இந்திய ஞானமார்க்கத்தில் வள்ளலாரின் சன்மார்க்கநெறி


மனிதகுல வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. மனிதர்களின் தோற்றம் பற்றிய அறிவியல் பார்வைகள் உருவாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளாகவே மொழிகள், கலைகள், கருத்துகள் போன்றனவும் என்ற கருத்தும் உருவாகியிருக்கின்றன. ஆனாலும் மனிதத் தோற்றம் பற்றிய சமயங்களின் கருத்துகள் வேறாக இருக்கின்றன. மனித உருவாக்கம் கடவுளால் நிகழ்ந்தது என்ற கருத்தே பெரும்பாலான சமயங்கள் சொல்லும் முன்வைப்பு. இந்த முன்வைப்பின் தொடர்ச்சியாகவே, மொழியின் தோற்றம், கலைகளின் தோற்றம், கருத்துகளின் தோற்றம் பற்றியனவும் கடவுளோடு தொடர்பு கொண்டனவாக நம்பப்படுகின்றன.
காரண காரியங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலுக்கும், நம்பிக்கைகளின் மீதான பிடிப்பை முன்வைத்து விவாதிக்கும் சமயவியலும் ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொண்டே வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு ஆகிய ஐந்தும் எப்போது உருவாகின என்பதற்கு அறிவியல் முறையான காரணங்களைச் சொல்லிவிடவில்லை. இயற்கைப்பொருட்கள் இப்படியாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன எனச் சொல்லும் அறிவியலுக்கு மாறாக, இயற்கைப்பொருட்களைப் படைத்த சக்தியே இறை என்றும் கடவுள் என்றும் சமயவியல் முன்மொழிகின்றது. அதனதன் வளர்ச்சிப் போக்கில் இயற்கையும் இயற்கைப் பொருள்களும் உருமாற்றம் அடைந்துள்ளன. ஆனால் அழிந்துவிடவில்லை. அதேபோல் மொழிகளும் கலைகளும் கருத்துகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன; அவையும் அழிந்து விடவில்லை.

ஆளுமைகள் உருவாக்கம்

உலகில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு கருத்துகள் உருவாகி நிலைபெற்றுள்ளன. கருத்துகளை உருவாக்கிய ஆளுமைகளைத் ஞானிகள் எனவும், தத்துவவாதிகள் எனவும், சிந்தனையாளர்கள் எனவும், அறிஞர்கள் எனவும், தலைவர்கள் எனவும் வெவ்வேறு பெயரிட்டுப் புரிந்துகொண்டுள்ளது உலகம். இந்தப் பெயரிடுதலுக்குப் பின்னே ஆளுமைகள் செயல்பட்ட துறைகள் காரணங்களாக இருக்கின்றன. அந்தந்தத் துறைகளின் பயன்பாட்டிற்கேற்பப் பெயரிடுதலும் வழக்கில் நீட்டிப்பதும் நடக்கிறது

உருவாக்கிய ஆளுமைகளை அறியாமலேயே கருத்துகள் நிலவிய காலம் ஒன்று வரலாற்றில் இருந்திருக்கும். சொல்லப்பட்ட கருத்துகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் அக்கருத்தைச் சொன்னவர் ஆளுமைகளாக அறியப்பட்டிருப்பர். அறிதல், விளக்குதல், பயன்படுத்துதல் போன்ற நிலைகள் உருவான பின்பு கருத்துகள், அதனை முன்மொழிந்த ஆளுமைகளின் பெயரால் அறியப்பட்டன. அதனோடு சேர்ந்து அமைப்புகளும் அமைப்புகளை உருவாக்கிய ஆளுமைகளும் என்ற புரிதல் ஏற்பட்டது. இந்த வளர்ச்சிப்போக்கு உலக வரலாற்றில் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு மொழியில் வெவ்வேறு விதமாக நடந்துள்ளன.

கலைகளின் வரலாறு, பண்பாட்டின் வரலாறு, அறிவியலின் வரலாறு, மதங்களின் வரலாறு, அரசியலின் வரலாறு என எல்லா வரலாறுகளுமே ஐரோப்பிய மையத்தையே கொண்டிருந்தன. அந்தப் பின்னணியில் அறிவுத்தோற்றத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இருந்துள்ளனர். அதனை முழுமையாக மறுக்க முடியாது. ஏனென்றால் உலகச் செவ்வியல் மொழிகளான கிரீக்கும் லத்தீனும் அப்பகுதியின் அறிவுத் தோற்றத்திற்கும் பரவலுக்கும் காரணங்களாக இருந்துள்ளன. அதேபோல் இந்தியத் துணைக்கண்டத்தில் உருவான செவ்வியல் மொழிகளான சம்ஸ்க்ருதமும் தமிழும் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்துப் பரப்பியுள்ளன. அவற்றைத் தொகுத்து விவாதித்த கல்வியாளர்கள் இந்தியத் தத்துவவியலாக வளர்த்தெடுத்துள்ளனர். இன்னும் சரியாகச் சொல்வதானால், உலகின் செவ்வியல் மொழிகளைப் பேசிய சீனம், பாரசீகம், எபிரேயம் போன்ற மொழிகள் தோன்றி வளர்ந்த நிலப்பரப்புகளிலும் மனிதர்கள் புதியபுதிய சிந்தனைகளை உருவாக்கி வளப்படுத்தியுள்ளனர்.

