விலகிச் செல்லும் அந்தரங்கம்


திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.
நான் வந்தது இருமனங்கள் இணையும் திருமண விழாவிற்குத் தான் என்றாலும் மண்டப வாசலில் இருந்த காட்சிகள் என்னைப் பின்னோக்கி இழுத்துச் சென்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்குப் பிடித்த இயக்குநர் ஒருவரின் படத்தின் முதல் காட்சியைப் பார்க்கச் சென்று தோல்வியுடன் திரும்பினேன். பிடித்த இயக்குநரின் இயக்கத்தில் பிரபலமான நடிகரும் நடித்திருந்தார் என்பதால் அரங்கின் வாசலில் கூட்டம் அலை மோதியது. புதிய படங்கள் வெளியாகும் ஒவ்வொரு தடவையும் அந்தக் காட்சிகள் காணக்கிடைப்பவை தான்.ஆளுயரப் போஸ்டர்களுடன் மதில்கள் வண்ணமயமாகத் தோற்றம் தரும். திரை அரங்கின் வாசலில் நாயக நடிகர் அதன் உயரத்தில் பாதி அளவிற்குக் கட்-அவுட்டில் காட்சி தருவார். அந்தக் கட் அவுட்டிற்கு ஏற்ற அளவில் நீளமான மாலைகள் தொங்கும். விசில் சத்தம் காதைக் கிழித்துச் செல்லும். டிக்கெட் வாங்கும் கூட்டம் ஆரவாரத்துடன் திமிலோகப் படுத்தும் காட்சிகள் வாடிவாசலில் காளைகளைப் பிடிக்கக் காத்திருக்கும் ஜல்லிக்கட்டுக் காட்சிகளுடன் ஒப்புமைப் படுத்தத் தக்கன.

தனது வாழ்வின் சில கணங்களைக் கொண்டாடத் திரை அரங்கின் இருட்டைப் பயன்படுத்தும் ரசிகனின் கொண்டாட்ட அடையாளங்கள் அவை என்று பின்னால் நான் புரிந்து கொண்டேன். சொந்த வாழ்வின் நெருக்கடியில் இப்படியான சந்தோசங்களைக் காண முடியாத மனிதர்கள் மற்றவர்களோடு சேர்ந்து பொதுக் கொண்டாட்டங்களிலும் களியாட்டங்களிலும் தங்களைக் கரைத்துக் கொள்கிறார்கள் எனப் படித்ததோடு ரசிக மனம் பற்றிய பொதுப்புத்திக்கு விளக்கங்களும் தந்து கொண்டிருக்கிறோம். முன்பதிவில் அனுமதிச் சீட்டு கிடைத்தால் மகிழ்ச்சியாகக் கிளம்பிச் செல்லும் நடுத்தர வர்க்கத்திற்கு இந்தக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அருவெருப்பானவை என்பது கூட இப்போது புரிகிறது. நடுத்தர வர்க்கம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதைக் கூட விரும்புவதில்லை. போனவுடன் டிக்கெட் வாங்க வேண்டும்; அப்படியே உள்ளே போய்விட வேண்டும். போய் உட்கார்ந்தவுடன் படம் ஆரம்பித்தால் மிக்க மகிழ்ச்சி அடையும் மனநிலை யுடையது.


திரைப்படம் பார்ப்பதில் வெறுத்து ஒதுக்கிய ஈடுபாட்டையும் கொண்டாட்டங்களையும் திருமண நிகழ்ச்சிகளில் ஈடு கட்ட முயல்கின்றதோ என்னும் அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின் திருமண ஏற்பாடுகள் மாறிக் கொண்டிருக் கின்றன.கொண்டாட்ட முறைகளும் களியாட்ட ஈடுபாடும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறும் என்பதைத் தவிர்த்து விட முடியாது என்பது அறிந்த ஒன்று தான். ஆனால் வாழ்க்கையின் அந்தரங்கம் கூட சமூகத்தின் புறச் சூழலுக்கேற்ப மாறும் என்பதை இப்போது நடக்கும் திருமணங்களின் வைபோகங்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த வைபோகங்களில் அந்தரங்கம் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றது என்பதைத் தமிழர்கள்¢ மறந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.


அந்தரங்க வாழ்வின் மென்மைகள் நுகர்வியத்தின் பெருங்காட்சிப் பொருளாக ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை அந்த மண்டப வாசலின் காட்சிகள் புரிய வைத்தன.இப்போது நான் வந்திருப்பது திருமண நிகழ்ச்சிக்குத் தான் என்றாலும் வாசலில் வண்ணப் பிளாஸ்டிக் தாளில் மணப்பெண்ணும் மணமகனும் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருந்தனர். தெருவை அடைக்கப் பந்தல் போடுவது என்று கிராமங்களில் ஒரு பேச்சு உண்டு. அந்தப் பிளாஷ்டிக் தாள் தெருவை அடைக்கும்படியான நீள அகலத்தில் பல வண்ணப் புகைப்படமாகக் காட்சி அளித்தது. இனிமேல் தானே திருமணம் நடக்க இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்ததை அடக்கிக் கொண்டு திரும்பினால், மணமகளை வாழ்த்த வரும் சமூகத் தலைவர் ஒருவரை வரவேற்றும் வாழ்த்தியும் வைக்கப்பட்ட பதாதைகள் வண்ண விளக்குகளால் சூழப்பட்டு மின்னிக் கொண்டிருந்த காட்சி திரைப்பட நடிகருக்கு வைக்கப்பட்ட ‘கட்-அவுட்’ டுகளுக்குச் சற்றும் குறைந்தவை அல்ல.


திருமணம் மனித சமுதாயத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடிப்படை அலகாக எப்போதும் இருந்து வந்துள்ளது எனச் சமூகவியல் அறிஞர்களும் மானிடவியல் சிந்தனையாளர்களும் சொல்கின்றனர். மனிதர்கள் தங்கள் வாரிசுகளை உருவாக்குதல் என்னும் தொடர் நிகழ்வுகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பந்தம் தான் திருமணம் என்பது அவர்கள் சொல்லும் விளக்கம். தனது சொத்தின் பகுதி தனது வாரிசுக்குச் செல்ல வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம் தான் குடும்பம் என்ற சமூக அலகின் தோற்றம் என கார்ல் மார்க்ஸின் நண்பரும் மானுடவியல் அடிப்படைகள் அவரோடு விவாதித்தவருமான பிரெடெரிக் ஏங்கல்ஸ் சொல்கிறார். சமுதாயம் ஏற்றுக் கொண்ட ஒழுங்குகளைச் சிதைத்து விடாமல் தடுக்க மனித சமுதாயம் ஏற்படுத்திக் கொண்ட சில ஒழுங்கு முறைகளின் வெளிப்பாடு தான் திருமணச் சடங்குகள் என்கிறது மானிடவியல். இப்படியான ஒழுங்கு முறைகள் ஏற்படுத்திக் கொண்டாலும் அந்த ஒழுங்கை மீறுவதற்கு எப்போதும் சந்தர்ப்பம் தேடி அலையும் விருப்பம் கொண்டது மனித இயல்பு என மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.


சமூகவியலின் அடிப்படைகளோடு எப்போதும் முரண்படும் உளவியலோ மனித இயல்புகளுள் ஒன்றான எதிர்பால் ஈர்ப்பின் விழைவு தான் திருமணம் எனச் சொல்லுகிறது. காமம் சார்ந்த உடல் ஈர்ப்பின் விளைவால் பெரும் ஒழுங்கு மீறல்கள் ஏற்பட்ட நிலையில் தனி மனிதன் தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்ள அனைவரையும் சாட்சிக்கு அழைத்து சமூகத்தின் முன்னால் ஏற்படுத்திக் கொண்ட விதிகள் அல்லது கரணங்கள் தான் திருமண நிகழ்வின் அடிப்படைகள் எனச் சொல்கின்றன அறிவு வாதங்கள்.
கரணங்கள் அல்லது சடங்குகள் என்பவை தனிமனிதச் சடங்குகள் , குழுமச் சடங்குகள் என இரண்டு வகைப் பட்டவை. தனிமனிதச் சடங்குகள் எப்போதும் வேண்டுதலோடு தொடர்புடையவை. குழுமச் சடங்குகள் அப்படிப் பட்டவை அல்ல. படையல் அல்லது பலியிடல் போன்றவைக் குழுமச் சடங்குகளிலும் உண்டு என்றாலும் அவற்றில் பங்கேற்கும் நபர்கள் ஒரு விதத்தில் சாட்சியாளர்களாக இருப்பதைக் காணலாம். குழுமச் சடங்குகள் கடவுளர்களுக்குப் படையல் செய்வதோடு சாட்சியாளர்களான மனிதர்களுக்கும் விருந்து என்ற பெயரில் படையல் செய்யும் அம்சங்களைக் கொண்டது. திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட நண்பர்களும் உறவினர்களும் கூட்டத்தின் முன்னால் ஒப்புக்கொடுத்த முறையின் படி வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைத் தருவார்கள் என்பதே திருமணச் சடங்குகளில் உற்றாரும் உறவினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கருதுவதின் காரணங்கள். புதிதாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கும் பதிவுத் திருமணங்கள் சட்டச் சாட்சிகளைக் கொண்டிருந்த போதிலும் மனிதச் சாட்சிகளும் வேண்டும் என வலியுறுத்துவதை இங்கு நினைத்துக் கொள்ள வேண்டும்.


திருமணம் என்பதை காமஞ்சார்ந்த அன்பு வயப்பட்டு உருவாகும் பந்தம் என்பதாகவே மனித குலம் நம்புகிறது. இனமாகவும், சாதியாகவும், குழுக்களாகவும் பிரிந்து வாழும் மனிதர்கள் திருமணம் என்னும் பந்தத்தை எப்போதும் தவிர்த்து விடும் நிலைக்குப் போய் விட விரும்பவில்லை. அந்தப் பந்தத்தை ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் அந்தரங்க நிகழ்வாகவே மனித சமூகம் கருதி வந்துள்ளது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. தமிழ்ச் சமுதாயத்தில் களவுக் காதல் எனவும், கற்பு வாழ்வு எனவும் பண்டை இலக்கணங்கள் கூற , இலக்கியங்களும் அப்படியே விரித்துக் காட்டியுள்ளன. அந்தப் பந்தத்தில் காக்கப்படும் ஒன்று அந்தரங்கம். அனைவரும் சாட்சியாக இருக்கத் திருமணச் சடங்குகள் நடந்தாலும், அதன் அடுத்த கட்டம் அந்தரங்கத்தின் தொடக்கம் என்பதை மறந்து விட முடியாது.


நிகழ்காலத் திருமண நிகழ்வுகள் அந்தரங்கத்தை விலக்கி விட்டு காட்சிப் பொருளுக்கும் பகட்டுப் பெருமைக்கும் காரணங்களாகி வரும் போக்கைத் தொடங்கியுள்ளனவோ என்று தோன்றுகிறது. அந்தரங்கம் புனிதமானது என்ற நம்பிக்கை காப்பாற்றப் படவில்லை என்றால் திருமணங்களின் பின் விளைவுகள் கோணல்மாணலாகி விடுவதும் தவிர்க்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்