டாணாக்காரன் – வணிகச் சட்டகத்திற்குள் பொறுப்பான சினிமா

பொதுவாக நான் எழுதும் சினிமா விமரிசனத்தில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள் எனப் பரிந்துரை செய்வதில்லை. ஆனால் அதை இப்போது மாற்றிக்கொண்டு டாணாக்காரன் சினிமாவை அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறேன். குறிப்பாகக் காவல் துறையில் பணியில் இருப்பவர்களும், காவல் துறைப் பணிகளில் சேர விரும்புகிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படம் வெளிப்படுத்தும் விவாத முறை, சமூகப் பார்வை, கலையியலை விட்டு விலகாத நேர்மை ஆகியன உணரப்பட்ட நிலையில் பின்னோக்கிய நிகழ்வொன்றைச் சொல்லி எனது பரிந்துரையைத் திரும்பவும் சொல்லத் தோன்றுகிறது. அந்நிகழ்வைப் பின்னர் குறிப்பிடலாம். இப்போது படத்தைப்பற்றிப் பேசலாம்.

திட்டமிட்ட இயக்கம்

காவல் துறை என்று குறிப்பிட்ட துறைசார்ந்த சினிமா என்ற எல்லையை உருவாக்கிக் கொண்டுள்ள இயக்குநர், திரைக்கதையாக்கம், காட்சிக் கோர்வைகள் உருவாக்கம், அவற்றுக்குள் அசையாப் பொருட்களையும், அசையும் பொருட்களையும் நடிகர்களையும் பொருத்தமுறக்காட்டுதல், நடிகர்களைப் பாத்திரங்களாக மாற்றும் உடல் மொழியின் அளவு, உரையாடல்களில் கவனம் என ஒவ்வொன்றையும் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். உருவாக்க நினைத்த உணர்வுசார்ந்த மெய்ப்பாடுகளுக்கு ஏற்பத் தேவையான இடங்களில் இசைக்கோலங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஒற்றைக் கதாபாத்திரச் சாகச சினிமாக்களையே பார்த்துத் திகட்டலில் திளைக்கும் தமிழ் சினிமாவின் பார்வையாளர்களுக்கு திரைமொழியின் அனைத்துக்கூறுகளிலும் ஏமாற்றம் தராத - நம்பகத்தன்மை கொண்ட படம் ஒன்றைத் தரநினைத்துள்ளார். எதையும் தவறாகச் சித்திரித்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ள டாணாக்காரன் சினிமா முழுமையான இயக்குநர் படமாக வந்துள்ளது.

காவலர் பயிற்சிக்கான பயிற்சி நிறுவனக் கட்டடங்களும் மைதானமும் என்ற ஒற்றை வெளியைத் தாண்ட வேண்டியதில்லை என்ற முடிவும், ஓரணிக்குத் தரப்படும் பயிற்சிக்காலம் என்ற கால அளவு நிகழ்வுகளில் எவற்றைப் பார்வையாளர்களுக்குத் தரவேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன கதைப்பின்னலும் இயக்குநரின் தீர்மானமான புரிதலையும் அவரது கலையியல் நோக்கத்தையும் தெளிவாக்கியுள்ளது. அதையும் தாண்டி, காவல் துறையை வெளியிலிருந்து விமரிசனம் செய்வதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, உள்ளிருந்து விமரிசனம் செய்யும் பார்வையைக் கைக்கொண்டிருப்பது அவரது பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

அரசு மற்றும் தனியார் துறைகளின் மீதான பார்வைகளையும் விமரிசனத்தையும் பெரும்பாலும் வெளியிலிருந்து – அவற்றின் பயன்பாட்டாளர்களின் நோக்கிலிருந்து விமரிசிப்பதையே பெரும்பாலான சினிமாக்கள் செய்து வந்துள்ளன. குறிப்பாக இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றோரின் படங்கள் காவல்துறை போன்ற அரசுத்துறைப் பணியாளர்களின் மீதும், பொதுத்துறைப் பணியாளர்களின் மீதும் அத்தகைய விமரிசனங்களை முன்னெடுப்பதின் வழியாகப் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்துகின்றன. அதிகார முறைகேடு மூலம் ஊழல் செய்வது, தன்னலம் பேணுவது, அதிகாரத்துக்குப் பணிந்துபோவது போன்றவற்றில் ஈடுபடும் மனிதர்களைத் தண்டிக்கும் தனிநபர் சாகச நாயகர்களை உருவாக்கிப் புனைவுப் படங்களைத் தருவது தமிழ் வணிக சினிமாவின் பெரும்போக்கு.இப்பெரும்போக்கு தமிழ் சினிமாவில் நீண்ட தொடர்ச்சி கொண்ட ஒன்று.

அதுவே நாயக நடிகர்களின் வழியாகக் கதையை நகர்த்தும் பெரும்போக்காகத் தமிழ்ச் சினிமாவை மாற்றியிருக்கிறது. சினிமாவைத் தயாரிப்பதற்குக் கருவிகளைக் கண்டுபிடித்த மேற்கத்திய அறிவியல், கண்டு பிடிப்புக் கருவிகளை இயக்குநர்களென்னும் கலைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆனால் சினிமாவை இயக்குநரின் கலைவடிவம் என்பதைத் தொடக்கத்திலிருந்தே மறுத்துவரும் ஒன்றாகத் தமிழ்/ இந்திய வணிக சினிமா இருந்துவருகிறது. இயக்குநரின் இடத்தை நடிகருக்குத் தருவதன் மூலம் கலைவடிவம் என்ற நிலையைக் கைவிட்டுவிட்டு வணிகப் பொருளாக அது முன்வைத்துக் கொண்டிருக்கிறது. 

முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களே தமிழில் தயாரிக்கப்படும் சினிமாக்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் கருவிகள் என்பதைத் திரைப்பட வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே தீவிரமான முன்மொழிவையும் விவாதங்களையும் செய்ய நினைக்கும் இயக்குநர்கள் கூட நாயக நடிகரிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கதை, திரைக்கதை, நெறியாள்கையில் தனக்கென ஓரடையாளத்தை உருவாக்கி நிலைநிறுத்திக் கொண்ட இயக்குநர் கூட இதிலிருந்து தப்பமுடியவில்லை என்பது பேரவலம். இந்த அவலப்போக்கிலிருந்து டாணாக்காரன் முக்கியமான விலகலைச் செய்திருக்கிறது.

வணிக விதிகளில் நெகிழ்வு
இதுவரை தெரிவுசெய்யப்படாத குறிப்பான கதைக்களத்தைத் தெரிவு செய்துள்ளது மூலம் முதன்மையான மாற்றத்தை முன்வைத்துள்ளது டாணாக்காரன். ஆவணத்தன்மை கொண்ட காட்சி அமைப்புகள், பாத்திரங்கள், வரலாற்றுத்தன்மை கொண்ட தரவு அடிப்படையிலான காலப்பின்னணி என மாறுபட்ட திரைக்கதையாக்கத்தையும் செய்துள்ளது. அதே நேரம் அதன் இயக்குநரும் அவரது குழுவும் வணிக வெற்றிக்கு உதவும் நாயக நடிகர் என்ற பாதையை விட்டு விலகவில்லை. உருவாக்கியுள்ள புனைவுக் கதையில் விக்ரம்பிரபு ஏற்று நடிக்கும் அறிவழகனே மையப்பாத்திரம். மையப்பாத்திரத்தின் உடல் பலத்தின் மீதும் புத்திசாலித்தனத்தின் மீதும் மையல் கொள்ள ஒரு காவல்துறைக் காதலியும் உருவாக்கப்பட்டிருக்கிறார். அத்தோடு பயிற்சிக்காக வந்தவர்களின் எதிர்பாராத இரு மரணங்களின் மூலம் திருப்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

போட்டியில் இறங்கும் நாயகனின் திட்டம், உடல் பருமனான ஒருவரின் இயலாமையால் தோல்வியைத் தழுவும் வாய்ப்புகளே உண்டு என்ற எதிர்பார்ப்பும் கதைக்குள் இருக்கிறது. இவையெல்லாமே நாயக மையச் சினிமாவின் சூத்திரங்கள். இவையல்லாமல் நாயகப் பாத்திரத்தை எதிர் நிலையில் நிறுத்திப் பயிற்சிகள் மூலம் வதைக்கும் ஈஸ்வர மூர்த்தியின் பாத்திரம் வணிக சினிமாவின் வில்லன் பாத்திரத்தின் மாற்றுவடிவம்தான். அவருக்கு உதவும் மேலதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட ஏட்டய்யா செல்லக்கண்ணுவின் பாத்திரம் (எம்.எஸ். பாஸ்கர்) நாயகனுக்கு உதவும் நகைச்சுவை நடிகரின் இடம் என்பதோடு, நாயகனுக்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கும் நல்பிம்ப வடிவமாகவும் இருக்கிறார் என்பதும் ஒதுக்க முடியாத கூறுகளே.

பாராட்டத்தக்க மாற்றுக்கூறுகள்

திரைக்கதையாக்கத்திலும் உணர்வெழுச்சி உருவாக்கத்திலும் வணிக சினிமாவின் உத்திகள் பின்பற்றிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் அதே நேரம், இவை எதுவும் செயற்கையாகத் தோன்றாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ஈஸ்வர மூர்த்தியின் பாத்திரமும், அவரது கெடுபிடிகளால் நடக்கும் மரணங்களும், தனிநபர் மோதல் சார்ந்த வில்லத்தனமாக இல்லாமல், காவல் துறை என்ற அமைப்பிலும், பயிற்சிக்காலம் என்ற நடைமுறையிலும் பின்பற்றப்படும் செயல்களாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. பொதுவாக மையப்பாத்திரத்தையும் அதன் எதிர்நிலைப்பாத்திரத்தையும் வளர்நிலைப் பாத்திரங்களாகக் காட்டும் பொதுப்போக்கிற்கு மாறாக முழுமையான பல பாத்திரங்கள் படத்தில் உள்ளன. 1982 இல் தேர்வுசெய்யப்பட்டு இப்போது பயிற்சிக்கு வரும் சித்தப்பா, முருகன் போன்றவர்களின் பின்னணிக்கதைகளால் அவர்கள் முழுமைப்பாத்திர வார்ப்புகளாக மாறியிருக்கிறார்கள்.
காவலர் பயிற்சியில் இருக்கும் அனைத்துக்கூறுகளையும் விட்டு விடாமல் கவனப்படுத்தியுள்ள இயக்குநர் அதிகாரிகளின் இயல்பையும் செயல்பாடுகளையும் தனிநபர்களின் செயல்களாகக் காட்டாமல், அமைப்பின் பகுதிகளாக அவர்கள் அப்படி இயங்குவதாகவே காட்டியுள்ளார். ஊழல் செய்யும் அதிகாரிகளும் பயிற்சியில் கறார்த்தனம் காட்டும் ஈஸ்வரமூர்த்தியும் முழுமையாகக் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டப்படவில்லை. தவறிழைத்தால் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளவர்களாகவே உருவகப் படுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் தான் வெற்றிபெறாத நிலையில் மேலதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் கிடைக்கும் விருதுகளையும் அவர் முழுமனதாக ஏற்றுக்கொள்பவராக இல்லை. விருது அறிவிப்புக்கு முன்பு அவரது உடல்மொழி தோற்றவரின் உடல் மொழியில் தான் நிற்கிறது. இதுபோன்ற நுட்பமான சித்திரிப்புகள் படத்தின் மீது நம்பகத்தன்மையை அதிகமாக்கியுள்ளன.

கதைப்பின்னல், உரையாடல், பாத்திர உருவாக்கம் ஆகியவற்றைத் திட்டமிட்ட இயக்குநர், அவற்றை ஏற்று வெளிப்படுத்தப் பொருத்தமான நடிகர்களின் தேர்விலும் கவனமாக இருந்துள்ளார். வெவ்வேறு படங்களில் சின்னச் சின்னப் பாத்திரங்களில் வந்து நடிப்பின் மீதான ஈடுபாட்டைக்காட்டியவர்களைக் கண்டறிந்து பொருத்தமான பாத்திரங்களைத் தந்து நடிக்கச் செய்துள்ளதும் பாராட்டப்படவேண்டியதே. விக்ரம் பிரபு, அவர் மீது மையல் கொள்ளும் அஞ்சலி நாயர் போன்றவர்கள் வழக்கமான சினிமாக்களின் நடிகத்தேர்வு போல இருந்தாலும் போஸ் வெங்கட், லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதனராவ் போன்றவர்களின் தெரிவை அப்படிச் சொல்ல முடியாது. உடல் மொழி, வசன உச்சரிப்பில் காட்டும் லாவகம், உடல் அசைவுகளிலும் நடையிலும் காட்டும் மிடுக்கு மற்றும் குழைவு எனக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள்.