சிந்தனை உருவாக்கம்

மனிதர்களின் சிந்தனைத் தோற்றத்திற்கு முதன்மைக்காரணமாக இருப்பவை இயற்கைப் பொருட்களே. பிரபஞ்சம் அல்லது உலகம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்ற ஐந்து நிலையில் இருப்பதும் அதன் மாற்றங்களும் அழிவற்ற அவற்றின் தொடர்ச்சிகளும் இயக்கங்களும் எப்போதும் மனிதர்களுக்குப் புரியாத புதிர்களாக இருந்துள்ளன. இவற்றை மனிதர்கள் உருவாக்கியதில்லை என்பதும், அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்பதும், மனிதர்களால் அழித்துவிடக் கூடியனவாக இல்லை என்பதும் தொடரும் உண்மைகள். தொடரும் இவ்வுண்மைகளின் பின்னால் செயல்படும் சக்தியைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அவற்றையெல்லாம் செய்யும் சக்திக்கு இறை அல்லது கடவுள் என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கிக்கொண்ட ஒன்றாகக் கடவுள் தோன்றினாலும், மனிதக் கற்பனைக்குள் அடங்கிவிடாத ஒன்றாகவும் கடவுள் இருப்பது உணரப்படுகிறது.

· இந்த உணர்வும் பெயரிடலும் அதனைப் பாராட்டுதலும் அச்சம் கொள்ளுதலும் நெருங்க நினைப்பதும் தொடர்ச்சியாக நடக்கிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நடக்கின்றன. அதனால் அவையெல்லாம் வெவ்வேறு சமயங்களாக அறியப்படுகின்றன. இந்திய எல்லைக்குள்ளேயே கூடப் பல்வேறு விதமாக இறையும் அதன் செயல்களும் புரிந்துகொள்ளப்பட்டு வெவ்வேறு இறைக்கோட்பாடுகளாக அறியப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இந்தியத்தத்துவஞானம் என்னும் நூலை எழுதிய பேரா.கி. லட்சுமணன் தரும் பட்டியலில் இருக்கும் இந்திய இறைக்கோட்பாடுகள் இவை: உலகாயதம்,சமணம்,பௌத்தம், சாங்கியம் ,யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், இராமானுச வேதாந்தம், சைவசித்தாந்தம். இறைக்கோட்பாடுகளைச் சமயமாக – அமைப்பாக ஆக்கியவர்கள் அரசின் ஆதரவைப் பெற்று வளர்த்தெடுக்கவும் பரப்பவும் முற்பட்டுள்ளனர். இப்போது இந்து சமயம் என அறியப்படும் வேதச்சமயத்திற்கு நெருங்கிய அமைப்புகளாக உள்ளவற்றை அகச்சமயங்கள் எனவும், வேத நெறிகளை ஏற்காமல் மறுத்துப் பேசிய அமைப்புகளைப் புறச்சமயங்கள் எனவும் பெயரிட்டு விவாதங்களும் நடந்துள்ளன.

சன்மார்க்கம் என்னும் தனித்துவம்

வேத மரபை ஏற்றுக்கொண்ட சமயநெறிகள் அரசமைப்பை நெருங்கி அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைய நினைத்ததற்கு மாறாகக் கடவுள், இறை, மனித இருப்பு, இயற்கையின் ரகசியம் போன்றன ஒவ்வொரு மனிதர்களின் அகம் சார்ந்த சிந்தனைகள் எனப்பேசிய சமய நெறிகளுக்கும் ஒரு வரலாறு உண்டு. அவ்வரலாறின் தொடக்கமாகக் கௌதம புத்தர் என்னும் பேராளுமையே முதலில் வருகிறார். சடங்குகள், உருவ வழிபாடு, கடவுளின் அவதாரங்கள் போன்றனவற்றை மறுதலித்து, ஆன்மா, அதன் ஈடேற்றம், அதற்காக இந்த வாழ்க்கையில் செய்ய வேண்டிய வினைகள், விரதங்கள், சக மனிதர்களை நேசித்தல், அன்பு பாராட்டுதல் எனத் தனது கொள்கைகளை முன்வைத்தார். அக்கொள்கைகள் பலவும் வேத மரபுக்கு மாற்றாக இருந்தன.

இவரைப்போலவே பின்னர் வீரசைவம் என்னும் சமயநெறியை உருவாக்கிய பசவண்ணரும் (12 ஆம் நூ.) வேத நெறியின் செயல்பாடுகளை மறுத்து மக்கள் மையத்தை முன்வைத்து ஆன்மீக ஈடேற்றம் பற்றிப் பேசினார். அந்த வரிசையில் வைத்து சிந்திக்க வேண்டியவராக உருவானவர் தமிழ்நாட்டில் தோன்றிய இராமலிங்க வள்ளலார். அவரால் முன்வைக்கப்பட்ட சன்மார்க்க நெறியில் வேத மரபுகளின் தொடர்ச்சியில்லை. அமைப்புகளை உருவாக்கி அரச ஆதரவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பு இல்லை. ஒவ்வொருவரின் அகத்திற்குள்ளும் நடக்கும் மாற்றமே ஆன்மீக நெறி என்ற சிந்தனை; அது ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய வாழ்க்கை நெறியாக அமையத்தக்கது என்று விளக்கி உள்ளார்..

