மகேந்திரசிங் தோனிக்கு வயது 44.

இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஆரம்ப நிலையிலிருந்தே ஒரு தொழில்முறை விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டின் மையமாக இருந்தவை பெருநகரங்கள். பெருநகரங்களின் விளையாட்டாக இருந்து மெல்லமெல்ல நகர்ந்து உலகமயத்திற்குப் பின் கிராமங்களை நோக்கி நகர்ந்தது. இந்த நகர்வில் மையம் முன்வைத்த விளையாட்டு வீரர்களுக்கு ஊடகங்களின் ஆதரவு இருந்தது. ஆனால் வெகுமக்கள் ஆதரவு குறைவு. ஆனால் ஓரங்களிலிருந்து மையத்தை நோக்கி வந்த வீரர்களுக்கு வெகுமக்கள் ஆதரவு எப்போதும் உண்டு; கொண்டாடியிருக்கிறார்கள் ஊடகங்களும் வல்லுநர்களும் வேறு விதமாகவே எதிர்கொண்டன. அதன் தூக்கலான வெளிப்பாடே மகேந்திரசிங் தோனி.மைய நீரோட்ட ஆதரவாளர்களும் ஊடகங்களும் கிண்டலோடும் கேலியோடும் அவரை ஏற்றுக்கொண்டன. கடுமையான விமரிசனங்களை. விளையாட்டு என்ற நிலையை மாற்றிக் கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் இந்தியத் தொலைக்காட்சிப்பார்வையாளர்களுக்கு வழங்க முடிவுசெய்தபோது முதல் தேவையைப் பூர்த்தி செய்த வீரர் தோனி. தோனிக்கு முன்னால் இத்தகைய எதிர்நிலையைச் சந்தித்த அணித்தலைவர்கள் முகம்மது அஸாருதீனும் கபில்தேவும்.

********

மையத்திற்கு வெளியே இருப்பவர்

இந்தியாவில் நடக்கும் மாற்றங்களின் பின்னணியில் ’சமஸ்கிருதமயமாதல்’ என்னும் மனநிலை செயல்படுவதாக எம். என். ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். இந்தியச்சாதியக் கட்டமைப்பு அடுக்கின் உச்சத்தில் இருப்பதாக நம்பப்பட்ட பிராமணர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளைச் சொந்தமாக்குவதன் மூலம் தங்களையும் பிராமணர்களாகக் கருதிக் கொள்ளும் மனநிலை வெளிப்பாடு என்பது அவரது கருத்து.ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது இந்த அடுக்குநிலை ஆட்டம் கண்டது. பிரிட்டானிய ஆட்சியாளர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும்தான் சமூகத்தின் உச்சம்; அவர்களின் அன்றாட நடவடிக்கைகளே நாகரிகம்; அதனைப் பின்பற்றுவதே வாழ்க்கை முறை என இந்தியப் பிராமணர்களே நம்பத்தொடங்கினார்கள். அந்த நம்பிக்கையே அவர்களை ஆங்கில மொழியை வேகமாகக் கற்கின்றவர்களாகவும், ஆங்கிலேயர்களின் கலாரசனையை நாங்களும் பின்பற்றுகிறோம் எனக் காட்டுபவர்களாகவும் ஆக்கியது. அவர்களைப் போலச்செய்யும் மற்ற நடுத்தர வர்க்கத்தையும் மாற்றியது. இந்தியர்கள் சமஸ்கிருதமயமாதலைக் கைவிட்டு மேற்கத்திய மயத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது.

கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர்,, சிவாஜி படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் டெண்டுல்கரும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், புவனேஷ்வர்குமாரின் பந்து சுழற்சியும் காட்சிகளாகி விட்டன.

எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றிக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று.

ஓர் அணி விளையாட்டில் இருக்க வேண்டிய வேகமும் சுறுசுறுப்பும் இல்லாத கிரிக்கெட், தொடக்கத்தில் வானொலி வர்ணனை மூலமும், பின்னர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான விளையாட்டாகவும் மாறியதன் பின்னணியில் வெறும் மேற்கத்திய மயமாதல் மட்டுமே இருப்பதாக ஒருவர் மதிப்பிட்டால் அது பெருந்தவறாக ஆகிவிடும். ஏனென்றால் கிரிக்கெட்டைச் சுற்றிப் பல விளையாட்டுக்கள் நடக்கின்றன. அவை சிறு முதலாளிகளின் வியாபார வளர்ச்சி தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சி வரை உதவும் காமதேனுவாக மாறிவிட்டது. நேர்க்காட்சிக்காகச் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கூடும் 60 லட்சம் பேர்களோடு தொலைக் காட்சிகளின் வழியாக பல நூறு லட்சம் கண்களின் களிப்புக்கான காட்சிப் பொருளாகத் தன்னை ஊருமாற்றம் செய்து கொள்ள அனுமதித்தது தான் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிக் கதை. இந்த வெற்றிக்கதைக்குள் உள்ளேயும் வெளியேயும் இருப்பவராக விளங்கிய பெருமை மகேந்திரசிங் தோனிக்கு உண்டு.

சமஸ்க்ருதமயமாதல் போலவே பெருநகர மையம் என்பதிலும் மும்பை x மற்ற நகரங்கள் என்ற முரண்பாடு கிரிக்கெட்டில் எப்போதும் உண்டு. இன்றுவரை அறிவிக்கப்படும் இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அதிலும் உலகமயத்திற்குப் பின் மாற்றங்கள் ஏற்பட்டன. அதனைச் சாத்தியமாகிய பெரும் நிகழ்வு. ஐபிஎல் போட்டிகளின் உருவாக்கமே. ஐபிஎல் போட்டிகள் மகேந்திரசிங் தோனியின் வெற்றியில் பெரும்பங்கு வகிக்கிறது. இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளின் மையமாக இருந்த ஒற்றை வீரர் தோனி. கரடுமுரடான இந்திப்பகுதியான ஜார்க்கெண்டிலிருந்து வந்த தோனி தமிழ்நாட்டு வெகுமக்களின் முழு ஏற்புக்குரியவராக மாறிய சமூக உளவியல் விரிவான ஆய்வுக்குரியது.

மொழிப்பற்றுகொண்ட தமிழ்நாட்டின் அணியாகக் கருதப்பெற்ற (அப்படியில்லை என்பதுதான் உண்மை) சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவராக ஆரம்பம் முதலே தொடர்கிறார். அவ்வணியில் தமிழ்நாட்டு வீரர்களை ஒதுக்கிவைக்கிறார் என்ற குற்றச்சாட்டைப் பலரும் சொன்னாலும் தமிழ்ப் பார்வையாளத்திரள் அதைப் பொருட் படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் இங்கு தமிழ் வீரர்களாக முன்வைக்கப்படும் ஒவ்வொருவரும் தமிழ்த்திரளின் அடையாளமற்றவர்கள்.

காலனியத்துக்குப் பின்னான ஆளுமைகள் - அறிவியல், சமூகவியல், கலை என எல்லாப் புலங்களிலும் கொண்டாடப்படும் ஆளுமைகள்- இரட்டை எதிர்வில் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் எனக் கணிக்கப்பட்டே கொண்டாடப் படுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் மையம் முன்வைக்கும் ஆளுமைகள், மையத்தை எதிர்கொண்டு மையத்துக்கு நகரும் ஆளுமைகள் - என்ற அந்த எதிர்வு வெளிப்படாத எதிர்வாக இருக்கின்றது. மையநீரோட்டம்X விளிம்புநிலை என்ற இந்த எதிர்வு ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறாக இருக்கின்றது.


நிதானமும் வெற்றியை நோக்கிய திட்டமிட்ட நகர்வும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் சாயலைக் கொண்டதாக இருந்ததுகூட தமிழ்த் திரளின் ஏற்புக்குக் காரணம் என நினைப்பதுண்டு. இந்தியாவின் மையநீரோட்டக் கருத்தியலாக இருக்கும் பிராமணிய அடையாளம் அவருக்கு இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதன் ஏற்புக்காகக் காத்திருக்காமல் நகர்ந்துகொண்டே இருந்த தோனியின் தமிழ்நாட்டுத் தொடர்பு இன்னும் இருக்கப்போகிறது என்றே நினைக்கிறேன். சர்வதேசப்போட்டிகளில் தோனி இருக்கமாட்டார்; ஆனால் கிரிக்கெட்டில் அவர் இருப்பார்.

மகேந்திரசிங் தோனி: பங்குச் சந்தையின் வேகக் குதிரை

விளையாடும் அணியின் சராசரி வயது 35 ஆக இருக்கலாம். மொத்தமாக அணி எடுத்த ஓட்டங்களில் மற்ற அணிகள் எல்லாவற்றையும் விடக் குறைவான ஓட்டங்களை எடுத்திருக்கிறது. ஆனால் அதிகமான வெற்றிகளைப் பெற்று முதல் அணியாகத் தகுதிச் சுற்றை உறுதி செய்தது. அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் அணித்தலைவர் தோனிமட்டும் தான் இருக்கிறார். அவர் கடைசிவரை நீன்று அடித்த 84 தான் அணியில் தனிநபராக அதிக ஓட்டங்கள். இறுதியில் விளையாடும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் படுதோல்வி.

