திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும் -மு.க.வும் மு.க.ஸ்டாலினும்


நான் முதல்வன் திட்டம்

2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான்
முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள
பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும்
தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது.  அதேபோல் கல்லூரிக்கல்வியில் இத்திட்டம் உருவாக்கித் தந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பட்டமேற்படிப்புக்கும், தொழில் துறைப்படிப்புகளுக்கும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் அனுபவங்கள் விரிவாகப் பயனளிக்கப்போகின்றன. இத்திட்டத்தின் ஊக்குவிப்பினால் பங்கேற்ற போட்டித் தேர்வுகளும் அதன் வெற்றிகளும் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றி அவர்கள் பேசவும் செய்வார்கள். அவர்களின் வாழிடங்களும் பணியிடங்களும் தமிழ்நாட்டின் பரப்புக்குள் மட்டுமில்லாமல், இந்தப் பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளுக்குள்ளும் இருக்கப்போகிறது.

இந்தியாவின் சிறப்புக் கல்விக்கூடங்களான மையப்பல்கலைக்கழகங்கள்,
தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப்பாடங்களுக்கான உயர்பள்ளிகள் என
ஒவ்வொன்றிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் சேர்க்கைகள் தொடங்கி விட்டன.அதேபோல் ஒன்றிய அரசின் உயர் நிர்வாகப் பதவிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்தியக்காவல்பணி, இந்தியப் பொருளியல் நிர்வாகப்பணி போன்றவற்றிலும் அவர்களின் முகங்களும் திறன்களும் வெளிப்படப் போகின்றன. இப்படி வெளிப்படப்போகிறவர்கள் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களாகவும் அரசு உதவிபெறும்  மாணவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பு.அதேபோல் ஒன்றிய அரசின் உயர் நிர்வாகப் பதவிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்தியக்காவல்பணி, இந்தியப் பொருளியல் நிர்வாகப்பணி போன்றவற்றிலும்  அவர்களின் முகங்களும் திறன்களும் வெளிப்படப் போகின்றன. இப்படி வெளிப்படப் போகிறவர்கள் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களாகவும் அரசு உதவி பெறும்  மாணவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பு.

 இப்படிச் சொல்வது வெறும் கற்பனையான பேச்சாக இருக்காது என்பதற்கான
அறிகுறிகள் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே வெளிப்படத்தொடங்கிவிட்டன.
கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து  கல்லூரிக்கல்விக்குள் -குறிப்பாகப் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேவிதமான வளர்ச்சியைப் போட்டித்தேர்வுக்குத் தயாராகி எழுதுபவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டரசின் பணியாளர் தேர்வுகளில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலான பொதுத்தேர்வுகளிலும் தமிழ்நாட்டின் பங்கேற்பும் வெற்றி விகிதமும் கூடியிருக்கின்றது. அதற்கான காரணங்கள் நான் முதல்வன் திட்டம் அவற்றைப் பேசுபொருள் ஆக்கியதுதான்.

கிராமப்புறங்கள் வரை போய்ச்சேராமல் இருந்த தகவல்களும் அறியப்படாமல் இருந்த வழிமுறைகளும் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பதற்கான
வழிகாட்டுதல்களும் இப்போது நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன. திறப்புகளும் வாசல்களும் எவையென அறியாத குறிப்பிட்ட சமூகத்தளத்து மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் நல்லதொரு திறப்பைச் செய்திருக்கிறது என்பது திட்டம் ஐந்தாண்டைக் கடக்கும்போது வெட்ட வெளிச்சமாகும் என்பதை ஒரு கல்வியாளனாகச் சொல்ல முடியும்.

கிராமப்புற மாணவர் மேம்பாட்டுத்திட்டம்

நான் முதல்வன் எனும் திட்டத்தின் அடிப்படைகளோடு கூடிய ஒரு திட்டத்தை 50
ஆண்டுகளுக்கு முன்னால்,1971 இல் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிமுகம் செய்தார் எனச் சொன்னால் பலரும் ஆச்சரியம் அடையக்கூடும். ஆம் ஆச்சரியம் தான் அடைவார்கள். ஏனென்றால் கலைஞரின் சாதனைகளாகவும் திட்டங்களாகவும் போடப்படும் பட்டியல்களில் அதனைப் பற்றிய குறிப்புகளையே  வாசிக்க முடியவில்லை. ஒருவேளை இப்போதுள்ள அரசின் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், அதனால் பலன்
அடைந்தவர்கள் பற்றிய விவரங்களும் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால்,
அத்திட்டத்தைச் சிறப்புப்பெயர் ஒன்றினால் அப்போது அவர் அறிமுகம்
செய்யவில்லை. செய்யவேண்டும் என்று கூட நினைக்கவில்லை.

விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் திட்டங்கள் அறிமுகம் ஆன காலம் அது
கிராமப்புற மாணவர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து, நகரப்பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கிய அந்தத்திட்டத்தின் சாட்சியாக நான் இருக்கிறேன். பள்ளிக் கல்வியோடு முடிந்திருக்கக்கூடிய எனது படிப்பு, இந்தியாவின் மிக உயர்ந்த படிப்பான முனைவர் பட்டம் வரை நகர்ந்ததற்கு அந்தத் திட்டமே காரணம் என எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். 70 தலைக்கட்டுகள் கொண்ட தச்சப்பட்டி என்ற மலையோரக்கிராமத்தில் பிறந்த என்னை, திண்டுக்கல், மதுரை என நகரங்களுக்கு அனுப்பித் தொடர்ந்து படிக்கச் செய்தது கலைஞர் உருவாக்கிய ஒரு திட்டம் என்பதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியான அந்தக் கதையைச் சொல்வதுதான் இங்கு நோக்கம்.

 அண்ணாதுரையின் மறைவுக்குப் (பிப்ரவரி,1969) பின் முதல்வரானார் கலைஞர். அப்போது நான் தொடக்கப் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவன். முதல்வரான இரண்டு ஆண்டுகளுக்குப்பின் எட்டாம் வகுப்புக்கு மாவட்ட அளவில் பொதுத்தேர்வு அறிமுகமானது. அந்த அறிமுகத்தோடு கிராமப்புற மாணவர்களின் திறமைக்கு ஊக்கம் அளிக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.அறிவும் கல்வியும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு/ சாதியினருக்கு மட்டுமே வரக்கூடியது; அவர்களால் மட்டுமே உயர்கல்வி போன்ற நிலைகளை அடையமுடியும்; அதற்கும் அவர்கள் பிறந்த சமூகப்பின்னணிக்கும் தொடர்பிருக்கிறது என்ற கருத்தில்  உடன்பாடில்லாதவர் கலைஞர் மு.கருணாநிதி. அதனைப் பேச்சாக மட்டும் சொல்லிக்

கொண்டிராமல், செயல்நிலையில் காட்ட வேண்டும் என நினைத்து அவர் உருவாக்கிய திட்டமே இந்த ‘கிராமப்புற மாணவர் மேம்பாட்டுத்திட்டம்’. கற்றலும் அறிவை வளர்த்துக்கொள்ளுதலும் அனைவராலும் முடியும்; போதிய வாய்ப்புகள் கிடைத்தால் போதும்;அனைவருமே மேம்பட்ட நிலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அந்தத்திட்டத்தை உருவாக்கி அறிமுகம் செய்து கிராமப்புற மாணவர்களுக்கு அந்த வாய்ப்பையும் சூழலையும் உருவாக்கினார் கலைஞர்

ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் முதலிடம் பெறும் மாணாக்கர்களுக்குத்  தனியாகத் திறனறித் தேர்வு நடத்தி ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்திலிருந்தும்  இருவர் தெரிவு செய்யப்பட்டார்கள். அப்படித் தெரிவுசெய்யப்பட்ட மாணாக்கருக்கு  ஒரு வருடத்திற்குரிய ஊக்கத் தொகையாக ரூ. 500/- வழங்கப்பட்டது. முதல் ஆண்டில்  உதவித் தொகை பெற்றவர்களின் படிப்பில் எவ்வகையிலும் மாற்றம்  உண்டாகவில்லை. ஏனென்றால் அவரவர் படித்துக்கொண்டிருந்த பள்ளியில்  தொடரும்போது எதிர்பார்த்த அந்த மாற்றம் நடக்காது. அவற்றில் நல்ல கல்வியைத் தரக்கூடிய வகுப்பறைகள் இருப்பதில்லை. நூலகங்களும் இருந்ததில்லை. பல
பள்ளிகளில் போதிய ஆசிரியர்களும் கூட இருக்கமாட்டார்கள். அத்தோடு
ஆய்வுச்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன பெயரளவில் தான் இருக்கும். நான் எட்டாம் வகுப்பு வரை படித்த எழுமலை உயர்நிலைப் பள்ளியில் நிலை இதுதான். இப்படியான கிராமப்புறப் பள்ளிகளில் படித்தால் முதல்வர் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகாது என்பதை உணர்ந்து அடுத்த ஆண்டு முதல், தேர்வுபெற்ற மாணாக்கர்கள் நகர்ப்புறப் பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம். விடுதியில் தங்கிப் படிக்கலாம் என மாற்றப்பட்டது. அப்படியான 10 பள்ளிகளின் பெயர்களும் அடையாளப் படுத்தித் தரப்பட்டன. அதே ஊரில், அதே பள்ளியில் உதவித்தொகை ரூ 500/- தரப்படும். அதற்குப் பதிலாக மாவட்ட அளவில் சிறப்புப்பள்ளிகள் எனப் பட்டியலிடப்பட்ட பள்ளிகளின்விடுதியில் தங்கிப்படித்தால் ரூ 500/ -க்குப் பதிலாக ரூ 1000/- வழங்கப்படும் என மாற்றி அறிவித்தார் கலைஞர். விடுதியில் தங்கிப்படிக்கலாம் என அறிவிப்புச் செய்யப்பட்ட ஆண்டில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

மதுரை மாவட்டம் எழுமலை உயர்நிலைப்பள்ளியில் படித்த நான், சேடபட்டி
ஒன்றியத்தின் முதலிரண்டு பேர்களில் ஒருவனாகத் தேர்வுபெற்றேன். விடுதியோடு கூடிய திண்டுக்கல் டட்லி பள்ளி மாணவனாக ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன்.  தச்சபட்டி என்னும் சின்னக் கிராமத்திலிருந்து விடுதியில் தங்கி, பள்ளிப் படிப்புக்குப் போன முதல் ஆள் நான் தான். மலைக்கோட்டை என்னும் பெரும் கல்லான  திண்டுக்கல் பெருநகருக்குப் போனபோது கால்களில் செருப்பு இல்லை. பல்விளக்கும் பல்பொடியோ, அதனைத் தடவிப் பல்லை விளக்கும் முறைகளோ அறிமுகம்  ஆகியிருக்கவில்லை. துணிப்பையில் திணித்த கால் சட்டையோடு மதுரை வந்து திண்டுக்கல்லுக்குப் போனதுதான் எனது முதல் ரயில் பயணம்.

திண்டுக்கல் முதன்மை வீதியில்தான் ட்ரங்குப்பெட்டியும் களிமண் தட்டும்
வாங்கினேன். அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் அவரது உயரத்தைவிட 2 மடங்கு
உயரமான பெரியார் சிலை நின்றிருந்தது. தினசரி அதன் அருகில் இருக்கும் வாசகசாலையில் விடுதலையும் முரசொலியும் படிக்கக் கிடைக்கும். அவரது சிலைக்குப் பக்கத்தில் போடப்பட்ட மேடையில் தான் பெரியார் ஈ.வெ.ரா.வின் பேச்சை நேர்ப்பேச்சாகக் கேட்டேன். அந்தப் பேச்சைக் கேட்கும்படி தூண்டியவர் டட்லி  உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் எடுத்த அய்யா அந்தோனிசாமி அவர்கள்.

பெரியார் சீடரான அந்தோணிசாமி தனது பெயரில் உள்ள சாமியைக்கூடச் சொல்ல மாட்டார். அந்தோனி என்று சொன்னால் போதும் என்பதை வகுப்பிலேயே சொல்லியிருக்கிறார். நீயும் கூட என் பெயரை - அந்தோனி என்று சொல்லி அழைக்கலாம் என்று சொல்வார். கூப்பிடுறதுக்குத் தானே பெயர் என்று சொன்னதின் பின்னணியில் ஐரோப்பிய மனம் இருந்ததை நான் அப்போது உணரவில்லை. அந்தத் தமிழாசிரியர் தான் கடவுளா? அப்படின்னா? என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டினார். நாத்திகம் என்பது ஒரு வாழ்முறை என்பதைச் செய்துகாட்டினார். சர்ச்சுக்குப் போகமாட்டார். பள்ளியில் தினந்தோறும் நடக்கும் காலைப்பிரார்த்தனையில் ஒருநாளும் அவர் பைபிள் வாசித்து ஜெபம் செய்ததில்லை. அவரது மகனும் அந்தப் பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் படித்தான்.

