பார்க்கத்தக்க இரண்டு சினிமா

இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.
DNA
தொய்வேற்படுத்தாத வகையில் அடுக்கப்படும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்ற ஊகிப்பைத் தவிர்க்கும்போது துப்பறியம் வகை சினிமாக்களின் திரைக்கதை வேகம் எடுக்கும் ஒன்றாக மாறிவிடும். இந்தவகைத் திரைக்கதையின் பலத்தில் தான் குற்றம், வன்முறை, துப்பறிதல் வகையான சினிமாக்களின் வெற்றி உறுதியாகின்றது.

திரைப்படத்தில் முன்வைக்கப்படும் குற்றச்செயல்கள் சமூகத்தைப் பொதுநிலையில் அச்சப்படுத்தும் ஒன்றாக இருக்கும் நிலையில் அந்த சினிமாவுக்குச் சமூகப் பொறுப்புள்ள சினிமா என்ற தகுதியும் கிடைத்துவிடும். நடப்பது என்னவென்று தெரியாதவர்களுக்கெதிராக நடக்கும் குற்றச்செயல்கள் எப்போதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்று. அப்பாவியான குடும்பப்பெண்கள், முதியவர்கள், பள்ளிச் சிறார்கள் போன்றவர்களின் மீது நடக்கும் வன்முறைகள் இரக்கவுணர்வை உண்டாக்கிப் பார்வையாளர்களை ஒன்றச்செய்துவிடும்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வந்துள்ள DNA மருத்துவமனைகளில் நடக்கும் குழந்தைகள் கடத்தல் என்ற பொருண்மையைப் பின்னணியாக்கித் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்ச்சிகரமான முடிச்சுகளால் பின்னப்பட்ட திரைக்கதையில் இந்திய/ தமிழ் வெகுமக்களை ஈர்க்கும் தன்மைகள் நிரம்பியுள்ளன.

குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது; தள்ளிப்போட மட்டுமே முடியும் என்ற சமயச் சொல்லாடலை முன்வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கடத்தப்படும் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் நடந்த திருமணத்தின் பின்னணியும் இரங்கத்தக்க ஒன்றாக வார்க்கப்பட்டிருக்கிறது. காதல் தோல்வியின் பொருட்டுக் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஒருவனும், குறிப்பிட்ட வகையான மனநிலைப் பிறழ்வு கொண்ட ஒருத்திக்கும் நடக்கும் திருமணத்தில் பிறந்த குழந்தை கடத்தப்படுகிறது என்ற முடிச்சு கூடுதல் அழுத்தமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.
 
பெற்றோர்களின் உடற்கூறுகள் பிள்ளைகளின் உடற்கூறுகளில் தொடர்கிறது என்ற அறிவியல் உண்மையை மட்டும் பேசாமல், அம்மாவின் உள்ளுணர்வு மனநிலையையும் அதனோடு இணைத்துப் பேசும் பொதுப்புத்தியையும் கலந்து பேசியிருக்கிறார்கள் இயக்குநரும் வசனம் எழுதிய அதிஷாவும். தத்து எடுப்பவர்களும் கூடப் பிறப்புக்காலத்தின் சிறப்புகளைக் கணித்துக் குழந்தைகளை வாங்கிப் போகின்றார்கள் என்ற விவரமும் தரப்பட்டுள்ளதால், குழந்தை கடத்தலுக்கும் இடமாற்றங்களுக்கும் காரணங்கள் சொல்லப்பட்டு விடுகின்றன. 

வெகுமக்கள் சினிமாவின் தேவைகள் இவையெல்லாம். இதற்கும் மேலாகத் திணிக்கப்பட்ட ஆட்டக்காட்சிகள், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து வெற்றிக்கான சூத்திரம் முழுமையாகி இருக்கிறது. இந்தச் சூத்திரத்தையே மலையாள சினிமாக்கள் குறிப்பான குடும்ப எல்லைக்குள், அதன் காடுகளையும் நீர்நிலைகளையும் காட்சிப்படுத்திப் பார்வையாளர்களுக்குத் திளைப்பை உண்டாக்குகின்றன. அந்தக் காட்சிப்பின்னணிகளை இந்தப் படம் உருவாக்கவில்லை. அதிகமும் இருட்டும், மழையும் பின்னணியாக நிற்கின்றன.
 
பெரும் செலவில் எடுக்கப்பட்ட பல சினிமாக்கள் வணிகத்தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படம் அதிலிருந்து தப்பி, தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் வெற்றிப்படமாக ஆகியிருக்கிறது. இதுபோன்ற சினிமாக்கள் வழியாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் புதிய நடிகர்களின் வருகையும் வாய்ப்பும் உருவாகின்றன. மலையாள சினிமாவுக்கான இயற்கைக்காட்சிகளைப் போலவே நல்ல நடிப்புக்கலைஞர்களின் இருப்பும் முக்கியமான ஒன்று. அதனை நோக்கியும் இந்தப் படம் நகர்ந்துள்ளது.

8 வசந்தங்கள் ( 8 VASANTALU ) தெலுங்கு சினிமா

படத்தை வாங்கித் தனது சந்தாதாரர்களுக்குப் பார்க்கத் தந்துள்ள நெட்பிளிக்ஸ்(Netflix) படத்தை காதலுணர்வு நிரம்பிய நாடகத் தன்மையான (Romantic Drama)சினிமா என அறிமுக தந்துள்ளது. ஆனால் படத்தைப் பார்த்தபின் அப்படியொரு வகைமைக்குள் அடக்கிவிடத் தோன்றவில்லை.
 
 
பதின்ம வயதில் தோன்றும் உடல்சார்ந்த ஈர்ப்பினால் உண்டாகும் காதலின் சிடுக்குகள் படம் முழுவதும் இருக்கின்றன. மையப்பாத்திரமான ஷுத்தியின் மீது மையல் கொள்ளும் இரண்டு இளைஞர்கள் படத்திற்குள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காதலினால் அலையும் மனமும் அதனால் ஏற்படும் திருப்பங்களும் மட்டுமே திரைக்கதையாக ஆக்கப்படவில்லை.
புதிய தலைமுறையின் நம்பிக்கைகள், ஈடுபாடுகள், விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள், நல்ல நட்புகள் உருவாக்கும் சூழல்கள், அவர்களோடு நடக்கும் உரையாடல்கள் ஏற்படுத்தும் தன்னம்பிக்கை, புரிதல்கள், தெளிவுகள் என நேர்மறையான உணர்வுக்குவியல் நிரம்பிய படத்தைக் காதல் கதையாக மட்டும் சுருக்கிவிட முடியாது. 

தந்தையிடமிருந்து எழுத்தையும், நம்பிக்கையான குருவிடமிருந்து பாதுகாப்புக்கலையான கராத்தேயையும் கற்றுக்கொண்ட பெண்ணின் இளம்பருவ நிகழ்வுகள் தான் மொத்தப்படமும். தந்தை வழியாகக் கிடைத்த எழுத்தார்வம் அவளது எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. உண்மையான ஈடுபாட்டோடு கற்ற கராத்தே பாதுகாப்பைத் தருகின்றது. புதியனவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பெண்ணுக்கு அவை தரும் பலன்கள் படத்தில் பொருத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
படத்தின் நிகழிடங்களாகக் கஷ்மீர், ஊட்டி என பசுமை நிறைந்த இடங்களைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர். எழுதுவதற்காகத் தங்கியிருக்கும் காஷ்மீரில் தோல்வியில் முடியும் ஒரு காதல்; இன்னொரு காதல் அவளது தாயோடு இருக்கும் ஊட்டியில். பார்வையாளர்களுக்குக் குளிர்ச்சியான காட்சித் திளைப்புகளைக் காமிரா நிரப்பித்தருகின்றது. குருவின் ஈமக்காரியத்திற்குச் செல்லும் வாரணாசியும் பயணமாகச் செல்லும் தாஜ்மகாலின் பிரும்மாண்டமும் அதனதன் அர்த்தத்தில் வண்ணக்கலவையாகி நிற்கின்றன.

 
இயக்குநர் பணீந்திர ரெட்டி புதிய இயக்குநர் என்றபோதிலும் தெலுங்குப் படங்களின் வணிக சினிமாவுக்கான கூறுகளோடு நுழையாமல்(உரத்துப் பேசும் வசனங்கள், அடிதடி, அதிரும் இசையோடு கூடிய பாடல்கள் ) என எதுவும் இல்லாமல் தனது சினிமாவை உருவாக்கியிருக்கிறார். பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் பெரும்பாலும் புதிய நடிப்புக்கலைஞர்கள். முழுமையான நடிப்பைத் தர முயன்றுள்ள போதிலும் சில இடங்களில் போதாமை வெளிப்பட்டுள்ளது. ஆனால் மையப்பாத்திரத்தை ஏற்றுள்ள அனந்திகாவின் அழகான உடல்வாகும் உணர்வு வெளிப்பாடுகளும் குறையைக் கவனிக்கவிடாமல் செய்துவிடக்கூடும்.

வன்முறை, குற்றப்பின்னணி, துப்பறிதல், காவல்துறையின் கடமையுணர்ச்சி அல்லது பக்கச்சார்பு என வரும் சினிமாக்களுக்கு - மலையாளச் சினிமாக்களுக்கு ஒரு மாற்றாக - தளும்பலோடு நகரும் நதிபோல ஒரு சினிமாவைப் பார்க்க விரும்புபவர்கள் 8 வசந்தலுவைப் பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்