தேவையான அளவு தூரக் காட்சிகளையும், அண்மைக் காட்சிகளையும் கொண்ட ஒளிப்பதிவு புனைவு வெளியின் தீவிரத்தை நினைவுபடுத்துவதற்கு முழுமையாக உதவுகின்றன. தேவையான இடத்தில் இயற்கையான வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டு, உறுத்தாத வகையில் செயற்கை ஒளியைப் பயன்படுத்தும் காட்சிகள் எந்த இடத்திலும் மிகையாக இல்லாமல் நகர்கின்றன. அதே நிலையே ஓசைகளின் பயன்பாட்டிலும் இருப்பதைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். வழக்கமான பயிற்சிகள், தண்டனையாகப் பயிற்சிகள், கழிப்பறைக்காட்சிகள், குறைகளைச் சொல்லும் முறையீடு என ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு உணர்வோடு இணைத்து உருவாக்கப்பட்டுள்ள காட்சித்தொகுதிகள் இணைந்து நேரடிக் காட்சிகளைக் காண்பது போன்ற உணர்வை உருவாக்கியுள்ளன. படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களிடம் ஈடுபாட்டை உருவாக்கிப் புரிதலை ஏற்படுத்தும் இயக்குநரால் மட்டுமே இதனைச் சாத்தியமாக்க முடியும். மொத்தத்தில் தமிழ் வணிக சினிமாவுக்குள் பல தளங்களிலும் பலநிலையிலும் ஒரு முழுமையான மாற்றுச் சினிமாவாக டாணாக்காரனைத் தந்துள்ளார் இயக்குநர் தமிழ். அவரது இந்தச் சினிமாவை அனைவரும் பார்க்க வேண்டுமெனச் சொல்ல இன்னொரு முன் நிகழ்வு காரணமாக உள்ளது என்பதை முன்னர் குறிப்பிட்டேன். இப்போது அதை விவரிக்கலாம்:


==========================

மாற்றத்தை நோக்கிய நிகழ்வு

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசில் உயர் பொறுப்பில் இருந்த இரண்டு பெண் அதிகாரிகள் அரசின் நிர்வாகத்திற்குள் மனிதாயப் பார்வையைக் கொண்டுவர முன்முயற்சிகள் எடுத்தார்கள். அந்த முன் முயற்சிக்கு அப்போதைய அரசும் உதவியாக இருந்தது. பொறுப்பேற்ற அதிகாரிகளில் ஒருவர் இந்தியக் காவல் பணியியல் அதிகாரி கோ. திலகவதி. இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியியல் அதிகாரியாக இருந்த ப.சிவகாமி. அவர்கள் இருவரும் அதிகாரிகள் என்பதோடு இலக்கியவாதிகளாகவும் இருந்ததால் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் இணைத்து ஆலோசனை மற்றும் மாற்றுப்பார்வைகளை வழங்கும் பயிலரங்குகளை மாவட்டந்தோறும் நடத்தினார்கள். நான் தூத்துக்குடி மாவட்டப்பயிலரங்கிலும் நெல்லை மாவட்டப்பயிலரங்கிலும் பயிற்றுநராகக் கலந்துகொண்டேன்.

தனிமனித உரிமைகளும் மரியாதையும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அப்பயிலரங்குகள் மாவட்டம்தோறும் நடத்தப்பட்டன. வருவாய்த்துறை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளை நாடிவரும் அடித்தட்டு மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கு முன்பு அவர்களுக்குத் தரவேண்டிய அடிப்படை மரியாதை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒருநாளும், தங்களின் உயிர், உடைமை ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதுகாப்பின்மைக்காகக் காவல் துறையினரை நாடிவரும் சாதாரண மக்களிடம் காட்டவேண்டிய அடிப்படைப் பண்புகள் எவை என்பதைப் பேச ஒருநாளும் என இருநாள் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. 

குறிப்பாகக் காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் பெண்களுக்கும், காவல் நிலையத்தை நாடிவரும் பெண்களுக்கும் தரவேண்டிய உரிமை, உண்டாக்க வேண்டிய அச்சமின்மை போன்றன விவாதப்படுத்தப்பட்டுப் பங்கேற்புப் பயிலரங்குகளாக அவை நிகழ்ந்தன. அவை போன்ற பயிலரங்குகள் தொடர்நிகழ்வுகளாக நடக்க வேண்டியவை. இப்போதும் திரும்பவும் தொடங்கப்பட வேண்டும். அப்படித் தொடங்கப்பட்டால், டாணாக்காரன் சினிமாவை அப்பயிலரங்கின் முன்னோட்ட நிகழ்வாகத் திரையிட வேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். அப்பயிலரங்கில் பயிற்சிபெற வரும் அரசுத் துறைப் பணியாளர்களுக்கு பங்கேற்கும் மனநிலையை அது உருவாக்குவதோடு, விவாதப்பொருட்களை ஏற்றுத் திரும்பும் மனநிலையையும் உண்டாக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அந்தப் புரிதலின் அடிப்படையில் டாணாக்காரன், சமூகப்பொறுப்புள்ள சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கிறது; நீண்டகாலம் பயன்பாட்டில் இருக்கப்போகிற படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்