விருதுகள் -2022

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை.
இந்திய அரசின் கலை இலக்கிய அகாடெமிகளான சாகித்திய அகாடெமி,சங்கீத் நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்றனவற்றில் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது எனத் தொடர்ந்து விமரிசனம் செய்யப்பட்டாலும் ஆளுங்கட்சி, அகாடெமிகளில் இருக்கும் நபர்கள், அவர்களால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுக்களால் விருப்பு வெறுப்புகளோடுதான் பரிந்துரைகள் நடக்கின்றன.  தமிழக அரசு ஆண்டுதோறும்  வழங்கும் விருதுகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்வியே இல்லை. கலைமாமணி விருதுகளும் அப்படித்தான்.

எனக்குத் தெரிய தமிழக அளவில் 50-க்கும் குறையாத இலக்கியத்திற்கான விருதுகள் உள்ளன.கனடாவிலிருந்தும் (தமிழ்த் தோட்ட  இயல் விருது) அமெரிக்காவிலிருந்தும் (விளக்கு) கூடத் தமிழகப் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அறக்கட்டளைகளின் பெயராலும், தனிநபர்களின் பெயராலும் வழங்கப்படும்  இந்த விருதுகளின் பின்னணியில் தனிநபர்களின் இரக்ககுணம் அல்லது கொடைவள்ளல் பிம்பம் இருக்கின்றது. தங்களின் சாதிக்காரர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விருதுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தங்கள் மூதாதையரைப் பற்றி உலகம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் சந்ததிகள் அதற்கான ஏற்பாடுகளைப் பலவழிகளில் செய்கின்றனர். 

பல்கலைக்கழகங்களில் / கல்லூரிகளில் அறக்கட்டளைகளை நிறுவிச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கின்றனர். சிலர் விருதுகளை உருவாக்குகிறார்கள். இறந்து போன எழுத்தாளர்களின் (கண்ணதாசன்,   ஆத்மநாம், கி.ரா. ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயந்தன் ) பெயரில் மட்டுமல்ல, உயிரோடு இருப்பவர்களின் பெயர்களிலும் (கவிஞர் சிற்பி, கவிஞர் வைரமுத்து) கூட விருதுகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் விருதுகளுக்குரிய பெயர்களைத் தினசரிகளில் வெளியிட்டு நிகழ்ச்சிகள் நடத்திப் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.  வெகுமக்கள் தளத்தில் செயல்படும் (தினத்தந்தி விருது,விகடன் விருது, இந்துதமிழ், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி விருது) இந்தப் பிம்ப உருவாக்க நோக்கம் தமிழின் எல்லாத் தளத்திலும் வினையாற்றுகிறது. உயிர்மை, காலச்சுவடு போன்ற பத்திரிகைகளின் பின்னணியில் தரப்படும் சுஜாதா விருது, நெய்தல் அமைப்பு வழங்கும் ராஜமார்த்தாண்டன் விருது, சுந்தர ராமசாமி விருது ஆகியனவும் விதிவிலக்கில்லை. ஜெயமோகனை மையப்படுத்தி வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருதுக்கு வேறு நோக்கம் இருக்க முடியாது.

இந்தியஅளவில் வழங்கப்படும் காளிதாச ஸம்மான், பாஷா பரிஷத், கதா,பிர்லா பவுண்டேசன், தாகூர்விருது, ஞானபீடம் போன்றனவும் தனியார் வழங்கும் விருதுகள் தான். ஆமாம் நண்பர்களே இந்தியஅளவில் உச்சபட்ச விருதான பாரதீய ஞானபீட விருதே தனியார் நிறுவனத்தால் -  தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத் தினரால் நிறுவப்பட்ட அமைப்பு மூலம்தான் வழங்கப்படுகிறது. இவைகளின் பரிசுகளைப் பெற்றவர்கள் எல்லாம் அவற்றின் நோக்கத்திற்கேற்ப மாறிப்போய்விட்டதாக நான் நினைக்கவில்லை. பரிசுகள்/ விருதுகள் மூலம் படைப்பாளிகள் பொருளாதார ரீதியாகக் கொஞ்சம் பலன் அடைகிறார்கள். அத்தோடு தனது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன என்று ஆறுதல் அடைகிறார்கள். இத்தகைய ஆறுதலை- கவனிப்பைக் கல்வி நிறுவனங்கள் வேறுவிதமாக வழங்குகின்றன.

தொடர்ந்து பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இலக்கிய ஆய்வுகளையும் கேலியும் கிண்டலும் செய்யும் (செய்வதைத் தவறெனச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்) எழுத்தாளர்கள் தங்களின் நேர்காணலிலும் தனிப்பேச்சிலும் எனது படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக 8 பேர் எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதைப் பெருமையாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். மதுரைப் பல்கலைக்கழகத்தில் , பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடமாகஇருக்கிறது எனச் சொல்லவும் பார்த்திருக்கிறேன். பாடமாக வைக்கப்பெற்ற நாவல் மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் பேராசிரியர்களும் அறிவார்கள்; எழுத்தாளர்களும் அறிவார்கள்.  தெரியாத எழுத்தாளர்களுக்குப் பதிப்பகங்கள் பாடம் நடத்துவதும் உண்டு. தனது படைப்பு பாடமாக வைக்கப்பட்டதற்கு ஒருவர்கூட  எதிர்த்ததாகத் தெரியவில்லை. அனுமதிபெற வேண்டும் ; தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் மட்டுமே உண்டு.

*****************************
இலக்கியத்தோட்டத்தின் இயல்விருதுகள்
----------------------------------------------------------------------
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தை முதன்மைப் புரவலராகக் கொண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கிவரும் கனடாவின் இலக்கியத் தோட்டம் அமைப்பு, 2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருதுகளை அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் எழுத்துப்பரப்பில் கட்டுரையாளர், பத்திரிகையாளர், இலக்கியச்செயற்பாட்டாளர் என அறியப்பட்ட லெ.முருகபூபதியும், புனைகதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இந்தியத்தமிழ் எழுத்தாளர் பாவண்ணனும் விருதுபெறும் ஆளுமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாவண்ணன் என்னும் புனைபெயரில் எழுதிவரும் நண்பர் பாஸ்கரன் எனக்குச் சமகால எழுத்தாளர். அவரது முதல் கதை தீபத்தில் வந்தபோது எனது முதல் கட்டுரை தாமரையில் வந்தது. கணையாழி, மனஓசை போன்ற இதழ்கள் வழியாக வந்த கதைகளை வாசித்த பழக்கத்தோடு புதுச்சேரிக்குப் போன ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரோடு சந்திப்பு நிகழ்ந்தது. புதுச்சேரிக்கு நான் போன சில மாதங்களில் பணிமாறுதலில் கர்நாடகாவிற்குச் சென்றுவிட்டார். என்றாலும் சொந்த ஊரான வளவனூருக்கு வரும்போது புதுவையில் வைத்துப் பார்த்துக்கொள்வோம். வரும்போது கி.ரா.வைப் பார்க்கவந்த நாட்களில் உடன் இருந்துள்ளேன்.
அவரது முதல் குறுநாவலான ஒரு மனிதரும் சில வருசங்களும் (1989) வந்தவுடனே முதல் விமரிசனமாகப் புதுவையில் தொடங்கப்பெற்ற ‘எதிர்வு’ இதழில் ஒரு கட்டுரை எழுதினேன். அதுவே அவரைப் பற்றி நான் எழுதிய முதல் கட்டுரை. இலக்கியப் பத்திரிகைகளிலும் ஆனந்தவிகடன், குழுதம், குங்குமம் போன்ற வார இதழ்களிலும் அவரது கதைகளைப் பார்த்தவுடன் வாசித்துவிடும் வாசகனாக இருந்துள்ளேன்.

தமிழில் மனிதநேய எழுத்தின் முதன்மையான அடையாளமாக ஒருவரை மட்டுமே சொல்லவேண்டும் என்று வற்புறுத்தினால் பாவண்ணன் பெயரையே குறிப்பிடுவேன். அவரது கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்திற்கும் கீழே இருக்கும் மனிதர்கள் தான். உதிரித்தொழில்களில் ஈடுபட்டு அன்றாடம் குடும்ப நெருக்கடிகளைச் சந்திக்கும் வாழ்க்கைக்குள் மிளிரும் மனிதநேயமும், அன்பும், உறவுகளின் மீதான பற்றும் என விரியும் குணங்களைக் கொண்ட மனிதர்களை எழுதிக் கொண்டே இருந்தவர். அதிலும் உழைக்கும் பெண்களை அவர்களின் உழைப்புச் சூழலோடு அச்சு அசலாகச் சித்திரம் தீட்டித் தரும் எழுத்து பாவண்ணனின் எழுத்து.

30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெங்களூரில் வசிக்கும் பாவண்ணனின் புனைவுவெளியில் புதுச்சேரியின் ஓரப்பகுதிகளும் கிராமப்புறங்களும் அதிகமாக எழுதப்பெற்ற பகுதிகளாக இருக்கின்றன. அவர்களின் உரையாடலின் வாசனையில் அந்த வட்டாரத்துச் சொற்களின் ஆதிக்கமுண்டு. அதே நேரம் தனது சொந்த நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நகர்ப்புறத்திற்கு/ கர்நாடகப்பகுதிக்குப் பெயர்ந்த மனிதரின் பார்வையில் கர்நாடக மனிதர்களையும் எழுதித்தரத் தவறியதில்லை. அவரது 20 சிறுகதைகள் தொகுதி வழி உருவாகியுள்ள படைப்புலகத்தையும் கருத்துலகத்தையும் எனது மாணவரொருவர் ஆய்வு செய்துள்ளார். அதற்காகவும் அவரது சிறுகதைகளைத் திரும்பவும் வாசித்துள்ளேன்.

நாடகம் கற்பித்த ஆசிரியராகப் பாவண்ணனின் மொழிபெயர்ப்பு நாடகங்களைக் குறித்து விரிவாகச் சொல்ல வேண்டும். கன்னடத்தில் எழுதி, ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் இந்திய நாடகாசிரியரான கிரிஷ் கர்னாடின் நாடகங்களில் பெரும்பாலானவற்றைத் தமிழில் தந்தவர் பாவண்ணன். கிரிஷ் கர்நாட் -இந்திரா பார்த்தசாரதி நாடகங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த எனது மாணவரின் ஆய்வுக்கு அவரது மொழிபெயர்ப்புகள் அதிகம் பயன்பட்டன. அவர் மொழிபெயர்த்த நாகமண்டலத்தை மேடையேற்றியபோது உடன் இருந்துள்ளேன். அத்தோடு கன்னடத் தலித் எழுத்தாளர்களின் முக்கியமான தன்வரலாறுகளையும் நாவல்களையும் கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துத் தலித் இலக்கியத்தின் தொடக்க நிலைக்கு உரமூட்டியவர் பாவண்ணனே. அவரது மொழிபெயர்ப்புகளுக்காக ஏற்கெனவே சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
வாழ்வியல் கட்டுரைகளையும் இலக்கியரசனை சார்ந்த கட்டுரைகளையும் எழுதும்போதும் அவரது உலகியல் மற்றும் இலக்கியப்பார்வையை வெளிப்படுத்தவும் செய்துள்ளார். ஆரவாரமற்ற எழுத்தாளர்களின் தொடர்பணிகளைக் கவனித்து விருது அளிக்கும் கனடா இலக்கியத்தோட்டம் பாராட்டுக்குரியது.
**********
இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதியின் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை. இலங்கைப் பயணத்தின் போது நண்பர்களின் உரையாடல்களில் அவரது பெயர் முன்னோடி இலக்கியச் செயல்பாட்டாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுக்கொண்டே இருந்தது. அவரது புனைவெழுத்துகளைத் தேடி வாசிக்கும் நெருக்கடி எதுவும் நிகழவில்லை. கோவிட் காலத்தில் நடந்த இணையவழி உரையாடல்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அவரது நீண்ட அனுபவத்தை உணரமுடிந்தது.

இலங்கைத் தமிழ் எழுத்தின் மூத்த முன்னோடியான லெ.முருகபூபதிக்கும் நண்பர் பாவண்ணனுக்கும் வாழ்த்துகள்


மு.ராஜேந்திரனுக்குச் சாகித்ய அகாதெமி விருது
-----------------------------------------------------------------
சாகித்ய அகாதெமி விருதுபெற்றுள்ள மு.ராஜேந்திரன் தொடர்ந்து தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர். அவரது வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு என்ற நூலின் வழியாகவே எனக்கு அவர் பெயர் அறிமுகம். இந்த வடகரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை. அவரது பிறந்த ஊர். இந்த நூலை நான் வாசித்த காரணம் வேறொன்று.

நெல்லை மாவட்டத்திலும் வடகரைகள் உள்ளன. ”வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம்” என்றொரு தொகை நூல் எனது ஆய்வுக்காலத்தில் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். 18 ஆம் நூற்றாண்டுப் பாளையக்கார முறையைக் குறித்தான ஆய்வுக்குப் பயன்படக்கூடிய நூல் அது. வடகரை என்னும் பாளையத்தை ஆண்ட வடமலையப்பன் என்பவரின் வம்சத்தின் வரலாற்றைச் சொல்லும் பள், மடல், தூது, குறவஞ்சி, கண்ணி, கலம்பகம் எனப் பல சிற்றிலக்கியங்களை ஒன்றாக்கி அச்சிட்ட நூல் அது. அதனை உள்வாங்கி இவர் நூல் எழுதியிருக்கிறாரோ என்று நினைத்து வாசித்தேன். ஆனால் இது அந்த நூலோடு தொடர்புடையதல்ல. அதற்குப் பதிலாக அவரது நூல் குறிப்பிட்ட ஓர் ஊரில் ஒரு குடும்பத்தின் அல்லது வம்சத்தின் வரலாறுபோல எழுதப்பெற்ற நூல். அதன் பிறகும் அவரது நூல்களை மேலோட்டமாக வாசித்ததுண்டு. அவரும் அ.வெண்ணிலாவும் இணைந்து புதுச்சேரி அனந்தரங்கரின் நாட்குறிப்பை அடியொற்றி 12 தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். அந்நூல்கள் சிலவற்றை- சில பகுதிகளைச் சில காரணங்களாக வாசித்ததுண்டு. அ.வெண்ணிலாவோடு இணைந்து இன்னும் சில நூல்களை எழுதியுள்ளார்.

 
இருவரும் இணைந்து எழுதிய நூல்களும்சரி, அவரே தனியாக எழுதிய நூல்களும்சரி வரலாற்றை மையமாகக் கொண்ட நூல்களே. அதிலும் குறிப்பாக வட்டார வரலாற்றைக் கவனப்படுத்திய நூல்கள். இவற்றை வாசித்தால் ஒரு பொதுத்தன்மையை உணரலாம். அந்தப் பொதுத்தன்மையை ”வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையில் அடையாளத்தை உருவாக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்மை” என வரையறை செய்யலாம்.
தனது அடிப்படைக் கல்வி சார்ந்தும் பணி வாய்ப்புக்காகவும் தேர்வு செய்து படித்த வரலாற்றார்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்தவர். குடிமைப்பணிகள் சார்ந்த ஆட்சிப்பணிக்காலத்தில் வரலாறு எழுதுவதற்கான தரவுகளைத் தொகுப்பதில் தொடங்கிய ஆர்வத்தை நீட்டித்ததின் வழியாக எழுதிக் கொண்டிருப்பவர். தொகுக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை ஆய்வு எழுத்தாக மாற்றுவதற்கும் வரலாற்றுத் துறையினரை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் கல்விப்புல முறையியலை உள்வாங்கி எழுதவேண்டும். அத்தகைய முயற்சிகளைச் செய்வதற்குப் பதிலாகப் புனைவுகளின் பக்கம் நகர்ந்தால் ஏற்பு அல்லது மறுப்பு என்பதற்கு இடமில்லை. தமிழில் இவ்வகையான புனைவு வரலாறுகள் பலப்பலவாக எழுதப்பெற்றுள்ளன; கவனிக்கப்பட்டுள்ளன; விருதுகள் பெற்றுள்ளன. இப்படிச் செய்பவர்கள் நேரடியான கல்விப்புல ஆய்வாளர்களாக அறியப்படுபவர்கள் அல்ல; தொடர்ந்து புனைவெழுத்தாளர்களாகவும் வாசிக்கப்படுபவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து மொழியில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள். அவர்களைத் தனியார் அமைப்புகள் கவனித்து விருதளிப்பதுபோலவே அரசு அமைப்புகளும் கவனித்து விருதளிக்கின்றன. படைப்பிலக்கியத்திற்கு விருதளிக்கும் அமைப்பாகக் கருதப்படும் சாகித்ய அகாதெமியும் இந்தமுறை அப்படியொரு எழுத்துமுறையை அங்கீகரித்துள்ளது. மு.ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள்

************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்