பண்டிகைகள் - திருவிழாக்கள்- கொண்டாட்டங்கள்

கொண்டாட்ட மனநிலை என்பதை முழுமையாக அனுபவித்த நாட்கள் என எதுவும் நினைவில் இல்லை. ஆனால் பள்ளிப்படிப்பின் பாதியில் திண்டுக்கல்லுக்குப் போவதற்கு முன்பு சொந்த ஊரில் நடந்த பண்டிகைகளும் விழாக்களும் கொண்டாட்டங்களும் நினைவில் இருக்கின்றன. அவற்றில் நினைவிலிருந்து அழித்துவிடுவது முடியாத ஒன்று.
 வருடந் தோறும் எனது கிராமத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவைத் திருவிழா என்று சொல்வதில்லை. ‘சாட்டு’ என்றுதான் சொல்வோம். வைகாசிமாதம் கடைசி செவ்வாய் ஊர்கூடி மாரியம்மன் சாட்டு நடந்தால், அடுத்த வாரம் செவ்வாய் ‘கலயம்’ எடுப்புவரை ஊர் சுத்தமாக இருக்கும்.
முளைப்பாரி போடுதல், தீச்சட்டி எடுத்தல், புதுத்துணி எடுத்தல், தையல்காரரிடம் அளவு கொடுத்துச் சட்டை தைத்துக்கொள்ளுதல் என்று ஒருவாரமும் சாட்டுத்தடை. ஊரில் மாரியம்மன் சாட்டு நடக்கும்போது இருந்தவர்கள் ஊரைவிட்டுப் போகக்கூடாது. போனாலும் இரவில் தங்கக் கூடாது. பூசாரி காலையில் குளித்து ஈரத்துணியோடு ஊரின் வடபகுதியிலிருந்து தென்பகுதிவரை நடந்துவருவார். தெற்கே இருக்கும் கோயில் விழுந்து கும்பிட்டு விபூதி பூசிக்கொண்டு திரும்பவும் நடப்பார். கோயிலுக்கு வரும்போது இருந்த ஈரமும் உடலும் முறுக்கேறி நிற்கும். ஆண்களும் வரிசையில் நின்று விபூதி வாங்கிக் கொள்வார்கள். பெண்கள் விலகிநின்று வேடிக்கைபார்ப்பார்கள். விபூதி வாங்கியவர்கள் சொந்தம் என்றால் அவரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். செவ்வாய் இரவு கலயத்தில் தென்னம்பாளையக்கீறி நிறுத்தி மல்லிகைப் பூவைச் சுற்றி அம்மனாக மாற்றிக் கிணற்றிலிருந்து எடுத்துவந்து கோயிலில் வைப்பார்கள். அடுத்தநாள் புதன்கிழமை கலயத்திலிருக்கும் அம்மனை எடுத்துக்கொண்டுபோய் அதே கிணற்றில் கலக்கிவிடுவார்கள். அவ்வளவுதான் அந்தத் திருவிழா. ஒரு இரவு முழுவதும் வைத்துத்தாங்கும் சக்தி ஊருக்கு இல்லையென்பதால் அதிகாலையில் எழுந்தருளும் அம்மனின் இருப்பு அன்று மாலையோடு முடிந்துவிடும்.
***
மாரியம்மன் சாட்டு ஊர்த்திருவிழா என்றால், அதேபோல்  ஊர்கூடிக் கொண்டாடும் விழாக்களாக இருப்பவை தைப்பொங்கலும் கம்பத்தடியான் சாட்டும், கருப்பசாமி கும்பிடும் தான். 

அபாய எச்சரிக்கைகள் கொண்ட மாரியம்மன் சாட்டைவிட, அடுத்த ஊர்களில் சென்று சுதந்திரமாகத் திருவிழாப் பார்ப்பது இன்னும் மகிழ்ச்சியானது. எங்கள் ஊரின் தாய்க்கிராம்மான எழுமலையில் நடக்கும் முத்தாலம்மன் திருவிழா பெரிய திருவிழா. மாரியம்மன் திருவிழாபோல ஒவ்வோராண்டும் நடக்காது. ஒருவிதத்தில் வட்டாரத்திருவிழா. எனது பள்ளிப்படிப்புக்காலத்தில் ஒருமுறையும், கல்லூரிப் படிப்புக் காலத்தில் ஒருதடவையும் நடந்தபோது கலந்து கொண்டது நினைவில் இருக்கின்றது.ப தினெட்டுப் பட்டிகள் சேர்ந்து நடக்கும் பெருந்திருவிழா. 18 அம்மன்களும் ஒரே இடத்தில் கண் திறப்பு செய்யப்படுவதில்லை. மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் கண் திறப்பு நடக்கும்.  பெரிய ஊரான எழுமலையில் 9 அம்மன்கள் கண் திறக்கப்பட்டு அனுப்பப்படும். இன்னொரு இடத்தில் 5 அம்மன்கள்; மற்றொரு இடத்தில் 4 அம்மன்கள். பெருங்கூட்டமாகச் சேராமல் தடுக்கும் நோக்கம் என்பதைவிடத் தாழ்த்தப்பட்ட சாதிகள் பெருந்திருவிழாவிற்குள் வராமல் தடுக்கும் நோக்கத்தில் ஜமீன்களின் ஏற்பாடு என்று சொல்லலாம். 

