையில் ஆளும் வர்க்க மனிதர்களும் அமைப்புகளும் செய்வதறியாது திகைத்து நிற்க வேண்டியதாகி விடும் என்ற எச்சரிக்கையையும் அவ்வகை எழுத்துகளில் வாசிக்க முடியும். இதற்கு எடுத்துக்காட்டான கதையாக ‘நந்தனார் தெரு’ கதை அமைந்திருக்கிறது.
இரவு நேரங்களில் அந்தப்பக்கம் சுத்தமாக விளக்கு வெளிச்சமே இருக்காது. அங்கே எரியும் விளக்குகள் மட்டும் தீப்பொறி போலத் தெரியும். அதை அடையாளம் வைத்துத்தான் இரவு நேரத்தில் ‘காலைக்கடன்’ போகமுடியும். நெளிந்து கூர்மையற்ற கற்கள் மண்பாதையில் பிடுங்கிக்கொண்டிருக்கும். இவற்றிற்கு இடையில் கண்ணு மண்ணு தெஇயாமல் நினைத்த இட த்தில் வேறு நாறிக் கிடக்கும். குடலைப் புரட்டிக் கொண்டு வரும் துர்நாற்றத்தை மிஞ்சிதான் காலைக்கடன் நடக்கும். பார்ப்பதற்கு வழிகூடச் சரிவரத் தெரியாமல் கழித்தும், காலில் மிதித்த தை ஆங்காங்கே தேய்த்தும் வழி நெடுக்க அகோரமாய் இருக்கும். வெறிநாய்கள் தோப்பு வழியாகச் செல்வோர் எல்லாம் சுத்தமாகப் போய்ச் சேர்ந்துவிட முடியாது. கட்டை வண்டி போகிற அளவுக்கு மட்டுமே நடைபாதை.
இப்படித் தொடங்கும் கதை, அந்தத் தெருவில் அடிப்படைத்தேவைகளான நடைபாதை, தெருவிளக்கு, குடிதண்ணீர், சுகாதாரம் போன்றவை வழங்கப்படவில்லை என்பதை ஆவணப்படப்பதிவுகள் போலச் சித்திரம் தீட்டிக் காட்டுகிறது. பெரும்பாலும் மலம் அள்ளும் தொழிலைச் செய்யும் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் அந்தத் தெருவின் மனிதர்களுக்குள் இருக்கும், சின்னச்சின்ன சச்சரவுகள், போதாத வருமானம், அவர்களுக்குள்ளேயே இருக்கும் ஏமாற்றுக்காரர்கள், தன்னையொத்த மனிதர்களையே சுரண்டி வாழும் அரசியல்வாதிகளின் கையாட்கள் -கூடைப்பாக்கத்தான் - என விரிவான சித்திரத்தைத் தருகின்றது. அத்தோடு அவர்கள் தங்கள் கோரிக்கையை அரசமைப்பான நகராட்சி அமைப்புக்கு மனுப்போட்டு நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் பொறுப்பான மனிதர்களாகவும் காட்டுகிறது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லி ஏமாற்றும் மனிதர்களையும் அடையாளப்படுத்துகிறது. பொறுமையிழந்துபோன தெருவாசிகள் கடைசியாக செயலில் – போராட்ட த்தில் இறங்குகிறார்கள். அப்போராட்டத்தில் வெளிப்பாடு இப்படி இருந்ததாகக் கதையை முடிக்கிறார்.
‘நியாயம் கெட்ட நகராட்சி நிர்வாகமே,
நியாயம் கேட்கும் மக்களுக்கு நீதி வழங்கு!
இந்த நிலை தொடரவேண்டுமா?
- நந்தனார் தெரு
என்று ஒரு பலகை தெரிந்தது. நகராட்சி ஆணையரின் வாசற்படியருகே நிறைய இடங்களில் மலம் கழிந்து வைக்கப்பட்டிருந்த து. எல்லோரும் ஏதோ ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டும் எச்சில் துப்பிக்கொண்டும் மவுனமாய் வெளியே நின்றிருந்தார்கள். சற்று நேரத்தில் போலீஸ், பத்திரிகையாளர்கள், உள்ளூர்ப்பிரமுகர்கள், எம்.எல்.ஏ.. கூடைப்பாக்கத்தான் என்று எல்லோரும் கூடி விட்டார்கள்.
தலைவருக்கும் கூடைப்பாக்கத்தானுக்கும் இச்சம்பவம் பெரிய அவமானமாகப்பட்ட து.
சனங்களுக்குள் சின்ன சந்தோசம் துளிர்விட ஆரம்பித்தது.
அந்த முடிவு. உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் விதத்தை எழுதுவதும், அவர்களின் சார்பாக நின்று விவாதிப்பதும், போராட த்தூண்டுவதும் இட துசாரிக் கலை இலக்கியக் கோட்பாட்டின் முதன்மையான வலியுறுத்தல் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கதையின் புனைவியல் அம்சம் புரியக்கூடும்.
தலித்தியத்தின் வரவு: கதைசொல்லலின் மாற்றங்களும்
விழி பா.இதயவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு அச்சாகி வந்த ஆண்டு (1991) தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்த ஆண்டு. அந்த ஆண்டுதான் அறிஞர் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதனைக் கொண்டாடத் தொடங்கிய மக்களின் எழுச்சியும் திரட்சியும் கருத்தியல்களாக உருவாகி இந்திய சமூகத்தின் போக்கைத் தீர்மானிக்கத் தொடங்கியன. அந்தத் தாக்கம் தமிழ்க் கலை இலக்கியப்பரப்பிலும் செல்வாக்கோடு – தலித்தியமாக உருவாகி வந்தது. தலித்தியத்தின் நுழைவு, அதுவரை பொதுவான வார்த்தைகளெனக் கருதப்பட்ட ‘எழுத்தாளர்’ ‘வாசகர்’ என்பனவற்றையும் மறுத்துப் புது வரையறைகளைக் கோரியது. தலித் எழுத்தாளர், பிற எழுத்தாளர் என வேறுபடுத்தப்பட்டு, மற்றவர்கள் எழுதிய தலித் படைப்புகளின் நிலைப்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. தலித் அல்லாத ஒருவரின் தலித் படைப்பு, தலித் படைப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் பேசப்பட்டன. தலித்தியத்தின் வரவிற்குப்பின் தலித் எழுத்தாளர்களின் கதையாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துள்ளனவாகச் சிலவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம்.
· சாதி சார்ந்த முரண்களைப் பேசி எச்சரிக்கை விடுக்கும் தொனியில் எழுதினார்கள்.
· சாதி அமைப்பின் நிலையை விவரித்து அதை இல்லாமல் ஆக்குவதற்கான ஆயத்தப்படுத்தல் வெளிப்பட்டன. ஆயத்தப்படுத்தியுள்ளன
· பிற சாதிகளுக்குப் பெருமைகளும் அடையாளங்களும் இருப்பதுபோலத் தலித் சாதிகளுக்கும் பெருமைகளும் அடையாளங்களும் உள்ளன என்பது எடுத்துக் கூறி நிறுவியுள்ளன.
· சாதிரீதியான ஒடுக்குதலின் தன்மைகளைச் சான்றுகளால் அடுக்குவதன் மூலம் நியாயம் கேட் டுள்ளன; நியாயப்படுத்தவும் செய்துள்ளன
· வரலாற்றைக் கூறிப் பழிவாங்கத் துடித்துள்ளன
· நிகழ்கால இருப்பிலும் நியாயம் இல்லையென வாதிட்டுள்ளன
· நிலைமைகளைப் படம்பிடித்து இரக்கத்தை உண்டாக்குவதற்கு முயன்றுள்ளன.
இந்த மாற்றத்தை உள்வாங்கிய எழுத்தாளர்களின் எழுத்துகளை நுட்பமாகக் கவனித்துப் பார்த்தபோது, தலித் எழுத்தாளர்களிடம் வெளியையும் கதாமாந்தர்களையும் தேர்வு செய்வதில் குறிப்பான மாற்றம் நிகழ்ந்ததை உணர முடிந்தது. அதிகமும் தலித்துக்கள் வாழும் சேரிகளையும் குடியிருப்புகளையும் படைப்பு வெளியாகவும் அவற்றில் வாழும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாகவும் முன் நிறுத்துகின்ற போக்கு முதன்மைப்பட்டது. இதன் முதன்மை அடையாளமாக விழி பா. இதயவேந்தனின் கதைகள் இருந்தன என்பதை இப்போது வாசிக்கும்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் தலித் அரசியல், தலித் பண்பாட்டு இயக்கம் போன்றவற்றின் நிகழ்வுகளை உடனிருந்து கவனித்து அதனோடு பயணித்துத் தன்னை உருமாற்றிக் கொண்டவர் அவர். அந்த மாற்றம் அவரது இரண்டாவது தொகுப்பான ‘ வதைபடும் வாழ்வு’ கதைகளிலேயே வெளிப்பட்டுள்ளது.
வெளிகளும் கதாமாந்தர்களும்.
விழி பா.இதயவேந்தனின் கதைகளில் அதிகமும் எழுதப்பட்ட வெளிகளாக இருப்பவை கிராமப்புறத்துச் சேரிகளும் நகர்ப்புறக் காலனி வீடுகளாகவும் உள்ளன. கிராமப்புறச் சேரிகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்டவர்களைவிடவும் நகர்ப்புறத்து விளிம்பு நிலை வெளிகளும் மனிதர்களுமே அதிகமும் கதைகளில் இடம்பெற்றுள்ளன்ர். குறிப்பாக நகரசுத்தித் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களுக்குக் கட்டித்தந்த காலனி வீடுகளும் அதில் குடியிருந்த மலம் அள்ளும் தொழிலாளர்களுமே அதிகப்படியான கதைகளில் இடம்பிடித்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட கதைகளில் வரும் மனிதர்கள் பழைய வகை கழிப்பறைகளிலிருந்து மலத்தை வளித்து எடுத்து வண்டிகளில் நிரப்பிக் கொண்டுபோகும் அவலமான வேலைகளைச் செய்பவர்களே. அதிலும் பெண்களே இந்த வேலைகளைச் செய்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபடுவதால் அதனை மறக்கவும் உடல் சலிப்பைப் போக்கவும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், கடன் வாங்கியாவது குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களையும் கதைகளின் பாத்திரங்களாக்கியுள்ள ஆசிரியர், சாதிக்குள்ளேயே சுரண்டுபவர்களும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் எப்படி உருவாகி வளர்கிறார்கள் என்பதைப் பூச்சின்றி வெளிப்படுத்தியுள்ளார்.
உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய தொழிலாகப் பலரும் குறிப்பிடும் ஒன்று மனிதர்களின் மலத்தை மற்ற மனிதர்களைக் கொண்டு அள்ளச்செய்யும் தொழிலாகும். அதேபோல் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கும் பணியைச் செய்யும் துப்புரவுப்பணிகள் போன்றனவற்றிற்கும் மாற்றுவழி காணப்பட வேண்டும் என்றே நவீன வாழ்க்கையை விரும்பும் பலரும் எழுதுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இவற்றையெல்லாம் செய்ய நவீன எந்திரங்களும் தானியங்கிக் கருவிகளும் வந்துவிட்டன. ஆனால் நவீன இந்தியாவில் அதிகப்படியான மனிதர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நிலையே தொடர்கின்றன. இதனைத் தொடரும் நிலையில் இருக்கும் அவலத்தையும் மனிதத் தன்மையற்ற நிலையையும் அறிய மறுப்பவர்களுக்கு விழி பா. இதயவேந்தனின் கதைகளை படிக்கக்கொடுத்தால் உடனடியாகப் புரியத் தொடங்கும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் இனத்தவர்களாகச் சுட்டப்படும் சாதிகளின் பெயர்கள் நேரடியாகக்குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்களின் தொழில், வாழிடம், அவர்களை மற்றவர்கள் நடத்தும் முறைமைகளைக் கொண்டு தீண்டாமையின் குரூரமான இயங்கு நிலைகளைக் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். அன்றாட உணவுத்தேவைக்கான பாடுகளை எழுதுவதைவிடவும் சோறு, கறிச்சோறு, மீன்சோறு போன்ற உணவுகள் அவர்களின் வாழ்க்கையில் அரிதான ஒன்றாக இருப்பதைக் கதைகளைத் தலைப்பாக்கியே விவரிக்கிறார்.மீன் சோறு சாப்பிட முடியாமல் போன துயரத்தைச் சொல்லும் ஆசை கதையும் அத்தகையதொரு கதையே.
விழி பா.இதயவேந்தனின் கதை சொல்லிகள் பெரும்பாலும் விவரம் தெரிந்தவர்களும் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தத்தன்மைக்குக் காரணம் அவரே தன்னைக் கதை சொல்லும் பாத்திரமாக்கிக் கொண்டு எழுதியுள்ளார் என்பதின் வெளிப்பாடு. படிப்பு காரணமாக அரசு வேலைக்கு சென்றவர்கள் தன்னைவிடக் கீழான வாழ்க்கைக்குள் இருக்கும் பெற்றோர்களுக்கும் இளவயதில் உதவிய உறவினர்களுக்கும் உதவமுடியாமல் தவிக்கும்போது வெளிப்படும் குற்றவுணர்வுத் தவிப்பைப் பல கதைகள் முன்வைத்துள்ளன. சாதியின் இருப்பும் தன்னிலை உருவாக்கமும் ஏற்படுத்தும் தவிப்புகளைச் சொல்வதற்கு வாழிடச் சிக்கல்களைப் பின்னணியாக்கிக் கதைகளை எழுதிய நிலையை இவரது முக்கியமான உத்தியாகச் சொல்ல முடிகிறது அரசு குடியிருப்புகளின் மோசமான நிலை, வாடகைக்கு வீடு கிடைக்காத நிலை, கிடைக்கும் வீடுகளுக்குப் பெற்றோரையோ, உறவினரையோ அழைத்து வந்து உடன் வைத்துக்கொள்ள முடியாத தவிப்பு போன்றவற்றை எழுதும்போது கதைக்குள் இடம் பெறும் பாத்திரங்களின் அந்நியமாதல் வெளிப்பாடுகளும் அதனால் ஏற்படும் குற்றவுணர்வும் பல கதைகளின் உரிப்பொருளாக ஆகியுள்ளன. சிதைவு,கவுரவம், சாமிக்கண்ணு என்றொரு மனிதன் போன்ற கதைகளை வாசித்தால் அவை எழுப்பும் மனவுணர்வுகளின் ஆழத்தையும் வலியையும் உணரமுடியும்
தீண்டாமையால் ஒதுக்கப்படும் மனிதர்களை மட்டுமே அவரது கதைகள் பாத்திரங்களாக்கியுள்ளன என்று குறுக்கிவிட முடியாது. இந்தியக் கிராமங்களில் சேவைச்சாதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், மாடுகளுக்கு லாடம் கட்டுபவர்கள், நாடோடிகளாக அலையும் குறவர்கள், பழங்குடி இருளர்கள் போன்றவர்களும் அவர்களின் பாடுகளும் குறிப்பான சில கதைகளில் இடம் பெற்றுள்ளன. ஆதாரம் கதை முழுமையும் இருளர் பழங்குடியினரின் சான்றிதழ் சார்ந்த இன்மையை விவாதிக்கும் கதையாகும். பட்டியலின மனிதர்களுக்கு அரசாங்கம் தரும் சலுகைகளையும் மானியங்களையும் பெறுவதற்கான சாதிச்சான்றிதழைப் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், லஞ்சமும் மேட்டிமைத்தனமும் செயல்படும் அரசு நிர்வாகத்தையும் விமரிசிக்கும் கதைகளையும் எழுதியுள்ள விழி பா இதயவேந்தன் கவனப்படுத்தும் மனிதர்களாகக் கலப்புத் திருமணம் செய்தவர்களின் அகவாழ்க்கைச் சித்திரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதேபோல் பட்டியலின சாதிகளுக்குள் செயல்படும் உறவின்மை மற்றும் ஒதுக்கல்களையும் கோடி காட்டும் கதைகளை எழுதியுள்ளார் என்றாலும் சில தலித் எழுத்தாளர்களின் கதைகளில் வெளிப்படுவதைப்போலப் பெரும் முரண்பாடாகவும் வன்ம வெளிப்பாடாகவும் காட்டப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
விழி பா.இதயவேந்தனின் கதைகளை வாசித்து கதைவெளிகள், கதாபாத்திரங்களின் சாதிய அடையாளங்கள், கதைகளின் விவாதமையங்கள், காலப்பின்னணியற்ற கதைப்போக்கு, கதைசொல்லிகளின் இடமும் அடையாளங்களும் எனப் பட்டியலிட்டுப் பகுப்பாய்வு செய்யும் நிலையில் அவரது படைப்புலகையும் கருத்துலகையும் துல்லியமாக விளக்கமுடியும். அதற்கான தூண்டுகோலாக மட்டுமே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள்