ஆன்மீக அரசியல்: ரஜினியின் இடத்தில் ராஜா
அரசியல் என்பது மக்களைத் திரளாகப் பார்த்து அவர்களின் வாழ்வியல் சிக்கலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈடேற்றுவதற்காகச் செய்யும் திட்டங்களும் செயல்பாடுகளும். ஆனால் ஆன்மீகம் தனிமனிதர்களை - அவர்களது மனச்சிக்கலிலிருந்து விடுவித்து ஈடேற்றம் செய்வதற்கான வினைகள் சார்ந்தது. அது நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், மனமாற்றங்கள் சார்ந்தது. ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பது மக்களாட்சி அரசியல். ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்கும் அரசியலைத் தவறானது எனச் சுட்டிக்காட்டுவதே நவீன அரசியல்.
இசை என்னும் கலைவடிவம் ஆன்மீகத்திற்கும் உதவும் அரசியலுக்கும் பங்களிப்பு செய்யும். இரண்டையும் விலக்கி நிற்கும் பொதுச் சமூகத்திற்கும் திளைப்பையும் களிப்பையும் தரும் . அதே நேரம் இம்மூன்றையும் கேள்விக்குள்ளாக்கி முடிவுகளைத் தனிமனிதர்களிடம் விட்டுவிட்டு ஒதுக்கிக் கொள்வது. இளையராஜாவிற்கு இம்மூன்றோடும் உறவு. அவ்வகையில் அவர் மூன்று முகங்கள் கொண்டவர். அவரது நீண்ட இசைப் பயணத்தில் அரசியலுக்கான இசையோடுதான் தொடங்கியிருக்கிறார் . அவரது சகோதரர் பாவலரின் அடையாளம் அரசியல் இசைக்காரர் அடையாளமே. அவ்வப்போது ஆன்மீகத்திற்கான இசையையும் வாரி வழங்கியிருக்கிறார். ”ரமணமாலை, திருவாசக ஒலிப்பேழைகளை” யெல்லாம் தாண்டியன அவரது ” எப்படிப் பெயரிடுவது” ”ஒன்றுமில்லை; காற்று “ போன்ற ஆல்பங்கள். ஆன்மீகப் பயணிகள் உடனுறைக் கோலங்கள், அவற்றையெல்லாம் தாண்டி தமிழ்ப் பெருந்திரளின் களியாட்டத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் அவரது இசைக் கோலங்கள் பெரும்பங்களிப்பு செய்திருக்கின்றன. ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவரது சினிமா பாடல்களே தொடக்கப்பாடல்களாக இருக்கின்றன. குடும்ப நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்; சமூகக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் அவரது இசைக்கூட்டுக் கோலங்கள் நிரம்பி வழிகின்றன.மூன்று முகம் என்ற சினிமாவில் நடித்த ரஜினிகாந்த் இரண்டு முகத்தோடு நிறுத்திக் கொண்டவர். பெருந்திரளின் களிப்பாக ஒரு முகத்தையும் ஆன்மீகத்தின் பங்கேற்பாளராக இன்னொரு முகமும் போதும் அரசியல் முகம் வேண்டாமென ஒதுங்கிக்கொண்டவர். அவருக்கு அரசியல் முகக் கவசத்தைப் பொருத்திப் பவனிவரச் செய்த முயற்சி தோல்வி அடைந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவரால் நிரப்ப முடியும் என நினைத்த இடத்தை ராஜாவால் நிரப்ப நினைக்கிறது ஆன்மீக அரசியல். ஆனால் தமிழ் நிலத்து மனிதர்கள் கலையையும் அரசியலையும் இணைத்து உருவாகும் பிம்பங்களை ஆராதிக்கிறார்கள்; ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு முன்மாதிரிகள் உள்ளன. ஆனால் ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துக் கொள்ளும் முகங்களை ஏற்றுக்கொண்டதற்கு முன்மாதிரிகள் இல்லை.என்ன நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்கலாம்; விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.
கருத்துகள்