புதிய உயர்கல்வித் துறை அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகி இருக்கிறார். அவரோடு புதிய அமைச்சர்களாக 4 பேர் பதவி ஏற்றுள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வித்துறைக்குப் புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். புதிய அமைச்சர்கள் நால்வரில் கோவி.செழியனும் இரா.இராஜேந்திரனும் மட்டுமே புதிய அமைச்சர் என்ற நிலைக்குரியவர்கள். செந்தில் பாலாஜியும் ஆவடி நாசரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். இடையில் நீக்கப்பட்டு திரும்பவும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

நான் பணியாற்றிய உயர்கல்வித் துறைக்குப் புதிய அமைச்சர் என்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அப்பொறுப்புக்கு வந்துள்ள கோவி. செழியன் பலபட்டங்களைப் பெற்றவராக இருக்கிறார். சட்டத்தில் பட்டப்படிப்பு, சமூகவியல், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்படிப்பு முடித்தபின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். புதிய அமைச்சருக்கு உயர்கல்வித்துறை சவாலான துறையாக இருக்கும் என்பதை உயர்கல்வித்துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற வகையில் நானறிவேன்.

தமிழ்நாட்டு அமைச்சரவையில் கல்வித்துறையென ஒரே துறையாக இருந்ததை மாற்றிப் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறையென இருதுறைகளாகப் பிரித்துத் தனி அமைச்சகங்கள் உருவாக்கிய ஆண்டு 2006. அதைச் செய்தவர் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. மனிதவள உருவாக்கத்தில் உயர்கல்வி கவனம் செலுத்தவேண்டும் என்ற நோக்கம் அதன் பின்னணியில் இருந்தது. ஆனால் அந்த நோக்கத்தை தொழில்நுட்பக்கல்விக்கு உரியதாக மாற்றிவிட்டு அடிப்படைப் பட்டங்களை வழங்கும் அரசுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வு - வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. அதனால் பெருந்தேக்கம் ஏற்பட்டுவிட்டது.

உயர்கல்வித்துறையெனத் தனியாகத் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி, திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அத்துறையின் அமைச்சராக இருந்தவர் முனைவர் க.பொன்முடி. அவர் மாற்றப்பட்டுள்ளார் என்பதை முக்கியமான மாற்றம் என நினைக்கிறேன். அவரது பதவிக் காலத்தில் இந்திய உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்கலைக்கழக மானியக்குழு, இந்தியத் தொழில்நுட்பக்குழு போன்றவற்றில் நடந்த அமைப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் பலவிதமானவை. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாரதூரமான வேறுபாடுகள் நடந்ததால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கல்வித்திட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. நிதித்தேவையைத் தீர்க்க முடியாமல் தவிக்கின்றன. பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள், உள்கட்டமைப்புகள் போன்றனவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றையெல்லாம் தமிழ்நாடு உள்வாங்கி வினையாற்றவில்லை என்பதைக் கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நானும் உணர்ந்துள்ளேன்.

இப்போது பொறுப்பேற்றுள்ள புதிய உயர்கல்வி அமைச்சர் முனைவர் கோவி.செழியனுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது என்பதை மட்டும் காரணம் சொல்லிக் கொண்டிருந்த நிலையைத் திரும்பவும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுவதிலும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை வரையறை செய்வதிலும் அரசின் பங்கு என்ன என்பதை முதன்மையளித்துக் கவனிக்க வேண்டும்.

தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட துறை உயர்கல்வித்துறை. துணைவேந்தர் பதவி பல பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படவில்லை. அதனால் பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற உயர் பதவிகள் பேராசிரியர்கள் வசம் கூடுதல் பொறுப்பில் இருக்கின்றன. இன்றைய நிலையில் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு துறையிலும் இருக்கவேண்டிய ஆசிரியப் பணியிடங்களில் பாதிக்குப் பாதி காலியாகவே உள்ளன. நான் பணியாற்றிய துறையில் இருக்கவேண்டிய பணியிடங்கள் ஏழு. அனுமதிக்கப்பட்டவை. ஐந்து. இப்போது இருப்பவர்கள் இரண்டுபேர். இருவரும் உதவிப்பேராசிரியர்கள். காலியாக உள்ள இடங்கள் பேராசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர் பதவிகள். உதவிப்பேராசிரியர்கள் இரண்டு ஆய்வாளர்களை மட்டுமே எடுக்க முடியும். அதனால் துறையின் ஆய்வாளர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது ஒரு உதாரணம். 

இதுதான் எல்லா நிலையிலும் இருக்கிறது. எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் உயராய்வு நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் இதே நிலைதான். பெரும்பாலான இடங்களைக் கௌரவப் பேராசிரியர்கள் என்ற பெயரில் நிரப்பி வைத்திருக்கிறது உயர்கல்வித்துறை. அது குறைவான சம்பளம் கொடுப்பதற்காக ஜெ.ஜெயலலிதாவின் அ இ அதிமுக அரசு ஏற்படுத்திய தற்காலிக ஏற்பாடு. தற்காலிக ஏற்பாடுகள் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் 20 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. பல்கலைக்கழகக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளாகப் பெயர் மாறியிருக்கின்றன. ஆனால் ஆசிரியர் நிலையிலோ, கல்லூரிகளின் உள்கட்டமைப்பிலோ மாற்றங்கள் நிகழவில்லை.

முனைவர் கோவி .செழியனுக்குத் தரப்பட்டுள்ள இப்பொறுப்பை வழக்கத்திற்கு மாறான ஒன்று என ஊடகங்கள் சொல்கின்றன. பட்டியலினத்தவர்களுக்குப் பெரும்பாலும் சவால்கள் நிரம்பிய துறைகள் வழங்கப்படுவதில்லை என்பது நடைமுறையில் இருந்து வந்தது. அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாற்றத்தின் அடையாளம் இவர் என்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. அரசியல்வாதிகளும் அதனைக் குறிப்பிட்டு வரவேற்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பார்ப்பதே சரியானதல்ல என்றே சொல்வேன். கட்சி நிலையிலும் தனிநபர் முயற்சியிலும் பெறவேண்டிய அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
சவால்களை எதிர்கொண்டு உயர்கல்வித் துறையை இப்போதுள்ள நிலையிலிருந்து மேம்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்

பெரிய கார்த்தியல் என்னும் திருக்கார்த்திகை