எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
கவிதைகள்: ஆக்கங்களும் வாசிப்புகளும்.
செம்மொழியான தமிழுக்குத் தனித்துவமான இலக்கியவியல் ஒன்று இருக்கிறது. எல்லாச் செவ்வியல் மொழிகளிலும் இருக்கும் இலக்கியவியல் நூல்கள் பேசுவதைப் போலத் தமிழின் இலக்கியவியல் நூலான தொல்காப்பியமும் இலக்கியத்தை ஆக்கும்/ செய்யும் முறைகளையே பேசுகின்றது. ஆனால் அதன் துணைவிளைவுகள் சில இருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
இலக்கியம் என்ற பொருள்படும் செய்யுள் என்ற சொல்லை இன்றைய கவிதை என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்துகிறது தொல்காப்பியம். எழுதப்பெற்ற பனுவல்களை வாசிப்பதற்கும் விளக்குவதற்கும் திறனாய்வு செய்வதற்கும் பயன்படும் இலக்கியத்திறனாய்வு அடிப்படைகளைத் தரும் நூலாகவும் இருக்கிறது தொல்காப்பியம். தமிழ்க் கவிதையின் மரபைப்பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் என நிறுவியுள்ளனர். கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் இந்தத் தொடக்கத்தை மறுத்துரைப்பதில்லை. புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக் கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.
முதன்மைச் செயல்பாடு
அரிஸ்டாடிலின் கவிதையியலை உள்வாங்கிய புதிய அரிஸ்டாடிலியவாதிகள் ஐரோப்பிய மொழிகளில் உருவானதுபோலத் தமிழில் புதிய தொல்காப்பியவாதிகள் உருவாகவேண்டும்.புதிய தொல்காப்பியவாதிகளை உருவாக்காமல் தவறவிட்டதில் தமிழ்க்கல்விப்புலத்திற்கு முக்கியப் பங்கிருக்கிறது.தொல்காப்பியத்தை மீட்டெடுக்கவேண்டும்; அதன்வழியான வாசிப்பு முறையை - திறனாய்வுப்பார்வையை உருவாக்கவேண்டும். இந்தியக் கலைப்பார்வையின் மைய நீரோட்டம் முன்வைக்கும் பார்வையிலிருந்து விலகிய பார்வை அது என்பதை உறுதிசெய்யவேண்டும். அது தமிழின் அறிவுத்தோற்றவியலாக - சிந்திக்கும் முறையைக் கண்டறிவதாக - அமையவும் கூடும். மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது; அதன் வழியாக இலக்கியத்தை உருவாக்குவது என்பது பற்றிச் சிந்தித்த உலகின் மூத்த சிந்தனையாளர்களில் தொல்காப்பியரும் ஒருவர். அவரையொத்த சிந்தனையாளராக விளங்கும் கிரேக்கத்தின் அரிஸ்டாடில், உலக இலக்கியத்தின் முன்னோடிக் கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார். ஆனால் தொல்காப்பியரின் இடம் அவ்வாறு உறுதி செய்யப் படவில்லை. தமிழர்களின் எல்லைக் குறுக்கச் சிந்தனைகளும், அறிவு மறுத்த உணர்வுநிலைப் பார்வைகளுமே இதன் பின்னணிக் காரணங்கள் எனத் தோன்றுகிறது. அதனை உணர்ந்த நிலையிலே சில முன்வைப்புகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
மொழிதல் என்னும் படைப்புக் கருவி.
வெளிப்படல் அல்லது வெளிப்படுத்துதல் என்பதன் மூலமாக உலகில் உள்ள பொருட்கள் - தனது இருப்பை உணர்த்துகின்றன. இதில் உயிருள்ளவை – உயிரற்றவை என்ற இரண்டுக்கும் வேறுபாடுகள் இல்லை. அதே நேரத்தில் பொருட்களின் இயல்புகளுக்கேற்பவே இருப்பு உணர்த்தப்படுகின்றது. தன்னிடம்- தனது புலன்களிடம்- வந்து சேரும் பொருட்களின் -இயல்புகளை ஏற்று வினையாற்றும் புலன்களைக் கொண்டன உயிருள்ளன. உணர்த்தப்படும் இயல்புகளைத் தன்னிடம் உள்ள புலன்களின் வழியாக உணர்தல் என்னும் வினையை ஆற்றுகின்றன உயிரிகள். புலன்கள் வழியாக எதிர்வினையாற்றும் இயல்பில்லாதன உயிரற்றன.
