ஹேமிகிருஷ் – விலகி நிற்கும் கதைசொல்லி
வாசிப்பும் தடைகளும்
தொடர்ச்சியாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தடுப்பதில் முதல் காரணியாக இருப்பது வித்தியாசம் காட்டாத தன்மை என்றே சொல்வேன். கவிதைத் தொகுதிகளில் இந்தத் தடையை உணர, பத்திருபது கவிதைகளையாவது தாண்டவேண்டியதிருக்கும். ஆனால் சிறுகதைத் தொகுப்பு என்றால் நிலைமையே வேறு. தொகுப்பொன்றில் முதல் கதையை வாசித்து முடித்து விட்டு அடுத்த கதையைத் தொடங்கி வாசிக்கும்போது இரண்டிலும் புனைவுக்கூறு சார்ந்து வித்தியாசம் இல்லையென்றால் மூன்றாவதாக ஒன்றைத் தொடங்குவவதில் சுணக்கம் ஏற்பட்டு விடுவதைத் தடுக்கமுடியாது. நாட்கணக்கிலான இடைவெளிக்குப் பின்னரே வாசிப்பைத் தொடர முடியும். இந்தச் சுணக்கம் ஏற்படாமல் அண்மையில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுப்பாக ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. தொடர் வாசிப்பில் தொகுப்பின் 10 கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது. இந்த ஒரு காரணமே, அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் கவனித்து வாசிக்க வேண்டிய தொகுப்பு எனப் பரிந்துரைக்கப் போதும் என்று நினைக்கிறேன்.
தொகுப்பிலுள்ள பத்தில் ஆறு கதைகள் அச்சிதழ்களிலும் 4 கதைகள் மின்னிதழ்களிலும் வந்துள்ளன. 5 கதைகளை வெளியிட்ட அச்சிதழ் ஆனந்த விகடன். கதைசொல்லியில் ஒரு கதை அச்சாகியிருக்கிறது. மின்னிதழ்களான கனலி 2 கதைகளையும், யாவரும், வனம் ஒவ்வொரு கதையையும் பதிவேற்றம் செய்துள்ளன.
***** ******
இந்தியக்குடும்பங்கள் என்னும் கதைச்சுரங்கம்
இந்தியச் சமூக அமைப்பின் அனைத்துப்போக்குகளையும் தீர்மானிக்கும் நுண் அலகாக இருப்பது குடும்ப அமைப்பு. நெருங்கிப் பார்த்தால் அதுவே பேரலகாகவும் வினையாற்றும் விசித்திரம் கொண்டது. தன்னை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கும் குடும்பம் அதன் உறுப்பினர்கள் மீது செலுத்தும் தொடர் கண்காணிப்புகளைப் பாதுகாப்பென்று நினைப்பவர்களும் உண்டு. அதன் கட்டுப்பாடுகளை வன்முறையான நடைமுறைகள் என விமரிசிப்பவர்களும். பாதுகாப்பென நினைப்பவர்கள் அதன் புனிதங்களைப் பேசுகின்றார்கள். விமரிசிப்பவர்கள் அதன் குரூரங்களைக் கண்டுரைக்கிறார்கள். இந்தத் தன்மையே அதனைக் குறித்துத் தொடர்ந்து பேசவும் எழுதவும் தூண்டுகின்றன. இருப்பை ஏற்றுக் கொண்டாடும் புனித ஆதரவுக்கருத்துகளோடு ஒத்துப் போகிறவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் அதன் உள்ளார்ந்த நடைமுறைகளோடு ஒத்துப்போக முடியாதவர்களை அடையாளப்படுத்தும் எழுத்துகள் கவனிக்கப்படும் நிலையில் அதன் நேர்மறை/ எதிர்மறைத்தன்மைகள் குறித்து விரிவான விவாதங்கள் எழும் வாய்ப்புண்டு.
ஹேமி கிருஷின் கதைகள் இந்தியக் குடும்ப அமைப்பின் மீதான விமரிசனங்களைக் குறுக்குவெட்டாக வைத்துள்ளன.பத்துக்கதைகளில் ஒரு கதையில் கூடக் குடும்பத்தின் புனிதத்தன்மை பாராட்டப்படவில்லை; கொண்டாடப்படவில்லை. அதற்குப் பதிலாக அவ்வமைப்பிற்குள்ளிருந்து பிதுக்கி வெளித்தள்ளப்பட்ட மனிதர்களைத் தேடியெடுத்துத் தனது கதைகளின் மையப்பாத்திரங்களாக்கியுள்ளார். அந்த வகையில் எல்லாக் கதைகளும் ஒற்றைப் பாத்திரக் கதைகளாகவே எழுதப்பட்டுள்ளன என்பதைக் குறையாகச் சொல்லமுடியும். அதே நேரம், சிறுகதை வடிவத்திற்குள்ளேயே அவர்களின் முழுவாழ்க்கையையும் அவர்களோடு தொடர்புகொண்ட மனிதர்களின் மனப்பாங்குகளையும் விரிவாகக் கவனப்படுத்தித் தந்துள்ளதை அவரது கதைக்கட்டமைப்பின் சிறப்பாகச் சொல்லமுடிகிறது.
ஒரு கதைக்கு ஒரு முழுமைக் கதாப்பாத்திரமெனத் தேடியெடுத்து எழுதப்பெற்ற பத்துப் பேரில் பெண்களே அதிகமானவர்களாக இருக்கின்றார்கள். அந்தப் பெண்களும் பெரும்பாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட/ அனுமதிக்கப்பட்ட வாழ்நிலை மீது அதிருப்திகொண்டவர்களாகவே முன்வைக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் விவாதப்பொருளாக இருக்கும் பெண்ணியப் போக்குகளோடு நெருக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பெண்களாயினும் ஆண்களாயினும் அவர்கள் தேர்வுசெய்துகொண்ட அல்லது தேர்வுசெய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்க்கை மீது பெரிய வருத்தங்கள் இல்லாமல், தொடங்கிவிட்ட வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து முடிக்கவே விரும்புகின்றவர்களாக வருகின்றனர். அந்த வகையிலும் இந்தக் கதைகள் வாசிக்கத்தக்க கதைகளாக உள்ளன.
பெண்கள் குறித்த சொல்லாடல்கள்
தொகுப்பின் தலைப்புக்கதையான நெட்டுயிர்ப்பு, முதுமையில் எதிர்பார்க்கப்படும் அன்பும் அரவணைப்பும் குறித்த விவாதத்தை முன்னெடுக்கும் கதையாக விரிந்துள்ளது. இந்தக் கதையை வாசிக்கும்போது வாசகர்களுக்குக் கதையைச் சொல்லும் இடத்தில் இருப்பது ஒரு பூனை என்ற தோற்ற மயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அவள் எதிர்பார்த்த பரிவு கிடைக்காதபோது அவளுக்குள் ஏற்பட்ட முசுட்டுத்தனத்தையும் அதன் மறுதலையாகப் பாசங்காட்ட மனிதர்களை நெருங்காமல் தவிர்க்க ஒரு பூனையை வளர்க்கத்தொடங்கிய கதையையும் பூனையே கேட்டுக் கேட்டுச் சொல்கிறது கதைக்குள். நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக மனிதர்களே ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகளை பணமதிப்புசார்ந்தே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் கதை வலுவாக முன்வைத்துள்ளது. மருமகளையும் மகனையும் ஒதுக்கிவைத்துள்ளதைக் குறையாகச் சொல்லும் பக்கத்துவீட்டுப் பெண்கள், அவள் தன்னிடம் உள்ள பணத்தைக் கொடுத்து உதவும் இரக்கக்குணம் கொண்டவள் என்பதைக் கண்டவுடன் அப்படியே அவளைப் பற்றிய மதிப்பீட்டைத் திருப்பிப் போடுகிறார்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பது இந்தக் கதையின் உச்சம்.
தொகுதியின் தலைப்புக் கதையான நெட்டுயிர்ப்பு கதைக்குள் உருவாக்கப்பட்ட தனிமைத்தவிப்பை விடவும் கூடுதல் தவிப்பைக் கொண்ட பெண்ணொருத்தியைக் காட்டுகிறது உதிரிப்பூ கதை. தனது அம்மாவிற்காகத் தனது இளமை வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்ட பின்னும், கிடைத்த வாழ்க்கையில் சின்னச்சின்ன அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ளத் தவிக்கும் உதிரியாக்கப்பட்ட யசோதா சித்தியின் வாழ்க்கைக்குள் இருக்கும் சோகங்களையும் வலியையும் சொல்வதற்குச் சிறுவன் ராமின் கரிசனமான குணத்தைப் பயன்படுத்தியுள்ளதும் சிறப்பான சொல்முறைகள். நெட்டுயிர்ப்பிலும் உதிரிப்பூவிலும் முறையே மருமகள், சகோதரி என்ற உறவடையாளம் கொண்ட பெண்களின் இருப்பாலும் சூழலாலும் பொதுப்போக்கிலிருந்து விலகலான முடிவெடுத்து வாழ்ந்து காட்டும் பாத்திரங்களை அடையாளம் காட்டிய ஹேமிகிருஷ், விடாப்பிடியான உறுதியுடன் ஆண்களை எதிர்கொள்ளத் துணிந்த பெண்களையும் கதைகளில் எழுதிக்காட்டியுள்ளார். கனவின் தடயம் கதையில் வரும் உஷாவும், கயலின் நீள்கூந்தலும் ஊர்மக்களும் கதையின் மையப்பாத்திரமான கயலும் காட்டும் துணிச்சலும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற முடிவெடுப்பும் சமகாலப் பெண்களுக்கு வழிகாட்டும் திறமான கதைகள்.
பெண்களின் வாழ்க்கையை ஆண்களே தீர்மானிக்கும் சமூக அமைப்புக்குள் வாழ நேர்ந்த நிலையை உணர்ந்துவிட்ட பெண்கள், அதனைக் கைகழுவிவிட்டு எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றபோது எத்தகைய முடிவுகளை எடுப்பார்கள் என்பதை அவ்விரு கதைகளும் விவாதிக்கின்றன. பொருளாதார நிலையில் தனித்தியங்கமுடியாது என்ற தெரிந்த போதிலும் தனது மகளின் எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தைக் கணவனுக்குத் தரக்கூடாது எனத் தீர்மானித்து, அவனைப் பிரிந்துவிடத் தயாராகிறாள் நேபாளப் பெண்ணான உஷா. அந்த வகையில் அவளது பாத்திரவார்ப்புச் சமகாலப் பெண்ணிய வார்ப்பு என்றால் அவளது புரிதலுக்கு உதவும் ஏஞ்சலின் பாத்திரம் இன்னொரு சிறப்பான பெண்ணிய வார்ப்பு. திருமணம், விவாகரத்து என ஒவ்வொன்றிலும் ஏமாற்றத்தைப் பலமான மூர்க்கத்துடன் தரும் ஆண்களிடம் தோல்வியுற்று விலகிப் போய்விடக்கூடாது எனத் தனது பலத்தைத் திருப்பி நிரூபிக்கும் கயலும், அவளுக்குத் துணை நிற்கும் அவளது அம்மாவும் நமது காலத்தில் தேவையான பெண்களின் வகைமாதிரிகள்.
இப்பெண்களைப் போல மனித எதிர்வுகளைச் சந்திக்காமல் நீண்ட மரபை ஏற்றுக்கொண்ட பெண்ணொருத்திக்குள் இருந்த முடிவெடுக்கும் திறனை நிறம் சிவப்பு முன்வைத்துள்ளது. அம்மனுக்குத் தீட்டு ஆகாது என்ற நம்பிக்கையில் மாதவிடாய்ப் பெண்களை விலக்கி வைக்கும் கட்டுப்பாடு கொண்ட ஊரது. மகன் உயிரைக் காப்பாற்றித் தந்த அம்மனுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடனைத் தீர்க்கும் வாய்ப்பு 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ள நிலையில், தனது உடல் தீட்டுப்பட்டுவிட்டதாக உணர்ந்த நிலையிலும் தீமித்து வெளியேறுகிறாள் சுந்தரி. அவளை அம்மன் தண்டிக்கவில்லை; மழைத் துளியை அளித்து வாழ்த்தியது எனக் கதை முடிக்கப்பட்டுள்ளது.கடவுள் நம்பிக்கை சார்ந்த சடங்கியல் மரபைத் தனது சொந்த முடிவால் தீர்மானிக்கும் பெண்ணாக வருகிறாள் நிறம் சிவப்பு கதையில் மையப்பாத்திரமான சுந்தரி, கடவுள்/சடங்குகள் சார்ந்து இயங்கும் பெண்களின் சித்திரத்தை மாற்றி எழுதிக்காட்டும் துணிச்சலைக் கொண்டதாக இருக்கிறது அக்கதை. அதேபோல் ஜோதிடம் சார்ந்த நம்பிக்கை மீதான விமரிசனத்தைப் போகிற போக்கில் அங்கதமாகவும் எள்ளலாகவும் விமரிசிக்கும் தொனியைக் கொண்டிருக்கிறது இலையுதிர் காலம் என்னும் கதை. கதையின் முதன்மை நோக்கம் அதுவல்ல. எளிய மக்களின் வாழ்க்கைக்குள் இருக்கும் காதலும் வலியும் சந்திக்கும் சிக்கலே நிகழ்வுகளாக்கப்பட்டுள்ளன. பணம் படைத்த கேசவ் ரெட்டிக்குள் இருக்கும் மோகத்தின் வெளிப்பாட்டால் சிதைக்கப்படும் எளிய காதலும், தட்டிக்கேட்கமுடியாத கதிரின் சகிப்புமாகக் கதைக்குள் பலமுடிச்சுகள் உருவாக்கப்பட்டு அவலமுடிவைத் தருகிறார். இதேபோல் எதிர்பாராத சந்திப்பு; அதனால் உண்டாகும் ஈர்ப்பு; தொடர்ச்சியாக உருவாகும் காதலும் திருமண விருப்பமும் என நகரும் தொலைந்த பாடல் கதையிலும் வாசிப்பவர்களுக்குச் சிலமுடிச்சுகளும் திருப்பங்களும் உருவாக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. திருப்பங்களில் ஒன்றாக மங்கையின் முன் திருமணம் சார்ந்த நிகழ்வுகள், அதன் தொடர்ச்சியானஐயங்களென நகரும் திருப்புக்காட்சிகள் வெற்றிகரமாக ஓடிய சினிமாவின் காட்சி அமைப்புகளை ஒத்தனவாக உள்ளன.
தனது கதைகளில் உருவாக்கி உலவவிட்டுள்ள பெண்களின் முழுமையான வாழ்க்கைக் கதையை வாசிக்கத் தந்ததைப் போலவே அவலமுடிவைச் சந்தித்த ஆண்களின் மொத்த வாழ்க்கையும் சிறுகதை வடிவத்திற்குள்ளே வாசிக்கத் தந்துள்ளார். வெள்ளிப்பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யும் தேவா கதையில் வரும் தேவாவின் ஒருநாள் இரவுப் பயணம் கதை நிகழ்வு. ஒருநாள் பயணத்திற்குள்ளே கடைசிவரை புரிந்துகொள்ளாத மனைவியோடு வாழவேண்டிய வாழ்க்கையையும் சட்டப்படியான பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகொண்ட தனது பணியிலிருக்கும் நெருக்கடியையும் இணையாக நகர்த்திச் சென்ற தன்மையில் தேவாவின் தவிப்பை வாசிப்பவர்களிடம் கடத்தியிருக்கிறார். இதே விதமான உணர்வுக் கடத்தலைக் கொண்ட கதையாகவே நட்சத்திரம் கதையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை முடிவுடன் இருக்கும் சூர்யராஜைச் சந்தித்து மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் வான்மதியின் தோல்வியில் மனித மனங்களுக்குள் ஆழப்பதிந்துவிடும் எண்ணங்களைக் குறித்த விசாரணையை வாசிக்கத்தந்துள்ளது. செய்யாத குற்றங்களுக்காகவே தொடர்ந்து தண்டிக்கப்படுவதாக நம்பும் சூர்யராஜ், தனது இருப்பு அர்த்தமற்றது என நினைப்பதின் தொடர்ச்சியே அந்தத்தற்கொலை என்பதாக முடித்துள்ளது.
உச்சமான நிகழ்வொன்றில் தொடங்கி, மொத்த வாழ்வுக்கதையையும் முடித்துக்காட்டும் வடிவச் செழுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கதையாகத் தொகுப்பின் முதல் கதையான ஒப்பனையைச் சொல்லலாம். தெருக்கூத்தின் கட்டியக்காரன் வேசம் கட்டிய ஜெயமூர்த்தி மாமாவைப் போல ஒப்பனை பூசி மேடையில் தோன்றி, பின்னர் சினிமாவில் வெற்றி பெற நினைத்துத் தோற்றுப்போன பல முகங்கள் அந்தக் கதைக்குள் வந்துபோகின்றன. மாமாவின் மரணச்செய்திக்குப் பின் அவரைப் பார்த்துவிடும் தவிப்பில் செல்லும் மருமகனின் எண்ண ஓட்டங்களாக எழுதப்பெற்றுள்ள கதையில் ஜெயமூர்த்தியின் ஒப்பனை வாழ்க்கையோடு தோற்றுப்போன காதல் வாழ்க்கையும், குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட வாழ்க்கையும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
முன்னிலைக்கதைசொல்லலின் வாய்ப்புகள்
முன்னிலைக் கதைசொல்லல், ஹேமிகிருஷின் பெரும்பாலான கதைகளின் சொல்முறையாக இருக்கிறது. அவலமும் துயரமும் கொண்ட முடிவை நோக்கிச் செல்லும் கதைகளுக்கு இந்த முன்னிலைக் கதைசொல்லல் அதிகம் பயன்படக்கூடிய ஒன்று. சொல்லப்படவேண்டியவரின் கதையை முழுவதும் அறிந்த ஒருவர் வழியாக – அவர் மீது என்னவிதமான உணர்வை உண்டாக்க வேண்டுமே அதனை உருவாக்கி வளர்த்தெடுக்கும் மொழிப்பயன்பாட்டைக் கதைசொல்லியான பாத்திரங்களுக்கு வழங்குவதின் மூலம் இதனைச் செய்யலாம். ஜெயமூர்த்தி மாமாவின் கதையைச் சொல்லும் (ஒப்பனை)மருமகனும், யசோதா சித்தியின் மீது பரிவு காட்டும் (உதிரிப்பூ) ராமும், தன்னை வளர்க்கவிரும்பி எடுத்துப் போன முதியவளின் முசுட்டுத்தனத்தையும் இரக்கக்குணத்தையும் விவரிக்கும் (நெட்டுயிர்ப்பு) மீனுக்குட்டியும், சூர்யராஜின் தற்கொலை முடிவை விவரிக்கும் (நட்சத்திரம்) வான்மதியும் கேசவ்ரெட்டியின் மூர்க்கத்தையும் காமத்தையும் கண்டு சகிக்காத (இலையுதிர் காலம்) கதிரும் நேபாளப் பெண்ணின் தைரியமான முடிவுப் பயணத்திற்கு உதவிய (கனவின் தடயம்)ஏஞ்சலின் பாட்டியும் முன்னிலையில் கண்டனவற்றைச் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட கதைசொல்லிப் பாத்திரங்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது. திட்டமிட்டுக் கதைசொல்லிகளை உருவாக்கிச் சொல்லப்படும் பாத்திரங்களின் முழுமையைக் கதைக்குள் தரும் உத்தி கவனத்துடன் கையாளப்பட்ட உத்தியாக இருக்கிறது. இவ்வகையான உத்தியின் மூலம் எழுத்தாளர் விலகி நின்று கதைசொல்பவர் என்று தன்னைக் காட்டிக்கொள்ளமுடியும். அதைச் சரியாகவே செய்துள்ளார் ஹேமிகிருஷ்.
கதைசொல்வதற்கு முன்னிலைப் பாத்திரங்களைத் திட்டமிட்டு உருவாக்கியதைப் போலக் கதைவெளிகளையும் திட்டமிட்டு உருவாக்கி வித்தியாசங்கள் காட்டியுள்ளார். வட்டார மொழியைப் பயன்படுத்தி மண்சார் அடையாளத்தை உருவாக்குபவர்களைத் தவிர மற்றவர்களின் கதைகளில் குறிப்பான வெளிகள் சுட்டிக்காட்டப்படாமல் தவிர்ப்பதே நிகழ்கிறது. அதிலிருந்து இவரது கதைகள் விலகியுள்ளன. ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் இடங்கள்/ நகரங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வெளிகளில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு வெளியே நிகழும் கதையிலும் கூட அந்த நகரத்தின் நிலவெளிச் சித்திரங்களில் துல்லியத்தைக் கொண்டுவந்துள்ளார். இத்தகைய சித்திரிப்புகள் கதையின் வாசகர்களுக்கு நம்பத்தன்மையை உருவாக்கக் கூடியன.
கதைக்குள் நிகழும் நேரடிநிகழ்வுகளுக்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு, கதைசொல்வதற்காக ஒரு பாத்திர உருவாக்கம், மையக் கதாபாத்திரத்தேர்வும் அதனை முழுமையாக்கிக் காட்ட உருவாக்கும் நிகழ்வுகள் எனக் கவனமும் திட்டமிடலும் கதைகள் ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டுள்ளன. நிகழ்வெளி சார்ந்தும் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் தொடர்பு இருந்து விடக்கூடாது என்ற திட்டமிடலும் அதனோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று. இத்திட்டமிடலில் பெரும்பங்கு வகிக்கவேண்டிய மொழிநடையில் போதிய கவனக்குவிப்பு இல்லை. இந்த இடத்தில் இதற்குப் பதிலாக வேறுசொற்களால் சொல்லியிருக்கலாம் என்பதும், திரும்பத்திரும்ப வரும் சொற்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதும் தோன்றிக்கொண்டே இருந்தது. ஒருமை பன்மை சார்ந்த மொழிச்செப்பமும் கூடத்தேவைப்படும் இடங்கள் உள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------
நெட்டுயிர்ப்பு, ஹேமிகிருஷ், கனலி வெளியீடு,விலை 200 ரூபாய்
கருத்துகள்