திரளின் மனநிலைகள்


 பாவனைகளும் தந்திரங்களும்

நெரிசலில் 42 பேரின் குரூர மரணம் என்பது நடந்த உண்மை. காரணியாக இருந்த அரசியல் கட்சி த.வெ.கழகம். பாதிப்பைப் பற்றிப் பேசுவதை அந்தக் கட்சி தொடர்ந்து தவிர்க்கிறது. தவிர்ப்பதன் மூலம், விளக்கம் சொல்லும் இடத்தில் அரசை நிறுத்தித் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. பாதிப்பைப் பற்றிப் பேசத்தூண்டும் ஊடகச் சந்திப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அரசும் தயக்கம் காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.
27 ஆம் தேதி இரவில் கிடைத்த நற்பெயரையும் நல்மதிப்பையும் 28 ஆம் தேதி பகலிலும் இரவிலும் இழந்து நிற்கிறது அரசு. 40 பேரின் மரணத்திற்கு இவர்கள் தான் பொறுப்பு என அடையாளப்படுத்திய நான்கு பேரைக் கைது செய்து கடுமை காட்டியிருந்தால் செயல்படும் அரசு என்ற உறுதித்தன்மை கிடைத்திருக்கும். பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களைக் கேள்வி கேட்பவர்களாக மாற்றியதை எப்படி வருணிப்பது.?

கரூரில் நடந்த துயர நிகழ்வுகளையொட்டி முதல்வரும் அரசும் செய்தனவெல்லாம் காருண்யமிக்க அரசு என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. ஆனால் விதிப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைச் செய்யத் தவறியதால் கடமை தவறிய அரசு என்ற இடத்திற்குத் தள்ளப்படும் வாய்ப்பை உருவாக்கிவிட்டது. காவல்துறை வழியாகக் காட்டப்பட்டிருக்க வேண்டிய கடுமையைச் செய்யாமல் விட்டதால் அரசுக்குக் கிடைத்த நற்பெயரும் நல்மதிப்பும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. பரப்பப்படும் பொய்யுரைகளின் மேல் காட்டப்படும் தீவிரமே இழந்த மதிப்பைத் திரும்பக் கொண்டு வரும்.

கரூர் நிகழ்வையொட்டி அதற்குக் காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வைக்கப்படும் விமரிசனங்களையும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து நியாயப்படுத்திப் பேச விருப்பம் இருப்பவர்கள் நேரடியாகப் பேசலாம். அந்தக் குரல்கள் எந்தவிதத் தர்க்கமும் இல்லாமல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் அக்கட்சியின் தலைவர் விஜயின் அரசியலைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள். அப்படிச் செய்யாமல் முகநூலில் எழுதும் பலரது பதிவுகள் சமப்படுத்தும் தந்திரத்தைக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
திராவிட இயக்க அரசியலே கும்பல் கலாசார அரசியல் தான் என எழுதும் பதிவுகள் காணப்படுகின்றன அத்தகையனவே. பெரியார் எதிர்ப்பில் நிலைமாறாதவர்கள் தொடர்ந்து அப்படி எழுதுவது ஆச்சரியமல்ல. அண்ணாவின் அரசியலே சினிமாப் பிம்பத்தையும் உணர்ச்சிகரமான பேச்சுகளால் கும்பலைத் திரட்டி ஆட்சியைப் பிடித்த ஒன்று எனச் சொல்கிறார்கள். சமூகநீதி அரசியல் எனப் பேசுவதெல்லாம் பாவனை மட்டுமே எனச் சொல்கிறார்கள். பேசியும் எழுதியும் அரசியல் மயப்படுத்திய தொண்டர்களையும், நடிகர் விஜயின் திருவுருவைப் பார்க்க வரும் அரசியல் அடிப்படைகளை அறியாத ரசிகர் கூட்டத்தையும் ஒன்று எனக் காட்டுவதன் ஆபத்தை மறைக்கும் தந்திரம் நடக்கிறது.
 
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரே தட்டில் வைத்துக் காட்டி நிகழ்காலத்தைக் கடந்துவிடச் சொல்வது பாசிசம் கடைப்பிடிக்கும் உத்தி. சமப்படுத்திக் காட்டும் இந்த உத்தி வழியாக விஜயின் பயணத்தால் ஏற்பட்ட கொடூர நிகழ்வையும் மரணங்களையும் ஒன்றுமில்லாத சாதாரணமான நிகழ்வுகளில் ஒன்று எனக் கடந்துவிடத் தூண்டுகிறார்கள். மதவாதத்தையும் சாதியப்பிளவுகளையும் நியாயப்படுத்தும் ஆளுமைகளே இதனைச் செய்கிறார்கள்.
 
