மூன்று அசல் கதைகளும் ஆறு மொழி பெயர்ப்புக் கதைகளும்

அளவில் பெரியதாக மாறி வரத் தொடங்கிய தலித் இதழின் அடுத்தடுத்த இதழில் இமையத்தின் இரண்டு கதைகள் வந்துள்ளன. பசிக்குப்பின்.. மாடுகள்.. இரண்டு கதைகளும் வெவ்வேறு வெளிகளில், வெவ்வேறு வயது மனிதர்களை உலவ விட்டுள்ள கதைகள். பசிக்குப்பின் கதையின் உலகம் ஒரு சிறுவனின் ஒரு நேரத்து உணவு சார்ந்த உலகம்.. தானியத்தைக் குத்தி அதிலிருந்து கிடைக்கும் தவிட்டைத் தின்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு சிறுவனின் மனசைத் திசை திருப்பி விடும் ‘ஐஸ் வண்டி’ ஏற்படுத்தும் சலனத்தை விரிவாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறுகதைக்கு அதுவே கூடப் போதுமானதுதான்.

எல்லா ஐஸ்களும் விற்றுத் தீர்ந்தபின் கொட்டிக் கவிழ்க்கும் ஐஸ்பெட்டியிலிருந்து உடைந்த ஐஸ் துண்டுகள் எறியப்படும் என்ற நம்பிக்கையில் ஐஸ்காரனைத் தொடரும் சிதம்பரத்திற்குக் கிடைப்பது ஏமாற்றம். எல்லா ஐஸ்களும் விற்காதபோது, அவனுக்கு ஒரு சொட்டு இனிப்புத் தண்ணீரும் கிடைக்காமலேயே போய்விடுகிறது. வறுமை சூழ்ந்த கிராமத்துச் சிறுவனின் சின்ன சின்ன ஆசைகளும் நிராசைகள்தான் என்ற அளவில் முழுமை பெற்ற கதையாக ஆகிவிடும். ஆனால் எழுத்தாளர் இமையத்திற்கு அது போதாது. அவரைப் பொறுத்த வரையில் தனது கதாபாத்திரங்களின் மேல் மேலும்மேலும் பச்சாதாபமும், அனுதாபங்களும் உண்டாக வேண்டும் என நினைக்கிறார்.அந்த நினைப்பு மேலும் சித்திரிப்புகளில் இறங்கி விடுகிறது. அதற்காக, சிதம்பரத்தைத் திரும்பவும் தவிடு தின்ன அழைத்து வருகிறது. தானியத்திலிருந்து தவிடு பிரிக்கப்படும் முறையினையும், தவிட்டை வருத்து சாப்பிட வேண்டிய அவசியத்தையும் விவரிக்கிறது. நீண்ட விவரிப்புகள் மூலமான சித்திரத்தை அடுத்து, முடிவாக அவன் மேல் பரிதாப உணர்வு ஒன்றை உருவாக்கிவிட விரும்புகிறார். அந்த விருப்பம், அவன் தவிட்டை முழுவதுமாகச் சாப்பிடாமல், தண்ணீர் கூடக் குடிக்காமல் தூங்கிப் போய்விட்டான் என்று முடிக்க வைக்கிறது.

 

வறுமையில் வாழ்பவர்களுக்குத் தூக்கம் கூடத் தானாக வந்துவிடுவதில்லை என்று சொல்ல முயலும் இந்தக் கதை வாசகனிடம் உண்டாக்க விரும்பும் உணர்வு பச்சாத உணர்வுதான். மூன்று வேளையும் விரும்¢பிய உணவுகளையும் , பரிகாரங்களையும் உண்டு வாழும் மனிதர்களிடம் ஒரு வித குற்ற உணர்வையும் உண்டாக்கத் தக்கது. இதை இந்தக் கதையின் மையத்தில் ஐஸ் வண்டிக்காரன் ஏறிப்போகும் போதே இமையம் உருவாக்கி விடுகிறார். அப்படி உருவாக்கிய உணர்வைக் கடைசிவரை தக்க வைத்து மேலும் ஒரு முறைத் தூண்டி விட்டுக் கதையை முடிக்கிறார் கதையில்.. அவரது  கதையின் நோக்கம் அவ்வளவுதான்..[இந்தக் கதை எழுப்பும் உணர்வையொத்த உணர்வை எழுப்பத் தமிழ்செல்வனின் பாவனைகள் என்ற கதையும் முயன்றுள்ளது] இது போதுமானதுதானா?

