வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்


அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.
வாசிக்கக்கிடைக்கும் தொகுப்பொன்றை பாலடையாளப் பனுவலாக ஆக்குவதில் இரண்டு கூறுகள் முதன்மையாக வினையாற்றுகின்றன. இரண்டில் முதலாவது கூறு எடுத்துரைப்பைச் செய்யும் பாத்திரங்களின் பாலடையாளத்தன்னிலை. இரண்டாவது பனுவலுக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களின் பாலடையாளங்கள். அதிலும் குறிப்பாக மையப் பாத்திரங்களாகவும் பாதிப்புக்குள்ளாக்கும் பாத்திரங்களாகவும் உருவாக்கப்படும் கதாமாந்தர்களின் பாலடையாளங்களைக் கொண்டே பெண்ணெழுத்து, ஆணெழுத்து, பொதுநிலை எழுத்து என அடையாளங்களை உருவாக்க வேண்டும். இது தொடர்ச்சியாகத் திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கித் தரும் நூல்களைக் கற்றுக்கொண்டதின் வழியாகவும், பெண்கள் எழுதும் இலக்கியப்பனுவல்களை வாசித்ததின் வழியாகவும் உருவாக்கிக்கொண்ட முடிவுகள்.

இரண்டு கூறுகளையும் இலக்கியப்பனுவலின் வாசகர்கள் கவனித்துச் செயல்பட்டால், அவர்களின் வாசிப்பு தீவிர வாசிப்பாக மாறித் திறனாய்வுத் தளத்திற்குள் நகர்த்திக் கொண்டுபோகும் என்பதில் ஐயமில்லை. ஒரு கவிதைக்குள் இடம்பெறும் எடுத்துரைப்பைச் செய்யும் பாத்திரத் தன்னிலையைக் கவனிப்பதைத் தமிழுக்கு இலக்கியவியல் அடிப்படைகளை உருவாக்கித் தந்த தொல்காப்பியம் அதிகமும் வலியுறுத்துகிறது. கேட்குநருக்கும் கிளத்துநருக்கும் இடையே நடக்கும் சொல்லாடல்களின் வெளிப்படைத்தன்மையும் மறைமுகக் கூறுகளுமே கவிதையின் அழகியல். சொல்லும் இடத்தில் நிற்கும் எடுத்துரைப்புப் பாத்திரத்தைக் கவியாகவும், கவியின் அடையாளங்களாகவும் கருதி வாசிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனை உணர்ந்த கவிகள் அதிலிருந்து விலகிச்செல்லும் உத்திகளைக் கவனமாக உருவாக்குகிறார்கள். இதனை அறியாதவர்களின் கவிதைகளுக்குள் விதம்விதமான பாத்திரங்களை உருவாக்கி அலையவிட்டபோதிலும், அவர்களின் கவிதைகள் ஓர்மையுள்ள கவிதைகளாக இல்லை என்று ஒதுக்கப்படும் வாய்ப்பை உருவாக்கிவிடுகின்றன.

இந்த முன் குறிப்புகளை நினைவில் வைத்துக்கொண்டு கவி.றியாஸாவின் நிலங்களின் வாசனை தொகுப்புகளுக்குள் செல்லலாம். நிலங்களின் வாசனை என்ற சொல்லாட்சியே இந்தத் தொகுப்பைப் பேசுவதற்கான முன்னெடுப்பை உண்டாக்கித் தருகிறது. பொதுவாக நிலவெளிகளைத் தவிர்க்கும் போக்கு கொண்ட கவிகளே தமிழ்ப் பரப்பில் அதிகம் உலவுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண் கவிகள் தங்கள் கவிதைகளுக்கான நிலவெளியைப் பெரிதாகத் தர நினைக்காமல் பாத்திரத்தன்னிலைகளை அந்தரத்திலேயே அலையவிடுபவர்களாக இருக்கிறார்கள். தேன்மொழி தாஸ், சக்திஜோதி போன்ற விதிவிலக்குகள் உண்டு. அவர்களோடு நிலங்களின் வாசனை தொகுப்பை வாசித்த முதல் வாசிப்பிலேயே றியாஸாவும் அவர்களோடு சேர்ந்துகொள்பவராக இருக்கிறார் என்று தோன்றியது. இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகளுக்கு நிலவியல் அடையாளங்களை உருவாக்கித் தந்துள்ளார். அந்த அடையாளங்கள் சில நேரம் படிமங்களாகவும், பாத்திரத்தின் அனுபவ வெளிகளாகவும், நினைக்கப்படும் கடந்தகாலத்து வாழ்வியலாகவும், துயரப்பாடுகள் நிரம்பிய நிரந்தரவெளிகளாகவும் இருக்கின்றன.

அன்பையும் நேசத்தையும் வழங்கிய மனிதர்களின் பிரிவையும் தொலைந்துபோன நிலையையும் அடுக்கிச் சொல்லும் இந்தக் கவிதை-வானவில் நேசங்கள்(54-55)என்று தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள அந்தக்கவிதையில், மனிதர்கள் ஒவ்வொருவரையும் இடத்தோடு சேர்த்துச் சொல்லும் நிலையில் வெவ்வேறு வெளிகளை வாசிப்பவர்களுக்குக் காட்சிப்படுத்துவதை வாசிக்க முடிகிறது.

பிரிந்து போனவர்களெல்ல்லாம் என்னவானார்கள்
அவர்களெல்லாம் எங்கே போய்விட்டார்கள்

என் கையெழுத்தை
தட்டி நிமிர்த்திய
வெளியூர் ரீச்சர்

ஆலிலையில்
தொப்பி கோத்து அணிவித்த
உயர்வகுப்பு அக்கா
சங்குமாலையணிந்து
யாசகம் கேட்டு வந்த
மூக்குத்திப் பெண்

கண்காட்சியொன்றில்
சித்திரங்களிலன்றி
என்னிலேயே வழுக்கி வழுக்கி விழுந்த
உயரமான இளைஞன்

என் கவிதைகள் வாசமென
குறுஞ்செய்திகளனுப்பி
அன்பைக் குவித்த ஒருத்தி


இன்னுமின்னும்
பிரிந்து போனவர்களெல்லாம் என்னவானார்கள்

ஊர்களுக்குப் பிடித்த பாடலை
அவர்களுக்குப் பிடித்த மரங்கொத்தியை
அவர்களுக்குப் பிடித்த ஊமத்தம் பூவை
எப்போதாவது காண்கையில்
சம்பந்தமே இல்லாமல்
அற்புதமாய் விரிந்து
அரைநொடிக்குள் மறைகிறார்கள்

இடம் தெரியாவண்ணம் அவர்கள் சென்றதற்கு
நானும்தான் காரணம்
எந்தப் பொழுதில்
இறுதிச் சந்திப்பென்று யாரறிவார்.
வடிவ ஓர்மங்கள்

கவிதை எழுத நினைப்பவர்கள் முதலில் தங்களுக்கான கவிதை வடிவங்களைக் கண்டறியவேண்டும். ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு வடிவத்தில் வெளிப்படுத்தினால் அவர்களுக்குக் கவி அடையாளம் உருவாகாமல் போய்விடும். அதனை உணர்ந்தவராகத் தனது கவிதைகளுக்கு வடிவ ஓர்மத்தை உருவாக்கவேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்தியுள்ள றியாஸா அதனை நீண்ட கவிதைகளில் கச்சிதமாகச் செய்துள்ளார்.

இந்த உடன்படிக்கை
ஒரு கோடைக்காலப் பிரயாணமே

புழுதியெழுப்பும் சுடுமணலில்
தாகமற்றா ஒரு மிடறு நீரில்லாப் பயணமிது

இளைப்பாற நிழலோ
சில்லென வருடும் நெடுந்தென்றலோ
இருந்திருந்தேனும் வருவதில்லை

சூரியனின் மொத்த வெம்மையையும் குவித்து
குதிகால் வழியே பாய்ச்சும் கொதிமணலில்
ஒட்டகத்தைத் தவறவிடக் கூடாதென நீயும்
உன்னையன்றி வேறு
கதியில்லையென ஒட்டகமும்
ஒரே கயிற்றில் எட்டு வைக்கின்றன

மணல்புயல் துகள்களின்
உறுத்தலால்
உதிரு கண்ணீர்
பிரார்த்தனைகளின் பெருங்கடலாகும்

கூடலே
சட்டெனத் திரளும் மேகங்கள்
கருகருத்துக் கருணை பொழியும்

ஒரு மாரிக்காலப் பிரயாணத்தில்
நாம் பயணிக்கலாம்

கோடைக்காலப் பிரயாணம்(45) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதையின் தொடக்கத்தையும் நிறைவுப்பகுதியையும் திரும்ப வாசித்துக்கொள்ளுங்கள்.‘ இது ஒரு கோடைக் காலப் பயணமே’ எனத் தொடங்கி, ஒரு மாரிக்காலப் பிரயாணத்தில் நாம் பயணிக்கலாம்’ என்று முடிக்கிறது. தொடங்கியது கோடைப்பயணம் என்ற குறிப்பின் வழியாக இதுவரையான பயணம் அல்லது வாழ்ந்த நிலை அயர்ச்சியையும் தவிப்பையும் கொண்டது எனச் சொல்லி, இன்னொரு வாழ்தல், இதைவிடவும் ஆறுதலையும் நிதானத்தையும் தரும் வாழ்க்கையைத் தரும் ஒரு பயணத்தை அவாவி நிற்கிறது. அப்படியொரு வாழ்தல் கிடைக்கும்போது அந்தப் பயணம் ‘மாரிக்காலத்துப் பிரயாணமாக’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தேடி நிற்கிறது.

இந்தக் கவிதையில் கோடை X மாரி என்ற எதிர்வு ஓர்மையால் உருவாக்கப்பட்ட வடிவம் மட்டுமல்லாமல், இணைநிலைத்தன்மை வாயிலாகவும், ஆற்றோட்டமாக ஓடி முடியும் ஒற்றைப் போக்காகவும் கவிதைகளுக்கு வடிவ ஓர்மையை உருவாக்கியிருக்கிறார் றியாஸா. அப்படியான ஒரு கவிதையை இங்கே வாசிக்கத்தருகிறேன். அந்தக் கவிதைக்கு கவி தந்துள்ள தலைப்பு:
 நேரமில்லா நேசங்கள்

நேரமொதுக்கி
நம்மோடு உரையாட

நேரமொதுக்கி
நம் குமுறல்களைத் தாங்க

நேரமொதுக்கி
நம்மை ஆசுவாசப்படுத்த

இப்போது
எவர்க்கும் நேரமில்லை


நேரமொதுக்க முடியாததால் தானே
பறந்து போன பின்
பள்ளித் தோழிகளின்
பாசம் அறுந்தது

நேரமொதுக்க முடியாததால் தானே
பேசித்திரிந்த
கீச்சும் கிளிகள்
றெக்கை உடைந்தது

நேரமொதுக்க
முடியாததால் தானே
உன் என்
நேசம் முறிந்தது

இப்போதெல்லாம்
நமக்கென நேரமொதுக்கி
நேசம் பகிரும்
உறவொன்று கிடைப்பது
அபூர்வம் தான்.

ஆற்றோட்டமாக ஓடி முடியும் இந்த வடிவம் வாசிக்கத்தொடங்கியவர்களை விலகிப்போக விடாமல் கடைசிவரை கட்டியிழுத்துக்கொண்டு போகும் தன்மையிலானவை.

நேரமில்லா நேசங்கள் கொண்டவர்களால் ஆனது நமது காலம். மனிதர்களின் இருப்பும் வாழ்நிலையும் ஒன்றுபோல இருந்தாலும் வேறுபட்டனவாக இருந்தாலும் நேசம் காட்டவும், அன்பைச் சொல்லவும் அனுமதிக்காத காலத்தின் அவசரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த அவசரமும் நேரமின்மையும் ஒன்றிரண்டு பேரின் நிலையாக இல்லை. இந்தக் காலத்தின் வாழ்க்கையாக இருக்கிறது. அதனாலேயே இதுபோன்ற கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவரின் கவிதையாக மாறிக்கொள்கின்றன. இத்தகைய கவிதைகளை அதிகம் கொண்டுள்ளது றியாஸாவின் இந்தத்தொகுதி. குறிப்பான தன்னிலைகளை வெளிப்படுத்துவதிலிருந்து விலகி, பொதுநிலையைப் பேசும் கவிதைகளாக இருக்கும் இந்தச் சிறப்பு, அவரைக் கவனத்துக்குரிய கவியாக ஆக்கியுள்ளது. வடிவ ஓர்மையைப் பற்றிப் பேசும்போது தொடர்ச்சியான படிமங்களால் ஆக்கப்பட்டுள்ள பெருங்குளத்தின் குளிர்மை அல்லது மர்யம். (34) சாயம்போன சித்திரம்(47-48) முதலான கவிதைகளையும் வாசித்துக்காட்டத் தோன்றுகிறது. நானே வாசித்துக்காட்டுவதைவிட, உங்களின் வாசிப்புக்காக அவற்றை விட்டுவிடுகிறேன்.

பெண் தன்னிலைகள்

இந்தக் கவிதைத் தொகுதியின் மொத்தக்கவிதைகளையும் வாசித்து முடிக்கும்போது பெரும்பாலான கவிதைகளின் கவிதை சொல்லியாக இருப்பவர்கள் பெண்களே. கவிதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களாக இருப்பவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்களே. ஒரு பெண்ணின் பல்வேறு தன்னிலைகள் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் வெளிப்பட்டுள்ளன. துள்ளித்திரியும் சிறுமியாக, ஆணின் அருகிருப்பில் மிரளும் யுவதியாக, புரிந்துகொண்டு உரையாட நினைக்கும் ஆணின்காதலியாக, குடும்ப பந்தத்தில் பிணைக்கப்பட்ட மனைவியாக, அதன் நீட்சியில் பொறுப்பான தாயாக எனப் பலநிலைப் பாத்திரத்தன்னிலைகளை இந்தக் கவிதைகளுக்குள் வாசிக்க முடிகிறது. ஒரு பெண்ணாகத் தன்னை ரசிக்கும் பெண்ணொருத்தியை வரைந்து காட்டும் அந்தக் கவிதைக்குத் தலைப்பு:ஸஹ்ஹா(100-101)

இதுவரை
எத்தனை கவிதைகள்
எனக்காக எழுதினாய் என்கிறாள்
ஒவ்வொன்றாய்
வாசிக்கச்சொல்லி
விரல் மடக்கி எண்ணுகிறாள்

கோர்வை புரியுமிடங்களில்
பவள மல்லியாய் கவிழ்கிறாள்
என் எல்லைகள் எங்கிலும்
வாசனைகள் தூபமிடுகிறாள்

புன்னகைக்கும் ஆத்துவாளைப் பூக்களின் ஊதா இவள்
ஆறு இதழ் மலர் தோய்ந்த
வெள்ளை மணமிவள்
கர்ப்பக்கிரகச் சிலையின்
நாசிமேட்டுத் தாரகையவள்

தாழ் திறவாப் பிரமிட்டின்
மர்மப் புதையலும் இவள்
இன்னும்
என்னைத் தன்னோடு மாத்திரமே
வசியப்படுத்தும் மந்திரமிவள்

இவள் உலகில்
நானன்றி வேறு யாருமில்லை
அவளுக்கு
பட்டத்தரசியும்
தேவதையும்
மின்மினியும் தொட்டளையும் பொம்மையும்
பொக்கிசங்களின் குகையும்
பறக்கும் கம்பளமும்
நான் தான்

நாம் தான் பரபரப்புகளில் மூழ்கி
ஆழியின் பிஞ்சு முத்துகளை
அள்ளத் தவறுகிறோம்.
இந்தக் கவிதையை அடுத்து இடம் பெற்றுள்ள ‘ மந்திரக்காரியும்’ அப்படியானதொரு கவிதையே. அப்படி ரசித்துக்கொண்ட பெண்ணை மட்டுமல்லாமல் கொஞ்சம் கசப்பான காட்சிக்குள் பெண்ணை நிறுத்தும் கவிதைகளும் தொகுப்பில் உள்ளன.

திரையில் பட்டுத் தெறிக்கும்
என் விம்பத்தை விரிக்கிறேன்
கிழக்கில் முட்டுண்டு
வடதிசையில் மோதுமதன் உச்சியில்
கோணல்மாணலாய் உடைந்த கற்களின் கூடாரம்
ஆடையின் கந்தலள்ளிக் கோக்கும் வியர்வை நெடி
கூடவே என்னில் கோணும்
உடலிகளின் அருவருப்பு

மறைக்கப்பட்ட வாசகத்தை துவங்குகிறது திரைப்படைப்பு
ஆசீர்வதிக்கப்பட்ட பொழுதுகள்
ஆசீர்வதிக்கப்பட்ட நிலவுருக்கள்
ஆசீர்வதிக்கப்பட்ட எல்லைகள்.

காட்சி(/58) ஒரு பெண்ணின் தன்னிருப்பைப் பலவித உணர்வுகளின் கலவையாக்கித் தந்துள்ள கவிதையை வாசித்தவுடன் உடனடியாக நகர்ந்துவிட முடியாத தடையொன்றை உருவாக்கியுள்ளார் கவி றியாஸா.

இந்தக் கவிதைகளுக்குள் உருவாக்கப்பட்டுள்ள பெண் தன்னிலைகள் ஒவ்வொன்றும் தன்னுணர்வும் சிந்திக்கும் திறனும் கொண்ட பெண் தன்னிலைகளே என்ற போதிலும், ஆண்களை எதிர்நிலையில் நிறுத்தி, முரண்படும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. ஆண்களோடு இணக்கமும் விட்டுக்கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் புரிதலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் திருப்தியும் அடையும் பெண்கள். தொகுதியில் தலைப்பாக அமைந்துள்ள நிலங்களின் வாசனை(41) கவிதையே அப்படியான ஒரு கவிதையே.

வாப்பாவின் சைக்கிள் சத்தம் கொழுவி வருகிறது
குளிர் இனிமை நிறங்களின்
நதி ஒளிர்வை
குதூகல இரைச்சல்

ஈரத்தின் கண்கள் சிரிக்கத் தெறிக்கும் திவலைகளில்
அமிழ்ந்து பறக்கின்றன
இனிப்பொளிரும் வெல்லக்குற்றிகள்

குதூகலக் கும்மியில்
பச்சை மஞ்சள் சிவப்பாய்க் குதித்த
பாகு திரண்ட மிட்டாய்கள்
வண்ணத்தின் பளிங்கோடும்
மீன்களெனத் துள்ளி
சின்னவள் விரல்களை உணாசும்

கொடியெனப் படரும்
மூத்தவள் கண்களில்
ஒரு கோடித் திராட்சை உருண்டோடக் கனவுகள் ஒளிரும்

பயணித்த நிலங்களின் வாசமும்
திசைகளின் விலாசமும்
இனிப்பு வரைகளில் தடவுண்டிருக்கும்

போனது எங்கேயென
உம்மா ஒருபோதும் வாப்பாவைக் கேட்பதேயில்லை

ஆண்களோடு முரண்படாத பெண்கள் பலரை வாசிக்கத் தரும் இந்தத் தொகுதிக்குள் றியாஸா பெண்ணியவாதம் பேசும் பெண்களை எழுதிக் காட்ட விரும்பவில்லை. அதற்கு மாறாகப் பெண்ணின் நளினம், பிரிந்திருக்கும் ஆணின் சேய்மையை ஏற்றுத் தவிக்கும் இல்லாள், தாய்மையைக் கொண்டாடும் பேரன்பு மனம் போன்றவற்றால் நிரம்பிய பெண் தன்னிலைகளையே எழுதிக்காட்டுகின்றார். மாயமான நிழல்(37) என்ற தலைப்பிட்டுள்ள கவிதைக்குள் இருப்பவள் பிரிவைத் தாங்கிக் காத்திருக்கும் சங்கப் பெண்ணின் – முல்லைநிலத்து இருத்தல் பெண்ணாகக் காட்சி தருகிறாள்,

அந்த நிலத்திலிருந்து
நீங்கிச் சென்றபின்
உனதிடைவெளி எப்படியிருக்க வேண்டும்

உடனிருக்கையில் உணர்ந்ததை விட
உனதன்பின் கரிசனைகள்
மாய்ந்து எனைத் தாங்க வேண்டும்

உன் பேச்சொலிய இரைச்சல்
மயானப் பெருவெளியின் அமைதியெனக் கனக்க வேண்டும்

நீ ஓய்ந்திட்ட பின்னும்
அடிக்கடி அணைத்த உருவம்
சட்டெனத் திரும்புகையில்
மந்திரமாய்த் தோன்றி மறைய வேண்டும்

தன்னைக் குறித்த பார்வையைக் கொண்ட பெண்களை வாசிக்கத் தந்துள்ள றியாஸாவின் கவிதைகளுக்குள் அலையும் பெண்களின் மனநிலை வெளிப்பாடு என்பது ஒன்றுபோல இருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய - குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக ஆண்கள் குறித்த பெண்ணின் பார்வையில் அவர்களை எதிர்நிலையில் நிறுத்திப் பார்க்கும் பெண்ணியப் பார்வையை இந்தக் கவிதைகளுக்குள் வாசிக்கும் வாய்ப்பில்லை. நிலங்களின் வாசத்திற்குள் இருக்கும் பெண்கள், இயற்கையாக உருவாக்கப்பட்ட பாலடையாளத்தை எதிர்நிலையில் நிறுத்திக் கோபத்தையும், தான் என்ற அகங்காரத்தால் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கையைத் தேர்வு செய்யும் பெண்கள் அல்லர். அவர்களின் இருப்பு குடும்பவெளிக்குள் இருக்கும் ஆண்களோடு – வாப்பா, சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என உறவுகளோடு -அன்பும் அந்நியோன்யமும் கொண்ட வாழ்க்கையில் நிம்மதிப் பெருமூச்சு விடும்பெண்கள். அவர்கள் பெண்ணியத்தன்னிலைகளால் ஆனவர்கள் அல்ல; பெண் தன்னிலைகளால் ஆனவர்கள். இப்படி இருக்க முடியும் என்பதை வரமெனக் கொண்ட பெண்களை நவீனப் பெண்களாக அடையாளப்படுத்தமுடியாது என்ற போதிலும் அவ்வகைப் பெண்களே இங்கு பெரும்பான்மையானவர்கள் என்பதும் உண்மையே. அவர்களின் இருப்பைக் கவிதையாக்குவதில் றியாஸாவுக்குத் தேர்ச்சியும் திறனும் இருக்கிறது என்பதைத் தனது தொகுதியில் நிரூபித்துள்ளார்.


நிலங்களின் வாசம்/
றியாஸா எம் ஸவாஹிர்/
வேரல் புக்ஸ் வெளியீடு
2024


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

காதல்: காமம் - பெண் கவிதைகள்

உதிரியாய்ச் சில குறிப்புகள்