திரள்மக்கள் அரசியலில் கும்பல் உளவியல் செயல்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குள் இடதுசாரிகள் உருவாக்கும் திரட்சியின் உளவியலும் வலதுசாரிகள் உருவாக்கும் கும்பலின் உளவியலும் ஒன்றல்ல. இரண்டையும் சமமானதாகச் சொல்ல முடியாது. இரண்டிற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. நல் நோக்கத்தின் அடிப்படையும் திரட்டப்படும் திரளையும் பிளவுவாத அடிப்படையில் திரட்டப்படும் கும்பலையும் ஒன்றாகக் காட்டுவது தந்திரங்கள் நிரம்பியவை. அவர்கள் பாசிச மனநிலையைத் தூண்டுவலும் நியாயப்படுத்துவதிலும் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அண்ணா காலத்தில் நடிக பிம்பங்கள் கூட்டம் சேர்க்கப் பயன்படும் ஒன்றாக மட்டுமே இருந்தன. ஆனால் அந்த நடிக பிம்பங்களைக் கட்சித் தலைவர்களாக்கி முதல்வர் கனவை நோக்கி நகர்த்தியவர்கள் யார் என்பதைக் கட்டுடைப்பின் மூலம் தான் விளக்கவேண்டும் என்பதில்லை. எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, விஜயகாந்த், ரஜினிகாந்த் என்ற தொடர்ச்சியில் இப்போது விஜய் வரை ஆலோசனைகளையும் தந்திர உத்திகளையும் வகுத்துக் கொடுப்பது யார் என்பது புரியாத புதிரும் அல்ல.

பரப்பியல் வாதம் (பாப்புலிசம்)

அரசியல் விஞ்ஞானத்தில் பரப்பியல் வாதம் (பாப்புலிசம்) என்ற கலைச்சொல் ஒருவித எதிர்மறைத் தன்மையோடு விளக்கப்படும் கலைச்சொல் என்றாலும் பொதுப்புத்தி சார்ந்த வெற்றிக்குப் பல நேரங்களில் உத்தரவாதமான ஒன்று. வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும். செய்திகள், நிகழ்வுகள் மட்டுமே புனைவுகளாக ஆக்கப்படும் என்றில்லை.

ஓர் இயக்கம் முன் வைக்கும் கொள்கைகள், கொள்கைகளை முன் வைக்கும் நபர்கள் போன்றனவும் கூடப் புனைவுகளாகவே கட்டமைக்கப்படுவது பரப்பியவாதத்தின் அம்சங்களே. இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பரப்பியல்வாதத்தைத் தங்களது கருத்தியல் அடிப்படையாகக் கொண்டவையே என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகமே அதில் முன்னோடியாக இருந்த இயக்கம் என்பதை அதன் கடந்த கால வரலாற்றின் பக்கங்கள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் பா.ஜ.க.வின் இயக்கமும் பரப்பியல்வாத அடிப்படைகளைக் கொண்டதே.

நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள் வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த - populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.

மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும்போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைகிறது. அதன் மூலம் 'பொது மக்கள்' என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்கிறது. அப்படியொரு கவசம் கிடைத்தவுடன் அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை.

பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்துவத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான்.

இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள்வாதமும், வலதுசாரிகள் பயன் படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது. வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன.

*****************
வெகுமக்கள் பண்பாடு( Popular Culture) X திரள் மக்கள் பண்பாடு(Mass Culture)
இலக்கியக் கல்வியின் காத்திரமான ஆய்வுகளைத் தொடர்ந்து திரள் மக்கள் பண்பாட்டையும் அதனூடாக அறியப்படும் பரப்பியத்தின் தளங்களையும் ஆய்வு செய்யும் ஆய்வுகள் நிகழ்காலத்தின் தேவை. பொதுவாக இரட்டைகளால் -கறுப்பு x வெளுப்பு அல்லது தீமை xநன்மை, புனிதம் x தீட்டு, கிராமம் x நகரம், ஆண்மை x பெண்மை, மையம் x ஓரம், தேவதை x ராட்சசி சிறுதெய்வம் அல்லது நாட்டார் தெய்வம் x பெருந்தெய்வம், அந்நியர் x உள்ளூர், தாய்மொழி x அந்நிய மொழி போன்ற இரட்டைகளால் கட்டியெழுப்பித் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் பரப்பியம் மிகுந்த கரிசனம் கொண்டது போலவும், பெருந்திரளின் கருத்தியலை பிரதிநிதித்துவப் படுத்துவது போலவும் தரும் தோற்றம் மிகையானது; பாவனையானது என்று சொல்லலாம். இதனைப் புரிந்து கொள்ள விரும்பும் ஓர் ஆய்வாளன் திரள் மக்கள் பண்பாட்டினை ஆய்வு செய்யும் கருவிகளைக் கைக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு முன்னோடிப் பல்கலைக்கழகம் இதுபோன்ற புதிய எல்லைகளுக்குள் நகர வேண்டிய தேவைகளை உணர வேண்டும்.

நடிப்பு: திரையிலும் மேடையிலும்

வணிக சினிமாவின் நடிகரோ, இயக்குநரோ தனது முந்திய படத்திற்கும் அடுத்து எடுக்கப்பட இருக்கும் இடையே தொடர்ச்சியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் கலைஞர் என்று நினைக்கும்போது தொடர்ச்சியைப் பற்றிக் கவலைப்படவே செய்வார்கள். ஒரு இயக்குநர் தனது படங்களில் கருத்தியல்ரீதியான தொடர்ச்சியைக் கொண்டுவரவும் தக்கவைக்கவும் நினைப்பார். அதுதான் தனது அடையாளத்தை உருவாக்கும் என அவருக்குத் தெரியும். ஆனால் நடிகர்கள் அப்படி நினைப்பதில்லை.
 
நான் நல்ல நடிகன் என்பது தரப்படும் பாத்திரத்தை ஏற்று நடிப்பதில் இருக்கிறது என்றே நினைக்கிறார். எனவே கருத்தியல் ரீதியான ஓர்மைகளைப் பற்றி நடிகனாகக் கவலைப்பட ஒன்றுமில்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கும். ஆனால் சில நடிகர்கள் சிலவகையான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி காட்டுவார்கள். அது அவர்களின் பிம்பத்தையும் கருத்தியல் பார்வையையும் சிதைத்துவிடும் எனக் கருதுவார்கள்.
எம்.ஜி.ஆர் மது அருந்தும் காட்சியிலோ, புகைக்கும் காட்சியிலோ நடிப்பதைத் தவிர்த்தார். அதன் மூலம் தனது சமூகப் பார்வையைத் தொடந்து தக்க வைக்க வைத்தார். அதே நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ச்சியை -CONTINUITY யைத் தவறவிடக்கூடாது என்பது முக்கியமான ஒன்று. ஒரு காட்சியில் இடம்பெறும் பின்புலக்காட்சி, அதில் இருக்கும் இயற்கைப் பொருட்கள், செயற்கைப் பொருட்கள், பாத்திரங்கள் அணியும் ஆடை, நடிக உடல் தாங்கும் ஒப்பனை என எல்லாவற்றிலும் தொடர்ச்சியைக் கொண்டு வரவேண்டும். அதைத் தவறு விட்டால் சினிமாவின் ஓர்மை கெட்டுவிடும்.
அரசியல் கட்சியில் உறுப்பினராகிச் செயல்படும் அரசியல்வாதிகள் ஆடைகள், ஒப்பனை, உடல்மொழி, போன்றவற்றில் தொடர்ச்சியைத் தக்கவேண்டும் என்று நினைக்கவேண்டியதில்லை. ஆனால் பேசும் உரையில், அதன் வழியாக உருவாகும் கருத்தியலில் தொடர்ச்சி இருக்க வேண்டும். தொடர்ச்சி இல்லாமல் பேசும்போது அந்த உரை உளறல்களாகிவிடும். தமிழ்நாட்டுப் பெருங்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் உரையில் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை என்னும் உடல்மொழியிலும் தொடர்ச்சியைக் கைவிடுவதில்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் நடிகர்கள் தான். இதில் விதிவிலக்காக இருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் மட்டும் தான்.

அழிக்கப்படும் தனித்துவங்கள்

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும் அடுத்தடுத்து வரும் கொண்டாட்ட நாட்கள். ஒருவிதத்தில் மூளை உழைப்புக்குழுவினரின் விழாவாகச் சரஸ்வதி பூஜையும், உடல் உழைப்புக்குழுக்களின் புஜையாக ஆயுத பூஜையும் இருந்தன. எனது வீட்டில் இருந்த பாரதக் கதை நூல்களையும் எனது பள்ளிப்பாட நூல்களையும் வைத்துச் சரஸ்வதி பூஜையை வீட்டில் கொண்டாடிய நினைவுகள் உள்ளன. அன்று அரிசிப் பொரி வழங்கப்படும். சரஸ்வதி பூஜையைக் கொண்டாடியவர்கள் பெரும்பாலும் படித்த குடும்பங்களின் உறுப்பினர்கள். வணங்கும் முறையில் ஆகமத்தன்மையும் இருக்கும்.
அதற்கடுத்த நாளில் உழவுத்தொழிலுக்கான கருவிகளை வீட்டுக்கு வெளியே ஊரின் பொது இடத்தில் வைத்துப் பொதுப்படையல்களோடு கூட்டமாகக் கொண்டாடுவார்கள். பெருமளவுஅப்போது சுண்டல் வழங்கப்படும். அந்தக் கொண்டாட்டத்தின் தன்மையில் நாட்டார் மரபு வழிபாட்டுத்தன்மை கூடுதலாக இருக்கும்.
 
இந்த வேறுபாடுகள் இப்போது இல்லை. மெல்லமெல்லக் கலந்து தனியடையாளம் இல்லாமல் போய்விட்டது. புத்தகங்களும் பேனாவும் வாகனங்களும் சுத்தியலும் கருவிகளே/ ஆயுதங்களே என்ற எண்ணம் உருவாக்கப்பட்டு ஒற்றை அடையாளம் உருவாக்கப்பட்டு விட்டது. இந்தப் பின்னணியில் இந்துவாக ஒன்றிணைதல் என்ற கருத்தோட்டம் இருந்தது என்று சொன்னால் பக்தர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடும்.

சிற்றடையாளங்களைக் கைவிட்டுவிட்டுப் பேரடையாளத்திற்குள் ஒருவராக மாறும்போது பாதுகாப்பாக உணரமுடியும். ஆனால் அவர்களின் தனித்துவம் காணாமல் போவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டும். இந்த நகர்வைப் பெருங்கூட்டத்தை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அரசியலில் வெளிப்படையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கூட்டணி அரசியல் காலத்தில் தலைமைதாங்கும் பெரிய கட்சியின் அடையாளமே அதனோடு சேர்ந்து வாக்குச் சேகரிக்கும் சிறுசிறு கட்சிகளின் அடையாளமாகவும் ஆகிவிடுகின்றது. மற்ற நேரங்களைவிடவும் தேர்தல் நெருங்கிவரும் காலங்களில் பட்டவர்த்தனமாக வெளிப்படும். இந்திய அளவில் அறியப்பட்ட இரண்டு கூட்டணிகளிலும் சிறுபான்மை அரசியலை முன்னெடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட கட்சியும், தலித் அரசியலைப் பேசுவதற்குத் தொடங்கப்பட்ட கட்சியும் வட்டார அரசியலைப் பேசுவதற்காகத் தொடங்கப்பட்ட பேரரசியலின் பகுதியாக மாறிவிடுகின்றன. கூட்டணியின் குரலாக மட்டுமே வெளிப்படும் நெருக்கடி நிகழ்கிறது.
 
அரசியலில் வெளிப்படும் இந்தப் போக்கு பண்பாட்டு நடவடிக்கைகளிலும் தத்துவச் சொல்லாடல்களிலும் நுட்பமாக வெளிப்படவே செய்கின்றன. இந்து என்னும் பெருஞ்சமயத்தின் பகுதியாக மாறிவிட்ட நிலையில் அதன் உட்பிரிவுகளின் கொண்டாட்ட நாட்கள் தனித்தன்மையை இழந்து விடுகின்றன. அறுசமயப் பிரிவுகளைக் கொண்ட வைதீக இந்துசமயத் திருவிழாக்களில் கண்கூடாகக் காணமுடியும். இந்துத்துவ அரசியல் என்பது அதன் உட்பிரிவுகளின் தனித்துவத்தை அழித்து ஒற்றை அடையாளத்தில் கரைத்துவிடும் அரசியல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்