பெரிய கார்த்தியல் என்னும் திருக்கார்த்திகை

இந்தியப் பண்பாட்டின் பல்தள வெளிப்பாடு என்பது அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கிறது என்பதைக் குறிப்பான ஆய்வுகள் வழியாக அறியமுடியும். நிகழ்காலத்தில் இந்துமதமாக அறியப்படும் பெருமதத்தின பண்டிகைகளான தீபாவளி, துர்கா பூஜை, யுகாதி, சங்கராந்தி, திருக்கார்த்திகை போன்றன எல்லாக்காலத்திலும் இதற்குள்ளேயே இருந்த பண்டிகைகள் எனச் சொல்லவும் முடியாது. குறிப்பான பண்பாட்டு ஆய்வின் முறைமைகளைப் பயன்படுத்தி, இந்திய அளவில் கொண்டாடப்படும் ஏதாவது ஒரு பண்டிகையைப் பற்றிய ஆய்வைச் செய்யவேண்டும். ஒன்றின் சாயலில் வெவ்வேறு நிலப்பரப்பில் கொண்டாடப்படும் விதங்களைத் தொகுத்துக் கொண்டு எது மூலம்; எந்தக்கூறுகள் இன்னொன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என ஆய்வு செய்வதன் மூலம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விளக்க முடியும்.

 ஒரு பண்டிகையின் நோக்கங்கள், பின்னுள்ள கதைகள், வேண்டுதல்கள், அளிப்புகள் அல்லது பலியிடல்கள், தொடரும் வெளிப்பாடுகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி விவாதிக்கவேண்டும். அத்தகைய ஆய்வுகள் பண்பாட்டாய்வுகளில் புதிய வெளிச்சங்களைத் தரலாம். இந்த மாற்று வடிவங்களை இந்தியப் பண்பாட்டின் மாற்று வடிவங்கள் என்று சுருக்கி விடுவதைவிட இன்று இந்துமதமாக அறியப்படும் ஒன்றின் பல்வேறு மாற்று வடிவங்களாகவும் உட்பிரிவுகளாகவும் கூட விளங்கிக் கொள்ளத் தோன்றுகிறது. இப்போதுள்ள இந்தியாவில் தோன்றி கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருக்கும் இப்பண்டிகைகளில் பல புத்த, சமணப் பண்டிகைகளாகவும் வெளிப்படுகின்றன. இலங்கைத் தமிழர்களின் புலப்பெயர்வு உலகப்பரப்பின் குறுக்கு வெட்டாக நடந்தபின் இன்னும் விரிவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் இந்தியாவிற்குள் நுழைந்த கிறித்தவமும் இதில் சிலவற்றை உள்வாங்கி அதன் மாற்றுவடிவங்களை உருட்டிவிட்டிருக்கிறது.

இணையமும் அதன் துணை விளைவான முகநூல் என்னும் சமூக ஊடகமும் அறிமுகமான நிலையில் ஒவ்வொரு பண்டிகையின் பரம்பலும் அதிகமாகி வருகிறது. நவீனத்துவத்தை நோக்கி நகரவைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் எதிர்நிலையான மரபின் மீது அதிகமான பிடிப்புள்ளவர்களாக ஆக்குகிறது என்பது சுவையான முரண் தான். அதே நேரத்தில் மரபான நம்பிக்கைகளும் சடங்குகளும் வெற்று வெளிப்பாடுகளாக மாறிவிடுவதையும் இந்தச் சுவைமுரண் சொல்லவே செய்கிறது. முகநூலில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கொண்டாட்டங்களின் போதும் அந்தந்தப் பண்டிகைகளின் மாற்றுவடிவங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த மாதம் தீபாவளியைப் பற்றிய மாற்றுவடிவங்கள் வாசிக்கக் கிடைத்தன. இப்போது கார்த்திகை தீபம் பற்றிய மாற்றுவடிவங்கள் வாசிக்கக்கிடைக்கின்றன.

கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்தின் மாற்றுப்பெயர்களாகத் திருக்கார்த்திகை, விளக்கீடு, தீபமேற்றல் எனச் சிலவற்றை வாசித்திருக்கலாம். வெவ்வேறு வெளிசார்ந்த பெயர் மாற்றங்களைப் பார்க்கும்போது எனது அனுபவம் சார்ந்தே இந்தப் பெயர் மாற்றம் வெவ்வேறாக மாறிவந்துள்ளதை நினைத்துக் கொள்கிறேன். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாண்டி எழுமலை போகும் பாதையில் இருக்கும் எனது கிராமம் தச்சபட்டி அந்த நாளை ‘பெரிய காத்தியல்’ என்ற பெயரில் தான் அறிமுகம் செய்தது. தச்சப்பட்டி என் தாய்க்கிராமம். அங்கிருந்து குறுக்காக நடந்தால் 4 மைல் தூரத்தில் இருந்த அதிகாரிபட்டி என் தந்தைக்கிராமம். இவ்விரண்டு கிராமங்களுமே அந்தப் பெயரில் தான் சொல்லி வளர்த்தன.

