இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மூன்று குறிப்புகள்.


இலங்கை ஜனாதிபதி தேர்தல்- பத்து நாட்களுக்கு முன்(12/09/24) 


தேர்தல் தேதி /21/09/724

ஈழப்போராட்டத்தின் வழியாகவே இலங்கையைக் கவனித்த பலருக்கும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நானும் இலங்கைத் தமிழ்ப் புனைவு எழுத்துகளை வாசித்த அளவுக்கு இலங்கை அரசியலின் உள்ளோட்டங்களை அறிந்துகொள்ளுதலில் ஆர்வம் காட்டியதில்லை. காட்டிய ஆர்வம் கூடப் பூகோள அரசியலில் சின்னஞ்சிறிய நாடொன்றை வல்லாதிக்கம் செய்ய விரும்பும் நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்ற கோணத்தில் தான் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்தப் புரிதலில், பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் செய்யும் குழப்பங்களையும் உதவிகளையும் கவனித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் எனது இலங்கைப் பயணங்களின்போது நேரடியாகவும் பார்த்து அங்குள்ள நண்பர்களோடு விவாதித்து அறிந்து கொண்டுள்ளேன்.

இதன் பின்னணியில் இப்போது இலங்கையில் நடக்கப்போகும் தேர்தல் குறித்து எழுதப்படும் பதிவுகளையும் சில பத்திரிகைகளின் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை இனவாதம், பௌத்த அடிப்படைவாதம் என்ற இரண்டையும் தாண்டிய மக்களாட்சி முறையைக் கொண்டுவரும் கட்சியாக எந்தக் கட்சியும் அங்கு இல்லை என்பது உணரப்பட்டுள்ளது.சிங்களப் பெரும்பான்மையின் வாக்குகளே வெற்றிக்கான ஆதாரம் என்ற நிலையில் இலங்கையின் தேசிய கட்சிகள் ஒவ்வொன்றும் சிங்களப் பேரினவாதத்தைத் தள்ளிவைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் கொண்டனவாக இல்லை. அதே நேரம் மொழி அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களின் ஆதரவைப் பெறுவதின் வாயிலாகவே ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவிடும் தந்திரத்தைக் கையாண்டு ஆதரவு பெற்று அதிபரானவர்கள், பின்னர் தமிழர்களுக்கு அநீதி இழைத்த வரலாறுதான் ஈழத்தமிழர்களின் துயரமான வரலாறு.

இந்தத்தேர்தலுக்குப் பின் அப்படியொரு துயரங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் உலக அரசியலின் பின்னணியில் இலங்கையின் அரசியலைப் பேசுகிறார்கள் போட்டியாளர்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழ்ப் பரப்பில் மலையகத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் தனித்தனியாகவே ஆதரவுகளைக் காட்டுகிறார்கள். ஈழத்தமிழர்களாக நினைக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குள்ளும் ஆதரவு மனநிலை ஒன்றுபோல இல்லை.

வெற்றிவாய்ப்பை அதிகம் கொண்டவராகச் சொல்லப்படும் அனுரகுமார திசநாயகே இதுவரையில் இலங்கை பார்க்காத அரசு ஒன்றைத் தருவார் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணம் அவரது மக்கள் விடுதலை முன்னணியின் இடதுசாரிச் சார்புநிலை. அதே நேரம் அவரது கட்சியின் முன் அடையாளம் ஜே.வி.பி. என அழைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அமைப்பு. ஏற்கெனவே ஆயுதம் தாங்கிய அமைப்புகளின் கோரச்செயல்பாடுகளைப் பார்த்திருக்கும் தமிழர்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்படும் வாய்ப்பும் குறைவுதான். என்ற போதிலும் எல்லா ஜனநாயக நாடுகளிலும் ' இந்தமுறை மாற்றிப் பார்க்கலாம்' என்று பெருந்திரள் எண்ணங்கள் ஏற்படுவதுபோல இலங்கையிலும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

**********
22/09/24 / வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்தபோது

ஒரு நாட்டு மக்களின் விருப்பங்களை, இன்னொரு நாட்டு அரசியல்வாதிகளால் - அதிகாரத்தால் மடைமாற்றம் செய்துவிட முடியாது என்பதை இலங்கையின் தேர்தல் முடிவு காட்டுகிறது. வாக்களிப்பு வழி மாற்றம் என்பதை இலங்கை மக்கள் இப்போது உணர்த்தியிருக்கிறார்கள். இந்த மாற்றம் இலங்கையின் அரசியல், சமூகப் பொருளாதாரப் போக்குகளில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக அதிகாரம் செலுத்தும் நபர்கள் மீது ஏற்படும் கோபத்தின் வடிகாலாக மக்களாட்சியின் தேர்தல் முறை இருக்கிறது என்பது திரும்பவும் சொல்லப்பட்டுள்ளது.
சமூக ஊடகப்பதிவுகள் வழியாகவும், பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள் வழியாகவும் அநுரகுமார திசநாயகே முன்னணியில் இருக்கிறார் என்பதை ஊகித்துச் சில நாட்களில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதனை இலங்கையின் தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கின்றன. இந்த ஆட்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களால் இலங்கையென்னும் அழகிய தீவும் அதன் உழைக்கும் மக்களும் அடையப்போகும் மலர்ச்சியை இன்னொரு முறை குறுக்கும் நெடுக்குமாகப் பார்க்க வேண்டும்.

**********
இலங்கை-தேர்தல் முடிவுகள் தெரிந்தபின் - 23/09/24

இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயகவின் வெற்றியை ஒட்டு மொத்த இலங்கையின் மக்கள் நலவாழ்வோடும் வளர்ச்சியோடும் இணைத்துப் புரிந்து கொள்ளவேண்டும். அதனைக் கைவிட்டுவிட்டு வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ள முயல்வது ஒருபக்கப்பார்வையாக முடிந்துவிடும்.
இந்தியாவிலிருந்து எழுதுபவர்களிடம் இந்திய தேசியப்பார்வையும் இந்திய இடதுசாரிகளின் பார்வையும் தமிழ் ஈழப் போராட்டப் பார்வையும் காணப்படுகிறது. இவையெல்லாம் வெளியாளின் பார்வைகளே.
 
இந்திய தேசியப்பார்வை என்பது இந்திய முதலாளிகளுக்கு அந்நாட்டில் கிடைத்துள்ள தொழில்வாய்ப்புகளின் நிலை என்னவாகும் என்பதை மையமிட்ட பார்வையாகக் குறுகிவிடும். சோசலிச நாடுகளாக அறியப்படும் நாடுகளோடு இலங்கையின் புதிய அரசு ஏற்படுத்திக்கொள்ளப்போகும் உறவுகளை மையமிட்ட ஆலோசனைகளாகவே இருக்கப் போகின்றன இடதுசாரிகளின் பார்வைகள். தமிழ் ஈழவிடுதலை நோக்கிலேயே இலங்கை அரசியலைப் பார்த்துப் பழகிவிட்ட திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசு எதனைத் தரும் என்ற நோக்கில் விவாதிக்கிறார்கள்.
 
இலங்கையும் இந்தியாவைப் போலவே மதச்சிறுபான்மை, மொழிச் சிறுபான்மை, வர்க்க வேறுபாடுகள் கொண்ட ஒரு சிறுநாடு. தமிழ்ச் சிறுபான்மைக்குள்ளேயே ஈழத்தமிழர்கள், மலையகத்தமிழர்கள், தமிழ்பேசும் இசுலாமியர்கள் என இணைந்து நிற்காத வேறுபாடுகள் உண்டு. உலக வணிக வரைபடத்தில் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் இருக்கும் ஒரு தீவு அது. அத்தீவின் அரசு மீது உலக வணிகத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்பும் பெரும்பரப்பு நாடுகளும் பெருமுதலாளித்துவ நாடுகளும் கண்காணிப்பைச் செய்யவே விரும்புவார்கள். 

நீண்ட காலப் போர்ப் பொருளாதாரத்தால் சிதைந்து கிடைக்கும் அச்சிறு நாட்டை மாற்றிக் கட்டமைக்கும் பொறுப்புள்ள ஒரு தலைவராக அநுரகுமார திசநாயகவுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. அவரது கட்சிக்கும் முன் இயக்கத்திற்கும் இருந்த லட்சியவாத இடது சாரி எண்ணங்களையும் நிலைபாடுகளையும் அப்படியே பின்பற்றி ஆட்சி செய்ய முடியாது என்பதைக் கடந்தகாலம் உணர்த்தியிருக்கிறது. 

முதலில் அவர் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் தன்னை அந்நாட்டின் தலைவராக முன்னிறுத்த வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். உள்நாட்டு அரசியலைத் தாண்டி உலக அரசியலின் பக்கம் எந்தவிதமான சார்புகளையும் எடுத்துவிட முடியாது. அவரது தேர்தல் கால உரைகள் அதனை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக அவர் மாறவேண்டும்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

நவீனத்துவமும் பாரதியும்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்