அந்த மூன்றும் இந்த மூன்றும்

 புதிய நகர்வில் இமையத்தின் 3 கதைகள்

எழுத்தாளர் இமையம் அரசதிகாரத்தின் கண்ணியில் ஒருவராக ஆனபின்னும் கதைகள் எழுதுவதற்கான நேரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை என்பதை அவரது இணையப்பக்கம் காட்டுகிறது. தனது பதவி -ஆதிதிராவிடர்& பழங்குடிகள் ஆணையத்தின் துணைத்தலைவர் - சார்ந்து எழுதவேண்டிய கட்டுரைகள், தரவேண்டிய பேட்டிகளைத் தாண்டி எப்போதும் போல கதைகளை எழுதுகிறார் என்பது மகிழ்ச்சியே. ஆனால் இப்போது அவர் எழுதும் கதைகளின் வடிவத்தில் முக்கியமான மாற்றம் ஒன்றைக் காண முடிகிறது.
இந்த ஜூன் மாத உயிர்மையில் வந்துள்ள "சொந்த வீடு" கதையும் போனமாதம் அச்சிடம்பட்டிருந்த "வீம்பு" என்ற இரண்டு கதைகளோடு "ஆசைகள்" கதையையும் ஒரே மூச்சில் வாசித்தபோது அந்த மாற்றத்தை உணர முடிந்தது. அந்த மாற்றத்தைக் கதைகளுக்கான நிலவெளியின் அடையாளத்தைத் தவிர்த்தல் என்பதாகச் சுட்டலாம். முன்பெல்லாம் அவரது கதைகளின் பாத்திரங்களைக் குறிப்பான இடத்தில் - நிலவெளியில் நிறுத்தி, அங்கிருந்து வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு போவார். அந்த நகர்வின் ஊடாகவே அவர்களது வாழ்நிலையும், இயலாமையைத் தாங்கி எதிர்கொள்ளும் மனத்தின் தின்மையும் முடியாத நிலையில் வெளிப்படும் அவலமும் எனக் கதை நிகழ்வுகள் பின்னப்பட்டிருக்கும். இந்தத்தன்மையை இப்போது எழுதும் கதைகளில் காணமுடியவில்லை. அதற்குப் பதிலாக நேரடியாகப் பாத்திரங்களின் மனப் போராட்டத்தை முன்வைத்துக் கதைகளைத் தொடங்குகிறார். அந்த மனப்போராட்டத்தின் காரணமாக மற்றவர்களோடு ஏற்படும் உரையாடல்களும் நிலைப்பாடுகளும் எனக் கதையை நகர்த்துகின்றார்.
இந்த நகர்வு தொடர்ச்சியாகச் சிறுகதைகளை எழுதும் ஒரு எழுத்தாளரிடம் காணப்படும் நகர்வு தான். ஜெயகாந்தன் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய வரிசைப்படி வாசித்தால், அவரிடமும் இத்தகைய நகர்வுகள் இருந்தன என்பதை அறிய முடியும். ஆரம்பத்தில் எழுதிய கதைகளின் பாத்திரங்களுக்கு இடம் சார்ந்தும் வர்க்கநிலை சார்ந்தும் அடையாளங்களைச் சொல்லமுடியும். ஆனால் பிந்திய கதைகளுக்கு அப்படிச் சொல்ல முடியாது. முழுமையும் அறிவாலும் தர்க்கத்தாலும் இயங்கிய பாத்திரங்களை எழுதினார். அதே நேரம் தொடக்கத்திலிருந்தே இடம் சார்ந்த - சமூகத்தின் அடையாளங்கள் சார்ந்த பாத்திரங்களை எழுதாமல், மனிதர்களின் அகவயப் போராட்டங்களையும் எண்ணங்களையும் எழுதியவர்களிடம் இத்தகைய நகர்வுகள் குறைவாகவே இருக்கும். இதற்குத் தமிழில் பலரது பெயர்களைச் சொல்லமுடியும். சொன்னால் மறுத்துப் பேசுபவர்கள் இருப்பார்கள் என்பதும் தெரியும்.


காலச்சுவடுவில் மூன்று பெண் கதைகள்


2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன.

கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக் கதைக்குத் தொடர்பில்லை என்றாலும் இப்போதிருக்கும் அரசின் செயல்பாடுகள் மீதான விமரிசனத்தைச் சொல்வதற்குச் செல்வியின் ஆட்டோ பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டது கூடுதல் கவனத்திற்குரியது.

சுஜா செல்லப்பனின் 'தாழொடு திறப்ப' என்ற தலைப்பிட்ட கதை, நேரடியாகத் தலைப்பின் வழியாகவோ, பாத்திரத்தின் இருப்பின் வழியாகவோ எளிதில் உணர்த்திவிடாத கதை. முந்திய கதைகளில் எழுதியதுபோலவே உளவியல் சிக்கலையே எழுதியுள்ளார். அடுக்கு மாடிக்குடியிருப்பொன்றின் 23 -வது மாடியில் தனித்திருக்கும் பெண்ணொருத்தியின் அச்சநிலையின் பரிமாணங்கள் தான் கதை. கருநீல வானமும் மழையும் காற்றும் என்ற சூழலில் வீட்டுக்குள் பாம்பொன்று நுழைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் பெண்ணின் தவிப்பு மனம் விவரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தனின் கயிற்றரவு கதையை நினைவூட்டும் விவரிப்பு. பாம்பா? கயிறா? என்ற குழப்பம் போல இந்தக் கதையில் நிழலா? நினைப்பா? உண்மையா? எனத் தவிக்கும் தனிமையை எழுதிக்காட்டியிருக்கிறது.

அனுபவங்களைப் பெண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தாண்டிக் குறிப்பிட்ட சூழலில் பெண்களை நிறுத்திக் காட்டும் இந்தக் கதைகள் அந்தத் தன்மைக்காக வாசிக்கப்பட வேண்டிய கதைகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

காதல்: காமம் - பெண் கவிதைகள்

உதிரியாய்ச் சில குறிப்புகள்