சன்மார்க்கத்தின் தாக்கம்

அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துகளும் சிந்தனைகளும் வாழ்க்கை முறைகளும் அவருக்குப் பிந்திய இந்தியச் சிந்தனையோட்டத்தில் பலரிடமும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. சமயம், தத்துவம் எனச் செயல்பட்ட விவேகானந்தரிடம் இராமலிங்க வள்ளலாரின் கருத்துகளின் தாக்கம் இருந்துள்ளது. ஆன்மீகவாதியாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய மகாத்மா காந்தியின் அகிம்சைக் கோட்பாட்டிற்கான முன்னோடிச் சிந்தனையாக இராமலிங்கரின் சன்மார்க்கம் இருந்துள்ளதை மறுக்க முடியாது.

மேலை நாடுகளுக்குச் சென்று பல்வேறு அறிதல் முறைகளில் தேர்ச்சிபெற்றுத் திரும்பிய டாக்டர் அம்பேத்கரின் கொள்கையான ‘உள்வாங்கும் சமூகம்’ என்பதற்கான விதைகளைப் போட்டவராக இராமலிங்கரைக் குறிப்பிட முடியும். அவரது கருத்துகளையும் புத்தரின் கொள்கைகளையும் உள்வாங்கித் தமிழ்ப் பௌத்தம் என்றொரு கருத்தாக்கத்தை முன் மொழிந்த அயோத்திதாச பண்டிதரின் கருத்துகளை வடிவமைத்ததிலும் சன்மார்க்க நெறிக்கொரு பங்குண்டு. வைதீக இந்து சமயத்தின் வர்ணாசிரமத்தின் மீதும் புராணக்கதைகளின் மீதும் கடும் தாக்குதலைத் தொடுத்துத் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுத்த பெரியார் ஈ.வே. ராமசாமி ஏற்றுக்கொண்ட சமயவாதியாகச் சன்மார்க்கத்தை முன்மொழிந்த இராமலிங்க சுவாமிகள் விளங்கியுள்ளார்.

அரசியல் சமூக ஆளுமைகளிடம் மட்டுமல்லாது இலக்கியத்தளத்திலும் சன்மார்க்கக் கருத்துகள் தாக்கம் செய்துள்ளது. இந்திய விடுதலைப்போராட்டத்திற்குத் தனது கவிதைகளைக் கருவியாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்திய பாரதியிடம் வள்ளலாரின் தாக்கம் இருந்துள்ளது. அவரது கவிதைகளில் நேரடியாக வள்ளலாரின் பெயரையோ, சன்மார்க்கக் கருத்தென்ற குறிப்புகளோ இல்லையென்றாலும் அவரை உள்வாங்கிய நிலையை நாம் ஊகித்து உணரமுடியும். உரைநடைகளில் அவரைக் குறித்து எழுதியுள்ளார்

பாரத சமுதாயம் – என்ற தலைப்பிட்ட கவிதை சுப்பிரமணிய பாரதியின் புகழ்மிக்க கவிதைகளில் ஒன்று. அக்கவிதையின் முடிப்புரையாக “இந்தியா உலகிற்களிக்கும்” என்றொரு சொற்றொடரை எழுதியுள்ளார். அந்த வரியை ஒருமுறை, இருமுறை அல்ல மும்முறை சொல்கிறார்.

எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன் என்றுரைத்தான் கண்ணபெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும்- ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் –ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்

என்பன பாரதியின் வரிகள். இந்த வரிகளை எழுதிய கவி பாரதி மறைந்த ஆண்டு 1921. அதற்கு ஒரு நூற்றாண்டுக் கால அளவுக்கு முன்னால் தோன்றிய மகான் இராமலிங்க வள்ளலார் ‘எல்லாரும் அமரநிலை எய்தும்’ வாழ்க்கை முறை ஒன்றை வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றிருந்தார் என்பதைப் பாரதி அறிந்தவன் என்பதற்கு அவனது உரைநடை எழுத்துகளில் சான்றுகள் உள்ளன. அத்தோடு வள்ளலாரின் திருவருட்பாவின் எளிய மொழிநடை போன்ற எளிய சொற்களும் ஓசையொழுங்கும் மக்களுக்கு எதனையும் எளிதாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக இருக்கும் என்பதை உணர்ந்தவன் பாரதி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சன்மார்க்க நெறிகள்

