ஒரு வினாவும் விடையும்

இந்துத்துவம் சமயநடவடிக்கைகளை ஆன்மீகமாக முன்வைத்து ஆன்மீக அரசியல் செய்வதுபோல, அதனை மறுப்பவர்கள் வள்ளலார், வைகுண்டசாமி, நாராயணகுரு போன்றவர்களின் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு அரசியலுடன் இணைத்து மாற்று ஆன்மீக அரசியல் செய்யலாமே? ஏன் நாத்திகத்தை முன்மொழிந்து அரசியல் செய்யவேண்டும்?

******** ********
ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத் தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம். தனிமனித ஆன்மீகப் பயணத்தைக் குறித்த சொல்லாடல்களாக இருப்பவை இறையியல்களாகவும், அதன் விளக்கவுரைகள் இறையியல் தத்துவங்களாகவும் விரிந்துள்ளன.
தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைச் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற நினைப்பின் தொடர்ச்சியாகச் சில தனிமனிதர்கள் இறையியலைக் கூட்டு நடவடிக்கைகளாக மாற்றியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களைத் தீர்க்கதரிசிகளாகவும் புனிதர்களாகவும் வழிகாட்டிகளாகவும் மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கை முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதனைப் பின்பற்றும் வினைகள் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் வழிபாடுகளாகவும் மாறி யிருக்கின்றன. அப்படியான கூட்டு நினைவிலிகளின் பருண்மையான வெளிப்பாடாக இருப்பவை விழாக்கள். பழைய விழாக்களைப் போலவே இப்போதும் புதிய விழாக்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆன்மீகம் என்பதற்குச் சொல்லப்பட்ட இந்த விளக்கத்தின் அடிப்படையில் நாத்திகமும் ஓர் ஆன்மீக வழிமுறைதான். அதற்கும் சில நம்பிக்கைகள் இருக்கின்றன; சடங்குமுறைகள் இருக்கின்றன; மனமாற்றங்கள் இருக்கின்றன. மனம் எதனைக் குற்றம் எனச் சொல்கிறதோ, அதற்கான தண்டனையை மனமே - மனதின் சாட்சியே வழங்கும். அதனை ஏற்றுத் தனது நடைமுறைகளை ஒரு தன்னிலை மாற்றிக்கொள்ளும். அதற்காக ஓரிடத்தை - கோயிலை நாடிச் செல்வதில்லை. அந்த வகையில் நாத்திகமே பிறரைத் தொல்லைக்குள்ளாக்காத ஆன்மீகம். அது நவீனத்துவ வாழ்வின் ஆன்மீகம்.
அரசு என்பது அமைப்பு, அதன் உட்கூறுகளும் இயக்கமும் தனியொரு மனிதருக்காகத் திட்டமிடப்படுபவையல்ல. மக்கள் திரளை மையப்படுத்திப் பேசப்படும் சொல்லாடல். தெருவிளக்குப் போடுவதை மேற்கொள்ளும் ஓர் அரசமைப்பு அந்தத் தெருவில் குடியிருக்கும் மனிதர்களுக்காக மட்டும் என நினைத்து அதை அங்கே நிறுத்துவதில்லை. அந்த வழியாகப் போகும் ஒவ்வொருவருக்கும் அதன் பயன்பாடு கவனத்தில் கொள்ளப்படுகின்றது. வேறுவேறு நோக்கமும் வினைகளும் கொண்ட இரண்டையும் இணைத்து ஒற்றைச் சொல்லாடலாக மாற்றும் போக்கும் நடவடிக்கைகளும் தேவையா? என்பது நம்முன்னுள்ள கேள்வி.
நிலவுடைமைகாலத்து மன்னர்களின் ஒரு பெயர் கோ. அவர்களின் இருப்பிடமும் கோயில் தான். மன்னர்கள் தங்களை இறைவனின் இன்னொருவடிவமாக முன்னிறுத்தியதால் நாட்டின் இறைவன் அரசன், மன்னன் என ஆன்மீகத்தின் மூலமான இறையின் இடத்தைத் தனதாக்கினார்கள். ஆன்மீகமும் அரசியலாக இருந்தது. மன்னர்களின் ஆட்சி முடிந்து, மக்களாட்சி அரசியல் என்ற கண்டுபிடிப்புக்குப் பின் அவ்விணைப்புப் பொருள் இழந்ததாக மாறிவிட்டது.
ஆன்மீகப் பயணம் தனி; அரசியல் பயணம் தனி என்பதை உறுதிசெய்துகொண்ட வாழ்க்கை முறையை வழங்கியது நவீனத்துவம். ஒவ்வொன்றுக்கும் இறைவனின் ஒப்புதலைப் பெற்றுத் தொடங்கிய நடவடிக்கைகள் இப்போது இல்லை. தனிமனிதர்கள் தொடங்கும் பெரும் செயல்களில் முடிவெடுக்க முடியாத நிலையில் மட்டுமே ஆன்மீக மூலத்தை நாடுகிறார்கள். மற்ற நேரங்களில் அரசு அமைப்புகள் எழுதிவைத்திருக்கிற விதிகளையே பின்பற்றுகிறார்கள். இந்த மாற்றத்தை - மரபான வாழ்க்கையிலிருந்து நவீனத்துவத்திற்குள் நுழைந்த மாற்றத்தை விளங்கிக்கொள்ளாதவர்களே ஆன்மீக அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். அல்லது விளங்கிக்கொண்டே மக்கள் திரளைத் தவறாக வழிநடத்த நினைக்கிறார்கள்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துக் கொண்டு செய்யும் பரப்புரைகளின் முதன்மை நோக்கம் ஆன்மீகமாக இல்லாமல் அரசியலாக இருக்கிறது என்றால், அந்த அரசியல் மனிதர்களைப் பின்னுக்கிழுக்கும் நோக்கம் கொண்ட தவறான அரசியல் என்பதை உணரவேண்டும்.

ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பதுதான் மக்களாட்சி அரசியல். அரசியல் என்பது மக்களைத் திரளாகப் பார்த்து அவர்களின் வாழ்வியல் சிக்கலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈடேற்றுவதற்காகச் செய்யும் திட்டங்களும் செயல்பாடுகளும். ஆனால் ஆன்மீகம் தனிமனிதர்களை - அவர்களது மனச்சிக்கலிலிருந்து விடுவித்து ஈடேற்றம் செய்வதற்கான வினைகள் சார்ந்தது. அது நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், மனமாற்றங்கள் சார்ந்தது. இரண்டையும் கலப்பது நவீன அரசியல் ஆகாது. அப்படிக் கலக்கும் அரசியலைத் தவறானது எனச் சுட்டிக்காட்டுவதே நவீன அரசியல்.

அயோத்திதாசரின் பூர்வ பௌத்தம் அல்லது தமிழ் பௌத்தம் என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு விவாதித்த ப்ராமண அறிவாளிகள், முனைவர் தொல்.திருமாவளவனின் அறிக்கைக்குக் கடும் கண்டனங்களைத் தொடுப்பது ஏன்?

நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவனின் ‘ பூர்வ பௌத்தம்’பற்றிய உரை விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மாறவேண்டிய உரை. ’சாதி இழிவுகளைத் துறக்கப் பௌத்தத்திற்கு மாறுவோம்’ என்று சொன்ன அறிவர். அம்பேத்கரின் முன்னெடுப்பைப் போன்றதொரு முன்னெடுப்பு இது. அதனைத் தடுத்து, வைதீக இந்துமதத்தைக் காப்பாற்ற நினைத்த காந்தியின் உண்ணாவிரதமும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட புனே ஒப்பந்தமும் கடந்தகால வரலாறு. 

