பெண்ணிய வாசிப்புகள் - ஒரு மதிப்புரை


தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு பங்களித்துள்ள 26 பெண் எழுத்தாளர்களின் கதைகளை இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தி விவாதிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கும் பெண் எழுத்தாளர்களின் கதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.
26 பெண் எழுத்தாளர்கள் கதைகளின் வழியாகப் பேசும் பெண்ணியம் குறித்து திறனாய்வு செய்கிறார். தமிழில் இதற்கு முன்பு இந்தத் தன்மையில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு பெண் எழுத்தாளரின் சிறுகதை, அதன் மையப்பொருள், நூலாசிரியரின் கருத்து, அதில் வரும் முக்கிய உரையாடல், பின் கதை குறித்த சரியான விமர்சனம் என அழகாக எல்லா கட்டுரைகளையும் ஒரு சட்டகத்திற்குள் பொருத்தி விடுகிறார்.
இந்நூலில் உள்ள ஒருசில எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். பல புதிய எழுத்தாளர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

அவர்களின் பலம் மற்றும் போதாமைகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்."ஆண்களே பெண்சார் பிரச்சினைகளை எழுதியுள்ளனர். அப்புறம் ஏன் 'பெண்எழுத்து' என தனியாக பிரிக்க வேண்டும்?" என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
"கண்ணுக்குத் தெரிந்த பிரச்சினைகளை ஒரு ஆண் பெண்ணாக மாறி பொதுநிலை அனுபவங்களை கொண்டு எழுத முடிந்தாலும், பெண்களுக்குரிய தனித்த அனுபவங்களை ஆண்களைவிடவும் பெண்களே சிறப்பாகவும் நம்பும்படியாகவும் சொல்ல முடியும். இதுவே பெண்ணெழுத்தின் தேவையை உருவாக்குகிறது" என தெளிவுப்படுத்துகிறார்.

தாராளவாத பெண்ணியம், புரட்சிகரப் பெண்ணியம், சமத்துவப் பெண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு சிறுகதையையும் அணுகுகிறார்.
ஒவ்வொரு சிறுகதையும் எவ்வகை பெண்ணியப் பார்வைக்குட்படுகின்றன என்பதை கதை குறித்த அறிமுகத்திலேயே சொல்கிறார்.இந்நூலில் என்னை ஈர்த்த விசயம் என்னவெனில், ஆண்டுகள் நகர நகர சிறுகதைகளில் பெண்ணியம் குறித்த பெண் எழுத்தாளர்களின் பார்வையும் மாறிக்கொண்டே வருவதை சுட்டிக்காட்டியிருப்பதுதான். பெண் எழுதுவதாலே அது பெண்ணியம் குறித்து பேசுகிறது எனக் கருத முடியாது அல்லவா?
உதாரணத்திற்கு " சிறுகதை வடிவச்செம்மையும், தூக்கலாக எதையும் முன் வைக்காமல் உரையாடல்கள் வழி நடப்பதைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்" என கு.ப. சேது அம்மாள் பற்றி குறிப்பிடுகிறார்.அதற்கேற்ப அவரின் "குலவதி" சிறுகதையில், நகரத்தில் வளர்ந்த பெண் திருமணத்திற்குப்பின் மாட்டுப்பெண்ணாக அக்குடும்பத்தின் குலவதியாக மாறுவதை எழுதி, தன் தோழியையும் குலவதியாக மாற்ற முயற்சிப்பதோடு கதை முடிகிறது.

தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.ஒருவர் ஆர். சூடாமணி. இவரின் 'அந்நியர்கள்' கதை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருந்தேன். அப்போது கதையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கில்லை. இப்போது மீண்டும் வாசிக்கும் போது கதை முன்வைக்கும் நுட்பமான உளவியல் பார்வை, எனக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அக்கா வீட்டிற்கு தங்கை வருகிறார்.

திருமணத்திற்கு முன்பு பல விசயங்களில் ஒரே மாதிரி சிந்தித்தவர்கள், மனைவிகளாக மாறியபின் அவர்களின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்களை உரையாடல் வழி முன்வைக்கிறார் சூடாமணி. "ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்?" என விவாதத்திற்கான தொடக்கப் புள்ளியைக் கேள்வியாக்கி கதையை முடிக்கிறார் சூடாமணி. 
அடுத்து எழுத்தாளர் பாமா.

"தொடர்ச்சியான உரையாடல் வழியாக பாத்திரங்களைப் பேச அனுமதித்துவிட்டு ஒன்றிரண்டு சொற்களின் மூலம் கதைசொல்லியின் இருப்பைக் காட்டும் எளிய உத்தியைக் கைகொள்கிறார்" எனக் குறிப்பிடுகிறார்.குடும்பத்தை விசாரணைக்கு உட்படுத்துவது பெண்ணெழுத்துக்களின் முக்கிய பணி. பாமா தன் "தாலியே வேலி" கதையில், கொடுமைப்படுத்தும் கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவி பற்றி பேசுகிறார்.கணவன் நோய்வாய்ப்பட்டதும் மனைவி ஓடிச்சென்று பணிவிடை செய்கிறார். கணவன் இறந்துவிட்டால் 'முண்டச்சி' எனச் சொல்லி ஊர்சனம் நல்ல விசயங்களில் ஒதுக்கவதை விரும்பவில்லை என மனைவி காரணம் சொல்வதோடு கதை முடிகிறது.பெண்ணியம் பேசும் எழுத்துகளில் மேல்தட்டு வர்க்க /சாதி பெண்ணியம், அடித்தட்டு வர்க்க/சாதி பெண்ணியம் என்றுகூட பிரிக்கலாம் எனத் தோன்றுகிறது.பாமா பேசும் கதைகளில் குடும்பம், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள், தெரு, ஊர் என ஒட்டுமொத்த சமூகமும் பெண்களைக் கீழே இழுத்து தள்ளுவதைத் துல்லியமாக பதிவு செய்திருப்பார்.

இத்தொகுதிப்பிலே கூட எல்லா கதைகளும் குடும்பத்தில் இருக்கும் இரண்டு பெண்கள் அல்லது ஆண்-பெண் என உரையாடல் நடக்கிறது. சமூகம் பெண்களின் முடிவின் மேல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசப்படவில்லை. அவ்வகையில் எழுத்தாளர் பாமா தனித்துவமாக தெரிகிறார்.பெண் விடுதலை பேசிய மார்க்சிய தத்துவத்திலும் போதாமை உள்ளதை பெண்ணியவாதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நட்பாக பழகும்போது கணவன்- மனைவி உறவில் சமத்துவம் நிலவும். அப்படியான நட்பில் இருக்கும் ஒரு பெண்ணை மணம் செய்ய ஆண்கள் விரும்புவார்களா? இக்கேள்வியை முன்வைத்து பெண்கள்கூட அதிகம் எழுதவில்லை எனக் குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் புதிய மாதவியின் "வட்டமும் சதுரங்களும்" கதை அப்படியான விதிவிலக்கு.ஆதிக்கமும் சடங்குகளும் நிரம்பிய திருமண பந்தம் இல்லாமல் சேர்ந்து வாழ விரும்புகிறாள் ஜானு. அதுவரை ஒரே வீட்டில் படுக்கை முதல் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் ஜானுவை நிராகரிக்கிறான் மார்க்சியம் பேசும் ஜீவா.அவனது போலித்தனத்தின் மீது கேள்வி எழுப்பாமல் ஒதுங்க விரும்புவதும், குடும்பம் என்ற ஆண் ஆதிக்கமும், சுரண்டலும் கொண்ட அமைப்பை முன்மொழியும் ஜீவாவின் பொய்மைத்தனம் மீது கோபமும் எரிச்சலும் ஜானுவுக்கு வருகிறது. பெரும்பாலும் ஆண்கள் இத்தகைய திருமணம் சார்ந்த விசயங்களை குடும்பத்தின் முடிவுக்கே விடுவதும் ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் ஒருவகை தந்திரமே என்கிறார் நூலாசிரியர். இது மிக முக்கியமான கருதுகோள். 26 பெண் எழுத்தாளர்களில், புதிய மாதவியின் கதை ஆதிக்க மனோபாவத்துடன் கொள்கைகள் பேசித் திரியும் போலியான ஆண்களின் உளவியலை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறது. எழுத்தாளர் புதிய மாதவியின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

"பேய்கள் பற்றிய கதைகளை ஆண், பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் பெண் விழிப்புணர்வையும், விடுதலையையும் முன்வைக்கும் பெண் எழுத்தானது பேய்நம்பிக்கையின் போலித்தனத்தையும் எழுதிப் பார்க்கும்" என்கிறார்.அதற்கு உதாரணமாக இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் லறீனாவின் "புளியமரத்து பேய்கள்" கதை மனதை ரணமாக்கியது. பதின்பருவ பெண்ணின் உடல் மீது ஆண்களின் தீண்டலை எதிர்கொள்ளும் வழியாக பேயின் பயத்தைப் பயன்படுத்துகிறார். வித்தியாசமான கதை.

இந்த நூலை யாரெல்லாம் வாசிக்க வேண்டும் என்று யோசிக்கிறேன். புதியதாக எழுத வருபவர்கள், ஏற்கனவே எழுத்து அனுபவம் இருப்பவர்கள், வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகியோருக்கான நூல் இது.
சிறுகதைகளை விலகி நின்று எப்படி பார்க்க வேண்டும்? எந்தப் பார்வைக்குட்படுத்தி பார்க்க வேண்டும்? அதன் போதாமை என்ன? ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களின் பலம், புனைவு எழுதும் உத்தி ஆகியவற்றை அறிந்து கொள்வதில் இந்நூல் முக்கியமான ஆவணமாக இருக்கும். பெண்ணிய எழுத்துக்கள் குறித்த ஆய்வு நூல்கள் தமிழில் அதிகம் வெளிவர இந்நூல் தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

- ச. முத்துக்குமாரி./ அரசுப்பள்ளி ஆசிரியர். சிறார் எழுத்தாளர்.

Muthukumari.15@gmail.com


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி