நவீனத்துவத்துவ நுழைவுகள் -இரண்டு சிறுகதை வாசிப்புகள்


தனது முடிவுகளுக்கு உறுதியான தீர்வுகளை முன் வைத்துவிட முடியாமல் தவிக்கும் சிக்கல் என்பது அடிப்படையில் ஒரு நவீனத்துவ மனக்குழப்பம். வாசிக்கப்படும் ஒரு பனுவலில் அவ்வகையான குழப்பமொன்றை உருவாக்கும் எழுத்தாளர்களை நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தத் தயங்குவதில்லை. கோட்பாட்டு ரீதியாகவும் இயங்கியலின் புரிதலின்படியும் மரபைக் கடந்து நவீனத்துவத்திற்குள் நுழைந்துவிடும் எழுத்தாளர்கள் அவர்களின் எல்லா எழுத்திலும் இத்தகைய ஊடாட்டங்களையே வாசகர்களுக்குத் தருகிறார்கள். அத்தகைய புரிதல் இல்லாத எழுத்தாளர்கள் அவர்களின் ஒன்றிரண்டு பனுவல்களில் இத்தகைய மனநிலையைக் கொண்ட பாத்திரங்களை/ உணர்ச்சிநிலையை உருவாக்குவார்கள்; திரும்பவும் மரபின் இழுப்புக்குள் நுழையவும் செய்வார்கள்.
 
பெரும் வாசகப்பரப்பிலேயே எழுதிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இம்மாத அந்திமழையில் அகிலாண்ட பாரதி எழுதியுள்ள 'எங்க அண்ணனும் உங்க அண்ணனும்' கதையையும் உயிர்மையில் ஆத்மார்த்தி எழுதியுள்ள 'கத்தரிப்பூ' கதையையும் வாசித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் முந்திய கதைகள் பலவற்றில் நவீனத்துவ மனநிலைக்குள் நுழைய பாத்திர உருவாக்கங்கள் பலவும் வந்துபோய்க் கொண்டேயிருந்தன.
 
கணவர்கள் மீது வாஞ்சையும் அதிருப்தியும் கொண்ட இரண்டு பெண்களின் சந்திப்பு வெளியாகக் கோயில் ஒன்றை உருவாக்கி அவர்களது மனநிலையைத் தனது கதையில் எழுதிக் காட்டுகிறார் அகிலாண்ட பாரதி. அவர்களின் உரையாடலில் வெளிப்படும் எள்ளலும் அங்கதமும் வாசகர்களைக் கடைசிவரை இழுத்துக் கொண்டு வருகின்றன. அப்படியே நீட்டித்து முப்பிடாதி அம்மனிடம் தங்கள் வேண்டுதலை வைத்துவிட்டுப் பிரிந்துபோனதாகக் கதையை முடித்திருக்கலாம். அப்படி அவர் முடித்த சில கதைகளை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். அதனால் அகிலாண்ட பாரதி மரபான கதைகளை எழுதும் எழுத்தாளர் என்று கருதி இதுவரை அவர் கதைகளைக் கவனப்படுத்தியதில்லை.
 
இந்தக் கதை அந்தப் போக்கிலிருந்து விலகலைக் கொண்டதாக இருக்கிறது. மயினியும் மயினியும் பேசி முடித்தபின் முப்பிடாதி அம்மனின் குழப்ப மனநிலையைக் கதைக்குள் கொண்டுவந்ததின் மூலம் அந்த விலகலைச் செய்திருக்கிறது. சமகாலப் பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் கிடைக்கும் - கிடைக்காத சுதந்திரம், அன்பு, கண்டுகொள்ளாமை, போன்றவற்றை விவாதிக்கும் அளவுகூடச் சிந்திக்காமல் இருக்கும் முப்பிடாதி அம்மன் தவிப்பைக் கதையின் இறுதியில் வாசிக்கத் தந்துள்ளார். அத்தோடு கதையை முடித்திருக்கலாம். அந்த முடிவு நல்லதொரு நவீனச் சிறுகதையின் முடிவாக ஆகியிருக்கும். அதற்குப் பின் கிருஷ்ணன் சொன்னதாக கீதையின் சாரத்தை நினைத்துக்கொள்ளும் முப்பிடாதியைக் கொண்டுவந்ததின் மூலம் திரும்பவும் மரபுநிலைக்குள் நுழைந்துகொள்கிறார்.
 
ஆத்மார்த்தியின் கத்தரிப்பூ கதையில் இந்த ஊசலாட்டத்தைச் செய்யவில்லை. அவரது கதை தொடர்ச்சியாகச் சினிமாக் கொட்டகையின் திரைப்
பிம்பங்களையும் பார்வையாளர் இருப்புகளையும் அசைபோடும் பாத்திரத்தின் பாலியல் இச்சையை விவாதமாக்கியுள்ளது. ஒரு திரையரங்கில் திரைப்படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப மாற்றங்களையும் பார்வையாளர் குறைவின் காரணங்களையும் விரிவாகப் பேசும் கதைக்குள் தியேட்டரிலேயே பிறந்த விசு என்ற பாத்திரத்தின் பாலியல் மனநிலைத் தூண்டலைக் கதையின் பிற்பாதியில் வாசிக்கத் தருகிறார்.

 
சினிமாவைப் பார்க்க வருவதை விடவும் திரையரங்க இருட்டும் கூட்டமின்மையும் தரும் வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் காம உணர்வுகளையும் பாலியல் செயல்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் ஆணையும் பெண்ணையும் கவனிக்கத் தொடங்கியதால் ஏற்படும் மனக்குழப்பம் முதலில் ஏக்கமாக வெளிப்படுகிறது. அவ்விருவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்துவிட விரும்பும் ஒன்றாகவும் நினைக்கிறது. அதே நேரம் ஒருவிதக்குற்றவுணர்வாகவும் கருதுகிறது. ஆனால் குற்றவுணர்வாகவே நீட்டிக்கவில்லை என்பதே கதையை நவீனக்கதையாக ஆக்குகிறது.
இந்தக் குழப்ப மனநிலையைக் கதையின் தலைப்பாக 'கத்தரிப்பூ' என்று தலைப்பிடுவதில் படிமமாக்குகிறார் ஆத்மார்த்தி. அப்படிமம் பெயராகவும் வண்ணமாகவும் இருட்டும் வெளிச்சக் கோடு உருவாக்கும் திளைப்பாகவும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கதையை வாசித்து முடிக்கும்போது தீர்மானமான முடிவு எதையும் வாசகர்கள் எடுத்துவிடவும் முடியாது. காமம் அல்லது பாலியல் விருப்பம் என்பதில் தனிமனிதர்களால் முடிவுகள் எடுத்துவிட முடியாது என்பது ஒருவித நவீனத்துவ விளையாட்டு. அதைக் கதை வாசிக்கத்தந்துள்ளது 
.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்