· காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது. அவை:
1. நிகழ்ந்தனவற்றைப் புனைவாக்கம் செய்வதில் கலையின் இடத்தையும் ஆவணத் தன்மையின் இடத்தையும் சமப்படுத்தும் தன்மை.
2. குறிப்பான வெளியிலும் காலத்திலும் சினிமாவின் காட்சிகளை நிறுத்திக் காட்டுவது
3. மையப்பாத்திரத்தை மட்டும் வளர்நிலைப் பாத்திரமாக வளர்த்தெடுக்காமல், துணைப் பாத்திரங்களுக்கும் முழுமையான வளர்ச்சிநிலைகளை உருவாக்குவது
4. பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்வதும், தேர்வு செய்த நடிகர்களைப் பாத்திரத்தில் பொருத்தமாக நடிக்கச் செய்வதும்.
5. கதையோட்டத்தின் பகுதியாகப் பாடல்களையும் பாடல் காட்சிகளையும் இணைத்து காட்சி இன்பத்தைப் பார்வையாளர்களுக்குத் தருவது.
6. பார்வையாளர்களை ஒற்றைத்தளப்பார்வையாளர்களாகக் கருதாமல் பலதளத்திலும் இருப்பவர்களாகக் கருதிப் படத்தின் முதன்மை உணர்வைக் கடத்துவது.
சிறந்த இயக்குநர்கள் ஒவ்வொருவரிடத்திலும் இத்தகைய கூறுகளைத் தொகுத்துப் பேசுவதன் மூலம் அவர்களின் கலையியல் பார்வையையும் சினிமாவை உருவாக்குவதில் அவர்களுக்கு இருக்கும் திறனையும் அறிந்துகொள்ள முடியும். பைசனின் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ள ஓர்மை, உணர்வுத் திரட்சி, வெளிப்படுத்திய பாங்கு ஆகியனவற்றின் வழியாக இயக்குநர் மாரி.செல்வராஜ் தன்னையொரு முழுமையான இயக்குநராக முன்வைத்துள்ளார் என்று தோன்றுகிறது. அதனை ஒவ்வொன்றாக விளக்கிப் பேசிக் காட்டுவதன் மூலம் தமிழில் ஒரு முழுமைச் சினிமாவாகப் பைசன் காளமாடன் வந்துள்ளது எனச் சொல்கிறது கட்டுரை.
காளமாடன்: நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்
எல்லாக் கலைகளிலும் நிகழ்ந்தன கொஞ்சம் இருக்கும்; அவற்றின் மேல் உருவாக்கப்படும் புனைவாக்கமே அதனைக் கலையாக்குகிறது என்பது உலகெங்கும் நம்பப்படும் ஒன்று. எழுத்துக் கலைகளை விடவும் காட்சிக்கலைகளில் காட்டப்படும் புனைவுகள், நிகழ்ந்தன என நம்பச் செய்வதின் வழியாகப் பார்வையாளர்களைத் தன் வசப்படுத்துகின்றன. நிகழ்ந்தன என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாடகம், சினிமா போன்ற காட்சிக்கலைகளில் வெளியும் காலமும் முதன்மையாக உதவுகின்றன. அடுத்த நிலையில் தான் அதற்குள் உலவும் பாத்திரங்கள் பயன்படும்.
***** *****
‘தகுதிக்கும் திறமைக்கும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளையும் உயர்வுகளையும் யாரும் தடுத்துவிட முடியாது’ என்ற சொற்றொடர் இங்கே திரும்பத்திரும்பச் சொல்லப்படுகின்றது. ஆனால் சாதியப் பிளவுகளும் படிநிலைகளும் கொண்ட இந்தியாவில் எவர் ஒருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் நடைமுறை. சாதி அடுக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கப்படுகிறவர்களாகவும் இருக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வாய்ப்பும் எளிதில் கிடைப்பதில்லை;அவர்கள் தொடர்ந்து தங்களை நிரூபிப்பதற்காகப் பல தடைகளையும் வன்மங்களையும் தாண்டித்தான் வரவேண்டியுள்ளது என்பதைப் படத்தின் செய்தியாகச் சொல்ல நினைத்த இயக்குநர் படத்தில் இரண்டு கதைப் பின்னல்களை உருவாக்கியுள்ளார். இரண்டு கதைப்பின்னல் நிலையிலும் இருக்கும் நிகழ்வுகளும் பாத்திரங்களும் உண்மையானவை என்றும் நிகழ்ந்தவை என்றும் காட்டுவதின் மூலம் இந்தப்படம் தமிழ்நாட்டின்/ இந்திய சமூகத்தின் நடப்பியல் உண்மைகள் எனக் காட்ட முன்வைந்துள்ளார் மாரி.செல்வராஜ். அதில் முழுமையாக வெற்றியும் பெற்றுள்ளார்.கிட்டான் என்னும் தனிமனிதப் பாத்திரம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மணத்தி கிட்டானின் இரண்டு நாள் நினைவுகளே படத்தின் மொத்த நிகழ்வுகளாக இருக்கின்றன. ஜப்பானில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானோடு மோதி வென்றால் தங்கப்பதக்கம் என்ற நிலையில் கடைசி வரை விளையாடும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறாமல் தடுக்கப்படும் நிலையில் அவனது நினைவுகள் ஒரு பகுதி. இன்னொரு பகுதி வாய்ப்புக் கிடைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தானை வென்று தங்கப்பதக்கம் பெற்றதால் உண்டாகும் நினைவுகளும் வெற்றியும் பாராட்டுகளும்.
இரண்டு நினைவோட்டங்களுக்குள் ஒரு கிராமத்து இளைஞனின் கபடி விளையாட்டு ஆர்வம், அதில் சாதிக்க நினைத்த மூர்க்கம், சாதி அடுக்கில் அடிநிலையில் இருக்கும் காரணமாக இதுபோன்ற சாதனைகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அனுபவமாகவும் நடைமுறையிலும் உணர்ந்துகொண்ட தந்தை வேலுசாமி, தந்தையின் பிடிவாதத்திற்கு உடன்படாத அக்காள் ராஜி, அவனது ஆர்வத்தையும் உடல் திறனையும் அறிந்து எல்லாவகையிலும் அவனுக்குத் துணையாக நிற்கும் விளையாட்டு ஆசிரியர், அவனைச் சிறுவயதிலிருந்தே காதலிக்கும் -அவனைவிட வயதில் மூத்த உறவுக்காரப் பெண், குடும்பப் பகை காரணமாக அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாத ராணியின் குடும்பம் எனப் பின்னப்பட்ட கதைப்பின்னலின் நிகழ்வு வெளி தூத்துக்குடி மாவட்டச் சிறுகிராமம். அங்கிருந்து சென்னைக்கு நகர்ந்து மாநில அணிக்காகத் தேர்வு, ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் கபடி அணிக்கான தேர்வு என்ற நினைவுகளை அடக்கிய பின்னலே முதன்மைக் கதைப்பின்னல். ஏனென்றால் உறுதியான கொம்புகள் கொண்ட காளமாடனைப் போல உடலுறுதியும் எதிரணியைத் திணறடிக்கும் வேகமும் தாவும் சக்தியும் கொண்ட கபடி விளையாட்டுக்காரனின் கதை இது என்ற குறிப்பில் தான் படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
மையப்பாத்திரத்தையும் எதிர்நிலைப் பாத்திரத்தையும் புனைவாகக் உருவாக்கிக்கொண்டு மோதல், வளர்ச்சி, உச்சநிலை, முடிவு என்றொரு கதைப்பின்னலை உருவாக்கித் தந்த சினிமாக்களே சிலவகையான உத்திகள் மூலம் இயற்பண்பியல் சினிமாக்களாகவும் நடப்பியல் சினிமாக்களாகவும் காட்டின. கதைப் பின்னலுக்கு நகரம் அல்லது கிராமம் என்றொரு புனைவு வெளியையும் புனைவுக்காலத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதியிலுள்ள நகரங்களின் பெயர்களையோ, கிராமங்களின் பெயர்ப்பலகைகளையோ காட்டுவதன் மூலமும் அந்தப் பகுதி மக்கள் பேசும் வட்டாரமொழி, திருவிழாக்கள், அவற்றில் இடம்பெறும் சடங்குகள், ஆட்டங்கள் போன்றவற்றில் உண்டாக்கும் உண்மைத் தன்மை வழியாகவும் அந்தப் படங்களை மண் வாசனைப் படங்கள் அல்லது வட்டார சினிமாக்கள் எனக் காட்டி வந்தனர். அவ்வகை சினிமாக்கள் குறிப்பான சாதிகளின் திருமணச்சடங்குகள், இறப்புச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகளின் கூறுகளில் காட்டும் நெருக்கத்தின் வழியாக நம்பகத்தன்மையை உருவாக்கின, மதுரை மாவட்டப் படங்களாகப் பாரதிராஜாவின் படங்கள் அறியப்படுவதற்கும் ஆர்.வி உதயகுமாரின் சினிமாக்கள் கொங்குசினிமாக்களாக அறியப்பட்டதற்கும் இந்தக் கூறுகளே காரணங்களாக இருந்தன. யார் யார் படங்கள் எந்தெந்த வட்டாரங்களையும் சாதிகளையும் அடையாளப்படுத்தின என்பதை விரிக்கவேண்டியதில்லை. அந்தப் போக்கிலிருந்து மாரி.செல்வராஜ் இன்னொரு போக்கின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மட்டுமே இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.
பைசன் - காளமாடனில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள், அவை உலவும் வெளி, நிகழ்வுகள் நடந்த காலம் என மூன்று கூறுகளும் முழுமையான உண்மைகள் என்று காட்ட நினைக்கவில்லை இயக்குநர் மாரி.செல்வராஜ். ஆனால் உண்மையின் சாயல்கள் நிரம்பியதே மொத்தப்படமும் எனக் காட்டியுள்ளார். அதற்காகப் படத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு கூறுகளிலுமே உண்மைகள் இருக்கின்றன எனச் சொல்கின்றார். மையப்பாத்திரமான கிட்டான் என்ற புனைவுப்பாத்திரம் தூத்துக்குடி மாவட்டத்துக் கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் சாயலைக் கொண்டது என்பது கதைக்குள் இல்லை. ஆனால் படத்திற்கு வெளியே இருக்கிறது.
ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்ற கணேசன் தான் இந்தப் படத்தின் நாயக நடிகரான துருவ் விக்ரமுக்குக் கபடி விளையாட்டின் நுட்பங்களை அவர் விளையாண்ட கிராமத்து வெளிகளிலேயே சொல்லித் தந்துள்ளார். அவரது வாழ்விலும் கிட்டான் சந்தித்த தடைகளையும் கிடைத்த உதவிகளையும் பெற்றுள்ளார். கணேசன் குறித்த தகவல்களும் வாழ்க்கைக் கதையும் கிட்டானின் பாத்திரத்தை உண்மைப் பாத்திரமாக நம்பவைக்க உதவியிருக்கிறது. அந்த நம்புதலின் பேரில் கிட்டானின் மொத்தக் குடும்பப் பின்னணியும், தன் வயதைத் தாண்டிய பெண்ணின் மீது காமமும் காதலும், அவளின் குடும்பத்தினரின் எதிர்ப்பும், உறவுக்காரர்கள் என்றாலும் பகையாளிகள் என்ற முடிச்சும் புனைவுக்கான முடிச்சுகளைக் கச்சிதமாக உருவாக்கியுள்ளன.
சாதிய மோதல் மட்டுமல்லாமல், உள்பகை காரணமாகவும் ஒருவர் மீது ஒருவர் பகைகொண்டலையும் கிராமத்து வாழ்க்கையில் தன் மகனின் ஆசை நிராசையாகவே முடியும் என நம்பும் வேலுசாமி (பசுபதி) பாத்திரமோ, நல்ல விளையாட்டு வீரனைத் தத்தெடுத்து வளர்ப்பதுபோல் வளர்த்துத் தனது பணிக்கான அடையாளமாக வாழும் விளையாட்டு ஆசிரியர் பாத்திரமோ பொய்யான பாத்திரமாக இருக்கவேண்டியதில்லை. குடும்பப்பகைக்காகத் தன் குடும்பத்துப் பெண்ணின் விருப்பத்தை மறுக்கும் பாத்திரமும் அதன் வார்ப்பும் இயல்புகளும் அந்தக் கிராமத்தின் வாழ்வியலில் இருக்கக் கூடிய பாத்திரங்களே. முழுவதும் கற்பனையானவை எனத் தள்ளிவிட முடியாதவை. இந்தப் பாத்திரங்களுக்கெல்லாம் நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதிலும் பயிற்சி அளித்துப் பாத்திரங்களாக ஆக்கியிருப்பதிலும் இயக்குநரின் திறமை வெளிப்படவே செய்கின்றது.
சாதிய மோதல்கள் என்னும் பின்னணி
1990 களின் தொடக்க ஆண்டுகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனன்று கொண்டிருந்த சாதியப்பிளவுகளும் மோதல்களும் காளமாடனில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் நிகழ்வுகளும் படத்திற்கான காலகட்டப் பின்னணியைத் தந்துள்ளன. இந்தப் பின்னணியும் சாதியத் தலைமைகளாக வரும் பாண்டியராஜாவும் கந்தசாமியும் மாற்றுப்பெயர்களில் வரும் உண்மைப் பாத்திரங்கள் என்பதைச் சொல்லவே 1994 எனத் தொடக்கத்திலேயே ஆண்டைக் குறிப்பிட்டுப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர். கபடி விளையாட்டு வீரன் கிட்டானின் வாழ்க்கைக் கதையில் அந்த இருவருக்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால் கதைப்பின்னலின் போக்கில் பாண்டியராஜா கந்தசாமி என்ற இருபெரும் ஆளுமைகளின் இருப்பும் வளர்ச்சியும் மோதலும் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் சாதிய மோதல்களையும் தாக்குதல்களையும் பலிகளையும் தாங்கி வந்த நாளிதழ்களின் விளம்பரத் தட்டிகளையும் நக்கீரன், தராசு, ஜூனியர் விகடன் போன்ற பரபரப்புப் புலனாய்வு இதழ்களின் அட்டைப்படங்களையும் காட்டுவதன் மூலம் உண்மைத் தன்மையைக் கூட்டியுள்ளார். நடக்கக்கூடிய வன்முறைக் காட்சிகள், சண்டைகள், கலவரம் போன்றவற்றைக் காட்டுவதில் உண்மைக்கு நெருக்கமாகக் காட்சிகளைச் சித்திரித்துள்ளார்.
பாண்டியராஜா(அமீர்) பட்டியல் சாதிகளில் ஒன்றான பள்ளர் சாதிகளின் தலைவர்களின் – பசுபதி பாண்டியன், ஜான் பாண்டியன் போன்றவர்களின் கலவையான அடையாளம் என்றால் கந்தசாமி நாடார்களின் சாதித்தலைவர் என்ற அடையாளத்தோடிருந்த வெங்கடேசப் பண்ணையார், செல்வின் நாடார் போன்றோரின் கலவையான அடையாளம். அத்துடன் கபடி விளையாட்டின் மீதிருக்கும் ஆர்வத்திலும் அதனைத் தன் பகுதியில் வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் திறமையான வீரர்களைக் கண்டறிந்து மாநில அளவில் பங்கெடுக்கத் தூண்டும் நபராக வரும் கந்தசாமி திருச்செந்தூரில் பல விளையாட்டுகளை வளர்த்தெடுத்து தனது கிளப் வீரர்களை மாநில அளவுப் போட்டியிலும் தேசிய அணியிலும் இடம்பிடிக்கச் செய்த ஆதித்தனார் குடும்பத்து ஆளுமைகளும் அதற்குள் அடக்கம்.
