தமிழில் எடுக்கப்பட்ட வலைத்தொடர்கள்

காட்சி ஊடகச்செயலிகளின் தேவைக்காகத் தயாரிக்கப்படும் வலைத் தொடர்களில் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. வெளிப்பாட்டு மொழியின் அடையாளத்தைத் துறத்தல் என்பது முதல் பொதுத்தன்மை. வணிக நிறுவனங்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பது இரண்டாவது தன்மை. இத்தன்மை மாற்றத்தில் காட்சிச் செயலிகளின் இலக்குப்பார்வையாளர்கள் பற்றிய கணக்கீடுகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் சில குறிப்பிட்ட வகையான வலைத்தொடர்களே முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைத் திகில்/மர்மம், அமானுஷ்யம்/இறையருள் நம்பிக்கை, குற்றச்செயல்/துப்பறியும் தொடர் என்பதான வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

வயதுக்கு வந்த பார்வையாளர்களை இலக்குப்பார்வையாளர்களாக நினைக்கும் நெட்பிளிக்ஸ் செயலி, காமஞ்சார்ந்த உளவியல் சிக்கல்களை மையமிட்ட தொடர்கள் அதிகமாகத் தயாரித்து ஒளிபரப்பு செய்கின்றது. உலக அளவுப்பார்வையாளர்கள் என்பது அதன் இலக்கு, ஆனால் அமேசான் பிரைம் குற்றப்பின்னணிச் சாகசக் கதைகளுக்கும் துப்பறியும் தொடர்களுக்கும் முதன்மையளித்துத் தயாரிக்கின்றது. உலகப்பார்வையாளர்கள் என்ற இலக்கைத் தாண்டி இந்தியா போன்ற நாடுகளுக்கான பார்வையாளர்களை இலக்காக நினைக்கும் அமேசான் பிரைம் காமத்தையும் உளவியலையும் கலந்த தொடர்களைவிடவும் குற்றவாளிகளின் சாகசங்கள் மற்றும் மர்மங்களை விலக்கிக் காட்டும் துப்பறியும் தொடர்களில் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம். அதிலிருந்து ஏற்படும் விலகல்கள் மாநில எல்லைகள், உள்ளூர் எல்லைகள் என இலக்குப் பார்வையாளர்களைத் தீர்மானித்துக்கொள்கின்றன.

வலைத்தொடர்களின் பார்வையாளர்களாக.


எல்லாச் சினிமாக்களையும் ஒன்றுபோல் பார்க்கக்கூடாது என்ற தெளிவு இருக்க வேண்டும். குறிப்பாக மர்மம் அல்லது அமானுஷ்யம் சார்ந்த சினிமாக்களையும், தொடர்களையும் பார்ப்பதற்கு முன்பு அவை பற்றி வரும் விமரிசனங்களைப் படிக்காமல் இருப்பது நல்லது. இப்போது இவ்வகைக் கதைகளை நெடும் தொடராக எடுப்பவர்கள் சிறிய அறிமுகத்தைத் தருகிறார்கள். அவற்றைப் படிப்பதைத் தவிர்த்துவிட்டே பார்ப்பது வழக்கம். படித்துவிட்டுப் பார்த்தால் இவ்வகைப் படங்கள் தரும் அனுபவங்கள் நமக்குக் கிடைக்காது. அதனாலேயே இடையிலேயே விலகிப் போவது நடந்துவிடும். ஒரு துப்பறியும் தொடரில் துப்பறிவதுதான் நடக்கும் என்றாலும் எவ்வகையான குற்றம், அதன் முடிச்சுகளை எப்படித் திறந்து காட்டுவது என்பதை நிகழ்வுகள் ஆக்குவதின் வழியாகக் காட்சிகள் விவரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பதுதான் பார்வையாள அனுபவம். இதே நிலையை தெய்வ நம்பிக்கை, பேய்களின் நடமாட்டம் போன்ற அமானுஷ்ய/மர்ம வகையினப் படங்களுக்கும் தொடர்களுக்கும் பொருத்திக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான காட்சிகளில் அறிவார்ந்த மனநிலை அல்லது பகுத்தறிவு மனநிலை வெளிப்படாது. ஆனால் அதுகுறித்துக் கேள்வி எழுப்புவதற்கு ஏதாவது ஒரு பாத்திரத்தை இயக்குநர்கள் உருவாக்கிப் பார்வையாளர்களின் அறிவுநிலையோடு உரசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இல்லையென்றாலும், முடிவில் அறிவார்ந்த மனநிலையை நிலை நாட்டும் நோக்கத்துடன் விவாதங்களை எழுப்பியே நிறைவு செய்வார்கள். இவ்வகைப்படங்களில் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும்போது நடைமுறையில் இருக்கும் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தும் போக்கும் வெளிப்படுவதையும் முக்கியமான பாணியாக இயக்குநர்கள் பின்பற்றுவார்கள். இங்கே நான் பார்த்த வலைத்தொடர்கள் பற்றிய எனது பார்வைக்கோணங்களை - அவ்வப்போது எழுதியவை - தொகுத்துத் தந்துள்ளேன்.

