இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்
சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் சாதனையாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனுக்கும் நாவல் எழுதும் ஆசை இருந்ததின் வெளிப்பாடே அவரது சிற்றன்னை. கவியாக வெளிப்பட்டு முடிந்த அப்துல்ரகுமான் போல, நாடக ஆசிரியராக மட்டுமே வெளிப்பட்டு முடிந்த கோமல் சுவாமிநாதன் போல, சிறுகதை ஆசிரியராக மட்டுமே தனது புனைவு எழுத்துகளைத் தந்த அம்பையைப் போல விதிவிலக்கான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும். அதனால் நாவல் இலக்கியமும் நாவலாசிரியர்களுமே நவீன எழுத்தின் அடையாளங்கள் என்பது மாறாது.
20 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய உலக இலக்கியப்பரப்பு முழுவதிலுமே நாவல் வடிவம் சமகாலத்தை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக நவீனத்துவத்திற்குப் பிந்திய மக்கள் திரளின் வாழ்வியல் போக்குகளைப் பொதுத்தள விவாதமாகவோ, குறிப்பான அடையாளச் சிக்கல்களாகவே எழுதிக்காட்ட நாவல் வடிவத்தைத் தாண்டி இன்னொன்று இல்லை என்ற நிலைதான் உள்ளது. தமிழில் வட்டாரமொழியின் பயன்பாட்டோடு குறிப்பிட்ட பகுதியின் மக்களை எழுத்தில் கொண்டுவர முயன்ற எழுத்தாளர்களின் வருகையோடு நாவல் வடிவம் தமிழின் இலக்கிய வடிவமாக மாறிவிட்டது. அதுவரை எழுதப்பட்ட நாவல்களில் இருந்த மேற்கத்தியச் சாயல்கள் காணாமல் போகத் தமிழின் இலக்கியவியல் அடையாளங்களான முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றையும் பரப்பி வைக்கும் வடிவமாகத் தமிழ்நாவல்கள் மாறிவிட்டன. இந்த இடத்தில் “முதல், கரு, உரிப்பொருள் என்ற மூன்றே, நுவலுங்காலை முறை சிறந்தனவே, பாடலுட் பயின்றவை நாடுங்காலை (தொல்.அகத்திணையியல்.3 ) நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். உரிப்பொருள் என்பது நிகழ்காலத்தமிழில் இருக்கும் உள்ளடக்கம் என்ற சொல்லாடலின் முந்திய வடிவம். கருப்பொருளும் உரிப்பொருளும் காலம், இடம் என்ற பின்னணி அடையாளங்கள் தான். தொல்காப்பியர் பாடலுள் பயில்தல் எனச் சொல்வதை ‘இலக்கியப்பனுவலில் பயிலுதல்’ எனப்பொருள் கொள்ள வேண்டும்.
தமிழ் நாவல் வரலாற்றை அறிந்தவர்கள் 1970-களில் நடந்த மாற்றத்தைக் கவனமாகப் பரிசீலிப்பார்கள். வட்டார நாவல்கள் என்னும் பெயரைப் பெறவில்லையென்றாலும் அதன் அடையாளங்களோடு வந்த நாவல்களே தமிழ் நாவல் வரலாற்றின் முக்கியப் பதிவுகளாக மாறியவை. புராணத் தன்மையும் வரலாற்றுப் புனைவுமாக இருந்த தமிழ் நாவல்கள் குடும்ப வெளிக்குள் நகர்ந்ததும் முடிவுக்கு வந்த காலம் 1960-களின் இறுதி ஆண்டுகள். எழுபதுகளில் தமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நிலப்பரப்பின் குறிப்பான பின்னணிக்குள் நகர்ந்தது. அந்த மாற்றத்தில் இந்த மூன்று நாவல்களுக்கும் -சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை (1966) சா. கந்தசாமியின் சாயாவனம் (1969) கி.ராஜநாராயணின் கோபல்ல கிராமம் (1976) முக்கியமான பங்குண்டு.இம்மூன்றும் அவர்களின் முதல் நாவல் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
இம்மூன்றும் தொடங்கிவைத்த வட்டார நடப்பியல் வாதத்தில் புதிய கிளையை உருவாக்கியது 1990 களில் கிளர்ந்தெழுந்த தலித் இலக்கியப்போக்கு. குறிப்பான வட்டாரங்களின் பொருளியல் நகர்வுகளின் பின்னணியில் அந்தந்த வட்டாரத்தின் மொழிப் பயன்பாட்டை முதன்மைப்படுத்தியதிலிருந்து, தலித் இலக்கியம் சாதிய முரண்பாடுகளை நோக்கி நகர்த்தியது. அதிகமும் வேளாண்மை சார்ந்த சாதிகளிடையே நிலவிய வாழ்வியல் முரண்பாட்டை – சாதி ஆதிக்க முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திப் புனைகதைகள் எழுதப்பட்டன. குறிப்பாகத் தீண்டாமையக் கடைப்பிடிக்கும் கிராமிய வெளிகளைக் கதைக்களன்களாக்கி எழுதப்பெற்ற புனைகதைகளில் ஒடுக்கப்பட்ட மனிதர்கள், ஆதிக்க சாதி மனிதர்களிடம் அடங்கிப் போகின்றவர்களாகவும் பாதிக்கப்படுகின்றவர்களாகவும் சித்திரிக்கப்பட்டனர். இந்தப்போக்கைப் பலரும் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சிலரது எழுத்துகள் ஒடுக்கப்பட்ட மனிதர்களிடம் நடந்த நுட்பமான மாற்றங்களைப் பதிவு செய்தன.
1990 -களின் தலித் எழுச்சியின் விளைவாக எழுதப்பட்ட கவிதைகளும், சிறுகதைகளும் நாவல்களும் எண்ணிக்கை அளவில் இப்போது எழுதப்படவில்லை. அப்போது உருவான தலித் அரசியலோடு இணைந்து அவையும் வளர்ச்சி அடைந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எழுதப்படும் தலித் இலக்கியங்கள் தலித் அரசியலின் போக்கோடு இயங்குகின்றன என்று சொல்ல முடியாது. கலை, இலக்கியச்செயல்பாடுகளும் எழுத்தும் தலித் அரசியலோடு முரண்படுகின்றனவா? விலகித் தனி அடையாளங்களைத் தேடுகின்றனவா? என்பதை விவாதிக்கும் தலித்தியத் திறனாய்வுச் செயல்பாடுகளும் இல்லை. தலித் எழுத்து என்பதால் பொதுக்கவனத்தைப் பெற்ற பலரும் இப்போது அந்த அடையாளத்தை மறுப்பவர்களாக மாறியுள்ளனர். அதே நேரம், தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்களை மதிப்பீடு செய்வதின் மூலமாக இதனைச் செய்யமுடியும் எனத் தலித்தியத் திறனாய்வு நம்புவதாகவும் தெரியவில்லை. விவாதிக்க வேண்டிய புள்ளிகள் பல உள்ளன. அபிமானியின் இந்த நாவல் அந்த விவாதங்களில் ஒன்றைக் கொண்டிருக்கிறது.
மக்களாட்சி முறையின் காரணமாகக் கிடைத்த கல்வி, வேலை வாய்ப்புகள் காரணமாகக் கிடைத்த பொருளாதார மேம்பாடு, அதனால் கிடைத்த மேம்பட்ட வாழ்வியல் சூழல் போன்றவற்றைத் தனது கதைப்பரப்பின் வெளிகளாக எழுதியதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். கிராம வாழ்விலிருந்து விடுபட்டு நகர வாழ்க்கைக்குள் வாழத்தொடங்கிய புதிய தலைமுறையினரின் வாழ்வியலில் நடந்த மாற்றங்களைப் பதிவு செய்த சிறுகதைகள் பலவற்றை எழுதியவர் அபிமானி. புதிய வாழ்க்கைக்குள் இருந்துவிட்டுத் திரும்பியவர்கள், மாறாமல் இருக்கும் உறவினர்களை அரசியல்படுத்தும் நோக்கத்தோடு நடத்தும் உரையாடல்களை அவரது புனைகதைகளில் வாசிக்கமுடியும். தனது எழுத்துமுறைமையாக இயற்பண்பியல்வாதத்தைக் கைக்கொண்டிருப்பதும் கூட இந்த நுட்பமான அவதானிப்புக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். இயல்பண்பியல் எழுத்துமுறைமைக்கு நேர்மறைத்தன்மைகளும் உண்டு; எதிர்மறைக்கூறுகளும் உண்டு. வெளியிலிருந்து வரும் முன்முடிவுகளுக்கு ஒத்துப்போகும் தூண்டல்களைச் செய்யாது. கண் முன்னால் நடப்பனவற்றைக் கேள்விகளற்றுப் பதிவு செய்துகொண்டே இருக்கும். நடக்கும் மாற்றங்களுக்கான காரணங்களை விவாதிக்கும் வேலையைக் கூடச் செய்யாது. பெரும்பரப்புகளையும் நீண்ட பயணங்களையும் அவாவி நிற்காது. சமூகத்தின் சிறிய அலகுகளையே எழுதுவதற்கான களன்களைத் தேர்வுசெய்துகொண்டு நுட்பமான விவரணைகளைச் செய்துகொண்டே இருக்கும். அபிமானியின் புனைகளில் இந்தத்தன்மையை ஆரம்பத்திலிருந்தே கவனித்துச் சொல்லிவந்துள்ளேன். அவரது கதைகளின் மனிதர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்ட மலையடிவாரக் கிராமங்களில் - குறிப்பாகக் களக்காடு, மணிமுத்தாறு, முண்டந்துறைப் பகுதிக் கிராமங்களில் வாழ்பவர்கள். அங்கிருந்து பாளையங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற பெருநகரங்களுக்குப் பணி நிமித்தமாகப் போய் வரக்கூடியவர்கள்.
மனசுக்காரன் என்ற தலைப்பில் எழுதப்பெற்ற இந்த நெடுங்கதையும் இயற்பண்பியல் எழுத்துமுறையில் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துமுறை காரணமாகவே காம உணர்வை – பாலியல் ஈர்ப்பை அதன் போக்கில் உணர்ந்த இரண்டு உடல்களின் சேர்க்கையாகக் கணித்துக் காட்சிப்படுத்துகிறது. திருமண வயதைத் தாண்டிய இருவரிடையே ஏற்பட்ட பாலியல் தூண்டல் என்பது இயல்பான ஒன்று என்பதாகச் சந்திப்பை உருவாக்கி, அதனால் உண்டாகும் நெருக்கடியால் நடக்கும் திருமணமாக எழுதிக்காட்டுகிறார். ஆனால் அதனைக் கலப்புத்திருமணம் என்ற அரசியல் சொல்லாடலால் விவாதிக்க நினைப்பவர்கள் ‘நாடகக் காதல்’ என்ற சொல்லாடலில் மறுதலிப்பார்கள். அத்தகைய சொல்லாடலை மறுதலித்துப் பேசும் காட்சிகளை தனது பனுவலின் காட்சிகளாக அடுக்குவதின் மூலம், மக்களாட்சி அமைப்புகள் உருவாக்கியிருக்கும் உடன்பாட்டு நிலைகளை -நேர்மறைப்பார்வையை எழுத முடிந்துள்ளது. இணையும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு சாதியப்பின்னணியை உடையவர்கள் என்பதை உணர்ந்தே இணைகின்றார்கள் என்று காட்டுகின்றார். உச்சமாகக் காவல் நிலையத்தில் நடக்கும் விசாரணையில் எப்போதும் ஆதிக்கசாதியினரின் பக்கமே காவல் துறை இருக்கிறது என்பதாகக் காட்டப்படும் முறையை மாற்றி, அரசமைப்பு உருவாக்கியுள்ள சட்டப்பாதுகாப்பும், அதை நிறைவேற்றவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அவர்களின் விருப்பப்படி எல்லாவற்றையும் மீறமுடியாது என்ற நிலை வந்துள்ளது என்பதையும் எழுதிக்காட்டியிருக்கிறார். அதுவும் அக்காவல் நிலையத்திற்குப் பொறுப்பாக வந்த பெண் காவல் ஆய்வாளரால் இதைச் செய்ய முடிகிறது என்பதாக எழுதியிருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாகவே தனது மனைவியின் தகப்பனாரின் மருத்துவமனை இருப்பைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பான மருமகனின் உதவியைப் புரிந்துகொள்ள வேண்டும். கலப்பு திருமணம் என்ற அரசியல் சொல்லாடல்களின் வழியாக இணைந்தார்கள் என்று விவாதிக்காமல், இயல்பான உறவுகளின் வழியாக அது நடந்தது என்பதைப் புரிந்துகொண்டால் தான், இந்நாவலின் புத்தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

தனிமனிதர்களாகச் சாதியின் இருப்பைச் சுமக்க விரும்பாதவர்களாகவே இருப்பவர்கள் குழுவாக வாழ நேரும்போதே சாதி மனிதர்களாகத் தங்களின் தன்னிலையை உருவாக்கிக்கொள்கின்றார்கள். அதிலிருந்து விலகும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பில் புதிய அமைப்புகளும் அதன் பொறுப்பில் இருக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். இத்தகையதொரு குரலை மென்மையாக எழுப்பிக் காட்டியுள்ளது மனசுக்காரன். இந்த மனசுக்காரான் சாதியால் பீடிக்கப்பட்ட கெட்ட மனசுக்காரன்களை அடையாளப்படுத்தாமல், நல்ல மனசுக்காரன்களின் இயல்பை எழுதிக்காட்டியுள்ளது.
கருத்துகள்