இது நினைவஞ்சலி அல்ல
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது ஒரு வாழ்த்துத் தெரிவித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.
ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்து
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட உள்ளது. பாண்டிச்சேரி (1989-97) காலத்தில் நேரடிப்பழக்கம் உண்டு. அங்கு நடக்கும் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். நிறப்பிரிகை சார்பாக நடந்த கூட்டு விவாதங்களின் போதெல்லாம் இருந்ததுண்டு. அதிகம் பேசுபவராகப் பிரேம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இவரது வாசிப்பும் உரையாடலும் இருவரது பெயரிலுமாக வந்த எழுத்துகளில் பங்காற்றியதாக அவர்களின் நண்பர்கள் சொல்லுவார்கள். ரமேஷ் என்றே அழைப்போம். அவரோடு இணைந்து எழுதிய இன்னொருவரைப் பிரேம் என்று அழைப்போம்.
இருவரும் சேர்ந்து ரமேஷ்- பிரேம் என்ற பெயரிலும், பிரேதா-பிரேதன் என்ற பெயரில் எழுதியனவற்றைக் கிரணம், சிதைவு போன்ற இதழ்களில் வாசித்ததுண்டு. அந்தக்காலத்தில் இவர் தனியாக எதுவும் எழுதியதாக நினைவில் இல்லை. இப்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் எழுதும் கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். முகநூல் குறிப்புகளாகச் சிலவற்றை எழுதியதுண்டு. ஆனால் விரிவாக எழுதியதில்லை. அவரது நாவல் -நல்ல பாம்பு- குறித்து எழுதுவதற்கு எடுத்துவைத்த குறிப்புகள் கைவசம் இருக்கிறது.
இதுவரை விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் குறித்து ஒன்றிரண்டு கட்டுரைகளையாவது எழுதியிருக்கிறேன். சில கட்டுரைகளை விஷ்ணுபுரம் வெளியிடும் தொகுப்புகளிலும் சேர்த்திருக்கிறார்கள். ரமேஷ் எழுத்துகளின் மீதான ஒன்றிரண்டு கட்டுரையையாவது அவர் விருது பெறுவதற்கு முன்பு எழுதவேண்டும்.
இந்தப் பதிவிற்கு நன்றி தெரிவித்து ( Ramesh Predan/ நன்றி தோழர்.) என்று பின்னூட்டம் இட்டார்,
விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுக்கொள்ளாமலேயே அவரது இறப்பு நடந்து விட்ட நிலையில் அவருக்கொரு நினைவஞ்சலிக்குறிப்பு எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் உடனடியாக எழுத வேண்டுமென நினைக்கவில்லை. ஏனென்றால் அவரைக் குறித்த நினைவுகளில் சொல்லவேண்டியன எவை? சொல்ல வேண்டாதன எவை? என்பதில் ஒரு தயக்கம் இருந்தது.
புதுச்சேரிக் கால எட்டாண்டு வாழ்க்கையில் சில ஆண்டுக்காலப் பழக்கமுண்டு. அங்கு கிடைத்த நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அவரைச் சொல்ல முடியாது.ஆனால் நான் குடியிருந்த அங்காளம்மன் நகர் வீட்டுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருந்த கடற்கரை ஓரத்து வீட்டுக்கு நானும் போயிருக்கிறேன். பிரேம்-ரமேஷ் ஆகியோருடன் நெருக்கமான உறவுகள் என்று எதுவும் இல்லை. சின்னச் சின்ன முரண்பாடுகளும் இருந்தன ரமேஷ், பிரேம் ஆகிய இருவரில் பிரேம் அளவுக்குக் கூட ரமேஷ் பிரேதனோடு பேசியதில்லை. அவரும் அப்படி எழுதுவதன் காரணங்களைச் சொல்லியிருக்கிறார். பிரேம் நான் பணியாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் மாணவராகவும் பின்னர் அதில் தற்காலிக ஆசிரியராகவும் இருந்தார். அவர்களின் எழுத்துமுறை குறித்து எனது அபிப்பிராயங்களை நேரடியாகவே பிரேமிடம் சொல்லியிருக்கிறேன். அதுபோன்ற உரையாடல்கள் கூட ரமேஷுடன் இருந்ததில்லை.
எனது முகவரியிலிருந்து வெளிவந்த ஊடகம் நான்கு இதழ்கள் தான் வந்தது என்றாலும் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமானச் சிக்கல்கள் வந்ததுண்டு. நான் எழுதாத பகுதிகளுக்கும் பொறுப்பேற்கும் நிலை. மூன்றாவது இதழில் வந்த ஒரு குறிப்பின் மீது எழுதப்பெற்ற புகார்க்கடிதம் ஒன்றின் மீது பல்கலைக்கழகத்திற்கு விளக்கமெல்லாம் சொல்ல வேண்டியிருந்தது. அதனால் புதுச்சேரியிலிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு மாறிப்போனபோது அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பவேண்டும் என நினைக்கவில்லை. காரணம் கடைசி ஓராண்டுக்காலம் அவர்களோடு பேச்சுவார்த்தை இல்லை.
நெல்லைக்கு வந்தபின் அந்த முரண்பாடுகளைத் தொலைத்துவிட வேண்டும் என நினைத்தேன்; மறக்கவும் செய்தேன். திரும்பவும் புதுவைக்குப் போன காலங்களில் ஒன்றிரண்டு சந்திப்புகளும் இருந்தன. பழையனவற்றை நினைவுபடுத்திக்கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டோம். பிரேம் டெல்லிப் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராகப் போன பின்பு திரும்பவும் சுமுகமான உறவு உருவாகியது. சில நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேசியிருக்கிறோம்; சிறப்புச் சொற்பொழிவுக்காகத் திருநெல்வேலிக்குக் கூட வந்துள்ளார். ஆனால் ரமேஷ் பிரேதனிடம் அப்படியொரு உறவு திரும்பவும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதற்கு அவரது உடல் நிலை சரியில்லாமல் போனதும் ஒரு காரணம். ஆனால் முகநூலில் அவரது கவிதைகளை வாசித்துப் பின்னூட்டம் இட்டுள்ளேன். அவரும் எனது பதிவுகளில் பின்னூட்டம் இட்டுள்ளார். விரிவாக எழுதவில்லை என்றாலும் சில கவிதைகளை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்; குறிப்பிட்டுப் பேசியுள்ளேன்.