நிகழ்காலத்தமிழகத்தில் அம்பேத்கரின் பெயரால் முன்னெடுக்கப்படாமல், ’தமிழ்ப்பௌத்தம், பூர்வ பௌத்தம்’ என்ற சொல்லாடல்களால் வைதீக இந்து மதத்திற்கு நெருக்கடி தந்த அயோத்திதாசர் பெயரால் அந்த முன்மொழிவு வைக்கப்படுகிறது. அதனை விமரிசித்தும் விவாதித்தும் கடந்து கொண்டிருக்கும் தமிழ் அறிவுலகில் ப்ராமணர்கள் அவ்வப்போது அவர்களின் தேவைக்கேற்ப ஆதரவு நிலைப்பாடும் எதிர்நிலைப்பாடும் எடுக்கிறார்கள். சிலர் இலங்கையில் செயல்படும் சிங்கள பௌத்தத்தோடு இணைத்து நிகழ்காலப் பௌத்தம் வன்முறையை வழிபடும் சமயம் எனக் காட்ட முயற்சிக்கிறார்கள். தொடர்ந்து விவாதிக்கும்போது சீனாவில் புத்தர் வழிபடப்படுகிறார் எனச் சுட்டிக்காட்டி, பௌத்தம் ஒரு ஏகாதிபத்திய சமயம் என்றுகூட வாதிடலாம். விவாதங்களுக்கும் சொல்லாடல்களுக்கும் எல்லையும் கிடையாது; பரப்பும் கிடையாது. எல்லாச்சமயங்களும் கருத்தியல்களும் உலக தழுவியதாக மாறும்போதும் இடச்சூழலுக்கும் காலச்சூழலுக்கும் ஏற்ப மாறும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ‘ உலகத் தொழிலாளர்களே’ என்று அறைகூவிய மார்க்சியத்திற்கே ‘இந்திய’ மார்க்சிய அடையாளம் வேண்டும் என்று விரும்புபவர்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.

பெரியார் என்ற பெயரையும் பெரியாரின் முன்மொழிவுகளையும் எதிர்ப்பதற்குப் பயன்பட்டது வரை அயோத்திதாசரும் அவரது பூர்வ பௌத்தமும் அதனை முன்வைக்கும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ப்ராமணீயக்கருத்தியலாளர்களுக்கு ஏற்புடையவர்களாக இருந்தார்கள்; விவாதங்கள் நடத்திக் கொண்டாடினார்கள். அதே அயோத்திதாசரின் - அதே ‘பூர்வ பௌத்தத்தக் கருத்தியலை முன்வைத்து இந்துக் கோயில்களைப் பூர்வ பௌத்தக்கோயில்களாக ஆக்கவேண்டுமென முனைவர் தொல்.திருமாவளவன் முன்மொழிந்தவுடன் கடும் விமரிசனத்துடன் எதிர்க்கத்தொடங்கிவிட்டார்கள். ப்ராமணியமும் ப்ராமணர்களும் இந்திய தேசத்தை ஆதரிப்பவர்களாகக் காட்டிக் கொண்டு வைதீக இந்து சமயத்தையும் அதன் செயல்தளமான சாதியிருப்பையும் ஆதரிப்பவர்கள் என்பதைத் திரும்பவும் உறுதி செய்கிறார்கள்.

தொல். திருமாவளவனின் முன்னெடுப்பில், ’சமயம் சார்ந்த கருத்தியலை முன்வைத்து விவாதங்களை நடத்தலாம்; ஏற்கச் செய்யலாம். அரசியல் சட்டப் படியான அறிவிப்புகளையும் கோரலாம். அதன் தொடர்ச்சியாக சமய அடையாளங்களான கோயில்கள், சடங்குகள், திருவிழாக்கள் போன்றனவற்றை மாற்றிக் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்துவது ஏற்புடையன அல்ல. மக்களாட்சிக் காலத்தில் கருத்தியல் மாற்றங்களே செய்யவேண்டியன. கோயில்களையும் திருவிழாக்களையும் மாற்றும் முயற்சிகள் வன்முறையின் களங்களாக மாறி உயிர்ப்பலிகளையே உருவாக்கும். வரலாறுமுழுக்க சமயங்கள் நடத்திய -சமயங்களின் பேரால் நடந்த போர்கள் காவுகொண்ட உயிர்களே அதிகம். இந்தியாவில் கண்கூடான உதாரணமாக இருப்பது அயோத்தியில் நடந்த பாப்ரி மஜ்ஜித் இடிப்பும் ராமர் கோயில் உருவாக்கமும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்