தமிழில் ஒவ்வொரு மாதங்களின் பெயர்களோடு சேர்த்துச் சொல்லப்படும் சொலவடைகளுக்கும் அந்தந்த மாதங்களில் வரும் பண்டிகைகளுக்கும் வாழ்வியலுக்கும் தொடர்புகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐப்பசி மாதத்தையும் கார்த்திகை மாதத்தையும் இணைத்துச் சொல்லப்படும், “ஐப்பசி பேய்ஞ்சு பெறக்கணும்; காத்திய காய்ஞ்சி பெறக்கணும்” என்ற சொலவடை இந்த மாதங்களை மழையோடும் உழவுத்தொழிலோடும் இணைத்துக் காட்டுகிறது. ஐப்பசி முதல் தேதிக்கு முன்னால் புரட்டாசியின் பின்பாதியில் பெய்யத் தொடங்கும் மழை, ஐப்பசி மாதம் முழுவதும் பெய்துகொண்டே இருந்தால் நீர்ப்பிடிப்பு இடங்களான குளங்களும் குட்டைகளும் கண்மாய்களும் நிரம்பிவிடும். முதல் மழைக்குப் பாவிய நெல்விதைகள் நாற்றுகளாக மாற 20 முதல் 25 நாட்கள் தேவை. நெல் விவசாயம் உழவு, தொழியடிப்பு, கொலைமிதிப்பு எனச் சில நாட்கள் வயலைத் தயார் படுத்திய பின் நாற்று நட்டுத் தொடங்கும் ஒன்று. அந்த நாட்களுக்கு வயலில் நீரும் சகதியும் பிரியாமல் இருக்கவேண்டும். அதிகமான நீர் தேவைப்படும் நெல் விவசாயத்தின் தொடக்கப் பணிகள் நிறைவடையும் காலம் ஐப்பசி கடைசி. ஐப்பசி கடைசியில் நடவு முடிந்தால் தான் தையில் விளைச்சல் வீட்டுக்கு வரும்.

ஐப்பசி மாதத்திற்கு அடுத்துவரும் கார்த்திகையில் உழவுப்பணிகளோ, நடவுப்பணிகளோ இருக்காது. பயிர்கள் வேர்ப்பிடித்து வளரும் காலமாக கார்த்திகை மாதம் அறியப்படுகிறது. வேர்பிடிக்கும் நேரத்தில் மழை பெய்தால் நடவுசெய்த நாற்றுகள் அலைந்து இடம் மாறிவிடும். அதனால் கார்த்திகை மழையில்லாமல் – காய்ஞ்சி பிறந்தால்- நல்லது என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை மாதம் களையெடுப்பு மாதம். அதைக் கெடுக்கும் விதமாக மழை பெய்யாமல் இருக்கவேண்டும் என்பது இந்தச் சொலவடையின் பின்னுள்ள வேண்டுதல்கள்.

சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடியும் 12 மாதங்களில், மற்ற மாதங்களைப்போல இல்லை கார்த்திகை மாதம். ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒன்றான கார்த்திகை நட்சத்திரத்தை மாதத்தின் பெயராகக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கார்த்திகை நட்சத்திரம் முருகன் பிறந்த நட்சத்திரம். என் சிறுவயதில் மற்ற நட்சத்திரங்களைக் கடப்பது நினைவில் இருந்ததில்லை. ஆனால் கார்த்திகை நட்சத்திரம் மட்டும் நினைவுபடுத்தப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. எனது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் கார்த்திகை விரதம் இருப்பார்கள். விரதம் இருப்பவர்களுக்கு அந்த நாள் அவர்களின் இறந்துபோன பெற்றோர்களை நினைத்துக்கொள்ளும் நாள். மற்ற நாட்களில் பல்லை விலக்கி விட்டுக் கூழையோ அல்லது பழையதைச் சாப்பிடுபவர்கள் விரதத்தன்று அப்படிச் சாப்பிடுவதில்லை. முதல் நாள் உடுத்திய ஆடைகளைத் துவைத்துக்குளித்த பின்புதான் சாப்பிடுவார்கள். குளித்தபின் ஊரிலிருக்கும் கோயில் ஒன்றிலோ, வீட்டிலிருக்கும் படத்தின் முன்னாலோ நின்று வணங்குவதோடு அந்த நாள் தொடங்கும். வணக்கத்திற்குப் பின்பு புழக்கத்தில் இருக்கும் பாத்திரங்களுக்குப் பதிலாக இலையில் அப்போது சுடச்சுட தோசை அல்லது இட்லி எனப் பலகார உணவோடு விரதம் தொடரும். விரதநாள் உணவு என்பது பகலில் ஒருநேரச் சாப்பாடு; இரவில் வாழை இலைபோட்டுப் படையல் வைத்து இன்னொரு சாப்பாடு. கடும் விரத ஆட்கள் பகலில் சாப்பிடாமல் இரவில் மட்டும் ஒருவேளைச் சாப்பாட்டோடு அன்றைய நாளைக் கழிப்பார்கள்.