உறவுச்சிக்கல்களைக் கடத்தல்

கே.பாலச்சந்தரின் கோட்டோவியத்தோடு தொடங்கும் சிகரம் சினிமாஸ் தயாரிப்பாக இப்படியொரு வலைத் தொடர் அண்மையில் வந்துள்ளது. அவரது பெயரை மட்டுமில்லாமல் அவரது புகழ்பெற்ற சினிமா ஒன்றைத் தொடராக மறு ஆக்கம் செய்துள்ளார்கள் என்பதை அபூர்வராகங்கள் சினிமாவை நினைவில் வைத்திருப்பவர்களுக்குப் புரியும்.
எனது கல்லூரிப் படிப்பு தொடங்கிய காலத்தில் வந்த அபூர்வராகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக நினைவில் இருக்கிறது. முதல் காரணம் படத்தின் நாயகி ஶ்ரீவித்யா. வாணி ஜெயராம் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்ற பாடலுக்கு அவரது கண்களும் வதனமும் அசைந்த நளினமும் இப்போதும் மறக்க முடியாதவை. முழுப் பாடலுக்கும் வீணையோடு அமர்ந்தபடியே உடல் மொழியால் மெருகூட்டிய நடிகை அவர். அந்தப்பாடல் மட்டுமல்லாமல், அதிசயராகம், ஆனந்தராகம், அபூர்வராகம் போன்ற பாடலும் நினைவில் இருக்கும் பாடல். கண்ணதாசனின் அந்தப்பாடல் வரிகளுக்காகவும் நினைவில் இருக்கும் படம். கமல்ஹாசன்-ஶ்ரீவித்யா, மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதா ஆகிய நால்வரும் ஏற்ற பாத்திரங்கள் வழியாகச் சிக்கலான உறவு முறைக்குள் ஏற்படும் காதல்/ காம ஈர்ப்பைக் கதைப்பின்னலாக்கி எடுக்கப்பட்ட படம். ரஜினிகாந்த் வில்லனாக அறிமுகமான படமும் கூட.
மகனால் (கமல்ஹாசன்) விரும்பப்படும் பெண் (ஶ்ரீவித்யா). அவரின் மகள் (ஜெயசுதா). அவரால் நேசிக்கப்படுபவர் கமலின் அப்பா (மேஜர் சுந்தரராஜன்) சிக்கலான கதை முடிச்சை அபூர்வராகங்கள் என்று இயக்கியிருந்தார் கே.பாலச்சந்தர். கறுப்பு - வெள்ளைக் காலத்தில் வந்த இந்தப்படம் பலவிதமான விவாதங்களையும் எதிர்வினைகளையும் சந்தித்தது.
அபூர்வ ராகங்களின் கதைப்பின்னலைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் இயக்குநர். முன்னாள் காதலியின் மகளைத் தனது மகனுக்குக் கட்டிவைத்து காதலியின் மகளை மருமகளாக ஆக்கிவிடுவதற்குத் தயங்கும் மாமனார் பாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைத்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தின் வழியாகக் கொஞ்சம் நகைச்சுவையும் முறிந்து போன காதலின் நினைவுகளின் ஏக்கமும் எனக் காட்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் நினைத்துக்கொள்ளும் -திரும்பச் சொல்லும், திருப்புக்காட்சிகளாகச் சொல்லும் நிகழ்வுகளைக் கொண்டதாகத் தொடரை உருவாக்கியிருக்கிறார்கள். தொடரை இயக்கியவராகக் மறைந்த தாமிராவின் பெயர் வருகின்றது. அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடரின் காட்சிகள் புத்தம் புதிதாக இருக்கின்றன.
சத்யராஜின் முன்னாள் காதலியாகக் கடலோரக் கவிதையில் நடித்த ரேகாவும் மனைவியாகச் சீதாவும் நடிக்கிறார்கள். 25 ஆண்டுகளாகத் தன்னைத் தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத கணவர் என நினைத்துக்கொண்டிருக்கும் சீதாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாகத் தருகிறார் ஆகச்சிறந்த கணவர் சத்யராஜ். ரேகாவின் காதலைத் தெரிந்து கொண்டு ஏற்றுக்கொண்ட கணவராக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இவர்களின் பிள்ளைகளாக - அடுத்த தலைமுறைப் பாத்திரங்களில் புதுமுகங்கள் சரியாகவே நடிக்கிறார்கள்.
முந்திய தலைமுறைக்குள் உறவுமுறைச் சிக்கல்கள் ஒருவிதக் குற்றவுணர்வுடன் இருக்கிறது. இப்போதுள்ள தலைமுறைக்கு அது குற்றவுணர்வாக இல்லை; ஆனால் பெற்றோருக்குப் பழைய நினைவுகளைத் தரும் - குற்றவுணர்வை நீட்டிக்கும் ஒன்றாகத் தங்கள் திருமணம் மாறிவிடும் என்ற அச்சவுணர்வு தடுக்கிறது. அதையெல்லாம் தாண்டி மையப்பாத்திரமான பேராசிரியர் பாரதி (சத்யராஜ்) உண்மையில் காதல் என்பதைப் புனிதமாக நினைத்த மனிதரல்ல என்பதைப் புரிந்துகொண்ட நிலையில் ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் தலைமுறையாக - இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாக முதல் தொகுப்பு (8 பகுதிகள்) முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்பட 8 மொழிகளில் கேட்க முடியும். ஆனால் பார்க்கும்போது தமிழில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தொடரென்பது புரியும். தமிழிலும் மலையாளத்திலும் நல்ல அறிமுகம் கொண்ட நடிக, நடிகையர் என்பதோடு கேரளத்தின் காயல், வள்ளம், படகுவீடு, ஆற்றங்கரையோர பழைமையான வீடுகள் எனக் காட்சிக்குரிய சட்டகங்களாக படம் நகர்கிறது. சத்யராஜ் பணியாற்றும் கல்லூரி சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பொழுதுபோக்குத் தொடரொன்றைப் பார்க்க விருப்பமுடையவர்கள் பார்க்கலாம்,

வாரிசு அரசியலின் ஒரு முகம்

பெரும்பாலான வலைத்தொடர்களைக் குற்றம்-துப்பறிதல் என்னும் வகையிலான தொடர்களாகவே தயாரிக்கும் நோக்கம் ஏனென்று தெரியவில்லை. கடந்த 50 ஆண்டுகாலத் தமிழ்நாட்டு அரசியலை விவாதிக்கும் செங்களம் தொடரும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் குற்றம் - துப்பறிதல் என்ற வகைப்பாட்டுக்குள் வாரிசு அரசியலின் குரூரத்தைக் காட்டியுள்ளது.

இந்தியா முழுக்கவும் வாரிசு அரசியலே முதன்மையான போக்காக இருக்கிறது. அதற்கு தமிழ்நாடும் ஆதரவுதான். கிராமப்பஞ்சாயத்து தொடங்கி, ஊராட்சிமன்றம், ஒன்றியம், சட்டமன்றம் நாடாளுமன்றம் என நீளும் வாரிசுகளின் ஆதிக்கம் மக்களாட்சி முறைக்கு விளைவிக்கும் கேடுகள் பற்றி இங்கு பேச்சுகள் இல்லை. ஆனால் இத்தொடர் அதன் விளைவுகளில் ஒன்றாகக் கொலை, பெண்ணொடுக்கு முறை போன்ற காரணங்களைத் தொட்டுக் காட்டியுள்ளது. தொடரின் பெயர் செங்களம். பெரும்பரப்பைத் தவிர்த்துவிட்டு விருதுநகர் நகரசபை என்ற எல்லைக்குள் நிறுத்தித் தமிழ்நாட்டு அரசியல் காட்சிகளை விரித்திருக்கிறது.

கிராமப்பஞ்சாயத்து அரசியல் தொடங்கி மாநில அளவிலான அரசியல் வரையிலும் குடும்ப அரசியல் நிலவுகிறது என்பதைக் காட்டும் செங்களம், அதற்கு மாற்றாக உருவாகும் அரசியலும் தந்திர அரசியலாகவும் பணபல அரசியலாகவும் இருக்கிறது என்பதைச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறது. நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள் என்பதற்காக ஆறு கொலைகளைச் செய்யும் சகோதரர்களின் கதாபாத்திரத்தை எப்படி உருவாக்கிக் காட்டுவது என்பதில் இயக்குநர் குழம்பியிருக்கிறார். காவல் துறையால் கட்டுப்படுத்தமுடியாத ஒருவனை உருவாக்கிக் கதாநாயகனாக்கியிருக்கும் இயக்குநர், அந்தக் கொலைகளுக்கும் வன்முறைக்கும் தர்மாவேசத்திற்கும் பின்னால் முதல் காதலின் நினைவுகள் இருந்தன என்று காட்டுவது முழுமையானதாக இல்லை.

கதைசொல்லல், பொருத்தமான நடிகர்கள், காட்சி அமைப்புகள், இசைக் கோர்வைகள் போன்றனவற்றில் பெரிய குறைகள் இல்லை. இறுக்கமான முகத்தோடு இருக்கும் முதன்மைக்கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அளவுக்கதிகமாக உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. குறைவான செலவில் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். எஸ்.ஆர். பிரபாகர் எழுதி இயக்கியுள்ள தொடரில் வாணிபோஜன், கலையரசன், வேல.ராமமூர்த்தி போன்ற தெரிந்த முகங்கள் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.

9 பகுதிகள் கொண்டதாக ஜீ திரையில் உள்ள செங்களம் தொடர் பார்க்கத்தக்க தொடர்.

நம்பகத்தன்மையும் அமானுஷ்யமும்

மொத்தம் 10 பகுதிகளைக் கொண்ட ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ யை வெளியீடு கண்ட ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை பார்த்தேன். எனது அயல்நாட்டுப் பயணம் காரணமாக எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் நடிப்புக்கலைக்கும் கருத்துநிலைக்கும் முக்கியத்துவம் தந்த ஒரு தொடர்பற்றி ஒரு விமரிசனக்குறிப்பொன்றை எழுதாமல் விட்டதில் மனக்குறை இருந்தது. அதனால் திரும்பவும் பார்த்தபின்பே எழுதுகிறேன்.

45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஓடக்கூடியதாகப் பிரிக்கப்பட்ட தொடரின் முதல் பகுதியை, முதலில் பார்த்து முடித்தபோது, தொடர்ந்து பார்க்க வேண்டுமா? என்ற மனநிலை இருந்தது. காரணம் முதல் பகுதியின் முடிவில் இந்தத் தொடர் எவ்வகையான தொடராக எடுக்கப்பட்டிருக்கும் என்ற தீர்மானம் எதுவும் உருவாகவில்லை. ஒரு பழங்குடிச் சமூகத்தின் நம்பிக்கையால் நடக்கும் தன்பலிக் காட்சியோடு நிறைவுற்ற அந்தப் பகுதியில் நேரடிக் காட்சிகளுக்குப் பதிலாக கணினி தொழில்நுட்பத்தின் உதவியால் ஆக்கப்பட்ட வரைகலைக் காட்சிகள் அலுப்பை உண்டாக்கின; காட்சிகளோடு இணைந்து பயணிக்கும் பார்வையாள மனநிலையை உருவாக்கவில்லை. வனத்தில் வாழும் கானகர்களின் உடல்மொழியும் அசைவுகளும் நடிப்பு முயற்சி எதுவும் வெளிப்படாமல் இருந்தன. அதே நேரம் இ.குமரவேல், செம்மலர் அன்னம் போன்ற எனக்குத் தெரிந்த நாடகக்காரர்களின்/ மாணவர்களின் முகங்களும் பெயர்களும் வந்த நிலையில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்த்து விடுவது என்று முடிவும் எடுத்தேன். அத்தோடு வனக்காவலர்களின் நுழைவும் பழங்குடி மக்களின் வாழ்வும் என்ற எதிர்வு உருவாக்கப்பட்ட நிலையில் பார்த்துவிடுவது என்ற என்ற தூண்டுதல் கிடைத்தது, அந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகள் என்று பார்த்து முடித்தேன்.

*******

தனிநபர்களின் காமம் சார்ந்த குற்றச் செயல்கள், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையின் விளைவுகள், அவற்றோடு தொடர்புடையவர்களின் அச்சுறுத்தல் பின்னணிகள், திட்டமிட்ட சமூகவிரோதக் குழுக்களின் நோக்கங்கள், பழைய சமூக நடைமுறைகள் தரும் நெருக்கடிகள் என்பன போன்ற காரணங்கள் பின்னணிக்காரணங்களாக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பொதுத்தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்தாலும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ மற்றவற்றிலிருந்து பலவிதங்களில் மாறுபட்ட தொடராக எடுக்கப்பட்டிருக்கிறது.

நான்கு மொழிகளில் அமேசான் பிரைமில் பார்க்கக் கிடைக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்னும் இத்தொடரின் முதன்மை மொழி தமிழ் என்பதில் எனக்கு ஐயம் எழவில்லை. இப்படிச் சொல்வதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. தொடரின் நேரடிக்காட்சிகள் நிகழும் வெளிகள் முழுமையும் கோவை மாவட்டக்கானகம் ஒன்றில் நடக்கின்ற காட்சிகளாக இருக்கின்றன. மொத்தத்தொடரின் நேரடி நிகழ்வுகள் தாண்டி முன் நிகழ்வுகளும் கூடக் கோவை, சென்னை போன்ற தமிழ்நாட்டு நகர வெளிகளிலேயே நடக்கின்றன. அத்தோடு பெரும்பாலான பாத்திரங்களும் தமிழ் பேசும் பாத்திரங்களாகவே இருக்கின்றன. காட்டிலாகாவில் பணியாற்றும் ஒரேயொரு பாத்திரம் மலையாளப் பின்னணியோடு - அதுவும் தமிழகத்தின் அருகில் இருக்கும் பாலக்காட்டுப்பின்னணியைக் கொண்டதாக இருக்கிறது.

வெளி, பாத்திரங்கள் என்ற புனைவாக்கத்தை- திரைக்கதையை ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ கூட எழுதியிருக்கலாம். பாத்திரங்களுக்கான வசனங்கள் தமிழில் எழுதப் பெற்று, பேச்சுப்பயிற்சி அளித்துத் தயாரிக்கப்பட்டுள்ள தொடர் என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் நடிகர்கள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாகத் தமிழின் நாடகக் குழுக்களிலும் அரங்கியல் பயிற்சி நிறுவனங்களிலும் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் எனோதானோவென்று வந்து போகின்றவர்களாக இல்லாமல் முக்கியப்பாத்திரங்கள் சிலவற்றை ஏற்று நடித்துள்ளனர். புதுவை நாடகப்பள்ளியின் முதல்வரிசை மாணவரான இ.குமரவேல் வனக்காவலர்களில் மூத்தவராகவும் மொத்தத்தொடரிலும் பங்கெடுக்கும் பாத்திரமாகவும் வந்துள்ளார். கூத்துப்பட்டறையின் மூத்த நடிப்புக்கலைஞர் கலைராணி தொடரின் ஆரம்பித்தையும் முடிவையும் இணைக்கும் கிறித்தவச் சேவைச் சகோதரியாக நடித்து ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், அருண்மொழியின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று மேடையிலும் திரைப்படங்களிலும் நடித்துவரும் செம்மலர் அன்னம் தொடரின் மர்மப் பாத்திரமான வனராட்சியாகவும் அதன் வெளிப்படைப் பாத்திரமான மங்கைப் பாத்திரத்திலும் நடித்துள்ளார். இருவேறு நிலைக்கும் அவர் காட்டும் மென்னுணர்விலும் வன்னுணர்விலும் போதுமான வேறுபாடுகள் காட்டவில்லை என்றபோதிலும், அப்பாத்திரத்துக்குத் தேவையான உடல்மொழியை இவரளவுக்குத் தர இன்னொரு நடிகையைத் தமிழ்ச் சினிமாவுக்குள்ளிருந்து தேடிக்கண்டு பிடிக்க முடியாது என்பதும் உண்மை. இவர்களின் பெயர்கள் என்னளவில் தெரிந்த பெயர்கள். இவர்களல்லாமலும் சில பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் நடிப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே இதனைத் தமிழ்த் தொடர் என்றே பரிந்துரை செய்கிறேன்.


எனது பரிந்துரை, இன்ஸ்பெக்டர் ரிஷியின் இயக்குநர் ஜே.எஸ். நந்தினியின் ஈடுபாடு சார்ந்தும் அமைகிறது. அவர் ஒவ்வொரு நிலையிலும் தன்னை – தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமென நினைப்பவராக இத்தொடர் மூலம் அறிமுகமாயிருக்கிறார். தான் எடுக்கும் சினிமா அல்லது தொடரின் பார்வையாளர்களை மேம்பட்ட பார்வையாளர்களாகக் கருதும் ஒருவர்தான் இப்படியான எண்ணத்தோடு தன்னை முன்வைக்க முடியும். கதைப்பின்னல், பாத்திரங்களை வடிவமைத்தல், அதற்கேற்ற நடிப்புக்கலைஞர்களைத் தேர்வு செய்தல், நிகழ்வுகளுக்காகத் தேர்வுசெய்துள்ள வெளிகள், அதனைக் காமிராவின் வழியாகக் காட்டும் கோணங்கள், வண்ணங்கள் போன்றவற்றோடு, முன்வைக்க நினைக்கும் முடிவுகள் போன்றவற்றில் அறிவார்ந்த சிந்தனையும் விலகிநின்று பார்க்கும் மனோபாவமும் வெளிப்பட்டுள்ளது. அதன் வழியாகத் தீர்ப்புகள் எழுதாத கலைப்பார்வை கொண்டவராகவும் வெளிப்பட்டுள்ளார் இயக்குநர் நந்தினி. இதில் காட்டியுள்ள தொழில் நேர்த்திக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் இந்த நேர்த்தியும் வெளிப்பாடு தமிழில் இயங்கும் இயக்குநர்களிடம் குறைவு.




கானகக் கிராமம் ஒன்றின் பலியிடல் சடங்கை நிகழ்த்துவதுபோன்ற காட்சியோடு தொடங்குகிறது முதல் பகுதி. இப்போதும் கிராமத்தெய்வங்களுக்கு நடத்தப்படும் பூக்குழி இறங்குதல் என்னும் தீமிதி நிகழ்ச்சி போன்ற நிகழ்வு அது. ஆனால் இது தீமீதியைப் போல ஓடிவந்து தீக்கொப்பளங்களை ஆற்றித் தப்பித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்படாமல், தங்களின் கிராமத்தின் / கானகத்தின் கடவுளான வனராட்சிக்கு முன்னால் நடக்கும் அக்கினிப்பிரவேசம் என்பதாகக் காட்டப்பட்டது. சாமியாட்டத்திற்குத் தயாராக வந்து தெய்வ உருவின்/ வனராட்சியின் முன்னால் உள்ள அக்கினிக்குண்டத்தில் முதலில் ஒரு பெண் இறங்க, அவரைத் தொடர்ந்து கிராமத்தின் மொத்தப்பேரும் அக்கினியில் இறங்கி உயிரைவிடும் நேர்த்திக்கடன் செய்யும் காட்சி அது. அக்காட்சி ஒரு சமயச் சடங்கு போலக் காட்டப்பட்டு, அந்தக் காட்டோடு ஒரு தொன்மக்கதையின் பகுதியாக மாற்றப்படுகிறது. கானவர்களின் தெய்வமான வனராட்சியின் காவல் இப்போதும் அங்கு இருக்கிறது என்ற நம்பிக்கை அந்தத் தொன்மத்தின் வழியாகப் பரவி நிற்கின்றன.

காட்டை அழிக்க நினைப்பவர்களை - வனத்தின் உயிர்களுக்குக் கேடு நினைப்பவர்களைக் காக்க வனராட்சி வருவாள் என்ற நம்பிக்கைக்குப் பின்னால் இருப்பது நல்ல எண்ணமா? தங்கள் தவறுகளை மறைத்துக் குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபர்களின் தீய எண்ணங்களா? என்பதே மொத்தத் திரைத் தொடரின் மர்ம முடிச்சுகளாக நீள்கிறது.

கானுயிர்களையும், கானகக் காட்சிகளையும் படம்பிடிக்கும் புகைப்படக்காரர் ஒருவரின் மரணத்தைக் கொலையா? விபத்தா?எனத் துப்பறியத் தொடங்குவதில் இன்ஸ்பெக்டர் ரிஷி, தனது இரண்டு உதவி இன்ஸ்பெக்டர்களோடு இணைந்து மர்ம முடிச்சுகளை விடுவித்துக் கொண்டே போவதுதான் தொடரின் பகுதிகள். அந்தக் கொலையைத் துப்பறியும் போக்கில் அதற்கு முன்பு நடந்த கொலைகளையும் இப்போது நடத்தப்படும் கொலைகளையும் யார் செய்துவிட்டு வனராட்சியின் பலிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டறிந்து சொல்வதைக் கச்சிதமாகத் திரைக்கதையாக்கித் தந்துள்ளார் இயக்குநர். அது மட்டுமல்லாமல், கானகக் காட்சிகளும் நடனக்கோர்வைகளும் அரங்கியல் அசைவுகளைக் கொண்ட கோர்வைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு புதுவகைத் திரைத்தொடரை – நடிப்புக்கலையை விரும்பி ஏற்ற தமிழ் நடிகர்கள் பங்கேற்றுள்ள திரைத்தொடரைப் பார்க்கிறேன் என்ற உணர்வைத் தந்த நிலையில் தொடர்ச்சியாகப் பார்க்கும் மனநிலை உருவானது. அம்மனநிலையைத் தொடர்ந்து தக்கவைக்காமல் விலகலை ஏற்படுத்தும் காட்சிப்பின்னல்களும் இருந்தன என்பதைச் சொல்லவேண்டும். அக்காட்சிகளைத் தொடரின் நீளத்தைக் கூட்டுவதற்காக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எனக்குறையாகச் சொல்லலாம். அதே நேரம் இந்தத் தொடரோடு நேரடியாகத் தொடர்பில்லாத சில கருத்துநிலைப் பேசுவதற்கான வாய்ப்பாக இயக்குநர் அதைத் தெரிவு செய்து பாத்திரமாக்கலைச் செய்திருக்கிறார் எனவும் சொல்லலாம்.

வனத்திற்குள் நடந்த கொலையைத் துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் ரிஷியின் திருமணம் சார்ந்து ஒரு முன் கதை இருக்கிறது, அக்கதையும் ஆவியாக வருதல் தொடர்பானது என்ற நிலையில் வனராட்சி ஆவியா? பலி வாங்கும் கானகர்களில் ஒருத்தியா? என்ற கேள்வியோடு தொடர்புடையது எனப் பொருத்தம் சொல்லலாம். இதே தன்மையில் ரிஷியின் உதவியாளர்களாக வரும் துணை ஆய்வாளர்களின் பின்னணிக்கதைகளையும் கிளைக்கதைகளையும் அப்படிச் சொல்ல முடியாது. இயக்குநர் புதிய கருத்தியல்களை – இந்திய சமூகத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களை முன்வைக்கும் ஆர்வம் காரணமாக அக்கதாபாத்திரங்களின் சொந்தக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் என்ற நிலையில் அதனை ஏற்கலாம். ஒருபால் விருப்பம் கொண்டவர்களை நமது சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற விவாதத்தைப் பார்வையாளர்களுக்கு இந்த அளவுக்குக் கடத்திய சலனப்படக் காட்சிகள் தமிழில் இல்லையென்ற அளவில் அதனை வரவேற்கவே வேண்டும் அத்தோடு அக்கதைகளிலும் மர்மம், அமானுஷ்யம் என்ற இவ்வலைத்தொடரின் மையத்தோடு தொடர்புகள் இருக்கின்றன என்பதால் பெரிய விலகல்களாகவும் கருத வேண்டியதில்லை.

தொடரின் பெரும்பகுதியை வனம், வனத்திற்குள் உள்ள கிராமம், அப்பகுதி மக்களின் வாழ்வியல் என்பதைக்கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கிணையாகவே நகர வாழ்க்கையும் காட்டப்பட்டுள்ளன. வெளிசார்ந்த எதிர்வில் இயக்குநரின் சார்பு கருத்தியல் ரீதியாக இதுதான் என்பதாக இல்லை. அதனை விவாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்துள்ளது. மர்மத்தொடர் ஒன்றில் சமூகப் பார்வையை வெளிப்படுத்தியதோடு நடிப்புக்கலையில் தேர்ச்சியுள்ளவர்களைப் பயன்படுத்தவேண்டுமென நினைத்த இயக்குநர் நந்தினியை முழுமையைத் தேடிய இயக்குநர் எனக் கருதமுடிகிறது.

அரசியல் சினிமாவின் நகலாக ஒரு தொடர்










அரசியல் சினிமாவின் முதன்மையான அடையாளமாக இருப்பது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகளைப் படத்தில் புனைவாக உருவாக்கிக் காட்டுவதாகும். அப்புனைவில் இடம் பெறும் பாத்திரங்களுக்கு அரசியல் பிரபலங்களில் பெயர்களின் சாயலில் பெயரிடுவதன் மூலம் கூடுதலாக அரசியல் படம் எனக் காட்ட முடியும் என்ற நம்பிக்கைத் தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு உண்டு.

தொடர்ச்சியாகத் திராவிட இயக்க அரசியல் மீதும், தலைவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை மீதும் விமரிசனங்களை உருவாக்கும் படங்களை எடுத்து வரும் மணிரத்னம் இவ்விரு உத்திகளையும் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். அவரது இருவர், அக்னி நட்சத்திரம், ஆயுத எழுத்து, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களைப் பார்த்தவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள்.

மணிரத்னத்தின் இந்தப் போக்கை உள்வாங்கிய வெளிப்பாடாகவே வசந்தபாலனின் ‘தலைமைச்செயலம்’ என்னும் வலைத்தள வரிசைத்தொடர் ( WEB SERIES) உருவாக்கம் பெற்றுள்ளது. மணிரத்னத்தின் பாணியை முழுமையும் பின்பற்றாமல் குறிப்பான சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் வசந்தபாலன். பாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் அதே பாணியைத் தொடர்ந்துள்ளார். ஆனால் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதில் எதனையும் நினைவூட்டாமல் முழுமையும் புனைவுத்தன்மையைப் பின்பற்றியுள்ளார்.

தலைமைச்செயலகம் என்ற பெயர் தமிழ்நாட்டரசின் - முதல் அமைச்சர் அதிகாரம் செலுத்தும் சென்னைக் கோட்டையை உருவகப்படுத்திக் கொண்டு இந்திய அளவு அரசியல் போக்கொன்றை இணைத்து, தனது தொடருக்குத் தேசியச் சந்தையை உறுதிசெய்துள்ளார். மார்க்சிய லெனினியக் கட்சிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அதன் விளைவுகளை எதிர்கொண்ட வங்காளத்து அறிவுஜீவிகளின் இளம்பருவத்துச் சாகசங்களை நினைவுபடுத்தும் ஒரு கதைக் கீற்றின் போக்கை, திராவிடக் கட்சிகளின் ஊழல் அரசியல் பின்னணியில் நிறுத்திக் கதை முடிச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முடிச்சின் அடிப்படையில் கொற்றவை பாத்திரமே ஒட்டுமொத்தத் தொடருக்கும் மையம். எட்டுப் பகுதிகள் கொண்ட தலைமைச்செயலகம் தொடரின் பெரும்பகுதியும் கொற்றவையின் அரசியல் அறிவு, தனிநபராக அவளது தொடர்புகள், கட்சிக்காரர்களைக் கையாளும் நேர்த்தி, முதல் அமைச்சரோடு அவளுக்கு உள்ள உறவு, அதற்குள் இழையோடும் ரகசியத்தன்மை எனப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி பெறும் புத்திசாலிப் பெண் என்ற நினைவூட்டலின் வழியாகக் கொற்றவையை ஜெயலலிதாவின் சாயலில் உருவாக்கியுள்ள வசந்தபாலன், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் பாத்திரங்களின் வழியாக இப்போதைய முதல்வர் முத்துவேல் ஸ்டாலினையும் அவரது தந்தை முத்துவேல் கருணாநிதியையும் நினைவூட்ட முயன்றுள்ளார். முதல்வருக்குப் பின் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற நடக்கும் குடும்ப உறவுகளுக்கிடையேயான மறைமுகச் செயல்பாடுகள், அவரது பதவியைப் பயன்படுத்திச் சம்பாதிக்கும் பெரும்பணம், என விரியும் காட்சிகளில் இப்போதைய முதல்வரின் குடும்ப உறவுகள் பற்றிப் புலனாய்வுப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் நினைவூட்டப்படுகின்றன.

திராவிட இயக்க அரசுகள் ஊழல் செய்கின்றன; அதிலிருந்து தப்பிப்பதற்காக அதிகாரத்தின் கண்ணிகளைப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம் ஒன்றிய அரசோடு இணைந்துபோகின்றன; இயலாத நிலையில் அரசியல் தரகர்களையும் திருமண உறவுகளையும் குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துகின்றன; நீதிமன்றத்தைப் பணம் கொடுத்து வாங்கும் முயற்சியையும் செய்கின்றன. தேவைப்பட்டால் கொலைகளையும் செய்கின்றன என விமரிசனத்தை வைக்கும் இந்தத்தொடரில் நேரடியாக ஒரு கட்சியைக் குற்றம் சாட்டாமல் பொதுவாகத் திராவிட அரசியல் என்பதாகக்காட்சிப்படுத்துகின்றார். அதனைச் செய்வதற்காகத் தமிழ்நாட்டு அரசியலின் இருபெரும் அரசியல் ஆளுமைகளைக் குறியீட்டுச் சாயலில் உருவாக்கியுள்ளார் இயக்குநர், முதல் அமைச்சர் அருணாசலத்தையும் கொற்றவையையும் எதிரெதிர் நிலையில் நிறுத்தாமல் காட்டுவதின் மூலம் தனது திரைக்கதை அமைப்பில் சாதுர்யத்தைக் கொண்டுவந்துள்ளார். கொற்றவையின் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொண்ட முதல்வர் எனக்காட்டும்போது அந்த முதல்வர் அருணாசலம், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்ற சாயலைத் தொலைத்துவிட்டு, எம்.ஜி.ராமச்சந்திரனின் சாயலைப் பெற்றுவிடுகின்றார்.

அரசியல் ஆளுமைகளின் பாத்திரங்களைச் சாராம்ச ஆளுமைகளாக வடிவமைத்துக் கொண்டதின் வழியாக வசந்தபாலன் மணிரத்னத்தின் பாணியிலிருந்து விலகிப் புதுத்தட த்தை உருவாக்கியிருக்கிறார். அத்தோடு பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு அவர் தெரிவுசெய்த நடிகர்கள் பலரும் கச்சிதமாக நடித்துள்ளனர். கொற்றவையாக நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டியும் அவரது மகளாக நடித்துள்ள சாரா பிளாக்கும் செல்வ புவியரசனாக நடித்துள்ள சந்தான பாரதியும் பாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள். சிறப்பாகச் சொல்லப்பட்ட இவர்களைத் தாண்டி துர்காவாக நடித்துள்ளவரும், அமுதவல்லியாக வரும் ரம்யா நம்பீசனும் கூடப்பொருத்தமாகவே பாத்திரத்தை ஏற்றுள்ளனர். எப்போதும் சிறப்பாகப் பாத்திரங்களைக் கொண்டுவரும், கிஷோர் தனது உடல் மொழியில் வயது குறித்த தன்னுணர்வைப் பல இடங்களில் தவற விட்டுள்ளார். பெரிய அளவுக்குக் குறைசொல்லும் விதமாக ஒருவரது நடிப்பும் இல்லை என்பது இயக்குநரின் சிறப்பு.

ஒரு வலைத்தொடர் என்ற வகையில் தமிழில் இதுவரை வந்த தொடர்கள் படப்பிடிப்புக்குச் செய்த செலவுகள் போதுமானவையாக இருந்ததில்லை. இந்தத்தொடரில் அப்படியொரு குறை இருக்கக்கூடாது என்பதை ரேடான் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் ராதிகாவும் சரத்குமாரும் உறுதி செய்து இயக்குநருக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அதனைப் பெற்ற வசந்தபாலன் தனது சிறப்பான முத்திரையைப் பதித்துள்ளார்..

ஜெ.ஜெயலலிதா: ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்



தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன.

ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது.


வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர்கள், அவ்வாறில்லாத அரசியல்வாதிகளான எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் தெரிவு செய்தது அண்மைக்கால வரலாறு. திரு.சுப்பராயலு ரெட்டியார் தொடங்கி திரு.கி.பக்தவச்சலம் வரையிலான தமிழக முதல்வர்கள் முழுநேர அரசியல்வாதிகளே. அவரைத் தொடர்ந்து முதல்வரான திரு சி.என்.அண்ணாதுரையும், கலைஞர் மு.கருணாநிதியும் முழுநேர அரசியல்வாதிகளே என்றாலும் அவர்களின் வாழ்க்கைப் பாதையில் நாடகம், திரைப்படம் போன்ற கலைப்பகுதிகளுக்கும் முக்கியமான இடமுண்டு. மக்களிடம் தங்கள் கருத்துகள் சென்றடைவதற்குப் பயன்படும் என்பதால் அவற்றைக் கருவியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இவர்களிருவரையும் தாண்டி முதல்வரான திரு. எம்ஜிஆரும் ஜெ.ஜெயலலிதாவும் அரசியல் வாழ்க்கைக்கு முன்னதாகத் திரையுலக வாழ்க்கையைப் பெரும்பகுதியாகக் கொண்டவர்கள். அவர்களிருவரின் வாழ்க்கைப் பயணத்தை நடிப்புக்கலைஞர்கள், அரசியல்வாதிகள் என்றே வரிசைப்படுத்த முடியும்.

தலைவர்கள் உருவாக்கம்

மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பதாகச் சொல்லப்பட்டாலும் இவற்றை அடையும் வழிகளில் தடைகள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடைவதற்கான முயற்சிக்கு உடல் நலம், கல்வி, போக்குவரத்து, சட்டப்பாதுகாப்பு போன்றன உதவும் என்பதாக மக்களாட்சியை மையமிட்ட நாகரிக சமூகம் முன்மொழிந்து திரள் மக்களை விழிப்படையச் செய்திருக்கிறது.

திரள் மக்களின் தேவைகள் உணரப்பட்ட நிலையில் கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால் அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகள் எவையென அறியாத நிலையில் வழிநடத்தப் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். திரள் மக்களின் தேவைகளை அவர்களின் சார்பாளராக நின்று அரச அமைப்புகளைக் கொண்டு நிறைவேற்ற முடியும் நம்பிக்கையை ஊட்டுபவர்கள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள். தங்களின் வழிகாட்டியாக நம்பும் அரசியல்வாதிகளின் அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் தங்களுக்குத் தெரியவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தொண்டர்களாக – திரள் மக்களாக மாறுகிறார்கள்.

திரள் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட நிலையிலேயே அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என வர்ணிக்கிறார்கள். இந்திய/ தமிழக வரலாற்றில் திறந்த வாழ்க்கையை – வெளிப்படையான தன்மையைக் கொண்ட பல தலைவர்களின் வாழ்க்கை வாசித்திருக்கிறோம்; நாடகங்களாக மேடையிலும், சினிமாவாகத் திரையிலும் கண்டு அறிந்திருக்கிறோம். தலைவர்களின் நாட்குறிப்புகளும், பயணக்குறிப்புகளும் நேர்காணல்களும் மக்களோடு உரையாடிய தினசரி எழுத்துகளும் அவர்களின் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக ஆக்கியிருக்கின்றன. அப்படியானவர்களின் நினைவுகளும் சாதனைகளும் காலம் காலமாக மக்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு மாறாகத் தனது வாழ்க்கையில் ரகசியங்களும் புதிர்களும் சாகசங்களும் இருந்தன என்பதாகவும் மக்களிடம் தங்களை முன்வைப்பார்கள். அப்படியானவர்களின் முழுவாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையாக இல்லாமல், நெருக்கடிகளால் அரசியலுக்கு வந்ததாக இருக்கும்.

அரசியலுக்கு வருவதற்கு முந்திய வாழ்க்கையை மக்களுக்குச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் இருக்கும். தங்களின் இப்போதைய அரசியல் வாழ்க்கையை நீடிப்பதற்கேற்பப் பழைய வாழ்க்கையின் பகுதிகளை முன்வைப்பார்கள். அப்படி முன்வைக்கும்போது நடந்தவைகளுக்குள் புனைவுகளின் இடம் அதிகரித்து விடும். சொல்லப்படும் வாழ்க்கை நிகழ்வுகளின் நம்பகத்தன்மையை எதிர்நிலையில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பும் நிலையில் புனைவுகள் கூடும். புனைவுகள் கூடும்போது நேர்மறை விளைவுகள் ஏற்படுவதற்கிணையாக எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் உண்டு.

தலைவியின் இயங்குதளம்

எம்.ஜி.ராமச்சந்திரன்xமு.கருணாநிதி என்பதான எதிர்வை உண்டாக்கி இயக்குநர் மணிரத்னம் இருவர் என்றொரு புனைவுச் சினிமாவைக் கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளியிட்டார். அது ஜெயலலிதா முழுமையான அரசியல்வாதியாக நேரம். இப்போது அவரே மையப்பாத்திரமாகிவிட்ட நிலையில் தலைவியும் குயினும் வந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை, “எம்ஜிஆர் -ஜெ.ஜெயலலிதா -ஆர் எம் வீரப்பன்” என்ற முக்கோண முரண்பாட்டின் நகர்வுகளால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக முன்வைத்துள்ளார் தலைவி படத்தை இயக்கிய ஏ. எல். விஜய். இப்படத்திற்கான கதையை எழுதியவர்கள் விஜயேந்திர பிரசாத்தும் மதன் கார்க்கியும்

தலைவி என்பதைத் தமிழின் வரலாற்றுப் பின்னணியில் பார்க்காமல் தனியொரு புனைவுப்படமாகப் பார்த்திருக்கிறார் இயக்குநர். ஜெயலலிதாவைவிடவும், எம். ஜி. ராமச்சந்திரன் என்ற ஆளுமையின் பிம்பமே குற்றம் குறையில்லாத ஆளுமையாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது படத்தில். அதற்கு அப்பாத்திரத்தை ஏற்று நடித்த அரவிந்த்சாமியின் ஈடுபாடும் எம்ஜிஆரின் உடல் மொழியையும் மனவெளிப்பாடுகளையும் கச்சிதமாகத் திரையில் கொண்டுவந்ததும் காரணமாக இருக்கலாம். தலைவியாக நடித்த கொங்கனா ரனாவத் என்ற மராட்டிய நடிகையின் ஈடுபாடு அவ்வப்போது ஜெ.ஜெயலலிதாவின் இயல்போடும் நடவடிக்கைகளோடும் பொருந்தி நின்ற போதிலும் பல நேரங்களில் விலகியே இருக்கிறது. மும்முனையில் மூன்றாவது முனையாக உருவாக்கப்பட்ட ஆர் எம் வீரப்பன் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சமுத்திரக்கனியின் பாத்திரப்பொருத்தமும் ஏற்புடையதாக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் பாத்திரத்தை ஏற்ற நாசர் அவரது குரலை மட்டுமே கொண்டுவந்தால் போதும் என்று நம்பியிருக்கிறார். அவரைத்தாண்டி எம். ஆர். ராதாவாக வரும் ராதாரவி பொருந்தி நிற்கிறார். எம்.ஜி.ஆர் என்று ஒலிக்கும் பெயரை எம்.ஜே.ஆராக்கி விடுவதின் மூலமும் வலம்புரிஜானை, ஜான் என அரைப்பெயராக்குவது போலப் பல பெயர்களைப் பாதியாக்கி ஒலிக்கச் செய்வதின் மூலமும் கடந்த கால்நூற்றாண்டுத் தமிழ் அரசியலைக் கட்டுக்குள் வைத்தவரின் உண்மைக் கதையை அரைகுறைப் புனைவாக்கிப் பிம்பக் கட்டுமானம் செய்ய முயன்றுள்ளார் இயக்குநர். போதாமையோடு கூடிய புனைவு காணாமல் போய் ஊடகங்களில் மிதந்த வாழ்க்கை வரலாறே சினிமாவாக ஆகியிருக்கிறது.

1989 இல் தமிழக சட்டசபையில் இழைக்கப்பட்ட அநீதி ஒரு பெண் அரசியல்வாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதற்குத் திரௌபதியின் சபத நிறைவேற்றம்போல, முதல்வராக மட்டுமே சட்டசபைக்குத் திரும்புவேன் என வெளியேறித் திரும்பி வந்த நிகழ்வுக்குள் அவரது கதையைச் சொல்கிறது படம். ஜெ.ஜெயல லிதாவின் அரசியல் எழுச்சிக்குப் பின்னால், தமிழர்களின் பொதுப்புத்தி உருவாக்கமும் மைய நீரோட்டத்தைக் கட்டுக்குள் வைக்க நினைத்த அறிவுவர்க்கத்தின் சாய்வுகளும் சாதிகளின் திரட்சியும் அடையாள அரசியலின் எழுச்சிகளும் இருந்தன. அவற்றையெல்லாம் பேசுவதைக் கைவிட்டுவிட்டு வெற்றிப்படச் சூத்திரமாக முக்கோணக்கதையொன்றை உருவாக்கி வெற்றிப்படச் சூத்திரத்திற்குள் அடக்கியுள்ளார் இயக்குநர். அதிகார ஆண்களின் உலகத்தில் தனது திடமான முடிவுகளாலும் புத்திசாலித்தனத்தாலும் சொந்த வாழ்க்கை சார்ந்த இழப்பாலும் தியாகத்தாலும் மேலெழும்பி வந்த தலைவி என்ற பிம்பத்தோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
பக்குவமற்ற வயதில் நுழைந்த திரைப்பட உலகமும், அரசியல் நகர்வுகளும் சொந்த வாழ்க்கை சார்ந்தும் சிறு வட்டத்தில் உருவான ஆண்களின் மீதான வன்மமும் வெறுப்பும் ஆண்களற்ற உலகம் ஒன்றை அவருக்கு உருவாக்கித் தந்ததைப் படம் வலுவாக முன்வைக்கவில்லை. தமிழ்ச் சினிமாவின் பார்வையாளத்திரளால் ரசிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடலுக்குள் புகுந்த ரகசியங்கள் நிறைந்த மனம், ஆண்களின் மீது செலுத்திய அதிகாரம், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எப்படிப் பாதித்தது; அந்தப் பாதிப்பு நேர்மறையானவையா? சீரழிவுப் பாதையா? என்பதைப் புனைவாகப் பேசும் வாய்ப்பை அந்த இயக்குநர் உருவாக்கிக் கொள்ளவில்லை. தலைவியென்னும் பெருமதிப்புப் பிம்பத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.

திரைமொழியின் கவனங்கள்

தலைவி தவறவிட்ட குறைபாடுகள் இல்லாத திரைத்தொடராக கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வந்த குயின் இருந்தது. அவரது விலகலுக்குப் பின்னர் பிரசாத் முருகேசன் அந்தப் பொறுப்பை ஏற்று முடித்திருந்தார். நடிகையாக இருந்து அரசியல் தலைவரான ஒருவரின் உண்மைக்கதையை நேர்காணல் வடிவத்தில் சொல்லும் குயின் கதையை எழுதியவர் ரேஷ்மா காட்லா. நடிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட ரம்யாகிருஷ்ணனின் ஏற்ற இறக்கங்கள் கொண்ட குரல் மொழியின் வழியாக நேர்காணல் வடிவத்தில் காட்சிகள் விரிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைக் கற்பதில் ஆர்வம் கொண்ட பள்ளிக்காலம், வெற்றிகரமான நடிகை, தனக்கான குடும்ப வாழ்க்கையைத் தேடிய பெண், அரசியல் நுழைவுக்காலம் எனப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு பருவத்திலும் அதற்கென நடிப்புக்கலைஞர்களைத் தெரிவுசெய்த இயக்குநர்கள், வாழ்க்கை வரலாற்றின் உண்மைத் தன்மையைக் கொண்டுவர முயன்றிருந்தனர். வரலாற்றுக் கால கட்டத்துக் காட்சிகளை உருவாக்கத் துணைசெய்யும் கலை இயக்கமும் அதற்குப் பெருந்துணையாக அமைந்திருந்தது. அதற்குத் துணைசெய்திருந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை தனி மனுசி ஒருத்தியின் ஆகப்பெரும் அவல நாடகம் என்பதான கதைப்பின்னலில் அவரது அந்தரங்க வெளியிலும் பொதுவெளியிலும் சந்தித்த ஆண்களின் இடம் எதிர்நிலைப்படுத்தப்பட்டிருந்தது. இவ்விரு படங்களின் வருகையைக் கவனமாகப் பரிசீலிக்கும்போது ஒரு வாழ்க்கையைக் கலைப் பார்வையின் வழியாக எவ்வாறெல்லாம் கட்டமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி