யாதேவியும் சர்வஃபூதேஷுவும்

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது 

பாலியல் படங்களில் - போர்னோ படங்களில் - நடிப்பதை வாழ்க்கையாகக் கொண்டிருந்த அமலீ ஃபார்னியர் என்ற எல்லா ஆன்ஸெல் என்பவளோடு நடத்தும் உரையாடலில் ஸ்ரீதரனின் பேச்சு, கதை நிகழ்வாக இல்லாமல் கருத்துமுரண் சார்ந்த உரையாடலாகவே நீள்கிறது. தனது உடல் வழியாக ஏராளமான பணம் கிடைத்த நிலையில் அவளது உடல் அந்த வேலையை நிறுத்திக் கொண்டுவிட்டது. என்றாலும் அவளது உடலை விதம்விதமான பொம்மையாக்கி விற்றுப் பெரும் பணத்தை அவளது பங்காகத் தரும் வியாபாரப்பண்டமாகத் தான் இருப்பதில் அவளுக்கொரு குற்றவுணர்வும் இருக்கிறது. அதனால் ஏற்பட்ட உடல் உளைச்சலையும் மன உளைச்சலையும் நீவிச் சரிசெய்யும் -உழிச்சில் மருத்துவம் செய்ய கேரளத்திற்கு - பகவதி நாட்டிற்கு வந்திருக்கிறாள் எல்லா ஆன்ஸெல். அவளிடம் இருக்கும் குற்றவுணர்வையும் உடல் அயர்ச்சியையும் தீர்த்து விடுவதோடு புது வாழ்க்கைமுறை ஒன்றைப் பரிசளிக்கவல்லது தனது மரபு மருத்துவமும், அதனை வழிநடத்தும் பராசக்தியும் என்கிறான் ஸ்ரீதர பொதுவாள். 

இரண்டு கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக காட்சி நீண்டுகொண்டே இருக்கிறது. அது முடிந்து இன்னொரு காட்சியாக மாறி ஒரு நிகழ்வை உருவாக்கித் தரும், அதன் தொடர்ச்சியாகச் சிறுகதையின் வடிவம் முழுமை அடையும் என எதிர்பார்த்து வாசிக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆயுர்வேத மருத்துவமனைக்கு வந்துள்ள ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் (நோயாளி) அதே வயது ஆணும் (மருத்துவன்) சந்தித்து உரையாடல் செய்கிறார்கள் என்பதை உருவாக்கித் தரும் கதைசொல் முறை உரையாடலை வளர்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, இன்னொரு நிகழ்வைக் கண்டடையவில்லை. 

********************************* 
அண்மைக்காலத்தில் ஜெயமோகன் அதிகம் கதைகள் எழுதுவதில்லை. ஆனால் எழுதும் பெரும்பாலான கதைகளில் மேற்கத்தியப் பாத்திரங்களை உருவாக்கி, அவர்களோடு முரண்படும் ஒரு இந்தியப் பாத்திரத்தையும் உருவாக்குகிறார். கதை முடியும்போது இந்தியப் பாரம்பரியப்பெருமையைச் சொல்லிவிடும் வேலையைக் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு வெளியேறுகின்றனர் அந்தப் பாத்திரங்கள். கிழக்கும் மேற்கும் சந்திக்கும் பல கதைகளை ஜெயகாந்தனும் எழுதியிருக்கிறார். கிழக்கும் மேற்கும் என்றே கூட அவர் ஒரு கதை எழுதியதுண்டு. அவர் எப்போதும் மேற்கின் தர்க்கங்களோடு இயைந்து கதையை நகர்த்திக் கொண்டுபோய் இந்திய வாழ்க்கைமுறை மாற வேண்டிய ஒன்று என்பதாக நிறுவுவார். அதற்கு மாறாக ஜெயமோகன், இந்தியப் பாரம்பரியமும் சிந்தனை முறைகளும் மனிதர்களும் எல்லாம் அறிந்தவர்கள்; அவர்களை வழிநடத்தும் தெய்வங்கள் எல்லாமுமாக இருப்பவர்கள் என எழுதுகிறார். 

மேல் -கீழ் என்ற சமூக அமைப்பைக் கட்டியெழுப்பி, மனிதர்களை அடக்கிவைக்கும் சிந்தனையை ஏற்று நடக்கச் செய்யும் இந்தியச் சமூக உளவியலை- உருவாக்கிய அறிவை - அதனை நடைமுறைப் படுத்தும் சமய மற்றும் அரசியல் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அவர் தனது கதைகளுக்குள் விவாதிப்பதைத் தவிர்க்கிறார். ஏறிக்கிளைதாவிக் காய்பறித்துவிட நினைக்கும் மனிதர்களுக்கு வழுக்கலையே வழிமுறையாகத் தரும் சமூக அமைப்பு என்னும் மையத்தை -இஃதிய வாழ்க்கை நடப்பை விவாதிக்காமல் ஓரங்களின் அழகில் மயங்கிவிடச் சொல்லும் உத்தியைக் கவனமாகக் கைக்கொள்கிறார். 

சர்வஃபூதேஷு ஒரு நாடகத்தின் இரண்டாம் காட்சி 

நாடக வடிவத்தில் மிகப்பெரிய பகுதி அங்கம் (ACT ) ஐந்தங்க நாடகம் ஆகப்பெரியது. மூவங்க நாடகம் கச்சிதமானது. ஓரங்க நாடகம் உணர் சிக்கனமானது. அங்கத்திற்குள் இருப்பது காட்சி (Scene ) கள் என்பது. ஓரங்கத்திற்குள் காட்சிகள் சில இருக்கலாம். காட்சியை உருவாக்குவது பாத்திரங்களின் உரையாடல். உரையாடல் தான் நாடகத்தின் மிகச்சிறிய வடிவம். இடமாற்றம், காலமாற்றம் மட்டுமல்லாமல் ஒரு பாத்திரத்தின் நுழைவோ வெளியேற்றமோ கூடக் காட்சி மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். 


ஜெயமோகன் ஒரு நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் வல்லினம் கலை இலக்கிய இதழில் பதிவேற்றம் பெற்றுள்ள “ சர்வ ஃபூதேஷு ” சிறுகதை என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. இப்போது அவரது இணையப்பக்கத்தில் படிக்கக் கிடைக்கிறது. இந்தக் கதையைப் படிக்க நினைக்கும் ஒருவர், அதற்கு முன் கட்டாயம் அந்திமழை அச்சிதழில் வந்து அவரது இணையப்பக்கத்தில் கிடைக்கும் ”யாதேவி” யைப் படித்தாக வேண்டும். படிக்காவிட்டால் இக்கதையில் வரும் எல்லா ஆன்ஸெல்லும் மருத்துவர் ஸ்ரீதரப்பொதுவாளும் யார் எனத் தெரியாமல் குழம்புவார்கள். 

யாதேவி ஒரு நாடகத்தின் முதல் அங்கத்தின் முதல் காட்சி.சிறுகதைக்குத்தேவையான இடவர்ணனையோ, பாத்திர அறிமுகமோ, காலப்பின்னணியோ தனியாகத் தரப்படவில்லை. நாடகக் காட்சியாகவே ஆரம்பித்துள்ளது. அக்காட்சியில் இடம்பெறும் உரையாடல் எல்லா ஆன்ஸெல் என்னும் பாலியல் பட நடிகைக்கும், அவளது உடலுக்கும் மனதுக்கும் ஆயுர்வேத முறையில் நீவிக்கொடுத்து மருத்துவப் பார்க்க இருக்கும் ஸ்ரீதரப்பொதுவாள் என்னும் மருத்துவனுக்கும் நடக்கும் உரையாடலின் வழி நீண்டு முடிகிறது.அக்காட்சியில் எல்லாவற்றிலும் தேவியே இருக்கிறாள் என ஆன்ஸெலுக்குப் பாடம் சொல்லும் மருத்துவன் இந்திய மருத்துவத்தின் வழியாக இந்து ஆன்மீகத்தைப் போதிக்கிறான். 

இரண்டாவது காட்சியில் புதிய பாத்திரம் மாத்தச்சன். தனது உடலின் கனத்தையும் மனதின் பயத்தையும் இறக்கிவிட வந்திருக்கும் மாத்தச்சன் என்னும் கத்தோலிக்கக் கிறித்தவனுக்கு எல்லா ஆன்ஸெல் ஏற்படுத்தும் குழப்பமும் ஆசையும் மனப்பிரமையும் பற்றிய உரையாடல்களே - மருத்துவனோடு நடத்தும் உரையாடல்களே இரண்டாவது காட்சி. இந்தக்காட்சியில் கதை நிகழ்வு என எதுவுமில்லை. உரையாடல்கள் மட்டும் தான். அந்த உரையாடல் வழியாக இந்து ஆன்மீகத்தைப் போதிக்கிறான் மருத்துவன் ஸ்ரீதரப் பொதுவாள். எல்லா ஆன்ஸெலைப் பார்த்ததின் தொடர்ச்சியாக நடக்கும் உரையாடலால் நீண்டு முடியும் அக்காட்சியில் பாவம், பாவமன்னிப்பு போன்ற குற்றவுணர்வுக்கு இந்து ஞான மரபின் விளக்கங்களை அளிக்கிறான் மருத்துவன். எல்லாமும் சர்வஃபூதேஷுவின் வினைகளே என்ற விளக்கம் அவனுக்குக் கிடைக்கிறது. 
இரண்டாவது காட்சியின் தொடர்ச்சியாக மூன்றாவது காட்சி எழுதப்படலாம். அதில் முதல் அங்கம் நிறைவு அடையலாம். முதல் அங்கத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது மூன்றாவது அங்கங்கள் கூட எழுதப்படலாம். அப்படி எழுதினால் ஒரு நல்திறக்கட்டமைப்பு நாடகம் கிடைக்கலாம். ஆனால் ஜெயமோகன் அறம் தொடர் போல இதையும் கதைத்தொடராகவே எழுதுவார்; முன்வைப்பார் என நினைக்கிறேன். 
========================================= 

யாதேவி 
https://www.jeyamohan.in/129209#.XlTBtqgzbIU 
சர்வ ஃபூதேஷு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்