அந்தத்திருவிழாவும் அதுவும் ஒன்றரை நாட்கள்தான். ஒரு மாலையில் தொடங்கி இன்னொருநாள் மாலையில் முடிந்து போகும்.அத்திருவிழாவின் முக்கிய நிகழ்வே ஒவ்வொரு ஊர்க்காரர்களும் ஏற்பாடு செய்யும் நாதஸ்வரக் கச்சேரிதான். எழுமலையின் மையமான ஓரிடத்தில் போடப்பட்டிருக்கும் மேடையில் ஒன்பது அம்மன்களையும் கண் திறந்து எடுத்துச் செல்ல வரும் ஊர்க்காரர்கள் தேடிப்பிடித்து நல்ல நாயணக்காரர்களை அழைத்து வந்து தங்களின் ‘கெத்து’ காட்டுவார்கள். வேலைக்காக ஊர் ஊராய் அலைந்தபின்பு ஊர்த்திருவிழாவையும் விட்டாச்சு; வட்டார விழாவையும் விட்டாச்சு.

எனது கிராமத்திலிருந்து தொலைதூரத்துக்குப் போய்ப் பங்கெடுத்த திருவிழா என்றால் இந்த இரண்டும்தான் நினைவுக்கு வரும்.  சித்திரை முதல்தேதி மாவூத்து வேலப்பர் திருவிழாவுக்கு ஊரே திரண்டு போகும். குறைந்தது வீட்டுக்கு ஒருவராவது போய்வருவார்கள். . ஆண்டிபட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மாவூத்து வேலப்பர் (முருகன்) கோயிலுக்கு இப்போது  நல்ல சாலை வசதி  இருக்கின்றது. கோயில் அடிவாரம் வரை சென்று திரும்பும் அரசுப்போக்குவரத்து வாகனங்கள் இருக்கின்றன. சொந்த வாகனங்களில் - குறிப்பாக இருசக்கரவாகனங்களில் போய்வருகிறார்கள்.   

எனது பள்ளிப்பருவத்திலும் கல்லூரிக் காலத்திலும் நடைராஜாதான். இடையில் இருக்கும் மலையில் நடந்தே கடந்து விடுவோம். நடை என்று சொல்வதைவிட ஓட்டம் என்றே சொல்ல வேண்டும். நிற்காமல் நடந்தால் 8 மணிநேரம் நடக்க வேண்டும். 8 மணிநேர நடையில் 4 மணிநேரம் மலைப்பாதை. 2 மணிநேரம் ஏற்றம்; 2 மணிநேரம் இறக்கம்.   மலையைத் தாண்டியவுடன் வரும் காட்டுப்பாதையில் நடந்து போய்ச் சேரும் ஊர் தெப்பம்பட்டி. அந்த ஊருக்கு எங்கள் ஊருக்குச் சம்பந்தி குடும்பங்களுண்டு. அதனால் அங்குபோய் காலாறிக் கொள்ளவும் கொண்டுபோகும் கட்டிச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டுக்கொள்ளவும் இடங்கள் கிடைக்கும். நடந்த களைப்புத் தீர்ந்தபின் பின்னிரவில் நடக்கத்தொடங்கி அதிகாலை கோயிலுக்குப் போய்விடுவோம். குரங்குகள் திரியும் மாவூத்து வேலப்பர் கோயிலில் கூடும் கூட்டத்தைப் பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதோடு பால்குடம், காவடி, அலகு குத்தல் எனப் பலநேர்த்திக் கடன்கள் செலுத்தக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஏறத்தாழப் பழைய மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களிலிருந்து வருவார்கள். வருசநாட்டுப்பகுதியிலிருந்தும் தேனிப்பகுதியிலிருந்தும் அதிகம் வருவார்கள்.   அந்தத் திருவிழாவிற்கு கால்நடையாகவும் போயிருக்கிறேன்; வண்டி கட்டிக்கொண்டு ஆண்டிபட்டிக் கணவாயைச் சுற்றிக் கொண்டு 16 மணிநேரம் பயணம் செய்து போய்ப் பார்த்திருக்கிறேன்.

