மொழி அரசியல்: மதவாத அரசியல் இணையும் புள்ளிகளும் விலகும் தடங்களும்
காசி தமிழ்ச்சங்கமம்-2022
சங்கமம்:
சங்கமம் என்ற சொல்லுக்கு முன்னால் ‘தமிழ்’ இணைக்கப்பட்டுத் ‘தமிழ்ச்சங்கமம்’ என்றொரு நிகழ்வு இம்மாதம் – நவம்பர் 16 ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் இடம் காசி.
சங்கமம் என்பது கூடுகை; சங்கமம் என்பது கலத்தல்; சங்கமம் என்பது ஆறு.
சென்னை சங்கமம் என்றொரு பெருங்கூடுகையைத் தமிழ் மையம் என்ற அமைப்பு 2007முதல் 2011 முதல் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக நடத்தியது. சமய அடையாளங்கள் இல்லாத தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கல் நாளையொட்டி ஒருவார கால அளவில் நடந்த சென்னை சங்கமம், கவி.கனிமொழி கருணாநிதியின் அடையாளமாக இருந்த ஒன்று. தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கும் நாட்டாரியல் நிகழ்த்துகலைகளான கூத்துகள், ஆட்டங்கள், பாட்டுகள் போன்றவற்றை நிகழ்த்தும் குழுக்களைச் சென்னைக்கு வரவழைத்து, நகரில் மக்கள் கூடும் மைதானங்கள், பூங்காக்கள், கல்வி நிறுவன வளாகங்கள் போன்றவற்றில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்ட து. அதே நேரத்தில் தமிழின் இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் அறியப்பட்ட ஆளுமைகளும் சென்னையில் கூடும் வகை செய்யப்பட்டது. பெருந்திரளாகக் கவிகள் கவிதைகளை வாசித்தனர்; புனைகதை ஆசிரியர்களும் அரங்கவியலாளர்களும் பங்கேற்ற கருத்தரங்குகளும் விவாத மேடைகளும் நடந்தன.
ஜெகத் கஸ்பார் என்ற பாதிரியாரின் சிந்தனையில் தோன்றிய தமிழ் மையத்தின் நிகழ்வாக ஆரம்பித்த சென்னை சங்கமம், கவி கனிமொழி கருணாநிதியின் ஈடுபாட்டின் காரணமாக அரசின் விழாவாக மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்ததால் (2006-2011) தமிழ் மையத்தோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்துகொண்டது. அதன் கீழ் இயங்கும் கலை-பண்பாட்டுத்துறை, இயல் இசை நாடகமன்றம் போன்றனவும் பங்கேற்றன. அதனால் பெரும் வணிக நிறுவனங்களின் நிதியுதவியும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவானது. 2011 தேர்தலில் அ இ அதிமுக ஆட்சி ஏற்பட்ட நிலையில் சென்னை சங்கமம் நிகழ்வுகள் நின்று போயின. திரும்பவும் அதே பெயரில் கடந்த ஆண்டு தமிழக அரசின் பண்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் சிறிய நிகழ்வாக நடந்தது.
சென்னை சங்கமத்தின் பின் இருந்த நோக்கம் நீண்ட மரபு கொண்ட தமிழ் மொழியின் இலக்கியங்கள், கலைகள், பண்பாட்டு அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது. இந்த நோக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் நம்பும் ஒரு கருத்தியலின் வெளிப்பாடு. தமிழ் மொழிக்கு எதிராகச் சம்ஸ்க்ருதமும் இந்தியும் இருக்கின்றன. அதன் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக அம்மொழியின் பரவலும் ஊடுருவலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன. ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்றுத் தமிழின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அதனைத் தடுக்கும் விதமாக மொழிசார்ந்த இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் எனத் தமிழ் மக்களிடையே பேசி இயக்கம் கட்டியுள்ளது. 1960 -களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமே 1967- இல் தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக ஆக்கியது என்றொரு கருத்தும் நம்பிக்கையும் இன்றளவும் இருக்கிறது. இந்த நம்பிக்கையும் கருத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் கருத்தியலாளர்களுக்கும் தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் உண்டு. தமிழை மையப்படுத்திய இந்த மொழி அரசியல் தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் ஆழமான பதிவுகளைக் கொண்டது. இது நிற்க.
காசி தமிழ்ச்சங்கமம் - சில குறிப்புகள்
உத்தரப்பிரதேசத்தில் கங்கைக்கரையில் இருக்கும் வாரணாசி என்றழைக்கப்படும் நகரமே காசி என்பது பலரும் அறிந்த ஒன்று. வாரணாசி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பெற்றவரே இந்திய அரசின் முதன்மை அமைச்சர் திரு நரேந்திரமோடி என்பதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது செயல்பாடுகளைத் தொடங்கக் காசி விசுவநாதர் ஆலயத்திற்கு வருகைதருவதும் அங்கிருந்து தொடங்கும் எல்லாம் வெற்றிகரமாக முடியும் என நம்புவதும் கூடப் பலருக்கும் தெரிந்த ஒன்று.
குஜராத் மாநிலத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட நரேந்திரமோடி வாரணாசி தொகுதியைத் தேர்வு செய்து போட்டியிட்டு முதன்மை அமைச்சரானதின் பின்னணியில் வாரணாசி இந்துக்களின் புண்ணிய நகரங்களில் முதன்மையானது என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாகச் சைவ சமயத்தின் முதன்மையான விசுவநாதர் ஆலயம் அங்கு உள்ளது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று அந்தக் கோயிலின் மூலக்கடவுள். வாரணாசி என்ற பெயரில் நகரம் அழைக்கப்பட்டாலும். விசுவநாதரின் பெயரோடு காசியே இணைக்கப்பட்டுக் காசு விசுவநாதர் ஆலயம் என்பது வழக்காறாகியிருக்கிறது. அந்தப் பெயரோடு கூடிய சிவத்தலங்களும் ஊர்களும் தமிழ்நாட்டில் உள்ளன. தென்காசி, சிவகாசி என்பன நினைவில் வரக்கூடிய பெயர்கள். அந்நகரையும் தென் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தையும் இணைத்துப் பேசும் பண்பாட்டு வழக்காறுகள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்ச் சைவ நாயன்மார்களின் ஆன்மீகப் பயணத்தில் காசிக்குப் போவது முதன்மையான ஒன்றாக இருந்துள்ளது. தமிழில் எழுதப்பெற்ற கலம்பகம், புராணம், பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் காசியின் பெயரோடு இணைத்து எழுதப்பட்டுப் பரப்பப்பட்டுள்ளன.
தமிழ்ச் சங்கமம்
சென்னையில் நடந்த சங்கமம் என்ற பெயரைப் பின்னொட்டாக்கிக் காசியெனும் நகரோடு இணைத்துக் கொண்டாடப்படும் தமிழ்ச் சங்கமம் நிகழ்வு 2022, நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 19 வரை ஒரு மாதகாலத்திற்கும் கூடுதலாக நடக்கிறது. காசியெனத் தமிழ்நாட்டில் அறியப்பட்டுள்ள வாரணாசி நகரில் நடக்கும் முறைப்படியான தொடக்கவிழாவை இந்திய அரசின் முதன்மை அமைச்சர் தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி முன்னிலையில் நடந்த விழாவில் தமிழ்ச் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக விளங்கிய இளையராஜாவின் இசையில் பாடல்கள் இசைக்கப்பட்டன.
இந்நிகழ்வை நடத்தும் பொறுப்பைப் பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு ஏற்றுள்ளது. அதற்குத்துணையாக காசியில் இயங்கும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமும், சென்னையில் இயங்கும் இந்தியத்தொழில்நுட்பக்கழகமும் அறிவுசார் உதவியை வழங்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. நிகழ்வு இந்திய விடுதலையின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘விடுதலையின் அமுதப்பெருவிழா’வின் ஓரங்கம் என்பதால் முழுச் செலவையும் இந்திய ஒன்றிய அரசும் உத்தரப்பிரதேச அரசும் ஏற்றுள்ளன. இந்த வகையில் காசி தமிழ்ச் சங்கமம் திட்டம் என்பது ஒன்றிய அரசின் திட்டமே. அதன் முதன்மையான நோக்கம் காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே இருந்த பண்பாட்டுத்தொடர்புகள், மரபு மற்றும் அறிவுத் தொடர்பைக் கண்டறிவதும் மீட்பதும் கொண்டாடுவது எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து 2500 -க்கும் அதிகமானோர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 216 பேர் என்ற எண்ணிக்கையில் சென்றுள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சாரச் செயல்பாட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள், கைவினைக்கலைஞர்கள், தொல்லியல் வரலாறு எனப் பாரம்பரிய ஈடுபாட்டாளர்கள், ஆன்மீகம் பரப்புநர்கள், கிராமப்புற விவசாயிகள், நாட்டாரியல், செவ்வியல் கலைஞர்கள் எனப் 12 குழுக்களில் தமிழின் பலதரப்பட்ட மனிதர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் இயங்குகிறது. அதற்குள் சென்று வந்தாலே இந்தத் தமிழ்தசங்கம ம் நிகழ்வின் திட்டமிடலையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்திய நாகரிகச் சொத்துகளில் உள்ள ஒற்றுமையைப் புரிந்துகொள்ளவும், ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உருவாக்கிக் கட த்தவும் உண்டாக்கப்பட்ட நிகழ்வு என்பது தெரியவரும். இந்த ஒருமாத காலத்தில் அங்கே நடக்கும் விவாதங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் வழியாகப் புதிதாக அறிமுகமாகியுள்ள தேசியக் கல்விக்கொள்கையின் அடிப்படைகளையும், அதன் சாராம்சத்தையும் விவாதிக்கும் இணை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதையும் புரிந்துகொள்ளலாம். இத்தகைய நிகழ்வுகளை ஒன்றிய அரசும், அதன் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் துணை அமைப்புகளும் நடத்துவது புதியதல்ல. ஒற்றை அடையாளம் கொண்ட இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு கூடிய திட்டங்களும் கொள்கைகளும் எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதை விளக்குவதற்காக அவ்வப்போது நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கின்றன. அவற்றிலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் வேறுபடும் விதம் ஒன்றே ஒன்றுதான். இந்த நிகழ்வில் தமிழ் மொழியும் தமிழ்ப்பண்பாடும் முதன்மையாக்கப்பட்டு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இத்திட்டமிடலின் பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த மொழி அரசியலின் சாயல்களும் அடையாளங்களும் இருந்தாலும் அவையெல்லாம் பாவனைகளே. இதில் முழுமையாக வெளிப்படுவது சமய அரசியலே. தமிழ் இலக்கிய வரலாற்றை வைதீக இந்து சமயத்தின் பிரிவுகளான சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தெடுக்கப் பாடப்பெற்ற தேவாரப்பதிகங்கள், திவ்வியப்பிரபந்தப்பாசுரங்கள் ஆகியவற்றின் தொகுதியாகவும் அவற்றின் நீட்சியாகவும் முன்வைக்க நினைக்கும் நோக்கம் கொண்ட சமய அரசியல். இந்நோக்கத்தில் பின்னணியாகவே காசி தமிழ்ச்சங்க திட்ட நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாரணாசி என்றழைக்கப்படும் காசிக்குத் தமிழ் இலக்கியத்திலும், பண்பாட்டிலும் உள்ள இடம் எப்படிப்பட்டவை என்ற சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டு ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படுகின்றன.
உருவாக்கிப் பரப்பப்படும் இந்தச் சொல்லாடல்கள் முழுமையும் உண்மையல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் உருவான முதன்மையான இலக்கியங்களும் இலக்கியப் போக்குகளும் சமயக் கருத்தாக்கங்களை பேசுபொருளாக- உரிப்பொருளாகக் கொண்டவை அல்ல. அந்தக் காலகட்டத்தில் இருந்த கடவுள் மீதான பார்வை, இயற்கை-மனிதன் – இயக்கும் சக்தியொன்றின் புதிரான இடம் பற்றிப்பேசும் ஆன்மீகம் மற்றும் தத்துவப்போக்குகள் குறித்து விவாதப்படுத்தியுள்ளன. என்றாலும் குறிப்பான ஒரு மதத்தின் ஆதரவு நிலையைக் கொண்டனவாக இருந்ததில்லை. குறிப்பாகத் தொல் இலக்கியங்களான சங்கச் செவ்வியல் கவிதைகளில் எந்தவிதமான அமைப்புச் சமயங்களின் அடையாளங்களும் இல்லை. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற உயர்தனிப் பனுவல்கள், தமிழ் இலக்கியத்தைச் சமய ஆதரவிலிருந்து விலக்கி வைத்துள்ளன. அதேபோல் பின்னர் தோன்றிய சித்தர் பாடல்களும், தனிப்பாடல்களும் இலக்கியம் என்ற எல்லைக்குள் அதனதன் சமகால மனிதர்களையும் அமைப்புகளையும் நோக்கிப்பேசியுள்ளன. இதனை உள்வாங்கி வளர்ந்த நவீனத்துவ இலக்கியப் போக்குக்கும் ஒரு மரபுத்தொடர்ச்சி இருக்கிறது. இதற்கு மாறாகப் பக்தி இயக்கக் காலத்தில் உருவான பாசுரங்களும் பதிகங்களும் முழுமையாகத் தமிழ்க்கவிதை மரபைத் திருமாலோடும் சிவனோடும் இணைத்துப் பேசியுள்ளன. சிற்றிலக்கிய வடிவங்களில் பலவும் அதே பாதையைத் தொடர்ந்துள்ளன. இந்தப் பாதையை முழுமையாகத் தொடரும் நவீனத்துவ இலக்கிய மரபு இல்லை. சமயத்தின் இடத்தைப் பாலியல் மற்றும் உளவியல் கருத்தாக்கங்கள் சார்ந்த குற்றமனம், அறத்தின் வழி இயங்க நினைக்கும் தனிமனிதவாதப் போக்கு கொண்ட ஐரோப்பிய நவீனத்துவத்தின் தொடர்ச்சியே சிற்றிதழ் இலக்கியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டன; இப்போதும் தொடர்கின்றன.
இருவேறு விதமான தமிழ் இலக்கிய மரபைக் கண்டுகொள்ளாமல் சமயத்தின் கருத்துகளைப் பரப்பும் மொழி என முன்வைக்க நினைப்பது சமகாலத்தேர்தல் அரசியலோடு தொடர்புடையது. அது ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.க. வின் மையமான அரசியலான மதவாத அரசியலோடு நெருங்கிய உறவுடையது. இந்தியாவின் மதம் வேதங்களை உள்வாங்கிய வைதீக இந்துமதமே. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அந்த மதத்தவராகவே இருக்கவேண்டும்; அம்மதம் முன்வைக்கும் வாழ்வியலையும் சடங்குகளையும் பின்பற்ற வேண்டும் என வெளிப்படையாகப் பேசிவரும் கட்சி. அந்த நோக்கம் கொண்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்கித் திணிக்கும் நோக்கங்களும் அதற்குண்டு. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத மாநிலமாகத் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் இருக்கின்றனர். சமயப்பிளவுகளை முன்வைத்துப் பேசும் அதன் அரசியல் கொள்கைகளைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதைத் தேர்தல்கள் மூலம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் அதன் பரப்புரைக் கருத்துகளையும் உத்திகளையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதன் வெளிபாடே காசித் தமிழ்ச்சங்கம்.
முன் நிகழ்வு
காசித் தமிழ்ச்சங்கமத் திட்டம் வழியாக முன்னெடுக்கப்படும் பா.ஜ.க.வின் மொழி அரசியல் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. 2014 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்காகச் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி முன்னெடுக்குப் பொறுப்பில் இருந்தவர் உத்தரகண்ட மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய். அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் குறித்து மேடைகளில் பேசினார். அவரது பேச்சுகளில் திருவள்ளுவர், கவி. பாரதி, ராஜராஜ சோழன் போன்ற பெயர்கள் இடம்பெற்றன. திருக்குறள் ஆகச்சிறந்த அறநூல்; அதை எழுதிய திருவள்ளுவரின் பிறந்தநாலைத் தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றார். திருவள்ளுவரின் சிலையைக் கங்கைக் கரையில் நிறுவுவதற்காக எடுத்துச் சென்றார். ஆனால் அங்கே அதனை வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அம்முயற்சியைக் கைவிட்டார். அதேபோல் ‘ ஆயிரம் உண்டிங்கு சாதியெனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ எனத் தேசியக் கருத்தியலுக்கு முன்னுரிமை கொடுத்த கவி.பாரதி இயங்கிய மொழி தமிழ் எனச் சொன்னார்.ஆகவே அவர் வசித்த வாரணாசி வீடு அவரது நினைவிடமாக ஆக்கப்படவேண்டுமெனக் கூறினார். அதுவும் நடக்கவில்லை.
தமிழ்ப்பக்தி மரபு, இந்திய வைதீக மரபுக்கு வலுச்சேர்த்த மரபு என்பதும் தருண்விஜயின் பேச்சுகளில் வெளிப்பட்ட ஒன்று. அந்தக் கருத்தியல் முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகவே தஞ்சையில் ஒருகாலகட்டத்தில் ஏகச் சக்கரவர்த்திகளாக விளங்கிய சோழப்பேரரசர்களான ராஜராஜனையும் அவனது மகன் ராஜேந்திரச் சோழனையும் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவர் சம்ஸ்க்ருத மொழியை இந்தியாவின் பண்பாட்டு மொழியாகவும், ஹிந்தியை இந்தியாவின் தேசியமொழியாகவும் முன்னிறுத்தி அரசியல் செய்து அதிகாரத்துக்கு வந்துள்ள கட்சியின் உறுப்பினர் என்பதை மறக்காமலேயே தமிழையும் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரை வரவேற்றும் மேடை அமைத்துக் கொடுத்தும் பாராட்டியும் பேசியவர்களில் முதன்மையானவராக இருந்தவர் கவி.வைரமுத்து என்பதும், வைரமுத்துவின் அழைப்பின் பேரில் திராவிட இயக்கப் பேராசிரியர்கள் என்ற அடையாளம் கொண்ட முன்னாள் துணைவேந்தர்களான முனைவர் க.ப.அறவாணன், முனைவர் ஔவை நடராசன், முனைவர் ம.ராஜேந்திரன், முனைவர் க.திருவாசகம் போன்றோர் தருண் விஜயைப் புகழ்ந்து பாராட்டினார்கள் என்பது அப்போது நகைமுரண் நிகழ்ச்சிகள்.
இந்தியா என்ற அகண்ட தேசத்தை உருவாக்கியது ஆங்கிலேய ஆட்சி அல்ல; அதற்கு முன்பே இந்தத் தேசம் அகண்ட பாரததேசமாகவே இருந்தது. ஆட்சியாளர்கள் பல நூறுபேர் கூட இருந்திருக்கலாம். ஆனால் சமயம், தத்துவம், கலை, சடங்குகள் எனப் பலநிலைகளில் – பொதுத்தன்மை நிலவியது. அப்பொதுத்தன்மை இமயம் முதல் குமரிவரை இருந்த பரப்பில் ஊடும் பாவுமாகப் பரவி நின்றது. எனவே அப்பண்பாட்டுப் பாரதத்தை மீட்டெடுக்க வேண்டும். இதுவே இந்துராஷ்டிரத்தை வலியுறுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டம். இந்த அடிப்படையில் தான் தருண் விஜயின் பரப்புரைகள் இருந்தன. அவர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல; ராஷ்டிரிய சுயம் சேவக்கின் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யத்தின் ஆசிரியராக இருந்தவர். தனிநபர் பரப்புரையாகத் தருண் விஜய் முன்னெடுத்த கருத்தியலையே இப்போது ஒன்றிய அரசும் உத்தரப்பிரதேச அரசும் சென்னையின் தொழில் நுட்பக்கல்விக்கழகமும் இணைந்து காசி தமிழ்ச்சங்கமமாக முன்னெடுக்கின்றன.
நடுநிலைவாதம் என்னும் சார்புநிலை
தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் மதவாதம் செல்லுபடியாகவில்லை; இனியும் செல்லுபடியாகாது என்று தெரிந்து மதவாதத்தை முதன்மையாக்காமல், பின்னுக்கு வைத்துக் கொண்டு மொழி அரசியலை முன்னே வைக்கிறது பா.ஜ.க. இதனை அரசியல் தளத்தில் எதிர்கொள்ளப் போகிறவர்களாகத் திராவிட முன்னேற்றக்கழகத்தினரும் இடதுசாரிக் கட்சிகளும் சமூகநீதியை முன்னெடுக்கும் இயக்கத்தவரும் ஆளுமைகளும் இருக்கிறார்கள். இதனைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவர்களாக நடுநிலைவாதம் பேசும் பலரும் பேசுகின்றனர். உண்மையில் பா.ஜ.க.வின் காசி தமிழ்ச்சங்கம நிகழ்வை ஆதரிப்பதே அவர்கள் நோக்கம். அதனை நேரடியாகச் சொல்லாமல் “ஆரம்பம் முதலே மொழி அரசியல் செய்தது தி.மு.க. இப்போது பா.ஜ,க. அதைக் கையில் எடுக்கிறது. இதை மட்டும் ஏன் விமரிசனம் செய்யவேண்டும் எனக் கேட்கிறார்கள்.
மத்தியில் அதிகாரத்தைக் குவித்தல், மாநில உரிமைகளைப் பறித்தல், வேண்டிய முதலாளிக்குச் சலுகை காட்டும்விதமாகப் பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிடல், கட்சியின் துணை அமைப்புகளின் சட்டமீறலைக் கண்டுகொள்ளாமல் வளர்த்து விடுதல் போன்றனவற்றைச் சுட்டிக் காட்டும்போது காங்கிரஸ் காலத்தில் அதுதானே நடந்தது; அப்போது யாரும் கேட்கவில்லை; இப்போது மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று பா.ஜ.க.வின் ஆதரவு வலதுசாரிகளும் அரசியல் ஆர்வலர்களும் சொன்னார்கள். அதே குரலில் நடுநிலைவாதம் பேசும் ஆளுமைகளும் ஊடகவியலாளர்களும் கருத்துகளை முன்வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மத அரசியல் ஒரு பாசிசக் கோட்பாடு என்றால் மொழி அரசியலும் பாசிசக் கோட்பாடுதான் என்று பேசுவது முரட்டுவாதமே ஒழிய அறிவார்ந்த வாதமல்ல. ஏனென்றால், பா.ஜ.க. பேசும் மதவாத அரசியல் சிறுபான்மையினருக்கு விடப்படும் எச்சரிக்கை. தி.மு.க. பேசும் மொழி அரசியல் நாட்டளவில் சிறுபான்மையாகவும் மாநில அளவில் பெரும்பான்மையாகவும் இருக்கும் தேசிய இனத்தின் உரிமைப் போராட்ட அடையாளம். ஆனால் இரண்டையும் ஒரே அளவுகோலால் நிறுத்திப் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல.
எது பிரிவினை வாத அரசியல்?
20 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ அதிகாரம் முடிவுக்கு வந்தது. ஐரோப்பியக் காலனிகளாக இருந்த ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் தேசிய அரசுகள் உருவாக்கப்பட்டு வலிமையான தேசக்கட்டுமானங்கள் பற்றிச் சிந்தனைகள் துளிர்விட்டன. பரப்பளவில் பெரும் நாடுகள், பொருளாதாரத்தில் தன்னிறைவு, பாதுகாப்பிற்கு வலிமையான ராணுவம் என்பன இலக்குகளாகவும் கனவுகளாகவும் முன்வைக்கப்பட்டன. இந்தக் கனவுகளையும் இலக்குகளையும் அடைய ஓர் அரசியல் அமைப்புச் சட்டம் தேவை என உணரப்பட்டது. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள் ஒவ்வொன்றிலும் இந்த இலக்குகளும் கனவுகளும் சின்னச்சின்ன வேறுபாடுகளும் நடைமுறைப் படுத்தப்பெற்றன.
இந்தியாவுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிஞர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு, 1950 இல் இறுதி செய்து தந்தது. அதனை இந்தியாவின் நாடாளுமன்றம் ஜனவரி 26 இல் ஏற்றுக்கொண்டது. வலிமையான நாடு என்னும் இலக்குகளையும் கனவுகளையும் நிறைவேற்ற ஒரு நாட்டிற்குள் இருக்கும் வேறுபட்ட மொழிகள், கல்விமுறைகள், சமயங்கள், அவற்றின் வழிபாட்டுமுறைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் போன்றன தடையாக இருக்கக்கூடியன என்ற கருத்து வலுப்பட்டது. குறிப்பாகத் தேசியவாதம் பேசிய கட்சியினர் பன்மைத்துவப்போக்கை மறுதலித்து ‘ஒரு நாட்டுக்கு ஓரடையாளம்’ என்ற மனப்போக்குக்குள் நகர்ந்தனர். அந்த அடையாளத்தை உருவாக்கும் முதல் காரணியாகத் தேசிய மொழி இருக்கும் என நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே ‘இந்தி தேசியமொழி’ என்று முன்மொழியப்பட்டது. மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவைப் பிரிக்கலாம் என நினைத்த பண்டித நேரு, அம்பேத்கர் போன்றவர்களே தேசியமொழியாக ஒன்று அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று நம்பினர். அதனைத் தொடக்க நிலையிலேயே எதிர்த்துத் தமிழ் அடையாளத்தை முன்வைத்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியைத் திணிக்கக் கூடாது என்ற உறுதிமொழியை அப்போதைய முதன்மை அமைச்சர் பண்டித நேருவிடம் வாதாடி உரிமையாகப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் தி.மு.க.வின் மொழி அரசியல் பிரிவினைவாத அரசியல் அல்ல; தேசிய இனம் ஒன்றின் உரிமை அரசியல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
மொழி உரிமையைப் போலவே சமயவழிபாட்டு முறைமைகள் அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், சமயக் கொள்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவை தனிமனிதர்களின் அடையாளம்; அந்தரங்க விருப்பம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்தியா ‘சமயச்சார்பற்ற’ நாடு என்ற அடையாளத்தை அரசியல் சட்டத்தின் பகுதியாக ஆக்கிக் கொண்டது. ஆனால் அதனை மறுத்து இல்லாமல் ஆக்க நினைப்பது சகிப்பின்மையின் வெளிப்பாடு.
***************
திராவிட இயக்கங்களின் தமிழ் உணர்வு – சில விமரிசனங்கள்
திராவிட முன்னேற்றக்கழகம் கையில் வைத்திருக்கும் மொழி அரசியலைப் பாசிச வடிவமாகச் சொல்லும் நடுநிலையாளர்கள் சில விமரிசனங்களை முன்வைக்கிறார்கள். “இந்தி ஒழிக x தமிழ் வாழ்க என எதிர்வு முழக்கங்களை எழுப்பிய திராவிட இயக்க ஆட்சியாளர்கள் தமிழ் அதிகார மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும், கல்வி மொழியாகவும் இருக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மொழி என நம்புவதில்லை. அவற்றிற்கெல்லாம் ஆங்கிலம் வேண்டுமென நம்புபவர்கள் அவர்கள். ‘தமிழால் முடியும்’ எனப் பாரதிதாசன் சொன்னதை மனதார நம்பியிருந்தால் அதற்கான வேலைகளைச் செய்திருப்பார்கள். அகராதிகள் உருவாக்கம், கலைக்களஞ்சிய உருவாக்கம், வளமான தமிழ்க் கவிதை மரபை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல மொழிபெயர்ப்பு நிறுவனங்கள், நிகழ்காலத்தை எழுதும் அனைத்து வகைப் போக்குகளையும் அங்கீகரித்தல் என உள்வாங்கும் அரசியலை – மக்களாட்சி நடைமுறையைப் பின்பற்றியிருப்பார்கள். அவர்கள் வசம் அரை நூற்றாண்டுக்காலத்திற்கும் மேலாக ஆட்சி அதிகாரம் இருந்தும் தமிழ் என்பதை நபர்களாகக் கருதி அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைத் தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள் என விமரிசனம் செய்கிறார்கள். இந்த விமரிசனத்தில் உண்மையில்லாமல் இல்லை.
தமிழ்க் கருத்தியல் என்பது தொடர்ச்சியான விவாதத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. ஒற்றைக் கவிதை மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கணியன் பூங்குன்றனின் கருத்தியல் வழி உருவாக்கிக்கொள்ளக்கூடிய கருத்தியல் அது. உலக இலக்கியத்திற்குத் தனது கவிதையியலின் வழி அடித்தளத்தை உருவாக்கித் தந்துள்ள அரிஸ்டாடிலின் ‘கவிதையியல்’ கோட்பாட்டிற்கு இணையான கோட்பாட்டிற்கு இணையான கோட்பாட்டை முன்மொழிந்தவர் தொல்காப்பியர். அவரது அகம், புறச் செல்நெறிகளின்படி உருவான செவ்வியல் கவிதைகளின் தொகுதிகளைக் கொண்டது தமிழ்க்கவிதை மரபு. தண்டியலங்காரம் முன் வைத்த காவ்யமரபுக்கு முன்பே உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் எழுதித் தந்த புலவர்கள் தமிழ்ப்புலவர்கள். அகக்கவிதைகளின் தன்னிலையைப் பக்திக் கவிதையாக மாற்றிய தன்னுணர்ச்சிப் பாடல்களின் வழி கடவுளை வழிபட்ட கவிதை மரபு அதற்கு உண்டு.
இதையெல்லாம் நன்கு அறிந்தவர் அரசியலாளர் ஒருவர் இருந்தார் என்றால் அவர் கலைஞர் மு.கருணாநிதி மட்டுமே. அவரளவுக்குப் பண்பாட்டரசியலை முன்னெடுக்கும் ஆளுமைகள் இப்போது இல்லை. திராவிட இயக்கக் கருத்தியலாளர்களாக வெளிப்பட்ட கல்வியாளர்கள் பலரும் இதனை அறிந்தே இருந்தனர். ஆனால் தெரிந்த உண்மைகள் நிறைவேற்றப்பட வேண்டிய உண்மைகள் என்ற நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். தமிழ் என்பதும் தமிழ் உணர்வு என்பதும் அதிகாரத்துக்கு வருவதற்கு உதவும் கருவிகள் மட்டுமே என நினைத்தார்கள். அவையெல்லாம் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கோட்பாடுகள் என நம்பாதவர்களாகவே நின்று போனார்கள். தமிழ் வளர்ச்சி என்பதை ஆட்சியாளர்கள் சிலைகளின் வடிவமாகவும் நிறுவனங்களின் பெயர்களாகவும் பார்த்தார்கள். அவர்களால் நியமனம் செய்யப்பெற்ற தமிழறிஞர்களும் அப்படியேதான் நடந்துகொண்டார்கள். சிலைகளை நிறுவுவது, பெயர்களை வைப்பது, துறைகளை ஆரம்பிப்பது என்பதைத் தாண்டித் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கென எதுவும் நடந்துவிடவில்லை.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! என்ற முழக்கம் வெற்று முழக்கமாக மாறி எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!! என்ற வெறியாக மாறிவிட்டது. இந்தப் பின்னடைவின் பின்னணியில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் அதேயளவு பங்கு நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், அவற்றில் இயங்கும் தமிழியல் துறைகள், அதில் பணியாற்றும் என் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள் ஆகியோருக்கும் பங்குண்டு.
தமிழ் என்பது மொழி என்பதாகக் கற்பிக்காமல், கற்றுக் கொள்ளாமல் அவற்றில் செயல்படும் நபர்களாக அறிந்து கொண்டவர்களே அதிகம். கவிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் வரலாறே தமிழ் இலக்கிய வரலாறு என இங்கு கற்பிக்கப்படுகிறது. தமிழில் என்னவெல்லாம் எழுதப்பட்டது; அதன் கருத்தியல் பின்புலம் என்ன என்றெல்லாம் கற்பிக்கப்படாமல் நபர்கள், இடங்கள், முறைகள் சார்ந்த தகவல்களாகவே இலக்கியக் கல்வி இருக்கிறது. இதை மாற்றாமல் தமிழில் மாற்றங்கள் சாத்தியமில்லை.
தமிழ் என்பதும், அதன் இருப்பு என்பதும், அதன் வளர்ச்சி என்பதும் நபர்களுக்கான அங்கீகாரம் அல்ல. தமிழ் என்பது இந்தியவியலின் இணைகோடொன்றை வரைவது. தமிழ் அங்கீகாரம் பெறுவது என்பது இந்தியாவில் இருந்த வேறுபட்ட அறிவுத்தோற்றவியலை உலகத்திற்குச் சொல்லும் சக்தியோடு ஒரு செவ்வியல் மொழி இருந்தது என எடுத்துச் சொல்வது. தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்பது தொல்காப்பியரின் கவிதையியலை ஒட்டி ஒரு கவிதைச் செந்நெறி கொண்ட கவிதை மரபும் எழுத்துமரபும் கொண்ட ஒரு செவ்வியல் மொழி இந்தியாவில் வாழும் மொழியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வது. இதனைத் திராவிட இயக்க ஆட்சியாளர்களும் கருத்தியலாளர்களும் செய்யத்தவறிய நிலையில், இதுவரைத் தமிழை எதிர்த்தவர்கள் அதனையே தங்களுக்குப் பயன்படும் கருவியாக்க முடியும் என நம்புகிறார்கள். தமிழின் இடத்தைச் சம்ஸ்க்ருதத்திற்கும் இந்திக்கும் அளிக்க நினைத்தவர்கள் தமிழ் வழியாக மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பம் போன்ற தொழில் கல்விப்படிப்பைத் தருவோம் என்கிறார்கள். காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்த பண்பாட்டுச் சுற்றுலாவில் – ஆன்மீகப்பயணத்தில் தமிழும் சம்ஸ்க்ருதமும் இணைந்து பயணித்த மொழியாக இருந்த மொழிகள் என்கின்றனர். இந்த முன்வைப்பில் தமிழுக்குச் சில அங்கீகாரங்கள் கிடைக்கலாம். தமிழ் பேசும் ஆளுமைகளுக்கும் அங்கீகாரமும் அதிகாரப்பதவிகளும் கிடைக்கலாம். அதனால் தமிழ் வளரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. தனித்தியங்கும் மொழியாகத் தமிழ் இருக்கும் என்ற நிலை இருக்கப்போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். எல்லாவிதக் கருத்தியலையும் அடையாளங்களையும் தனதாக்கிச் செரிக்கும் இந்துத்துவம் தமிழையும் செரித்துக்கொள்ளும் வாய்ப்பே அதிகம்.
கருத்துகள்