இராமலிங்க வள்ளலார் எழுதியும் பதிப்பித்தும் பேசியும் விவாதித்தும் உருவாக்கிய சன்மார்க்க நெறியின் சாரமாகச் சிலவற்றை நாம் தொகுக்கலாம். அவையே அவரது சிந்தனைகளைப் புரிந்துகொண்டு மேலும் கற்கவும் பின்பற்றவும் உதவக்கூடியன. அவரது எழுத்துகளின் வழியாக இறை பற்றிய அவரது கருத்து என்ன என்பதை மையமாகக் கொண்டே விரிக்க முடியும். இறை அல்லது கடவுள் என்பதை மையப்படுத்திக்கொண்டு இறையை வழிபாடு செய்யும் முறை, இறையை நெருங்குவதற்குச் செய்ய வேண்டியனவாக உயிர் இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாடு, இறையை மகிழ்விக்கும் பசியை நீக்குதல், அதன் வழியாகக் கிடைக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் உயரிய மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளலாம். தனிமனிதர்களின் ஆன்மத் தேடலுக்கான இக்கருத்துகளோடு சமூக நடைமுறைகள் குறித்தும் முக்கியமான கருத்துகளை வள்ளலார் சொல்லிச் சென்றுள்ளார். அவையே சன்மார்க்கக் கொள்கைகளாக இப்போது அறியப்படுகின்றன. குறிப்பாகச் சாதிசமய ஏற்றத்தாழ்வை நீக்குதல், உயிர்க் கொலை தவிர்த்தல், பசியை நீக்குதல் போன்றனவற்றோடு சீர்திருத்தச் சிந்தனைகள் பலவற்றையும் சொல்லியுள்ளார். அவரது முத்திரைக் கருத்துகளைச் சுருக்கமாக இங்கே அறியலாம்.

இறை

உருவமற்ற ஒன்றாக இறையை – கடவுளை முன்வைத்த வள்ளலார் அன்பின் வடிவமாகவும் ஒளியின் வழியாகத் தரிசிக்கக் கூடிய ஒன்றாகவும் முன்வைக்கிறார். கண்ணால் காணக்கூடிய உருவமாக இறை என்பது இல்லை என்றபோதிலும் அதனை மாமலையாக நினைத்துக் கொண்டால் மாமலையாகத் தோன்றும். அன்பென்னும் குடிசைக்குள் வந்து அகப்பட்டு நிற்கும் பரம்பொருள் என்கிறார். இந்தக் கருத்தைப் பல வழிகளில் முன்வைத்துப் பேசுகிறார். அமுது என்றும், அருள் ஒளியானது இறை என்றும் எல்லாவற்றிலும் பெரியதாகவும் எல்லாவற்றைலும் சிறியதாகவும் அறியாததாகவும் அறிந்ததாகவும் உள்ளது இறை என்கிறார். கருணையின் வடிவமாகவும், அருளாய், அறிவாய், உயிராய், ஒவ்வொருவருக்கும் வாய்த்த உறவாய் இருப்பது இறை என்பது வள்ளலாரின் கடவுள் பற்றிய கருத்து.

இறைவழிபாடு

உருவமற்ற ஒளிவடிவான வெளிப்பாடாய் இருக்கும் இறையை வழிபட ஒரு மந்திரச் சொல்லை உருவாக்கித் தந்துள்ளார் வள்ளலார்

ஜோதி ஜோதி ஜோதி – சுயஞ்

ஜோதி ஜோதி ஜோதி – பரஞ்

ஜோதி ஜோதி ஜோதி – அருட்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்

என்பது அந்த மந்திரச்சொல். இம்மந்திரச்சொல் பன்முறை ஒலிக்க வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் இறையே ஒளியாக – வெளிச்சமாக – ஜோதியாகவே இருக்கிறது.

தோற்றமும் மறைவும் இல்லாத – ஆதியும் அந்தமுமில்லாத இறையை அடைந்து இனிய வாழ்வுபெற உதவுவது ஜோதி வடிவமே. அவரைப் பின்பற்றும் சன்மார்க்க சங்கத்தாரை நோக்கி, தான் ஒளிமயமாகி விட்டேன்; என் வழியாகவே இறை தன் பணிகளான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என ஐந்தொழில்களையும் மேற்கொள்கிறது. எனவே என்னை ஜோதியாகக் கண்டு என் வழியே இறையை அடையுங்கள் என்கிறார். ஒவ்வொரு மதமும் இறை எனச் சொல்வது வேறெங்கும் இல்லை; அது நம் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமிடும் ஒளியாக – வெளிச்சமாக இருக்கிறது. அது உயிர்கள் ஒவ்வொன்றையும் உலகின் அழுக்கிலிருந்து காக்கும், கருப்பையிலிருந்தும், முட்டையிலிருந்தும் உருவாகும் ஒளியாக உள்ள இறையை வேறெங்கும் தேடவேண்டியதில்லை. நீங்கள் அதனை நினைத்து ஒளியை வணங்கினால் நினைத்தனவெல்லாம் கூடும். ஜோதி வடிவான இறை அதனை வழங்கும் என்கிறார்.

உயிர் இரக்கமென்னும் சீவகாருண்யம்

எல்லாவற்றையும் இயக்கும் சக்திகொண்ட கடவுளின் அருளைப்பெறுவதற்கான வழியாக வள்ளலார் முன்வைத்த கருத்தும் செய்தியும் மிக எளிமையான ஒன்று. சீவகாருண்யத்தைக் கொண்டு மற்ற உயிர்கள் மீது ஒருவர் செலுத்தும் இரக்கமே அவருக்குக் கடவுள் அருள் கிடைப்பதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் ஓர் உயிர் இரக்கம் காட்டுவதையே முதன்மைக் குணமாகக் கொள்ள வேண்டும். ஓர் உயிர் துன்புறும்போதும், துன்பப்படும் என்று அறிந்தபோதும் மற்ற உயிர்களுக்கு உருக்கமும் இரக்கமும் உண்டாவதே ஆன்மநேய உரிமை. இதில் ஒருவர் எக்காரணம் கொண்டும் தவறிழைத்தல் ஆகாது என எச்சரிக்கிறார் வள்ளலார்.

சீவகாருண்ய ஒழுக்கத்தினால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கம் என்பதே கடவுளின் இருப்பிடம். இரக்கம் தேவைப்படும் ஓர் உயிரியின் மீது நாம் காட்டும் இரக்கத்தினால் கிடைக்கும் இன்பமே கடவுள் தரக்கூடிய இன்பம். இவ்வின்பத்தை ஓரிரு தடவை பெறுவதனாலேயே முழுமையான இன்பம் கிடைத்து விடாது. தொடர்ச்சியாகக் கடவுள் தரும் இவ்வின்பத்தின் வழியாக அடையும் இன்பமே நிறைவான இன்பம் ஆகும். நிறைவான இன்பத்தைப் பெற்றவர்களே சீவன் முத்தர்களாக விளங்கக்கூடியவர்கள் என்பது அவரது போதனை.

ஆன்மநேய ஒருமைப்பாடு


இந்த உலகம் இயற்கைப் பொருட்களாலும் செயற்கைப் பொருட்களாலும் நிரம்பிக் கிடக்கின்றன. இவற்றில் மனிதர்கள் எதனை விரும்புகிறார்கள் என்று பார்த்தால் செயற்கைப் பொருட்கள் மீதான நாட்டமே முதன்மையாக இருக்கிறது. அதில் சலிப்பு ஏற்படும்போது இயற்கைப் பொருட்களை நாடுகிறது மனித மனம். அந்த நாட்டத்திலும் முதன்மையாக இருப்பன அழியாப்பொருட்களாக நினைக்கும் நிலத்தின் மீதான ஆசையாக இருக்கிறது. இரண்டாவதாக விலைமதிப்புள்ள பொன் போன்ற உலோகப் பொருட்களாக இருக்கின்றன. அதனை அடுத்த ஆண்களுக்குப் பெண்கள் மீதும், பெண்களுக்கு ஆண்கள் மீதும் உருவாகும் ஆசையாக இருக்கிறது. இந்த ஆசைகள் எல்லாம் ஆன்மாவின் ஆசைகள் அல்ல. ஆன்மாவுக்கு வெளியே இருக்கும் புறச்சூழலால் உருவாகும் ஆசைகள். இவற்றைக் கைவிட்டுவிட்டு ஆன்மம் எதை விரும்பவேண்டும் என்றால் கடவுளையே விரும்பவேண்டும். கடவுளின் மீதான – ஈசுவர பக்திதான் முதன்மையான பற்றாக – ஆசையாக இருக்கவேண்டும். கடவுள் என்பது இங்கே சொல்லப்படுவதுபோல விக்கிரகங்களாகவோ, காட்சிப் பொருளாகவோ இல்லை. அது ஒளியாக இருக்கிறது. இங்குள்ள எல்லா உயிர்களின் வடிவிற்குள்ளும் ஒளிந்திருக்கிற ஒளியாக இருக்கிறது. அதுதான் கடவுளின் களிநடனம். ஒவ்வொரு உயிரின் துன்பத்தையும் இன்னதென அறிந்து அதனை நீக்குவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு என விளக்குகிறார் அருளாளர் வள்ளலார்.

பசி நீக்கம்

கடவுளை நெருங்குவதற்குரிய வழிமுறைகளில் தலையாயது பசி நீக்கம் என்பது வள்ளலார் கண்ட தனித்துவச் சிந்தனை. பசி அனைத்து உயிர்களுக்குப் பொதுவானது. பசிக்கும் உயிர்களே இயங்கும் உயிர்களாக இருக்கின்றன. பசிக்கும்போது உண்ணும் வாய்ப்புக் கிடைக்கும் உயிரிகள் துன்பமற்ற – அவலமில்லாத வாழ்க்கையை மேற்கொள்கின்றன. பசி என்பது ஒருவித நெருப்பு. அது மனிதர்களின் தேகத்திற்குள் பற்றி எரியும் தன்மை கொண்டது. அதனை அவிக்கும் ஒன்றாக இருப்பது உணவு. குறிப்பாக ஏழைகளைப் பசி என்னும் விஷக்காற்று அறிவற்ற நிலைக்குத் தள்ளிவிடும். அதனைத் தடுப்பதற்கு அவர்களுக்கு ஆகாரம் வழங்கிக் காப்பதே சீவ காருண்யம் ஆகும்.

பசிக்கும் காலத்தில் உயிரின் அறிவு விளக்கமில்லாமல் மயக்கம் கொள்கிறது. அறிவென்னும் ஒளியை மங்கச் செய்கிறது. அதனால் அறிவுக்கு அறிவாக கடவுளும் விலக்கம் பெறும் வாய்ப்பு ஏற்படுகின்றது. புத்தி கெடுகின்றது; சித்தம் கலங்குகின்றது; அகங்காரம் அழிகின்றது. பிராணன் சுழல்கின்றது. கண் பஞ்சடைந்து குழிந்துபோகின்றது காதும் கும்மென்று செவிபடுகின்றது. நா உலர்ந்து வறண்டு விடுகின்றது. வயிறு பகீரென்று எரிகின்றது. இவ்வளவு அவஸ்தைகளையும் உண்டாக்கும் பசியை இல்லாமல் செய்யத் தேவை ஆகாரம்.

பசித்த உயிருக்கு உணவு கிடைக்கும் நிலையில் தத்துவங்களும் சிந்தனைகளும் தழைத்தோங்கும் அறிவு விளங்கி, அகத்திலும் முகத்திலும் ஜீவகளையும் அருளும் கடவுள் நிலையும் உருவாகும். பசி இன்மையே முழுத்திருப்தியின் முதல் வெளிப்பாடு. பசியை விஷக்காற்று என வர்ணித்தவர், பசியால் குடும்பங்களும் குடும்ப உறவுகளும் கெடும் வாய்ப்புகளுண்டு என்பதை உணர்த்துகிறார். பெற்றோர்கள் பிள்ளைகளை விற்பதும், பிள்ளைகள் பெற்றோர்களை விற்றுவிட்டுப் பிரிவதும் நடக்கும். இவ்வளவு கொடிய பசி சொந்த வீடு, மாடு, நிலம், உடைமைகள் என எல்லாவற்றையும் விற்றுத்தீர்க்கும் நிலைமைக்குத் தள்ளி விடக்கூடியது. எனவே பசியைப் போக்குவது தலையாய பணியாகக் கருதவேண்டிய ஒன்று.

பசி இந்த உலகத்தில் உள்ள ஒருவரையும் விட்டுவைக்காது. அதன் இருப்பை ஒவ்வொருவரும் அவரவர் அளவில் எதிர்கொள்வார்கள். ஞானிகளும்,யோகிகளும், சித்தர்களும் முனிவர்களும் பசி நேரிடும்போது தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டுவிட்டு அடுத்த ஊரை நோக்கிப் பிச்சைக்கு (பலிக்கு) வருகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமும் நம்பிக்கையும் கொண்ட ஆச்சாரியர்களும் பசிவந்தால், ஆசாரங்களைக் கைவிட்டு எல்லாவற்றையும் மறந்து ஆகாரங்களை எதிர்பார்க்கின்றனர். கல்வி கேள்விகளில் நிரம்பி, அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்க வல்லவர்களும் பசி வந்தால் அறிவும், கருத்தும் அழிந்து தடுமாறுகிறார்கள். இப்படியானவர்களே பசியால் இப்படியாகின்ற நிலையில் ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகள் பசி நேரிடும்போது “ ஐயோ இது என்ன வாழ்க்கை” என்று சலித்துத் துன்பமடையவே செய்வார்கள்.

இந்த நிலையில் பசியால் வருந்துபவர்களிடையே எந்த வேறுபாடும் பார்க்கக் கூடாது. பசியோடிருக்கிறார்கள் என்றால் அவர்களின் பசியைத் தீர்ப்பதே முதல் தேவை. தேசம், சமயம், சாதி என எதையும் ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதியொழுக்கம் எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்காமல் அவர்கள் பசித்திருக்கும் மனிதர்கள் என்று பொதுவாகப் பார்த்து அவர்களின் உணவொழுக்கத்திற்கேற்பப் பசியைப் போக்க வேண்டும் .
பசியால் வாடியவர்களின் தேவையை அறிந்து பசியாற்றுவதையே விரதமாகக் கொண்டிருக்கும் சீவகாருண்யம் கொண்ட இல்லறத்தார்களுக்கு கோடை வெயிலும் வருத்தம் தராது; மண்ணும் வெப்பம் தராது; பெருமழை, பெருங்காற்று, பெருங்குளிர், பேரிடி, பெருநெருப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் எந்தவிதத் துன்பமும் ஏற்படாது. அதேபோல் பசியைத் தீர்க்கின்ற விசயத்தில் ஒருவரும் இன்னொருவரைத் தடுக்கக்கூடாது. சில நேரங்களில் புருசனைப் பெண்சாதி தடுக்க நினைக்கலாம்; பெண்சாதியைப் புருசன் தடுக்க நினைக்கலாம். பிள்ளைகளைப் பெற்றோர் தடுக்கலாம்; பிள்ளைகள் பெற்றோரைத் தடுக்கலாம். சீடர்கள் ஆசிரியரைத் தடுக்கலாம்; ஆசிரியர் சீடர்களைத் தடுக்கலாம். அடியாரை ஆண்டவன் தடுக்கலாம்; குடிகளை அரசன் தடுக்கலாம்; அரசனைக் குடிகள் தடுக்கலாம். இந்தத்தடைகளையெல்லாம் ஒருவரும் பொருட்படுத்தாது எல்லாவிதத் தடைகளையும் தாண்டிப் பசியைத் தீர்க்கவேண்டும். அப்படித் தீர்க்கும் நிலையில் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரையே சேரும் என்பதை உணர்ந்து, உண்மையாகச் செயல்படுவதே சீவகாருண்ய ஒழுக்கத்தின் பாதையாகும்.

சீவகாருண்யம் என்னும் திறவுகோலைக் கொண்டு மோட்சம் என்னும் மேல் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகவேண்டுமென்றால் பசியோடு இருப்பவரின் பசியைத் தீர்த்து வைத்துத் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டும்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு

எல்லா மனிதர்களும் எதிர்கொள்ளும் மரண வாழ்க்கையைச் சன்மார்க்க நெறிநின்று வாழும் ஒருவர் சந்திக்க மாட்டார் என்பது வள்ளலார் கண்டறிந்து முன்வைத்த உயரிய தத்துவம். சாகாக் கல்வி என அவர் சொன்ன வாழ்க்கையில் ஒருவர் முதலில் தூக்கத்தைத் துறக்க வேண்டும் என்கிறார். தூக்கத்தை ஒழித்தால் ஒருவரது ஆயுள் விருத்தியாகும் என்கிறார். நாளொன்றுக்கு இரண்டரை நாழிகை தூங்கினால் போதும். அப்படித் தூங்கினால் ஒருவர் ஆயிரமாண்டுகள் வாழலாம். தூங்காத நேரங்களில் ஆசானின் திருவடியை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்த வள்ளலார் காற்று, நீர், ஆகாயம், மண், தீ என்று ஐம்பூதங்களினாலும், கூற்றுவனாலும், நோயாலும், கொலையாலும் அழியாத உடலை அடைந்ததாக அவரது பாடலொன்று கூறுகிறது:

காற்றாலே புவியாலே ககனமதினாலே

கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய் அளிக்க வேண்டும் என்றேன்; விரைந்தளித்தான் எனக்கே.

சன்மார்க்க நெறிப்படியான வாழ்க்கையே இறவா வாழ்க்கையைத் தரும் என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக,

சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே

பிணி மூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடும் காண்

தெரிந்து வம்மின் இங்கே

என்று எழுதிய இன்னொரு பாடல் இது. மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைய வள்ளலார் தந்த மகா மந்திரங்கள் மூன்று. அவை:

தனித்திரு!

பசித்திரு!!

விழித்திரு!!!

இதனைப் பின்பற்றும் நிலையில்,

இறவாமை ஈந்தான் என்று ஊது ஊது சங்கே

எண்ணம் பலித்தது என்று ஊது ஊது சங்கே

என வாழமுடியும் என்று நம்பிக்கையூட்டி வழிகாட்டியவர் வள்ளலார். இவையெல்லாம் தனிமனிதர்களாக இருந்து ஆன்ம ஈடேற்றத்தை அடைவதற்காக வள்ளலார் சொன்ன வழிமுறைகள். இனி இந்த மனிதக் கூட்டத்தைச் சமூகமாக நினைத்து அவர் சொல்லிச் சென்ற கருத்துகளைத் தொகுத்துக்கொள்ளலாம்.

சாதி சமய ஏற்றத்தாழ்வு நீக்கம்

மக்களிடையே இருந்த வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் குறித்துக் கவனமாகப் பரிசீலனை செய்த வள்ளலார் அவற்றைக் கடுமையாகச் சாடி வேறுபாடுகள் இல்லாத சமூக வாழ்க்கையை முன்வைத்துள்ளார். குறிப்பாகச் சமயவேறுபாட்டையும் சாதி வேறுபாட்டையும் அவரளவுக்குச் சாடிய ஞானிகள் இல்லையென்றே சொல்லலாம். அவர் எழுதிய வரிகளை இங்கே நாம் வாசிக்கலாம்:

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே


சாதி குலம் என்றும் சமயமதம் என்றும்

நீதியியல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற

பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று

********

எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர்; தெய்வம் ஒன்றென்று அறியீர்

********

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம

வழக்கெல்லாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டு

அருட்சோதி வீதியில் ஆடச் செய்தீரே

என்ற விமரிசனங்களை வைத்த வள்ளலார், சாதி மதங்களைத் தவிர்த்த வாழ்வே சன்மார்க்க வாழ்வு எனச் சொல்கிறார்.

சாதியும், மதமும் சமயமும் தவிர்த்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

********



சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்து எனை மேலேற்றி

தனித்த திருஅமுதளித்த தனித்த தலைமைப் பொருளே

சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியிலே உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும்

என வலியுறித்துகிறார்.

சீர்திருத்தச் சிந்தனைகள்

இராமலிங்க வள்ளலாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் தனிமனித மேன்மையையும் தனிமனிதர்களுக்கான ஆன்மீக நெறிகளையும் மட்டுமே போதித்தன அல்ல. சமூகத்தின் மீதான அக்கறையோடு பல சீர்திருத்தங்களையும் முன்வைத்த சிந்தனைகளைக் கொண்டது. அவற்றை இங்கே தொகுத்துக்காணலாம்:

சமத்துவம்:

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுள ராகிஉல கியல் நடத்த வேண்டும்

இங்குள்ள அனைவருமே ஒத்த நிலையில் உள்ளவர்கள் தான் என்பதை ஏற்று, உயர்ந்தவர் தாழ்ந்தவரென எவரும் இல்லையென்று புரிந்துகொண்டு ஒற்றுமையாக உலகியல் வாழ்க்கையை நடத்த வேண்டும்


ஆட்சி:

ஆட்சி செய்கின்றவர்கள் கருணையோடு ஆட்சி செய்யவேண்டும். கருணை இலாதவர்களின் ஆட்சி விரைவில் ஒழிக்கப்பட்டு அருளோடு கூடிய நன்மைகளைச் செய்து தரக்கூடிய நன்மார்க்கம் கொண்டவர்களே இங்கு ஆட்சியாளர்களாக விளங்க வேண்டும்.

கடவுள்:

உண்மையில் கடவுள் எனப்படுவது இந்த உலகம் தான். அன்பாக இருக்கிறது இந்த உலகம். உலகிலுள்ள எல்லாவற்றிலும் பரிபூரணமான சமாதானத்தையும் சமரச நிலையையும் ஏற்படுத்தி அளவுகளை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது

வழிபாடு

ஒருவர் பிரார்த்தனை செய்வதில் அவருக்காக மட்டுமே செய்வது சரியானது அல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி – அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்

உடலைக்காத்தல்

முக்தி அடைவதற்கு மனித உடலே போதுமானது. இன்னொரு உடலால் அதை அடைவது அரிதான ஒன்று. ஆகவே எல்லாவிதத்திலும் இந்த உடல் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்

தேவர்

அறிவினது உயர்வினாலும் தாழ்வினாலும் தேவர் என்றும் மனிதர் என்றும் சொல்லப்பட்ட தே தவிர வேறுபாடுகள் சொல்ல வேறு எந்தக் காரணங்களும் இல்லை.

பெண்கல்வி

பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டும். மேலும் பேதமற்று அபேதமாய் படிப்பு முதலியவைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்

உணவு

ஒருமுறை உணவு உட்கொண்டால் ஏழரை நாழிகைக்குப் பிறகுதான் அடுத்த உணவு உட்கொள்ள வேண்டும். (ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம் ஆகும்)

தமிழ்

கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்ட தும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை (தந்தைமொழி) என்று நிருத்தம் சித்திக்கப்பெற்றுள்ளதுமான தமிழ் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி… தமிழ் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்கும் (சிவானு பூதி – இறை அனுபவம்)
நல்வழிப்படுத்துதல்

என்னிடம் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும்
அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்
மிரட்டிச் சொல்லுவேன்
தெண்டன் விழுந்து (காலில் விழுந்து) சொல்லுவேன்
பொருளைக்கொடுத்து வசப்படுத்துவேன்
அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்

இப்படி எந்தவிதத்திலாவது நல்ல வழிக்கு வரச்செய்து விடுவேன். நீங்கள் எல்லோரும் இப்படியே செய்தல் வேண்டும்.

ஆன்மநேயம்

அன்பர்களே! மக்களிடத்தும் மாக்களிட த்தும் கருணை காட்டுவதோடு சீவகாருண்யம் முடிவு பெற்றுவிடாது. அது இன்னும் பரந்து செல்வது. உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

இரு முதியவர்கள் ஒரு வீதி வழியே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவர் கால்பட்டு வீதியில் கிடந்த ஒரு மண்கட்டி உடைந்துபோனது. அதைக்கண்ட மற்றவர் உடனே மூர்ச்சையானார். பிறகு, அவருக்கு மூர்ச்சை தெளிவித்த பின், ‘தாங்கள் மூர்ச்சையுற்றதற்குக் காரணம் என்ன?’ என்று முன்னையவர் கேட்டார்.

‘ உம்முடைய காலினால் அந்த அழகான மண்கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே. அதுதான் நான் மூர்ச்சையடையக் காரணம்’ என்றார் மூர்ச்சையுற்றவர்.

வள்ளலார் சொன்னவற்றைத் தனிமனிதர்களுக்கானவை எனவும், சமூகத்திற்கானவை எனவும் பிரித்துப் பேசினாலும், அவை அனைத்தும் மனிதகுல மேன்மைக்கானவை என்பதை நாம் மறந்துவிடலாகாது.

முடிவுரை

திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தமிழகம் தந்த ஓர் ஆன்மீகவாதி. எல்லாச் சமயங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம், அவர் உருவாக்கிய மார்க்கத்திற்குச் சர்வசமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். சாதிசமய வேறுபாடுகளைக் களையவேண்டும் என்பதை வலியுறுத்தியதற்காகவும், சைவ சமயத்தில் இருந்த பழைய கருத்துகள் மீது சீர்திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தார்.

“வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வடலூரில் “சத்தியஞான தர்மசபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் அந்தத் தர்மசபை வள்ளலாரின் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. அந்த ஒரு காரணத்திற்காகவே வள்ளலாரின் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?