 

பசிக்குப் பின் ..முடிவும் நிகழ்வுகளின் அடுக்கும் அவரது நோக்கத்தை ஓரளவு முழுமையடையச் செய்திருக்கின்றன. ஆனால் ‘மாடுகள்.. ‘ கதை, பிரயத்தனம் அதிகமாகவும், விரயம் அதைவிட அதிகமாகவும் ஆன கதையாக இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய கையும் மனசும் அந்தப் பனியில் - பின்னிரவு முழுவதும்- பிணையல் ஓட்டிய கையாகவும் மனசாகவும் இருந்தால் தான் எழுத முடியும். எழுதி முடித்தபின்பு ஏழெட்டு இரவுகள் பிணையல் ஓட்டியதாக இமையம் உணர்ந்திருக்கக் கூடும். ஏனென்றால் கதையை வாசித்த எனக்கே அந்த உணர்வு இரவு முழுவதும் இருந்தது. வீட்டிற்குள் படுத்திருந்தாலும் பனியில் நனைவது போல இருந்தது. கதையைப் படித்த அன்று நனையவில்லை என்றாலும், என் இளம் வயதில்- எனது கிராமத்துக் களத்து மேடுகளில் நனைந்திருக்கிறேன். பிணையல் ஓட்டியாக மாடுகளின் பின்னால் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன். அந்த வகையில் இமையத்தின் இந்தக் கதை வாசகனின் அனுபவத்தைக் கிளறி , மேலெழுப்பி விடும் கதை தான். ஆனால், ‘மாடுகள்’ கதையின் வடிவம் இந்த நோக்கம் உடையது அல்ல என்பதைச் சாதாரணமாக வாசித்து முடிக்கும் ஒருவர் சொல்லிவிடுவார். எழுத்தாளர் இமையமும் இப்படிச் சொன்னதற்காகக் கோபம் கொள்ளவும் செய்வார். அந்தக் கதையின் நோக்கம், ஆறு மாசமே ஆன பச்சைக் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தாயின் துயரத்தைப் பதிவு செய்வதுதான்.

 

வேலை, வேலைசெய்தால் உணவு.இரவு-பகல் என்றும் பாராமல், இப்பொழுதுதான் பிள்ளையைப்பெற்ற பச்சை உடம்பு என்றும் பாராமல், அந்தப் பச்சைப் பிள்ளையுடன் கொட்டும் பனியில் பிணையல் ஓட்ட வேண்டிய வாழ்க்கை தான் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்று சொன்னாலே போதுமானதுதான். இமையத்தின் கதாபாத்திரங்கள் மேல் பரிதாபம் உண்டாகத் தான் செய்யும். ஆனால் அந்த அளவு பரிதாபம் போதுமானது அல்ல. மேலும் கூடுதலான பரிதாபத்தை உண்டாக்க விரும்பிக் கதைக்கு ஒரு முடிவை எழுதியுள்ளார். ‘பிணையல் கட்டியிருந்த மாட்டின் மீது அவன் தன் கோபத்தைக் காட்டிய போது, அது மிரண்டு ஓடி, குழந்தையைக் கூழாக்கிவிட்டது’ என்று எழுதிக் காட்டுகிறார். இந்தமுடிவு, அந்தக் குழந்தையின் தாய் கதறிக் கதறி அழுவதற்கு ஒரு வாய்ப்புத் தானே ஒழிய, அவளின் துயரத்தை வாசகனுக்குக் கடத்திவிடும் தன்மை உடைய முடிவு அல்ல. இதற்குப் பதிலாக ‘அந்தக் குழந்தை கொட்டிய பனியில் விறைத்துச் செத்துப் போனது’ என்று முடித்திருந்தால் கூட இமையத்தின் நோக்கம் நிறைவடைந்திருக்கலாம். அப்படியில்லாமல், அப்பாவியான மாடுகளின் மேல் கொலைப்பழியை ஏன் சுமத்த வேண்டும் என்று வாசகன் கேட்டால், அவர் என்ன பதில் சொல்வாரோ.. எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை புனைகதை புனைவுகளுக்குள் இயங்கு கிறது என்றும், தர்க்கபூர்வமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது என்றும் சொல்லலாம்.

