தொடரும் ஒத்திகைகள்
அங்கம் : 1 காட்சி : 1
இடம்: நாடக ஒத்திகைக்கூடம்.
சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள், புகைப்படங்கள் உள்ளன. நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன. மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன. அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர். அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை. மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர்.
ஓரத்திலிருக்கும் ஸ்டீரியோப் பெட்டியிலிருந்து இசையின் ஒலி
மெல்லியதாகக் கேட்கிறது. உள்ளே நுழைந்த உதவி இயக்குநர், இசை எழுப்பும் கருவியை நிறுத்தி விட்டு கையில் கொண்டு வந்த நாடகத்தின் பிரதிகளைப்
பெயர் சொல்லிக் கொடுக்கிறார். கொடுத்து முடிக்கும் முன் இயக்குநர் வந்து விடுகிறார்.
இயக்குநர்: ரவி ஸ்கிரிப்ட் கொடுத்து முடிங்க. பைண்டிங் நல்லா பண்ணியிருக்கா
.
இன்னையிலிருந்து
ஸ்கிரிப்ட் வீட்டுக்குக் கொண்டு போகலாம். சீக்கிரம்
படிச்சிடணும்
[ரவி அவர்களிடம்
சென்று கொடுத்துவிட்டு வந்து இயக்குநருக்கு நேர் எதிரில்
உட்காருகிறார்]
இயக்குநர்: ரவி நீங்களே பிராக்கெட்ஸ் படிங்க. யாருக்கு என்ன கேரக்டர்ஸ்ன்னு ஒரு தடவை சொல்லிடுங்க.. [ரவி படிக்கிறார்]
லதா - மகள் (வயது 24)
வெங்கடேஷ் - அப்பா (வயது 56)
பாலசரஸ்வதி - அம்மா (வயது 50)
சுப்பையா - கணவர் (வயது 27)
ரவிச்சந்தர் - இளைய சகோதரன் (வயது 30)
அப்பாவிடம் கோபம் கொண்டு வீட்டை விட்டுப் போனவன், கலப்புத் திருமணம் புரிந்தவன்
வேலாயுதம் - மூத்த சகோதரன் (வயது 33) பெற்றோர் சொல் தட்டாத பிள்ளை
இயக்குநர் : லதா, வெங்கடேஷ்.. மேலே போங்க. உங்க அம்மாவெ எங்கம்மா?
லதா : அம்மா ஆபீஸ் போயிருக்காங்க சார்.
[அனைவரும் சிரிக்கின்றனர்]
இயக்குநர் : (தலையில் அடித்துக் கொண்டு) உண்மையான அம்மாவெ நான் கேட்கல. நாடக அம்மா..
பாலா… பால சரஸ்வதி எங்கேன்னு கேட்டேன்..
லதா : அவங்க இதுவரைக்கும் வரலீங்க சார். ஒரு வேளை
பஸ்ஸ மிஸ்
பண்ணியிருப்பாங்கன்னு
நெனக்கிறேன் சார்.
இயக்குநர் : சரி அமுதா.. அம்மாவெ டம்மி பண்ணுங்க… ம்.. ம்.. லதா ஆரம்பிங்கம்மா..
இல்லையில்ல வெங்கடேஷ்
நீங்கதான் ஆரம்பிக்கணும்.
[அந்த மூவரும் உயரமான மேடைத்தளம் ஒன்றில் நின்றபடி வாசிக்கின்றனர்]
ரவி : சார்! நான் பிராக்கெட்ஸ் இங்கிருந்தே படிச்சிடலாமா?
இயக்குநர் : படிச்சிடுங்க
வெங்கடேஷ் : [ பிரதியை வாசிக்கத் தொடங்குகிறார்] திரும்பத்
திரும்ப இதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி? நடந்தது என்னன்னு புரியும்படியா சொன்னால் தானே.. சரி என்னிடம் சொல்ல முடியாத விசயங்கள்னு நினைச்சா உங்க அம்மாகிட்டெ சொல்லலாமே..
லதா : முடிவு எடுக்கிற அதிகாரம் ஒங்ககிட்டெ தானே இருக்கு? அம்மா எதுக்குமே பார்வையாளர் மட்டும் தான்.
வெங்கடேஷ் : எங்களோட 34 வருசத் தாம்பத்ய வாழ்க்கையைப் பத்தி ஒனக்கு என்ன தெரியும்? இதுவரைக்கும் எந்தவொரு முடிவையும் ஒங்கம்மாவெக் கேக்காமெ
எடுத்ததில்லை நான்.
லதா : இருக்கலாம். எல்லாவற்றையும் அவர்களைக் கேட்டே செய்திருக்கலாம். நிச்சயம் உங்கள் பேச்சை மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்…
வெங்கடேஷ் : எங்க உறவைக்
குறித்து உனது விமர்சனம் சரியானதாக இருக்கலாம். ஆனால் ரசிக்கும்படியாக இல்லை.
லதா : விமர்சனங்கள் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே? அடுத்தவர்களைப் பற்றி என்றால் ரசிக்க முடியும். உங்களைப் பற்றி என்றால் எப்படி ரசிக்க முடியும்? அப்பா என் விசயத்தில் சரியான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்
என்பதுதான் நான் கேட்பது.
வெங்கடேஷ் : எனக்கு
சரியின்னு தோணுகிற முடிவைச் சொல்றதுக்கோ செயல்படுத்துறதுக்கோ எனக்கு எந்தத் தயக்கம்
கிடையாது.
லதா : இதுதான் பிரச்சினை. இதுதான் என்னோட அடிப்படைப் பிரச்சினை.
வெங்கடேஷ் : எது? விசயம் என்னன்னு சொல்லாமலேயே என்னுடைய முடிவைத் தெரிஞ்சுக்கணும்னு
எதிர்பார்க்கிறதா?
லதா :அப்பா. விளையாட்டுக்கும் வேடிக்கைக்கும் இது நேரமில்லை. என்னுடைய வாழ்க்கையின் எதிர்காலமும் சுயகௌரவமும் வேடிக்கையாகப்
பேசிச் சிரிக்கக் கூடிய செய்திகள் அல்ல.
அமுதா : அம்மா
என்னம்மா சொல்றே.. பத்து மாதம் சுமந்த வயிற்றில் நெருப்பை அள்ளிப் போடுற மாதிரி.. ( சிரிக்கிறார்)
இயக்குநர் : (கோபமாக) அமுதா பீ சீரியஸ் நவ் யூ ஆர் மதர் டூ தட் கேர்ள். உங்க வயசு 50 . யூ நோ ..
அமுதா : சாரி சார்.. (அம்மாவாக வசனங்களைத் தொடர்கிறார். மூவருமே தங்கள் தங்கள் கதாபாத்திரங்களை நடிக்கத் தொடங்கி
விடுகின்றனர். கையில் வசனப்பிரதிகள் இல்லை)
என்னம்மா
சொல்றே.. என் தலையில் நெருப்பள்ளிக் கொட்டுற மாதிரி..
லதா : நான் அவரோட சண்டை போட்டு வீட்டை விட்டுட்டு வந்துட்டேன்.
வெங்கடேஷ் : நீ சொல்றது
நிஜம்தானா? உன் புருசன் உன்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாரா?
லதா : அவர் என்ன என்னை அனுப்புறது. நானே வந்துட்டேன்.
வெங்கடேஷ் : வரக்காரணம் ?
லதா :எல்லா ஆண்களும் ஒண்ணுபோல தான் இருக்காங்க.பெரிசா வித்தியாசங்கள் இருக்கிறதா தோணல.
அமுதா : உன்னோட
மாப்பிள்ளையும் மற்ற ஆம்பிளகளும் ஒண்ணா? நிச்சயமா
இருக்க முடியாது. வரதட்சணைங்கிற வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்க விரும்பியது
இல்லை/
வெங்கடேஷ் : நீ சும்மா
இரு. பலரும் கல்யாணத்துக்கு முன்னே அப்படிச் சொல்வாங்க. தேவைகளும் நெருக்கடிகளும் தான் மனிதனின் லட்சியங்களுக்குப்
பரீட்சை நடத்திப் பார்க்கின்றன. வெற்றியா ? தோல்வியா? என்பது நெருக்கடிகளின் தன்மைகளைப் பொறுத்துத்தான் சொல்லக்
கூடியது. மாமனார் வீட்ல இருந்து எதாவது வந்தா தேவலையின்னு நினைச்சுட்டா
நெருக்கடிக்கு வெற்றி. லட்சியங் களுக்குத் தோல்வி.
அமுதா : அது உண்மை
தான், அவர் வேண்டாம்னு சொன்னாலும் நாமெ செய்ய வேண்டியதைச் செய்துருக்கணும். இப்ப அவரே கேட்டுட்டார்னா ஊர் நடப்பு எப்படியோ அப்படி அப்படியே
செய்துட வேண்டியதுதான்.
வெங்கடேஷ் :ஆமா.. அதுதான் சரி. மாப்பிள்ளையோட
எதிர்பார்ப்பு என்னன்னு தெரிஞ்சுட்டா அது நம்ம திராணிக்கு இயலுமென்றால் செய்திட வேண்டியதுதான். என்னம்மா நகைநட்டு, ரொக்கம், தட்டுமுட்டுச் சாமான்கள்.. இப்படி எதாவது லிஸ்ட் இருக்குதாம்மா?
லதா : போதும் நிறுத்துங்க. நேர்ல இல்லாத ஒரு மனுசனப் பத்தி இவ்வளவு கொச்சையாப் பேசுறது
சரியில்ல..
அமுதா :இது சரியா? தப்பாங்கிறது இல்ல பிரச்சினை. உலக நடப்பு என்னவோ அதைத்தான் நாங்க சொன்னோம். வரதட்சணைன்னு ஒரு தம்பிடிக்காசு வேணாம்னு சொன்ன மாப்பிள்ளை
உன்னை தனியா அனுப்பி வச்சா பெத்த மனசு பதறுமா? பதறாதா?
லதா : அம்மா. திரும்பவும் சொல்றேன். அவர் அனுப்பல. நானே வந்துட்டேன்.
வெங்கடேஷ் : அதான்
ஏன்? உங்களுக்குள்ள என்ன பிரச்னை?
லதா : ஒவ்வொரு ஆணுக்குள்ளேயும் தான் ஒரு ஆண் என்கின்ற சுயமோகம் நிலையில்லாம அலைஞ்சுக்கிட்டே
இருக்கு.
வெங்கடேஷ் : இருக்கலாம். அலைதலின் வெளிப்பாடுகளில் ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசம்
இருக்கே . இப்போ என்னையவே எடுத்துக்கோ நான் ஒரு ஆண் என்பதை எல்லா நேரமும்
உணர்த்திக் கிட்டே இருக்கிறவன். ஆனால் மாப்பிள்ளை அப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறவர் இல்லையே. அவரும்சரி அவருடைய நண்பர்களும் சரி பெண் மதிக்கப்பட வேண்டியவள்; ஆண்கள் விட்டுத்தர வேண்டியவர்கள் என்கின்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறவர்கள்
ஆயிற்றே. வரதட்சணை எதிர்ப்பு என்று பேசுவது மட்டும் அல்லாமல் செயலில்
காட்டியவரும் ஆயிற்றே.
லதா : இதைத் தான் என்னால ஒத்துக் கொள்ள முடியல. நான் மதிக்கப்பட வேண்டியவள் என்கின்ற அவரின் நினைப்பிலேயே தான் ஒரு ஆண்
பெண்ணைவிட உயர்ந்தவன் என்கின்ற அகம்பாவம் வெளிப்படுது. என்னோட உரிமைகளை விட்டுக்கொடுக்க அவர் யார்? என்னோட உரிமைகள் என்னன்னு எனக்குத் தெரியாதா?
வெங்கடேஷ் : குடும்பம்
என்று வந்தால் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தாம்மா இருக்கும். நீ தான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும். என்ன இருந்தாலும் அது ஒனக்குப் புகுந்த வீடு தானே?
லதா : எனக்கு அது புகுந்த வீடுன்னா அவருக்கும் அது புகுந்த வீடாத்தானே இருக்கணும்.
வெங்கடேஷ் : அது புகுந்த
வீடு தான். மாப்பிள்ளையோட அப்பா அவருக்காக வாங்கித் தந்த வீடு தான். அப்படிப் பார்த்தா அவருக்கும் அது புதுசாக் குடி புகுந்த
வீடு தான்.
லதா : வேடிக்கைப் பேச்சைக் கொஞ்சம் நீங்க நிறுத்தி வைக்கலாம்.
வெங்கடேஷ் : என்னோட
வேடிக்கையை நிறுத்தச் சொல்ற நீ முதல்ல ஒன்னோட விளையாட்ட நிறுத்திட்டு நேரெ விசயத்துக்கு
வாம்மா.. மாப்பிள்ளைக்கும் உனக்கும் என்ன பிரச்னை? (அவள் தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த அந்த உரையாடலைத் திரும்பவும்
நினைத்துக் கொள்கிறாள். பின்னணி இசையும் திருப்புக் காட்சிக்கேற்ப இசைக்கிறது. ஒளிமாற்றமும் நடக்கிறது. இடம்: வேறொரு வீட்டின் பெரிய அறை. சுப்பையாவும் லதாவும் கணவன் –மனைவியாக
அவர்கள் வீட்டில். இது ஒத்திகை அல்ல)
சுப்பையா : உன்னோட
வாதங்கள் நியாயமற்றவையின்னு சொல்ல வரல. நம்முடைய
தேவைகளுக்குப் போதுமான பணத்தை என்னால சம்பாதிக்க முடிகிறது. உனக்கு விருப்பமானா நீயும் வேலைக்குப் போறதுல எனக்கு எந்த
ஆட்சேபணையும் இல்ல. இப்படி யோசிக்கிறத விட்டுடு.
லதா : மாமனார் வீட்டில இருந்து வர்ற பணம் உங்களுக்குக் கௌரவக் குறைச்சல். வரதட்சணை வாங்குறது உங்க பார்வையில ஒரு பாவம்.
சுப்பையா : வரதட்சணை
வாங்குவது கௌரவக் குறைச்சலா? பாவச்செயலா? என்றெல்லாம்
ஆராய வேண்டியதில்லை. பல பெண்களுக்கு நிம்மதியும் வாழ்க்கையும் தொலைந்து போனதுக்கு
வரதட்சணை ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.
லதா : நான் கேட்கப் போறது வரதட்சணை அல்ல. என்னுடைய பாகம். அப்பாவின் சம்பாத்தியத்தில் என் சகோதரர்களுக்கு இருப்பது
போல எனக்கும் ஒரு பங்கு உண்டு. அது எனக்கு வேண்டும்.
சுப்பைய : நீ கேட்கப்
போறது உன்னோட பாகமா இருக்கலாம். ஆனால் நான் வரதட்சணை கேட்டு உன்னைத் துரத்திட்டதத்தான் அது
உணரப்படும். பொருள் – பணம் என்கின்ற ரீதியில் ஏன் நாம் விசயங்களை அணுகணும். அன்பு, பாசம், விட்டுக் கொடுத்தல் என்கின்ற ரீதியில் பிரச்னைகளை ஏன் அணுகக்
கூடாது.
லதா : நீங்க விட்டுக் கொடுத்தல் என்று சொல்வதை விலங்கு மாட்டுதல்; என்று சொல்லலாமில்லையா? உங்க அன்பும் பாசமுமே என்னோட பாரங்களா மாறிடுமோன்னு தோணுது.
சுப்பையா : இதெல்லாமே
பிரமைகள் தான். எல்லாத்துக்கும் எல்லாரும் ஒத்துக்கொள்ளக் கூடிய வரையறைகள்
இருக்க முடியாது தான்.
லதா ; வரையறைகளை அவங்க அவங்க கோணத்தில் இருந்து சரியான்னு பார்க்கிறதுக்கான உரிமைகள்
ஒவ்வொருத்தருக்கும் உண்டு தானே. இந்த உரிமையைக் கூட நீங்க தான் தரணுமோ.
சுப்பையா : நீயெல்லாவற்றையும்
உன்னோட கோணத்திலிருந்து தான் பார்க்கிற. உனக்குப்
புரிய வைக்கிறது அவ்வளவு சுலபமில்ல.
லதா : எல்லா ஆண்களும் எல்லாப் பிரச்சினைகளையும் அவங்க கோணத்தில இருந்து தான் பார்த்து
இருக்காங்க.
சுப்பையா : இதை ஏன்
ஆண் – பெண் பிரச்சினையாப் பார்க்கணும்? ஒரு குடும்பத்தின் பொதுப்பிரச்சினையா ஏன் பார்க்கக் கூடாது.
லதா :குடும்பம்ங்கிறதே பெரும்பாலும் ஆண்களின் கோணத்திலிருந்து உருவாக்கப்பட்டது தான்னு
நீங்களே எனக்குச் சொல்லி இருக்கீங்க.
சுப்பையா :விதி விலக்குகளை
உருவாக்குகிறதிலே தான் அது மாற்ற முடியும்னும் சொல்லியிருக்கேன்.
லதா :உண்மை தான் ஆனா.. விதி விலக்குகளா.. காட்டிக்கிறவர்களும் புதிய விதிகளை உருவாக்குகிறவர்களா மாறத்தான் முயற்சி செய்றாங்க. விதிகளின் தன்மைகளில் தான் வித்தியாசம் இருக்குமே ஒழிய விதிகள்
இல்லாமல் போகிறது இல்ல.
சுப்பையா : இனியும்
ஒன்னத் தடுத்தா நான் ஒரு ஆணாதிக்க வெறியன்னு பட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும். ஒரேயொரு விசயத்தை மட்டும் யோசிச்சு பாரு. உங்க வீட்டுல உண்டாகப் போற புயல் உங்க அப்பா எதிர்கொள்ள வேண்டிய
மனோதைரியம்; அவருக்கு நீ தரப்போற வலியோட அளவு அதைத் தான் நீ யோசிச்சுப்
பார்க்கணும். சொல்ல விரும்பியதைச் சொல்லிட்டேன். முடிவு பண்ண வேண்டியதும் செயல்பட வேண்டியதும் நீதான். ( அவன் வெளியேறுகிறான். ஒளி மங்கிய பொழுது அவள் தனியாக நிற்கிறாள். பின்னணி இசையிலும் மாற்றம் . திரும்பவும்
ஒளி வரும்போது பழைய காட்சி. அப்பா, மகள், அம்மா.. கணவனாக நடித்தவன் மற்ற நடிகர்களோடு உட்கார்ந்திருக்கப் பரவிய
ஒளி, திரும்பவும் அந்த மூவரிடம் சுருங்குகிறது.)
வெங்கடேஷ் : உன்னுடைய
முடிவு என்னன்னு எனக்குப் புரிந்து விட்டது. இப்ப என்னோட முடிவை எதிர்பார்த்து நிக்கிற இல்லை.. உன்னோட உரிமையை நிலைநாட்டத் தயாராயிட்ட.
அமுதா : என்னம்மா
இது. ஆலமரம் போல நிக்கற உங்க அப்பாவோட ஆணிவேரையே வெட்டுகிறதா முடிவு
பண்ணிட்டாயா? உங்க அப்பாகிட்டெ கோவிச்சுக்கிட்டுப் போயி கஷ்டப்பட்டு சுயமாச்
சம்பாதிச்சு நல்ல நிலைக்கு வந்திருக்கான் உங்க அண்ணன். அவனே அவனோட பாகத்தைப் பிரிச்சுக்கொடுன்னு கேட்கல. அவனுக்குப் பொண்டாட்டியா வந்திருக்கிற இன்னொரு சாதிப் பொண்ணு அவ கூட அப்படிக்
கேட்கும்படி தூண்டல. நீ அவரு பெத்த பொண்ணு; அவரோட கௌரவத்துக்கு உலை வைக்கிற காரியத்தில் இறங்கிட்டேயே.
லதா :பலருடைய உரிமைகளை மறுக்கிறதுல தான் ஒருவருடைய கௌரவம் அடங்கியிருக்குன்னா அந்த
ஒருத்தருக்காக வருத்தப் படுதிறதுல அர்த்தமில்ல.
அமுதா : ஒருவர் –பலர் என்கின்ற எண்ணிக்கையை அடிப்படையில் எல்லாவற்றையும் முடிவு
செஞ்சிட முடியாது. அந்த ஒருவர் உன்னோட மூலம். உன் அப்பா. அவர்தான் உன் உடம்பின் ஆதாரம். இயக்கத்தின் சக்தி.
வெங்கடேஷ் : அவளோட
அகராதியில் இதற்கெல்லாம் அர்த்தங்களே கிடையாது. இனியும் அவளிடம் பேசுவதில் பிரயோசனம் இல்லை. அவளுடைய தேவை என்னன்னு கேளு. நகை, ரொக்கம், சாமான்கள்
வரதட்சணையா வாங்கிட்டு போகச் சொல்லு
லதா : வரதட்சணையா தர்றதா இருந்தா எதுவுமே வேணாம். எனக்குத் தேவை உங்களோட சொத்தில் பங்கு ; என் சகோதரர்களுக்கு என்ன கிடைக்குமோ அதே அளவு எனக்கும் வேண்டும்
அமுதா ; ஏண்டி
இப்பிடிப் பிடிவாதம் செய்றே..உனக்குக் கிடைக்கிற பங்கை விடக் கூடுதலா வாங்கிக்க.
லதா : பாகப்பிரிவினை செய்தாகணும்னு நான் சொல்றதுல என்னோட சுயநலம் மட்டும் இல்ல; என்னோட சகோதரர்களின் நலனும் இருக்கு.
வெங்கடேஷ் : என்ன சொல்றே
நீ..
லதா : ஒங்ககிட்டே கோவிச்சுக்கிட்டுப் போன என்னோட அண்ணனுக்குச் சேர வேண்டிய சொத்தை
அன்னைக்கே கொடுத்திருந்தா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டான் அவன். இப்ப சம்பாதித்ததை விட இன்னும் கூடுதலா சம்பாதிச்சிருப்பான்.
பெரியண்ணனுக்கும்
சுயமாத் தொழில் செய்றது எப்படின்னு புரிஞ்சிருக்கும். அவரை உலகமே தெரியாத அப்பாவியாத்தான் வளர்த்திருக்கீங்க. உங்க பிள்ளையும் நீங்க செய்த தொழிலையே செய்யணும்னு நினைக்கிறதிலயே
உங்களோட அதிகாரம் தங்கியிருக்கு.
வெங்கடேஷ் : இப்படியெல்லாம்
பேசக் கத்துக் கொடுத்தது யாரு? உன்னோட புருசன் தானே.
லதா : புத்திசாலித்தனமா நம்ம பொண்ணு பேசுறாளேன்னு சந்தோசப்படக்கூட நீங்க தயாரில்ல. அதையும் ஒரு ஆண் தான் கற்றுத் தந்திருப்பான்னு நினைக்கிறத
முதல்ல விடுங்க.
( சகோதரன் அங்கே நுழைகிறான். அவர்கள் பேசுவதை நிறுத்துகின்றனர். ஒளி மங்குகிறது. வீட்டின் முன் அறையில் அம்மா, அப்பா,லதா, புதிதாக வந்த சகோதரன் )
ரவி : சார் ரவிச்சந்தர் இன்னும் வரல…
இயக்குநர் : ஏற்கெனவே
அம்மாவுக்கு டம்மி. இப்போ ஓடிப்போன அந்த சகோதரனுக்கு யார் டம்மி பண்றது. ரவிச்சந்திரனுக்கு என்ன ஆச்சு? அவரும் பஸ்ஸ மிஸ் பண்ணிட்டாரா. அவர் ஸ்கூட்டரில்
தானே வருவாரு? ஒத்திகை இருக்கிறது தெரியும் தானே. நேரத்துக்கு வரலையின்னா ஒன்னும் செய்றதுக்கு இல்ல.
ரவி : ரவிச்சந்தர் வந்த உடனே சொல்லிடலாம் சார்.
இயக்குநர் : ஒருத்தரே
எல்லாக் கேரக்டரையும் படிக்கிறதா இருந்தா அதுக்குப் ப்ளே ரீடிங்க் இல்ல. தனியா வீட்டிலயே உட்கார்ந்து படிச்சுக்கலாமே. ஒத்திகையின்னா என்னென்னு தெரிஞ்சுக்கோங்க. எல்லாப் பாத்திரங்களுக்கும் நபர்களை தயார் பண்ணிட்டு அப்புறம்
ஆரம்பிக்கலாம்.
ரவி : நாளைக்கு எல்லாரும் நேரத்துக்கு வந்துடுவாங்க சார்.
இயக்குநர் : அப்போ
நாளைக்கு வச்சிக்கிடலாம்.
(அவர் வெளியேறுகிறார். மற்றவர்களும் அமைதியாகக் களைகின்றனர்)
அங்கம் : 2
காட்சி :1
· அதே ஒத்திகைக் களம். நடிகர்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
· பாலசரஸ்வதியும் அமுதாவும் முதுகோடுமுதுகு படும்படி உட்கார்ந்து கையை ஊன்றாமல்
எழுந்து நிற்க முயல்கின்றனர்.
· வெங்கடேஷும் ரவிச்சந்தரும் கண்ணாடிக்கு முன் நிற்கும் நபர்களாக நிற்க, சுப்பையாவும் வேலாயுதமும் கண்ணாடிகளாக நிற்கின்றனர். கண்ணாடிக்குள் தெரியும் பிம்பங்களாக அவர்களது அசைவுகள்.
· உதவி இயக்குநர் ரவி தனியாக யோகாசனப் பயிற்சி ஒன்றில் லயித்துள்ளார்
· மேற்கத்திய இசை சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது
· முகுந்தன் வசனம் ஒன்றை மனதிற்குள் சொல்லியபடி நடந்து, திரும்பி, கைகளை
அசைத்துப் பேசியபடி உள்ளார்.
· இயக்குநர் உள்ளே வர, பயிற்சிகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்தவர்கள், பல்வேறு இடங்களில் அமர்கின்றனர்.
· ரவி, அடுக்கப்பட்டிருந்த பிரதிகளை அவர்களிடம் வழங்குகிறார்.
இயக்குநர் : இன்னக்கி ஒன்னும் பிரச்சனை இல்லையே. எல்லோரும் வந்தாச்சு தானே?
உதவி இயக்குநர்
ரவி :
லதா மட்டும் வரலீங்க சார். ஆனா தேவையான அளவுக்கு மேலே நடிகர்கள் இருக்கிறாங்க சார். தேவைப்பட்டால் இன்னும்கூடச் சிலர் வர்றதாச் சொல்லியிருக்காங்க
சார்.
இயக்குநர் : நேற்றைக்கு அம்மாவுக்கு டம்மி. இன்னைக்கி மகளுக்கு டம்மியா? ஏம்மா
பாலா, நேற்று ஏன் வரல.
பாலசரஸ்வதி : வீட்டில் கொஞ்சம் வேலை இருந்தது சார். முடிச்சுட்டு வந்தா லேட்டாயிடும். லேட்டா வந்தா நீங்க திட்டுவீங்க.
இயக்குநர் : எப்படியும் திட்டு கிடைக்கும். அதை மொத்தமா நாளைக்கே வாங்கிடலாம்னு முடிவு பண்ணீட்டீங்க. அப்படித்தானே. ரவிச்சந்திரனுக்கு
என்ன வேலை?
ரவிச்சந்தர் : வண்டி ரிப்பேராயிடுச்சுங்க சார்.
இயக்குநர் : சரி அமுதா. இன்னக்கி
மகளா டம்மி பண்ணுங்க.
உதவி இயக்குநர்
ரவி :
சார் வந்து ஒரு யோசனை. (தயக்கம்)
இயக்குநர் : என்ன சொல்ல வர்றீங்க. ஆரம்பிச்சுட்டு ஏன் நிறுத்துறீங்க. தயங்காம சொல்லுங்க.
உதவி இயக்குநர்
ரவி :
அமுதா அம்மாவாகவே நடிக்கட்டும் சார். பாலசரஸ்வதி ’மகள்’ கேரக்டரா செய்யலாம் சார்
இயக்குநர் : எப்போ நாடகத்தோட இயக்குநரா மாறினீங்க ரவி. நீங்க எனக்கு உதவி செஞ்சா மட்டும் போதும். எந்தப் பாத்திரத்துக்கு யார் நடிக்கலாம்னு முடிவு பண்ண வேண்டியது
என்னோட வேலை.
ரவி :
அப்படிச் சொன்னது அதிகப்பிரசங்கித்தனமின்னு தெரியும் சார். ஆனால் அதுக்கு ஒரு காரணம் இருக்கு. லதா இந்த நாடகத்தில நடிக்க வரமாட்டாங்களாம் சார். ஒரு லட்டர் கொடுத்து அனுப்பி இருக்காங்க. (ரவி கடிதத்தைக் கொடுக்க எழுந்திருக்கிறார். பாலசரஸ்வதி அவரிடமிருந்து வாங்கி இயக்குநரிடம் தருவதற்காக
முன்னேறுகிறார்)
இயக்குநர் : (கையை நீட்டி வாங்க நினைத்தவர்
வாங்காமல்) பாலா, நீங்களே சப்தமா படிங்கம்மா. எல்லாரும் கவனிங்க,
பாலசரஸ்வதி : (கடிதத்தை எடுத்து விரித்து சத்தமாகப்
படிக்கத்தொடங்குகிறார்) மதிப்பிற்குரிய
இயக்குநர் அவர்களுக்கு… நேரில் வந்து எனது இயலாமைத் தெரிவித்திருக்க வேண்டும். என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். (இங்கிருந்து லதாவாக
மாறி)
நேரில் வருவதில் எனக்குத் தயக்கம் கிடையாது.நேரில் வந்தால் இதை உங்களிடம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இந்த நாடகத்தில் ’மகளாக’ என்னால் நடிக்க இயலாது. ஆயிரம் ஒத்திகைகள் நடத்தினாலும் அது சாத்தியம் இல்லை.
(கண்களில் நீர் நிரம்பி நிற்கிறது)
எது பொய்? எது உண்மை? அன்றாட
வாழ்க்கையில் எனது இயக்கங்கள் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறேன். மேடையில் நான் ஏற்ற பாத்திரங்களைப் பொய்யென்று உணர்ந்திருந்தேன். இந்தப் பெண் எனது நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடப்
பார்க்கிறாள். நடிப்பதற்குத் தான் ஒத்திகைகள் தேவை. வாழ்வதற்கு அல்ல. உண்மையில் அந்தப் பெண்ணாக வாழவே நான் விரும்புகிறேன். நடிப்பதற்கு அல்ல.
(பாத்திரத்திலிருந்து விடுபட்டவளாய்)
வெற்றிகரமாக
நாடகம் மேடை ஏறும்பொழுது நான் வருகிறேன். பார்வையாளர்களில்
ஒருத்தியாக… திரும்பவும் மன்னிப்புக் கோருகிறேன்…
உங்கள்
உண்மையுள்ள
லதா.
இயக்குநர் : ஆக.. லதாவைப் பொருத்தவரை நாடகம் முடிந்து விட்டது.
சுப்பையா : அதெப்படி.. மேடையேற்றம் காணாமல் ஒரு நாடகம் முடிவடையும்.
இயக்குநர் : மனமென்னும் மேடையில் லதா நாடகத்தை நிகழ்த்திப் பார்த்துவிட்டார் என்று சொல்ல வந்தேன்
உதவி இயக்குநர் : லதாவுக்குப்
பதிலா. பாலசரஸ்வதி நடிக்கத் தயாரா இருக்காங்க சார்.
பாலசரஸ்வதி : ரவி சொல்றது உண்மைதான் . நீங்க என்னை தேர்வு செய்தா? நிச்சயமா
அந்த ‘ரோலை’ நல்லபடியாக செய்ய முயற்சி செய்வேன் சார்.
இயக்குநர் : பாலா நடிக்கிறாங்களா ? … அமுதா செய்றாங்களாங்கிறது இருக்கட்டும். லதாவோட முடிவைப் பத்தி நாம் கொஞ்சம் பேசலாமே. அவரோட கடிதத்தை எல்லாரும் கேட்டிருப்பீங்க. எல்லோரும் அவங்கங்க கருத்தைச் சொல்லலாம்.
வேலாயுதம் : லதாவோட கடிதம் அடிப்படையான ஒரு பிரச்சினையை எழுப்புறதாத்
தோணுது. நாடகம், வாழ்க்கை – இரண்டையும்
பிரிக்கிற எல்லைக்கோடு எங்கே இருக்கிறது? லதாவைப்
பொருத்த வரையிலும் அப்படி ஒரு கோடு இல்லை. ஆனா.. என்னைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமா ஒரு கோடு இருக்கிறதா நம்புறேன்.
நான் ஒரு கலைஞன். என் மூலம் வெளிப்படும் செய்திகள் இந்தச் சமூகத்திற்குப் பயன்படும்; பயன்பட வேண்டும். அவை எனக்கும் போதிக்கின்றன என்பது இரண்டாம் பட்சம் தான். நான் நடிகனாக- ஒரு கலைஞனாக
இருப்பதை இப்படி உணர்த்தினால் தான் ( ஒரு சிரிப்பொலி கேட்கிறது)
இயக்குநர் :யார் சிரிச்சது? வேலாயுதத்தோட பேச்சு வேடிக்கையானதா நினைச்சா உங்க கருத்தை நீங்க சொல்லலாம். உங்கப் பேச்சுக்கு இன்னொரு சிரிப்பு பதிலா இருக்கும்கிறதை
மட்டும் புரிஞ்சுக்கிட்டா சரி.
வெங்கடேஷ் : மன்னிக்கணும். வேலாயுதம்
அவரை உணர்ந்து கொண்டதால் கலைஞனாக இருக்கிறேன் என்கின்றார். லதா தன்னை உணர்ந்து கொண்டதால் கலைஞனாக இருக்க முடியாது என்கிறாள். இது எனக்கு முரண்பாடாகத் தோணல. விநோதமான விளையாட்டாத் தோணுது.
சுப்பையா : உண்மை – பொய் என்ற வார்த்தைகளின் மேல் கட்டப்பட்ட அபிப்பிராயங்கள்
தான் லதாவைக் குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. எல்லா வார்த்தைகளுக்கும் எல்லா நேரங்களிலும் ஒரே விதமான அர்த்தங்கள் தானா இருக்கின்றன?
ரவிச்சந்தர் : நிச்சயமா அர்த்தங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. வார்த்தைகள் உச்சரிக்கப்படும் சூழ்நிலைதான் அர்த்தங்களை உருவாக்குகின்றன. இதில் நடிகர்களாகிய நாம் அறிந்திருக்கின்ற பாலபாடம் தான்.
அமுதா :
வார்த்தைகளின் அர்த்தங்கள் தானாக மாறுவது மட்டும் அல்ல. அதிகாரத்தின் துணையோடு மாற்றவும் படுகின்றன. “ அவள் நிர்வாணமாக்கப்பட்டாள்; மானபங்கப் படுத்தப்பட்டாள்; ஆனால்
கற்பழிக்கப்படவில்லை “ என்று அதிகாரம் தனது தீர்ப்பை வழங்குவதன் மூலம் ’கற்பழிப்பு ’ என்பதற்கான
அகராதி அர்த்தமும் நடைமுறை அர்த்தமும் துடைத்தெறியப்படுகின்றன. எல்லா நேரங்களிலும் அதிகாரம் வன்மையானதாக செயல்படுகிறது.
உதவி இயக்குநர்
ரவி :
அதிகாரம் தன் நிகழ்வை ஒத்திகையில் நடத்துவதில்லை. வார்த்தைகளின் அர்த்தங்களும் உள் அர்த்தங்களும் முழுமையாக
வெளிப்படும்படியாக ஒத்திகைகள் பலமுறை நடத்தப்படுகின்றன. நாம் நம் நாடகத்தின் ஒத்திகையைத் தொடருவதே சரியெனப் படுகிறது.
சுப்பையா : எனக்கு இன்னொரு கேள்வி. லதாவோட முடிவுக்கும் இந்தக் கேள்விக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது
கூட எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கேட்கத் தோன்றுகிறது.
பாலசரஸ்வதி :சுப்பு.. பீடிகையெல்லாம் வேண்டாம். நேரடியா விசயத்துக்கு வா.
சுப்பையா :அப்படியா சொல்றே பாலா. சரி கேட்க நினைச்சத சொல்றேன். நிகழ்வுங்கிறது – பெர்பார்மன்ஸ் – மேடையில்
தான் நடக்கணுமா? கற்பிதமான இடங்கள் தான் மேடை தளங்களா?
பாலசரஸ்வதி போதும்.. போதும்.. ரொம்ப வெறுப்பேத்தாதீங்கப்பா. இந்த ஒத்திகையைத் தொடரப் போறோமா இல்லையா? அதை முதல்ல முடிவு பண்னுங்க..
வெங்கடேஷ் : இல்லை பாலா. சுப்பையாவோட
கேள்வியில அர்த்தமிருக்கிறதா தோணுது. அர்த்தமில்லாததக்
கூட அர்த்தப்படுகிற நாமெ.. நம்மளோட நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படும் போது அதை
எதிர்கொள்ளப் பயப்படுற மாதிரி தெரியுது.
பாலசரஸ்வதி : எனக்கு இந்த வியாக்யானங்கள் எல்லாம் ஒண்ணும் புரியல. நான் ஒரு நடிகை. மிகச் சாதாரணமான நடிகை. அதனாலேயே நான் ஒரு கலைஞனாக இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லிக்
கொள்ளத் தயாராக இல்லை. என்னிடம் தரப்படும் பாத்திரத்தை என்னால் முடிந்த அளவுக்கு
உயிரூட்ட முயல்கிறேன். என்னோட முயற்சி போதாது என்பது உணரப்படும்போது இயக்குநர் உதவுகிறார். இதை மனதார ஏற்றுக் கொள்கிறேன். இயக்குநரின் யோசனைகள் என்னுடைய ஆளுமையைச் சிதைப்பதாக நினைப்பதில்லை.
வெங்கடேஷ் : இதை என்னைக் குறி வைத்துத் தாக்குவதாக நினைக்கிறேன். அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. இயக்குநர் சொன்னதை மாற்றிச் செய்வதில் நடிகனின் தனித்தன்மை வெளிப்பட வாய்ப்புள்ளது. தேடுதலற்ற நபர்கள் நகல்களை உற்பத்தி செய்வார்கள். இந்தக் கணத்திற்கும் அடுத்த கணத்திற்கும் வித்தியாசங்கள்
உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஸ்டானிஷ்லாவ்ஸ்கி
சொன்ன ‘க்ரியேட்டிவ் ஆக்ட்ரா’ ஆகணும்னு நான் வேலை செய்றேன். அதெ வெட்டி
வேலைன்னு சொல்றீங்களா..?
உதவி இயக்குநர்
ரவி :
ஒத்திகையைச் சிதைக்கிற பேச்சுக்களை வளர்த்துக் கொண்டு போவது
அவ்வளவு நல்லதாத் தெரியல.
இயக்குநர் : சுப்பையா உங்கள் கேள்விகளைத் திரும்பவும் சொல்ல முடியுமா?
சுப்பையா : கற்பிதமான இடங்கள் தான் மேடை தளங்களா? நிகழ்வு என்பது மேடையில் தான் நடை பெற வேண்டுமா?
ரவிச்சந்தர் : இப்படியான கேள்விகளும், அவற்றிற்கான புதியபுதிய பதில்களும் நாடகக் கலையின் சாராம்சமான தர்க்கங்களை உலுக்கிப்
பார்ப்பனவாக ஆகி விட வாய்ப்புகள் உண்டு. யோசித்துப்
பார்த்தால், நான் எல்லா நேரமும் எதையாவது நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கிறேன்
வேலாயுதம் : வழங்கப்பட்டுள்ள “இந்த உலகம் கற்பிதமானது “ என்ற தர்க்கத்தின் அடிப்படையில்.
உதவி இயக்குநர்
ரவி :
பெரும் பெரும் திருவிழாக்களின் நிகழ்வெளியைக் கற்பிதம் என்றா
சொல்ல முடியும்.
வெங்கடேஷ் : திருவிழாக்களில் பவனி வரும் விக்கிரகங்களின் ஊர்வலங்கள் அப்படித்தான்
மாற்றுகின்றன.
அமுதா :
ரதங்களின் ஊர்வலங்களும், கார்களின் பவனிகளும் தேர்த்திருவிழாக்களை இடம் பெயர்த்துக் கொண்டிருக்கின்றன. உற்சவ மூர்த்திகள் வைப்பாட்டிகளோடும் காவல் தெய்வங்களோடும்
நடத்தும் பவனிகள் கற்பித வெளியையும் உண்மை வெளியையும் குழப்பித் தர்க்கங்களைச் சிதைக்கின்றன. பாத பூஜைகள், நாமகரணம்
சூட்டல் என நடக்கும் நிகழ்வுகளோடு நம் நிகழ்வுகள் போட்டியிடத் திராணியற்றவை என்பதைக்
கூட நாம் உணரத் தயாராயில்லை.
இயக்குநர் :உங்கள் பேச்சுகள் எனக்கு ஒன்றை மட்டும் உணர்த்துகின்றன. ஒத்திகையை ஆரம்பிக்க நமக்குக் கால அவகாசம் தேவை. இன்னும்
நாம் யோசிக்க வேண்டும். தீவிரமாக யோசிக்க வேண்டும். ஒருவார இடைவெளிக்குப் பின் நாடக ஒத்திகையைத் தொடர வேண்டும் என நினைப்பவர்கள்
இங்கு வரலாம். அப்பொழுது மற்றவற்றை முடிவு செய்யலாம்.
உதவி இயக்குநர்
ரவி :
லதாவோட வீட்டுக்குப் போய் அவங்களைப் பார்த்துப் பேசலாமா?
இயக்குநர் :அப்படிச் செய்றது. ஒரு உதவி இயக்குநரின் பொறுப்புன்னு நினைச்சா போய்ப் பார்க்கிறத நான் தடுக்க
மாட்டேன். அதே நேரத்துல அவங்க முடிவு மாத்தித் திரும்பவும் இந்தப் பாத்திரத்தை
நடிக்கும்படி வற்புறுத்தக் கூடாதுன்னும் சொல்வேன்.
உதவி இயக்குநர்
ரவி :
அந்த எச்சரிக்கையோடவே போய்ட்டு வர்றேன் சார்.
அமுதா :
இந்த நாடகத்தின் ஒத்திகைகளுக்குப் பதிலாக வேறு பயிற்சிகளைச்
செய்வதற்கு ஆட்சேபனைகள் இல்லையே..
இயக்குநர் : விருப்பங்களைச் செய்வதற்கு யார் தடை சொல்ல முடியும். நடிப்புக்கலைக்கான பயிற்சிகளை எங்கும் தொடங்கலாம். தொடரலாம். முடிவற்ற
வாழ்க்கையைப் போன்றது.
அங்கம்: 3 காட்சி:1
· அதே ஒத்திகைக்
களம். நடிகர்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
· பாலசரஸ்வதியும் வெங்கடேஷும் கையில் உள்ள முகமூடியால் மறைத்துக் கொண்டு ‘வாய்ப்பாடு’ ஒன்றை வெவ்வேறு தொனியில் சொல்கிறார்கள். ஒருவர் சொல்வதைத் திரும்பச் சொல்லி விட்டு, அவர் வேறு ஒரு தொனிக்கு மாறுகிறார். அவரது தொனியை இவர் வாங்கிச் சொல்லி இன்னொன்றுக்குத் தாவுகிறார்..
· அமுதா ரவிச்சந்தர், சுப்பையா வேலாயுதம் ஆகியோரைக் கொண்டு கூட்டுச் சிற்பங்களை
உருவாக்குகிறார். அந்தச் சிற்பங்களுடன் பெண்ணாகத் தானும் சிலையாகும்போது ஆண்கள்
பெண்ணுடல் மேல் செலுத்தும் வன்முறை வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
· கூத்து இசையின் அதிவேக இசை ஒன்றுக்குக் கிறுக்கி போடும் லாவகத்துடன் முகுந்தன்
ஆடிக் கொண்டிருக்கிறார். இசை இல்லை.
· உதவி இயக்குநர் ரவி யோசனையில் இருக்கிறார். அவர் அருகில் வந்து
பாலா சரஸ்வதி : என்ன ரவி.. லதாவப்
பார்த்தீங்களா? என்ன பிரச்சினையாம். மாப்பிள்ளெ பாத்துட்டாங்களாமாம்.
உதவி இயக்குநர்
ரவி : அப்படியெல்லாம் எதும் இல்லை பாலா. லதாவுக்கு நடிப்பு மேல இருக்க விருப்பம் எதுவும் போயிடல. தீராத ஆசையோட தான் இருக்காங்க.
பாலா சரஸ்வதி : எதெ வச்சுச் சொல்றீங்க.
உதவி இயக்குநர்
ரவி :
ஒத்திகைக்கு வர மாட்டேன்னு சொன்னாங்கல்ல. ஆனா வீட்டிலெ ஒத்திகையெ நடத்திக்கிட்டு இருக்காங்க.
பாலா சரஸ்வதி : என்ன சொல்றீங்க ரவி. புரியறா மாதிரி சொல்லுங்க. வீட்டில ஒத்திகையா..?
உதவி இயக்குநர்
ரவி
: ஆமா. பாலா.. அவங்க ஏற்கெனவே தனி நடிப்பா செஞ்ச ”விளிம்பு” நாடகத்தெ நேத்து அவங்க வீட்டில நடிச்சுப் பார்த்திருக்காங்க. பார்வையாளர்கள்னு யாருமே இல்லாமெ.
பாலா சரஸ்வதி : பார்வையாளர்கள்னு யாரும் இல்லையின்னா.. அவங்க ஒத்திகை பாத்தாங்கன்னு யாரால சொல்ல முடியும். லதாவே சொன்னாளா?
உதவி இயக்குநர்
ரவி :
இல்லை பாலா அவங்க அப்பா சொன்னாரு. அவங்க அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பி
வர்றப்ப உள்ளே இருந்து விரக்தியான சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கு. சத்தம் கேட்டவங்க கதவைத் திறக்காமே வாசல் திண்ணையில ஒக்காந்துட்டாங்க. உள்ளே இருந்து அப்போ. விளிம்போட முதல் வசனம் கேட்டிருக்கு. அந்த நாடகத்தே அவங்க பார்த்து ரசிச்சவங்கதானே. மெல்ல ஆரம்பிச்ச விசும்பலில் இருந்து வசனங்கள் பிரவாகம் எடுத்திருக்கு..
: என்னால் முடியும்..
நான் செய்வேன்: என்னால் முடியும்..
இதுதானே நாடகத்தோட முதல் வசனம். ”அவங்களால் முடியும்.
ஆமா.. அவங்களால் முடியும்”
(ரவி சொன்ன
தொனியிலிருந்து லதாவின் ஒத்திகை தொடங்குகிறது.விளிம்பு நாடகக் காட்சியாக விரிகிறது)
காட்சி:2
என்னால் முடியும்.. நான்
செய்வேன்
என்னால் முடியும்..
இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
சுமந்தது போதும்.
இதுதான் முடிவு
…….. …….
இந்த
முறை திரும்பப் போவதில்லை..இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவன்
சொன்னான்;
” நீ கிளம்பிப்போகலாம்; திரும்பி வரவே கூடாது”
அவன்
சொன்னான்; அப்படித்தான் அவன் சொன்னான்; இங்கிருந்து போவேன்; தூரமாகப் போவேன்
…….. …….
வெகுதூரம் போவேன்; இனித்திரும்பப் போவதில்லை அப்படிச் சொன்ன பிறகு.., அவன் வாயால்.. அவனது வார்த்தைகளால்
சொன்ன பிறகு.. பாவி என்னிடம்
கத்தினான்…
’ உன்னால் முடியுமா; நீ போவதற்கு எந்த இடம் இருக்கிறது?”
…….. …….
ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவேன்….… ரயிலில் ஏறுவேன்
பல மைல்களுக்கு அப்பால் அது என்னைச் சுமந்து செல்லும்..
பல மைல்கள்.. பற்பல மைல்கள்..
பல ஆயிரம் மைல்கள்..
வடக்கே ஆந்திராவிற்கு .. ஒரிஸ்ஸாவிற்கு…
எனக்கு ரயில்கள் ரொம்பப் பிடித்தமானவை.
என்னிடம் உள்ள பணம் தீரும்வரை நான் பயணம் செய்வேன்..
(கையில் வைத்துள்ள பையை இறுகப் பற்றித்தழுவிக் கொண்டு)
எல்லாப் பணமும்.. அவன் வெறியனாக
வேண்டும்.. ஆஹாஹா..
இது அவனுக்குத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து
அலைய வேண்டும்.
…….. …….
இது தெரிந்திருக்கும்
……..
…….
அங்கே ரயில் பயணிகள் அமர நாற்காலி உண்டு. ரயிலில் இரண்டாம்
வகுப்பில் – ஜன்னல் ஓரம் – அதன்
வழியே வயல்கள் – வாய்க்கால்கள் – ஆறுகள் – மலைகள் - வெள்ளைக்காரன் காலத்து ரயில் நிலையங்கள் என கடந்து செல்வேன். ..ஜிகு .. புக்கு.. ..ஜிகு .. புக்கு.. ரெயில் கிளப்பும்
ஒலியைக் கேட்டபடி (மெதுவாக) ஜிகு.. ஜிகு..ஜிகு..
( தூரத்தில் ரயிலின் ‘கூ’ வென்ற ஒலி.. அவள்
அதை கூர்ந்து கவனித்துக் கேட்கிறாள்)
… இல்லை.. இல்லை.. நான்
மும்பை போவேன்.. ஆம்.. நான் மும்பை போவேன்..
…….. …….
என் குழந்தைகள்.. என்னைப் பிரிந்து
விடுவார்களா..? அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்.. பள்ளிக்கூடம் போயாக வேண்டுமே.. அவர்களின் அப்பா
சந்தோசமாக இருக்கலாம்; ஏனென்றால் நான்
அங்கு இல்லையே.. ஒருவேளை அவர்
திரும்பவும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடும்
…….. …….
ஒரு தடவை.. இரண்டு வருஷங்களுக்கு முன்பு .. என்னிடம் இளமையும் கவர்ச்சியும் தங்கியிருந்த நேரம்…. அவரது முகத்தைத்
தாங்கிப் பிடித்து.. இப்படித்தான் தாங்கியிருந்தேன். கொஞ்சம் வருத்தத்துடன்.
ஆனால் ஆன்ம சுத்தியுடன் நான் கேட்டேன்.
“ அன்பே.. நான் செத்துப்
போனால் நீ திரும்பவும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா..?”
அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? கொஞ்சம் யூகித்துச் சொல்லுங்கள்.. என்ன
சொல்லியிருப்பான். என்ன
யூகம் பண்ண முடியவில்லையா?
நீங்கள் என்ன சொல்வீர்கள்? (பார்வையாளர்களைக் கூர்மையாகப் பார்த்து)
நீங்கள்.. நீங்க.. உங்கள் கணவர் என்ன சொல்வார்.. உங்கள் கணவர் .. உங்க..
அந்த முட்டாள்.. அருவருப்பான அந்த மனிதன்.. அன்று அவன்
சொன்னானே.. அதனாலேயே அவனைப் பிடிக்கவில்லை.. வக்கிரம் பிடித்த
பாவி.. அவனைக் கொல்ல வேண்டும்.. ஆம் கொலை செய்ய வேண்டும்.. அவன்
சொன்னானே
“ நான் போய்விட
வேண்டுமாம்; திரும்பி வரக்கூடாதாம்”
இப்படி அவன் சொன்னான். அவனுக்கு என்
மீது வெறுப்பு. அவனோடு நான்
இருக்கக் கூடாது. அவனோடு… அவனோடு..
நான் முதலில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். பதினோரு மணியாகிறது. இருக்கட்டும். சாலையில் வண்டி
எதையும் காணோம். ஆட்டோ பிடித்துக்
கொள்ளலாம். ஒரு ஆட்டோ கூடக் காணோமே…. டாக்ஸி பிடித்தால் ஆச்சு.. தனியாக.. – இரவில்- டாக்ஸியில் ஒரு பெண்.. ….. ……
…..
டிரைவரே என்னைத் தாக்கினால்.. அவனைக் குதறிவிட்டுக்
கதவுகளைத் திறந்து குதித்து விடுவேன்..
இருட்டு.. குளிர்ச்சியான இருட்டு.. குழந்தைகள் போர்த்திக் கொண்டு படுத்திருப்பார்களா.. அவர்களுக்குத் தொண்டை கட்டியிருந்தது.
யூனிபார்ம் போட்டுக் கொள்ளவோ, ஷூ போட்டுக் கொள்ளவோ கூடத் தெரியாது. காலையில் சாப்பிட
மாட்டார்கள். அவர்களுக்குக் காரம் பிடிக்காது. அவர்களுக்குக் காரம் பிடிக்காது என்பது கூட அங்கே யாருக்கும் தெரியாது. தொண்டை கட்டியிருந்தது
என்பதைக் கூட யாரும் உணரமாட்டார்கள். ஓ. கடவுளே..
…….. …….
எல்லாம் சரியாகவே இருக்கும்..
யாராவது அதைப் பற்றி யோசித்து ஏதாவது செய்வார்கள்.
இதுதான் புரியவில்லை.
ஏதாவது பிரச்சினைகளைப் பற்றியே ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைப்பது ஏன்.. நான்
எதைப் பற்றியாவது நினைத்துக் கொள்கிறேன். எல்லோரும் இப்படித்தான் நினைத்துக் கொள்வார்களா..?
(முணுமுணுப்பு)
பொய்க்கூந்தல்.. நீண்டு தொங்கும் கூந்தல்..சுருள் சுருளாக.. நெளிவுகள் நிறைந்து
கூடுகள் போல.. பொய்க் கூந்தல்.. பொய்க் கூந்தல்..
(சிரித்தபடியே பையிலிருந்து அந்தப் பொய்க்கூந்தலை வெளியே எடுத்து .. பைத்திய நிலைச் சிரிப்புடன்)
நான் வாங்கினேன். – ஒரு தடவை-
இந்தப் பர்ஸைப் பார்த்தேன். சிறிய பணப்பை –ரொம்பவும் அழகாக
இருந்தது. திறப்போடு கூடிய – ஓரங்களோடு – வெள்ளையான உலோக வேலைப்பாடுகள் கொண்டதாய்
–இதைப் போல – இதைப்போல – நான்
அதை வாங்கினேன், அதில் பணம்
இருந்தது.
சில வருடங்களுக்கு முன் அது நடந்தது. அன்று தான்
அந்தப் பொய்க் கூந்தலை வாங்கினேன். என் வீட்டின் முன் இருந்த கடையில் தான் வாங்கினேன். இந்த ஓரங்கள்.. இந்தக் கூந்தல்..
திறப்போடு கூடிய பை.. கவர்ச்சியான வேலைப்பாடுகளோடு கூடிய .. உங்களுக்கு ஒன்று தெரியுமா..?
……..
…….
என்னைத் தெரிந்து கொள்வார்களா? நினைவில் கொண்டு
வருவார்களா..?
(பொய்க் கூந்தலை உள்ளே வைத்து விட்டு)
அவனுக்கு இது வேண்டும். அவன் ஒரு
அழுக்கன். சுத்தம் என்றால் என்னவென்று தெரியாது. நளினம் இதுதான்
என்று கற்றுத் தர வேண்டும். நான் பள்ளிக்கூடத்தில் சான்றிதழ்
வாங்கியிருக்கிறேன்.
நீங்கள் வாங்கியிருக்கிறீர்களா? சான்றிதழ் வாங்க மேடையேறினால், எல்லோரும் உங்களைப்
பார்ப்பார்கள். அவர்களையெல்லாம் பெருமிதத்தோடு பார்த்துவிட்டு பள்ளி முதல்வரையும் ஒருமுறை பார்த்துவிட்டு இரண்டு கைகளையும் நீட்டி சான்றிதழை வாங்கித் திரும்பும்போது “பாப் வெட்டிய
தலை; என் அம்மாவுக்கு நன்றி”
– அதற்கு எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும். நளினத்தோடு இருக்க வேண்டும். அவன் அப்படி
இல்லை.
அவன் சொல்வான்: “ முகம் பளிச்சென்று
இருந்தால் போதும்; ஜட்டி அழுக்காயிருந்தால்
என்ன பிரச்சினை.”
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள்
முகத்தைக் கவனத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். கவனமாக வைத்தாக வேண்டும். ஆம் கவனம்.. ரொம்பக் கவனம்..
……..
…….
உங்களுக்காக உங்கள் முகத்தை நான் கவனிக்கிறேன் என்று சொன்னேன்
(முணுமுணுப்பு)
பேடி.. அந்தப்பேடி – முட்டாள்—அறிவிலி –கிறுக்கன்..
……..
…….
அது ரொம்ப அதிகம் –ரொம்ப ரொம்ப அதிகம் – ‘நீங்க தான்
இந்த சிகரெட் சாம்பலையோ,
துண்டுகளையோ பொறுக்க வேண்டும்.” நான் உண்மையாகவே சொன்னேன்.
இனியும் நான் அங்கே நிற்க முடியாது.
……..
…….
நான் போவதென்று ஆகிவிட்டது. நான்
ரயிலைப் பிடிக்க வேண்டும்.
உன் முகத்தை நான் இனிப் பார்க்கப் போவதில்லை என்று சொல்லி விட்டேன். என்னிடம் இந்த பொய்க்கூந்தல் உள்ளது. என்னை கண்டுபிடிக்க முடியாது.
நான் செய்த நல்ல விஷயங்களுக்காகப் பாராட்டியதே கிடையாது. வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தேன். மடித்து வைத்த
துண்டுகள். சுருக்கமில்லாத படுக்கை விரிப்புகள்,
பற்பசை சிதறல் இல்லாத கண்ணாடி ..
அடுக்கி வைக்கப்பட்ட சோப்புப் பெட்டிகள்.. ஆனால் என்னை
மடக்குவதற்கு கணக்குகளும் தோட்டமும் போதும். அவற்றையே பிடித்துக் கொள்வான்.
அவையெல்லாம் இனி எனக்கு இல்லை.
அந்தப் பொருட்கள் இல்லாமல் போவதெப்படி..?
எனக்கு தெரியவில்லை. தட்டுகள்.. கரண்டிகள்.. அடுக்குப் பாத்திர இணைப்புகள்..?
அந்தப்பை தொலைந்து விட்டது. இப்பொழுது இல்லை.
நீங்கள் எதையுமே தொலைத்தது இல்லையா..? அதற்காக என்னை
ஏன் மூட்டைப் பூச்சி போல் கடிக்க வேண்டும். அந்தப் பையிலிருந்த பணத்தினால்தான் இந்தப் பொய்க் கூந்தலை வாங்கினேன். அப்பொழுது ரொம்பவும்
பொருத்தமாக இருந்தது. சில வருடங்களுக்கு
முன்பு… ..
ரயிலில் இதைப் பொறுத்திக் கொண்டால்… அவர்கள்.. என்னைப் பிடிக்க முடியாது. அவனை விட்டுப் போய் விடுவேன். இந்த வீட்டை விட்டுப் போய்விடுவேன். அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. அதனால் அவர்கள் என்னிடம் வந்து,
“ சீமாட்டியே,
உங்கள் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்க மாட்டார்கள்.
“ நான்… நான்
எனது ரேகைகளை விட்டு விட்டு வந்து விட்டேன். திரும்பவும் போய் அழிக்க முடியாது.
(வெறியுடன் கூடிய நடுக்கம்)
கொடூரமான அந்த ரத்தம்.. உறைந்த ரத்தம்..
தோட்டக்காரன்.. அப்புறம் கழுவி விடுவான்.. ஆம்..கழுவிக் கொள்வான்.. நாளைக்கு அவனால் புல் வெட்ட முடியுமா?... முடியாது. நாளை
மறுநாள் வெட்டுவான்.. வெட்ட முடியாது.
அவனால்..? ஏன்..?
விளிம்போடு இது இணையாது
இது இணையவே இணையாது.
மாற்றம்.. வேலி.. ஓரம்..
யாரிதைச் சொன்னது. யாரிது.. விளிம்போடு இணையாது.
நான் சொல்கிறேன்.
இது முடியாது. நான் இதைச்
சொல்கிறேன்.
இது முடியாது. நான் இதைச்
சொல்கிறேன்.
இது முடியாது. இது முடியாது
இது முடியும். இது முடியும்
நான் செய்வேன். நான் செய்வேன்
நான் செய்கிறேன். நான் செய்கிறேன்
(லதாவின் நிகழ்விலிருந்து ஒளிமாற்றம் ஆகும் போது ரவி அதே தொனியில்)
உதவி இயக்குநர் :அது முடியாது.
அவள் அதைச் சொல்கிறாள்.
அது முடியாது. அவள் அதைச் சொல்கிறாள்
அது முடியாது. அது முடியாது
(ரவியின் குரலை பாலா வாங்கிச் சொல்கிறார்)
பாலசரஸ்வதி : இது முடியும். இது முடியும்
நான் செய்வேன். நான் செய்வேன்
நான் செய்கிறேன். நான்
செய்கிறேன்
(சொல்லி முடிக்கும்போது ரவி அசைவற்றவராக இருக்கக் கேட்டுக் கொண்டிருந்த பாலாவும் உறைந்து நிற்கிறாள் . கதவு தட்டப்படுகிற
ஓசை கேட்கிறது. திறந்து கொண்டு
பதினைந்து பேர் அளவுக்கு மேடையில் வந்து இருவரையும் சுற்றி வந்து கைகளைத் தட்டிக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்..குழுவாகப் பாடுகிறார்கள்)
பாடல் : கொலை கொலையா முந்திரிக்கா…
கொலைஞ்சு போஞ்சு கத்திரிக்கா..
ஏம்பேர் பேரிக்கா..
நரியே
நரியே சுத்தி வா.
நான் எங்கெ
இருக்கேன் கண்டுபிடி
…
(கடைசி வரியான “நான் எங்கெ இருக்கேன் கண்டுபிடி” என்ற வரியை மட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொனியில் சொல்லிப் பார்க்கிறார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சொல்லில் அழுத்தம் தந்து மாற்றுகிறார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சொல்லும் உடலும் அசைகிறது. அசைந்து சிலை வடிவம் கொள்கின்றனர் அனைவரும் சிலையாகி முடியும்போது
சிலையிலிருந்து விடுபட்டு)
முகுந்தன் : வார்த்தையின்
அர்த்தம் எங்கே இருக்கு கண்டுபிடி
வேலாயுதம் : ஆம கண்டுபிடி.. கண்டுபிடி..
அமுதா : கண்டுபிடிக்கணும்.. அதுக்குத் திரும்பவும் அந்த நாடகத்தெத் திரும்பவும் நடிக்கணும். அதிலெ தான் நான் வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டுபிடிச்சேன். வார்த்தைகளின் அர்த்தம்.. வார்த்தைகளின் அர்த்தம்
ரவி : எந்த நாடகத்தெ..?
அமுதா : வார்த்தை மிருகம். நாமெ நடிச்சதுதான். ரவிக்குமார் எழுதி அ.ராமசாமி இயக்கத்தில் மேடையேற்றிய அந்த நாடகத்தெ..
ரவி :
அந்த நாடகத்தில நடிச்ச நாலு பேரு இல்லையே.. இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர் ..
வேலாயுத : நான் அந்த நாடகத்தில நடிக்கல. எனக்கு இப்போ ரோல் குடுத்தா நடிக்கத் தயாரா இருக்கேன்.
ரவி :
அதுவும் சரித்தான். முகுந்தன் நீங்க இன்ஸ்பெக்டர், வேலாயுதம், பூபாலன் அருணா, சரவணன்
நீங்கள்ளெல்லாம் போலீஸ்காரங்க. மத்தவங்களுக்கெல்லாம் அதே பாத்திரங்கள் தான். நான் நடிச்ச ஓவியன் பாத்திரத்த நானே நடிச்சிடுறேன்.
பாலசரஸ்வதி : எனக்கு ஒரு சந்தேகம். இது வெறும் ஒத்திகை தானே. மேடையேற்றம் இல்லைதானே.
ரவி :
எல்லாமே ஒத்திகைகள் தான். ஒத்திகைகளை மேடையேற்றமாக்குறது நம்ம கையில இல்லையே.. அது பார்வையாளர்கள் கையில தானே இருக்கு,.
வெங்கடேஷ் : இது ஒத்திகை கூட கிடையாது. வெறும் பயிற்சிதான். பயிற்சிக்காக நாமெ ஏற்கெனவே பல தடவை மேடையேற்றிய இந்த நாடகத்தெ ஒத்திகை பார்க்கிறோம்: இந்த ஒத்திகை மேடையேற்றத்துக்கான ஒத்திகை இல்லை. வேற ஒரு நாடகத்தத் தொடங்கிறதுக்கு முன்னாடி இடைவெளியை இட்டு
நிரப்பிக்கிற ஒத்திகை. இருக்கிற சக்தி இழந்துட கூடாதுங்கிற பயத்தில செய்ற ஒத்திகை.
சக்தியெ மீட்டெடுக்க நாமெ ஏன் ஒரு கலைப்பயணம் செய்யக் கூடாது..
ரவி :
ஒத்திகைகளே கலைப்பயணங்கள் தான்.. உடல்வழிப் பயணம். பயணத்தைத் தொடங்கலாம்.
அங்கம் : 4
காட்சி: 1
ரவி :
லைட்ஸ் ஆன். ஒத்திகையைத்
தொடங்கலாம். கையில் உள்ள தாளைப் படிக்கிறார். திரும்பிப் பார்வையாளர்களைப் பார்த்து இந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்கள்
பேச்சாளன்
ஓவியன்
எழுத்தாளன்
நந்தகோபால்
ரவிச்சந்தர்
பால சரஸ்வதி
அமுதா
இன்ஸ்பெக்டர்
நான்கு போலீஸ்காரர்கள்
குழுவினர்
மேடை இரண்டாகப் பிரிக்கப்ட்டிருக்கிறது
நடுமேடை மையத்தில்
இந்தியச்
சூழலில் மனித உரிமைகளும் குடியுரிமைகளும்
என எழுதப்பட்ட துணிப் பதாகை
கட்டப்பட்டுள்ளது.
இடது மையத்தில் ஓவியக்காட்சி என்பது அம்புக்குறிப் பலகையில்
எழுதப்பட்டுள்ளது.
பின் இடதில் குடுவைகளும்
தூரிகைகளும் ஓவியம் வரைவதற்கானச் சட்டகங்களும் இருக்கின்றன. மனிதனின் வெளிப்புறக்கோடுகளை
ஒருவன் வரைந்து கொண்டிருக்கிறான்.
வெளிச்சம் அவன் மேல் அதிகம் படரவில்லை.
எங்கிருந்து வருகிறது என்று
தெரியாத நிலையில் குரல் வருகிறது.
அந்தக் குரலைக் கேட்பவன்
போல வரைவதை நிறுத்திவிட்டுக் காது கொடுக்கிறான்.
தெளிவற்ற
நிலையில் நாம் எதை எடுத்துக் கொள்வது ?
எதில்
நாம் கவனத்தைக்குவிப்பது? மனித உரிமைகளுக்கா...?
குழப்பத்தைத்
தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்..
இந்தியாவில்
நிலவும் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற
நிலையில்-அதன்
குடிமகன்களில் ஒருவர் என்ற நிலையில் - அரசியல் சட்டம்
தரும்
குடியுரிமைகளுக்கு முன்னுரிமை தரவேண்டியவர்களாக இருக்கிறோம்.
(குரல்
தேய்ந்து மறையும்பொழுது அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்களின் மேல் ஒளி படர்ந்து நகர்கிறது )
காட்சி-2
வலது
மையத்தில் பேச்சாளர் முகத்தைத் துடைத்துக் கொண்டு :
மன்னிக்கவேண்டும்,
ரொம்ப நேரமாப் பேசிக்கிட்டிருக்கேனில்ல.
இந்த ஒரு பக்கம்
தான் முடிஞ்சிடுது.
அவருக்குப்
பின்னால் இருக்கும் பேனரில்
HUMAN
RIGHTS AND CIVIL RIGHTS IN INDIAN CONTEXT
என்று
எழுதப்பட்டிருக்கிறது
மேஜையில்
டம்ளர்களில் தண்ணீர். அவற்றிற்குப் பின் மூன்றுபேர்.ஒருவர் பெண்.
பேச்சாளர்: நான் இங்கே விவரித்த மரணங்கள் எல்லாமே வெறும்புள்ளி
விவரங்களாகிப் போய்விட்டன. இவற்றில் இறந்து போனவர்களுக்குத் தாங்கள் ஏன் இறந்தோம்;
எதனால் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது, மிகவும்
கொடுமையானது அவர்களது பெயர்கள் என்னவென்று கூடத்தெரியாது.
(வெளிச்சம் குறைகிறது.குரல் மட்டும்)
இங்கே கூடியிருக்கும்
அறிவுஜீவிகளாகிய நமக்கு இப்படி நம்மைச் சூழவும் நடக்கிற வன்முறை பற்றித் தெரியாமலா
போய்விட்டது.? இவற்றைத்தடுக்க முடியவில்லையே என்பதில்..
மௌனமாக இருப்பதால் நாமும் இந்த வன்முறைகளின் பங்குதாரர்களாக இருக்கிறோமே என்று உணர்வதில்
உறுத்தாமலா போய்விட்டது.
திரும்பவும் பேசுபவரின் வெளிச்சம்
உம்பர்ட்டோ
ஈக்கோ என்ற அறிஞரும் மேலும் சுமார் நாற்பது அறிஞர்களும் ஒருமுறை ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். ஐரோப்பிய நாடுகளில்
அதிகரித்து வரும் நவநாஜிகளின் பெருக்கத்துக்கு எதிராக அந்த அறிக்கை, நாஜிகளது கூட்டங்கள்,
பத்திரிகைகள் போன்றவற்றில் பங்கெடுப்பதில்லையென அறிவித்தனர். சகித்துக்
கொள்ளமுடிவதற்கும் சகித்துக் கொள்ளமுடியாததற்கும் இடையிலான எல்லைக்கோட்டை வரைந்து கொள்ள
வேண்டிய அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக அளவில் சகித்துக் கொள்ள முடியாதது என்பதை எந்த அடிப்படையில் விளக்குவீர்கள் எனக் கேட்டபோது உம்பர்ட்டோ ஈக்கோ சொன்னார்.
(பேச்சாளர்
இருட்டில் இருக்கிறார்)
உடலுக்கு தரப்படும்
மரியாதையின் அடிப்படையில்தான் இதைத் தீர்மானிக்கவேண்டும். உடலுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும்
தரப்படும் மரியாதையை வைத்துத்தான் இதற்கான
அறத்தை ஒருவர் உருவாக்க முடியும். ஒருவரை ராத்திரியில் தூங்கவிடாமல் அடிப்பது, அவரைத்தலைகீழாகக்
கட்டித் தொங்கவிடுவது .. இதனைச் சகித்துக் கொள்ள முடியாத சித்திரவதைக்கான ஓர் உதாரணம்
என்று சொல்லலாம். பிறரை இயங்கவிடாமல் செய்வது; பேசமுடியாமல் ஆக்குவது
; இவையும் சகித்துக் கொள்ளமுடியாதவைகள்தான்.
(கற்பழிப்பு பற்றிய செய்திகள் நிரம்பிய செய்தித்தாள்களால் ஆன சுவரொட்டி ஒன்றைச்
செய்து வைத்துள்ளார்-
வாச்சாத்தி-
ராமேஸ்வரம்- அத்தியூர்-- பத்மினி-- என அதன் மீது ஒளி நகர்கிறது.
கற்பழித்தல்
என்பதும் ஒருவரது உடலுக்குச் செய்யப்படும் அவமரியாதைதான். எல்லாவிதமான நிறவேற்றுமைகளும், ஒதுக்கல்களும்
முடிவாகப் பிறரது உடலை மறுத்தல் என்றுதான் பொருள்படும். அறவியல் கோட்பாடுகளின் ஒட்டுமொத்த
வரலாற்றையும் உடலின் உரிமைகள், உடலுக்கும் உலகத்திற்கும் உள்ள உறவுகள் என்பதன் அடிப்படையில்
ஒருவர் வியாக்கியானப் படுத்தி விடமுடியும் என்றார் ஈக்கோ.சகித்துக்கொள்ளக்கூடாதது என்பதுபற்றிய
எல்லைக் கோட்டை எப்போது வரையப் போகிறோம்..
காட்சி-3
=========
ஓவியக்கூடம்:
-------------------------------
கலவையாகி
அரைநிலைப்படமாக கேன்வாஸின் . அருகில் ஓவியன். மேஜையில் புத்தகங்கள் பைல்களைப் புரட்டியபடி
இன்னொருவர்
–அவர் எழுத்தாளர். மெல்லிய இசை பரப்பும் பாக்ஸ்
. குடத்தில் தண்ணீர். ஆஸ்றே மீது புகையும் சிகரெட், ஜன்னல் திரைகளின்
படபடப்பு. ஓவியத்தின் அருகிலிருந்து சிகரெட்டைக் கையிலெடுத்துக்
கொண்டு ஓவியனும் எழுத்தாளனும் உரையாடுகின்றனர்.
ஓவி: இதை நீங்கதான் எழுதணும்னு தோணிச்சு. சொல்லப்
போனா நீங்கதான் இதை எழுத முடியும்
எழு: வண்ணங்கள் சொல்ல முடியாததை வார்த்தைகள்
சொல்லிட முடியுமா என்ன .
ஓவி: ஆனா.. பேஸிக்கல்லி வீ யார் வெர்பல் அனிமல்ஸ்
இல்லையா..?
எழு:
இருக்கலாம் . ஆனா நிறங்களுக்கு மொழியைப்போல எல்லைகள் குறுகியது கிடையாது. ஓவி: அப்படித்தான் நாம நம்பிக்கிட்டிருக்கோம்.
கலாசாரம்தான் நிறங்களோட அர்த்தத்தைத் தீர்மானிக்குது.
சிவப்பு என்கிற நிறம் துணிவு,
ரத்தம் என்கிறவிதமா ஆப்கானிஸ்தான், இத்தாலி,
பல்கேரியா, சிலே போன்ற நாடுகளில் அர்த்தமாகுது.
ஆனா.. பொலிவியாவில சிவப்பு
நிறம் மிருகங்களைக் குறிக்குது ; எத்தியோப்பாவில சிவப்புன்னா நம்பிக்கைன்னு அர்த்தம். நான் ஏன் ஒரு ஸ்கிரிப்ட் வேணும்னு
சொல்றேன்னா வார்த்தைகள் தான் வலிமையைத் தீர்மானிக்குது. இத்தாலி நாட்டு
எழுத்தாளன் த்ரியோஃபோ
சொன்னான்:
தொழிலாளிக்கு
நூறு வார்த்தைகள் தெரியும்னா முதலாளிக்கு ஆயிரம் வார்த்தைகள் தெரியும் . அதனாலதான்
அவன் முதலாளியா இருக்கான்.அதனாலதான் சொல்றேன். என்னைப் போல ஓவியனைவிடவும் உங்கள மாதிரி எழுத்தாளர்கள்
செய்யவேண்டியதுதான் அதிகம். ஜனங்களோட வார்த்தைகளை அதிகமாக்குங்க.. இந்த வன்முறை எல்லாத்தையும்
முடிவு கட்டுற மாதிரி வார்த்தைகள்
வேணும். இதைச்
செய்ய வேண்டியது தான் உங்களோட வேலை.
(ஓவியன்
தரும் ஓவியங்கள் ஒவ்வொன்றையும் வாங்கிப்பார்த்து எழுத்தாளன் அடுக்கிக் கொள்கிறான்.ஓவியன்
பிளாஸ்கிலிருந்து டீயை ஊற்றிவிட்டு கேஸட்டை மாற்றுகிறான் . அதிரும் டிரம்ஸ் ஒலியின்
அளவைக் குறைத்து விட்டுத்திரும்பவும் டீயை எடுத்துக் கொள்கிறான்.தேநீர்க் கோப்பையை
வைத்து விட்டு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கிறான்.இரண்டு மூன்று
தடவை இழுத்துப் புகையை விட்டபடி யோசிக்கிறான். சிகரெட்டை ஆஸ்றேயில்
நசுக்கியபடி)
எழுத்தாளன்
: எழுதிடலாம்னு தோணுது . ஆனா அது ஒரு கட்டுரையா இருக்குமாங்கிறது சந்தேகம்தான்.
ஓவியன் :அது உங்க விருப்பம் .எனக்கு எந்தவித ஆட்சேபனையும்
கிடையாது.
(எழுத்தாளனின்
கைகளும் சிகரெட்டை நசுக்குகிறது. கண்ணாடியைக் கழற்றி கவரில் போடப்போனவவன் ஏதோ ஞாபகமாய்
பையைத்துளாவி ஆடியோ கேசட் ஒன்றை எடுத்துத் தருகிறார்)
எழு:
இதை என்னோட நண்பர் ஒருத்தர் அனுப்பியிருக்கார். நேற்று வந்தது. கேட்டு பாருங்கள்.
(இசையை
நிறுத்தி விட்டு கேஸட்டைச் சொருகிறார் ஓவியர். எழுத்தாளர் ஓவியங்களை புரட்டிக்கொண்டிருக்கிறார்.ஒரு
ஓவியத்தைத் தொடரநினைத்து அதனருகில் சென்று தூரிகையை எடுத்துக் கொள்கிறார். ஒலிநாடாவிலிருந்து
வார்த்தைகள் வருகின்றன.
வெளிச்சத்தில்
டேப்ரிகார்டர். அந்த அறையில் இருவரும் நிழல்களாக உறைந்த நிலை.ஒலிநாடாவின் ஒலி மெல்ல
மெல்லக் குறைய கலைந்து டேப்ரிகார்டர் ஆட்டோவாக மாறுகிறது. டேப் ரிகார்டரிலிருந்து வெளிச்சம்
ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிப் பெட்டிகளின் மேல் தங்கியிருக்கும் போது )
·
அன்னைக்கி
நடந்த சம்பவத்தை அப்படியே கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்கம்மா. என்ன நடந்துச்சு.. எப்போ
கூட்டிக்கிட்டுப் போனாங்க.. எல்லாத்தையும் சொல்லுங்க..
·
வீட்டுக்காரரெ
கூட்டிக்கிட்டுப் போனதையா.. இல்ல.. என்னைக்கூட்டிக்கிட்டுப் போனதையா..
·
எல்லாம்....
ஆரம்பத்திலேயிருந்து சொல்லுங்க. வீட்டுக்காரரெ என்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க...?
·
வெள்ளிக்கிழமை
ராத்திரி மூனு மணிக்கு..மூனு.. மூனரை இருக்கும்.வீட்டில படுத்திக்கிட்டு இருந்தோம்.
ஒரு ஆறேழு போலீஸ்காரங்க வந்து இறங்கினாங்க. இறங்கி வந்து பக்கத்துவீட்டுப் பொம்பளகிட்டெ
வந்து , ' இது நந்தகோபால் வீடான்னு' கேட்டாங்க. அவங்கவந்து இந்தவீடு
இல்லேன்னு சொல்ல எங்க வீட்டெக் காண்பிச்சி விட்டாங்க. தூங்கிக்கிட்டிருந்த என்வீட்டுக்காரரை
அந்த’பாய்’ போலீஸ்காரர் முடியப்பிடிச்சி தூக்கி எழுப்பினாரு..
காட்சி-4
இரவுக்கான
ஒளியமைப்பு - குடிசை வீட்டுக்கான அரங்க அமைப்பு அலறலுடன் ஆட்டோ.. தொடரும் பைக் பாதி மட்டும் நபர்கள் தெரியவேண்டியதில்லை. வாகனங்கள்
நிற்க பூட்ஸ் அணிந்த கால்கள் இறங்குகின்றன..விசில். தடியால் குடிசைக்கதவைத்தட்டும்
போலீஸ். அறைந்து சாத்தப்படும் ஓசை.
குரல் மட்டும்
பெண்: ஏன்சார் இழுக்கிறீங்க..
போலீஸ்: ரெண்டுபேரப் புடிச்சு வச்சிருக்கோம். சந்தேகமாயிருக்கு.
விசாரிச்சிக்கிட்டுக் காலையில விட்டுடுறோம்.
அடிகள்
விழுகின்றன. ஆண் ஆட்டோவிற்குள் திணிக்கப்படுகிறான் குடிசைக்குள்ளிருந்து பெண்ணின் ஓலம்.
அந்த அழுகையை அமுக்கிவிட்டு பைக் -ஒலி- ஆட்டோ சக்கரம் சுழற்சி. ஒலி மட்டும் .. கதவு
மட்டும்
போலீஸ் .1: ஏய் ஆளு எப்படி
இருப்பா..
போலீஸ். 2: ஆள் நல்லாத்தான்
இருப்பா..
போலீஸ். 1: மூஞ்சில லைட்
அடிச்சு பார்த்தியா..
ஸ்டேஷன்
அறையில் நான்கு போலீஸாரின் நடுவில் அவன் கிடக்கிறான்.பந்தாடப்பட்ட நிலை. சுற்றிலும்
நிற்கும் கால்கள் மட்டும் தெரிந்தால் போதும். பூட்ஸ் கால்கள். அறையைச் சுற்றி வரும்
காமிரா.துப்பாக்கி, கைவிலங்கு, தொப்பி,
சிறைக் கம்பி, காவல் என்ற போர்டு மீதெல்லாம் ஒளிபடுகிறது.
நகரும்போதெல்லாம் அடி விழுகிறது..
தலைமயிரைக்கொத்தாகப்
பிடித்து தூக்கி முகத்தில் தண்ணீர் அடிக்கின்றனர்.
தலைமயிரைப்
பிடித்த கை விடும்பும்பொழுது அப்படியே விழுகிறான்.
அவனது
வேட்டியும் பனியனும் அவன்மீது வீசப்படுகிறது.
இப்போது
திரும்பவும் ஒலிபெருக்கிப் பெட்டியின் மீது ஒளி வெள்ளம்.
மத்தியானம்
ஒரு மணி இருக்கும். அந்தப் பாய் போலீசும்,
கிழப்போலீஷும் வந்தாங்க. தூங்கிக்கிட்டு
இருந்த என்னை அவங்க கையில இருந்த தடியால படார்னு
சூத்தாம்பட்டையில அடிச்சாங்க..
நான் அலறி
அடிச்சிக்கிட்டு எழுந்தேன். ”என்னால முடியல. என்னை அடிக்காதீங்க, அடிக்காம கேளுங்க
சொல்றேன்னு” சொன்னேன். ஆனா அவரு ”என்னடி
சொல்றே”ன்னு கோபமா கத்திக்கிட்டு
காலைப்பிடிச்சு பரபரன்னு வாசலுக்கு இழுத்துக்கிட்டு வந்தாரு.. அப்புறம் அவங்களே கதவைச்
சாத்திட்டு, என்னை அடிச்சு ஆட்டோவில ஏறச்சொன்னாங்க. அப்போ ரெண்டு
ஆட்டோ வந்திருந்திச்சி.. ஒரு ஆட்டோவில நாலு போலீஸ் காரங்களும், இன்னொரு ஆட்டோவில எங்க வீட்டுக்காரரும்
சுப்பிரமணியமும் இருந்தாங்க.நான் அந்த ஆட்டோவில
உட்கார்ந்துக்கிட்டேன். போகும்போதே ஸ்டேஷனுக்கு வாடி உன்னைக் கவனிச்சிக்கிறேன்.. இனிமே
உன்னை விட்டாத்தானேன்னு என் வீட்டுக்காரர் முன்னாலேயே திட்டிக்கிட்டே வந்தாரு..
ஸ்டேஷனுக்குப்போனதும்
என் வீட்டுக்காரரையும் சுப்பிரமணியத்தையும் அடிச்சு லாக்கப்பிலே தள்ளிட்டாங்க. என்னை அடிச்சி உள்ளே
இழுத்துக் கிட்டு போனாங்க. வலிதாங்க முடியாம
கதறிக்கிட்டே அங்கே இருக்கிற போலீஸ்காரங்க
கால்லே போய் விழுந்தேன்.. என்னை அடிக்காதீங்க' ன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் போலீஸ்காரரு
ஒன்னுமே சொல்லல. அப்புறம் அவங்க என் ஜாக்கெட்டப்
புடிச்சி அது கிழியற வரைக்கும் அடிச்சாங்க.
=================
காட்சி. 5. ஓவியக்கூடம்-
பகல்.
===================
பெண்ணின்
அழுகுரல் டேப்பிலிருந்து வருகிறது.கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஓவியர் திகைப்புடன்
எழுகிறார்.
கேஸட்
முடிந்திருக்கிறது.
ஓவியர்: யூதர்களை நல்லபடியாகத்தான் நடத்தறோம்னு காட்டுறதுக்காக
ஒரு பிரசாரப் படம் எடுத்தானாம். வதைமுகாமிலயிருந்து எல்லா யூதர்களையும் அழகழகான ஆடைகளை
உடுத்தி பூச்செண்டெல்லாம் கொடுத்து அழைச்சிட்டு வந்து படம் எடுத்து முடிஞ்சதும் கேஸ்
சேம்பர்ல போட்டுக் கொன்னாங்களாம்..இதெயெல்லாம் கேக்கிறப்போ இந்தமாதிரி ஓவியங்கள்,
கட்டுரைகள் இதெல்லாம் வேஸ்ட்டுன்னு தோணுது. இந்தப் பொண்ணு போலீஸ் செஞ்ச
கொடுமைகளைச் சொல்றா..
கேஸட்டை
வெளியே எடுத்தபடி
வன்முறை
கூடாதுன்னு நான் ஒரு படம் வரையலாம். நீங்க ஒரு கதை எழுதலாம். இன்னும் ஒருத்தர் மைக்ரோபவர்ன்னு
கட்டுரை எழுதலாம்.
எழுத்தாளர்: நீங்க சொல்றது சரிதான். ஒருவிதத்தில நாம வரையறதும் எழுதுறதும்
வன்முறைக்குத் தகவமைக்கிறதா மாறிக் கிட்டிருக்கோன்னு கூடத்தோணுது. ஆனாலும் நாம இதைச்
செய்யத்தானே வேண்டியிருக்கு..எதுக்குமே ஒரு விதமான விளைவுகள் மட்டும்தானா இருக்கு. இன்னொரு விதமாக்கூட
இது செயல்பட முடியுமில்லையா..கேஸட் திருப்பிப் போடப்படுகிறது.ஓடத்தொடங்கும்போது ஓவியர்
ஓவியம் ஒன்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
எழுத்தாளர்
புகைத்தபடி கேஸட் சுழல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
கேஸட்டிலிருந்து
குரல் : ராத்திரி ஒன்பது மணி இருக்கும். ரோட்ல யாரும் போகல. அந்த போலீஸ் ஸ்டேஷன்ல
முற்றம்
மாதிரி இருக்கு. அந்த இடத்துக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போயி என் வீட்டுக்காரரை
அங்கேயே கூட்டிக்கிட்டு வந்து அடிச்சாங்க..
================== ==================
காட்சி-6 போலீஸ் ஸ்டேஷன்-
இரவு
================== ==================
ஆண் பின்புறம் தெரிய ஜன்னல் கம்பிகளில் கட்டப்பட்டுள்ளான். இடுப்பில் டவுசர்
மட்டும்.உடம்பெங்கும்
தடியால்
வீங்கிய
காயங்கள்.கணுக்காலுக்கு மேல் உள்ள சதையில் அடிபோலீஸ் உதை.லத்தியால்
முதுகில் அடி .ஒரு போலீஸ்காரன் தண்ணீர் தருகிறான். அவன் கையிலிருந்து
குடிக்கும்போது வெறியோடு பார்க்கிறான். அந்த ஆண்
பெண் : அடிக்காதீங்க .. உங்களுக்கு
பாவபுண்ணியம் இல்லையா..
பெண் : உடம்பு கறியாக் கிடக்குதே..
இன்னும் அடிக்கிறீங்களே..
ஆண் : தண்ணி..தண்ணீ..
பெண் : அவருக்குத் தண்ணி குடுங்க சாமி....
சேலை
உருவப்படுகிறது.
அவன் வாயிலிருந்து நீரைக்கொப்பளித்து போலீஸ்காரன் மீது துப்புகிறான்.
கோபம் கொண்ட போலீஸார் சேர்ந்து அடிக்கின்றனர். இன்ஸ்பெக்டரின் முதுகு தெரிகிறது. அவனது
காலிடுக்கில் அவளது முகம். அவனது கையில் சேலையின் நுனி. .
ஆண்: ஐயோ.. ஐயா அவள விட்டுடுங்கய்யா...
ஆறு கால்களுக்கு இடையில் அவள் தலை
கவிழ்ந்து கூந்தல் கலைந்து.
ஆண்: (குரல் மட்டும்) அவள ஒண்ணுஞ் செஞ்சிடாதீங்கய்யா..
மிரண்டு விளிக்கும் கண்களில் கண்ணீர்
ஆண்: நாங்க எதுவுமே செய்யலீங்கய்யா..
சேலையை உருவும் கையாலேயே இன்ஸ்பெக்டர்
அவளைத்தூக்கி அணைக்கிறான்.
அவள் திமிறுகிறாள்
போலீஸ் : ஏய் நாங்க சொல்றா மாதிரி செஞ்சீன்னா
உன்னையும் உன் புருஷனையும் விட்டுடுவோம்.
இன்ஸ்பெக்டர்
கைதட்டி போலீஸாரை வெளியேறிச்சொல்கிறான். நான்குபேரும் போகும்போது ஐந்தாவதாக இன்ஸ்பெக்டர்
தன் சட்டை, தொப்பி வாசல் ஆகியனவற்றைக் கழற்றி எறிய அவை தரையில் விழுந்து கிடக்கிறது
இன்ஸ்பெக்டர்
பெண்ணின் மீது பரவிக் கிடக்கிறான் அவள்மீது இன்ஸ்பெக்டர் உடையும் தொப்பியும் கிடக்கிறது.
அவள் அசைவு நிற்கும்போது உடையும் தொப்பியும் எடுத்து அணிந்து கொள்ளப்படுகிறது.
வாசல்வழியே இன்னொரு போலீஸ் உடை
தொப்பி அவள் மீது விழுகிறது. அலறல்- அசைவு-நிலை
வெளியே
உடை , தொப்பி அணிதல் மேலும் ஒரு உடை, தொப்பி அவள்மீது;
வெளியே உடை மாற்றுதல் இன்னும் ஒரு உடை அவள் மீது; வெளியே உடை மாற்றம். காவல் என்ற போர்டிலிருந்து வெளிச்சம் விலகி மேஜையின்மீது
இருக்கும் சாராயப் பாட்டில்களில் விழுகிறது.
போலீஸ்காரர்களின் முகம் எப்பொழுதும் தெளிவாகத்தெரிய
வேண்டியதில்லை.ஒரு போலீஸ்காரன் கையில்
உள்ள பாட்டில் மூடியைச் சுழற்றிவிடுகிறான். கேஸட்டிலிருந்து வார்த்தைகள் ஒலியாக வருகின்றன.
அந்தக்
கிழப்பொலீஸ்காரன் ஒரு துண்டுக் கழியெ எடுத்திட்டு வந்து 'இம்மாம்பெரிசு போவுமா'ன்னு பச்சையா கேட்டான்.கேட்டிட்டு
என்னை உயிர் நிலையிலேயே அடிச்சான்.எனக்கு வலிக்குது, என்னை விட்டுடுன்னு
கதறினேன்.
இப்பதாண்டி ஆரம்பம்னு அந்த நாலுபேரும்
ஒருத்தருத்தா....
================
காட்சி-7 ஓவியக்கூடம்
================
கோபத்தோடு
ஓவியன் ம்யூசிக் சிஸ்டத்தை நிறுத்துகிறான்.அவன் கையிலிருந்த தூரிகை தட்டியின் மீது
வண்ணங்களைச் சிதறுகிறது.
ஓவியன்: இப்படி நடந்துக்கிட்டிருக்கு. நாமெ என்னடான்னா வண்ணங்கள்
பற்றியும் வார்த்தைகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்.
எழுத்தாளர்: (கசப்புடன் சிரித்தபடி) நான் கூடப் பள்ளிச்சிறுமிகளின்
பாலியல் விருப்பங்களைப் பின்னணியாக வைத்து ஒரு நாவலை எழுதிக்கிட்டிருக்கேன். ஒருவகையில்
நாமெ நம்மோட கவனத்தை திசை திருப்புவதன் மூலமா கண்ணையும் காதையும் மூடிக்கொள்ளப்பார்க்கிறோம்.
இன்னொரு வகையில பார்த்தால் இது நமக்கு நாமே கொடுத்துக்கிற தண்டனையாகவும் இருக்கு.
ஓவியன்: இதையெல்லாம் கேக்குறப்போ அந்த இடத்தில நாமெ இல்லாமெப்
போயிட்டோமே .. இருந்திருந்தா தடுத்திருக்கலாமே...அப்படீன்னு நாமே நினைக்கிறதில்ல..'நல்ல வேளையா நாமெ அந்த இடத்தில இல்லை என்கிறமாதிரி ஆறுதல் உணர்வு தான் தோணுது,பயம்..நமக்கே அது நடந்திருமோங்கிற பயம்..
எழுத்தாளன்: சரி நான் வர்றேன்..எழுத முயற்சி பண்றேன்..
ஓவியர் வெளியில் வந்து அவரை வழியனுப்பிவிட்டு
வாசலில் நிற்கிறார்.தூரத்தில் புள்ளியாக அவர் மறைவதைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து
கேஸட்டைப் போடுகிறார். வார்த்தைகள் வருகின்றன.
- "சரிம்மா.. உன்னை வெளியில விட்டது திங்கட்கிழமை காலையிலயா..?
- புதன்கிழமை காலையிலயா..?"
- "வெளியில வரும்போது நீ உன் புருஷனப்பார்க்கலியா..?"
- "
இல்ல நான் லாக்கப்பில பார்த்தேன். அங்க யாரும் இல்ல"
- "யார் யாரெல்லாம் உங்களக் கெடுத்தாங்கன்னு சொல்லமுடியுமா.?. ஒரு எஸ்.ஐ நாலு
போலீஸ்காரங்களா"
- "ஆமாம்."
- " ஆளப்பார்த்தா அடையாளம்
தெரியுமா..? "
- "
ம்....தெரியும் "
======================================
காட்சி-8 தெரு வெளியில்
-இரவு.
======================================
எழுத்தாளர்
நடந்து வருகிறார். தெருவில் ஒன்றிரண்டுபேர் .அவரைத்தாண்டிச் செல்கின்றனர். சைக்கிள் ஒன்று எதிர்ப்புறத்தில் கடந்து செல்கிறது.
தெருவோரத்தில் அடுப்பு மூட்டிச் சமைக்கும் குடும்பம் ஒன்றைத்தாண்டி நின்று பார்த்துச்
செல்கிறார்.
குழந்தை: ம்ம்.. அம்மா..
எழுத்தாளர்: ஏம்மா.. ஏன்.. அழுதுக்கிட்டிருக்கே..
குழந்தை : அம்மா.. அம்மா..
எழுத்தாளர்: என்ன அம்மாவுக்கு என்ன..
குழந்தை : அம்மா...அப்பா...அப்பா..
அம்மாவெ
கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறது .வெளிவாசலின் கொக்கியைத் திறக்கின்றனர்.
திரும்பவும்
மூடப்படவில்லை.
================================================
காட்சி:9 இரவு-ஒரு வீட்டின்
முன் அறை
================================================
ஒரு இளம்பெண்
வயது முப்பது முப்பத்தைந்துக்குள் இருக்கும். உட்கார்ந்து அவள் தாடையைப் பிடித்துக்
கொண்டிருப்பவனின் ஒரு ஷூ உருவப்பட்டுள்ளது. அவள் இன்னொரு ஷூவை உருவிக் கொண்டிருக்கிறாள்.
இரண்டையும் எடுத்துக்கொண்டு போய் ஷூ ஸ்டேண்டில் வைத்துவிட்டு வருகிறாள். ஷூ வெள்ளை
சாக்ஸை உருவி டீப்பாயின் வைக்கிறாள். அதுவும் வெள்ளை சோபாமீது கிடக்கும் வெள்ளை டர்க்கி
டவலை உதறிவிட்டு திரும்பவும் அதன்மீதுபோர்த்தி உட்காருகிறான். டீப்பாய் வெள்ளை மதில்கள்
வெள்ளை..மேஜைமீது வெண்மைநிற துணிகள் போர்த்தப்பட்டுள்ளன.டி.வி. , ப்ரீஷர். வெள்ளை
மண் பொம்மை. தராசைத் தூக்கியபடி. கண்களில் கறுப்புத்துணிக்குப் பதிலாக வெள்ளைத் துணி
அதன் கீழே சீவிய பென்சிலின் துகள்களும் சுருள்களும் குவியலாக- கறுப்புத் திட்டாக.
ஆண்: இதென்ன வீடா..? குப்பமேடா.. அழுக்கு..
கறுப்பா.. ஒரே தூசி. வீட்டில ஒருத்தி எதுக்கு
இருக்கியாம் ..
அவள்: இல்லங்க.. இப்போதான் அமுதா பென்சில் சீவினா.
இதோ இப்போ எடுத்துடுறீங்க.
அவள் துடைப்பத் தாள் துடைக்கும்பொழுது .கதவு-பாத்ரூம் கதவு சாத்தப்படும் ஓசையால் அவள் திரும்பிகிறாள்.
குழாயிலிருந்து
விழும் தண்ணீரின் ஓசை. கழுவி வைக்கப்படும் கோப்பைகள் வெள்ளை நிறக் கோப்பைகள் அலம்பிய
கையில் எடுத்து காபியை கலந்து வரும் அவளது உடைகள் கூட தூக்கலான வெண்மையாகவும் மென்மையான
பச்சையாகவும் பூஜை அறைக்குள் முனகும் ஒலி." வெண்ணீறு" என்பது மட்டும் தெளிவாகக்
கேட்கிறது.அவன் வெளியே வரும்பொழுது வெள்ளை வேட்டி ; வெள்ளை பனியன்
நெற்றி, கை , கழுத்து என திருநீறு தூக்கலாகத்
தெரியவேண்டும். அவள் கொண்டுவரும் காபி கோப்பையைக் கையில் வாங்கித் தூக்கிப் பார்க்கிறான்.கழுவியதில்
ஏதோபடிந்துள்ளது. காபிக்குள் காறித்துப்பி அவள் மீது விசிறி அடிக்கிறான்.
அவன்: அழுக்கு
.. அழுக்கு.. சுத்தம்கிறது சுட்டுப்போட்டாலும் வராதோ..
கோப்பையுடன்
திரும்பும் அவள் போனபின்பு விசும்பும் ஒலி மட்டும் கேட்கிறது.கோப்பையில் காபியை ஊற்றிக்
குடித்துவிட்டுத் துப்புகிறாள். சிதறி வீடு முழுக்க பரவிக்கலைகிறது.
திருப்புக்காட்சி
ஒரு
வீட்டுக் கதவைத்திறந்துவிட்டு ஒருவர் ஒதுங்குகிறார். முகப்பு அறை வெள்ளைச்சுவர் வாஸ்பேஸின்,தரை, எல்லாம் வெள்ளையாகவே இருக்கிறது. அடுப்படி- கறுப்புக்கல்.பாத்ரூம்- வெள்ளை மார்பிள்ஸ்.படுக்கையறை- அலமாரிகள் என
எல்லாமே வெண்மை போர்த்தியனவாக உள்ளன.
அவன் : என்ன சரசு ..வீடு புடிச்சிருக்கா..
சரசு : ஒரே வெளிச்சமா இருக்காமாதிரி இருக்குங்க.
ராத்திரியிலகூட இருட்டாகாது போல இருக்கு..
அவன் : அப்போ புடிக்கலங்கிறீயா..
சரசு : அப்படிச் சொல்லல.. மதிலுக்கு வேறெ கலர்ல ஸ்நோசெம் அடிச்சிருக்கலாம்னு சொல்ல வந்தேன்.
கதவு திறந்து விட்டவர் நுழைகிறார்
அவன் : வீடு எனக்குப் புடிச்சிருக்கு..ஆனா
ஒரு சின்ன மாற்றம் செய்யணும்..
சரசு : என்னங்க...
அவன் : அடுப்படியில- சுவரில இருக்கிற
டைல்ஸும் வெள்ளையா மாத்தனும்..
சரசு : ஐயோ வேண்டாங்க.. புகை படியும்
..
திருப்புக்காட்சி
கலைந்து முடியும்பொழுது அவள் முகம் அலம்பி பவுடர் பூசிய முகத்துடன் அவள் வருகிறாள்
அவன் : எங்கே குழந்தையெக்காணோம்.. தெருவில திரியற கழுதங்களோட
சேர்ந்து புரண்டுட்டு
வந்தா.. இந்த வீடு என்னவாகும்..? புழுதியும்..குப்பையுமா .. சீ...
என்ன ஜென்மமோ..போ
சரசு : இதோ வாராங்க..
வாசலுக்குப்
பார்க்கப் போகும் அவசரத்தில் டீப்பாயின் அடியில் இருந்த விளையாட்டுச் சாமான்களைத்தட்டி
விடுகிறாள். ஹால் முழுவதும் கோலிக்குண்டுகள் உருண்டு ஓடுகின்றன.கோபம் கொண்ட அவன்
முகம் அவன்: அடி மூதேவி .. பொறுக்குடி.. பொறுக்குடீ...உருளும் குண்டுகள். அடிக்கிறான்
அவன் : ஏண்டி முழிக்கிறே...பொறுக்குடீ..
அழுகையுடன்
ஓடியோடிப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.பொறுக்கி ஒரு டப்பாவுக்குள் போடுவதற்காக
ஒரு ஷெல்பைத்திறந்து வைத்து விட்டு கோலிக்குண்டுகளைப்போட்டு மூடுகிறாள்.
அவன் : இதெ முதல்லேயே செய்றதுக்கென்ன.. எல்லாம்
கொட்டி.. நாசமாகணும்.
அவள் ஷெல்பிற்குள்
வைக்க அவன் கதவைப்பட்டென்று மூடுகிறான்.அந்த ஷெல்பிற்குள் ஏதோ உருள்கிறது. உள்ளேயிருந்து
இங்க் கொட்டி வழிகிறது
அவன்: வீடெல்லாம் கறையாயிடுச்சேடீ..
மதிலில் சாரைசாரையாக..தரையில்
நீலப்பாம்பாக இங்க்..
அவள்: மதில்லே பட்ட கறையெப்போக்கிடலாம்.. ஆனா..
உங்க கையில பட்ட கறையெ போக்க
முடியுமா..?
அவளது
தலைமுடியைப் பற்றி இழுத்து அந்த இன்க் படிந்த இடத்தில் மோதுகிறான்.கைகளைக் காலால்
மிதிக்கிறான்
கோபம் கொப்பளிக்கும் அவன் முகத்துடன் கோலிக்குண்டுகளை சிதறி விட்டு அதன் மீது அவளை
எத்தித் தள்ளிவிடுகிறான். அவனது காலைக் கெட்டியாகப் பிடிக்கிறாள். அவன் எட்டி உதைக்கிறான்.உள்ளே
சிறுமியுடன் நுழையும் எழுத்தாளன் - அருகில் இருந்த ஸ்டூலால் அடித்து விட்டுத் திகைக்கிறான்.
அழுதபடி அவள் திகைத்து நிற்கிறாள் அவன் அவளது காலடியில் கிடக்கிறான். தலையிலிருந்து
ரத்தம் அவள் எழுத்தாளரின் கையைப்பிடித்து அழுகிறாள் எழுத்தாளர் குழந்தையை ஆதரவாகத்
தடவுகிறார்.
===============
காட்சி:
10 ஓவியக் கூடம்- பகல்
====================
எழுத்தாளரிடம்
வாங்கிய பிரதியைப் புரட்டியபடி,சிகரெட்டை நசுக்கிவிட்டு
ஓவியர் : ஒரு கட்டுரை போல இருக்காதுன்னு சொன்னது உண்மைதான்.
அந்தக் கேஸட்டில கேட்ட குரல் உங்க
ஃப்ரண்ட் ஒருத்தியப் பேசவச்சு பதிவு செஞ்சதுன்னு
சொல்றதெ இப்பக்கூட என்னால நம்ப முடியல்ல
எழுத்தாளர் : அது உண்மையில நடந்ததா இல்லையா அப்படீங்கிறது பிரச்சினை
இல்ல. அன்னைக்கு அது நடக்காமெ இருந்திருக்கலாம். நேற்றோ இன்னைக்கோ அது நடந்துகிட்டுத்தான் இருக்கு.. நாமெ போய் கேஸட்டில
பதிவு செய்யலேன்னாலும் கூட அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களோட வலியை வாக்குமூலமா
எங்கேயோ சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க.. ஆக கதையா..நிஜமாங்கிறது இல்லெ இப்போ முக்கியம்.
ஓவியர் ஆமாம்.நீங்க சொல்றது சரிதான். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை
பாருங்க.. நீங்க ஒரு பெண்ணைக் காப்பாத்தினதா எழுதியிருக்கீங்க.. பாருங்க.. அதேமாதிரி நியூஸ்.. பேப்பர்ல வந்திருக்கு...
(தினசரி ஒன்றை எடுத்துக் காண்பிக்கிறார்)
ஒரு
ஆள் கொலை செய்யப்பட்டிருக்கான். அவனோட மனைவியைப் போலீஸ் கைது செஞ்சிருக்கு.. அவங்களோட
குழந்தையை சமூகசேவகர் யாரோ வந்து கூப்பிட்டிட்டுப் போயிட்டாராம்.
எழுத்தாளர் : (புன்னகையுடன்) நாம் வாழுகிற காலம் அப்படி.. கதை எது ?
நிஜம் எது ? ன்னு பிரிக்க முடியாமக் குழம்பிப் போயிருக்கிற
காலம்.
ஓவியர் : ஆக உங்க ஓவியத்தொகுப்புக்கு இந்த ஸ்கிரிப்ட் போதுமில்லையா..?
(ஓவியர் போதும் என்பதாகத் தலை அசைக்க எழுத்தாளர் கைகுலுக்கி விடைபெறுகிறார்)
நீங்கள் எழுதிய நாடகமா?.
எழுத்தாளர்; இல்லை.
இலக்கிய விமரிசகர் நண்பர் ஆவணப்புனைவொன்றை (டாக்கூ-பிக்ஷன்) எழுதுவதற்காக வைத்திருந்த
குறிப்புகள்
அங்கம் : 5
காட்சி:1
·
அதே ஒத்திகைக் களம்.
·
இயக்குநர் தனியாக… பின்னணியில் மேற்கத்திய இசை துரித கதையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப தன் உடலைப் பலமாக அசைத்து ஆடத்தொடங்கி ஓய்கிறார். இசை நிற்கிறது.
· கடிகாரம் சத்தமாக ஒலிக்கிறது. இயக்குநர் கடிகாரத்தைப் பார்க்கிறார். கேசட்டை மாற்றுகிறார். சாஸ்திரீய நடனமொன்றிற்கான தாள ஒலி. அதற்கேற்ற நடனம். நடனத்தின் முடிவில் இயக்குநர் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறார். உடம்பின்
எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில்
இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம்
குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது].
'நோ..ந்நோ..இல்லை ..
இது
பொய். இது பொய்..
காதலாவது
கத்தரிக்காயாவது;
முடியாது ; ஒத்துக்க முடியாது
நான்
ஒத்துக்க முடியாது.
எனக்கு
என் அடையாளம் முக்கியம்;
என் அந்தஸ்து முக்கியம்
எனது
கடவுள் முக்கியம்;
எனது
சாதி முக்கியம்
எனது
சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு
சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட
ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும்
மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை'
[வசனப்
பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக
வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப் பதற்கேற்ப அந்த
உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசட
வென்றும் வந்து போகின்றன. நிழலும் நீள்வதும்
குறுகுவதுமாக இருக்கிறது. விளக்கு, குரலின் ஓசை, நிழலின் அளவு என ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் அமைய வேண்டும்
இந்த
வசனப் பயிற்சியினூடாக தூரத்தில் ஒரு ஷூட்டிங்கின் பின்னணிக் காட்சிக்கான குரல்கள்-'லைட்ஸ் ஆன்'
, சீன் தேற்ட்டி பைவ்; டேக் த்ரீ போன்ற
குரல்கள் கேட்கின்றன. பின் திரையில் நிழல் உருவத்தில் இயக்குநர் காமிராக்
கோணம்பார்ப்பது ,டிராலியில் காமிரா முன்னும் பின்னுமாக
நகர்வது போன்றன இடம் பெருகின்றன. கடைசியில் இயக்குநர் குரல் ]
"
ஷாட் ரெடி ... டேக்..ஆக்ஷன்.."
[
இந்தக் குரல் கேட்டதும் அந்த நபர் எழுந்து ஆவேசமாக இந்த வசனங்களைப் பேசிகிறான்]
"நோ..ந்நோ..இல்லை
.. இது பொய்.
இது
பொய்..
காதலாவது
கத்தரிக்காயாவது;
முடியாது ; ஒத்துக்க முடியாது
நான்
ஒத்துக்க முடியாது.
எனக்கு
என் அடையாளம் முக்கியம்;
என் அந்தஸ்து முக்கியம்.
எனது
கடவுள் முக்கியம்;
எனது சாதி முக்கியம்.
எனது
சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு
சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட
ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும்
மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு
வழி
எதுவும் இல்லை"
[இயக்குநரின்
குரல் மட்டும் கேட்கிறது]
'ஸூபர்ப் சார்.. பின்னீட்டீங்க..ஏய்ய்.. நாளைக்கு சாருக்கு எந்த ஷெட்யூல் ;
செக்கண்ட்
ஷெட்யூலா.. ஓ.கே.. சார் . நாளைக்குப் பார்க்கலாம் ..'
[அருகில்
இருப்பவரிடம் சொல்வதுபோல் மெதுவாக ]
'அனுபவசாலிகளோடு ஒர்க் பண்ற சொகமே தனி தாம்ப்பா..'
[அவன்
அதை நின்று கேட்டுக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் வெளியேறுகிறான்]
காட்சி:2
[நாற்காலியில்அமர்ந்திருக்கிறான்; அவனது அசைவு காரில் பயணம் செய் வது போல் இருக்கவேண்டும். தேவைப்படும் இடத்தில் எழுந்து
நடித்துவிட்டுத் திரும்பவும் அசைவு ரூபத்திற்கு வந்து விடவேண்டும்]
நினைவில்
இருக்கிறது
எனது
நினைவில் இருக்கிறது.
எல்லாம்
நினைவாய் இருக்கிறது.
எதில்
தொடங்கி எங்கு முடியும் என் நினைவுகள்
எங்கள்
ஊர் ஆலமரம்; அகன்று விரிந்த ஆலமரம்.
கிளைக்குப்
பத்து விழுதுத் தூண்கள்.
விழுதுகள்
தோறும் கிளிக்கூண்டு;
கூண்டுகள்தோறும்
பச்சைக்கிளி..
...ஒற்றைக்கிளி..
இரட்டைக்கிளி..
கூண்டுகள்
காணாப் பச்சைக்கிளிகள்.
மெல்ல
வளைந்தோடும் உப்போடைப்பள்ளம்
மானம்
பார்த்த அந்தப் பூமி
வடக்கே
பார்த்தால் மேகங்களுக்கூடே
மெலிதாய்
தெரிவது திடியன் கரடு
அதன்
அடிவாரத்தில் அந்தவெள்ளைக் கோபுரம்.
இந்தப்
பக்கம் தொழுகை போடும் சின்ன மசூதி.
வாப்பாவுக்குத்
தெரியும் ஐந்து நேரத்தொழுகை;
எனக்கும்
தெரியும்;
எனக்கு
ஐந்து நேரத்தொழுகையுடன்
ஆறுகாலப்
பூஜையின் நேரமும் தெரியும்.
காயத்திரி
மந்திரம் கற்றுக்கொள்ள முயன்று தோற்றதும்
கண்ணுக்குள்
நிறையும் பின்கூந்தல் அசைவும்
திரும்ப
வரப் போவதில்லை.
எனது
கிராமம் எங்கே போனது;
எனது
இளமை எங்கே சென்றது;
நான்
படித்த நடுநிலைப் பள்ளியில்
எட்டு
வகுப்புக்குப் பதினொரு வாத்தியார்கள்.
பத்தைத்
தாண்டிய ஒற்றை விரலாய்
இந்தி
வாத்திச்சி; பர்வதவர்த்தினி;
அவர்தான்
அப்புறம் கணக்கு டீச்சர்.
இந்தி
வாத்திச்சி கணக்கு டீச்சர் ஆன கதை
என்
நினைவில் இருக்கிறது.
பெருமாள்
கோயில் அக்கிரகாரத்துக் கடைசி வீட்டில்
எங்கள்
டீச்சர் இருந்தது வாடகைக்குத்தான்.
அவருடன்
அவரது அம்மாவும் இருப்பார்.
கணக்கு
வாத்தியார் தனசேகரபாண்டியன் தோட்டத்திலிருந்து
காய்கறிகளும்
நல்ல தண்ணீரும் கொண்டு போய் இறக்க
எங்கள்
வகுப்பில் ஏழு டீம் இருந்தது.
என்னுடைய
முறை வெள்ளிக்கிழமை.
தொழுகைக்குப்
போக முரண்டு பிடிக்கும் எனக்கு
அக்கிரகாரம்
போக அலுத்ததே இல்லை.
குளித்து
முடித்துக் கோதும் சிணுக்கருக்கியுடன்
எங்கள்
டீச்சர் வாசலில் நிற்பாள்;
அவளுக்கு
உவமை சொல்ல ஒரு சிற்பம்
மசூதியில்
இருக்கவில்லை.
உவமை
தேடிக் கோயிலுக்குப் போவேன்.
மலையடிவாரக்
கோயிலுக்கு....
கோயிலெங்கும்
கோலங்கள்; கோலமயில்கள்.
ஹிந்தி
ஒழிக! தமிழ் வாழ்க!!
தமிழ்
வாழ்க! ஹிந்தி ஒழிக!!
இந்திப்
பேயை ஓட்டும் போரில்
இறங்கவேணும்
இளைஞர்களே!
வேண்டும்!
வேண்டும்!! தமிழே வேண்டும்;
எங்கும்
வேண்டும்! எதிலும் வேண்டும்!!
புதுப்புனல்
ஆறாய் எமது தாய்மொழி
பொங்கும்
தமிழே எங்கும் வேண்டும்
வேண்டாம்!
வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
வடவராதிக்கப்
பேயது வேண்டாம்.
ஆரிய
பாஷை....அது நீசபாஷை..
ஆதிக்கம்
செலுத்தவந்த அன்னிய பாஷை.
வேண்டாம்!
வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
பார்ப்பணக்
கும்பலின் மொழியது வேண்டாம்.
கோஷம்
போட்டபோது என்ன வயதிருக்கும்
நான்
இளைஞனுமில்லை; என்னில் ஆர்த்தெழுந்த
திமில்கள்
எதுவென அறிந்ததுமில்லை.
என்றாலும்
கோஷங்கள் உண்டு; கோபங்கள் உண்டு;
கல்லெறி
உண்டு; கதவடைப்பு உண்டு.
ஆனால்
டீச்சரிடம் எனக்குக் கனிவ்¢ருந்தது.
தனசேகரபாண்டியன்
சொன்னபோது
புரிந்தது
கொஞ்சம்; புரியாதது எங்கும்;
என்ன
செய்தார் பர்வதவர்த்தினி..?
எப்படி
முடியும் அவரை எதிர்க்க...?
இந்தி
வருது என்றபோது ;
இல்லை
செதுக்கிய
சிலையொன்று சிறு நடனம் புரிந்தது என்பேன்
அந்த
வயதில் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.
என்மனதில்
இருந்தது என்னவென்று எனக்கே தெரியாது.
இந்தி
எதிர்ப்புப் போரில் தனசேகரபாண்டியன் தான் தளபதி
முப்பதுகளில்
இருந்த அவரது அடுக்குமொழித்தமிழ்
சொக்கவைக்கும்
தேன்மதுரம்; அற்புதப் பல்வரிசை.
எங்கள்
பள்ளியிலிருந்து ஹிந்தி போனபோது
பர்வதவர்த்தினிக்கு
வேலை போகவில்லை;
பர்வதவர்த்தினி
திருமதி
தனசேகரபாண்டியன் ஆனாள்.
இரண்டு
வருடங்களுக்குப் பின்
ஹிந்தி
டீச்சர்
எங்கள்
பள்ளியின் கணக்கு டீச்சரானார்.
அக்கிரகாரத்துப்
பர்வதவர்த்தினி
அகமுடையாளானாள்.
இந்தியை
வெறுத்த தனசேகரபாண்டியனுக்கு
இந்தி
டீச்சர் பிடித்தமானவளாக இருந்தது எப்படி..?
கேள்விகள்
அப்பொழுது இல்லை;விடைகள் இருந்தன.
காதலுக்குக்
கண் இல்லை;
காதலுக்குக்
கண்மட்டும்தானா இல்லை...?
இப்பொழுது
விடைகள் இல்லை.
கேள்விகள்
இருக்கின்றன.
காட்சி:3
[அது ஒரு விழா மேடை; வெள்ளிவிழாக்
கொண்டாடிய படத்தின் கேடயம் கையில் இருக்கிறது.விருதுவாங்கிய அவனிடம் கேள்விகள் கேட்கும்விதமாகக் குரல்கள்
வருகின்றன]
'இந்த விருதுவாங்கிய
கணத்தெ
எப்படி உணர்றீங்க..?'
"ரொம்ப
சந்தோசமா இருக்கு.. ஒரு கலைஞனுடைய சந்தோசம் என்பது அவனது காரியத்தெப் பலரும்
பாராட்றதிலதான் இருக்கு;
பணம்;வசதியெல்லாம் வரும் போகும்;ஆனால் ரசிகர்கள் மனத்தில் பிடிக்கிற இடம் ரொம்ப முக்கியமானது.புகழ்
அதுக்குத்தலை வணங்காம இருக்க யாரால் முடியும். ரசிகர்களின் பாராட்டுக்கும்
எதிர்பார்ப்புக்கும் ஏற்றவனாக என்றும் இருப்பேன் "
'
இப்படியொரு கேள்வி கேக்கிறேனேன்னு கோபப்பட வேண்டாம்.இந்தப் படத்தில
இந்த கேரக்டரச் செய்யும்போது இன்வால்வாகி செய்ய முடிஞ்சதா... இல்லேயின்னா வேறெ
வழியில்லன்னு செய்ஞ்சீங்களா..?'
"இப்படியொரு
கேள்வியெக் கேக்கிறதுக்கு என்ன காரணம்..?"
'அதாவது இதே படத்தில உங்களுக்கெதிராக நிக்கிற அந்தக் கதாபாத்திரத்த... ஐ
மீன் அந்த முஸ்லீம் கதாபாத்திரத்த
நீங்க இன்னும் நல்லா
செஞ்சிருக்கலாமில்ல...?'
[
மனதிற்குள் கோபம் இருக்கிறது.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ]
"யூ..மீன் ஒரு பைத்தியக்காரனுக்கு மட்டும் தான் பைத்தியமா நடிக்கிறது சுலபம்னு சொல்ல
வர்ரீங்க.. அப்படித்தானே ."
'ஸாரி சார் ..அந்த அர்த்தத்தில சொல்லல '
"ஸாரி
நானும் அந்த அர்த்ததில சொல்லல;
ஒரு நடிகனெப் பொறுத்தமட்டில எல்லாம் கதாபாத்திரங்கள் தான்; நான் முஸ்லீம்கிறதுனால ஒரு முஸ்லீம் கேரக்டரெ நல்லாச் செய்ஞ்சிடுவேன்னு
எதிர்பார்க்கிறது அபத்தம்ன்னு சொல்ல வந்தென்."
'அனுபவத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லங்கிறீங்களா..?'
"சம்பந்தம்
இருக்கலாம்; பயிற்சியே அதைவிட முக்கியம்னு சொல்ல வர்றேன்; நாய்
வேஷம் போட்டா கொரைக்கப் பழகனும்; கழுதயின்னா கத்தப்
படிக்கனும்."
[மேலும் கேள்விகள் வேண்டாமே என்னும் தொனியில்
உடல் சாடை காட்டிவிட்டு
இறுக்கமான முகத்துடன் வெளியேறிய அவன்
பெரும்மூச்சுடன் படுத்துக் கிடக்கிறான். அவனுள்ளிருந்து முனகலாக வரத்தொடங்கிய
குரல் பிறகு வெடிக்கிறது]
அர்த்தங்கள்..அனர்த்தங்கள்
நிற்பதிலும்
நடப்பதிலும் அர்த்தங்கள்;
உண்பதிலும்
உறங்குவதிலும் அர்த்தங்கள்;
எல்லா
அர்த்தங்களும் புரிகின்றன.
மோகம்
கொள்வதற்கும் போகம் கொள்வதற்கும்
ஒரே
அர்த்தந்தானா..அனர்த்தங்கள் எதுவுமுண்டா..?
கேள்விகளும்
பதில்களுமாய் ..
பதில்களும்
கேள்விகளுமாய்..
ஆலமரம்
தாண்டி அம்மன் கோயில்;
திரௌபதியம்மன்,
பாஞ்சாலியம்மன்; அஞ்சுபேருக்கு
வாக்கப்பட்ட பாஞ்சாலி
[தெருக்கூத்தில்
இடம் பெறும் பாஞ்சாலி- துச்சாதனன் துகிலுரியும் காட்சியைத் தெருக்கூத்து
நடிப்பாகக் காட்டவேண்டும்]
"அடேய்..துச்சாசனா...
இழுத்து வாடா.அவளை..
ஏளனம்
செய்து கொல்லென்று சிரித்த அந்தப் பாஞ்சாலியை
இழுத்து
வாடா.அவளை..அடேய்..துச்சாசனா...
கண்ணாடி
மாளிகை கட்டியழைத்து
கலகலவெனக்
குலுக்கியெடுத்து
கதிகலங்கடித்த
அந்தப் பாஞ்சாலியை
அடேய்..துச்சாசனா...
இழுத்து வாடா.அவளை.
என்ன
காரணமென்று நான் யோசிக்க ,
என்னைக்
கொல்ல வந்ததந்தச் சிரிப்பதுதான்
என்பதை
உணர்ந்தேன் சோதரா...
இழுத்துவாடா
அவளை.. என் தொடைமீது உட்கார்ந்து
சுண்ணாம்பு
தடவிய வெற்றிலை மடித்திட
இழுத்து
வாடா அவளை..
இங்கே
இழுத்து வாடா அவளை...
சூதாட்டக்
களத்தில் வைத்திழந்த பொருளாய்
நேர்ந்திட்டபின்னரும்
இன்னுமென்ன இருக்கு
அவளுக்குக்
கர்வங்கள் தானெததற்கு..
இழுத்து
வாடா அவளை..துச்சாசனா..இழுத்து வாடா அவளை.
[துரியனாய்
இருந்தவன் துச்சாதனனாய் மாறி துகிலுரியும் காட்சிக்குத்தயாராக வேண்டும்].
'ஆணைகள் தானேயிட்டார் எங்கள் அண்ணா
'ஆணைகள் தானேயிட்டார்;எனக்கு
ஆணைகள்
தானும் இட்டார் .
இழுத்துவரச்
சொல்லி ஆணைகளும் இட்டார்
அந்தப்புரம்
செல்வேன்; நானே அந்தப்புறம் செல்வேன் .
அந்தப்
பாஞ்சாலி தங்கிடும் அந்தப்புரமும் செல்வேன்
ஐம்பத்தாறு
தேசத்து ராசாக்களும் அவள் அலறலைக்
கேட்டு
ரசிக்கவே இழுத்தே நான் வருவேன்.
இழுத்தே
நான் வருவேன்.
எங்கள்
அண்ணன் நோகச் சிரித்த
கோமளவல்லியை
இழுத்து நான் வருவேன்.
என்
அண்ணன் இடது தொடையின் உயிர்த்தள மேடையில்
உட்கார்ந்து
ரசித்திட இழுத்து நான் வருவேன்".
[கூத்து
நடிப்பிலிருந்து விடுபட்டு இயல்பு நிலையில் ]
இழுத்து
வரமாட்டேன். நான் இழுத்து வரமாட்டேன்.
(
நின்று நிதானமாக அசைந்து அசைந்து)
மாட்டேன்..
இழுத்து வரமாட்டேன்.
எனக்கு
துஷ்டன் துச்சாதனனாக நடிக்கப்பிடிக்கவில்லை.
பாஞ்சாலியைப்
பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
அஞ்சு
பேருக்குப் பத்தினியான அந்தப்
பாஞ்சாலியைக்கூட
விட்டு விடுங்கள்.
பாரதமாதாவைப்
பாருங்கள் கௌரவர்கள்
மட்டுமா துகிலுரியக் காத்திருக்கின்றனர்.
பாண்டவர்களின்
ஆசை கூட துகிலுரிந்து பார்ப்பதில்தான்
திருப்தி
கொள்ளும் போலும்.
கௌரவர்களின் சபைகளில் மட்டுமல்ல
பாண்டவர்
சபைகளிலும் நிர்வாணக் கோலம்.
துரியோதனாதிகள்
-இந்த தேசத்தின் துரியோதனாதிகள்
கௌரவர்கள்..
கௌரவங்கள்..தேசத்தின் கௌரவங்கள்..
பாண்டவர்கள்..
ஆண்டவர்கள். தேசத்தை ஆண்டவர்கள்
ஆள்பவர்கள்..மாள்பவர்கள்..ஆண்டவர்கள்.
கண்டவர்..
விண்டிலர்.. விண்டவர்.. கண்டிலர்..
(திரும்பவும்
வேகம் பிடித்தவனாய் அடவுகள் போடத்தொடங்குகிறான்.)
எச்சபை
தன்னிலும் திரௌபதியை இழுத்து வரமாட்டேன்.
துகிலுரியும்
காட்சி ஒரு நடிகனின் நடிப்புக்கு சவால் விடும் காட்சி தான்.
துரியோதனனாக
நடிப்பது எனக்கும் கூட அல்வா சாப்பிடுவது போலத்தான்.
ஆனால்
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
பாஞ்சாலியை
அல்ல; பாரததேவியை
இங்கு
கௌரவர்கள் மட்டுமா துகிலுரிகிறார்கள்.
பாண்டவர்களுக்குக்
கூட துகிலுரிந்து பார்க்கத்தான் ஆசை.
சந்தடி
சாக்கில் துரோணாச்சாரியார்களும் வீஷ்டுமாச்சார்களும்கூட
அந்த
வாய்ப்புக் கிடைத்தால் சந்தோசம் என்கிறார்கள்.
[திரும்பவும்
கூத்து அடவுகளுடன் பாடி ஆடுகிறான்]
நாயகர்
தாந்தம்மைத் தோற்றபின் - என்னை நல்கு முரிமை
அவர்க்கில்லை-புலைத்
தாயத்தி
லே விலைப் பட்டபின் - என்ன சாத்திரத் தாலெனைத்
தோற்றிட்டார்? -அவர்
தாயத்தி
லேவிலைப் பட்டவர்;-
புவி தாங்குந் துருபதன்
கன்னிநான்,-நிலை
சாயப்
புலைத்தொண்டு சார்ந்திட்டால் -பின்பு தாரமுடைமை
யவர்க்குண்டோ?..
"கௌரவ
வேந்தர் சபைதன்னில் - அறங்கண்டவர் யாவரு
மில்லையோ? -மன்னர்
சௌரியம்
வீழ்ந்திடு முன்னரே- அங்குசாத்திரஞ் செத்துக்
கிடக்குமோ?-புகழ்
ஒவ்வுற
வாய்ந்த குருக்களும்- கல்வி ஓங்கிய மன்னருஞ்
சூதிலே- செல்வம்
வவ்வுறத்
தாங்கண் டிருந்தனர் மானமழிவதுங்
காண்பரோ?
இன்பந்
துன்பமும் பூமியின் - மிசை யாருக்கும் வருவது
கண்டனம்: -எனில்
மன்பதை
காக்கும் அரசர்தாம் - அற மாட்சியைக் கொன்று
களிப்பரோ?-அதை
அன்புந்
தவமும் சிறந்துளார் -தலை
அந்தணர் கண்டு களிப்பரோ?
[திரும்பவும்
தளர்ந்த நிலைக்கு வந்து கால்கள் பின்னிப்பின்னி நடந்தபடி ]
பாஞ்சாலியின்
எல்லாக் கேள்விகளும் அர்த்தம் பெற்றனவாகிவிட்டது உங்களுக்கு புரியவில்லையா.?கௌரவர்களும்
பாண்டவர்களும் இன்று இல்லைதான்.அஸ்தினாபுரிகளுக்குப் பதிலாகவும் சைபர்
பிரதேசங்களில் நடக்கின்றன சூதாட்டங்கள்.இந்திரப்பிரஸ்தத்துக் கண்ணாடி
மாளிகைக்கீடாக புலப்படா அறிவு வாதமும்
நம்முன் நிற்கின்றன.
வட்டாடும்
மேஜைகளின் நிறங்களும் மாறிவிட்டன.
நீள
அகலங்களும் கூட மாறித்தான் போய்விட்டன.
உருட்டப்படுவது
ஜோலிகளும் சொக்கட்டாங்காய்களும் மட்டுமல்ல;
சட்டங்களும்
மரபுகளும் கூடத்தான்.
வைக்கப்படுவது
டாலர்களுக்கீடாக மனிதமூளைகள்.
கம்யூட்டர்
சிப்ஸ்களுக்கீடாக வேம்பின் விதைகளும் ஆவின் பால்ச்சத்தும்.
ஆட்டங்களும்
ஆட்டவிதிகளும் மாறித்தான் போய்விட்டன.
காட்சி:4
[ஒரு
ஓரத்தில் இருக்கும் ஆல்பம் ஒன்றை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டியபடியே பேச்சு
தொடர்கிறது.]
ஆனால்
என் விசயத்தில் எதுவும் இயல்பாயிருக்கவில்லை.
எனது
காதலும் எனது நேசமும்
எனது
நட்புக்களும்கூட.
எனது
விண்ணப்பங்கள் வேறுவிதமாகப்பரிசீலனை செய்யப்படுகின்றன.
எனது
இருப்பு சந்தேகத்துக்குரியதாவதெங்ஙனம்..?
எனது
அழுகை புன்முறுவலாவது எப்படி..?
எனது
அசைவுகள் மட்டும் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படுகின்றன.
கண்காணிக்கப்பட்டன;ஆம் கண்காணிக்கப்பட்டன.
அது
எனக்குத்தெரியும்;
அறிந்தே
அதனைச் செய்தேன்
எனக்கு
நிகழ்ந்தன போல் அல்ல
அவளது
நுழைவு காற்றில் அலையும் மயிலிறகாய் இருந்தது
எனக்கோ
எத்தனை தடைகள்; எத்தனை அவமதிப்புகள்
ஓரிடத்தில்
எனது உயரம் அதிகமென்றார்கள்
இன்னொரு
நபரோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்பார்
என்னுடைய
பிளஸும் மைனஸும்
எனக்குத்
தெரியும்
நீளமுகத்தில்
மூக்குமட்டும் துருத்திக்
கொண்டிருப்பதாகச்
சொன்னவர்களுமுண்டு.
[அவன்
ஒரு சதுரங்கப்பலகையை எடுத்து வைத்துக் காய்களை அடுக்குகிறான். அடுக்கியபடியே
பேசுகிறான்.....]
அவையெல்லாம்
கடந்தகாலம்;
எனது
கடந்தகாலத்தில் மட்டுமல்ல.
இந்தக்
கனவுலகத்திற்குள்ளும் அலையும்
மயிலிறகாகவே
அவள் நுழைந்தாள்
அவளது
வரவுக்காகக் கதவுகள் எல்லாம்
கரங்கூப்பி
அழைத்தன.
இது
பெண்களின் உலகமா..?
அப்பொழுது
எவையும் புரிந்தன அல்ல.
கடந்தகாலத்தைப்
புரிந்துகொள்ளத்தொடங்குவது
கசப்புகளையும்
கயமைகளையும் கடந்து விடத்துடிப்பதா..?
ஆனாலும்
அந்தச் சந்திப்புகளை நினைக்காமல் இருக்கமுடியாது.
அந்த
உரையாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.
[காய்கள்
அடுக்கி முடிந்திருக்கிறது. அவனுடைய வசனத்தை கறுப்புக்காயை
நகர்த்தியபடியும், அவளுடைய
வசனத்தை வெள்ளைக்காயை நகர்த்திய படியும் பேசுகிறான்]
'பர்வதவர்த்தினியைப் பார்க்கமுடியுமா..?'
"தினசரி
நான் பார்த்துவிடுகிறேன், "
'இன்னுமா கனவில் வருகிறார்கள்..?'
"நேரில்
தான்.. .. நீ இருக்கிறாயே ;
உனது திரும்புதலெல்லாம் இந்தி டீச்சரின் சாயல்தான், என்றேன்".
'கனவில் நான் வருவதேயில்லையா..?'
"கனவுகள்
வருகின்றன;ஆனால்
கனவில்
வருவது இந்த நகரமல்ல;
பெருமாள்
கோயில் வீதி.. பர்வதவர்த்தினிக்குப்பதிலாக நீ.
கைவிரல்
பிடித்து நடப்பது நான்."
கனவுகள்தான்..
எல்லாம் கனவுகள் தான்..
எங்கள்
இருவரின் உலகமும் கலை உலகம்.
நானும்
நடிகன்; அவளும் நடிகை
தமிழ்
கூறும் நல்லுலகத்திற்குக் காதலைக் கற்றுத்தரும் கலையுலகம்
நாங்கள்
கற்றுக்கொண்டது
தோல்வியின்
வலிமையை...துயரத்தின் சாயலை;
என்ன
நேர்ந்தது இடையில்.எதுவுமே சொல்லப்படவில்லை.
மறந்துவிடச்
சொன்ன நாள் மட்டும் நினைவில் இருக்கு
கண்களில்
உருண்டு திரண்ட கண்ணீருடன் அவள் ஆடிய நடனக் காட்சி
அந்த
வெள்ளிவிழாப்படத்தின் இடைவேளையாய் மட்டுமல்ல.
எங்கள்
காதலின் நினைவுக்காட்சியாகவே ஆகிப்போனது.
நினைவுகள்
அழியக்கூடாது என்பதற்காகவே
கடந்தகாலத்தைப்
புரிந்துகொள்ள முயன்றதில்லை.
அவள்
மாடப் புறா; எனது சிறகடிக்கும் மாடப்புறா.
எல்லாமும்
அற்புதத் தருணங்கள்.
நினைவில்
இருத்திக் கொள்ளவேண்டிய தருணங்கள்தான்.
எங்களது
பயணம் இலக்குகள் இன்னும்
எனக்கு
நினைவில் இருக்கின்றன.
எனது
நினைவில் இருக்கின்றன.
....ம்
எல்லாம் நினைவாகவே இருக்கின்றன.
"மனிதன்
எவ்வளவு மேன்மையானவன்;
அவனால் மட்டும்தான் அன்பு
செலுத்தமுடியும்;
அவனால்
மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்கவும்
உதவவும்இயலும்;
அவனால்
மட்டும்தான் காதல் செய்யமுடியும்;
காதலுக்கு
மட்டும் தான் எந்த வேறுபாடுகளும் கிடையாது."
[
சதுரங்க விளையாட்டுக் குலைக்கப்படுகிறது ]
கொலை
கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு
போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப்
பேரிக்கா....................
ஆம்
எல்லாம் குழைந்து குழைந்து போய்விட்டன;
உங்களுக்கு
அறிவுஜீவி என்றால் என்னவென்று தெரியுமா..?
நான்
ஒரு அறிவுஜீவி..எனது வாழ்தல் எனது அறிவால் நடக்கிறது.
என்
தந்தையும்கூட அறிவுஜீவிதான்.
ஆனால்
தனது வாழ்தலுக்கு அறிவை மட்டும் நம்பியவரல்ல
அவருக்குத்
தெரிந்தது நாடகம் மட்டுமில்லை.
நாடகம்
தெரியும் ; நாற்று நடவு தெரியும்
முந்திரித்தோப்பில்
குடியிருக்கவும் தெரியும்
ஆனால்
அறிவுஜீவியான கதை ரொம்ப சுவாரசியமானது
எனது
அறிவுஜீவி நண்பர்கள் என்னை கூட்டாளியாக்கியது ஏனென்று தெரியுமா.?
நான்
பேசிய ஆங்கிலம்தான். ஆங்கிலம் கற்றுக்கொள்ள நான் பட்டபாடு நாய்பட்டபாடுதான்.
அந்த
நேரத்தில் கிடைத்தவேலையைத் தக்கவைக்க ஒரே வழி ஆங்கிலம்தான்.
வாடிக்கையாளர்களிடம்
நான் உரையாடவேண்டும்.
அவர்களைத்திருப்திப்
படுத்த தரமான பொருள்களை விட
நுனிநாக்கு
ஆங்கிலம் போதும்.
ஏற்கனவே
சிவப்புத்தோல் வரமாகிவிட்டது.
சிவப்புத்
தோலுக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்திற்கும் உள்ளமரியாதைகளை அனுபவித்தவர்கள்தான்
சொல்லமுடியும்; நான் அனுபவித்திருக்கிறேன்.
நல்லவிதமான
பலன்கள் தான்.
என்னை
நடிகனாக்கியதுகூடப் பெரிய காரியமில்லை.
நட்சத்திர
விடுதியின் பணியாளாக்கியதே அவைதான்.
அறிவுஜீவிகள்
எப்பொழுதும் நிற்பது தோற்றுப் போகின்றவர்களின் பக்கம்தான்.
நானே
பலதடவை தோற்றுப்போயிருக்கிறேன்.சின்னச் சின்ன வெற்றிகளோடு பெரிய பெரிய தோல்விகள்..
தோல்விகளின்மேல் தோல்விகள்.. தொடர் தோல்விகள்..
இப்பொழுது
சொல்லுங்கள் நான் அறிவுஜீவிதானே.
போட்ட
கணக்குத் தப்பாய்ப் போக ......
ஒன்றிலிருந்து
திரும்பவும் தொடங்கலாம்.
கணக்கு..கணக்கு..
கொலை
கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு
போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப்
பேரிக்கா.................
காட்சி:
5
[சோர்ந்து
விழுந்து கிடப்பவனைக் கிழிக்கும் வேகத்தில் வரும் ரயில்களின் சப்தம் எழுப்பி
விடுகிறது. இரண்டு மூன்று ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகின்ற ஓசை.
தூரத்தில் அந்த ஓசை போய் மங்கிய பிறகு திரும்பவும் அவன் பேசுகிறான்.
அவன்
பேசுகிறபோது பின்னால் கோயில் கள்,
அரண்மனைகள், மசூதிகள், ஸ்தூபிகள்,
நினைவுத் தூண்கள் என சரித்திரத்தின் ஆதாரங்கள்படங்களாகவந்து
போகின்றன.]
வரலாறு
என்பது என்ன.? அந்தக்காலம்.. அப்படியொரு காலம்.. அது ஒரு காலம்..
அற்றைத்
திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும்
உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத்திங்கள்
இவ்வெண் நிலவில்
வென்றுஎறி
முரசின் வேந்தரெம்
குன்றும்
கொண்டார் யாம் எந்தையும் இலமே
காலம்தான்
வரலாறா.. இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது;
ஆனால்
எல்லாரும் அப்படி நம்புவதில்லை போலும்.
'ஒருநண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.
'ஒரு நண்பர் சொல்வார் கடந்தகாலம்
பழிவாங்கத்தூண்டும்' என்று.
வரலாற்றில் பல வக்கிரங்கள் நடந்தேறி இருக்கின்றன;
முல்லைக்குத்தேர் தந்த பாரியின் வாரிசுகள்
கந்துவட்டிக்கடை நடத்த நேர்ந்தால்
பாரிமகளிரைக் கழுவேற்ற முடியுமா..?
நந்தனை
எரித்த மிச்சம் காக்கப்படுகிறதென்றால்
தீவட்டி
ஏந்தலாம்;
அக்கிரகாரங்கள்
அடையாளமிழந்தபின்
பூணூல்
அணிவதும் பூணூல் அறுப்பதும்
வீரவிளையாட்டுக்களா...?
வரலாற்று
விளையாட்டுக்களா...
அதிகாரங்கள்
இடித்த கோட்டைகளுக்கு
அப்பாவிகள்
எப்படிப் பொறுப்பாக முடியும்..?
நாலு
தலைமுறைக்குச் சேர்த்த சொத்தாய்
நயவஞ்சகம்
இருந்தால்
ஆடிப்பார்க்க
வேண்டியது வெறியாட்டங்கள்தான்.
நீர்வழிப்படூஉம்
புனைபோல நீந்தித்திரியும்
எனது
தேசம் எது ..? யார்தான் கேளிர்...?
யாரைப்
பழிவாங்குவது நான் ...?
என்னையே
நானா..?
நானே
எனது அடையாளத்தையா.....?
அடையாளம்
...எனது அடையாளம்..
அழிக்கமுடியாத
எனது அடையாளங்கள்
எனக்கென்றொரு
கருத்து இருப்பது எனது அடையாளமா..?
உருவாக்கிக்கொண்டதென்
அடையாளங்களில்லையா...?
விட்டுவிடுதல்
சாத்தியமில்லையென்றால்
திணிப்பதுமட்டும்
பொருந்திப்போவதெப்படி..?
எனது
பெயர் சந்தேகத்துக்குரியதா..?
எனது
செயல்களுக்கு உள்நோக்கமுண்டு
எனச்
சொன்னது யார்..?
இப்பொழுதெல்லாம்
இப்படித்தான் நடக்கிறது.
நானும்
அப்படித்தான் நினைக்கிறேன்.
[ரயிலில்
ஓட்டப்பின்னணியில் சில உருவங்கள் அதன் போக்கில் அசைவதாகக் காட்சிகள்
அமைக்கப்படவேண்டும்]
யார்
அந்த உரையாடலைத் தொடங்கியது .
தொடங்கியது
நானில்லை; என்றாலும்
என்னில்
வந்து மையம் கொண்டது.
ஏன்
இப்படி நடக்கிறது;
எல்லாம்
கேள்விகள் தான்..
பதில்கள்
தேடும் கேள்விகள்.
"நாளைக்கு
சூட்டிங் இருக்காது ;
அப்படியே குன்னூர் போயிட்டு வந்துரலாம்"
'குன்னூரில்தானே சூட்டிங்; போயிட்டு எங்கெ
வரப்போறீங்க.'
"இல்ல, ஊட்டியில தான்
சூட்டிங்;அங்கெ
சூட்டிங்
நடத்திறதில் பிரச்சினை இருக்காது.'
"ரிஸ்க்
எடுக்க டைரக்டர் தயாராயில்லை;
அதானால
நாளைக்கு ரெஸ்ட் தான்."
'நேத்து நடந்தா மாதிரி இருக்கில்ல ; ஆனா
நடந்து
ஆறு வருஷமாயிப்போச்சு..?'
"இல்ல
பன்னிரண்டு வருஷமாச்சு"
'
எதெச் சொல்றீங்க; கோவைக் கலவரத்தயா..
மும்பை வன்முறைகளயா..?'
"
இல்ல என் நினைவில் இருப்பது 1992,
டிசம்பர்,6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள்"
'
ஏன் உனக்கு மும்பையில் நடந்த வெறியாட்டம் நினைவில் இல்ல'
"எல்லா ஆட்டங்களும் நினைவிலிருக்கிறது
எனக்கு
நான்
ஆடாத ஆட்டங்களா.. கோலாட்டம்..,கும்மியாட்டம்
கரகாட்டம்.., காவடியாட்டம்... சிலம்பாட்டம்....,
தப்பாட்டம்....
"உடம்புக்குள்ளெ அதிர்வுகள நுழைக்கச்
சொல்லி
நான் எல்லா ஆட்டங்களும் ஆடியிருக்கிறேன்...
ஏனோ பரதநாட்டியத்தை மட்டும் விரும்பியதில்லை.
அதில் உடம்பின் அதிர்வுகள் இல்லையென்று
தோழர் சொல்லியிருந்தது காரணமாக இருக்கலாம்
ஆளும் வர்க்கக் கலையில் உழைப்பின் அதிர்வுகள்
எப்படி நுழைய முடியும்.. ? இதுவும் அவர்
கேட்ட கேள்விதான்.
கலையை
நேசிப்பதிருக்கட்டும் முதலில் மனிதனை நேசி என்பார்.
மனிதன்
என்றால் அவரைப் பொறுத்தவரைக்கும்
உழைக்கின்ற
மனிதனாய் இருக்கிறவன் தான்
மனிதன்
மனிதனாகத்தான் இருக்கமுடியும்
நானும்
அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம்
வித்தியாசங்களுடன்..
உழைக்கின்ற
மனிதன் இந்துவாகவும் இருக்கிறான்
முஸல்மானாகவும் இருக்கிறான்....
வேதக்காரனாகவும்
இருக்கிறான்..
மனிதன்
என்பவன் மனிதன் தான்
"மனிதன்
எவ்வளவு மேன்மையானவன்;
அவனால்
மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;
அவனால்
மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்க முடியும்."
இல்லை
இல்லை இதுவும் உண்மையில்லை
அவன்
தான் கருத்துக்களை கட்டமைக்கிறான்
அவன்
தான் வேறுபாடுகளைக் காட்டிச்
சிரிக்கிறான்.
ஆறு
ஆண்டுகளுக்குப் பின் அந்த நண்பன் கேட்டபோது
நாடி
நரம்புகள் தளர்ந்து போய்விட்டன.
அவனை
அவ்வாறு கேட்கத்தூண்டியது எது..?
[கூடைப்பந்து
மைதானத்தில் தரையில் பந்தைத் தட்டிக்கொண்டே விளையாடு வதாகப் பாவனை. இவனுடன்
இன்னும் சிலர் விளையாடிக் கொண்டிருக் கின்றனர். விளையாட்டின் போக்காகவே உரையாடல்
நடக்கிறது]
'அயோத்தியில் கோயில் இடிக்கப் பட்டபோது நீ எங்கே இருந்தாய்..?'
"இல்லை
இடிக்கப்பட்டது கோயில் இல்லை;
மஜ்ஜித்..
மஜ்ஜித்
என்பது மசூதி..."
'ஆ..ங். கோயில் இல்லை மசூதி.. அதிருக்கட்டும்
அப்போது
நீ எங்கிருந்தாய்..?'
"எதிருக்கட்டும்
மசூதியா...? கோயிலா...?"
'அதைப்பற்றியல்ல நான் பேசவந்தது. நான் கேட்பது நீ எங்கே இருந்தாய்
என்பதைத்தான்..'
"எனக்கு
நினைவில் இல்லை; தெரிந்து என்ன செய்யப் போகிறாய்..?
ஆனால்
அடுத்து வந்த நாட்களில் நான் வீட்டில்தான்
இருந்தேன்.
அடுத்தநாள்
மட்டும் அல்ல; ஒருமாதம் வீட்டில் தான் இருந்தேன்."
'காரணம் ..?'
"காரணம்
..யாரையாவது தாக்கிவிடுவேன் என்று அவர்கள்
நினைத்திருக்கக் கூடும்."
'உன்னை யாராவது தாக்கிவிடலாமென்று நினைத்திருக்கலாமில்லயா..?
"வெறிநாய்களுக்குத்தான்
கூண்டுகள் தேவை."
'விலைமதிப்பில்லாப் பொருள்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை தான்'
"இன்று
நான் சொல்லிக்கொள்ளலாம்;
விலைமதிப்பில்லாப் பண்டமென்று.
அன்று
நினைக்கப்பட்டது வெறிநாயாகத்தான்."
'அப்படியொரு மனநிலை உன்னிடம் இருந்தது இல்லையா..?'
"அன்று
இருந்ததில்லை ;ஆனால் இன்று இருக்கிறது.
இன்னுமொரு
மசூதி இடிக்கப்படும்போது என்னருகில்
நீயிருந்தால்
என்ன நடக்கும் என்று எனக்குத்
தெரியாது"
'என்ன நடந்து விடமுடியும்..?'
"ஒருவேளை
உனது காதைக் கடித்துவிடுவேனாக இருக்கலாம்."
'இப்படிச் சொல்ல உனக்குக் கூச்சமாக இல்லை.'
"இல்லை; இல்லை;
இல்லவே இல்லை.
என்னிடம்
இப்படியொரு கேள்வியைக் கேட்க நீ கூச்சப்படாதபோது
அப்படியொரு
பதில்சொல்ல நான் ஏன் கூச்சப் படவேண்டும்."
கேள்விகளும்
பயணங்களும் மட்டுமில்லை
எல்லா
ஆட்டங்களும் நினைவில் இருக்கத்தான் செய்கிறது.
கோலாட்டம், ஒயிலாட்டம்,
சிலம்பாட்டம்,
பறையாட்டம்,தப்பாட்டம்,
மட்டும் அல்ல.
வெறியாட்டங்களும்கூட நினைவில் இருக்கின்றன.
வெறியாட்டம்;ஆம்
வெறியாட்டம்.
1992-ல்
உத்தரபிரதேசத்தில் பாப்ரி மஜ்ஜித் காரணமாய்
1994......., 1998....,2000...., 2002....,2004
மும்பை
....,கோவை..., கோத்ரா.....ஹாஷியாபாத்...,
இடையிடையே
நடந்த கிரிக்கெட் ஆட்டங்களும்
ஒருநாள்
ஆட்டங்கள்...டெஸ்ட் ஆட்டங்கள்..
நல்லெண்ணப்பயணங்கள்..,கலாசாரத்திருவிழாக்கள்....,
திரும்பத்
திரும்ப அரிதாரங்கள்
திரும்பத்
திரும்ப ஒப்பனைகள்
கலைக்கப்படும்
ஒப்பனைகள் நடிப்புக்கலையின் அரிச்சுவடி
ஆனால்
வாழ்க்கை.. ஒப்பனைகளோடு ... வாழ்தல் .. எப்படிச்சாத்தியம்.
ஒப்பனைகளின்றி
வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு
வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு
வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி
வாழுதல் வேண்டும்.
நான்
மட்டும் அல்ல; நாங்களும்
நீங்கள்
மட்டுமல்ல;நாம்.
ஒப்பனைகளின்றி
வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு
வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு
வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி
வாழுதல் வேண்டும்.
ஈஸிசேரில்
விழுந்து கிடப்பவன் புதிதாகக் கண் விழிப்பவன் பார்க்கிறான். கடிகாரம் அடுத்த
மணிக்கான நேரத்தைக் காட்டி ஒலிக்கிறது அதன் மீது இயக்குநரின்
பார்வை
· திரும்பவும் கேசட் மாற்றம். மென்மையான
இசைக்கோலம்
· தரையில் அதற்கேற்ப அசைந்து மல்லாக்கப் படுத்துக் கிடக்கிறார். அவரது தலையருகில் கிடைக்கும் கடிதங்களை ஒவ்வொன்றாக வாசிக்கிறார்.
· சுவரருகில் ஒருவர் யோகாசனப் பயிற்சிகள் செய்யும் நிழல் தெரிகிறது.
· ஒவ்வொரு கடிதங்களை வாசித்த பின்னும் சிரிக்கிறார். ஒளி அவர் மீதும் நிழல் உருவத்தின் மீதும் மாறிமாறி விழுகிறது.
· இயக்குநர் நிழல் உருவமாக மாற, நிஜ உருவமாக
இருந்த உதவி இயக்குநர் ரவி வெளித் தெரிகிறார்.
· குரல் மட்டும்:
நாடகம் - ஆமாம் – நாடகம்
நாடகம் – எல்லாம் – நாடகம்
நாடகம் - ஆமாம் – நாடகம்
நாடகமே உலகம் – அதன்
ஒத்திகைகள் தொடரும் – தினம்
ஒத்திகைகள் தொடரும்.
(இந்த வரிகளை உரையாடலாக இருவர்
இருவராகச் சொல்லி சிலைரூபத்தை அடைகிறார்கள்)
(ரவி இடதுபுறமிருந்து சொல்லிக் கொண்டு வர.. இயக்குநர் வலதுபுறத்திலிருந்து வருகிறார். இருவரும் ஒருவராக மாறும்போது ஒளி குறைகிறது. திரைச்சீலையில் நிழலுருவங்கள். அவை மெல்ல அசையும்போது களியாட்டம் கொண்ட இசை ஒலித்து நிற்கிறது)
கருத்துகள்