உலகிலுள்ள பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் உயர்திணைக்குள் மக்கள் கூட்டத்தை வைத்துப் பேசும் பின்னணியில் அவர்களே மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்ற புரிதல் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தனது செய்தியை அல்லது தகவலைத் தனது கூட்டத்தின் இன்னொரு உறுப்பினருக்குத் தெரிவிக்க மொழியைப் பயன்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவது மனிதக் கூட்டம் மட்டும் என்பதை நவீன அறிவியலும் மொழியியலும் ஒத்துக்கொள்வதில்லை. ஒவ்வொரு உயிரினமும் தங்கள் கூட்டத்திற்குச் சொல்ல ஒலி மற்றும் அசைவு என்னும் குறிப்பான்கள் வழியாகக் குறியீடுகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மனித உயிரிகள், மற்ற உயிரினங்களிலிருந்து சில பல வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக்கின்றன. ‘மனித குல வளர்ச்சி’ அல்லது ‘வளர்ச்சி அடைந்த மனிதக்கூட்டம்’ என்பதன் அர்த்தமே மொழியைக் கண்டு பிடித்ததையும் அதனை நுட்பமாகப் பயன்படுத்துவதிலுமே இருக்கிறது. சைகை மொழி அல்லது உடல்மொழியாகப் பயன்படுத்துவது தொடங்கிப் பின்னர் பேசுவதற்கான கருவியாக மொழியைப் பயன்படுத்துதல் என்பதற்குள் ஒவ்வொரு சமூகக் கூட்டமும் நகர்ந்துள்ளன.
இந்த நகர்வுக்குப் பின்னர் தொடர்ந்து எழுத்து மொழிக்குள் ஒரு கூட்டம் நுழைகிறபோது அக்கூட்டம் வளர்ச்சியடைந்த கூட்டமாக மாறுகிறது. இன்றளவும் தங்களுக்கான எழுத்து மொழியை உருவாக்கிக் கொள்ளாத கூட்டங்கள்- வளர்ச்சியடையாத கூட்டங்கள்- உலகில் இருக்கவே செய்கின்றன என்பதை மானுடவியலும் மொழியியலும் ஆய்வு செய்து காட்டியுள்ளன. தமிழ் மொழியைத் தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட கூட்டம் எழுத்துமொழியை நுட்பமாகப் பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டம் இதுதான் என அறுதியிட்டுச் சொல்லக்கூடிய ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. இன்று கிடைப்பனவற்றுள் ஆதித் தரவுகள் அகக் கவிதைகளும் புறக் கவிதைகளுமாகப் பிரிக்கப்பட்டு, ‘சங்க இலக்கியங்கள்’ எனப் பெயரிடப்பெற்றுள்ளன. கற்பிதமான புனைவுகளின் அடிப்படையில் பெயரிடப்பட்ட இந்தச் சுட்டு எவ்வளவு சரியானது என்பது தனியான ஆய்வுக்குரியது. மாற்றுப் பெயராக இந்தக் கட்டுரை செவ்வியக் கவிதைகள் எனச் சுட்டுகிறது.
‘மொழியே எல்லாம்; மொழியே அனைத்தையும் உருவாக்குகிறது’ என்று உறுதி செய்து விட்ட பின்-அமைப்பியல், மொழியின் நுட்பங்களையும் அவற்றின் சாத்தியங்களையும் விரிவாகவே விளக்கியுள்ளது. மொழியின் அடிப்படை அலகான சொல்லிற்கு எப்போதும் ஒற்றை அர்த்தம் மட்டுமே இல்லை. அகராதி அர்த்தத்தைத் தாண்டி, பயன்பாட்டு அர்த்தமே அதன் மேன்மை. ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு அர்த்தங்களில் சொல்லையும், சொற்கள் இடம் பெறும் தொடர்களையும் உருவாக்க முடிகிற மனிதனே எழுத்தாளராக/ படைப்பாளியாகக் கருதப்படுகின்றார்கள். அதற்கான வாய்ப்பை வழங்கும் மொழி, இலக்கிய வளம் நிரம்பிய மொழி எனக் கருதப்படுகிறது. தமிழ் அத்தகைய வளத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே- இன்று வளர்ச்சியடைந்த மொழிகள் எனக் கருதப்படும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பே - பெற்றிருந்தது என்பதனால் தான் செம்மொழி எனக் கருதப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் இடையே நடக்கும் பேச்சின் வழியே உருவாகும் முரண்பாட்டின் மூலம் பாத்திர வார்ப்பை உருவாக்கி, அவற்றின் வழியே மனிதர்களின் இருப்பு நிலையைப் பேச வாய்ப்பளிக்கும் இலக்கிய வடிவம் நாடகம். அதன் ஆதாரமான வெளிப்பாட்டு வடிவம் உரையாடல். தனது முன்னோடியான சாக்ரடீஸ் போன்றவர்களின் முச்சந்தி விவாதங்களைக் கவனித்திருந்த அரிஸ்டாடில் உரையாடலை முக்கியமான வெளிப்பாட்டு வடிவமாகக் கருதியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்த அனுபவங்கள் சார்ந்தே உரையாடல் வடிவத்தின் நுட்பங்களைப் பற்றி அதிகம் விளக்கியுள்ளார். ஆனால் தொல்காப்பியர் தனிமனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த அதிக வாய்ப்பான கவிதை வடிவத்தின் நுட்பங்களை விரிவாகப் பேச நினைத்துள்ளார். அதற்காகக் கூற்று (Narrative) என்னும் வெளிப்பாட்டு வடிவத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். கவிதைக்குள்ளும் ஓர் உரையாடல் கூறு இருக்கிறது என்றாலும் பருண்மையான வெளிப்பாடு அதில் கிடையாது.
கூற்று என்னும் கலைச்சொல் மொழியின் அடிப்படைக் கூறு. மொழிதல் என்னும் மனிதனின் அடிப்படையான தொழிலைச் சுட்டும் சொல். அந்த வகையில் அக்கலைச்சொல் மொழியியலின் பாற்பட்டது. உரையாடலுக்கும் முந்திய வடிவமும்கூட. அதனைக் கவிதைக்கான கலைச்சொல்லாகத் தனது பனுவலில் மாற்றிக் கட்டமைத்திருக்கிறார் தொல்காப்பியர். மொழியின் இயல்புகளைப் பேசும் இலக்கணமாக மட்டும் தொல்காப்பியத்தை எழுத நினைத்திருந்தால். அவர் எழுத்ததிகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் மட்டுமே எழுதியிருப்பார். அதற்கும் மேலாக, மொழியை நுட்பமாகப் பயன்படுத்துவது எப்படி? அதன் உச்ச கட்டப் பயன்பாடாக இலக்கியம் செய்வது- செய்யுள் செய்வது எப்படி? என்பதை விளக்க விரும்பிய காரணத்தால் தான் அவ்விரு அதிகாரங்களைத் தொடர்ந்து மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தை எழுதினார் தொல்காப்பியம்.
சில உண்மைகள்
தமிழ்க்கல்விப்புலமும் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியப்புலமும் விலகியே இருப்பது போலத் தோற்றம் தரும் ஆரம்பம் தொல்காப்பியத்தை வாசிப்பதிலிருந்தே தொடங்குகிறது.தொல்காப்பியம் முன்வைத்துள்ள இலக்கிய அடிப்படைகளை, உரைமரபுகளை, பனுவல் உருவாக்கச் சிந்தனைகளைச் சரியாகக் கல்விப்புலம் கற்றுத் தந்திருந்தால், அப்படியொரு விருப்பத்தோடு, மகிழ்ச்சியோடு புதிய தொல்காப்பியவாதிகள் உருவாகியிருப்பார்கள். தீராநதியில் தமிழவன் எழுதிய தொடர்கட்டுரைகளில் இந்த நோக்கம் இருந்தது.அவரோடு உடன்பட்டு ஜமாலன் எழுதினார். பேரா. பிரேமானந்தன்(ப்ரேம்) அண்மைய வாசிப்புகளும் எழுத்துகளும் இந்தப் பார்வையைக் கொண்டிருக்கின்றன.
நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் செயல்படும் டி. தர்மராஜுக்கும் இந்தப்பார்வை உடன்பாடேன்றே அவரது கட்டுரைகள் காட்டுகின்றன. மொழியியலை ஆய்வுக்கருவியாகப் பயன்படுத்திய இரா.ஜெயராமன் இதில் கவனம் செலுத்துவதுண்டு. அழகரசன் போன்ற ஆங்கிலத்துறைப் பேராசிரியர்களும் தொல்காப்பியத்தை வாசித்துப் பயன்படுத்தவேண்டுமென நினைப்பவர்கள். இதனைப் புரியவைத்துத் தமிழ்க் கல்வியுலகத்தைத் திசைமாற்றம் செய்வது பெருமலையைத் தாண்டும் எத்தணிப்புடையது.அது நடக்கும்போது தமிழுக்கே உரிய இலக்கியவியலும் வாசிப்புப்பார்வையும் முழுமை அடையும்.
தொல்காப்பியத்திலிருந்து ஒரு திறனாய்வுப் பார்வையை உருவாக்காமல், அப்போதைய ஆங்கிலக் கல்வியில் பாடமாக இருந்த திறனாய்வு நூல்களை ( ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், வில்பர் ஸ்காட் ) முதன்மை ஆதாரமாகக் கருதிச் சுருக்க மொழிபெயர்ப்புகளைச் செய்து கொண்டனர் முன்னோடித் தமிழ்ப் பேராசிரியர்கள் (அ.சா.ஞா,. மு.வ., தா.ஏ. ஞானமூர்த்தி ). க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெ.சாமிநாதன் போன்றவர் இதனை அறிந்தே இருக்கவில்லை. அவர்களுக்கு ஆசிரியனின் தனித்துவத்தை முதன்மையாகக் கருதும் டி.எஸ். எலியட்டை முன்வைத்து உருவான விமரிசனப்பார்வையில் முதன்மையான ஈடுபாடு உண்டு. அந்தப் பார்வை ஒருவிதத்தில் அத்வைதப் பார்வையின் நீட்சியும்கூட. சிறுபத்திரிகை மரபின் விமரிசனப் பங்களிப்பு முக்கியமானது எனப் பேசுபவர்களிடம் செயல்படுவது ஆசிரிய மையவாதம் மட்டுமே. அரசியல் தளத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும் இடதுசாரிப்பார்வை கொண்டவர்களாகவும் வெளிப்படும் பலரும்கூடச் சிற்றிதழ்ப் பரப்பில் - கலை இலக்கியப்பார்வையில் அத்வைதப்பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தொல்காப்பியச் செய்யுளியல் முன்வைக்கும் பனுவலுருவாக்கம், அதன் கட்டமைப்பு, அதற்குள் ஊடும்பாவுமாக அலையும் இலக்கிய/ கவிதை நுட்பங்களான, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, அடிக்கருத்து, தொன்மை, தோல் போன்றவையெல்லாம் அறிமுகமாகமலேயே போய்விட்டது. அறிந்தவர்கள் எதனையும் உருவாக்கவில்லை; அறியாதவர்கள் விலகி வேறொன்றை முன்வைத்துவிட்டார்கள். கடைசியில், வெறும் இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிய உதவும் சூத்திரங்களைக் கொண்ட நூலாகச் சுருங்கிப்போனது தொல்காப்பியம்.
கவிதை ஆக்கம்:
மனிதத்தேடலின் முதன்மையான நோக்கம் உலகத்தை விளங்கிக் கொள்வதாக இருக்கின்றது. மனிதர்களே உலகம் என நினைப்பவர்கள் மனிதர்களின் இருப்பையும் செயல்களையும் காரணங்களையும் பின்னணிகளையும் விளங்கிக் கொள்வது போதுமானது என நினைக்கிறார்கள். உலகம் மனிதர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல என நினைப்பவர்கள் ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை இந்த உலகத்தில் இருப்பதின்/இயங்குவதின் காரணிகளை விளங்கிக் கொள்வதே அறிவு என நம்பித் தேடுகிறார்கள். தனக்கு அறிமுகமான இந்த உலகம் மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதையும் தாண்டி நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பரப்புகளும் விளங்கிக்கொள்ள வேண்டியனவாக இருக்கின்றன என்ற விரிதலின் விளைவாக அறிவுத்தோற்றம் எல்லையை விரிக்கிறது.அப்போது உலக அறிவு, பிரபஞ்சம் பற்றிய அறிவாக விரிகின்றது.
உலகத்தையும் பிரபஞ்சத்தையும் அவற்றை இயக்கும் புலப்படா சக்தியையும் விளங்கிக் கொள்ளும் வினை தொடரும்போது விளக்கும் வினைகளும் தொடங்குகின்றன; தொடர்கின்றன. உலகம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் ஐம்புலன்கள் வழியாகக் கண்டனவற்றையும் கேட்டனவற்றையும் உண்டனவற்றையும் உயிர்த்தனவற்றையும் உற்றனவற்றையும் விளக்கத் தொடங்குவது மனித வினைகளாக மாறுகின்றன. விளக்குவதற்குத் தேவையான கருவியைத் தேடிய பயணம் மனிதர்கள் தொடங்கிய முடிவற்ற பயணமாக மாறிவிட்டது. அந்தப் பயணத்தில் மனிதர்கள் கண்டடைந்த ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு அல்லது கருவி மொழி.
மொழியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய கூட்டங்களே அறிவார்ந்த கூட்டங்களாகவும், வளர்ச்சியடையும் சமூகங்களாகவும் மாறியிருக்கின்றன. வளமான மொழியின் அடையாளம் சொற்கள். ஒரு மொழியில் எவ்வளவு பெயர்ச்சொற்கள் உள்ளன; உருவாக்கப்பட்டுள்ளன என்பதைக் கொண்டே மொழியின் பழைமையும் அம்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்களின் செம்மையும் செவ்வியல் பண்புகளும் அறியப்படுகின்றன.மொழியைக் கருவியாகப் பயன்படுத்தாத மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதின் மூலம் கடந்து செல்கிறார்கள். வாழ்ந்து காட்டுபவர்களின் இயல்புகளைச் சொற்களில் கட்டமைத்துக் காட்டுவது எழுத்துகளாக ஆகின்றன. கட்டமைப்பதின் வழியாக உருவாகும் வடிவம், வெளிப்பாட்டு நோக்கம், நோக்கத்தைக் கடத்த உருவாக்கப்படும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்வுகள் எல்லாம் சேர்ந்து எழுத்துகளின் வகைகளாக அறியப்படுகின்றன.
உணர்ச்சிகளை அல்லது மெய்ப்பாடுகளைக் கடத்துவதை முதன்மையாகக் கருதும் வடிவம் கவிதையென அறியப்படுகின்றது. முரண்பட்ட மனித உறவுகளையும், மனத்தின் குமுறல்களையும் வெளிப்படுத்துவன நாடகங்களாக அறியப்படுகின்றன. நிகழ்வுகளுக்குள் நுழைந்து வெளியேறும் மனித இருப்பைச் சொல்வன கதைகளென வடிவம் கொள்கின்றன. இவை எல்லாவற்றையும் கடத்துவன சொற்களும் சொற்களின் தொகுதிகளும். மொழியைப் பற்றிய பேச்சும் மொழியை விளக்கும் பேச்சுமே உலக அறிவின் திறப்புகளாக இருந்திருக்கின்றன. அரசியலையும் அழகியலையும் விளக்கிய அரிஸ்டாடிலின் பேச்சு மொழியைப் பற்றிய பேச்சுகளாகவே ஆரம்பித்துள்ளது. தமிழின் முதன்மைப் பனுவலான தொல்காப்பியத்தின் பேச்சும் மொழியைப் பற்றிய பேச்சுகளே. மொழியென்னும் ஆயுதத்தின் வெளிப்பாட்டுக் கூறுகள் சொற்கள். சொற்களை இணைத்துப் பயன்படுத்தும்போதே மொழி கருவியாகின்றது.
தொல்காப்பியம் தொடங்கிப் பல்வேறு இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் சொல் என்னும் சொல்லைப் பலப்பலச் சொற்களால் கடந்திருக்கிறது தமிழ். சொல்லதிகாரம் என்ற அதிகாரத்தை ‘கிளவி’ ஆக்கம் எனத் தொடங்குகிறது தொல்காப்பியம்.தமிழின் சொற்களை இரண்டு விதமாகப் பிரித்துப் பேசும் தொல்காப்பியம் சொற்களின் பிறப்பிடம் சார்ந்து ஒரு வகைப்பாட்டைச் சொல்கிறது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலத்திற்குள் இருந்த சொற்களை இயற்சொல் என்று முதலில் வைத்துவிட்டு, இந்நிலப்பரப்பிற்கு வடக்கே இருந்து வந்த சொற்களை வடசொற்கிளவி எனவும், மற்ற திசைகளிலிருந்து வந்தனவற்றை திசைச்சொற்கள் எனவும், இந்நிலத்திற்குள்ளேயே ஒன்றோடொன்று கலந்து உருவாகும் சொற்களைத் திரிசொற்கள் எனவும் புரிய வைத்துள்ளது.
இப்படியொரு வகைப்பாட்டைச் செய்துவிட்டு, சொல் எப்படி அர்த்தங்களைச் சொந்தமாக்கிக் கொள்கின்றன என்பதை விளக்கும் நோக்கில் நான்கு வகையாகப் பிரித்தும் பேசுகிறது. ஒரு மொழியில் அடிப்படையாக இருக்கும் சொற்கள் இரண்டு. அவை பெயரும் வினையும். பெயர்களோடு சேர்ந்துவரும் சொற்களை பெயரடைகளாகவும், வினைகளோடு சேர்ந்து வருவனவற்றை வினையடைகளாகவும் நம் கால மொழி வல்லுநர்கள் சொல்கின்றனர். ஆனால் பண்டைய தமிழ் இலக்கணம் அவற்றை உரிச்சொல் எனவும் இடைச்சொல் எனவும் வகைப்படுத்தி விளக்கியிருக்கின்றது.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தெனவே என்று விளக்கம் சொன்ன இலக்கணத்தைக் கற்ற நவீன மனிதர்கள், ஒரு சொல் உருவாக்கும் பொருள் நிலையானதில்லை; சூழல் சார்ந்தது என விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு சொல்லுக்கு அகராதி அர்த்தம் ஒன்று இருக்கலாம். அதே நேரம் பயன்பாட்டு அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்று புரிந்து கொண்டது மொழி அறிவியலின் வளர்ச்சி. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே தனது மொழியில் இருக்கும் சொற்களையும் சொல் தொகுதிகளையும் கொண்டு இலக்கியப் பனுவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களுக்குக் கைவரப்பட்ட இலக்கியப்பனுவல் வடிவத்தின் வழியே சொற்களை நிரப்பி வைக்கிறார்கள். நிரப்பப்படும் சொற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டும் விலகிக்கொண்டும் நின்று அர்த்தங்களை உருவாக்குகின்றன; உணர்ச்சிகளைப் பெருக்குகின்றன; நிகழ்வுகளைக் கட்டமைக்கின்றன; நிகழ்வுகளுக்குள் மனிதர்களையும் உயிரினங்களையும் உருவாக்கித் தனது உலகத்தை – இருக்கும் உலகத்திற்கு இணையான இன்னொரு உலகத்தை – படைப்புலகத்தை உருவாக்கும் வினையைச் செய்கின்றன. சொற்கள் உருவாக்கும் படைப்புலகம் கவியின் படைப்புலகமாக -கதாசிரியரின் – நாடகாசிரியரின் படைப்புலகமாக ஆகி வாசிப்பவர்களைத் தனக்குள் ஈர்த்துக் கொள்கின்றன.
கருத்துகள்