அவன் தான் அணில், கோகுலம் போன்ற சிறுவர் பத்திரிகைகளையும் இந்துநேசன் போன்ற ரகசியமாகப் படிக்கும் இதழ்களையும் அறிமுகப்படுத்தினான். அவன் படித்தது ஆங்கில வழியில். தமிழாசிரியரின் மகன் ஆங்கில வழியில் படிப்பது ஏன் என்ற கேள்வி அப்போதே உண்டு. அவனை வம்புக்கிழுக்க அது போதுமானதாக இருந்தது. அவனை வம்புக்கிழுத்ததற்குப் பதிலாக அய்யா அந்தோனிசாமியிடம் கேட்டிருந்தால் தமிழ் மட்டும் போதாது; ஆங்கிலமும் வேண்டும் என்பதைச் சொல்லியிருப்பார். அப்படிச் சொல்லித்தான் தன் மகனை ஆங்கிலவழிக்கல்வி வகுப்பில் சேர்த்துள்ளார் என்று அவன் சொன்னான். அவரும் வகுப்பில் பேசியிருக்கிறார். ஏன் இந்தி வேண்டாம்; ஆங்கிலம் வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். உணர்தலுக்கும் புரிதலுக்கும் தேவை தாய்மொழி. உலகத்தோடு உறவுகொள்ளத் தேவை ஆங்கிலம் என்பதைப் புரிய வைத்த அய்யா அந்தோனிசாமி கலைஞரை நினைக்கும்போதெல்லாம் நினைவுக்கு வருகிறார்.

மதிப்பெண் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பிற்குப் பின் வழங்கப்படும் 
விருப்பப்பாடமாக க் கணிதம் தரப்பட்ட து. அது படித்தால் தான் பொறியாளர்
ஆகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எனக்கு அப்போதே வரலாறுதான்
பிடிக்கும். சமூகவியல் என அப்போது ஒரு பாடம் கிடையாது. நூலகத்திலும் வாசக சாலைகளிலும் வரலாற்று நூல்களையே எடுத்துப் படித்தவன் நான். எனது அறிவிலும் கற்றலிலும் நிகழ்ந்த இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கலைஞரின் கிராமப்புற மாணாக்கருக்கருக்கான திறனறி தேர்வும், பள்ளிக்கல்வியில் 3 ஆண்டுகளுக்கும் வருடம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற உத்தரவாதமும்தான். அப்போது வழங்கப்பட்ட 1000 ரூபாய் என்பது இப்போது 50000/- ரூபாய் மதிப்புடையது. 11 மாதங்களுக்குக் கட்டவேண்டிய விடுதிக் கட்டணம் போகப் பாதிப்பணம் மிச்சமிருக்கும். படிக்கும் காலத்திலேயே படிப்புச் செலவு, விடுதிச் செலவெல்லாம் போக வீட்டுக்கும் 300 முதல் 400 ரூபாய் வரை கொடுக்க முடிந்தது. அந்த உற்சாகத்தில் எனது குடும்பம் என்னைக் கல்லூரிக்கல்விக்காக மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது.

நான் தேர்வு பெற்ற 1971-72 கல்வி ஆண்டில் எங்கள் ஊராட்சி ஒன்றியமான 
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இன்னொருவருக்கும் அந்த வாய்ப்புக் கிட்டியது.மதுரை மாவட்டத்தில் மட்டும் 15 ஊராட்சி ஒன்றியங்கள் இருந்தன. ஆக முப்பது பேர்  ஒரு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். அப்படியானால் தமிழ்நாட்டின்  ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஆக்கி, அத்தனை பேர் வாய்ப்புப் பெற்றார்கள் எனக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். 1971 முதல் 1974 வரை அந்தத் திட்டம் நடப்பில் இருந்ததை நானறிவேன். என்னைப்போலச் சில நூறு கிராமத்தான்களை ஒவ்வொரு ஆண்டும் நகரத்திற்கு இடம்பெயரச் செய்தவர் கலைஞர். அவர்களுக்கு விடுதி வாழ்க்கையை அறிமுகம் செய்தது அவர்தான். அதன்
தொடர்ச்சியாகக் கல்லூரிக்கல்வியை வழங்கியதும் அவரது அந்தத் திட்டம்தான். இந்த உலகத்தின் சாளரங்களைத் திறந்து காட்டியது அந்தக் கல்விதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்