மனுஷ்யபுத்திரனின் கவிதைச் சம்பவங்கள்
நாடகங்களைக் கவிதை வடிவில் எழுதிய சேக்ஸ்பியர், கவிதை வடிவமே உணர்ச்சிகளுக்கான வடிவம் என்பதை உடன்பாட்டுடன் சொல்கிறார். Poetry is the spontaneous overflow of powerful feelings/கவிதை வடிவம் தன்னுணர்வற்ற நிலையில் தோன்றிப் பெருகும் வலுவான உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் சொன்ன வரையறை.
உள்ளத்து உணர்ச்சிகளை உடலே வெளிப்படுத்தும் மௌனமொழி- மெய்ப்பாடு என்கிறது தொல்காப்பியம். கவிதையில் இடம்பெறும் பாத்திரங்களின் உடல்மொழி காட்டுவதைச் சொற்களால் எழுதவேண்டும் எனச்சொல்கிறார் தொல்காப்பியர். மெய்ப்பாடுகள் எட்டும் அகம், புறமென்ற இருநிலைக் கவிதைகளுக்கும் பொதுவானது என்றபோதிலும் மிகுதியும் அகக்கவிதைகளின் சொற்களே மெய்ப்பாடுகளுக்கான வாயில்களாக இருக்கின்றன. அகக்கவிதைகள் ஏழு நிலைகள் - புணர்ச்சி, இருத்தல், இரங்கல், ஊடல், பிரிவு ஒருதலையான காமக்கிளர்ச்சி, பொருந்தா ஈர்ப்பு என ஏழுநிலைகளில் விரிக்கப்பட்டாலும் கவனித்துப் பார்த்தால் இரண்டு நிலைகள்தான் அவற்றில் இருக்கின்றன. ஒரு நிலை புணர்தல் இன்னொரு நிலை பிரிதல்.
புணர்தல் என்பது சேர்தல், இணைவு, அன்பு, மகிழ்ச்சி, உவகை, கொண்டாட்டம்.
பிரிதல் என்பது விலகல், தடை, நீங்குதல், கையறுநிலை ஏக்கம், ஊசலாட்டம், வலி, துயரம், தனிமையின் குரூரம்.
இவ்விரு நிலைகள் பலவிதமான சம்பவங்களைக் கொண்டவை. இச்சம்பவங்களை எழுதிப்பார்க்கும் நிகழ்காலக் கவி, ஒன்றைக் காதலின் சம்பவங்களாகவும், இன்னொன்றைப் பிரிவின் சம்பவங்களாகவும் வகைப்படுத்திக் காட்டுவது இயல்பானது. இது தமிழ்ச் செவ்வியல் கவிதை மரபின் தொடர்ச்சி.
தமிழ் மரபு சஹ்ருதயர்கள் பற்றிப் பேசும் சம்ஸ்க்ருத மரபாகவும் இருக்கிறது; இன்பியல், துன்பியல் எனப் பிரித்துப் பேசும் ஐரோப்பிய மரபாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் கடவுளோடு இணைத்துப் பேசும் சம்ஸ்க்ருத மரபு இன்னொரு சஹிருதய மனநிலையைக் கவிதையியலின் உச்சம் என்கிறது. அரிஸ்டாடில் இன்பியல், துன்பியலைப் பேசினாலும் துன்பியலே எழுதுவதற்கான கடல் என விரிக்கிறார். தமிழின் அகக்கவிதைக்குள் பாலத்திணைக்கவிதைகளே - பிரிவின் கவிதைகளே செம்பாதிக்கும் மேல். மற்றெல்லாம் சேர்ந்து பாதிக்கும் குறைவுதான்.
உலக, இந்திய, தமிழ் மரபை உள்வாங்கிய தமிழின் பெருங்கவி மனுஷ்யபுத்திரன். நம்காலத்தில் காதலின் சம்பவங்களுக்குள்- பிரிவின் சம்பவங்களுக்குள் ஒரு பெண் தன்னிலையும் ஒரு ஆண் தன்னிலையும் என்னென்ன அலைவுகளில் திரிகின்றன என எழுதிக் கொண்டே இருக்கிறார். அகச்சம்பவங்களை - புணர்தல் நிமித்தமான காதலின் நூறு சம்பவங்களாக ஒரு சிறு தொகைநூலில் நிறுத்தியுள்ளார். இன்னொன்றில் பிரிவின் 100 சம்பவங்களை விவரிக்கின்றார்.
அவரது பெருந்தொகுதிகளில் எழுதிய பல ஆயிரம் கவிதைகள் உருவாக்கிய சம்பவங்களைத் தமிழ் வாசகர்கள் வாசித்துத் தங்கள் வாழ்வின் சம்பவங்களோடு இணைத்துப் பார்த்துத் தங்களையே எழுதிக்காட்டுகிறார் என மகிழ்ச்சி அடைகிறார்கள். துயரப்படுகிறார்கள். தங்களுக்கான இளைப்பாறுதலைத் தரும் கவி எனக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் அலைதலின் போது கைப்பைக்குள் வைத்து எடுத்துச் செல்ல கையடக்கக் வேதப்புத்தகங்கள் கிடைப்பதுபோல இவ்விரு காதல் வேதச் சிறுதொகுதிகளையும் உருவாக்கித் தந்துள்ளார். ஒப்பனைப் பொருட்களின் வரிசைக்குள் இந்தச் சிறுதொகுதிகளும் இடம்பிடிக்கப்போகின்றன.
இங்கே இரண்டு கவிதைகள் வாசிக்கத் தருகிறேன். ஒன்று காதலின் சம்பவங்களிலிருந்து; இன்னொன்று பிரிவின் சம்பவங்களிலிருந்து.
காதலின் சம்பவங்கள்-85
----------------------------------
ஒரு காதலுக்குள் வருகிறோம்
ஆனால் அது ஒரு மணல் பரப்பிற்கு
நீரூற்றுவதுபோல
நம்மை ஏன் இவ்வளவு உறிஞ்சுகிறது
என்று குழம்பிப் போகிறேன்.
பிரிவின் சம்பவங்கள் -20
--------------------------------------
கடற்கரையில்
அலையின் முன்னால் போய் நின்றேன்
கடல் சொன்னது
"பிரிவின் முதல் நாள்தான்
மிகவும் அபாயகரமானது
அதைக்கடந்துவிட்டால்
அப்புறம் நீ சாகாமல்
நெடுநாள் வாழ்ந்திருப்பாய்.
=========================
வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய நான் இந்தக் கவிதைகளை வாசித்து விட்டேன். எனக்குப் பின்னால் பேசவந்த கவின்மலரும், லிபி ஆரண்யாவும் இதே கவிதைகளை வாசிக்க நினைத்து நான் முந்திக்கொண்டேன் என்றார்கள். ஒரு தொகுப்பில் நல்ல கவிதைகளைக் கண்டு சொல்வதுதான் கவிதை வாசகர்களின் வேலையாகவும் இருக்கிறது.
கருத்துகள்