பெரியவர்களுக்கு விரதநாள் வயதாகி இறந்தபோன தந்தையர்களை ஒவ்வொரு மாதமும் நினைத்துக் கொள்ளும் நாளாக இருந்தன. ஆனால் சிறுவர்களுக்கு விரத நாள் என்பது பலகாரங்கள் கிடைக்கும் நாள். அதனாலேயே ஒவ்வொரு வீட்டுச் சிறுவர்களும் மூதாதையர்களை நினைத்துக் கொள்ளும் கார்த்திகை விரதத்தை மறப்பதில்லை. ஒன்பதாம் வகுப்புக்கு விடுதியில் சேர்வதற்கு முன்பு எனக்கும் கார்த்திகை விரதநாளில் கிடைக்கும் தோசை, பணியாரம், இட்லிதான் பலகாரங்கள். தீபாவளி, பொங்கல் என்றால் வடை, சிசுயம் கூடுதலாகக் கிடைக்கும். கொடைநாட்களுக்கு ஆட்டுக்கறி அல்லது சேவல். காபித்தண்ணியெல்லாம் நோயாளிகளுக்கு வைத்துத் தரும் மருந்துதான்.

சாதாரணக் கார்த்தியல்கள் விரத நாட்கள். அவரவர் வீடுகளுக்குள் நடக்கும் வீட்டுப் பண்டிகை நாள். ஆனால் பெரிய கார்த்தியல் வீட்டுப்பண்டிகை நாளல்ல. அது ஊர்ப்பண்டிகை நாள். எங்கள் ஊரில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கும் மாரியம்மன் கோயிலுக்கும் இடைப்பட்ட மந்தை வெளியில் சோளத்தட்டைகளால் மறைக்கப்பட்ட பனைமரத்தை எரித்து மேகங்களுக்குத் ‘தீ’ யைக் காட்டிப்பயமுறுத்தும் கொண்டாட்ட நாள். அது. வீட்டுக்கு ஒருவர் வந்து சொக்கப்பனையை உருவாக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். பனைமரம் மட்டும் பொதுக்காசிலிருந்து வாங்கப்படும். ஒவ்வொருவரும் ஒரு கட்டுச் சோளத்தட்டை கொண்டுவரவேண்டும். மரத்தை நட்டு அதன் மீது அடுக்கடுக்காகச் சோளத்தட்டையைக் கட்டி நிரப்பி உயர்த்தி மூடிவிடுவார்கள்.
வழக்கம்போல சாதாரணக் கார்த்தியலுக்கான விரதங்கள் வீட்டில் நடக்கும். அதற்கு முன்பு மண்ணாலான கிளியஞ்சட்டிகளில் புது எண்ணெய் ஊற்றி, புதுத்திரி போட்டு விளக்கேற்றுவது நடக்கும். கூரைவீடுகளில் கிளியஞ்சட்டிகள் வைப்பதற்கென்றே கூம்புவடிவப் பொந்துகள் இருக்கும். நிலைப்படிகளில், கதவுகளில், தொம்பரைக்கல் படிகளில், மாட்டுக்கொட்டகையில், திண்ணை விளிம்புகளில் வரிசையாக வைக்கப்படும் கிளியஞ்சட்டி விளக்குகளும் விளக்கேற்றும் பெண்களும் பெரிய கார்த்திகையின் முக்கியமான நிகழ்வு.

விளக்கேற்றி விரதம் முடித்துவிட்டு, மந்தைக்கு வந்து சொக்கப்பனை கொளுத்துதல் நடக்கும். அதற்கு முன்பு சிறுவர்களும் இளையோர்களும் சுளுந்து சுத்துவார்கள். சுளுந்து என்பது தீக்கங்குகள் வெளிப்படும் ஒரு கம்பு. அந்தச் சுளும்பு மட்டும் அல்லாமல் தரகுக் குச்சிகளால் கட்டப்பட்ட சுளுந்துகளும் சுத்தப்படும். மண்ணெண்ணெயில் ஊறிய தீப்பந்தங்களும் சுளுந்துகளாக மாற்றப்பட்டு சுத்தப்படும். தீபாவளிக்குக் காசு சேர்த்து வைத்து வெடி வாங்குவதுபோலச் சிறுவர்கள் காசு சேர்த்து வைத்து மண்ணெண்ணெய் வாங்கிப் பந்தம் செய்வார்கள். சுளுந்து சுத்தும்போது வடக்கெயிருந்து வந்த மழையே தெக்கால போயிடு; மேற்கெயிருந்து வந்த மழையே கிழக்காலெ போயிடு என்று பாட்டுப் பாடுவார்கள். எங்கள் ஊருக்கு வடக்கேயும் மேற்கேயும் மலைத்தொடர்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அந்த மலைத்தொடர்களிலிருந்துதான் மழை இறங்கிவரும். எப்போதாவதுதான் தெற்கிலிருந்திரும் மழை வரும். ஆனால் தென்மேற்குப் பருவக்காற்றுதான் வருசநாட்டு மழையைத் தாண்டி வந்து எங்கள் ஊருக்கு வடக்கே இருக்கும் வாசிமலையான் மலைச்சிகரத்தில் மோதி மழையாகக் கொட்டும்.

தீபாவளி அடைப்பாகத் தொடங்கும் மழை பெரிய கார்த்திகை வரை பெய்தால் அந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும். அந்த மழையைப் போதும் எங்களுக்கு என்று சொல்லும் ஒரு சடங்காகவே சொக்கப்பனை கொளுத்தும் தீச்சடங்கு நடைபெறும். சுளுந்தி சுத்தி மேகங்களை விரட்டும் பாவனைச் சடங்கும் நடக்கும். இந்தச் சடங்குகளில் எல்லாம் முருகனை வழிபட்டதில்லை. ஆனால் நாளடைவில் மழை பொய்த்துப் போன நிலையில் சொக்கப்பனை கொளுத்தும் சடங்கும் சுளுந்து சுத்தும் கொண்டாட்டங்களும் வலுவிழந்து விட்டதை நானே பார்த்துவிட்டேன். எனது கல்லூரிப்பருவத்தில் விடுதியிலிருந்து ஊருக்குப் போனபோது பெரிய கார்த்திகை திருக்கார்த்திகையாக மாறத் தொடங்கியிருந்தது. ஊரில் வசதியானவர்கள் பெற்றோர்களின் நினைவைச் சுமந்துகொண்டு திருப்பரங்குன்றம், பழனி என முருகன் கோயில்களுக்குச் செல்லத்தொடங்கியிருந்தார்கள்.

மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சேயோன். சேயோன் மேய மைவரை உலகம் என்பது தொல்காப்பியம். சேயோனை முருகனாக்கித் தந்தது திருமுருகாற்றுப்படை. நெடுநல்வாடையை எழுதிய நக்கீரர் தான் திருமுருகாற்றுப் படையையும் எழுதியிருப்பாரா? என்பது தனி ஆய்வு. முருகனைச் சிவன்- பார்வதியின் பிள்ளையாகவும், விநாயகாவின் இளைய சகோதரன் ஸ்கந்தாவாக்கியது புராணங்கள். கந்தபுராணம் எழுதப்படுவதற்கு முன்பே வெவ்வேறு கதைகளாக மாறி இந்தியா முழுவதும் பரவிய புராணங்கள் மும்மூர்த்திகள் என்னும் முழுமுதற்கடவுள்களை ஒவ்வொரு வட்டாரத்தோடும் இணைத்துப் புராணங்களை உருவாக்கின. அந்தப் புராணங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்த அம்மன்களைச் சிவனின் வடிவமாக்கிச் சேர்த்துக்கொண்டதே அதிகம். ஊர்த்தெய்வங்களும் வட்டாரத்தெய்வங்களும் பெருங்கோயிலின் கடவுள்களோடு திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டுக் குடும்பக்கதைகள் உருவாக்கப்பட்டன. எங்கள் ஊரில் தெற்கெல்லையாக இருந்த கம்பத்தடியான் என்னும் தெய்வம் சிவனாக மாற்றப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.
 
பூசாரிகளுக்கான பயிற்சி வகுப்புப் போய்வந்தபின்பு ஆறுகாலப் பூஜைகளையும் சம்ஸ்க்ருத மந்திரங்களையும் தவறாமல் செய்த மாரியம்மன் கோயில் பூசாரிக்கு மாதச்சம்பளம் வருகிறது என்று ஊரார் பேசிக்கொண்டது இருபதாண்டுக்கால வரலாறு. அதனால் கோயில் இரண்டானது. பூசாரிபுராணங்களைப் புனைவுகளாக்குவதில் சோதிடக்கலை முதன்மையான பங்கு வகித்திருக்கிறது. சோதிடமும் புராணங்களும் இணைந்து உருவாக்கிய பனுவல்களையே இந்திய மொழிகளின் மாந்த்ரீகப் பனுவல்கள் என்று கூடச் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்