கலாப்ரியா : கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும்...
கலாப்ரியா என்ற பெயரை நான் நினைத்துக்கொள்ளும்போது என்னை அறியாமலேயே எனது கடந்த காலத்திற்குள் பயணிக்கின்றவனாக மாறிப்போகின்றேன். அந்தப் பெயர் எனக்கு அறிமுகமானது எப்படி என்பது தொடங்கி ஒவ்வொன்றாய் நினைத்துக் கொள்கின்றேன். பின்னர் அந்தப் பெயர் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஆளுமையின் பெயராக நிலைபெற்ற காலகட்டத்துச் செயல்பாடுகளில் நான் இருந்தேனா? எனக் கேட்டுக்கொள்பவனாக மாறுகின்றேன். பின்னர் அவரும் நானும் சேர்ந்து இயங்கிய சூழலுக்குள் நகர்ந்து இப்போது இந்த மேடையில் – கலாப்ரியா-75 என்ற பெருநிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். எனது நகர்வின் வழியே கலாப்ரியா என்று அறியப்பட்ட சோமசுந்தரத்தின் நகர்வைக் கவனித்துச் சில குறிப்புகளைச் சொல்லிப்பார்க்கின்றேன்.
இப்படித்தான் நுழைந்தார் கலாப்ரியா..
கல்லூரிப் படிப்புக்குள் நுழைந்தபோது அறிவியல் படிக்கும் விருப்பத்தோடு நுழைந்து பின்னர் தடம் மாறி, இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களுள் ஒருவன் நான். அப்படித் திசைமாறிய நண்பர்கள் பலரையும் எனக்குத் தெரியும். அந்தத் திசைமாற்றம் காரணமாக மரபான தமிழ் இலக்கியப் படிப்பை மேற்கொண்டவர்களிடமிருந்து மாறுபட்ட ஈடுபாடுகள் அவர்களிடத்தில் வெளிப்பட்டு நிற்பதையும் கவனித்துள்ளேன். இந்தத் திசைமாற்றம் இல்லாத பலரும் மரபான தமிழ்மொழிக்கல்விக்குள் நின்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டியுள்ளார்கள். ஆனால் அறிவியல் பின்புலம் கொண்ட இலக்கிய மாணவர்கள் மரபுத் தமிழ் இலக்கியத்தைத் தாண்டி நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பிலும் இயங்குபவர்களாக அடையாளம் பெற்றவர்கள்.
மரபுத்தமிழ் இலக்கியப்பரப்பைத் தாண்டிய நவீனத் தமிழ் ஆளுமைகளையும் செயல்பாடுகளையும் எனக்குள் விதைத்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகம். கல்விப்புலம் சார்ந்த இலக்கியத்துறை மாணாக்கர்களுக்கு அந்தக் கல்லூரி வளாகம் தொடர்ந்து பாடத்திட்ட எல்லையைத்தாண்டிய பரப்பை அறிமுகம் செய்துகொண்டே இருக்கும் ஒரு வளாகமாக அப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. எனது பட்டப்படிப்பிற்கெனப் பல்கலைக்கழகம் உருவாக்கித் தந்த பாடத்திட்டத்திற்குள் புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவத்தின் அறிமுகம் கிடையாது. மணிக்கொடி எழுத்தாளர்கள், வானம்பாடிக் கவிஞர்கள், எழுத்து விமரிசகர்கள் என்ற சொற்களைப் பேசவேண்டிய தேவைகள் இருந்ததில்லை. அந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியக் கல்விக்காக அறியப்பெற்ற சில கல்லூரிகள் இருந்தன. அந்தக் கல்லூரியின் ஆசிரியர்களுக்கே கூட இந்தச் சொல்லாடல்கள் எல்லாம் அறிமுகம் இல்லாத சொற்களாக இருந்தன.
அந்தப் போக்கிலிருந்து அமெரிக்கன் கல்லூரி முற்றிலும் தன்னை விலக்கிக் கொண்ட கல்லூரியாக – தமிழ்த்துறையைக் கொண்ட கல்லூரியாக இருந்தது. அத்துறையில் இளங்கலை முதலாமாண்டு படிக்க நுழையும் ஒருத்தருக்கு இந்தச் சொற்களும், சொற்களுக்குப் பின்னால் இருந்த கருத்தியல் வேறுபாடுகளும், அதனால் தமிழ் இலக்கியப் போக்கில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களும் வகுப்பறையிலேயே அறிமுகமாகின. இவற்றின் ஆழங்களையும் அகலங்களையும் அறிந்து விவாதிக்கும் ஆசிரியர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களின் வழியாகவே கலாப்ரியா என்னும் கவி எனக்கு அறிமுகம் ஆனார். பாடத்திட்டத்தைத் தாண்டிப் படிக்க வேண்டிய இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் வகுப்பறைகளைத் தாண்டிய உரையாடல்களை நடத்தும் அமைப்புகளும் நூலகமும், அந்நூலகத்திற்கு வந்து சேரும் நூல்களும் இலக்கிய இதழ்களும் எனப் பல வாய்ப்புகளைத் திறந்து விடும் வளாகமாக அந்தக் கல்லூரி வளாகம் திகழ்ந்தது. புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் பாடத்திட்டத்திற்குள் பாடம் நடத்திய ஆசிரியர், அவர்களோடு சேர்த்து சுந்தரராமசாமியையும் கி.ராஜநாராயணனையும் வாசிப்பது எப்படி எனச் சொல்லிப் போவார் சாமுவேல் சுதானந்தா என்ற இளம் ஆசிரியர். பாரதியாரையும் பாரதிதாசனையும் பாடத்திட்டத்திற்குள் அறிமுகம் செய்யும்பொருட்டுக் கவிதை வாசிப்புமுறைகளைக் கற்பிப்பதோடு புதிதாக உருவாகி வரும் புதுக்கவிதையின் வடிவம், போக்கு, விவாதிக்கும் கட்டுரைகளை வெளியிடும் தீபம், கணையாழி, தாமரை போன்ற பத்திரிகைகளையும் அறிமுகப்படுத்துவார். அவற்றை நூலகத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வார். அந்தச் சூழலின் வழியாகவே எனது வாசிப்புப்பரப்புக்குள் கலாப்ரியா என்னும் கவியின் நிழலான உருவம் தீட்டப்பட்டது.
துறையின் ஆசிரியர்கள், உருவாக்கித் தந்த வகுப்பறைச்சூழலைத் தாண்டிய நூலகச் சூழல், சிறுபத்திரிகைகளின் அறிமுகம் என்பதைத் தாண்டி வளாகத்தில் செயல்பட்ட கலை, இலக்கிய அனுபவங்களைத் தரும் நாடக மன்றம், கவின்கலை அமைப்பு, திரைப்படச் சங்கம் எனப் பலவற்றின் பகுதிகளுக்குள் நுழைந்து வெளியேறும் வாய்ப்புப் பெற்று முதுகலைக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தமிழ் துறைக்குப் போனபோது, உடன் பயில வந்த மாணாக்கர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்ட உதவிய பெயர்களாக மீராவின் அன்னம் பதிப்பகம், நியூசெஞ்சுரி பதிப்பகமும் ஐரோப்பியச் சிந்தனைகள் புனைகதைகள், நாடகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பு நூல்களாகத் தந்த க்ரியா பதிப்பகம் இருந்தன. அப்பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களை வாசித்த மாணவனாகப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தேன். அங்கே வரும் இலக்கியவாதிகளோடு உரையாடல் செய்யும்போது உச்சரிக்கப்பட்ட நவகவிதை வரிசைகளும் அக்கவிதை நூல்களின் ஆசிரியர்களும் அறியப்படாத பெயர்களாக இல்லை. வெவ்வேறு சிறுபத்திரிகளில் கவிதைகளை வெளியிடும் கவிகளின் பெயர்களாக இருந்தன; அந்நியப்பெயர்களாக இல்லை. கலாப்ரியா வாசிக்கப்பட வேண்டிய கவி என்பதைச் சொல்லும் ஆசிரியராகப் பேரா.சி.கனகசபாபதியும், தி.சு.நடராசனும் இருந்தார்கள். நண்பர்களாக – ந.முருகேசபாண்டியனும் நிஜநாடக இயக்கத்தின் மு.ராமசுவாமியும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து பெற்ற இதழ்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் கலாப்ரியா எனக்குள் இறங்கிக் கொண்டே இருந்தார்.
இலக்கிய ஆர்வமுள்ள ஒருவருக்கு, 1980 களின் மதுரை எல்லாத் தரப்பு இலக்கிய வாசிப்புகளையும் விவாதங்களையும் கலைச்செயல்களையும் தரக்கூடிய நகரம். ராஜனின் யதார்த்தா திரைப்படச் சங்கமும், நிஜநாடக இயக்கத்தின் சோதனை நாடகங்களும், இடதுசாரி அமைப்பினரின் அரசியல் கூட்டங்களும், மனிதநேயக் களனின் அறைக்கூட்டங்களும், சுரேஷ்குமார் இந்திரஜித் முன்னெடுத்த இலக்கியச்சந்திப்பும் எனத்தேடினால் கண்டடையக்கூடிய பலன்களை வழங்கக் கூடிய அமைப்புகளைத் தன்னகத்தே கொண்ட நகரமாக மதுரை விளங்கியது.
அந்நகரில் 1988 இல் மதுரை நிஜநாடக இயக்கம் நடத்திய ஒரு நாள் நாடக விழாவொன்றில் கவிதா நிகழ்வொன்றை நிகழ்த்தும் நோக்கத்தோடு மதுரை நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்போதைய இளங்கவிகளான சுகுமாரன், தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா, பிரம்மராஜன், ஈழத்துக்கவிகளான சேரன்,வ.ஐ.ச. ஜெயபாலன், எம்.எ.நுஃமான் போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளை எடுத்து வாசித்து விவாதித்துக் கவிதைகளைத் தேர்வுசெய்து நிகழ்வை நடத்தினோம். அந்தத்தேர்வுக்கான வாசிப்பு என்பது கவிகளின் கவிதையடையாளத்தை உள்வாங்கிக் கொள்ள உதவிய விவாதத்தன்மையிலான வாசிப்புகள் என்பது இப்போது தோன்றுகிறது. அந்த விவாதத்தின் இன்னொரு விளைவே சுதேசிகள் என்ற நாடக்குழுவும் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் கதையை நாடகமாக்கி, மேடையேற்றியதும்.
இப்படித்தான் புரிந்துகொண்டேன்...
இப்போது 75 வயதைக் கடந்தவராக இருக்கிறார் கலாப்ரியா. ஆனால் அவரது கவிதைகள் 25 வயதில் இருந்த வெளிப்பாட்டுத் தன்மைகளோடுதான் இருக்கின்றன. இலக்கிய வரலாற்றின் போக்கில் தமிழ் நவீனத்துவக்கவிகளின் முன்வரிசையில் அவரது இடம் உறுதியானது. இப்படிச் சொல்வதற்கு வலுவான காரணங்கள் உண்டு. எனது முனைவர் பட்ட ஆய்வுக்கான இரண்டு தலைப்புகளில் ஒன்றாக ‘ புதுக்கவிதைக்குள் கலாப்ரியாவின் தனிப்போக்கு’ என்பது இருந்தது. இன்னொன்று ‘கரிசல் இலக்கியத்தில் பூமணியின் தனிப்போக்கு’. இவ்விரண்டு தலைப்புகளையும் விட்டுவிட்டே நாயக்கர் கால இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தேன்.
கலாப்ரியா, தமிழின் தொன்மைக் கவிதையியலான தொல்காப்பிய மரபை வடிவத்திலும் உரிப்பொருள் தேர்வுகளிலும் நீட்டித்தவர். நவீனத்தமிழ்க் கவிதையின் இருபெரும் போக்காகச் சொல்லப்படும் எழுத்துக்கவிதைகள், வானம்பாடிக்கவிதைகள் என்ற இரண்டுமே தமிழின் வெளிப்பாட்டுத்தன்மையில் தொல்காப்பிய மரபைக் கைவிட்டவை. ஒரு கவிதைக்கு முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றும் முக்கியம். இந்த மூன்றும் இடம்பெறுவது நல்லது. அல்லது இரண்டாவது இடம்பெறவேண்டும். அல்லாமல் உரிப்பொருளால் மட்டுமே கவியாக்குவது சிந்தனைத் தெறிப்பாக மட்டுமே வெளிப்படும். புறநானூற்றில் அத்தகைய கவிதைகள் உள்ளன. உலகின் இயல்பு, மனித இயல்பு, இயற்கையின் இருப்பு, நிலையாமை போன்றவற்றைப் பாடிய கவிகள் உரிப்பொருளை மட்டும் விரித்துப் பாடிச் சென்றுள்ளனர். ஆனால் அகக் கவிதைகளில் பெரும்பாலும் அந்தப்போக்கு இல்லை.
மிகக்குறைவான வரிகளில் எழுதப்பெற்ற ஐங்குறுநூறிலும், குறுந்தொகை நானூறிலும் இருக்கின்ற கவிதைகளே கருப்பொருளோடும் உரிப்பொருளோடும்தான் வெளிப்பட்டுள்ளன. எழுத்து, வானம்பாடிக் கவிகள் ஆரம்பக் காலக் கவிதைகளின் தொகை நூல்களான புதுக்குரல், வெளிச்சங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள கவிதைகளை வாசித்துப் பார்த்தாலே நான் சொல்வது புரியும். எழுத்துக் கவிதைகளைத் தங்களின் முன்மாதிரியாகக் கொண்ட கவிகள் ஒருவரும் தங்கள் கவிதைகளுக்குள் கருப்பொருள் கூறுகளோ, முதல் பொருள் அடையாளங்களான நிலமும் பொழுதுமோ இருக்கவேண்டும் என நினைக்கவில்லை. தொடக்க நிலையில் புரட்சி, மாற்றம், அரசியல் விழிப்புணர்வு போன்ற பொருண்மையில் கவிதைகள் எழுதிய வானம்பாடிக் கவிகளும் கருப்பொருள், முதல் பொருள் பற்றிச் சிந்திக்கவில்லை. உரிப்பொருள் மட்டுமே போதும் என்று நினைத்து வெளிப்பட்டார்கள். ஆனால் கலாப்ரியாவின் தொடக்கமே முப்பொருளும் வெளிப்படும் கவிதைகளாக வடிவம் பெற்றுள்ளன. குறிப்பாக அவர் உருவாக்கிய நிலமும், நிலத்தின் இருப்புகளான கருப்பொருளும் சேர்ந்து அவருக்கு வட்டாரத்தன்மையோடு நவீனக் கவிதையை எழுதியவர் என்ற தனித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. இந்த விலகலில் முதல் நவீனக்கவி கலாப்ரியா தான்.
அவரது கவிதைகளில் செவ்வியல் கவிதைகளின் அகமரபு குறிப்பான விலகலோடு தொடரப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என வரையறை செய்யப்பட்டுள்ளது. அந்த ஏழிலும் புணர்ச்சி, பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்ற ஐந்து உரிப்பொருளைப் பாடியன அன்பின் ஐந்திணைகள் எனத் தனித்துக் காட்டப்பட்டு அதிகம் பேசப்பட்டுள்ளன. பெருந்திணை, கைக்கிளை என்ற இரண்டும் அவற்றின் உரிப்பொருளான பொருந்தாக்காமம், ஒருதலைக்காதல் காரணமாக அதிகம் பாடப்படவில்லை. பாடப்படவில்லையா? தொகுத்தவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லையா? என்பது இன்னொரு விவாதம். பெயரிலிகளாக அறியப்பட்டுப் பாடல்களின் வரிகளால் பெயர் பெற்ற கவிகளாக 40 பேர் வரை உள்ளனர். அவர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று என்பதாகவே கிடைக்கின்றன. அவையெல்லாம் பெரும்பாலும் இவ்விரு திணைப்பொருளில் இருக்கின்றன.
நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பில் அன்பின் ஐந்திணையை மட்டும் மரபாக உள்வாங்கி எழுதப்பெற்ற காதல் கவிதைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. காதல் கவிதைகளில் கேட்போர் இடத்தில் பெண்ணை நிறுத்தி எழுதப்பெற்ற காதல் கவிதைகள் எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைக்கின்றன என்றாலும் அவற்றை ஒருதலைக்காதல் என்றோ, பொருந்தாக் காமத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் கைக்கிளையையும் பெருந்திணையையும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தோடு – காமத்தின் தூண்டுதலை உணர்வாக மாற்றிக் கவிதையாக்கிய முன்னோடி கலாப்ரியா. இந்த வகையிலும் கலாப்ரியா தொல்மரபின் நீட்சியாக இருக்கிறார். பின்வரும் கவிதைகளை வாசித்துப்பாருங்கள். அவற்றின் உரிப்பொருளும் உணர்வு வெளிப்பாடும் எத்தகையன என்பது விளங்கும்.
இன்னும் கேள்விகள் சொல்லித்தந்து நகரும் வாழ்க்கை
இன்னும் ஒரு கட்டுப்போலதான்
பாக்கியிருக்கும்
சிமினி விளக்கு
கருகத்தொடங்கும் வரை
பீடி சுற்றிக்கொண்டிருப்பாள்
‘இன்னு விளக்கை
அணக்யலையா..’ என்பான்
எல்லாரும் பசியுடன்
பசியுடன்
படுத்துக்கொள்ள
“இன்னும் புத்தி வரலையா
கெழவனுக்கு..” என
அம்மா அப்பாவிடம்
செல்லக் கோபத்துடன்
குசுகுசுக்கும்
இருட்டு நாடகத்தை
மனசுள் பார்த்து
வெட்கத்துடன் குப்புறப்
படுப்பாள்.
தனிச்சையாய்
விரல் சொடுக்க நினைத்துப் பின்
சாக்கிரதையாய் தவிர்ப்பாள்
சமைந்த குமரி
******
துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது
பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .
புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்
துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்
நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று
மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும் ஒருவருக்குக் கலாப்ரியாவின் கவிதைகளுக்குள் அன்பின் ஐந்திணைகளுக்குரிய உரிப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு இணையான எண்ணிக்கையில் கைக்கிளையையும், பெருந்திணையையும் பாடும் கவிதைகளும் கிடைக்கும்.
**********
இப்படித்தான் சேர்ந்து செயல்பட்டோம்...
புதுச்சேரியின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியோடு கூடிய எட்டாண்டுகள் (1989-97) ஏறத்தாழ நவீனத்துவ இலக்கியத்தின் போக்கைப் பொதுப்பார்வையாகப் பார்க்காமல் அடையாள அரசியலோடு இணைத்துப் பார்த்த காலகட்டம். குறிப்பான பார்வைகளோடு அரங்கியல் செல்நெறிகளையும் தலித்தியம், பெண்ணியம் எனத் திரிந்த காலத்தில் கலாப்ரியா எனக்குள்ளிருந்து விலகிப்போனார் என்றாலும் தூரமாகிப் போய்விடவில்லை.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக வந்த உடனேயே(1997) நெருக்கமாகிப் போனார். முதல் ஆண்டிலேயே குற்றாலம் பதிவுகளுக்குச் சென்றேன். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பதிவுகளில் பங்கேற்றபோது அவரது குடும்பமே அந்தச் செயல்பாட்டில் காட்டிய ஆர்வத்தையும் அவருக்குத் துணையாக நிற்பதையும் கண்டு வியந்திருக்கிறேன். அந்த வியப்பின் தொடர்ச்சியாகவே பல்கலைக்கழகத்தின் இலக்கியச் செயல்பாட்டோடு இணைந்துகொள்பவராக மாறினார் கலாப்ரியா.
1997 பிப்ரவர் மாதம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கினேன். அடுத்த ஆண்டு முதலாகவே பல்கலைக்கழகத்தின் நிகழ்வுகளில் கலாப்ரியாவின் பங்களிப்பும் வருகையும் தொடங்கியது. தொடக்க ஆண்டுகளில் துறையில் நடத்தப்பெற்ற கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் என்ற பார்வையில் பின்னை நவீனத்துவம், பெண்ணியம் போன்ற கருத்தரங்குகளின் போது கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட எழுத்தாளர் பட்டியலில் கவி. கலாப்ரியாவின் பெயர் இருந்தது. அவற்றையும் தாண்டித் துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றனவற்றில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படும் எழுத்தாளர்கள் பட்டியல் ஒன்றை உருவாக்கியபோது முதல் பெயராகக் கலாப்ரியாவின் பெயரையே நான் எழுதிக் கொள்வேன்.நெல்லைப் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள் இருக்கும் எழுத்தாளர்கள்/ கவிகளின் பட்டியலில் இப்போதும் கூட அவர் பெயர் முதல் பெயராகவே இருக்கின்றது.
பாரதி, பாரதிதாசன் அறக்கட்டளைகளின் சார்பில் சொற்பொழிவுகளை நடத்துவதை மாற்றிப் படைப்பாக்கப் பயிலரங்குகளை நடத்தலாம் என்ற முன்னெடுப்போடு துறையின் தலைவராக இருந்த பேரா. தொ.பரமசிவன் அவர்களை அணுகியபோது ஒத்துக்கொண்டார். அப்போதைய துணைவேந்தராக பேரா.சொக்கலிங்கம் அவர்களிடம் இந்த மாற்றத்தைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்ட இரண்டு கவிதைப்பட்டறையொன்றைத் திட்டமிட்டேன். அதன் முதன்மையான பயிற்றுநர் கவி. கலாப்ரியா தான். பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வுசெய்த 40 மாணவமாணவிகளுக்குக் கவிதை எழுதும் பயிற்சியை வழங்கும் அவரது கற்பித்தல் முறையை அருகிருந்து பார்த்துப் பின்பற்றத்தக்க ஆசிரியத்துவம் என்று உணர்ந்துகொண்டேன். அவரது கற்பித்தல் முறைமை என்பது படைப்பாக்கக் கற்பித்தல் முறைமை. அதனை அவர் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை; அவரே ஒரு கவியாக இருந்து, ஆசிரியராக மாறிக் கற்பிப்பதற்கு எப்படி மாறவேண்டும்; என்னென்ன கவிக்கூறுகளை மாணாக்கர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் எனத்தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொண்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றினார். அவரது முறையையும் அவரோடு இணைந்து கவிதைப்பட்டறைகளை நடத்திய இன்னொரு கவி. ஹெச்.ஜி.ரசூல். இவர்கள் இருவரின் கற்பித்தலில் கவிதைப்பட்டறையில் பங்கேற்றவர்களை எங்காவது பார்க்கும்போதெல்லாம் எனது வகுப்பறையை நினைத்துக்கொள்வதைவிட அந்தப் பட்டறை நினைவுகளேயே பேசுவார்கள்; கவி.கலாப்ரியாவின் சொற்களிலும் அணுகுமுறையிலும் இருந்த நெருக்கமான உறவை – அன்பான சொற்களின் வழி கிடைத்த அனுபவத்தைச் சொல்வதைக் கேட்டுப் பொறாமைப் பட்டிருக்கிறேன்.
தமிழக அரசு உருவாக்கித் தந்த பாரதி, பாரதிதாசன் அறக்கட்டளை நிகழ்வுகளைப் படைப்பாக்க நிகழ்வுகளாக மாற்றியபின் நாடகம் எழுதும் பயிலரங்கு, சிறுகதை எழுதும் பயிலரங்கு போன்றனவற்றை ஏற்பாடு செய்தபோதும் கவிதைப் பட்டறைகளே வெற்றிகரமான பட்டறைகளாக இருந்தன. அவற்றுள்ளும் கவி.கலாப்ரியாவின் அணுகுமுறையும் உள்ளார்ந்த பாடத்திட்டமும் ஒரு படைப்பாக்க ஆசிரியரின் செல்நெறியாக இருந்தன என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்துள்ளேன். இப்போது பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னும் அந்த மனநிலையைத் திரும்பவும் நினைத்துச் சொல்கிறேன். ஓய்வுக்குப் பின் கோவையில் குமரகுரு கல்லூரியில் உருவாக்கிய படைப்பாக்கப் பாடத்திட்டத்தில் அந்தப் பயிற்றுமுறை நிகழ்த்தவேண்டும் என்று சொல்லி அழைத்துப் பேசினேன்; ஆனால் நடக்காமல் போய்விட்டது.நிறுவனமொன்று படைப்பாக்க நோக்கத்தோடு இலக்கியக்கல்வியைத் தர வேண்டும் என்று விரும்பினால் கவி. கலாப்ரியாவை அழைத்து ஆலோசகர் குழுவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வேன். இதை இந்த நிகழ்விற்காகச் சொல்லவில்லை அவரிடமும் இன்னும் சில கவி நண்பர்களிடமும் முன்பே சொல்லியிருக்கிறேன் .
இந்தக் குறிப்பான நினைவுபோல இன்னொரு நிகழ்வும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு வந்த பின் பெண்ணியம் தொடர்பில் ஒரு விரிவான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தேன். பெண்ணெழுத்தாளர்களும் பெண்களை எழுதிய ஆண் எழுத்தாளர்கள், பெண்ணியத்தைக் கற்பிக்கும் சமூகவியல், ஆங்கிலம் போன்ற துறை ஆசிரியர்களோடு தமிழ் ஆய்வாளர்களும் பங்கெடுத்த இரண்டு நாள் நிகழ்வு அது. முதல் நாள் முதல் அமர்வில் கவி. கலாப்ரியா தலைமையில் எழுத்தாளர் இமையமும் கவி. சக்தி ஜோதியும் உரையாற்றும் பொருட்டு மேடையில் இருந்தார்கள். அடுத்த அமர்வில் உரையாற்றுவதற்காகச் சிறுகதை ஆசிரியர் சந்திரா முன்வரிசையில் இருந்தார். பேச்சின் போது இமையத்தின் சொன்ன குறிப்பொன்று தனது உடல் மொழியைக் குறித்த விமரிசனம் என்பதாக எழுத்தாளர் சந்திரா புரிந்துகொண்டார்; உடனடியாக இமையத்திற்கெதிராக எதிர்வினை ஆற்றத்தொடங்கினார். அத்தோடு தனது முகநூல் பதிவின் வழியாக ஒரு மணி நேரத்தில் தமிழ் கூறும் நல்லுலகம்(!) முழுவதும் பரவும் விதமாகச் செய்துவிட்டார். அந்த அமர்வு முடியும் முன்பே பரபரப்பு தொற்றிக் கொண்டது. பத்திரிகை நண்பர்கள் அலைபேசியில் கேட்கத் தொடங்கி விட்டார்கள். மும்பையிலிருந்து அம்பை போன்ற பெண் எழுத்தாளர்களும் இமையத்தைக் கண்டிப்பதோடு கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக என்னையும் கண்டிக்கத் தயாராகிவிட்டார்கள். சிலர் எழுதவும் செய்தார்கள். கருத்தரங்கின் அடுத்த அமர்வும் அடுத்த நாள் அமர்வுகளும் என்னாகும் என்ற கவலை எனக்கு உண்டாகிவிட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் போனால் நிலைமை மோசமாகும். கல்விப்புலம் சாராத எழுத்தாளர்களை அழைத்தது தவறு; இனிமேல் அந்தத்தவறைச் செய்யாதீர்கள் என ஆலோசனைகளும் எச்சரிக்கையும் வழங்கப்படும் என்ற நிலை. அந்த நிலையில் கலாப்ரியா காட்டிய பொறுமையும் நிலைமையைச் சமாளித்து உருவாக்கிய சமாதானங்களும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. அப்போது அவர், தானொரு அழைப்பாளர் என்ற நிலையைத் தாண்டி, இந்தப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடரவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் உள்நபராகத் தன்னை வெளிப்படுத்தினார். அவரது அக்கறையின் வெளிப்பாடாக முதல் நாளோடு வருகையை நிறுத்திக் கொள்ளாமல் - பிரச்சினைகள் தொடர்ந்திடக் கூடாது என்பதற்காக அடுத்த நாளும் வந்திருந்து ஆதரவாக இருந்தார் என்பதை அன்போடு நினைத்துக் கொள்கிறேன்.
இந்த நினைவுகளோடு துறையின் போட்டிகள், ஆலோசனைக்குழுக்கள், விருதுக்குழுக்கள் போன்றவற்றில் ஒரு உறுப்பினராக இருந்து செய்த பணிகள் பல்கலைக்கழகம் தந்த மதிப்பூதியத்திற்காகச் செய்த பணிகள் அல்ல. ஒரு அலைபேசியில் சொன்னவுடன் இடைகாலிலிருந்து கிளம்பி வந்துவிடுவார். துறையில் உருவாக்கப்பட்ட திறனாய்வாளர் செம்மல் விருதின் முதல் ஆண்டுத் தேர்வில் இருந்து திறனாய்வாளர் செம்மலாகத் தமிழவனைத் தேர்வு செய்தவர் அவர் தான். அத்தோடு அவரது திறனாய்வு முறையை – குறிப்பாகக் கவிதைத் திறனாய்வில் தமிழவனின் பங்களிப்பைக் குறித்த நல்லதொரு கட்டுரையை வழங்கினார். அதேபோல் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஒரு லட்சம் தொகை கொண்ட ‘பேரா.சுந்தரனார் விருது’ தேர்வுக்குழுவிலும் இருந்து பல்கலைக்கழகத்திற்காகப் பணியாற்றியுள்ளார். எனது பொறுப்பில் பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட அம்பேத்கர் மைய நிகழ்வுகளிலும் விருந்தினராக அழைத்தபோதும், அழைக்கப்படாமல் வெறும் அழைப்பிதழ் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டபோதும் வருகை புரியத்தவறியதில்லை. அந்த வருகையின் போது அவர் காட்டியது பல்கலைக்கழகத்துறையின் மீது நம்பிக்கை. இலக்கியத்திற்கான வேலைகளைச் செய்யும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற அக்கறையின் வெளிப்பாடு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் பங்காளியாக – ஒவ்வோராண்டும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றிரண்டுக்கும் மேல் பங்கேற்று ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் நெருக்கம் காட்டிய அவரது பங்களிப்புக்காக அல்லாமல், தமிழின் நவீனக் கவிதைப் பரப்பில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியதை அங்கீகரிக்கும் விதமாக அவருக்குப் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதை – ஒரு லட்சம் பணக்கொடையோடு கூடிய பேரா.சுந்தரனார் விருதைப் பல்கலைக்கழகம் வழங்கிக் கௌரவித்தது என்பதும் இந்த நாளில் நினைக்கத்தக்க ஒன்று. நினைத்து மகிழத்தக்க ஒன்று. அந்த விருதளிப்பின்போது குறிப்பிட்ட சில குறிப்புகள் இப்போது நினைவில் இருக்கிறது. கவி. கலாப்ரியாவின் இலக்கியப் பங்களிப்பில் முதன்மையானது தமிழின் நவீனத்துவக் கவி என்ற அடையாளம். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர் எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரைகளும், வாழ்க்கை அனுபவம் சார்ந்த பத்திக்கட்டுரைகளும் எப்போதும் வாசிக்கத்தக்கன; பாடத்திட்டங்களில் இடம்பெறத்தக்கன. அதேபோல் அண்மைக்காலத்தில் அவர் எழுதும் புனைகதைப்பரப்பு ஒருவித நேரடி அனுபவத்தன்மை வாய்ந்தவை. அப்புனைவுகளுக்குள் அவர் உருவாக்கி அலையவிட்டுள்ள பாத்திரங்களும் வாசகர்களின் வாசிப்புப் பரப்பில் உயிர்பெற்று நிலைபெறத்தக்கன. இவற்றோடு நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பில் அவர் நடத்திய குற்றாலம்‘பதிவுகள்’ என்ற இலக்கியச் செயல்பாடு முன்மாதிரியான ஒன்று.
*****
பின் குறிப்பாக இதனைச் சொல்லி முடிக்கலாம்.
திருக்குறளை எழுதிய வள்ளுவர் திரும்ப வந்து புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதில்லை. திருக்குறளைப் பதிப்பித்தவர்களுக்கே அந்தச் சந்தேகம் இருந்துள்ளது என்பதால் தான் புதல்வரைப் பெறுதல் என்ற தலைப்புக்குப் பதிலாக மக்கட்பேறு என்ற தலைப்பையும் சொல்லி வைத்துள்ளனர். கலாப்ரியாவின் புதல்வி தன் தந்தைக்கு எடுத்துள்ள இந்த விழாவிற்குப் பிறகும் அந்தச் சந்தேகம் தேவையற்றது. அந்த அதிகாரத்தின் பெயர் புதல்வரைப் பெறுதல் அல்ல; மக்கட்பேறுதான். அதில் இடம்பெற்றுள்ள “ தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்” என்ற ஏழு சொற்களில் ஒன்றையும் மாற்றவேண்டியதில்லை. ஏனென்றால் ஆண் மகனே வாரிசெனக் கருதாமல் பெண் பிள்ளைகளையும் அவரவர் துறைகளில் முந்தியிருக்கச் செய்திருக்கிறார் கவி. கலாப்ரியா. அந்த நன்றி வெளிப்பாட்டை உளமாற உணர்ந்த பிள்ளைகள் இந்தப் பெருநிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் அதே அதிகாரத்தில் இருக்கும் இன்னொரு குறளான “ மகள் (ன்) தந்தைக்காற்றும் உதவி இவள்(ன்) தந்தை என்நோற்றான்கொல் லெனும் சொல்” என மாற்றி வாசிக்கலாம் எனக்கூறுகிறேன். அவர்கள் செய்திருப்பது தந்தைக்குப் பிள்ளைகள் ஆற்றும் உதவியல்ல; அன்பு.

கருத்துகள்