தூக்கம் தொலைந்த இரவானது
இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார்.
எனக்குக் கிடைத்த தகவல்களின் படி:விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார்.சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்?சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 !வந்து சேர்ந்தது சுமார் 7 .இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ?கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல.திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்?ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி .கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லைசரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லைகரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லைஉங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை .
இந்தப் பதிவிற்கு, “ நேரலையில் முகத்தை காட்டும் ஆசையைத் தூண்டிய ஊடகங்களைப் பொறுப்பாக்கி வழக்குப் பதிய வேண்டும்” எனப் பின்னூட்டம் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன்.
வீட்டில் இருக்கும் நாட்களில் மாலை ஆறு மணிக்குச் சன் தொலைக்காட்சியின் செய்திகளோடு உணவுநேரத் தலைப்புச் செய்திகளைப் பார்ப்பதும் கேட்பதும் தவறுவதில்லை. அதல்லாமல் உணவுநேரத் தலைப்புச் செய்திகள் மூன்றும் கேட்கும் பட்டியலில் உண்டு. தமிழ்த்தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதிய தலைமுறையும், சன்செய்திகளும் தவறாமல் கேட்கும் பட்டியலில் இருக்கின்றன. வாரத்தில் சில நாட்கள் கேட்கும் அலைவரிசைகளாகப் பாலிமர், தந்தி, நியூஸ் 18.காலையில் ஒன்பது மணிக்கு முன்பு சாப்பிட உட்கார்ந்தால் ஒன்பது மணித் தலைப்புச் செய்தியைக் கேட்பது வழக்கம். பிற்பகலில் இரண்டு மணி தலைப்புச் செய்தி; இரவு உணவின் போது 8 மணிக்குரிய தலைப்புச் செய்திகள். விஜயின் மதுரை மாநாட்டு நேரலைகளைப் பார்த்தபின்பு, “சனிக்கிழமை” நேரலைகளைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்ததால் நேற்று பகலில் நாமக்கல், கரூர் பயணங்களைப் பார்க்கவில்லை.
பகலெல்லாம் கோவில் திருவிழாக்களை நேரலையாக வருணிக்கும் பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல ‘விஜயின் வருகைக்குக் கட்டியங்கூறிய அலைவரிசைகள், திரும்பவும் நேரலையாக மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்து நடந்த ஒவ்வொன்றும் இரவு முழுவதும் தூக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டன.
கூட்டத்தை நடத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் போய்விட்ட அந்த நடிகன் மீதும், அவனைப் பார்க்கவும் தலைவனாக ஆக்கவும் வந்த கூட்டத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட முட்டாள்களின் கூச்சல்கள். ஆளுங்கட்சியைக் குறைசொல்லித் திசை திருப்பும் வாதங்கள் எனத் தமிழ்நாட்டைப் பைத்தியக்காரர்களின் சிறைச்சாலையாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் என்று தோன்றியது.
அதற்கு இடம் தர முடியாது எனக் காட்டத் தொடங்கினார் தமிழ்நாட்டரசின் முதல்வர். அரசு நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிநார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கரூர் நோக்கிக் கிளம்புகிறார் என்ற செய்திக்குப் பின் எல்லாம் மாறத்தொடங்கின. கரூரின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனைக்குப் போய்விட்டார். இன்னொரு அமைச்சர் அன்பில் மகேஸ் வந்துகொண்டிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை, மருத்துவத்துறை எல்லாம் களம் இறங்கியபின் தொலைக் காட்சிகளின் நேரலைக் காட்சிகளும் த்வனியும் மாறத்தொடங்கியது. கணினித் திரையில் முகநூலும் தொலைக்காட்சியில் நேரலை ஓட்டங்களும் என மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் நள்ளிரவு தாண்டி விட்டது. படுக்கப் போனால் தூக்கம் வரவில்லை
திரும்பவும் தொலைக்காட்சியைத் திறந்தால் சென்னையிலிருந்து காவல்துறையின் உயரதிகாரியின் செய்தியாளர் சந்திப்பு. சொல்ல வந்ததைச் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளை அனுமதித்ததில் கொஞ்சம் பதற்றம். முதல்வர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அவற்றைக் கேட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரவில்லை. திரும்பவும் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களையும் வாசித்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வருகையும் மருத்துவமனையில் இறந்தோர்களுக்குச் செலுத்திய அஞ்சலிக் காட்சிகளும் உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர் பேசிய அந்த உரை பக்குவமான அரசியலின் அடையாளம்.
********
இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம்.
தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல்.
அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது.
தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள்.
அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்பியது மதுரை மண்ணை.
இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள்.
நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.
கருத்துகள்