 

 

இமையத்தின் கதைகளை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்புவது, அவரது கதைகளைக் கதைகளே அல்ல என்று சொல்வதற்காக அல்ல. அவரிடமிருந்துதான் தலித் இலக்கியம்¢ திறமான கதைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான். ஒரு கதையை எழுதுவதற்கும் அதனைச் சிறந்த கதையாக ஆக்கு வதற்கும் எவ்வளவு சிரமங்கள் படவேண்டுமோ அவ்வளவு சிரமங்கள் படக்கூடியவர் இமையம். அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் தொடங்கி இப்பொழுது வந்துள்ள மாடுகள் வரை, இமையம் எழுதியுள்ள கதைகள் ஒவ்வொன்றும் சிரமப்பட்டு எழுதியுள்ள கதைகள் தான். ஆனால் இந்த எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ஒற்றை நோக்கம் மட்டுமே வெளிப்பட்டு வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆரோக்கியத்தின் [கோவேறு கழுதைகள் வரும் அம்மா] மேல் அவர் உண்டாக்கிய பச்சாத உணர்வு, வாசகர்களை வசீகரம் செய்தது என்னவோ உண்மைதான்.அந்த வசீகரமும் பச்சாத உணர்வும் ஆறுமுகத்தின் தனபாக்கியத்தின் மேல் உண்டாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். காரணம் தனபாக்கியத்திற்கு இமையம் அளித்த முடிவு செயற்கையானது. அதீதமான துயரமுடிவின் மேல் அவர் கொண்டிருந்த காதலின் வெளிப்பாடு. இந்தக் காதலின் வெளிப்பாடுகள் தான் பசிக்குப்பின் கதையின் முடிவாகவும் , மாடுகள் கதையின் முடிவாகவும் அமைந்துள்ளன.

 

இமையத்தைப் போலவே விரிவான சித்திரிப்புகளையும் விவரணைகளையும் , பச்சாதாபம் தோன்றும் முடிவுகளையும் தரும் இன்னொரு தலித் சிறுகதை எழுத்தாளர் பாப்லோ அறிவுக்குயில். அவரிடம் இமையத்திடம் இல்லாத ஓர் அம்சம் உண்டு. தான் விவரிக்கும் நிகழ்வுகளை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களை- அவர்களின் செயல் பாடுகளைத் தள்ளி நின்று ரசிக்கவும் செய்வார். இந்த ரசனை கதை எழுதியவனுக்கு மிக அவசியமான ஒன்று என நினைக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் வெறும் கோபக்காரர்கள். கோபம் கதாபாத்திரங்களுக்கு இடையே மட்டுமல்ல. கதாபாத்திரங்கள் மேல் எழுதியவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கும். அதனால் தண்டனையையும் கதைக்குள்ளேயே கொடுத்து முடித்துவிடுவார்கள். கோபம் கொள்ளக் கூடாது என்பதோ, கோபத்தை எழுதக் கூடாது என்பதோ அல்ல. எல்லாவகை உணர்வுகளும் எழுதிக் காட்டப்பட வேண்டியவை தான். எல்லாவகை உணர்வுகளையும் வாசகனுக்குத் தர வேண்டியது படைப்பாளியின் வேலைதான். அதைவிட்டுவிட்டுக் கோபமும் வன்முறையும் மட்டுமே போதும் என்று முடிவு செய்வதுதான் கேள்விக்குரியது.

 

கதை எழுதுவதற்காகக் கதை எழுதுபவர்களைப் பற்றிப் பிரச்சினை இல்லை. அவர்களுக்குச் ‘சிலிர்ப்பு’ ஒன்று மட்டுமே கூடப் போதுமானது. அந்தச் சிலிர்ப்பின்வழி மகத்துவத்தை-உன்னதத்தை-முழுமையைக் காணும் பெருவாழ்வைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நோக்கம் அவ்வளவு தான். அதே நோக்கத்தோடு வாசிக்கிறவனும் வாசித்து அடங்கிக் கொள்வான். ஆனால் தலித் கதைகள் சிலிர்ப்போடு அடங்கிப் போக வேண்டிய கதைகள் இல்லை. அவைகளுக்குப் பலவிதமான வேலைகள் இருக்கின்றன. முக்கியமான வேலை விசாரணை செய்வது; ஒரு தலித் கதையின் மிக முக்கியமான வேலை வரலாற்றையும் இருப்பையும் விசாரணைக்கு உட்படுத்துவது என்று நினைக்கிறேன். அந்த விசாரணைகளின்வழி,  மாற்றத்தை கோருவது; புதிய பாதையை  வகுப்பது என்பதாக நீளும். இந்த இடத்தில் கதாசிரியர்களுக்கு இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தலித்துக்களுக்காகப் பேசுவதும் எழுதுவதும் புதியன அல்ல தான். என்றாலும் தொண்ணூறுகளின் போக்கு அதுவரையிலான செயல்பாடுகளை மறுவிசாரணை செய்தது என்பதை அவர்கள் அறிந்தவர்கள் தானே. அந்த விசாரணைக்குப்பின் புதிய வழித்தடங்களும் புது வகைத் தலைமைகளும்- செயல் மற்றும் சிந்தனைத் தலைமைகள்- உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மைதானே.

 

இந்த உணர்த்தலுக்குப் பின் அந்த விசாரணைகள் எழுத்துத் துறையில் - கதை எழுதுவதில் - ஊடகங்களில் பங்கெடுப்பதில்- ஏன் நிகழ்த்தப்படவில்லை என்று கேட்டுக் கொள்ளவேண்டியுள்ளது.பிற வகை எழுத்துக்களை விட புனைகதைகளை உருவாக்குவதில் இன்னும் பழைய முறையிலேயே - சித்திரிப்புகள் மூலமாகவும் அதன் வழியான முடிவுகள் வழியாகவும் இரக்கத்தை உண்டாக்குவது- என்ற முறையிலேயே  பயணம் செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. அதற்குப் பதிலாக விசாரிக்கும் வகையிலான எழுத்துக்கள் எழுதப் பட வேண்டும். அப்படியான எழுத்து எப்படி இருக்கும் என்று கதாசிரியர்கள் கேட்கக் கூடும். குறைந்த பட்சம் இமையம் போன்ற சிரமப்படுவதற்குத் தயாராக உள்ள கதாசிரியர்கள் கேட்கத்தான் செய்வார்கள். அப்படிக் கேட்பவர்களுக்கு உதவ வேண்டியது திறனாய்வாளன் மற்றும் முன்கை எடுப்பவர்களின் பணியும் கூட.. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும் நோக்கத்தோடு ரவிக்குமார் மொழிபெயர்த்துள்ள ஆறு கதைகளும் உள்ளன. தலித் இதழின் ஆறு , ஏழாவது இதழ்களில் பின்வரும் ஆறு கதைகளும் அச்சாகியுள்ளன.

1.      மாமிசம்- விர்ஜிலியோ பினேரா- க்யூபா

2.      சுதந்திர தினம்- யுவோன் வேரா- ஜிம்பாவே

3.      பிழைப்பு- துப்ரவ்கா உக்ரேசிக்- யூகோஸ்லேவியா

4.      உணவு- தபான்லோவியாங்- சூடான், உகாண்டா

5.      அம்மா-மிகல் ரகோடோசர் - மடகாஸ்கர்

6.      நிறம்- லோட்ஃபி அகாலே- மொராக்கோ

 

தமிழில் தலித் கதைகளை-புதுவகையான தலித் கதைகளை எழுத விரும்பும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆறு கதைகளும் மாதிரிக் கதைகளாகக் கொள்ளத் தக்கன. இந்தக் கதைகள் எவ்வாறு தலித் கதைகளுக்கு முன் மாதிரியாக அமையத்தக்கன என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தமிழில் நடந்த பல்வேறு சோதனை முயற்சிகளும் பிறமொழிக் கதைகளை முன் மாதிரிகளாகக் கொண்டனவே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நவீனத்துவம் வெறும் வாழ்க்கை முறையாகவும் சிந்தனைகளாகவும் மட்டுமே நுழையவில்லை. வ.ரா., புதுமைப்பித்தன், வ.வே.சு. அய்யர், மாதவய்யா எனப் பலரிடம் அசல் கதைகளாகவும் தழுவல் களாகவும் தான் நுழைந்தது.

 

இவர்களைத் தொடர்ந்து மனித நேயம் பேசிய யதார்த்தவாதமும் அதன் தொடர்ச்சியாகச் சோசலிச யதார்த்தவாதமும் மொழிபெயர்ப்புக் கதைகளாகவும் அசல் கதைகளாகவும் தான் அறிமுகம் ஆயின. அதையடுத்து இருப்பியல்வாதம், இருண்மைவாதம் போன்றனவும் அ-நேர்கோட்டுக் கதைகளும் கூட மொழிபெயர்ப்புக் கதைகளாகவும் அசல் கதைகளாகவும் தான் உலா வருகின்றன. அந்த வரிசையில் தலித் கதைகளும்- கதாசிரியர்களும் மொழிபெயர்ப்புக் கதைகள் சிலவற்றை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உள்ளன. ஏனென்றால் அவர்கள் பேச வேண்டிய முறையும், எழுத வேண்டிய நிகழ்வுகளும் , முன்வைக்க வேண்டிய தர்க்கங்களும் புதியனவாக மாறவேண்டியுள்ளது. இதுவரையிலானவற்றை விசாரிக்க, வேறு வகையான சட்டகங்களைக் கைக் கொள்வது தானே சரியாக அமையும்.

 

தலித் எழுத்தாளர்களுக்கான முன்மாதிரிக் கதைகளை ஐரோப்பிய மாதிரிகளில் தேடுவதைவிட ஆப்பிரிக்க -லத்தீன் அமெரிக்க மாதிரிகளில் தேடுவது மிகச் சரியானது என முடிவு செய்து, ரவிக்குமார் மொழிபெயர்க்கும் கதைகள் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டியவை. திரும்பத் திரும்ப வாசித்தல் என்பது அதன் அமைப்பை- அதன் பாணியை- அது நகரும் விதத்தைக் கற்றுக் கொள்வதற்காகத் தானேயொழிய, அவை தரும் அனுபவங்களுக்காக அல்ல.

 

மிக எளிய கதைகளான அவற்றின் வெளியும், தர்க்கமும் மிகச் சரியாகச் சுலபமாகப் புரிந்துவிடத் தக்கன. ஆனால் அவை உண்டாக்கும் தாக்கமும், அத்தாக்கத்தை உருவாக்க அவை பின்பற்றியுள்ள உத்தியும் ஆழமும் சிக்கலும் கொண்டவை. அதனைத் தன்வசப்படுத்தும் நிலையில், ஒரு அசல் தமிழ் தலித் கதை சொல்லி, புதிர்ப் பயணங்களைத் தொடங்கி விடுவான் என்பது உறுதி. இந்த ஆறு கதைகளுமே நிகழ்த்திக் காட்டுவதைக் கவனமாகத் தவிர்த்துள்ளன. அக்கதைகளுக்குள் நிகழ்வுகளும் நிகழ்வுகளில் பங்கேற்கும் கதாபாத்திரங்களும் இருக்கவே செய்கின்றனர். என்றாலும் அவர்களின் பாடுகள் விரிவாக அடுக்கப்பட்டுச் சித்திரங்கள் தீட்டப்படுவதில்லை. அதற்கு மாறாக கதையின் தொடக்கம் ஒருவித வினாத் தன்மையுடன் தொடங்கி, முடியும்போதும் அந்த வினாவிற்கான விடையாக வேறொரு வினாவை விட்டுவிட்டு முடிவடைகின்றன. நான் சொல்லுகின்ற வினா- விடை என்கிற பாணி பருண்மையாகக் கதையில் வெளிப்படுகிறது என்று சொல்வதற்கில்லை. என்றாலும் கதை நெடுகிலும் கேள்விகளும் விடைகளும் அடுக்கப்பட்டுள்ள தொனி கேட்டுக் கொண்டே இருப்பதை வாசகனால்  சுலபமாக உணர முடியும்.

          “ அப்பா, மொராக்கோ எங்கே இருக்கிறது?’’

          “ ஆப்பிரிக்காவுல’’

          “ ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை அதெல்லாம் இருக்குமே அங்கேயா?’’

          “ இல்ல,அதையுந் தாண்டி வடக்கு ஆப்பிரிக்காவுல’’

          “ மொராக்கோவுல என்ன இருக்கு’’

          “ அராபியர்கள் இருக்காங்க’’

  எனத்தொடங்கி ,

          ‘’ நாம அந்த நாட்டுக்கு போனப்போ விஸா வாங்கிட்டுத் தான் போனமா..?

  ‘’ அந்தக் காலத்தில விஸா எல்லாம் கிடையாது. எல்லாமே ரொம்பச் சுலபமா இருந்துச்சி. ஒரு பீரங்கிக் கப்பல் மட்டும் இருந்தா போதும். எந்த நாட்டுக்கும் போயிடலாம்.’’

  என முடியும்போது, ‘வினா’ விற்குப் பதில் ‘ பீரங்கிக் கப்பல்’ என்பதாக முடிகிறது. கேள்விகள்- விடைகள் என அமைந்துள்ள இந்தக் கதை (நிறம் )யிலும் சரி, இதையொத்த ‘பிழைப்பு’ கதையிலும் சரி, கதை சொல்லிக்கு கதைக்குள்ளே வேலையே இல்லை. இந்த ஆறுகதைகளிலுமே , கதை சொல்லி கதைக்கு வெளியில் இருப்பது ஒரு பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் மிகவும் கவனிக்கத் தக்கதும் பின்பற்றத்தக்கதுமான அம்சமாகும். ஒரு கதைக்குள் கதாபாத்திரமாகவோ, கதை சொல்லியாகவோ உள்ளே நிற்கும் கதாசிரியர், தனது நிலைபாட்டை வாசகனிடம் திணித்துவிடும் வேலையைச் செய்துவிடுவதைப் பலகதைகளில் காணமுடிகிறது. தமிழின் சிறந்த கதைகளை எழுதிய புதுமைப்பித்தன், மௌனி, ஜி.நாகராசன்,கு.ப.ராஜகோபாலன், சுந்தரராமசாமி போன்றவர்களிடமே இந்த அம்சம்தான் அதிகம் காணப்படுகிறது. இன்னும் சிலர் கதையை நிகழ்வுகளின் தொகுப்பாக அடுக்கி, நாடக முரண் போல மோதல்களை உண்டாக்கி, முடிவில் முத்திரை வாக்கியத்தையும் எழுதி விடுவதுண்டு. ஜெயகாந்தன், பிரபஞ்சன், விந்தன், லா.ச.ரா, சி.என். அண்ணாதுரை என இதற்கும் பல முன்னோடிகள் உண்டுதான்.

 

கதைக்கு வெளியே நிற்கும் கதைசொல்லி கதையை- கதையின் நிகழ்வுகளை- கதாபாத்திரங்களின் மனவுணர்வுகளை திசைமாற்றி நகர்த்தும் வினைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. இவைகள் ஒவ்வொன்றின் மீதும் விசாரணைகளையே தூண்டிக் கொண்டிருப்பான். இதை நாடகத்தில் வலியுறுத்தி, தனியான அழகியலாக- தூரப்படுத்துதல்- என்ற கோட்பாடாகக் கூறியவர் பெர்ட்டோல்ட் ப்ரெக்ட். நாடக மேடையேற்றங்களுக்கு அவர் சொன்ன அழகியல் , கதையெழுத்தில் சாத்தியமாகி இருப்பது கவனிக்கத் தக்கதும் பின்பற்றத்தக்கதும் ஆகும்.

 

கதைக்குள்ளிருந்து கதை சொல்லும்பொழுது, அந்தக் கதை ஒரு குறிப்பிட்ட எல்லையை- காலம், வெளி, நபர், -என வரையறை செய்து கொள்ளும். இப்படியான வரையறைகள், அந்தக் கதைக்குக் கனகச்சிதமான வடிவத்தைத் தரும் என்பது உண்மைதான். என்றாலும், அவற்றைத் தாண்டி வாசகனின் சிந்தனையைச் செல்லவிடாது. ஆனால் கதைக்கு வெளியே கதை சொல்லி இருக்கும்போது இத்தகைய தடைகளே கிடையாது என்பதுதான் நேர்மறையான அம்சம். இந்த ஆறுகதைகளும் அத்தகைய கதைகளாக உள்ளன என்பதுதான் சொல்ல வந்த விசயம்.

 

கதை சொல்லி யார் என்பதிலும் , கதை சொல்லியின் இடம் கதைப்பரப்பிற்குள் இருக்கிறதா..? வெளியே இருக்கிறதா என்பதிலும், காலத்தைப் பற்றிய தகவல்களைத் தருவதிலும் குழப்பங்கள் அதிகம் உள்ள கதைகள், உண்டாக்க நினைக்கும் கழிவிரக்கம் விரயமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.இங்கே தலித் கதை எழுது கிறவர்களும் பெண்ணியக் கதை எழுதுகிறவர்களும் பாத்திரங்களின் மேல் கழிவிரக்கத்தைத் தூண்டுவதற்காக சம்பவக் கோர்வைகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர். இப்படி அடுக்கிக் கொண்டே போகும் சம்பவக் கோர்வைகளும் அதன் வழி உண்டாக்கப்படும் கழிவிரக்கமும் மட்டுமே போதுமானவைகள் தானா..? என்பது பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று.

                                                                   தலித், நவம்பர்,2003


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்