பாண்டியராஜ், கந்தசாமி பாத்திரங்களை ஏற்று நடிக்கத் திறமான நடிகர்களான அமீரையும் லாலையையும் தேர்வு செய்து பொருத்தியதும் கூடக் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. அத்தோடு கிட்டாணின் தந்தையாகப் பசுபதித் தேர்வு செய்திருப்பதும் தேர்வுக்குழுத்தலைவராக வரும் அழகம்பெருமாளும், கோச்சாக வரும் லெனின்பாரதியும் நடிப்பின் நுட்பங்கள் தெரிந்தவர்கள். அதே நேரம் கிட்டான் ,ராணி, ராஜி போன்ற பாத்திரங்களுக்குத் தேர்வு செய்யப்பெற்ற துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஸா போன்ற நடிப்புக்கலைஞர்களும் பாத்திரங்களை உள்வாங்கி நடிப்பவர்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.
படப்பிடிப்பும் பாடல் காட்சிகளும்
ஒரு சினிமாவில் காட்சிகளின் மீது அழகியல் ரீதியான ஈர்ப்பை உருவாக்குவதில் காமிராவின் சட்டகத்திற்குள் இடம்பெறும் பொருட்களின் இருப்பும் அசைவுகளும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அவற்றின் வழியாகவே இடங்களையும் காலகட்டத்தையும் உருவாக்கிக் காட்ட முடியும். அதன் வழியாகவும் படத்திற்கு நம்பகத்தன்மையோடு உண்மைத் தன்மையையும் உருவாக்கலாம். இந்தப் பணிக்கு உதவுபவர்கள் கலை இயக்குநரும் அவரது குழுவினரும். அவர்களோடு சேர்ந்து உடை, ஒப்பனைக் கலைஞர்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
அன்றாட நடப்புகளைக் காட்டும் காட்சிகளைக் கிராமத்துத் தெருக்களிலும் பள்ளி வளாகத்திலும் சாலைகளிலும் குளக்கரையிலுமாக அந்தந்த இடங்களிலேயே படம் பிடித்துள்ளனர். கலவரக் காட்சிகளைக் கூட உண்மையான கிராமத்துத் தெருக்களிலும் தோட்டப்புறத்துச் சாலைகளிலும் பிடித்திருப்பது புலப்படுகிறது. இவற்றைத் தாண்டிப் பாடல் காட்சிகளில் வண்ணங்களையும் பொருட்களையும் ஆடைகளையும் தேர்வு செய்து உருவாக்கிய விதம் பாராட்டும்படியாக இருக்கின்றன. கதையோட்டத்தோடு நேரடியாகத் தொடர்பில்லாத பாடல்களின் வரிகளும் இசைக்கூறுகளும் படத்தின் முதன்மையான தொனியையும் நோக்கங்களையும் நினைவூட்டும் வரிகளையும் சொற்களையும் கொண்டிருக்கின்றன.
படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் இயக்குநர் மாரி.செல்வராஜே எழுதியுள்ளார். அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகவே சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனது மகனின் விருப்பம் நிறைவேற வேண்டுமென்ற வேண்டுகோளோடு வேலுசாமியாக நடிக்கும் பசுபதி ஆடும் திரியெடுப்பு ஆட்டத்திற்கான பாடல் வரிகளும் இசைக்கோலமும் காட்சிக்குரிய திளைப்பு. சின்மயியும் விஜய் யேசுதாஸும் இணைந்து பாடியுள்ள தாலாட்டுத்தன்மை கொண்ட சீனிக்கல்லு பாடல் திரும்பத்திரும்பக் கேட்க வைக்கும் செவிக்குரிய இசைக்கோலம்.
பேசும் அரசியல் சொல்லாடல்
இந்திய சமுதாயத்தில் நிலவும் சாதியப் பிளவுகளையும் அடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் ஒதுக்குதலையும் ஒதுங்குதலையும் விவாதிக்கும் மாரி.செல்வராஜின் படங்கள் அறியப்பட்ட தலித்திய படங்களிலிருந்து வேறுபட்டனவாக இருக்கின்றன. இதுவரையும் ஒடுக்கி வந்த சாதிக்குழுவினரை அச்சமூட்டி இனியும் ஒடுக்குதல் சாத்தியமில்லை என எச்சரிப்பதோ, ஒடுக்கப்பட்டவர்களும் ஆயுதத்தை எடுத்துவிட்டார்கள் எனவே அடங்கிப்போவதே இனியான நிலை என எச்சரிக்கை விடுப்பதையோ அவரது சினிமாக்கள் அரசியல் சொல்லாடல்களாக வைக்கவில்லை. மாறாக முரண்படும் சாதிகளிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தி மனமாற்றத்தைக் கோரும் காட்சிகளையும் கருத்துகளையும் அரசியல் சொல்லாடலாக முன்வைக்கின்றன. மக்களாட்சியை -சமூகநீதியை ஏற்றுக் கொண்ட காலச்சூழலைப் புரிந்துகொள்ளும்படி கேட்டுப் பார்க்கின்றன. அரசியல் அமைப்பும் சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகார அமைப்புகளையும் புரிந்து கொள்ளவில்லையென்றால் இரண்டுபக்கமும் இழப்புகளைச் சந்திக்கவே நேரும் என்பதைச் சுட்டிக்காட்டவும் செய்கின்றன. இந்தப் பார்வை அவரது முதல் படமான பரியேறும்பெருமாளிலேயே வெளிப்பட்டது. மாமன்னனில் இன்னும் கூர்மைப்பட்டது. இப்போதுள்ள கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் அரசியல், தனித்திறன் வளர்ப்பு, சாதிக்கும் தன்மைக்கான உரிமைகோரல் போன்றனவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் ஒதுக்கப்பட்ட/ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை மறுக்கும் இடங்களை ஒவ்வொரு படத்திலும் காட்சிப்படுத்தி வருகின்றார் மாரி .செல்வராஜ்.
குறிப்பான வெளியில் மோதிக்கொள்ளும் இரண்டு சாதிகளுக்கிடையே இருக்கும் முரணையும் மோதலையும் கூர்மைப்படுத்தி மேலும் மோதல்களை உண்டாக்குவதை அவரது படங்கள் முன்வைக்கவில்லை. நடப்பில் -யதார்த்தத்தில் இருக்கும் சாதிப்பிளவுகளைப் புரிந்துகொண்ட பாத்திரங்கள் அவரது பாத்திரங்கள். ஆனால் இந்தப் பிளவுகளும் ஒதுக்குதல்களும் நியாயமற்றவை; சட்டத்திற்குப் புறம்பானவை என்பதை வலுவாகச் சொல்பவை. இந்தப் படத்தில் கிட்டாணும் அவனது தந்தை வேலுசாமியும் நடத்தும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் இதனை வலுவாகச் சொல்கின்றன.
தகுதியும் திறமையும் மதிக்கப்படும் இந்தியாவாக இல்லாமல், ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை முன்வைத்து ஒதுக்கப்படுகிறவர்களை ஒதுக்கிவைக்கும் போக்கு தொடர்கின்றதைக் காட்சி ரூபமாகக் காட்டும் மாரி.செல்வராஜ் அக்காட்சிகளின் வழியாகவே தனது அரசியல் சொல்லாடலை உருவாக்குகின்றார். உடல் வலு சார்ந்த கபடி விளையாட்டிலேயே கிட்டான் போன்றவர்களை ஓடிக் கொண்டே இருக்கும்படியும், தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்கும்படியும் வலியுறுத்தும் இந்த அமைப்பு, புத்திசார்ந்த பணி வாய்ப்புகளிலும் சேவை சார்ந்த தொழில்வாய்ப்புகளிலும் எத்தகைய ஒதுக்கல்களைச் செய்யாது என்ற கேள்விகளை மறைமுகமாகக் கேட்கும்படி தூண்டுகின்றார். தூண்டப்படும் குற்றவுணர்வுகளின் வழியாக உடன்பாட்டு நிலை மனவுணர்வுகளையும் எதிர்மறை மனவுணர்வுகளையும் சந்திக்க வைக்கமுடியும்; மாற்றமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்பாடு அவரது படங்களின் அடிநாதமாக ஓடிக்கொண்டே இருக்கின்றது. பைசன் காளைமாடனில், அப்படியொரு மனநிலையோடு வெற்றிபெற்ற ஒருவனைப் படைத்துக்காட்டியுள்ளார்.
உயிர்மை/ டிசம்பர்,24
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள்