போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் தங்கமீன்


சால்ட் பதிப்பக வெளியீடாக வந்த விஜயராவணனின் நிழற்காடு தொகுப்பிற்குப்பின் மூன்று கதைகளை வாசித்துள்ளேன். மூன்றும் இணைய இதழ்களில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டவை. இம்மூன்று கதைகளுமே அவரது கதைத்தொகுப்பில் உள்ள கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளாக இருக்கின்றன. கதைக்கான பொருண்மையைத் தேர்வுசெய்வதிலும், அதனைச் சொல்வதற்குத் தெரிவுசெய்யும் சொல்முறைமையிலும் தலைப்பிடுதலும் புதியனவாக இருக்கவேண்டும் என்று மெனக்கிட்டு எழுதுகிறார் என்பதைக் காணமுடிகிறது. இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள ‘தங்கமீன்’ கதை எழுப்பும் விசாரணைக்காகவும், அவ்விசாரணையின் உள்ளார்ந்த கவனத்தை வாசிப்பவர்களுக்குக் கடத்துவதற்காக அவர் தேர்வு செய்துள்ள சொல்முறைமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் அனோஜன் பாலகிருஷ்ணனின் ஆசிரியத்துவத்தில் வரும் அகழ் இதழில் இந்தக் கதை பதிவேற்றம் பெற்றுள்ள நிலையில், கதை ஈழயுத்தத்தை நினைவூட்டுகிறது என்று நினைக்கத்தூண்டுகிறது. ஆனால் அந்தக் கூற்று, அதன் விவாதக்களத்தை குறுக்கிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வும் இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்த போர் நிகழ்வுகளையும் செய்திகளையும் கேள்விப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுக் கண்டனங்களையும் போராட்டங்களையும் நடத்தியுள்ள பொதுத்தளச் செயல்பாடுகளோடு ஒப்பிடத் தமிழ்நாட்டு எழுத்துலகின் கவனம் அதிகம் இல்லை. தங்கள் புனைவுகளை அனுபவங்களிலிருந்து உந்துதல் பெற்று எழுதுவதை முதன்மைப் போக்காகக் கொண்டு செயல்படும் தமிழ்ப்புனைகதையாளர்கள் அப்படித்தான் ஒதுங்கியிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தோடு ஈழ யுத்தம் சார்ந்து எடுக்கும் நிலைபாடுகள், தமிழ்நாட்டு அரசியலோடு முரண்பாடுடைய நிலைபாட்டை உருவாக்கும் எனக்கருதும் நிலையில் எழுத்தாளர்கள் விலகிப்போவதும் நிகழ்ந்தது; நிகழ்கிறது. 

ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னான தமிழக அரசியல் களத்தில், ஈழயுத்த ஆதரவுக்குரல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதும் எழுத்தாளர்களின் விலகலுக்குப் பின்னுள்ள காரணங்களாகவும் இருக்கின்றன. அந்த விலகலை உணர்ந்து எழுதப்பெற்றுள்ள கதையாகவே ‘தங்கமீன்’ கதையும் உள்ளது. ஆனால் தமிழில் எழுதப்பெற்றுள்ள நிலையில் ஈழப்போர்க்களம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவும் முடியாது. அப்படிக் குறுக்கிவிடாமல், எங்கெல்லாம் சொந்த மண்ணுக்காக ஆயுதம் தாங்கிய போராட்டம் நிகழ்கின்றனவோ, அவற்றையெல்லாம் நினைவூட்டும் கதையாக வாசிக்கும்போது உலகக்கதை ஒன்றை வாசிக்கிறோம் என்று உணர்வு கிடைக்கும்.

புனைகதைகளுக்கான பொருண்மைகள் பங்கேற்ற அனுபவங்களாக இருக்கும் நிலையில் கதைக்கூற்று முறையில் அதன் தாக்கம் இருக்கவும் வாய்ப்புண்டு. தன்மை, முன்னிலை, என்ற இரு நிலையிலும் சில வேறுபாடுகள் உண்டாகுமே தவிர, ஓர் அனுபவம் எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டிய விசாரணைக்கு இட்டுச் செல்வது குறைவாகவே இருக்கும். அதே நேரம் படர்க்கையில் சொல்லும்போது கூடுதல் அனுபவத்தின் மீது விசாரணையை உருவாக்கும் வாய்ப்புண்டு. ஆனால் கதைக்குள் உருவாக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து விலகி நிற்கும் தன்மையைத் தவிர்க்கவும் முடியாது. சொல்முறைமைகள் சார்ந்த இந்தப் புரிதலோடு விஜய ராவணன் ‘ தங்கமீன்’ கதையைத் தன்மைக்கூற்றும் முன்னிலைக்கூற்றும் படர்க்கைக் கூற்றும் கலந்த ஒரு கலவையில் எழுதியுள்ளார். இந்தக் கூற்றுமுறைமைத் தேர்வு காரணமாகவே அந்தக் கதை கவனத்துக்குரிய கதையாக மாறியிருக்கிறது.

ஒரு சமாதான காலத்தில் ஆயுதங்களை மௌனப்படுத்திவிட்டுச் சந்தித்துக் கொள்ளும் ஒரு போராளியும், போராளிகளை அழித்தொழிப்பதற்கு வந்த ராணுவ வீரனும் சந்தித்து நட்பும் பகையுமான மனநிலையில் உரையாடும் வடிவத்தில் எழுதப்பெற்றுள்ள கதையில் மூன்று பகுதிகள் உள்ளன. அம்மூன்று பகுதியில் முதல் பகுதி, போராளியின் தன்மை கூற்றில், அவர்களது போராட்ட நிலைபாட்டை முன்னிலையில் இருக்கும் போர்வீரனிடம் சொல்லும் முறையில் எழுதப்பெற்றுள்ளது.

நண்பா! நம் இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் பல வருடப் போரில் நான் இரவை விட, பகலைக் கண்டு தான் அதிகம் அஞ்சுகிறேன். உனக்குத் தெரிந்தது தான். போர்க் காலத்தின் விடியல் பொழுது ஏமாற்றங்கள் நிறைந்தவை. இரவின் இருட்டில் நடந்தேறிய கொடுமைகளை பகல் அப்படியே திரைதூக்கிக் காட்டிவிடும். உயிர்வாழ இன்னுமொரு பொழுது போராட வேண்டியிருக்கும் என்ற அறிவிப்புதான் இங்கு விடியல்.

தங்கள் போராட்டத்தை தங்கமீனாகவும் தங்கமீன்களை விற்பவளாகவும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் பெண்ணின் அழியாத உயிராகவும் உருவகத்தித் தன் மொழிதலைக் கவித்துவத்தன்மையோடு சொல்லும் போராளி, போர்க்களத்தில் தனது எதிர்த்தரப்பான ராணுவ வீரனை நண்பா! என விளித்துத் தொடங்குகிறான். அதே மனநிலையோடு ராணுவ வீரனும் நண்பா! என விளித்தே முன்னிலைக்கூற்றில் போராளியிடம் மொழிகின்றான்.

வீசப்படும் ராக்கெட் குண்டுகள் கீழே விழுவதைப் பார்த்திருக்கிறாய் தானே நண்பா? தூக்கத்தில் லேசாய் அசையும் கண் விழிக்காத குழந்தை மாதிரி ஆடிக்கொண்டே தரையை நோக்கி இறங்கும். திடீரென்று எங்கிருந்தோ ஒரு வேகம்! இரையைப் பார்த்த பருந்தின் வேகம். யார் இரை? எத்தனை பெரிய இரை என்றெல்லாம் பொருட்படுத்தாத வேகம். அடுக்குமாடி குடியிருப்பிலோ… பள்ளிக்கூடத்திலோ… ஆஸ்பத்திரியிலோ இறங்கிப் பசியாறும்வரை அந்த வேகம் குறையாது. யார் எதற்கு தன்னை வீசினார்கள் என்ற ரகசியத்தை மரணித்தவனிடமும் சொல்லாது. இறந்தவனுக்கான இறுதிச் சடங்கில் கூட குண்டு விழலாம் இல்லை இறந்தவன் மீதே இன்னொருமுறை விழலாம். மீண்டும் ஒருமுறை சவம் செத்து மடியும். என் அப்பாவுடையதைப் போல்.

                     எந்தவித தடங்கலும் இன்றி இராணுவவீரன் சரளமாகப்                                      பேசினான்…

போராளிகளுக்கு ஒரு நியாயம் இருப்பதுபோல, ராணுவ வீரனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாயத்தை எடுத்துரைக்க இந்த முன்னிலைக்கூற்று உதவுகிறது.

ஆயுதம் தூக்கும் போராளிக்குள்ளும் அவனை அழித்துத் தேசத்தின் அதிகாரத்தை நிலைநாட்டிவிடத்தயாராகும் ராணுவ வீரனுக்கும் பொதுநிலைக்காரணங்களோடு, மனிதர்களுக்குள் இருக்கும் வன்முறை விருப்பம் என்னும் மிருகநிலையைத் தூண்டிவிடத் தனிப்பட்ட வன்மங்களும் நினைவுகளும் இருக்கின்றன. அவரவர் நியாயங்களைப் பேசிய இருவரும் முடிவில் அவரவர் நிலைபாட்டோடு பிரியத்தொடங்கினார்கள் என்பதைச் சொல்லும்போது படர்க்கைக் கூற்றுக்கு நகர்ந்துள்ளது கதை.

**********

ஆயுதமும் வன்முறையும் உண்டாக்கும் மனநிலையை ஒரு போதையாக மொழியும் இந்தக் கதை போர்க்களத்தின் மீது – ஆயுதப்பண்பாட்டை விரும்புபவர்கள் மீது வைக்கும் விசாரணை கதை முழுக்க க்கவித்துவமான உருவகங்களாகவும் உணர்ச்சிகரமான விவரிப்புகளாகவும் நகர்கின்றன. அந்நகர்வைத் தன்னையும் உள்ளடக்கிய தன்மைக்கூற்றில் இருவரும் சொல்லும் நிலையில் அப்பாத்திரங்களின் இயலாமையையும் ஆயுதங்களைக் கைவிடமுடியாதவர்களாக இருக்கும் நிலையையும் உணர்த்துகிறது. அதன் உச்சகட்டச் சொற்களாக இந்தக் கூற்று இருக்கிறது:

நண்பா இதை நீ யோசித்தது உண்டா? சகமனிதன் எப்போது மிருகமாகிறான் என்று. கையில் ஆயுதம் கிடைக்கும் நொடியில். அப்போது வன்மமும் கொடூரமும் நம் ஆழத்திலிருந்து நேர்மையாக வெளிப்படும். அதுவரை ஒரு பொறுப்புள்ள தந்தையாக அன்பான கணவனாக போட்டிருந்த வேஷங்களைக் களைந்துவிடுவோம். அதிலும் எதிரே இருப்பவன் கையில் ஆயுதம் இல்லையென்றால் அதுவொரு போதை. யோசித்துக் கூட பார்க்காத கொடூரங்களை வெகு இயல்பாகச் செய்வோம்.

புனைவுக்கான இடம், காலம், பாத்திரம் என மூன்றிற்கும் குறிப்பான அடையாளங்கள் இல்லாமல் ஒருவித மிகைப்புனைவுபோல எழுதப்பட்டுள்ளது கதை. அதன் வழியாகவே உலகெங்கும் தொடரும் ஆயுதப் போராட்டங்களையும் அதனை அடக்க நினைத்துக் கோரமான உயிர் அழிவுகளையும் நிலமழிப்புகளையும் செய்யும் ராணுவங்களையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளது. 

மொழிபெயர்ப்பில் எந்த வாசகரையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் இந்தச் சொல்முறைக்கு உண்டு. அந்த வகையில் இந்தக் கதையை உலகக்கதையாக ஆக்கியிருக்கிறார் விஜயராவணன். தொடர்ந்து இத்தகைய கதைகளை எழுதுவதின் மூலம் தமிழின் முக்கியமான இளம் கதாசிரியராக உருவாகிவருகிறார்.

---------------------------------------- 
கதைக்கான இணைப்பு https://akazhonline.com/?p=4688

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்