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதற்கும் முன்பே ஜெயமோகனின் எழுத்துகளோடும் செயல்பாடுகளோடும் அவருக்கு இணக்கம் இருந்தது என்பது வெளிப்படையானது. ஆனால் நான் புதுச்சேரியில் இருந்த காலத்து ரமேஷ் பிரேதனின் கலை, இலக்கியப்பார்வையும் சமூகநோக்கும் ஜெயமோகனோடு ஒத்துப்போன பார்வையல்ல. மனிதர்களின் மனதை மாற்றுவதில் பல காரணிகள் செயல்படுகின்றன. ஜெயமோகனும் மாறியிருக்கிறார்; அவரை எதிர்த்துக் கருத்தியல் விவாதங்கள் செய்தவர்களும் மாறியிருக்கிறார்கள்.
இலக்கியப்பனுவல்களின் தரம், தமிழ் இலக்கியத்தில் உண்டாக்கும் தாக்கம், தமிழ்க் கலை, இலக்கியத்தில் செய்யப்பட்ட சோதனை முயற்சிக்கான அங்கீகாரம் போன்றனவற்றில் ஏதாவதொன்றைச் சொல்லலாம் என்றாலும், அவை மட்டுமே காரணமல்ல.ஜெயமோகன் உருவாக்கி வழங்கும் விஷ்ணுபுரம் விருதை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதில் ஒருநபர் முடிவுதான் செயல்படுகிறது. விஷ்ணுபுரம் அமைப்பு வழங்கும் எல்லா விருதுகளுக்கு ஒருபடித்தான காரணங்கள் மட்டுமே உள்ளன என்று சொல்ல முடியாது. இலக்கிய விருதுத் தேர்வில் மட்டுமல்ல. அந்த அமைப்பின் எல்லா விருதுகளிலுமே ஒருவித உள்வாங்கும் அரசியல் இருக்கிறது. ரமேஷ் பிரேதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதுத்தொகையை ஐந்தாகப்பிரித்து வழங்கப்போகும் நடைமுறையிலும் அந்த நோக்கம் தான் செயல்படுகிறது.
விஷ்ணுபுரம் அமைப்புக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே முதன்மையான நோக்கம் ஒன்று இருக்கிறது. அது அரசுகளின் கலை, பண்பாட்டுத் துறை அமைப்புகளுக்கு மாற்று அமைப்பாகச் செயல்படும் நோக்கம்.. மாற்றாகச் செயல்படுவோம் என்ற தீர்மானத்தைக் குறையாகச் சொல்லமுடியாது. அந்த மாற்றுப்பார்வையின் நோக்கம் எத்தகையது என்பதில் ஒருவருக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் பங்கேற்பது; அது தரும் விருதுகளைப் அதனைப் பெற்றுக்கொள்வது, தவிர்ப்பது அல்லது நிராகரிப்பது என்பதில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் மற்றவர்கள் அல்ல. விருதுக்குரியவர்களாக அறிவிக்கப்படுபவர்கள் தான். நிகழ்வுகளில் பங்கேற்க அழைக்கப்படும் ஆளுமைகள் தான். ஜெயமோகன் தனக்கு வழங்கப்பட இருந்த விருதுகளை மறுத்திருக்கிறார். அழைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்திருக்கிறார். ஆனால் அவரை ஏற்காமல் விமரிசனம் செய்தவர்கள் கூட விஷ்ணுபுரம் விருதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவே செய்துள்ளனர். அழைப்புக் கிடைத்தால் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
ரமேஷ் பிரேதனின் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்துபேருக்கும் அவருக்கும் எந்தவிதத்தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அவரது எழுத்துப்பனுவல்கள் சிலவற்றை வாசித்திருக்கலாம். ஆனால் அவரது இலக்கியப்பார்வையோடு ஒத்து இயங்கியவர்கள் எனச் சொல்லமுடியாது. அப்படி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தேவையற்றது. அப்படி எதிர்பார்த்துத் தேடினால் உருவாக்கப்பட்ட விருதுகளைத் தரமுடியாமல் தவிக்கவே நேரிடும். திருவள்ளுவர், கபிலர், ஒளவையார், பாரதி, கம்பன், இளங்கோ எனக் கவிகளின் பெயரால் வழங்கப்பட்ட பெயர்களைப் பெற்றவர்களுக்கும் அவர்களுக்கும் சிந்தனை மற்றும் படைப்பாற்றல் தொடர்பு உண்டா? என்ற விவாதம் நடந்ததில்லை. அண்மைக்காலத்தில் புதுமைப்பித்தன், கி.ரா.,சு.ரா., மீரா.,ஜெயகாந்தன் என எழுத்தாளர்களின் பெயரில் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் கலையியல் பார்வைக்கு எதிரானவர்களுக்குக் கூட வழங்கப்படுகிறது. அதனையெல்லாம் விவாதப்படுத்துவது ஒருவிதப் பொழுதுபோக்குச் செயல்பாடு. ஒரு விருதுக்கு ஆளுமை ஒருவரின் பெயரைச் சொல்வது அடையாளம் மட்டுமே.
கருத்துகள்