இதற்கு மாறாக அணியின் பந்துவீச்சு எப்போதும் கைகொடுத்திருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சாஹரும் சுழற்பந்து வீச்சாளர் தஹீரும் விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு உதவியிருக்கிறார்கள். இவ்விரு முதன்மைப் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக ஹர்பஜனும் ஜடேஜாவும் இருந்து அணியாக வெற்றிகளைப் பெற்றுத்தந்தார்கள். பந்துவீச்சாளர்கள் திறமை களத்தில் நின்று பந்தைத் தடுப்பவர்களாலும் பிடிப்பவர்களும் மட்டுமே உணரப்படும்.
மட்டை வீச்சில் அணித்தலைவர் தோனியை மட்டுமே நம்பியிருப்பதுபோலத் தோன்றினாலும் இறுதிப் போட்டியில் அணியின் இலக்கு 150 தான். இந்த ஓட்டங்களை எடுத்து வெற்றியைத் தட்டிச் செல்லவேண்டியதற்குச் சென்னை அதிகம் சிரமப்படாது என்றே நினைக்கிறேன்.

தோனியும் சென்னை சூப்பர் ஹிங்ஸ் அணியும் கிரிக்கெட் என்னும் கொண்டாட்டப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் துணிச்சலாகப் பணத்தை முதலீடு செய்யலாம்.






தோனி மீது ஏனிந்த வன்மம்

தமிழ் நாட்டரசியலில் தி.மு.க. எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் முகநூல் எழுத்தாளர்களில் பலர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான ஒற்றுமை. அரசியலில் தமிழ்-திராவிடம் எனப்பேசுவதை விமரிசனம் செய்யும் இவர்கள் சென்னை அணிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கவேண்டும்; சென்னையைச் சேர்ந்தவர்கள் அணியில் அதிகம் இருக்கவேண்டும் என ' மண்ணின் மைந்தர்' உளவியலையும் பேசுவார்கள். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தோனி, தன் மாநிலத்து ஆட்களைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கிறார் எனவும் விவாதித்ததை வாசித்திருக்கிறேன்.

வணிக நோக்கம் சார்ந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் ஒரு பெருமுதலாளியின் முதலீட்டில் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் அணிகள். அணி முதலாளிகளுக்கு மொழி/ மாநிலம் போன்ற அடையாளமோ பற்றோ கிடையாது. ஹைடிராபாத் நகரத்தோடு இணைத்துப் பேசப்படும் சன் ரைசர்ஸ் அணியின் முதலாளி தமிழ்நாட்டின் சன் குழுமம். கல்கத்தா அணியின் முதலாளி மும்பையின் நடிகர் சாருக்கான். அவர்களுக்கு அணியின் திறனை வைத்துக் கிடைக்கும் விளம்பரஙகள், விற்பனைக் கட்டணம், போன்ற வருமானம் தான் முக்கியம். இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல இந்த விமரிசகர்கள். தெரிந்துகொண்டே தெரியாததுபோலப் பாவனை செய்வதுதான் அவர்களின் வன்மத்திற்குப் பின்னால் இருக்கும் உளவியல்.

இந்த வன்மக்கூட்டத்திற்குத் தோனி நீண்டநாள் இந்திய அணியின் தலைவராக இருந்ததே பிடிக்காது. இந்திய அணியில் தமிழ்நாட்டுக்காரர்களைப் புறக்கணித்தார் என எழுதியும் பேசியும் வந்த இவர்கள் ஐபிஎல் அணியிலும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு அவர் வாய்ப்பளிப்பதில்லை எனப் பேசினார்கள். சென்னை/தமிழ்நாட்டு வீரர்களுக்காகப் பேசுவதுபோல இருந்தாலும் தோனியை வெறுப்பவர்கள் அவர்கள். அவர் அணியிலிருந்து விலகிட வேண்டும் என மறைமுக அழுத்தம் கோருபவர்கள். அந்த வன்மத்தோடு தோனியை கழுவிக்கழுவி ஊற்றுகிறார்கள்.

இப்போது நடக்கும் ஐபி எல் தொடரில் நடந்து முடிந்த மூன்று ஆட்டங்களில் மும்பை இந்தியன் அணியோடு ஆடிய முதல் ஆட்டத்தில் தோனி ஒரு ஓட்டம் கூட எடுக்கவில்லை. ஆனாலும் அணி வென்றது. அந்த வெற்றிக்குப் பின்னால் தோனி இருப்பதே போதும் என்பதாகப் பேசப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் அவருக்கு முன்னால் இறங்கியவர்கள் எல்லாம் வேகமாக ஆட்டம் இழக்க, அவரது பங்காக 16 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. நேற்றும் அவர் அணியின் வெற்றிக்காக முன்னர் இறங்கி அடித்து ஆடவே முயன்றார். ஆனால் முடியவில்லை. இது இருபதுக்கு 20 நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அவர் மீது வன்மங்காட்டுபவர்கள் தோல்விக்கு அவரே காரணம் என்பதுபோலக் கூச்சல் போடுகிறார்கள். தோனியின் மீது காட்டும் இந்த வன்மம் விளையாட்டைத் தாண்டிய வன்மம் என்பது எனது கருத்து.

இந்தக் கருத்து இப்போது உண்டானதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கருத்து. அவரது முதல் ஓய்வை அறிவித்தபோது உண்டான கருத்து. அப்போது இந்திய அணியின் தலைவராக இருந்தபோது அவர் எடுத்த முடிவுகளையும் அணியை உருவாக்கியதையும் வெற்றி தோல்விகளைச் சமமாக எடுத்துக் கொண்டு சமநிலை பேணியையும் வைத்து, ஒரு கட்டுரை எழுதினேன். அதில் தமிழக முதல்வர் மு.கருணாநிதியோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறேன். தோனியை எதிர்க்கும் அந்தக் கும்பல் கருணாநிதியையும் வெறுக்கும் கும்பல் என்பது இன்னொரு சுவாரசியமான ரகசியம்.


கிரிக்கெட் -சினிமா- அரசியல் : ஊடும்பாவுமாய்

 ஒரு துறையில் பிரபலமானவர்கள் இன்னொரு துறையில் நுழைந்து பலரை முந்திச் சென்று போட்டியில் வெற்றிபெற்றுவிட முடியும். சினிமாவும் அரசியலும் கொடுப்பதும் எடுப்பதுமாக எப்போதும் உறவுகொண்டுள்ளன. இங்கே சினிமாவும் அரசியலும் வெகுமக்களுக்குரிய தளங்களாக இருக்கின்றன. அதனால் அது சாத்தியம். அதேபோல் கலை, இலக்கியவாதிகள் / எழுத்தாளர்கள் அப்படியான முயற்சியில் ஈடுபட்டாலும் பெரும் வெற்றியைப் பெறுவதில்லை. ஏனென்றால் எழுத்து வெகுமக்களுக்குரியதாக இருக்கவில்லை. ஒரு எழுத்தாளர் அரசியல் கட்சியில் சேர்வதற்கும், தலைமையின் கவனத்தைப் பெறுவதற்கும் மட்டுமே அவரின் எழுத்து பயன்படும். அந்தக் கட்சியில் பிரபலமாக ஆக அவரது எழுத்து பெரிய அளவில் பயன்படாது. கட்சியில் சேர்ந்தபின், கட்சியின் தேர்தல் வெற்றிக்கு அவர் ஆற்றும் பணிகளே அவரை நிலை நிறுத்தும்.

ஆய்வுப் புலத்திற்குள் நுழையும் பிறதுறை ஆளுமைகள் பெறும் கவனத்தை நீண்டகாலம் ஆய்வுக்குள் செயல்பட்டுவரும் ஒரு ஆய்வாளரால் பெறுவதும் சாத்தியமில்லை. தொடர்ச்சியாக ஆய்வில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர் ‘எடுத்தேன்; கவிழ்த்தேன்’ என்று ஒரு ஆய்வு முடிவை -கண்டுபிடிப்பைச் சொல்ல மாட்டார். அப்படிச் சொன்னால் தனது நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாறும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் புதிதாக நுழையும் ஆய்வாளரோ, திறனாய்வாளரோ மேடைப்பேச்சில் சொல்வதுபோல எழுத்திலும் எழுதிக் கவனம் பெற்றுவிடுவார். அதற்கு மறுப்பு சொல்ல நினைக்கும் ஆய்வாளர்களோ, விவாதப்படுத்த நினைப்பவர்களோ அவரைப் பொருட்படுத்திப் பேச வேண்டுமா? என்ற தயக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவரது முதன்மைத் துறைப் பங்களிப்பும், பிரபலமும் தடைக்கல்லாக இருப்பதும் உண்மை.

*****

இந்தியாவில் சினிமாவின் இடத்தைக் கிரிக்கெட் விளையாட்டுக் கைப்பற்றத்தொடங்கிச் சில பத்தாண்டுகள் ஆகின்றன. இங்கு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால் நாட்டிற்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பலவிதமான லாபங்கள் இருக்கின்றன. விளையாட்டிப் போட்டிகள் முன்பிருந்தது போல் வெறும் சுற்றுலாப் பொருளாதாரம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் இல்லை. ஊடகப் பொருளாதாரம் மூலம் பலதளங்களிலும் விளையாட்டின் வீச்சுகள் நுழைந்து விட்டன.வியாபாரப் பொருளாக மாறினாலும் நமது தேச அடையாளத்தை உருவாக்குவதிலும், தேசப்பற்றை வளர்ப்பதிலும் கிரிக்கெட் விளையாட்டும் கிரிக்கெட் வீரர்களும் முக்கியக் காரணிகளாக ஆக்கப்படுகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட்டதைப் போலக் கிரிக்கெட்டிலிருந்தும் அரசியல்வாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆசிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் முன்மாதிரியாக இருக்கிறது. அவை பணம் சேர்க்கும் வியாபாரக் கேந்திரமாக அந்த விளையாட்டைக் கவனித்ததைத் தாண்டித் தங்களை ஆளும் தலைவர்களை அங்கிருந்து உருவாக்கி அனுப்பலாம் என நினைக்கிறார்கள். இந்தியாவில் நடிகர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதைப் போல, கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்கள். பஞ்சாபில் நவ்ஜோத்சிங் சித்து முதல்வர் வேட்பாளராகத் தன்னை நினைக்கிறார். மகேந்திரசிங் தோனி விரும்பிப் போட்டியிட்டால் ஜார்க்கெண்டில் மட்டுமல்ல; தமிழ்நாடு சட்டசபைக்குக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு.

ஆசியாவல்லாத பாரம்பரியமான கிரிக்கெட் விளையாட்டு நாடுகளில் -இங்கிலாந்து, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அது ஒரு விளையாட்டு மட்டுமே. சினிமாவும் ஒரு சினிமா மட்டுமே. ஆனால் கீழ்த்திசை நாடுகளுக்கு - ஆசிய நாடுகளுக்கு -பிரபலமாக ஆக உதவும் எழுத்துகள், ஊடகங்கள், சினிமாக்கள் என எல்லாமே கடவுளை உற்பத்தி - தலைவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக இருக்கின்றன. புராணகாலத்துப் போர்கள் உற்பத்தி செய்த கடவுள்கள் பற்றிய தொன்மங்களைக் கட்டுடைத்ததுபோலப் புதிய தொன்மங்களும் - ஆளுமைகளும் கட்டுடைக்கப்பட வேண்டியவர்களே.

இறுதிப்போட்டிக்கு அழைத்துப்போகிறார் தோனி

 
வென்றாக வேண்டும் என்ற நிலையில் சென்னையின் வீரர்கள் முழு ஈடுபாடு காட்டி விளையாண்டு வெல்லப்போகின்றார்கள். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என்பதற்குப் பின்னணியில் நல்ல தலைவனின் பங்கு எப்போதும் இருக்கிறது. தோனியின் அணி இன்னொருமுறை இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பில் இருக்கிறது.

கடந்த ஆண்டு ’ப்ளே ஆப்’ எனப்படும் கடைசிக் கட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியிலிருந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றப்பட்டபோது எழுதிய குறிப்பு இது:

”நிதானமும் வெற்றியை நோக்கிய திட்டமிட்ட நகர்வும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் சாயலைக் கொண்டதாக இருந்ததுகூட தமிழ்த் திரளின் ஏற்புக்குக் காரணம் என நினைப்பதுண்டு.”

(இணைப்பு பின்னூட்டத்தில்) இந்த வருடம் இறுதிப் போட்டியில் விளையாடு்ம் அணியாகத் தனது தலைமையிலான அணியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். தோனி - கருணாநிதி ஒப்பீடு திரும்பவும் உறுதியாகியிருக்கிறது. அநேகமாக 15 ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் தோனி சந்திக்கப்போகும் இன்னொரு தலைவர் விராட் கோலியாக இருப்பார் என உள்ளுணர்வு சொல்கிறது. அதனைத் தெரிந்துகொள்ள இன்னும் இரண்டு ஆட்டங்களைப் பார்க்கவேண்டும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விலகிச் செல்லும் அந்தரங்கம்

அந்த மூன்றும் இந்த மூன்றும்

பொதுப்புத்தியை விவாதிக்கும் கலையியல் : டூரிஸ்ட் பேமிலியும் அயோத்தியும்