மாவுத்து வேலப்பர் திருவிழாவைப்போல வண்டி கட்டிக் கொண்டு போன இன்னொரு திருவிழா அழகர்கோவில் திருவிழா. எங்கள் வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் மொட்டைபோடும் கோயில் அழகர்கோவில் என்பதால் சித்திரைத் திருவிழா எப்போதும் நினைவில் நிற்கும் ஒன்று. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலும் அங்கேயே இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தது வரையிலும் சித்திரைத் திருவிழாவில் நடந்த தூரங்கள் ஏராளம். கல்லூரி வாசலில் தொடங்கி புதூர் வரை சென்று திரும்பி, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கும் எதிர்சேவை இரவு முழுவதும் நீளும்.

இரண்டுவார காலம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் முன்பகுதி மதுரை நகர வாசிகளுக்கானது. மீனாட்சியை மையமிட்டு நடக்கும் விழாக்களைவிட திருக்கல்யாணத்திற்கு அடுத்தநாள் தொடங்கும் எதிர்சேவையிலிருந்துதான் மதுரை நகரம் அல்லோல கல்லோலப்படும். மதுரை மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்து குவியும் கூட்டம் வைகை ஆற்றின் கரையில் தொடங்கிப் புதூர் வரைக்கும் நிரவி நிற்கும். அழகர் கள்ளழகராக மாறி மதுரைக்குள் நுழைந்து ஆற்றில் தங்கைக்குக் கொண்டுவந்த சீர்களை ஆற்றுக்குள் இறங்கி, அந்தக் கரைக்குப் போகாமல் திரும்பிவிடும் எதிர்சேவைதான் சித்திரைத் திருவிழாவின் உச்சம். அப்படியே துலுக்கநாச்சியாரைப் பார்த்துவிட்டு ராமராயர் மண்டபத்தில் தசவதாரம் காட்டுவார். அப்புறம் திருமாலிருஞ்சோலையான அழகர்கோவிலுக்குப் போய்விடுவார்.

சித்திரைத் திருவிழாவை மதுரை மாநகரின் திருவிழா என்று சொல்வதைவிட மதுரை மாவட்டத்தின் திருவிழா என்று சொல்வதே சரியாக இருக்கும். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை மதுரைக்குச் சென்று வைகை ஆற்றில் இறங்கிப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் போக முடியாதவர்களுக்கு அதன் சிறிய வடிவமாக மதுரை மாவட்டம் முழுவதும் சித்திரைத் திருவிழாக்கள் நடக்கின்றன. பெருமாள் கோயில்களாகவும் மீனாட்சியம்மன் கோயில்களாகவும் இருக்கும் மதுரை மாவட்டக் கோயில் ஒவ்வொன்றிலும் சித்திரைத் திருவிழாவின் நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும். எனது கிராமத்திற்கு அருகில் இருக்கும் எழுமலை பெருமாள் கோயில் இப்போது கண்மாய்க் கரையில் இருக்கிறது.இந்தக் கண்மாய்க்குக் கழுங்கு கட்டுவதற்கு முன்பு அது ஆற்றங்கரை. அந்த ஆற்றில் பெருமாள் இறங்கி ஏறும் நாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கித் திரும்பும் நாள் தான். இதேபோல் சேடபட்டிக்குப் பக்கத்திலிருக்கும் பொய்கை மலையில் இருக்கும் பெருமாள் கோயிலிலும், வத்தலக்குண்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சென்றாயப்பெருமாள் கோயிலிலும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் நடக்கின்றன. திருமங்கலத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பு நடக்கும் மீனாட்சியம்மன் சார்ந்த நிகழ்வுகள் எல்லாம் இப்போதும் நடக்கின்றன.

இப்படிப்பார்த்த திருவிழாக்களுக்கு இணையாக நினைவில் நிற்கும் சில திருவிழாக்களை இந்தியாவின் சில நகரங்களில் பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடக்கும் அங்காளம்மன் திருவிழா அவற்றில் ஒன்று. கேரளத்தில் நடக்கும் பூரம் திருவிழா, மைசூரில் நடக்கும் தசரா முக்கியமானவை. அண்மையில் இலங்கையின் படுவான்கரைப்பகுதியில் கொக்கட்டிச் சோலைத் தான் தோன்றீஸ்வரர் கோயில் விழாவையும் பார்த்திருக்கிறேன்.


 தொலையும் கடவுளும் தூரமாகப் போகும் காதலும்
ஜூன் 25, 2019

புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.
தனியார் மயம், தாராளமயம் என்ற இரண்டையும் அறிமுகப்படுத்தி உலகமயத்தைத் திறந்து விட்டபோது நாலுகால் பாய்ச்சலில் பலநாடுகளுக்கும் பரவியவர்கள் தனிமனித வெளியில் அதனை அனுமதிக்கக் கூடாது என வாதிடுவது அபத்தம் என உணரவில்லை. எப்போதும் மேல்நிலையாக்கத்தை விரும்பும் இடைநிலைச் சாதிகளும் நடுத்தரவர்க்கமும் அதே குழப்பத்திலேயே நகர்கின்றன. உச்சாணியில் இருப்பதாக நம்பும் பிராமணிய அடையாளத்தை உடல்முழுவதும் பூசிக்கொள்ள முடியாது என்ற போதிலும் மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு தவிக்கிறார்கள். விடுதலைக்குப் பின்னான இந்தத் தவிப்பைச் சாதாரணமாகக் கடந்தவர்களைச் சமீபத்திய கடும்போக்கு வாதங்கள் மிரட்டுகின்றன. கடும்போக்கு வாதங்களால் உருவாக்கப்பட்டுள்ள அரசின் ஆதரவு இருப்பதால் சமய அமைப்புகளும் சாதி அமைப்புகளும் தனிமனிதர்களை அச்சுறுத்துகின்றன.

தனிமனித வெளி என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் - விளக்கிவிட முடியாமல் - தவிக்கப் போகிறது இந்திய சமூகம். ஒருவரது குடும்பத்தின் உறுப்பினர்களைத் தீர்மானிப்பதில் சாதிக்கும் தெருவுக்கும் ஊருக்கும் வேலையில்லை; அவ்விருவரின் மனம் சார்ந்த முடிவுகளே முக்கியம் என மேடைகளில் பேசி, பாடங்களில் படித்து, இலக்கியங்களில் எழுதி , வாசித்து, நாடகங்களிலும் சினிமாக்களிலும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கடந்த வாழ்க்கை இந்தியர்களின் அண்மைக்கால வாழ்க்கை. அதன் தடைகளையும் தாக்குதல்களையும் தாண்டிச் சாதியின் பிடியிலிருந்து விலகி வந்த தனிமனிதத் தன்னிலைகளை- தடைதாண்டியவர்களைச் சட்டென்று திரும்பிப் போ எனச் சொல்கிறது சாதிகளின் தர்மங்கள்; சாதிகளை வடிவமைத்த சனாதன தர்மம். குடும்ப வெளியை மிரட்டும் சனாதனம் அரசமைப்போடு கூட்டுச் சேர்ந்து கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் காவு வாங்கப் பார்க்கிறது. அதை ஏற்கத்தான் போகிறோமா?

குலதெய்வமாகக் கம்பத்தடியானையும் காவல் தெய்வமாகக் கறுப்பசாமியையும் வழிபட்டவர்களைக் கள்ளழகரோடு இணைத்ததின் தொடர்ச்சிகள் பருண்மையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. ஆடு வெட்டி, கோழி அறுத்துக் கள்ளும் சாராயமும் குடித்துக் கும்பிட்ட மாரியம்மனும் காளியம்மனும் அசிங்கமானவர்கள் எனச் சொல்லப்பட்டு/நம்ப வைக்கப்பட்டு அவற்றின் வெளிகளில் - கோயில்களில் ஆகம வழிபாடுகள் நுழைந்துவிட்டன. சாமியாடிகளும் பூசாரிகளும் பூணூல் போட்டுப் புண்ணியர்களாக வலம் வருகிறார்கள். மழைக்காகக் கூழ் ஊத்தி, கும்மியடித்து, கோலாட்டம் போட்டு மாரியைப் பாடியவர்களிடம் யாகங்களும் வேள்விகளும் சென்று சேர்கின்றன. தேரோட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்று இணைத்துக் கொண்ட மாதா கோயில்களும் அல்லாக்கோயில்களும் ” அந்நிய வரவு” என்ற பெயரால் விலக்கப்பட்ட கனிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. வேதாகமத்தின் பெயராலும் திருக்குரானின் பெயராலும் தனது ஆன்மீகத்தேடலைச் செய்ய நினைத்தவர்களை மிரட்டக் கலவரங்களும் மோதல்களும் ரத்தம் கக்குகின்றன. கடவுளின் இரக்கம் ரத்த வண்ணங்களானது உலகவரலாற்றின் பகுதியாக இருந்ததுதான். இப்போது உள்ளூரின் கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. அக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தனிமனிதர்களின் குடும்பவெளிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ’யாயும் யாயும் யாராகியரோ’ என்ற வரிகள் தடை செய்யப்படலாம்.”யாதும் ஊரே; யாவரும் கேளிர்! ” என்ற வரிகளும் தப்பப்போவதில்லை. காதலர்களைப் போலவே அவர்களின் கடவுள்களர்களும் அச்சத்தில் உறைந்துகிடக்கிறார்கள்.

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

நவீனத்துவமும் பாரதியும்